அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது)

  1. மக்களவைத் தேர்தல் குறித்து ஜூன் 2014 இல் ஆய்வு செய்த மத்தியக்குழு, கட்சி சில காலமாக முன்னேற்றம் காண இயலவில்லை. என்றும் இது கட்சிக்கு கிடைத்துள்ள மோசமான தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது என்றும் முடிவுக்கு வந்தது. எனவே நான்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்தது.

அவை:

1)      நாம் பின்பற்றி வந்திருக்கக் கூடிய அரசியல் நடைமுறை உத்தி குறித்த மறு ஆய்வு.

2)      கட்சி அமைப்பு இயங்கும் விதம் குறித்தும் மக்கள் திரளிடம் நமது பணி நடக்கும் விதம் குறித்தும் மறு ஆய்வு.

3)      சுயேட்சையான இயக்கத்திற்கு வழிவகை செய்யும் விதமாகவும், அரசியல் பணி மற்றும் கட்சியைக் கட்டுவது ஆகிய நோக்கிலும் வெகு மக்கள் அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் அவற்றின் இயங்கு விதம் குறித்த மறுஆய்வு.

4)      சமூக பொருளாதார நிலைமைகளில் தாராளமயமாக்கல் ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவை பல்வேறு வர்க்கங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆகியவை பற்றிய ஆய்வு, அதன் அடிப்படையில் திட்டவட்டமான முழக்கங்களை உருவாக்குவது.

இந்த நான்கு நடவடிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தாகும். அவற்றை ஒன்று சேர நடைமுறைக்கு கொண்டு வருவது நம்முடைய அரசியல் மற்றும் ஸ்தாபன ரீதியான குறைபாடுகளை நீக்கி கட்சியின் முன்னேற்றத்திற்கு உதவும்.

  1. மத்திய குழு இந்த நான்கு நடவடிக்கைகளில் முதலாவதான அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வை இப்போது கையிலெடுத்துள்ளது. மத்தியக்குழு நிறைவேற்றிய தேர்தல் பரிசீலனை அறிக்கை பின்வருமாறு கூறியது:

“அடுத்தடுத்த கட்சிக் காங்கிரஸில் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளோம். நாம் முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் உத்தியைக் கைக்கொண்டதுதான் நமது சொந்த பலம் குன்றியதற்குக் காரணம் என சில மாநிலக் குழுக்கள் கூறியுள்ளன. கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதில் நாம் அடைந்துள்ள தோல்வி நாம் இதுகாறும் பின்பற்றி வந்த நமது அரசியல் நடைமுறை உத்தியை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதை அவசியமாக்கியுள்ளது”.

  1. கட்சியின் 21 ஆவது காங்கிரசை நோக்கிய நகர்வின் பகுதியாக நாம் அரசியல் நடைமுறை உத்தியை ஓர் ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆய்வு கட்சிக் காங்கிரசில் ஒரு திறனுள்ள நிகழ் அரசியல் நடைமுறை உத்தியை உருவாக்க உதவும். அரசியல் நடைமுறை உத்தியின் மறு ஆய்வில் நாம் கடந்த 25 ஆண்டுகளைக் கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது. இந்த காலகட்டம் சோவியத் யூனியன் தகர்ந்து அதன் விளைவாக சர்வதேச வர்க்கச் சமன்பாடு மாறிப்போன காலகட்டம்; புதிய தாராளமயக் கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ஏகாதிபத்திய நிதி மூலதனத்தால் கொண்டு செலுத்தப்படும் உலகமயமாக்கல் நமது சமூகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்திய காலகட்டம்; இது இந்துத்வா வகுப்புவாத சக்திகள் அரசியல் சக்தியாக பரவி பலமடைந்த காலம்; சாதி அடிப்படையிலான அடையாள அரசியல் பெருமளவில் வெளிப்பட்ட காலம். இது கட்சியின் 13 ஆவது காங்கிரஸ் முதல் இன்று வரையிலுமான காலம் ஆகும்.
  2. சோவியத் யூனியன் தகர்வு மற்றும் சோசலிச அமைப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவுகளை ஒட்டி ஏற்பட்ட கடும் மாற்றங்களின் பின்புலத்தில் நம்முடைய சித்தாந்த ரீதியான நிலைபாடுகளை விளக்கும் வண்ணம். கட்சியின் 14வது காங்கிரஸ் `சில சித்தாந்தப் பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தை’ நிறைவேற்றியது. புதிய சூழலின் பின்னணியில் மார்க்சிய-லெனினிய நிலைபாடுகளை நாம் மீளவும் வலியுறுத்தியிருந்தோம். தொடர்ந்து கட்சியின் 20வது காங்கிரஸில், ஏகாதிபத்திய உலகமயம். புதிய தாராளமய சித்தாந்தத்தின் ஆதிக்கம் நிலவும் இன்றைய சூழ்நிலையில் நமது சித்தாந்தப் புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இவை இந்த காலகட்டத்தில் நமது கட்சித் திட்டத்தை புதுப்பிப்பதற்கும் அரசியல் நடைமுறை உத்தியை வகுத்தெடுக்கவும் உதவியாக இருந்தன.
  3. அரசியல் நடைமுறை உத்தி என்பது நமது அடிப்படை இலக்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்திற்கும் அன்றைய சூழலுக்கும் பொருத்தமானதாக நாம் கடைப்பிடிக்கும் உத்தியாகும். நாம் அவ்வாறு வகுத்துக் கொண்ட அரசியல்- நடைமுறை உத்தியில் நிர்ணயித்த இலக்கு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அதிகாரத்திற்கு மாற்றாக ஒரு இடது ஜனநாயக மாற்றை அளிப்பதற்காக ஒரு இடது ஜனநாயக அணியைக் கட்டுவதாகும். இந்த இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான நமது போராட்டம் இருக்கின்ற வர்க்கச் சமன்பாட்டை மாற்றியமைத்து நமது அடிப்படை இலக்கை நோக்கி நாம் முன்னேறுவதற்கான நமது முயற்சியின் பகுதியாகும்.
  4. 13 ஆவது காங்கிரஸில் இருந்து கட்சி அடுத்தடுத்து மேற்கொண்ட அரசியல் நடைமுறை உத்திகள் அன்றன்றைக்கு நிலவிய சூழலைச் சந்திக்கவும் உடனடி அபாயங்களை எதிர்கொள்ளவும் பொருத்தமான உத்திகளையும் நிலைபாடுகளையும் எடுக்க உதவியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் நமது வரம்பிற்குட்பட்ட சக்தியைத் திறனுடன் பயன்படுத்தவும் முதலில் ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தையும் பின்னர் நரசிம்மராவ் அரசாங்கத்தையும் தோற்கடிக்க நடைமுறை உத்திகளை வகுக்கவும் நமக்கு உதவியுள்ளது. அது வகுப்புவாத அபாயத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் அந்தப் போராட்டத்தில் கங்கிரசல்லாத மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்டி 1996 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுத்து நிறுத்துவதற்கும் ஏற்ற வழியை வழங்கியது. மீண்டும் அது 2004 ஆம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தினை தோற்கடிக்கவும் சரியான திசை வழியைக் காட்டியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி-I-ன் அரசாங்கத்தின் போது நமது அணுகுமுறை கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம் மற்றும் வன உரிமைச் சட்டம் போன்ற மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப் போராட உதவியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நாம் அடுத்தடுத்து மேற்கொண்ட நடைமுறை உத்திகள் பிரிவினைவாதம், பிரதேச மேட்டிமைவாதம், ஏகாதிபத்திய ஊடுருவல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடவும் நமக்கு வழிகாட்டியுள்ளது. கட்சி மேற்கொண்ட நடைமுறை உத்திகள், பெண்கள், தலித் பழங்குடி மக்கள் பிரச்சனைகளில் தலையிட்டு அவர்கள் கோரிக்கைகளை முன்னெடுக்கவும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடவும் நமக்கு வழிகாட்டியுள்ளது. கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் மத்திய மாநில உறவுகளை மாற்றி அமைக்கவும் உறுதியுடன் கட்சி போராடியுள்ளது.
  5. நவீன தாரளமயக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றுபட்ட எதிர்ப்பை கட்டியமைக்க நடைமுறை உத்தி வழி காட்டியது. 1991 ஆம் ஆண்டிலிருந்து அகில இந்திய அளவில் நடந்த 15 பொது வேலை நிறுத்தங்கள் நாம் சாத்தியப்படுத்திய தொழிற்சங்கங்களின் ஒற்றுமையின் விளைவே. கடந்த இருபது ஆண்டுகளில் இடதுசாரி ஒற்றுமையும் நான்கு இடதுசாரி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பும் முன்னேற்றம் கண்டுள்ளது. நாம் இந்தக் காலகட்டத்தில் உருவாக்கிய நடைமுறை உத்தி கேரளாவிலும் திரிபுராவிலும் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் அமைவதற்கும் மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவி யுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் நடைமுறை உத்திகள், தேசிய அரசியலில் நாட்டின் ஆகப் பெரிய இடதுசாரி கட்சி என்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டை அதிகரிக்க காரணமாக இருந்தது.
  6. இருந்தபோதிலும், கட்சியின் சொந்த வளர்ச்சி மற்றும் இடதுஜனநாயக முன்னணியைக் கட்டுவதில் நடைமுறை உத்தி எந்த அளவிற்கு உதவியுள்ளது என்பதை விமர்சன ரீதியாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. கட்சி சுயேட்சையான வளர்ச்சியில் பின்தங்கியிருப்பது மற்றும் இடது ஜனநாயக அணியைக் கட்டுவதில் நமக்கு உள்ள இயலாமை ஆகியவற்றுக்கான காரணிகளாக நாம் இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் உருவாக்கிய அரசியல்-நடைமுறை உத்திகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா, அல்லது ஏதேனும் போதாமைகள் உள்ளனவா அல்லது அமலாக்கத்தில் தவறுகள் உள்ளனவா என ஆய்வு செய்திட வேண்டும்.

