செப்டம்பர் 7ல் மக்கள் விரோத பிஜேபி ஆட்சிக்கு எதிரான மறியல் போர்

CPIM Puducherry Sept7 (6)புதுச்சேரி, வில்லியனூர், காரைக்கால் மையங்களில் செப்டம்பர் 7 அன்று ரயில் மறியல்…
ஒன்றிய பாஜக அரசே வேலைகொடு…விலைவாசியைக் கட்டுப்படுத்து…
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை…
அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்… போன்ற பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அமித்ஷா, மோடி வகையறாக்கள் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த கட்ட அதிகாரத்தை தொடர்வதற்கு, கைப்பற்றுவதற்கு மக்களை கூறு போட்டு, கார்ப்பரேட்டுகளுடன் கைகூலுக்கிக்கொண்டு ஊர்வலம் வர ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.
தென்னிந்தியாவில் துடைத்தெறியப்பட்ட பாஜக கட்சி மாறிகளை பயன்படுத்தி அரசியல் வர்த்தக பேரங்களினால் புதுச்சேரியிலும் ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டுள்ளனர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சியினர் மூடிய பஞ்சாலைகளை நவீனப்படுத்தி திறந்திடுவோம். மூடிய ரேஷன் கடைகளை திறப்போம். முறைசாராத் தொழிலாளருக்கு நல வாரியம் உருவாக்குவோம். அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக தீர்த்து பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம், வாய்ப்பு அளியுங்கள் என்றனர். தேர்தல் வாக்குறுதியையும் தாண்டி சட்டமன்றத்திலும் அறிவிப்புகளை அள்ளித் தெளித்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும் எதையுமே செய்யவில்லை. நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறியும் அவர்களிடம் இல்லை.
CPIM Puducherry Sept7 (7)எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ள அகில இந்திய மறியல் போராட்டத்தில், போராட்டத்தின் மைய முழக்கமான வேலையின்மை, விலைவாசி உயர்வு புதுச்சேரியிலும் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. மேலும் புதுச்சேரியில் கூடுதலாகவே பிரச்சனைகள் இருக்கின்றன.
எனவே புதுச்சேரி மறியலில் கூடுதலாக பங்கேற்று கட்சியின் அகில இந்திய போராட்டத்தை வலு சேர்ப்போம் என்ற உறுதியுடன் இளைஞர்களும் பெண்களும் தொழிலாளர்களும் மறியலில் பங்கேற்று களம் காணத் தயாராகிவிட்டனர். அதற்கான திண்ணைப். பிரச்சாரமும், தெருமுனை இயக்கங்களும், துண்டுப் பிரசுர விநியோகங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்தை தென்னிந்தியாவில் கால் பதிக்க நுழைவாயிலாகவும், அகில இந்திய அளவில் அவர்களது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சோதனை எலியாகவும், பாஜக பயன்படுத்தி வருகிறது.  எனவே புதுச்சேரி மாநிலத்தின் பிரத்தியேக பிரச்சனைகளையும் விளக்கி, பிரச்சார இயக்கத்தில் பாசிச பாஜகவை தோழர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரியின் அதிகார மையங்கள்.
CPIM Puducherry Sept7 (4)
2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய ஆட்சியில் உருவான அரசியல் அதிகார மாற்றங்கள் உடனடியாக புதுச்சேரியிலும் பிரதிபலித்தது. புதுச்சேரியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை விட, ஒன்றிய அரசினால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் என்ற ஜனநாயக விரோத நடைமுறை தொடங்கியது. உதாரணமாக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம், அதிகாரிகள் கூட்டத்தை தன்னிச்சையாக துணை நிலை ஆளுநரே நடத்துவது, திட்டங்களை அறிவிப்பது, அமைச்சரவை முடிவு செய்கின்ற மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்த ஒத்துழைக்க மறுப்பது, அனுமதிக்காக ஒன்றிய அரசின் உள்துறைக்கு அனுப்பப்படும் கடிதங்களை நிறுத்தி வைப்பது, முடக்குவது போன்றவைகள் தொடங்கப்பட்டன. புதுச்சேரியில் இரண்டு அதிகாரம் மையங்கள் உருவாகின.
