அரசியல் தீர்மானம்: 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தீர்மானம்  (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது)

1.1    இந்திய நாட்டில் கடந்த கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு பெரும் அரசியல் மாற்றம் நடந்தேறியுள்ளது. மத்தியில் பாஜக அரசாங்கம் அமைந்ததானது, இந்திய அரசியலில் வலதுசாரிப் போக்கை நோக்கிய நகர்வு உறுதிப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. அது புதிய தாராளமய முனைப்பையும், இந்துத்வா உந்துதலையும் ஏகாதிபத்திய ஆதரவு கண்ணோட்டத்துடன் வலுவாய் ஒன்றிணைக் கின்றது. அப்பட்டமான பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளில் இதன் தாக்கத்தை காண முடிகின்றது. இது ஏற்கனவே நிலவுகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகமாக்கும், உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலை மேலும் தீவிரமாக்கும். இதனோடு இந்துத்வா சக்திகளின் தாக்குதலும் இணைந்து வருவதானது, உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக வர்க்கச் சமன்பாட்டை மாற்றிய மைப்பது என்ற நமது நோக்கத்திற்கு புதியதும், கடுமையானதுமான சவால்களை எழுப்பியுள்ளது. இந்தச் சூழல்நிலையை முறையாகப் புரிந்து கொள்ள தேசிய சூழ்நிலையின் மீது நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்ற சர்வதேச சூழ்நிலையை பகுத்தறிவது அவசியமாகும்.

சர்வதேசச் சூழல்

1.2    20 ஆவது காங்கிரசிற்குப் பிறகு, சர்வதேச சூழலை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்:

  1. 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியிலிருந்து நிச்சயமற்றதும் வலுவற்றதுமான மீட்சி.
  2. உலகளாவிய தனது மேலாதிக்க பாத்திரத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் ராணுவத் தலையீடுகள் மூலம் தொடர்வது. நிதி மற்றும் வங்கி அமைப்புகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, அமெரிக்க டாலரே சர்வதேச வர்த்தக செலாவணியாக இருக்கும் நிலை மற்றும் தனது தொழில்நுட்ப வலு ஆகியவற்றின் மூலம் உலக முதலாளித்துவ அமைப்பில் தனது ஆதிக்க நிலையை தொடர்வது.

iii. ஈராக், லிபியா, சிரியா ஆகிய மேற்காசிய நாடுகளிலும் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா தலைமையிலான தலையீடுகளின் நாசகர பின்விளைவுகளாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது மட்டுமன்றி இஸ்லாமிய தீவிரவாதமும் எழுச்சி பெற்றுள்ளது.

  1. கிழக்கு நோக்கிய – குறிப்பாக உக்ரேனை குறிவைத்த – அமெரிக்கா மற்றும் நேட்டோ அரசுகளின் விரிவாக்கம் காரணமாக ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள்.
  2. சீனாவின் வளர்ந்து வரும் அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆசியாவின் மீது அமெரிக்கா கூர்ந்த கவனம் செலுத்தவதும் அதன் பின் விளைவுகளாக தொலைநோக்கு ஒத்துழைப்பும் மற்றும் ராணுவ முஸ்தீபுகளும்.
  3. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தொலைநோக்கு ஒத்துழைப்பு அதிகரித்து வருவது; தங்களுக்கிடையிலான கூட்டுறவை வலுப்படுத்த பிரிக்ஸ் (BRICS) நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள்; தென்னமெரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதேச ரீதியிலான கூட்டுறவு, ஆகிய இவை அனைத்தும் பல் துருவ உலகம் என்ற போக்கை வலுப்படுத்தியுள்ளது.

vii. ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து பாட்டாளி வர்க்கமும் ஏனைய மக்கள் திரள் இயக்கங்களும் நடத்திவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் புதிய இடதுசாரி, மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள், இயக்கங்களின் தோற்றம்.

viii. ஏகாதிபத்திய ஆதரவோடு எழுந்துவரும் சக்திகளுக்கெதிராக வெனிசுலாவில் நடந்து வருவது போல இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களின் தொடரும் போராட்டங்கள்; அவை பொலிவியா, உருகுவே, ஈக்வெடார் ஆகிய நாடுகளின் மாற்றுப் பாதைக்கான பயணத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு.