இடது ஜனநாயக அணி எனும் கருத்தாக்கம்

  1. கட்சியின் 10 ஆவது காங்கிரஸில்தான் இடது ஜனநாயக அணி எனும் கருத்தாக்கம் தெளிவாக வரையறுக்கப்பட்டது. அதற்கு முன்பாக 7 ஆவது காங்கிரஸிலிருந்து 9 ஆவது காங்கிரஸ் வரை நாம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு ஜனநாயக மாற்றைக் கோரிவந்தோம். 10 ஆவது காங்கிரஸ் இடது ஜனநாயக அணி எனும் கருத்தாக்கத்தைப் பின்வருமாறு விளக்கியது: “இந்த முன்னணியைக் கட்டுவதற்கான நமது போராட்டம், வர்க்கச் சமன்பாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஆகும். மக்கள் இரண்டு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றையே தேர்ந்தெடுத்தாக வேண்டும் எனும் நிலையை, இருப்பிலுள்ள அமைப்பின் வரையறைக்குள் சிறையுண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்காக நாம் எடுத்துவரும் கடும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மேற்கொண்டு அடையவேண்டிய முன்னேற்றத்திற்காக, இருக்கின்ற இடது ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக அணியை உருவாக்குவதில் பங்கேற்க விருக்கும் இந்த சக்திகளை இறுக்கமாய் ஒன்றிணைப்பதைத் துவக்க முடியும். இடது ஜனநாயக அணி என்பது வெறும் தேர்தலுக்கான அல்லது அமைச்சரவை அமைப்பதற்கான ஒரு கூட்டணி என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அது பொருளாதாரத்தை தம் பிடிக்குள் வைத்திருக்கின்ற பிற்போக்கு வர்க்கங்களைத் தனிமைப் படுத்துவதற்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக உடனடி முன்னேற்றத்திற்குப் பாடுபடக்கூடியதுமான சக்திகளின் போராட்ட அணியாகும்”.
  2. 10 ஆவது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் வெகுமக்களின் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் அவசியத்தையும் இடது ஜனநாயக ஒற்றுமையின் அடித்தளத்தைக் கட்டியமைப்பதில் வெகுமக்கள் அமைப்புகள் முக்கிய பாத்திரம் வகிப்பது குறித்தும் வலியுறுத்தியது.

“இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் பொதுவான கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரளை கவர்ந்திழுக்கும்போதுதான் செயல்படக்கூடிய இடது ஜனநாயக அணி என்பது சாத்தியமாகும்”.

  1. இரண்டாவதாக, தீர்மானம் மேலும் பின்வருமாறு கூறியது:

“முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் மேடைக்கும் நடைமுறைக்கும் மாறான, அவற்றிலிருந்து தனித்து விளங்குவதும் அவற்றுக்கு முற்றிலும் எதிர் நிலையில் ஆனதுமான அரசியல் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து, அதனை வென்றெடுக்க மக்கள் திரளுக்கு தலைமை தாங்கிப் போராடுவதன் மூலமே இடதுசாரி ஜனநாயக சக்திகள் முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவக் கட்சிகளிடமிருந்து அவர்களை மீட்டெடுத்து மாற்றுத் தலைமையின் கீழ் அணிதிரட்ட முடியும்”.

  1. மூன்றாவதாக, 1978 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சால்கியா பிளீனத்தின் கட்சி ஸ்தாபனம் குறித்த தீர்மானம், கட்சியின் பெருவளர்ச்சிக்கு முக்கியமான காரணி பற்றி பின்வருமாறு கூறியது:   “அத்தகைய இடதுசாரி ஜனநாயக ஒற்றுமையைக் கட்டி அமைப்பதற்கு அனைத்து உழைக்கும் மக்களின் அமைப்புகளில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சியும், அனைத்து பகுதி உழைக்கும் மக்களின் போராட்டங்களும் அவசியமாகும். இதற்கு பாட்டாளி வர்க்கக் கட்சியின் வலிமையில் பெருமளவு வளர்ச்சி தேவை. ஒவ்வொரு மாநிலத்திலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு அவர்கள் ஈடுபடும் போர்க்குணமிக்க இயக்கம், ஏனைய ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு ஜனநாயக சக்திகளோடு அவர்களது ஒற்றுமை ஆகியவையே வளர்ச்சியின் அம்சங்களாகும்”.
  2. இறுதியாக 10 ஆவது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மானம் பின்வருமாறு வலியுறுத்தியது:

“இடதுசாரி ஜனநாயக சக்திகளின் முன்னணியைக் கட்டியமைக்க பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் சுயேட்சையான அரசியல் செயல்பாடும், அதன் வலிமையில் வளர்ச்சி காண்பதும் இன்றியமையாதது. இதனோடு முன்னணியின் ஏனைய உறுப்பினர்களுடனான தத்துவார்த்தப் போராட்டத்தையும் இணைத்து நடத்த வேண்டும். அதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் ஏனைய முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தத்துவங்களைக் காட்டிலும் மேலானது என்பது நிறுவப்பட வேண்டும்”.

பின்னுக்குத் தள்ளப்பட்ட இடது ஜனநாயக அணி

  1. நாம் பின்பற்றிய அரசியல் நடைமுறை உத்தி இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான நமது முயற்சிகளுக்கு உகந்ததாக இருந்ததா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இடது ஜனநாயக அணி என்ற முழக்கத்தை நாம் 10 ஆவது காங்கிரஸில் முன்வைத்தபோது மே.வங்காளத்திலும் திரிபுராவிலும் இடது முன்னணியும் கேரளத்தில் பின்னாளில் இடது ஜனநாயக அணியாக மாறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணியும் இருந்தன. இது, தேசிய அளவில் இடது ஜனநாயக அணியைக் கட்டவேண்டும் என்ற முனைப்பின் பகுதி அளவிலான நிறைவேற்றமாகும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதும் இந்த அம்சத்தில் அந்த மூன்று மாநிலங்களைத் தாண்டி நாம் செல்லவில்லை. உண்மையில் இடது ஜனநாயக அணியைக் கட்ட வேண்டிய அகில இந்திய தளத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
  2. இதற்கு நாம் பின்பற்றிய அரசியல் நடைமுறை உத்தியிலேயே காரணங்களைத் தேட வேண்டும். 13 ஆவது கட்சி காங்கிரஸில் இருந்து நாம் இடதுசாரி மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை குறித்து பேசிவருகின்றோம். உடனடித் தேவையான காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அணியை கட்டியமைப்பதை இடது ஜனநாயக அணியைக் கட்டுவதிலிருந்து வேறுபடுத்தியிருந்தோம். 15 ஆவது காங்கிரசை வந்தடையும்போது நாம் இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்டுவது குறித்த முழக்கத்தை முன்வைத்துவிட்டோம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் இடது ஜனநாயக அணி என்பது ஒரு தொலைதூர இலக்கு, அது 11 ஆவது கட்சிக் காங்கிரசில் வலியுறுத்தப்பட்டது போன்று உடனடி சாத்தியமில்லாதது என்ற புரிதலுக்கு நாம் கிட்டத்தட்ட வந்து சேர்ந்துவிட்டோம். இடது ஜனநாயக அணி என்பது ஒரு பிரச்சார முழக்கம் என்ற நிலைக்கு அதனைப் பின்னால் தள்ளிவிட்டோம். இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற கூட்டணி என்பது புதிய இடைக்கால முழக்கமாக மாறியது. முதலில் இது ராஜீவ் காந்தியின் அரசாங்கத்திற்கு எதிராக பா.ஜ.க அல்லாத காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளை அணிதிரட்ட வேண்டி முன்வைக்கப்பட்ட முழக்கமாகவே இருந்தது. பின்னர் இது பா.ஜ.க விற்கு எதிரான முழக்கமாக ஆனது. அந்த அடிப்படையில்தான் நாம் 1996 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசில் பங்கு பெறாமல் அந்த அணியில் மட்டும் பங்கேற்றோம்.

