மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம்

மக்கள் ஜனநாயகப் புரட்சி எனும் மகத்தான லட்சியத்துடன், 1964 அக்டோபர் 31 அன்று, கல்கத்தாவில் தியாகராஜர் அரங்கில் துவங்கிய 7வது அகில இந்திய மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனும் மாபெரும் புரட்சிக் கட்சி உதயமானது.

உறுதியேற்றலும் உருக்கென நிற்றலும்
அஞ்ஞான வளர்ச்சியில் மனிதகுல வீழ்ச்சி
மெய்ஞானத் தோன்றல் வழியில் எழுச்சி திருஞானச் சூரியன் காரல் மார்க்சின்
விஞ்ஞான ஒளியில் தோன்றிய கட்சி
சிவப்பான கட்சியின் அமைப்புதின நாளில் சிறப்பான சமுதாய மாற்றம் தோளில் நெருப்பாற்றில் சுமந்து நீந்தும் பயணம் பொறுப்பாகத் தொடர ஆய்வுசெயும் தருணம்

ஏந்திய செங்கொடி தாழாது பறந்திட
சிந்திய செங்குருதியும் சேர்ந்து சிவந்திட
ஈந்த இன்னுயிர்த் தியாகிகளை நினைந்திட
எந்தக் கட்சியினும் இக்கட்சி உயர்ந்திட

உறுதி யேற்றலும் உருக்கென நிற்றலும்
சுருதி குறையாது மார்க்சியம் பற்றலும்
கருதி கட்சிக் கல்வி கற்றலும்
உறுதி யாக்கும் வெற்றியை ஏற்றலும்

கொட்டிக் கொடுத்தும் வேண்டாம் என்போம்
கெட்டித் தட்டிய முதலாளியம் எதிர்ப்போம்
காட்டிய மார்க்சிய வழியில் நிற்போம்
ஈட்டிய வர்க்க ஒற்றுமை காப்போம்

அறுபத்து நான்கினில் உதித்த கட்சி
ஐம்பத்து ஐந்தாம் ஆண்டில் காட்சி
பலபத்து பலநூறு பல்லாயிரம் என்றே
நன்முத்து எனமிளிரும் தியாகிகள் நன்றே

வேற்றுமையில் ஒற்றுமை வாழும் மண்ணில்
ஒற்றுமையில் வேற்றுமை விதைக்கும் தன்னில்
காற்றென முளையில் கிள்ளி எறிதலில்
பற்றெனும் உழைக்கும் வர்க்க மேன்மையில்

விரிந்து பரந்தது இந்திய தேசம்
சரிந்த மானுடப் பன்முக நேசம்
மண்ணுக் கேற்ற மார்க்சியம் பேசும்
கண்ணெனும் தத்துவ நடைமுறை வீசும்

திரட்டுக வெகுமக்கள் திசை எங்கும்
கட்டுக செங்கொடி அமைப்பே தங்கும்
காட்டுக நேயம் தோழமை பொங்கும்
ஊட்டுக வர்க்க ஒற்றுமை தங்கம்

பிறக்கும் புத்துணர்வு எங்கும் எழுச்சி
உருக்கு உழைக்கும் வர்க்கக் கட்சி
இருக்கு மக்கள் ஜனநாயகப் புரட்சி
சிறக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கட்சி

58 ஆண்டு காலமாக இந்திய அரசியல் வானில், உழைக்கும் வர்க்க மக்களின் உன்னத இயக்கமாக பீடுநடை போட்டு வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

கல்கத்தா மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (நிற்பவர்கள் இடமிருந்து) பி.ராமமூர்த்தி, எம்.பசவபுன்னையா, இ.எம்.எஸ்., ஹர்கிஷன் சிங் சுர்ஜித், (அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து) புரமோத்தாஸ் குப்தா, ஜோதிபாசு, பி.சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன் ஆகியோர்.

இந்த மாபெரும் இயக்கத்தின் முதல் அரசியல் தலைமைக்குழு, இந்திய அரசியல் தலைவர்களிலேயே அப்பழுக்கற்ற, அறிவுக் கூர்மைமிக்க மகத்தான தலைவர்கள் ஆவர். கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் தோழர்கள் என்.சங்கரய்யா, வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோர் இன்றும் நம்மோடு இருந்து வழிகாட்டுகிறார்கள்.

இந்த தலைவர்கள் காட்டிய பாதையில் செம்பதாகையை உயர்த்திப் பிடித்து, லட்சோப லட்சம் தோழர்களின் உறுதிமிக்க படையினை நடத்தி, இந்தியாவில் சோசலிச சமூகத்தை படைக்கும் மாபெரும் பயணத்தை கம்பீரத்துடன் தொடர்வோம். இன்குலாப் ஜிந்தாபாத்! சிபிஐ(எம்) ஜிந்தாபாத்!

cpim election 2019

Leave a Reply