உலகப் பொருளாதாரநிலை

1.3    பொருளாதார நெருக்கடி தொடர்ந்து கொண்டிருப்பது தனித்ததொரு நிகழ்வு அல்ல. அது அமைப்பின் நெருக்கடி, முதலாளித்துவ அமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அதன் உள்ளார்ந்த விதிகளின் விளைவேயாகும். 2007-08ல் வெடித்த நிதி நெருக்கடிக்கு காரணம் கட்டுப்பாடின்றி கடன் கொடுத்தது மற்றும் ஊக வாணிபம் ஆகும். இவற்றின் விளைவாக இரண்டாம் நிலை அடமான நெருக்கடிக்கு சென்று, பின்னர் கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாவதில் முடிந்தது. அடுத்த கட்டமாக வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மீட்பு தொகையை அரசு அளித்தது. இதன் விளைவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் நாட்டின் கடனாக மாற்றப்பட்டது. இது அடுத்தகட்ட நெருக்கடிக்கு துவக்கப் புள்ளியாக அமைந்தது. ஆளும் வர்க்கங்கள் ஒவ்வொரு நெருக்கடி கட்டத்தின் போதும் அதிலிருந்து மீண்டு வர எடுத்த நடவடிக்கையின் விளைவாக உழைக்கும் மக்களைச் சுரண்டுவது தீவிரமடைந்தது. அதன் விளைவாக அவர்களின் வாழ்வாதரங்கள் மீதும், சமூக நலன்களின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

1.4    அரசுகள் தங்களின் செலவினங்களை கடுமையாக குறைத்து “சிக்கன நடவடிக்கைகளை” திணிப்பதே இந்த நெருக்கடியின் தற்போதைய வெளிப்பாடு ஆகும். இது மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் ஆகும். மக்களின் பொருளாதார உரிமைகள் மீதான தாக்குதலோடு கூடவே அவர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால், மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைகிறது. இதன் விளைவாக தற்போதுள்ள நெருக்கடி மேலும் தீவிரடையும். இது எதிர்கால நெருக்கடிக்கான வித்தாகும்.

1.5    இந்தப் பின்னணியில், பொருளாதார மீட்சி என அறியப்படுவது போல் ஏதேனும் இருந்தால் அது உலகப் பெரும் பரப்பில் மிகவும் குறுகிய பகுதியில் (முக்கியமாக அமெரிக்காவில்) மட்டுமே கண்ணுக்குத் தெரிவதாக இருக்கின்றது. அங்கும் அது மிகவும் வலுவில்லாததாகவும், வேலைவாய்ப்பை பெருக்காததாகவும் வெறும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சியாக மட்டுமே இருக்கிறது. மறுபுறத்தில் ஐரோப்பா இன்னமும் நெருக்கடியின் மத்தியில்தான் தத்தளிக்கின்றது. ஜப்பான் நீண்டகாலமாக நிலவும் தனது மோசமான வளர்ச்சி நிலை மேலும் படுமோசமாக ஆகிவருவதையே காண்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘எழுச்சி பெற்றுவரும் சந்தைகள்’ என அழைக்கப்படும் நாடுகள், குறிப்பாக சீனா, இந்தியா ஆகியவை ஏனைய பகுதிகளின் வளர்ச்சிக் குறைவை ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலத்தில் அவையும் வளர்ச்சிக் குறைவையே கண்டுள்ளன.

1.6    பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கு முன்பு இருந்து வந்த வளர்ச்சியில் 40 சதவீதத்தையே 2009 ஆம் ஆண்டிலிருந்து உலக தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி எட்டியுள்ளது. நீண்டகால சராசரியை நோக்கினால் அதில் 60 சதவீத வளர்ச்சியையே எட்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகள் மிகவும் மெல்லவே வளர்ந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் வணிக மற்றும் மேம்பாட்டுக் கழகம் (UNCTAD) அளித்துள்ள 2014 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, உலகப் பொருளாதாரம் 2012 ஆம் ஆண்டும் 2013 ஆம் ஆண்டும் சுமார் 2.3 சதவீத அளவுகளிலேயே வளர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டும் இதைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. சீனா மட்டுமே 2014 ஆம் ஆண்டில் 7.4 சதவீத அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