மூன்றாவது மாற்று

  1. ஐக்கிய முன்னணியின் வீழ்ச்சிக்குப் பிறகு 16 ஆவது கட்சிக் காங்கிரசில் (1998) நாம் மூன்றாவது மாற்று எனும் முழக்கத்தை முன்வைத்தோம். அப்போதும் நம்முடைய நோக்கம் மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளை (குறிப்பாக பிராந்தியக் கட்சிகளை) இடதுசாரிக் கட்சிகளோடு இணைந்து நிற்கக் கோரும் அறைகூவலாகத்தான் இருந்தது. 17 ஆவது கட்சிக் காங்கிரசில் மூன்றாவது மாற்று என்பது ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அல்லது ஒரு பொதுவான கொள்கை அறிக்கையின் அடிப்படையில் அமைய வேண்டும்; அது வெறும் தேர்தல் உடன்பாட்டின் மூலம் அமைய முடியாது என்று விளக்கினோம். 18 ஆவது கட்சிக் காங்கிரஸ் வரும்போது இந்தக் கட்சிகளை ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம் என்பதை உணர்ந்திருந்தோம்; இந்த மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளின் பார்வையில் மாற்றம் இல்லாமல் ஒரு மூன்றாவது மாற்று நோக்கி நாம் செல்ல இயலாது என்றும் கூறினோம். 19 ஆவது கட்சிக் காங்கிரஸில், கூட்டுப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் மூலமாக மட்டுமே, மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகள் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் வரச் செல்வாக்கு செலுத்த முடியும் என்றும் கூறினோம்.
  2. மூன்றாவது மாற்று என்பது உருவாக்க முடியாதது என்பது மேலும் தெளிவானபோது, 18 ஆவது கட்சிக் காங்கிரஸ் அரசியல் தீர்மானத்தில் காங்கிரஸ் அல்லாத முதலாளித்துவ கட்சிகளை இணைத்து தேர்தல் உடன்பாடு என்பதையும் மூன்றாவது மாற்று உருவாக்குவதையும் வேறுபடுத்தினோம். இப்படி இடது ஜனநாயக அணி என்பது நமது மூன்றாம் கட்டக் கடமையானது. முதலாவதும் உடனடியானதுமான கடமையாக காங்கிரசல்லாத மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளை ஒரு தேர்தல் உடன்பாட்டில் இணைப்பது என்றானது. இரண்டாம் கட்டம் ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இணைந்து நடத்தும் போராட்டங்கள் இயக்கங்கள் மூலம் அமைக்கப்படும் மூன்றாம் மாற்று. மூன்றாம் கட்டம் ஒரு இடது ஜனநாயக அணியைக் கட்டி அமைப்பது என ஆனது.

17 ஆவது கட்சிக் காங்கிரசின் ஆய்வு

  1. 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஆய்வுகள் நம்முடைய அரசியல் நடைமுறை உத்திகளை மறு ஆய்வு செய்யவேண்டிய அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டின. காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட போதும் நமது கட்சி சொல்லும்படி எந்தவித முன்னேற்றமும் காணவில்லை; காங்கிரசின் தோல்வி பா.ஜ.க விற்கே பலனைத் தந்தது என்ற யதார்த்தத்தின் வெளிச்சத்தில் இது தெளிவானது. சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் முதலாளித்துவக் கட்சிகளோடு ஐக்கிய முன்னணி கட்டுவதில் நமது அரசியல் நடைமுறை உத்தியை செயல்படுத்துவதில் கிடைத்த அனுபவத்தை மட்டுமே அரசியல் தலைமைக்குழு ஆய்வு செய்ய முடிந்தது. 17 ஆவது கட்சிக் காங்கிரசில் நடத்திய ஆய்வு முதலாளித்துவக் கட்சிகளோடு ஐக்கிய முன்னணி கட்டும் நமது உத்தியில் குறிப்பாக தேர்தல் களத்தில் இருந்த பலவீனம் மற்றும் போதாமை ஆகியவற்றை நுட்பமாக எடுத்துரைத்தது. இந்த ஆய்வு இடது ஜனநாயக அணியைக் கட்டும் உத்தியை தொடர்வதை அழுத்தமாக மீண்டும் வலியுறுத்தியது. உடனடிக் கடமையாக இருந்த இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமை மற்றும் மூன்றாவது மாற்றுக்கு முயற்சி செய்வதிலிருந்து இடது ஜனநாயக அணியைக் கட்டுவது வேறுபட்டது என சுட்டிக்காட்டியது. அதேசமயம் உடனடிக் கடமைகளைத் தொடர்வது நமது கட்சியின் சுயேட்சையான செயல்பாடுகளை வளர்த்தெடுப்பதற்கும் இடது ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் குந்தகம் விளைவிக்கின்றது என்பதை அங்கீகரிக்கும் முக்கியமான அம்சத்தையும் அறிக்கை கொண்டிருந்தது.
  2. அறிக்கை பின்வருமாறு கூறியது:

நடைமுறையில் நம்முடைய உடனடிக் கடமையில் பிரதானமாக மூழ்கிப்போவது என்பது அன்றைய சூழல் கோரும் உடனடி அரசியல் தேர்தல் கடமைகளை ஆற்றுவதையும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த கட்சியின் சுயேட்சையான செயல்பாடுகளை மேம்படுத்துவது மற்றும் இடது ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை முன்னெடுப்பது என்ற நமது அரசியல் நடைமுறை உத்தி வரையறுத்துள்ள அடிப்படைக் கடமைகளை ஆற்றுவதையும் இணைப்பில்லாது துண்டித்து விடுகின்றது. (ஐக்கிய முன்னணி தொடர்பான அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு, 17 ஆவது காங்கிரஸ்)

மூன்றாவது மாற்று கைவிடப்பட்டது

  1. இருந்தாலும் உடனடிக் கடமையான மூன்றாவது மாற்று என்பதற்கு முயற்சி செய்வதோடு நடைமுறை உத்தியின் இலக்கான இடது ஜனநாயக அணியை கட்டியமைக்கும் அரசியல் நடைமுறை உத்தி தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகும் நாம் முதன் முதலில் இதற்கான அறைகூவல் விடுத்து பதினைந்து ஆண்டுகள் ஆனபின்பும் செயல்படக் கூடிய ஒரு மாற்று தோன்றாத நிலையில், இறுதியாக 20 ஆவது கட்சிக் காங்கிரசில் மூன்றாவது மாற்றை உருவாக்குவதில் நமக்கு கிடைத்துள்ள அனுபவங்களை ஆய்வு செய்தோம். இந்த மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளை எல்லாம் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை என்ற முடிவிற்கு வந்து மூன்றாவது மாற்று எனும் முழக்கத்தைக் கைவிட்டோம். நமது தலையாய முயற்சி இடது ஜனநாயக அணியைக் கட்டியமைப்பதுதான் என்பதை மீண்டும் வலியுறுத்தினோம். தேர்தல் உத்தியைப் பொறுத்த மட்டும் நாம் எந்தெந்த மாநிலங்களில் மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு காண்பது கட்சியின் நலனுக்கு தேவையோ அவர்களோடு உடன்பாடு காணலாம் என அரசியல் தீர்மானம் கூறியது.
  2. 15 ஆவது கட்சிக் காங்கிரசில் இருந்து நாம் அடுத்தடுத்து உருவாக்கிய அரசியல் நடைமுறை உத்திகள் நமது தேர்தல் உத்திகளை வகுக்கவும் அன்றன்றைக்கு நிலவும் சூழலை எதிர்கொள்வதற்கும் உடனடி அபாயங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஏற்ப நாடாளுமன்றத்தில் நமது செயல்பாடுகளைத் தீர்மானிக்கவும் நமக்கு உதவியுள்ளது என்றாலும் இந்த உடனடிக் கடமைகளில் மூழ்கிப்போவது கட்சியின் சுயேட்சையான வலுவைக் கூட்டுவதில் முன்னேற்றம் காண உதவவில்லை; கட்சியின் சுயேட்சையான வலுவைக் கூட்டாமல் அரசியல் சக்திகளின் சமன்பாட்டில் மாற்றம் சாத்தியமல்ல. ஆளும் வர்க்கத்தின் இரு முதன்மைக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளைச் சுற்றியே அரசியல் சமன்பாடு அமைந்து வருகின்றது. பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை 1996 இல் தடுத்து நிறுத்த முடிந்தாலும், அது 1998லும் 1999லும் அரசமைப்பது சாத்தியமாகியுள்ளது. 2004 தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு ஆட்சிக்கே வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்து 2014 இல் பாஜக அதிக வலுவுடன் ஆட்சிக்கு வருவதே நடந்துள்ளது. இது கட்சியின் சுயேட்சையான வலிமையை அதிகரிப்பதிலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் ஆற்றலை அதிகரிப்பதிலும் ஏற்பட்டுள்ள தோல்வியையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
  3. இந்தக் காலகட்டம் முழுவதும் நாம் மூன்றாவது மாற்று என்பதற்கு அழுத்தம் கொடுத்து வந்தபோது கட்சியின் சுயேட்சையான வலிமை அதிகரிக்கவில்லை என்பதே எதார்த்தம். இந்த எதார்த்தமே ஏனைய மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளை ஒன்றுதிரட்டும் பணிக்கு ஊறு விளைவித்துள்ளது. கட்சியின் சுயேட்சையான வலிமை இந்தக் கால கட்டத்தில் வளர்ச்சி காணவில்லை என்பதால் பல மாநிலங்களில் இந்தக் கட்சிகளை தேர்தல் உடன்பாட்டிற்கு கூட ஒன்றுதிரட்ட முடியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் நம்மோடு தேர்தல் உடன்பாடு காணவும் விரும்பவில்லை. மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகள் என நாம் பேசும்போது காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சி ஏதும் அகில இந்திய அளவில் இல்லை. எனவே ஒரு மூன்றாவது மாற்றுக்காக இடதுசாரி, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதற்கான நம்முடைய முயற்சிகள் முதன்மையாக பிராந்தியக் கட்சிகளை நோக்கியதாகவே இருந்தது.