2021 தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி நிலவினால் முரண்பாடுகள் நீங்கி சுமூகமான நிலை உருவாகி முன்னேற்றங்கள் ஏற்படும் என்று புதுச்சேரி மக்கள் நம்பினர். பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால் அதற்குப் பின்னர் புதுச்சேரியில் மூன்று அதிகார மையங்கள் உருவாகின. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், முதலமைச்சர், அவர்களுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களை உள்ளடக்கிய ஒரு அதிகார மையம்.
ஒன்றிய அரசினால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் தலைமையில் மற்றொரு அதிகாரம் மையம். தலைமையிடம் ஆளுநர் மாளிகை.   இந்த இரண்டு அதிகார மையங்களுக்கும் இடையில் இந்த மையங்களுக்கு தலையையும், வாலையும் காட்டிக் கொண்டு, மக்களுக்கு தொடர்பே இல்லாத, அவர்களது வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு, சுயநலமிக்க உயர் அதிகாரிகளின் அதிகார மையம் மூன்றாவதாக உருவாகியிருக்கிறது.
இம்மூன்று அதிகார மையங்களிலும் ஒரே ஒரு ஒற்றுமை மட்டும் நிலவியது. புதுச்சேரி மக்களை பற்றி கவலைப்பட வேண்டாம். புதுச்சேரியின் தொழில் வளர்ச்சிக்கு தங்களுடைய நடவடிக்கையால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். கூட்டுறவு நிறுவனங்களில் நஷ்டங்கள் ஏற்பட்டு மூடு நிலைக்கு வந்தாலும், ஆண்டுக் கணக்கில் பணியாற்றிய ஊழியர்கள் தெருவிற்கு வந்தாலும் நாங்கள் பொறுப்பில்லை என்பதில் ஒற்றுமை.
புதுச்சேரி மக்களும், நேர்மையாக தொழில் செய்ய விரும்புவோரும் எதிர்கால தலைமுறைக்காக கவலைப்பட்டு, அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்போரும் இந்த அதிகார மையங்களின் செயல்பாடுகளை கவலையோடு அன்றாடம் எதிர்நோக்கி வருகின்றனர். குறைகளை கொட்டித்தீர்க்கும் பொது மக்களிடம், “என்னிடம் எதுவுமே இல்லை. ஆளுநரை பாருங்கள், நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று கண்ணீருடன் புலம்பக்கூடிய புதுச்சேரி முதல்வர்.
“எங்களுக்குள் எதுவும் இல்லை. அண்ணன் – தங்கை உறவு தான். புதுச்சேரியில் அனைவரும் நலமாக இருக்கின்றனர். நாங்களும் நல்லாட்சி செய்கிறோம்” என்று பம்மாத்து செய்யும் துணை நிலை ஆளுநர் தமிழிசை. இவர் புதுச்சேரிக்கு துணைப் பொறுப்பு தான். தெலுங்கானவிற்கு முழுப்பொறுப்பு. ஆனால் முழுமையாக புதுச்சேரியிலேயே இருக்கிறார். முதல்வர், ஆளுநர் இருவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளாலும், அதிகாரப் போட்டிகளிலும் நன்றாக குளிர்காய்ந்து வருகின்றனர் சுயநலமிக்க அரசு உயர் அதிகாரிகள். இதற்கெல்லாம் ஒரு வகையில் தீர்வு புதுச்சேரி மாநில அந்தஸ்து என்ற ஒரு கருத்து பரவலாக உள்ளது. அது ஓரளவு உண்மையும் கூட.
புதுச்சேரி விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் ஆகின்றன.
