வியட்நாம் மண்ணின் மாவீரன் வோ கியென் கியாப்

பிரெஞ்சு காலனி அரசையும் ஜப்பானிய அரசையும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசையும் மண்டியிட செய்த மாவீரன் தோழர் வோ கியென் கியாப்.

வல்லரசுகளுக்கு இப்படி வரலாற்றுப் பாடம் கற்றுக்கொடுத்த பெருமை இரு வியத்நாமியர்களைச் சேரும். ஒருவர் மறைந்த வியத்நாமிய அதிபர் ஹோசி மின்; இன்னொருவர் ராணுவத் தளபதி வோ கியென் கியாப் (25 ஆகத்து 1911 – 4 அக்டோபர் 2013).

லாங் சோன் (1950)
ஹோ பின் (1951-52),
டீன் பின் பூ (1954),
தி டெட் தாக்குதல் (1968),
தி ஈஸ்டர் தாக்குதல் (1972),
ஹோ சி மின் முற்றுகை (1975)

எனப் பல போர்களில் ராணுவ உத்திகளை வகுத்துச் செயல்படுத்தியவர் தளபதி வோ.

1911 ஆகஸ்ட் 25-ல் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் வோ. ஹனோய் பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற வோ முதலில் தேர்ந்தெடுத்த வேலை பள்ளிக்கூட ஆசிரியர். அப்போதே ‘தீன் டாங்’ என்ற பத்திரிகைக்குக் கட்டுரைகளும் எழுதிவந்தார்.

வியத்நாம் அப்போது பிரெஞ்சு காலனி நாடாக இருந்தது. காலனி ஆதிக்க எதிர்ப்புணர்வால், வியத்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். நிறையப் படித்தார். சுன் சூ அவருக்கு மிகவும் பிடித்த முன்னோடி. இன்னொரு வீரரையும் அவருக்குப் பிடிக்கும்.

பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காக விதிக்கப்பட்ட 13 மாதச் சிறைத் தண்டனை வோவைப் புடம்போட்டது. விடுதலையான பிறகு வியத்நாமிய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் இரு பத்திரிகைகளை நடத்தினார்.

வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதும் சீனத்துக்குத் தப்பினார் வோ. ஹோ சி மின்னுடன் இணைந்தார். 1944-ல் மீண்டும் வியத்நாமுக்கு வந்தார்.

ராணுவப் பயிற்சியே இல்லாத வோ, உலகிலேயே தீரம் மிக்க சேனையைக் கட்டியமைத்தார். பழைய வாகனங்களின் டயர்களிலிருந்து செய்யப்பட்ட செருப்பு அல்லது பூட்ஸ்களை அணிந்த வீரர்கள்தான் அவரால் பயிற்றுவிக்கப்பட்டு பிரெஞ்சுக்காரர்களையும் பிறகு அமெரிக்கர்களையும் தோற்று ஓட வைத்தனர்.

“நான் போர் உத்திகளைப் படித்தது ராணுவக் கல்லூரிகளில் அல்ல, எங்கள் நாட்டுப் புதர்களில்தான்” என்று அவரே வேடிக்கையாகப் பின்னர் தெரிவித்திருக்கிறார்.

வோவின் படை முதலில் மோதியது ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு சேனைக்கு எதிராக. இரண்டாவது உலகப் போரில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்த பிறகு, வியத்நாமிலிருந்த பிரெஞ்சுக்காரர்களைச் சிறையில் அடைத்து விட்டு, முக்கிய அரசுக் கட்டடங்களை தீரமிக்க வியத்நாமிய கம்யூனிஸ்டுகள் கைப்பற்றினர். அப்போது ‘மக்கள் சேனை’ பல்வேறு நகரங்களில் அரசு அலுவலகங்களையும் கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்களை யும் கைப்பற்றிக்கொண்டு ‘இடைக்கால தேசிய அரசை’ அமைத்தது. அதன் உள் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராக வோ அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு ஜப்பானியர்களை வியத்நாமிலிருந்து வெளியேற்றிய நேச நாடுகளின் தலைவர்கள், வியத்நாமை இரண்டாகப் பிரித்து வடக்கு வியத்நாமை சீனர்களின் கட்டுப்பாட்டிலும் தெற்கு வியத்நாமை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலும் விடுவதென்று முடிவுசெய்தனர். இது அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் கூட்டு முடிவு. அப்போது மீண்டும் வியத்நாம் மீது ஆதிக்கம் செலுத்த பிரான்ஸ் முயன்றது.