மாநிலக் கட்சிகளின் பாத்திரம்

  1. பிராந்தியக் கட்சிகள் பிராந்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் என்பதே 1960 ஆண்டுகளிலிருந்து நமது புரிதல். அவர்களுக்கும் பெருமுதலாளி களுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்ததால் அவர்களை மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராகவும் மாநில உரிமைகள் குறித்த பிரச்சனைகளிலும் ஒருங்கிணைக்கலாம் (என்பதே நமது புரிதல்). 1967 ஆம் ஆண்டின் மத்திய குழு ஆவணமான புதிய சூழலும் கடமைகளும் என்பதில் அவர்களது பாத்திரம் குறித்து நாம் தெளிவு படுத்தியுள்ளோம். ஆனால் தாராளமயமாக்கல் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தபின் பிராந்தியக் கட்சிகள் வகிக்கும் பாத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டது. இதனை நாம் 16 ஆவது, 17ஆவது கட்சிக் காங்கிரஸ்களில் கணக்கிலெடுத்துள்ளோம்.

“முதலாளித்துவத்தின் விரிவாக்கம் காரணமாக பிராந்திய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை பிரதிநிதித்துவம் செய்த பிராந்தியக் கட்சிகளின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் வந்துள்ளது. அந்நிய மூலதனம் குறித்த அவர்களது அணுகுமுறை மாறியுள்ளது; அவர்கள் தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்; ஏனென்றால் பிராந்திய முதலாளித்துவ பகுதியினர் அந்தக் கொள்கைகளில் தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளைக் காண்கின்றனர்.” (அரசியல் தீர்மானம், 17 ஆவது கட்சிக் காங்கிரஸ், 2002)

  1. உலகமயமாக்கலின் செல்வாக்கால் நவீன தாராளமயக் கொள்கை காலகட்டத்தில் பிராந்திய முதலாளிகளில் சில பகுதியினர் பெருமுதலாளிகள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் பெரு முதலாளிகளுக்கும் ஏனைய முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடும் மட்டுப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிராந்திய முதலாளிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பிராந்தியக் கட்சிகள் நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரிப்பவர்களாக மாறியுள்ளதையே நாம் காண்கிறோம். சமீப காலமாக இந்தக் கட்சிகள் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான எந்த பொதுமேடைக்கும் வர விரும்புவதில்லை. மேலும் அவர்கள் கிராமப்புற செல்வந்தர்களின் கூட்டத்தையும் பிரதிநிதித்துவம் செய்வதால் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குறித்த அவர்களது அணுகுமுறை நமது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு உள்ளது. மேலும் அவர்கள் தங்களுக்கு உகந்த நிலையில் கங்கிரசோடோ பாஜகவோடோ இணைந்து கொள்ளும் நிரந்தரமான சந்தர்ப்பவாதத்துடனே உள்ளனர். இவையெல்லாம் இருந்த போதும் நாம் அவர்களை தேசிய அளவில் பொதுவான மாற்று கொள்கைகளின் அடிப்படையில் ஒன்றிணைப் பதற்கு தொடர்ந்து முயலும் உத்தியைக் கைப்பிடித்து வந்துள்ளோம். இது எதார்த்தத்திற்கு மாறானதும் தவறானதுமென நிரூபணம் ஆகியுள்ளது.

ஐக்கிய முன்னணி உத்திகள்

  1. 7 ஆவது கட்சிக் காங்கிரசில் இருந்தே நாம் கூட்டு செயல்பாடு என்பதை வலியுறுத்தி வருகின்றோம். வர்க்க மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் ஒன்றுபட்ட செயல்பாடுகளும் கட்சிகளின் அளவில் கூட்டு இயக்கங்களை உருவாக்குவதுமே இந்த முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் உள்ள மக்கள் பகுதிகளை நாம் அணுக வழிவகுக்கும். பிராந்தியக் கட்சிகளோடு எவ்வப்போது இயலுமோ அவ்வப்போது பிரச்சனையின் அடிப்படையில் கூட்டு செயல்பாடுகளுக்கு செல்ல நாம் ஒருபோதும் தயங்கக் கூடாது. இந்த அம்சம் வலியுறுத்தப்பட வேண்டும். இது கட்சியின் சுயேட்சையான பாத்திரத்தையும் வலிமையையும் மேம்படுத்துவதோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டதாகும். ஆனால் பெரும்பாலும் ஐக்கிய முன்னணி உத்தி என்பது மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளின் அணுகுமுறை காரணமாக தேர்தல் களத்திற்கானதாகவே செயல்பட்டுள்ளது. நமது தொடர்ந்த முயற்சிகளுக்குப் பிறகும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் கூட்டுப் போராட்டங்களுக்கோ, செயல்பாட்டிற்கோ வர விரும்புவதில்லை. தேர்தலின் போது மட்டும் தேர்தல் கூட்டணி அமைந்தால் சில பொதுவான தேர்தல் பிரச்சாரங்களுக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் வரத்தயாராக இருக்கின்றனர்.
  2. சில சமயங்களில் பாஜக வுக்கு எதிராக இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டுவது காங்கிரசோடு ஒரு உடன்பாட்டிற்கு வருவதில் சென்று முடிந்துள்ளது. ஆந்திராவில் 2004 இல் இவ்வாறு காங்கிரசோடு தேர்தல் உடன்பாட்டில் முடிந்தது. பின்னர் ஒடிசா, பஞ்சாப், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கங்கிரசோடு தேர்தல் உடன்படிக்கை கொள்வதில் முடிந்தது. இது 17 ஆவது கட்சிக் காங்கிரசின் (2002) புரிதலுக்கு மாறானது. நம்முடைய முதன்மை யான போராட்டம் பாஜகவோடுதான் என்றாலும் காங்கிரசோடு எந்த உடன்படிக்கையோ அல்லது கூட்டணியோ கொள்ளக் கூடாது.