சட்டப்பேரவை உருவாகி 59 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. 13 முறை மாநில அந்தஸ்துகளுக்கான தீர்மானங்கள் ஏகமனதாக புதுச்சேரியில் நிறைவேற்றப்பட்டன. ஒன்றும் நடக்கவில்லை.சிறப்பு மாநில அந்தஸ்த்தில் இருந்த ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றிய ஆட்சியாளர்களிடம் ஜனநாயக உரிமைகள், கருத்துரிமைகள் என்று ஒட்டுமொத்த மனித உரிமைகளை மறுக்கும் பாசிச சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களிடம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்து விடுமா? வாய்ப்பில்லை.
அவர்களிடம் வாங்கி விடுவோம் என்று, அவ்வப்போது சுதந்திர நாளில் கொடியேற்றி உரை நிகழ்த்தும் என்.ஆர். காங்கிரசை நம்ப முடியுமா? நம்பக்கூடாது. தீர்வு, இருவரையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டுவதே ஆகும்.
புதுச்சேரிக்கும் இந்தியாவிற்கும் அதுவே நல்லது. அதற்கான தொடக்கமே வருகிற செப்டம்பர் 7ல், மார்க்சிஸ்ட் கட்சியின் மறியல் போராட்டம். புதுச்சேரியில் இந்த மறியல் வெற்றிகரமாக நடத்துவதற்கு சில பிரத்தியேகமான காரணங்களும் உண்டு. பிரச்சனைகளும் உண்டு.
புதுச்சேரி அரசின் மின்துறை தனியார்மயம். புதுச்சேரியை இருட்டாக்கும் திட்டம்.
CPIM Puducherry Sept7கடந்த 2020 ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்தார். அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான மின்துறை அமைச்சர், புதுவை மின்துறை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறி, சட்டமன்றத்திலும் கண்டன தீர்மானத்தையும் நிறைவேற்றினார். ஆனால் அதே நபர் 2021ல் பாஜகவிற்குத் தாவி என்.ஆர்.காங்கிரஸ் முதுகில் ஏறி மீண்டும் மின் துறை அமைச்சரானார். உடனடியாக, “மின்துறை தனியார் மயமாக்குவது அரசின் கொள்கை முடிவு” மேலும் இது, ” புதுச்சேரி மக்களுக்கு நன்மை பயக்கும்” என்று திருவாய் மலர்ந்தார்.
இது கொள்கை முடிவு அல்ல. கொள்ளை முடிவு. நமது வீடுகளை இருட்டாக்கும் முடிவு என்று அறிவித்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட தொழிற்சங்க ஜனநாயக இயக்கங்கள் வீதியில் இறங்கி போராடின. நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்தன.
புதுச்சேரியின் தெருக்களில் நடைபெற்ற மக்கள் இயக்கங்களாலும், நீதிமன்றங்களில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களாலும் மின்துறை தனியார் மயமாக்கும் திட்டம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் திரை மறைவில், கொல்லைப்புற வழியாக திருகுதாள வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்விதக் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் மின் கட்டண உயர்வு, மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு டெண்டர் போடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3000 தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க புதுச்சேரி அரசு கூறுவது வெறும் 300 கோடி ரூபாய். புதுச்சேரி அரசு துறைகளிலும் மின்துறைகளும் 10,000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றன 10-15 ஆண்டுகளாக எவ்விதமான பணியிடங்களையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை இல்லை. புதுச்சேரியில் வேலையின்மை தலைவிரித்து ஆடுகிறது. மின்துறை தனியார் மயமானால் அது மேலும் தீவிரமாகும்.
தனியார் மயமானபின் மின் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க முடியாது. புதிய மின் இணைப்பு, பராமரிப்பு, சீர் செய்தல் ஆகியவற்றிற்கான கட்டணக் கொள்ளை கொடிகட்டிப் பறக்கும். மின் கட்டண உயர்வின் பாதிப்பை ஏழை எளிய மக்கள் நினைத்துகக்கூட பார்க்க முடியாது.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வாய்ப்பே இல்லை.