கம்யூனிஸ்டுகளின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட வோ, இந்த நிலையை மாற்ற படிப்படியாக ‘மக்கள் சேனை’யை வலுப்படுத்தினார். வியத்நாமில் பிரெஞ்சுக்காரர்களின் ராணுவ மையங்கள் இருந்த மலைப் பகுதிகளுக்கு வோவின் துருப்புகள் பீரங்கிகளை பாகம் பாகமாகப் பிரித்து எடுத்துச் சென்று தங்களுக்கு ஏற்ற இடத்தில் இணைத்துக்கொண்டனர். 1954-ல் தீன் பீன் பு என்ற இடத்தில் வியத்நாமியர்களின் வீரியம் மிக்க திடீர் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரெஞ்சு ராணுவம் சீர்குலைந்தது. அந்தப் போருக்குப் பிறகு வியத்நாமுக்குச் சுதந்திரம் கிடைத்தது.

அத்துடன், இந்தோ-சீனப் பகுதியில் காலனியாதிக்கத்தின் முதுகெலும்பும் முறிக்கப்பட்டுவிட்டது. பிறகு தெற்கு வியத்நாமில் அமெரிக்க ஆதரவில் நடைபெற்ற அரசையும், 1975 ஏப்ரலில் வோ தலைமையிலான ‘மக்கள் சேனை’ போரில் வென்று அகற்றியது.

ஆனால் இதற்கு வியத்நாமிய புரட்சிப் படை கொடுத்த விலை அதிகம். அமெரிக்கா சுமார் 5 லட்சம் துருப்புகளை வியத்நாமில் நிறுத்தியும் அதற்குத் தோல்வியே ஏற்பட்டது.

வியத்நாமியர்கள் அமெரிக்காவுடனான யுத்தத்தில் இழந்தது 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை. ஐந்து லட்சம் துருப்பு களை வெல்லவோ விரட்டவோ முடியாது என்பது தெரிந்திருந்தபோதிலும், ‘வியத்நாமில் சண்டையிட்டது போதும்; இனியும் தொடர வேண்டாம்’ என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் நினைக்கும் அளவுக்கு அலையலையாகத் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தார்கள் வியத்நாமின் ‘ கம்யூனிஸ்ட்டுகள். ‘அடுத்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று லிண்டன் ஜான்சனையே சலிப்புடன் சொல்ல வைத்தனர்.

1975 ஏப்ரல் 30-ல் கம்யூனிஸ்ட் படைகள் தலைநகர் சைகோனில் டாங்குகள், பீரங்கிகளுடன் நுழைந்து நகரைக் கைப்பற்றியதோடு வியத்நாம் போர் முடிவுக்கு வந்தது.

வியத்நாம் போரில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகளும் சிவிலியன்களும் இறந்தனர். தெற்கு வியத்நாமைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேரும் அமெரிக்கத் துருப்புகள் 58,000 பேரும் இறந்தனர். இந்தப் போர் நடந்த காலங்களில் பெரும்பாலும் ராணுவ அமைச்சராக ‘வோ’தான் பதவி வகித்தார். அவரே ராணுவத் தலைமைத் தளபதியாகவும் இருந்தார்.

1979வரை ராணுவத் துறை தலைவராகவும் 1991வரை துணைப் பிரதமராகவும் இருந்தார்.

இராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது அமெரிக்கா செய்யும் தவறை அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் நேரிலேயே சுட்டிக்காட்டினார்.

“ஒரு நாடு எதனால் பலமடைகிறது, ராணுவ வீரர்களுக்குத் தரும் பயிற்சியாலா, நவீன ஆயுதங்களாலா?” என்று வெளிநாட்டு நிருபர்கள் 2004-ல் அவரிடம் கேட்டனர்.

“எதிரியை எதிர்ப்பதில் ஒரு நாட்டுக்குத் துணிவு ஏற்பட்டுவிட்டால் போதும், மற்றதெல்லாம் இல்லாவிட்டாலும் வெற்றி நிச்சயம்” என்றார் அவர்.

“கடந்த காலத்துக் கசப்புணர்வுகளை நாம் மூட்டைகட்டி வைக்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களை மறக்கக் கூடாது” என்பார் வோ. இது வியத்நாமுக்கு மட்டும் அல்ல உலகம் முழுக்க உள்ள நாடுகளுக்குப் பொருத்தமானது.

முதுமை, உடல் நலிவு காரணமாக 102-வது வயதில் 2013ல் மரணம் அடைந்தார்.

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவருடைய வீர முழக்கம் இன்னும் ஒலிக்கிறது!

Comrade Vo Nguyen Giap was a the mastermind behind the Vietnamese people’s stunning successes in their battles with French colonialism and American imperialism. He followed Ho Chi Minh’s national salvation path as well as his morality. Vietnam

Leave a Reply