மாநிலங்களில் இடது ஜனநாயக அணியை உருவாக்குவது

  1. அகில இந்திய அளவில் மூன்றாவது மாற்றை உருவாக்கவோ அல்லது ஒரு இடது ஜனநாயக மதச்சார்பற்ற மாற்றை உருவாக்கவோ எடுக்கப்பட்ட முயற்சிகள் கட்சியின் சுயேட்சையான பாத்திரத்தை மேம்படுத்த உகந்ததாக இல்லை. ஒரு மாற்றின் பகுதியாக மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டணிக்கான நமது முயற்சிகள் இடது ஜனநாயக அணியை முன்னிறுத்துவதற்கு இடையூறாய் இருந்தன. அன்றன்றைக்கு நிலவும் சூழலை எதிர்கொள்ள மூன்றாம் மாற்றை உருவாக்கும் உத்தி கடைபிடிக்கப்படுகிறது. இது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் மாறுபட்டதும் வலுவான எதிர்நிலை கொண்டதுமான ஒரு அரசியல் பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்கும் நமது அடிப்படைக் கடமையை இரண்டாம்பட்சமானதாக மாற்றிவிடுகின்றது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் தெளிவான மாற்றாக ஒரு திட்டத்தை முன்வைத்து அதன் அடிப்படையிலான திட்டவட்டமான முழக்கங்களின் பேரில் போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்தாமல் முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் உள்ள மக்கள் பகுதிகளை வென்றெடுப்பது இயலாது.
  2. அமைப்பு வலுவாக இருக்கக் கூடிய, இடதுசாரிகள் தலைமையிலான முன்னணிகள் இருக்கின்ற மாநிலங்களில் சிறிய முதலாளித்துவக் கட்சிகளோடு இணைந்து செயல்படுவது இடது ஜனநாயகத் திட்டத்தை முன்வைப்பதை திசைதிருப்புவது இல்லை. ஆனால் கட்சி வலுவில்லாது இருக்கும் மாநிலங்களில் நம்மைக் காட்டிலும் அதிக வலுவான பிராந்தியக் கட்சிகளோடு இணைந்து இருப்பது இடது ஜனநாயக அணியை முன்னிறுத்துவதற்கு ஊறு விளைவிக்கின்றது. பல சமயங்களில் நாம் இடது ஜனநாயக அணியில் ஒன்று திரட்ட வேண்டிய வர்க்கங்களின் போராட்டங்களும் இயக்கங்களும் பிராந்தியக் கட்சிகள் நடத்தும் அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்பட வேண்டியவையாக இருக்கின்றன. சில மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக ஆகியவற்றைக் காட்டிலும் பிராந்தியக் கட்சிகள் பெரு வலுவோடு இருக்கின்றன; வலுவாய் ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியக் கட்சிகளுக்கு எதிரானதாக நம்முடைய பிரச்சாரங்களும் போராட்டங்களும் இருக்க வேண்டியுள்ளது. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடது ஜனநாயக சக்திகள் முன்னணிகளாக வளர்ந்த விதத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்; அதுபோல ஏனைய மாநிலங்களிலும் இடது ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டுவதில் முன்னேறுவதற்கு நமது நடைமுறை உத்தி திசைவழி காட்ட வேண்டும். அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளை ஒரு கூட்டணிக்கு ஒன்றுதிரட்டும் முயற்சி மாநிலத்தில் இடது ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டும் முயற்சியை தடம் புரளச் செய்கிறது.
  3. மாநிலங்களில் கட்சியின் நலன்களுக்கும் இடது ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவதற்கும் எங்கெல்லாம் உதவிகரமாக இருக்கின்றதோ அங்கெல்லாம் மத்தியக்குழு வகுத்தளிக்கும் அரசியல் – நடைமுறை உத்தியின் வரையறைக்கு உட்பட்டு பிராந்தியக் கட்சிகளுடன் பொருத்தமான தேர்தல் உத்தியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரலாம். ஆனால் அது அகில இந்திய அளவில் ஒரு கூட்டணிக்கான முடிவின் அடிப்படையில் திணிக்கப்படக் கூடாது. அவ்வாறு ஒரு தேர்தல் புரிந்துணர்வுக்கு செல்லும்போது, நாம் 17 ஆவது கட்சிக் காங்கிரசின் ஆய்வு அறிக்கை ஐக்கிய முன்னணி உத்தி குறித்து வரையறுத்துள்ள சரியான அணுகுமுறையை மனதில் கொள்ள வேண்டும்.

நெகிழ்வான உத்திகள்

  1. அரசியல் சூழலில் துரிதமான மாற்றங்கள் வரக்கூடும். முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையேயும் குறிப்பிட்ட கட்சிக்கு உள்ளேயும் புதிய முரண்பாடுகள் உதிக்கக் கூடும். அரசியல் கட்சிகளில் பிளவு மற்றும் இணைப்பு மூலம் மாற்றங்கள் நிகழலாம். அது போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் விதமாக நெகிழ்வான உத்திகள் உருவாக்கப்பட வேண்டும். கூட்டு இயக்கங்களை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு சமூக இயக்கங்களோடும் மக்கள் திரள் அமைப்புகளோடும் பிரச்சனை அடிப்படையிலான இயக்கங்களுடனும் பொதுவான கூட்டு மேடைகளை உருவாக்க வேண்டியிருக்கும்.

சுயேட்சையான வலு

  1. கடந்த இருபது ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட அடுத்தடுத்த அரசியல் நடைமுறை உத்திகள் அனைத்திலும் கட்சியின் சுயேட்சையான வலுவை அதிகரிக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். கட்சியின் சுயேட்சையான பாத்திரத்தையும் செயல்பாடுகளையும் விரிவாக்குவதன் மூலமும் அடிப்படை வர்க்கங்கள் மத்தியிலான நமது பணியை விரிவாக்குவதன் மூலமுமே கட்சியை அகில இந்திய அளவில் ஒரு வலுவான சக்தியாக ஆக்கும் திசையில் நடைபோட முடியும். சால்கியா பிளீனத்தின் தீர்மானம் வலியுறுத்துவதுபோல இடது ஜனநாயக அணியைக் கட்டியமைப்பதற்கு இது ஒரு முன் தேவை ஆகும். 17 ஆவது கட்சிக் காங்கிரசின் அரசியல் தீர்மானம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சுயேட்சையான வலுவை அகில இந்திய அளவில் அதிகரிக்காமல் இடது ஜனநாயக அணியைக் கட்டும் பணியில் முன்னேறுவது சாத்தியமல்ல”.

  1. ஆனால் கட்சியின் சுயேட்சையான வலுவில் முன்னேற்றம் ஏற்படுத்த இயலவில்லை. கடந்த இருபத்தைந்து ஆண்டு காலத்தில் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும் அகில இந்திய அளவில் செயல்படும் வெகுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை யிலும் தொடர்ந்த அதிகரிப்பைக் காண்கிறோம். 14 ஆவது கட்சிக் காங்கிரசின்போது 5.8 லட்சமாக இருந்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 21 ஆவது காங்கிரசின்போது 10.58 லட்சமாக உயர்ந்துள்ளது. 14 ஆவது கட்சிக் காங்கிரசின் போது 2.88 கோடியாக இருந்த அனைத்து வெகுமக்கள் அமைப்புகளின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 21 ஆவது காங்கிரசின் போது 5.31 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த உயர்வு பெரும்பாலும் மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களையே சார்ந்துள்ளது. கட்சியின் தற்போதைய மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் இந்த மூன்று மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை 73 சதவீதமாகும். வெகுமக்கள் அமைப்புகளில் அகில இந்திய அளவிலான உறுப்பினர் எண்ணிக்கையில் இந்த மூன்று மாநிலங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 76 சதவிகிதம் ஆகும். இந்த மூன்று மாநிலங்களுக்கும் அடுத்தபடியாக கட்சி உறுப்பினர் எண்ணிக்கையிலும் வெகுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கையிலும் வளர்ச்சி கண்டுள்ள தமிழ்நாடு, ஆந்திரா (பிரிக்கப்படாத) இரு பெரிய மாநிலங்களிலும் கட்சியின் சுயேட்சையான வலுவிலோ அல்லது பரந்துபட்ட வெகுமக்கள் செல்வாக்கிலோ சொல்லும்படியான உயர்வு ஏதுமில்லை. தேர்தல் அரங்கில் இந்த இரு மாநிலங்களிலும் கட்சி சரிவையே கண்டுள்ளது.
  2. அதனால்தான் 18 ஆவது கட்சிக் காங்கிரசின் (2005) அரசியல் – ஸ்தாபன அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:

கட்சி மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை உயர்வு, கட்சி மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் திரட்டும் ஆற்றல், தேர்தல் அரங்க வலு ஆகியவை கட்சி இந்தக் காலகட்டத்தில் விரிவாக்கத்தை சாதித்துள்ளது எனக் காட்டவில்லை. முழுமையான சித்திரத்தை நோக்கினால் கட்சி ஏற்கனவே வலுவாக உள்ள மாநிலங்களில் தனது வலுவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது; பல வலுவில்லாத மாநிலங்களிலும் பகுதிகளிலும் மெல்லச் சரிவைச் சந்தித்துள்ளது என்பது தெரிகின்றது”.

அதற்குப் பின்னரும் வலுவில்லாத மாநிலங்களில் இந்த நிலையில் முன்னேற்றம் இல்லை; அதோடு மேற்கு வங்க மாநிலத்திலும் நமது செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.