அரசு வெளி மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு 5.60 க்கு வாங்கி, தற்போது மின் கட்டணமாக 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 1.90 என்று கணக்கிட்டு மானிய விலையில் வழங்கி வருகிறது. தனியார் மயமானால் யூனிட் 10 முதல் 12 வரை உயர்த்தப்படும்.
ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் உருவான மின்துறை நமது பொதுச்சொத்து. அதைப் பாதுகாக்க செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும் மறியலில் பங்கேற்போம்.
மின் கட்டண உயர்வு என்பது அதை மட்டும் சார்ந்ததல்ல. அதோடு தொடர்புள்ள அத்தனை தொழில்களையும் பாதிக்கும். அதை நம்பி இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பறிபோகி வேலையின்மை உருவாகும்.
மக்களை பட்டினி போடாதே, மூடிய ரேஷன் கடைகளை திற.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் 4 பகுதிகளிலும் மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த அரிசியையும் மானிய விலைகளில் வழங்கி வந்த உணவுப் பொருட்களும் கிடைப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவையும் மீறி அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. அதையும் சரிவரச் செய்யாமல் சீரழித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியும், மாதர் அமைப்புகளும் மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 99 சதவீத மக்கள் பணம் வேண்டாம், அரிசியே வேண்டும் என்றனர். மக்கள் கருத்துக்களையெல்லாம் அலட்சியப்படுத்தி வங்கிக் கணக்கில் பணம் தான் வழங்குவேன் என்று அடம் பிடித்தார் ஆளுநர். 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி கொள்ளையர்கள் அக்கவுண்டில் பணம் போடுவதையும் நிறுத்தினார்கள். கட்சியின் இடைவிடாத நீண்ட போராட்டங்களின் விளைவாக அவ்வப்போது போடுவார்கள். பணம் போட்டார்களா? போடவில்லையா? என்று முதல்வருக்கும் தெரியாது, தலைமைச் செயலருக்கும் தெரியாது. அது ஆளுநருக்கே வெளிச்சம்.
CPIM Puducherry Sept7 (5)மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படாத ஊதியம் இடைவிடாத இயக்கங்களால் ஐந்து மாதங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகை 15 லட்சம். வழங்கப்பட்ட மொத்த ரேஷன் கார்டுகள் 3,52,382. வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள முன்னுரிமைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டைகள் 1,60,211. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட மஞ்சள் அட்டைகள். 1, 66,142. புதுச்சேரியில் இருக்கும் ரேஷன் கடைகள் 515.
கடந்த 15 ஆண்டுகளில் புதுச்சேரியில் மூடப்பட்ட பஞ்சாலைகள், தொழிற்பேட்டைகள் ஆகியவற்றில் பணிபுரிந்தோர் விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கூலிகள், முறைசாராத் தொழிலாளர்கள் என பல்லாயிரம் குடும்பங்கள் வறுமை நிலைக்கும் அதற்குக் கீழேயும் சென்று விட்டனர். இவர்களுக்கான கணக்கெடுப்பும் இல்லை. கணக்கில் இருப்பவர்களுக்கே எதுவும் இல்லை. இவர்களுக்கு கார்டு கூட இல்லை.
கடந்த தேர்தல் அறிக்கையில் “ரேஷன் கடைகளைத் திறப்போம்” என்றார் என்.ரங்கசாமி. “நடமாடும் நியாயவிலைக் கடைகளை உருவாக்குவோம்” என்றார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இரண்டு நபர்களுமே புதுச்சேரி மக்களை ஏமாற்றி விட்டனர்.
புதுச்சேரியில் நடமாடும் திசையெல்லாம் ரெஸ்ட்டோ பார்களை திறந்து புதுச்சேரியை ‘மதுச்சேரி’ யாக மாற்றிவிட்டனர். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் இல்லாததால் அநியாய விலை ஏற்றத்திற்கு சென்றுவிட்டன. வேலையின்மையால் ஏற்கனவே அவதிப்பட்ட இளைஞர்கள் மேலும் போதைக்கு அடிமையாகி சீரழிவதற்கு வழி வகுத்து விட்டனர்.