முதலாளித்துவத்தின் நவீன தாராளமயக் கட்டம்

  1. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும் தொழிலாளி வர்க்கத்தினரையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஏனைய உழைக்கும் மக்களையும் ஒன்றுதிரட்டி போராடும் கடமை நமக்கு முன்னால் உள்ளது. இதோடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் கருத்தியல் போராட்டத்தையும் நடத்த வேண்டும். கட்சியின் முன்னேற்றமும் சுயேட்சையான வளர்ச்சியும் இந்தப் போராட்டங்கள், இயக்கங்கள் ஆகியவற்றில் நாம் அடையும் முன்னேற்றத்தைப் பொருத்ததாகும்.
  2. 1991 ஆம் ஆண்டு தாராளமயமும் நவீன தாராளமயக் கொள்கைகளும் ஆரம்பம் ஆன பிறகு முதலாளித்துவ வளர்ச்சியில் ஒரு முழுமையான பெருநோக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்களும் தகவல் தொழில் நுட்பமும் உற்பத்தி நிகழ்முறைகளிலும், சமூகத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய தாராளமய முதலாளித்துவக் கட்டம் குறித்து ஒரு முழுமையான புரிதலுக்கு வருவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டது. (பல்வேறு வர்க்கங்களில் அவை ஏற்படுத்தியுள்ள) ஆழமான மாற்றங்களையும் தாக்கங்களையும் ஆய்வு செய்யாமல் சரியான முழக்கங்களையும் உத்திகளையும் வகுத்து உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், இளைஞர், மாணவர், பெண்கள் மற்றும் ஏனைய பகுதி மக்களுக்கேற்ற பல்வேறு விதமான இயக்கங்களை உருவாக்குவது சாத்தியமில்லை. முதன்மையான கடமை பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய புதிய தாராளமயக் கொள்கைகளின் தொகுப்பு முழுவதையும் எதிர்த்துப் போராடுவதுதான் என நாம் கூறியிருந்தாலும் (20 ஆவது காங்கிரஸ்) சரியான உத்திகளையும் முழக்கங்களையும் வகுத்து மக்கள் திரள் இயக்கங்களையும் வர்க்கப் போராட்டங்களையும் வளர்த்தெடுக்கும் முகமாக ஆழமான ஆய்வுகளைச் செய்யவில்லை. மத்தியக்குழுவின் தேர்தல் பரிசீலனை அறிக்கை தீர்மானித்தபடி நாம் பல்வேறு வர்க்கங்கள் மற்றும் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த திட்டவட்டமான ஆய்வுகளை தற்போது நடத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் திட்டவட்டமான உத்திகளையும் முழக்கங்களையும் வகுக்க முடியும்.
  3. நமது மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரு வணிகர்கள் அடங்கிய ஒரு கிராமப்புற செல்வந்தர்களின் அணி உருவாகியுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளோம். இந்த பகுதியினரோடுதான் ஏழை விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் முரண்பாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. நம்மால் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சனைகளைக் கையிலெடுத்து அவர்களின் இயக்கங்களை இந்தத் திசைவழியில் செலுத்த முடிந்துள்ளதா? அவ்வாறு இயலாமல் போனதற்கான ஒரு காரணம், கிராமப்புற செல்வந்தர்கள் அணியை பிரதிநிதித்துவம் செய்யும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளை நாம் தேர்தல் கூட்டணியில் நம்மோடு வரக்கூடியவர்கள் எனக் கருதுவதுடன் தொடர்புடையதாகும்.
  4. நவீன தாராளமயக் கொள்கைகள் ஆளும் வர்க்கங்களின் சார்பாகவே பின்பற்றப்படுகின்றன. அவை ஏதோ ஒரு குறிப்பிட்ட மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் அல்ல. 1991 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்திலிருந்து அடுத்தடுத்து வந்த எல்லா மத்திய அரசாங்கங்களும் இதே பாதையைத்தான் பின்பற்றி வருகின்றன. நாம் இந்த அம்சத்திற்கு அவ்வப்போது அழுத்தம் தராமல் இருந்துள்ளோம். வகுப்புவாத அபாயத்தை எதிர்ப்பது என்ற பெயரில் நாம் ஐக்கிய முன்னணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு பங்காளிகளாய் ஆகிப்போனோம். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மையமான பயணப் பாதை தாராளமய தனியார்மயக் கொள்கைகளைத் தொடர்வதுதான். இதன் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டு நாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். இது சரியான நடவடிக்கைதான். ஆனால் ஐ.மு.கூ அரசாங்கத்தின் முதன்மையான அழுத்தம் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் ஊடாக நவீன தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதாகவே இருந்தது.
  5. நவீன தாராளமய சீர்திருத்தங்களுக்கெதிரான போராட்டத்தின் மற்றொரு அம்சம், இடதுசாரிகள் தலைமை தாங்கும் அரசாங்கங்கள் இவை குறித்து கொள்ள வேண்டிய அணுகுமுறை மற்றும் கொள்கைகள் பற்றியதாகும். மிக நீண்ட காலம் நம்மால் தலைமையேற்று நடத்தப்பட்ட மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசங்கம் இந்த வினாவோடு உழல வேண்டியிருந்தது. தொழில் மயமாக்கலுக்காக நிலம் கையகப்படுத்துவதில் இந்தப் பிரச்சனை முன்னுக்கு வந்தது. நந்திகிராமத்திலும் வேறு சில திட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த அணுகுமுறை விவசாயிகளில் ஒருபகுதியினரை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தியது. அகில இந்திய அளவில் அது நவீன தாராளமய அரசாட்சியின் கீழ் பெரு நிறுவனங்களின் நில கபளீகர திட்டத்தின் பகுதியாகப் பார்க்கப்பட்டது. இந்தப் பிரச்சனையில் மேற்கு வங்கத்தில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது என்பதோடு அகில இந்திய அளவிலும் கட்சியின் தோற்றம் பாதிக்கப்பட்டது. இடது முன்னணி அரசாங்கம் அதன் கடைசிப் பத்தாண்டு காலத்தில், அதாவது நவீன தாராளமயக் கொள்கைகள் கோலோச்சியபோது கடைப்பிடித்தக் கொள்கைகள் விமர்சனப் பூர்வமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் தேவைப்படும் பொழுது சரியான திசைவழியில் செல்வதற்கு உதவுவதாக அவற்றிலிருந்து நாம் சரியான பாடங்களைக் கற்க வேண்டும்.
  6. உலகமயமாதல் நவீன தாராளமயத்தின் அரசாட்சி ஆகியவற்றின் கீழான நிகழ்வுப்போக்கு இடதுசாரிகளுக்கு புதிய சவால்களை முன்வைத்துள்ளது; தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் இயக்கங்களை உருவாக்கி நடத்துவதற்கு எதிரான சூழலை உருவாக்கியுள்ளது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். தற்போதைய நிகழ்வுப் போக்கை முழுமையாகப் புரிந்து கொள்வதும் புதியதும் பொருத்த மானதுமான உத்திகளையும் ஸ்தாபன முறைகளையும் வகுத்துக் கொள்வதும் மிக அவசரமானதும் இன்றியமையாததும் ஆகும். இதுதான் கட்சியின் சுயேட்சையான வலுவை வளர்த்தெடுப்பதற்கான அடிப்படையாகும்.

அரசியல் நடைமுறை உத்தியை அமலாக்குவதில் ஏற்பட்ட குறைபாடுகள்

  1. அரசியல் நடைமுறை உத்தியின் பல்வேறு அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் பல நேரங்களில் சூழல் குறித்த மதிப்பீடுகளில் சில தவறுகளும் பிழைகளும் ஏற்பட்டுள்ளன. வழக்கில் உள்ள நடைமுறை உத்தியின் அடிப்படையில் நாம் பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் தேர்தல் உத்தியை வகுத்து வந்துள்ளோம். இவை பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சில தவறான மதிப்பீடுகளும் பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 1999-ல் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு, தேர்தல் பிரச்சாரத்தின் போது நமது தலைமை கூறிய சில கருத்துக்கள் நாம் ஒரு காங்கிரஸ் சார்பான நிலை எடுத்த ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது என சுட்டிக் காட்டியது. அத்தகைய கருத்துக்கள் நாம் காங்கிரசோடு ஒத்துழைப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பது போலவும் தேர்தலுக்குப் பிறகு ஒரு மூன்றாவது மாற்றை உருவாக்குவதில் ஆர்வமற்று இருப்பது போலவுமான சித்திரத்தை உருவாக்கிவிட்டது என சுய விமர்சனமாகக் குறிப்பிடப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி மையம் காங்கிரஸ் கட்சியின் பலம் குறித்து ஒரு மிகையான மதிப்பீட்டைச் செய்திருந்தது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அகில இந்திய அளவில் நம்பிக்கை தரக்கூடிய ஒரு மாற்று அணி தேர்தல் களத்தில் இல்லாத நிலையில் ஒரு மாற்று அரசாங்கத்திற்கான முழக்கத்தை அளித்தது தவறு என தேர்தல் குறித்த ஆய்வு சுட்டிக் காட்டியது.
  2. நமது உத்திகளை நடைமுறைப்படுத்துவதில் சில பிழைகள் ஏற்பட்டுள்ளன. 1996-98 ஆம் ஆண்டுகளில், நாம் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆதரித்தபோது, அரசாங்கம் பின்பற்றிய தாராளமய ஆதரவுக் கொள்கைகளிலிருந்து நாம் போதுமான அளவில் நம்மை வேறுபடுத்திக் காட்டவில்லை. மேலும் அரசாங்கத்தை பதவியில் இருத்தி வைக்கும் வேலையில் மூழ்கியதானது மக்கள் திரள் போராட்டங்களையும் இயக்கங்களையும் கட்டியமைக்கும் பணியில் செலுத்த வேண்டிய கவனத்தைப் பாதித்தது.
  3. ஜூலை 2008 இல் ஐ.மு.கூ அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதற்கு எடுத்த முடிவு குறித்து ஆய்வு செய்த கட்சியின் 20 ஆவது காங்கிரஸ், ஆதரவை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியேதுமிருக்கவில்லை என முடிவு செய்தது. ஆனால் ஆதரவை திரும்பப் பெறும் முடிவை முன்னரே அதாவது 2007, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அரசாங்கம் சர்வதேச அணு ஆற்றல் முகமைக்கு பேச்சுவார்த்தைக்குச் செல்ல விரும்பியபோதே எடுத்திருக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டியது. அவ்வாறு எடுக்காதது தவறு எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. தங்கள் கேந்திரக் கூட்டணியின் ஒரு பகுதியாக அணு ஆற்றல் உடன்படிக்கையை முடிப்பதில் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதிப்பாட்டையும் வலிமையையும் அரசியல் தலைமைக்குழுவும் மத்தியக்குழுவும் குறைத்து மதிப்பிட்டிருந்தன. அத்தோடு நிகழ்ச்சிப் போக்கைத் தீர்மானிப்பதில் நமக்கிருந்த வலிமை குறித்தும் திறன் குறித்தும் மிகையான மதிப்பீடு கொண்டிருந்தோம். அரசாங்கத்தை அணு ஆற்றல் முகமைக்கு பேச்சுவார்த்தைக்குச் செல்ல அனுமதித்துவிட்டு அதேசமயம் உடன்படிக்கையை செயல்பாட்டிற்கு கொண்டு வரமாட்டோம் என நம்மோடு ஏற்படுத்திக் கொண்ட புரிதலுக்கு காங்கிரஸ் உண்மையாக இருக்கும் என நம்பியதும் தவறு.
  4. வேறோர் இடத்தில் சுட்டிக்காட்டியது போல வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வதற்கான செயல்பாடுகளை வளர்த்தெடுப்பதிலும் பலவீனம் இருந்துள்ளது. வகுப்பு வாத சக்திகளை எதிர்த்துச் செயல்பட நமது அரசியல் நடைமுறை உத்தி வழிகாட்டியிருந்தாலும், வகுப்புவாத சக்திகளை சமூக கலாச்சாரத் தளத்தில் எதிர்கொள்ள கள அளவில் போதுமான முயற்சிகள் இல்லை. அதேபோல, நமது அரசியல் நடைமுறை உத்தி வகுத்துள்ளபடி சமூகப் பிரச்சனைகளை கையிலெடுப்பதிலும் கட்சி தோல்வி கண்டுள்ளது என அடுத்தடுத்த கட்சிக் காங்கிரஸ்கள் குறிப்பிட்டுள்ளன. தொழிலாளி – விவசாயி கூட்டணி என்ற முழுக்கத்தை திட்டவட்டமான முறையிலும் போதுமான அழுத்தத்தோடும் அமலாக்க நமக்கு இயலவில்லை. வெகுமக்கள் அமைப்புகளின் தேசிய மேடை (NPMO) போன்ற வர்க்க வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டு மேடைகளை பல்வேறு சிரமங்கள் காரணமாக நம்மால் முன்னெடுக்க இயலவில்லை.
  5. அரசியல் நடைமுறை உத்தியை நடைமுறைப்படுத்துவதில் நடந்துள்ள இதுபோன்ற பிழைகள் தவறுகள் மற்றும் இதிலிருந்து உருவான தேர்தல் உத்திகள் ஆகியவை நமது உத்தியின் இலக்கு நோக்கிய பயணத்தில் நம்மை முன்னேறவிடாமல் செய்துள்ளன.

வகுப்பு வாதத்திற்கெதிரான போராட்டம்

  1. நமது போராட்டத்தின் முதன்மையான இலக்கு ஆட்சியில் இருக்கும் போது பாஜகவை நோக்கியதாகவே இருக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் இதன் பொருள் காங்கிரசோடு தேர்தல் உடன்பாடு காணலாம் என்பதல்ல. அதைப்போல வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முதன்மைப்படுத்தி நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதை இரண்டாம் பட்சமாக விட்டுவிடுவதும் சரியான அணுகுமுறையல்ல. வகுப்புவாதத்திற் கெதிரான போராட்டம் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று என்ற அணுகுமுறை இருக்கக் கூடாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே தேர்தல்கள உத்தியாக குறுக்கப்பட்டுவிடக் கூடாது. அது உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகுப்புவாத சக்திகளுக் கெதிரான நமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும். புதிய தாராளமயக் கொள்கைகளாலும் நடப்பிலுள்ள முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பினாலும் உருவாக்கப்படும் மக்களின் கோபத்தினை திசைதிருப்புவதற்காக வகுப்புவாதம் ஆளும் வர்க்கங்களால் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பான்மை வகுப்புவாதம் தலைதூக்குவது சிறுபான்மை வகுப்புவாதத்தையும் தூண்டிவிடுகின்றது; அதனையும் எதிர்த்து நாம் போராட வேண்டும். புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமும் வகுப்புவாதத்திற்கெதிரான போராட்டமும் ஒன்றோ டொன்று இணைந்தது என்பதே நமது புரிதல். மக்களின் வாழ்வாதாரங் களுக்கான போராட்டம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் இந்துத்வா கருத்தியலுக்கு எதிராகவும் நடத்த வேண்டிய போராட்டம் ஆகியவற்றை ஒரே சமயத்தில் தொடர ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை இருக்க வேண்டும். அவ்வாறு போராட்டங்களை ஒன்றுபடுத்தினால்தான் நாம் வகுப்புவாத சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் பரந்துபட்ட மக்கள் திரளை ஈர்க்க முடியும். சமூக நோக்கில் இந்துத்வா கருத்தியல் என்பது சாதி அமைப்பிலும் ஆணாதிக்கத்திலும்தான் பொதிந்துள்ளது என்பதால் இந்துத்வாவிற்கு எதிரான போராட்டம் என்பது ஆணாதிக்கத்திற்கும் சாதிக்கும் எதிரான போராட்டமாகவும் இருக்க வேண்டியுள்ளது.
  2. மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக அதிகாரத்தில் இருப்பதால் வகுப்புவாத சக்திகளின் அபாயம் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக நாம் பரந்துபட்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும். வகுப்புவாதத்திற்கெதிராக பரந்துபட்ட மக்களைத் திரட்ட அத்தகைய பரந்த மேடைகள் அவசியமாகின்றன. ஆனால் அத்தகைய பரந்த மேடைகளை தேர்தல் கூட்டணிக்கான அடிப்படையாகக் கருதக்கூடாது.

நாடாளுமன்றவாதம்

  1. நாடாளுமன்றவாதம் ஒரு சீர்திருத்த நோக்குநிலை; அது கட்சியின் செயல்பாட்டை தேர்தல் பணிகளில் மட்டும் முடக்கி கட்சியின் முன்னேற்றத்தைத் தேர்தல் போராட்டத்தின் மூலமே சாதித்துவிட முடியும் என்ற மாயையை உருவாக்குகின்றது. இது மக்கள் திரள் இயக்கங்களை உருவாக்குவது, கட்சியைக் கட்டியமைப்பது, தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்துவது ஆகியவற்றை புறக்கணிப்பதில் கொண்டு விடுகின்றது. வெகுமக்கள் அமைப்புகளின் இயக்கங்கள், அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாக நாடாளுமன்றப் பணிகளையும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலான பணிகளையும் ஒன்றிணைத்துச் செய்ய வேண்டும்.
  2. இந்த அம்சத்திற்கு அரசியல் நடைமுறை உத்தி போதுமான கவனம் தர வேண்டும். நமது கவனக் குவிப்பு கட்சியின் சுயேட்சையான செயல்பாடுகளை வலுவாக்குவதும் இடது ஜனநாயக அணி (அது வர்க்க அடிப்படையிலான கூட்டணி, ஒரு தேர்தல் கூட்டணி அல்ல) கட்டுவதும் ஆகும். இதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் உத்திகளில் கூடுதல் கவனம் செலுத்துவதும், முதலாளித்துவக் கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கைகளுக்காக முயல்வதும், ஒரு தேர்தல் மாற்றை மட்டுமே முன்னிறுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
  3. நவீன தாராளவாத அமைப்பும் பெருமளவிலான பணமும் கார்ப்பரேட் ஊடகங்களும் அரசியல் களத்தில் நுழைந்துள்ளது நாடாளுமன்ற ஜனநாயகத்தை மிகவும் குறுகிய வரம்பிற்குள் தள்ளியுள்ளது. இதுவும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் இதற்கு நாம் நமது தேர்தல் களப் பணிகளை புறக்கணிக்க வேண்டும் என்பதோ அல்லது குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதோ பொருளாகாது. மாறாக கட்சி தனது சுதந்திரமான பாத்திரத்தை அரசியல் ரீதியாக தேர்தல் களப் போராட்டத்தில் முன்னிறுத்த கடும் முயற்சி செய்ய வேண்டும். தேர்தல் களத்தில் நமது பணிகள் பலவீனமாகவும் முறைப்படுத்தப்படாததாகவும் உள்ளது. அதற்கு காரணம் நமது சுயேட்சையான பாத்திரத்தையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்துவதில் உள்ள பலவீனமும் வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களை நடத்தி அதனடிப்படையில் நமது செல்வாக்கை அமைப்பு ரீதியாக உறுதிபடுத்தாததுமே காரணமாகும்.