ஒன்றிய அரசு பின்பற்றப்படும் தவறான கொள்கைகளால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்றவைகளுடன் புதுச்சேரி அரசின் மக்கள் விரோத போக்குகளாலும் விலைவாசி உயர்வு விண்ணைத்தாண்டி உள்ளது.
புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியின்மையும், வேலையின்மையும்.
CPIM Puducherry Sept7 (2)புதுச்சேரியின் பாரம்பரிய தொழில்கள் பஞ்சாலை, கைத்தறித் தொழில்கள் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன. புதுச்சேரியில் இயங்கி வந்த ஏ.எப்.டி, சுதேசி, பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகளில் முழங்கிய சங்கு ஒலியை வைத்தே புதுச்சேரியில் காலநேரம் அறியப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய தொழில் கேந்திரம் பஞ்சாலைகள். பொருளாதாரத்தை தீர்மானிக்க கூடியவை. பிரஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் படையாக திகழ்ந்தவர்கள் பஞ்சாலை தொழிலாளர்கள். ஆனால் ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், தனியாரின் லாப வேட்டையின் காரணமாகவும் அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுத்த புதுச்சேரியின் பஞ்சாலைகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கின்றன.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளால் மூடப்பட்ட பஞ்சாலைகள் திறக்கப்பட்டன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், வாக்குறுதிகளும் காற்றில் பறந்தன. பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பஞ்சாலைகளைத் திறப்போம் என்றனர். பின்னர் அதற்காக எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை.
புதுச்சேரியில் புதிய தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்காக பிப்டிக் உருவானது. அதுவும் தற்போது முடங்கிப் போய் இருக்கிறது. அதன் உதவியால் உருவாக்கப்பட்ட தொழிற்பேட்டைகள் மூடிக்கிடக்கின்றன. புதுச்சேரியில் புதிய தொழில்களை உருவாவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த இலவச மின்சாரம், தண்ணீர், வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அண்டை மாநிலங்களிலிருந்தும் தொழில் முனைவோர் புதுச்சேரிக்கு வந்தனர். சலுகைக் காலங்களில் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக் காலம் முடிந்ததும் கிளம்பிவிட்டனர். ஆட்சியாளர்களும் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
கூட்டுறவுத் துறைக்கு முக்கியம் அளித்து கூட்டுறவு வங்கிகள், நூற்பாலைகள் மேலும் கைத்தறியை வலுப்படுத்த பிரைமரி சொசைட்டிகள், பாண்டக்ஸ், பான்பேப், கான்பெட் போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து திசைமாறி 100 பேர் தேவைப்படும் பணியிடங்களில் ஆட்சியாளர்கள் விதிமுறைகளை மீறி கொல்லைப் புறவழியாக 500 நபர்களுக்கு மேல் பணியில் அமர்த்தினர். நிதியை, மானியத்தை சீரழித்தனர்.
விவசாய விளை பொருட்களையும், இடுபொருட்களையும் வர்த்தகம் செய்ய உருவாக்கப்பட்ட பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி, பாண்லே ஆகிய கூட்டுறவு நிறுவனங்களின் நிலையும் இதுவேயாகும்.
புதுச்சேரியில் மதுக்கடைகளை நடத்தி தனியார்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். ஆனால் கூட்டுறவு அரசு நிறுவனங்கள் நட்டத்திலிருந்து மீள்வதற்காக மதுக்கடைகளை திறந்தனர். ஆனால் அதையும் நட்டத்தில் நடத்தி மூடுவிழா காணும் திறமைமிக்க அரசு நிர்வாக அதிகாரிகள். இந்த நிர்வாகிகளோடு கைகோர்க்கும் சுயநல ஆட்சியாளர்கள். வேலையின்மையால் அவதிப்படும் இளைஞர்களின் பட்டாளத்தோடு வேலை இழந்த கூட்டுறவு நிறுவனங்களின் ஊழியர்களும் இணைந்தனர் இது ஒரு புறம்.