சாரமாக

  1. அடுத்தடுத்த அரசியல் நடைமுறை உத்திகள் நாம் அந்தந்த காலத்தில் நிலவிய சூழலை எதிர்கொள்ளவும் காங்கிரஸ் பாஜக ஆகியவற்றை தேர்தல் களத்தில் எதிர்த்து நிற்க, ஏறக்குறைய சரியான உத்திகளை வகுக்கவும் துணை புரிந்துள்ளன. அரசியல் நடைமுறை உத்திகள் இடதுசாரிகளின் ஒற்றுமையை உருவாக்கவும் இடதுசாரிகள் தலைமை யிலான மாநில அரசுகளை உறுதிப்படுத்தவும் உதவியுள்ளது.
  2. சமூகத்திலும் வர்க்கங்களிடத்திலும் நவீன தாராளமய முதலாளித் துவத்தின் தாக்கம் என்ன என்பது குறித்து முழுமையான புரிதல் ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்பட்ட காலதாமதம் உழைக்கும் மக்களின் இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் சரியான அழுத்தமும் திசைவழியும் தருவதில் பலவீனத்தை ஏற்படுத்தியது.
  3. அரசியல் நடைமுறை உத்திகள், இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் கடமையை முன்வைத்தது. மேலும், பொதுத் திட்டத்தின் அடிப்படையிலான ஒரு மூன்றாம் மாற்று என்ற முறையில் அதனை இடைக்கால முன்னணி என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்த முயற்சி பலனற்றதாகவும் கட்சியின் சுயேட்சை யான வலிமையை இயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் மேம்படுத்துவது என்று கவனம் குவிவதற்கு மாறாக நமது கவனம் சிதறுவதற்கு வழிவகுப்பதாகவும், சமயத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதை மட்டுப்படுத்துவதாகவும் ஆகியுள்ளது.
  4. இதன் முக்கியமான விளைவு, இடது ஜனநாயக அணி என்பது அடையக்கூடிய இலக்கு என்பதிலிருந்து பின்தள்ளப்பட்டு, பிரச்சார முழக்கமாக மட்டும் ஆகிப்போனது. இது நவீன தாராளமயக் கொள்கைகளினால் பெரிதும் துயருறும் பல்வேறு பகுதி உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட செயல்பாடுகள் அவர்களது தொடர்ச்சியான தளர்சியடையாத போராட்டங்கள் ஆகியவற்றைக் கட்டியமைப்பது ஆகியவற்றிலிருந்து நம் கவனத்தைச் சிதறடித்துள்ளது.

எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

  1. அரசியல் நடைமுறை உத்தி பற்றிய விமர்சனபூர்வமான மறுஆய்வு நம்மை கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வரப்பணிக்கிறது:
  2. இடது ஜனநாயக அணியில் வரவேண்டிய வர்க்கங்களை திரட்டுவதற்கான திட்டத்தையும் இடது ஜனநாயக அணியையும் மீண்டும் முதன்மைப்படுத்துவது. இந்த முன்னணியின் தன்மை என்னவாக இருக்க வேண்டுமென்பது குறித்து மேலும் ஆழமாகப் பரிசீலிப்பது (ஏனென்றால் கடைசியாக அது 10 ஆவது கட்சிக் காங்கிரசில்தான் முயற்சிக்கப்பட்டது). இதன் ஒரு பகுதியாக இடதுசாரி ஒற்றுமையை விரிவாக்குவது, ஆழப்படுத்துவது.
  3. கட்சியின் சுயேட்சையான பாத்திரத்தை அதிகரிப்பது அதன் வலிமையையும் வெகுமக்கள் செல்வாக்கு தளத்தையும் அதிகரிக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது.
  4. தொழிலாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் ஆகியோரின் வர்க்கப் போராட்டங்களையும் ஏனைய மக்கள் பகுதியினரின் வெகுமக்கள் போராட்டங்களையும் முன்னெடுப்பதற்கு திட்டவட்டமான உத்திகளையும் முழக்கங்களையும் உருவாக்குவது. ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து திட்டவட்டமான ஆய்வுகளை நடத்தி அதனடிப் படையில் இவற்றை உருவாக்குவது.
  5. இவ்வாறு உருவாக்கும் அரசியல் நடைமுறை உத்தி இந்துத்வா சக்திகளையும் வகுப்புவாத கருத்தியலையும் எதிர்த்து அரசியல், தத்துவார்த்த, சமூக, கலாச்சார மற்றும் ஸ்தாபன தளங்களில் நடத்தும் போராட்டங்களுக்கு துல்லியமான திசைவழியையும் உள்ளடக்கத்தையும் அளிக்க வேண்டும்.
  6. இவ்வாறு உருவாக்கும் அரசியல் – நடைமுறை உத்தி, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடவும் அடையாள அரசியலை எதிர்கொள்ளவும் குறிப்பான வழிகாட்டுதல்களைத் தரவல்லதாக இருக்க வேண்டும். பெண்களின் உரிமைக்கானதும் பாலின ஒடுக்குமுறைக்கு எதிரானதுமான போராட்டங்களுக்கு இன்னும் அதிகம் அழுத்தம் தரவேண்டும். கட்சி சமூகப் பிரச்சனைகளை பெரிய அளவில் கையிலெடுக்கவும் தலித், பழங்குடியினர், சிறுபான்மை யோர் மற்றும் பிற்பட்டவகுப்பினரின் பிரச்சனைகளில் தலையீடு செய்து போராட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
  7. இவ்வாறு உருவாக்கப்படும் அரசியல் – நடைமுறை உத்தி வர்க்க மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதாகவும் வெகுமக்கள் பிரச்சனைகளில் பொது மேடை களையும் ஒன்றுபட்ட செயல்பாடுகளையும் கட்டமைக்க கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும்.
  8. தேர்தல் உத்திகள் நமது முதன்மையான உத்தியான இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பதற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் பிராந்தியக் கட்சிகளின் பாத்திரத்தை கணக்கில் கொண்டால் அகில இந்திய அளவில் ஒரு கூட்டணியைக் கட்டியமைப்பதற்கு அடிப்படை ஏதுமில்லை. மாறாக, மாநிலங்களில் கட்சியின் நலனுக்கும் இடதுசாரி ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவதற்கும் எங்கெல்லாம் உதவுமோ அங்கெல்லாம் இடதுசாரி அல்லாத பிற மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கை கொள்ளலாம்.
  9. அரசியல் – நடைமுறை உத்தியினை நடைமுறைப்படுத்துவது என்பது கட்சி ஸ்தாபனம் மற்றும் செயல்படுத்துவதற்கான அதன் திறனையும் பொருத்ததாகும். மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கும் அவர்களை வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களில் ஈர்த்துக் கொண்டு வருவதற்கும் வெகுமக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கை அரசியல் செல்வாக்காக மாற்றுவதற்கும் திறன் கொண்டதாக கட்சி இல்லையென்றால் அரசியல் – நடைமுறை உத்தியினை முறையாக நடைமுறைப்படுத்துவது இயலாது. இதில் கட்சி அணிகளின் தத்துவார்த்த மட்டம் என்பதும் ஒரு முதன்மையான காரணி ஆகும். கட்சி ஸ்தாபனம் குறித்து பரிசீலனை செய்து, கட்சியின் சகல மட்டங்களிலும் அதன் செயல்பாட்டு முறை மற்றும் பாணி ஆகியவற்றை விமர்சனபூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் கட்சி ஸ்தாபனத்திற்கு ஒரு புதிய உத்வேகம் அளித்து வெவ்வேறு மக்கள் பகுதிகளை சென்றடைவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். வர்க்க மற்றும் வெகுமக்கள் அமைப்புகள் சரியான திசைவழியில் செல்வதையும், அவற்றின் சுதந்திரமான செயல்பாடுகளையும், வெகுமக்கள் அமைப்புகள் குறித்து கட்சியின் சரியான அணுகுமுறையையும் உறுதிப்படுத்த வேண்டும். கட்சி அமைப்பு குறித்த பிளீனம் இந்த முக்கியமான கடமையை செய்திட வேண்டும்.

Leave a Reply