மறுபுறத்தில் கிராமப்புற விவசாய விளைநிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் வர்த்தக சூதாடிகளால் சூறையாடப்பட்டன. விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நகர்ப்புறங்களை நோக்கி விரட்டப்பட்டனர். வேலையில்லாத இளைஞர்கள் பிழைப்புத் தேடி சலையோர வியாபாரிகளாகவும், ஆட்டோத் தொழிலாளர்களாகவும், முறைசாராத் தொழிலாளர்களாகவும், கட்டுமானப் பணியாளர்களாகவும் மாறி பிழைத்து வருகின்றனர்.
“ஸ்மார்ட் சிட்டி” என்ற பெயரில் அவர்களது பிழைப்பும் சீரழிக்கப்பட்டு, நிராதரவான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களோடு ஆயிரக்கணக்கில் வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரக்கூடிய தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கில் வாரம் தோறும் புதுச்சேரியில் பிழைப்பை தேடி தஞ்சம் அடைகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்போ, உத்தரவாதமோ இல்லை.
“‘பெஸ்ட்’ புதுச்சேரியை உருவாக்குவோம்” என்று நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தேர்தல் நேரத்தில் முழங்கினர். என்.ஆர்.காங்கிரஸும் பின்னணிக் குரல் எழுப்பினர். ஆனால் ‘ஓர்ஸ்ட்’ புதுச்சேரியை நாள்தோறும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் கஞ்சா மையங்களாகவும், வார இறுதி நாட்களில் இளைஞர்கள் தள்ளாடும் புதுச்சேரியாகவும் மாறிக் கொண்டிருக்கின்றது. எவ்வித வரையறையும் இல்லாத முறைகேடான ரெஸ்ட்டோபார்கள், முறைகேடான உரிமங்கள், எந்நேரமும் இயங்கும் உல்லாச விடுதிகள் புதுச்சேரியில் உருவாகியிருக்கிறது.
சட்டவிரோதக் காரியங்கள் அனைத்திற்கும் சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்று விண்ணைப் பிளக்கும் வறட்டுக் கூச்சல்களை ஆட்சியாளர்கள் அவ்வப்போது எழுப்பி வருகின்றனர்.
புதுச்சேரியில் சுற்றுலாவை வளர்க்கிறோம் என்ற பெயரில் அதிக எண்ணிக்கையில் மதுபானக் கடைகள் திறப்பு, சூதாட்ட கிளப்புகள் உருவாகின்றன. சுற்றுலாத் துறையில் செயல்பட்டு வருகின்ற நிறுவனங்கள் நிர்வாகக் கோளாறுகளின் காரணமாக தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய அவலங்களிலிருந்து புதுச்சேரியை மீட்டெடுக்க முதற்கட்ட முயற்சியாக வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி இளைஞர்களையும், மாணவர்களையும், தொழிலாளிகளையும் அறைகூவி அழைக்கிறது.
புதுச்சேரியிலும் ஊழல் மோசடியில் பாஜக ஆட்சியாளர்கள்.
ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் லட்சம் கோடிகளில் ஊழல் செய்து கார்ப்பரேட் முதலாளிகளுடன் கைகோர்த்து வருகிறார்கள். இவர்களுடைய அடியொட்டியே புதுச்சேரியிலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவில் நிலத்தை வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், ரிச்சர்ட் குமார் இருவரும் தனது குடும்பத்தினர் பெயரில் புதுச்சேரி நகரிலுள்ள காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான 35000 சதுர அடி உள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை பதிவு செய்திருக்கிறார்கள். போலியான பத்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் சாட்சிக் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். செல்போன் வழக்கத்திற்கு வருவதற்கு 12 ஆண்டுகள் முன்னால் அலைபேசி எண்ணுடன் கையெழுத்திட்டு உயில் உருவாகியிருக்கிறது.
பதிவு செய்யப்பட்ட நிலத்திற்கான பண பரிவர்த்தனை வருமான வரிச் சட்டங்களை அப்பட்டமாக மீறி பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பத்திரம் பதிவு செய்த மூன்று மணி நேரத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. பாகூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கி உரிய நிலம் வழங்கப்படாமல் ஆண்டு கணக்கில் மக்கள் காத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் நிலம், வீடு, மனை உரிய முறையில் அத்தனை சட்ட விதி முறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்து, பட்டா பெயர் மாற்றங்களுக்கு விண்ணப்பம் கொடுத்து காத்துக் கிடக்கிறார்கள்.
ஆனால் புதுவை அரசின் வருவாய் அதிகாரிகள் பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு மட்டும் “கையில காசு, வாயில தோசை” என்பது போல் உடனுக்குடன் பட்டாக்களை வழங்கி, சேவை புரிந்திருக்கிறார்கள். இந்த அவசர சேவையில் பத்தில் ஒரு பங்கையாவது ஏழை எளிய மக்களுக்கு செய்யலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி வருவாய் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது.
இந்த நில மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் முகவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக சக்திகளின் இடைவிடாத போராட்டங்களினால் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் மீதும் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கைது செய்ய புதுச்சேரி காவல்துறை தயங்குவது ஏன்? உடனடியாக நிலபேர ஊழல் நடவடிக்கையில் சிக்கி இருக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.
ஒன்றிய ஆட்சியாளர்கள் லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்ஐசி, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், கனிம வளங்களை எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கின்றனர். கணிசமான வேலை வாய்ப்புகலை வழங்கி வந்த சிறு, குறு தொழில்கள் இவர்களது கோமாளித்தனமான நடவடிக்கைகளால் சீரழிந்து கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடனை தள்ளுபடி செய்கிறது.
கிராமப்புறத் தொழிலாளர்களின் 100 நாள் வேலைத் திட்ட நிதியை பாதியாகக் குறைக்கிறது. இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் 2014 இல் வேலையின்மை 5.44% 2023இல் 7.95% யாக உயர்ந்திருக்கிறது. வேலையின்மையை போக்குவதற்கான எந்த வகையான நடவடிக்கையும் இல்லை. 2022 – 23 இல் 10,000 க்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர்.
CPIM Puducherry Sept7 (1)புதுச்சேரியில் லாபம் தரக்கூடிய அரசுத்துறையான மின்துறை தனியாருக்குத் தாரை வார்க்க பாஜக ஆட்சியாளர்கள் தயாராகிறார்கள். தொழிற்பேட்டையில் பல சிறு குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ‘ஸ்மார்ட் சிட்டி’ பெயரில் முறைசாராத் தொழிலாளர்கள் வேலை இழந்து தெருவில் நிற்கிறார்கள். அத்தியாவசிய பண்டங்களை மானிய விலையில் வழங்கி வந்த ரேஷன் கடைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் கூட்டுறவு நிறுவனங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் செயலிழந்து கிடக்கின்றன. அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் சம்பளப் பாக்கி இருக்கின்றது. புதுச்சேரியிலும் இளைஞர்கள் வேலை யின்றி தவிக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய அளவில் நடைபெறும் செப்டெம்பர் 7ஆம் தேதி மறியலுக்கு களம் காண உழைக்கும் மக்களை அழைக்கிறது. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் ரயில் மறியலும், வில்லியனூரில் ஒன்றிய அலுவலகம் முன் மறியல் போராட்டமும் நடைபெறவிருக்கிறது.
மறியலில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழைப்பாளி மக்களையும், இளைஞர்களையும், பெண்களையும் மறியலில் கரம் கோர்க்க அழைக்கிறது.
SR1
எஸ். ராமச்சந்திரன்,
செயற்குழு உறுப்பினர்,
புதுச்சேரி.

Leave a Reply