1.7    பொருளாதார மீட்சி எளிதில் நொறுங்கும் தன்மை கொண்டுள்ளது. அதோடு செயல்படும் வேறு பல காரணிகளால் மேலும் மோசமாகியுள்ளது. அமெரிக்காவில் குறைக்கப்படும் வட்டி விகிதம் (Quantitative easing) (எளிதாக்கப்படும் டாலர் கடன்கள்) புதிதாய் ‘எழுந்துவரும்’ நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் அவற்றின் வெளிநாட்டு வணிகச் சமன்பாட்டில் அந்நியச் செலாவனி நிலையையும் மோசமாக பாதிக்கும். சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது பல காரணிகள் ஒன்றிணைந்ததின் விளைவு ஆகும். பொருளாதாரம் மந்தமானதன் காரணமாக எண்ணெய்க்கான தேவை குறைந்தது, அமெரிக்காவில் ஷேல் எரிவாயு கண்டுபிடிப்பால் எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, விலை வீழ்ச்சியைத் தடுக்குமுகமாக எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கு சவுதி அரேபியாவின் தயக்கம் ஆகியவை எல்லாம் சில காரணிகள். எண்ணெய் விலை வீழ்ச்சி ஏற்கனவே ரஷ்யா, இரான், வெனிசுலா ஆகிய நாடுகளைப் பாதித்துள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சி உலகளாவிய பொருளாதார மீட்சியை நிச்சயமில்லாததாக ஆக்கியுள்ளது. உக்ரேன் முதல் மேற்காசியா வரை எழுந்து கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனைகள் 2015 ஆம் ஆண்டிலும் உலக முதலாளித்துவ வளர்ச்சியின் சாத்தியங்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவில் இல்லையென்றாலும் மோசமாக்கியுள்ளது.

1.8    நவீன தாராளமய முதலாளித்துவம் இதுகாறும் இல்லாத ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது. ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் அளித்துள்ள அறிக்கையின்படி உலகச் செல்வ வளத்தில் கிட்டத்தட்ட பாதி அளவு ஒரு சதவீதத்தினர் கையில் குவிந்துள்ளது. உலக மக்கள்தொகையில் உள்ள ஒரு சதவீதம் செல்வந்தர்கள் கையில் 110 டிரில்லியன் (1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி) அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்து உள்ளது. அது மக்கள்தொகையில் பொருளாதார நிலையில் கீழ்நிலையில் உள்ள 50 சதவீதம் மக்களின் செல்வ வளத்தைப்போல் 65 மடங்கு ஆகும். பொருளாதார கூட்டுறவிற்கும் மேம்பாட்டிற்குமான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development) அளித்துள்ள அறிக்கையின்படி அமெரிக்காவில் செல்வந்தர்களின் 10 சதவீத சராசரி வருவாய் மிக ஏழ்மையான 10 சதவீதத்தினரின் வருவாய் போல 16 மடங்கு அதிகம். பெரும்பாலான ஓஇசிடி – நாடுகளில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையிலான இடைவெளி கடந்த 30 ஆண்டுகளில் இப்போதுதான் மிக அதிகமாக உச்ச நிலையில் உள்ளது.

1.9    உழைப்புச் சுரண்டலை தீவிரமாக்குவதன் மூலமும், பொதுச் சேவைக்கான செலவுகளை வெட்டுவதன் மூலமும் பொருளாதார நெருக்கடியையும் பொருளாதார மந்தத்தையும் ஆளும் வர்க்கங்கள் எதிர்கொள்கின்றன. உழைப்புச் சுரண்டலின் தீவிரம் எந்த அளவு இருந்துள்ளது என்பதை, 1999 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடையிலான காலகட்டத்தில் உலகளாவிய அளவில் உண்மை ஊதியத்தின் வளர்ச்சி, உற்பத்தி திறன் வளர்ச்சியைக் காட்டிலும் பின்தங்கி இருந்ததில் காண முடியும். உலக அளவிலான உண்மை ஊதியம் குறித்த கணக்குகளிலிருந்து உலக உண்மை ஊதிய மதிப்பின் வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பு செய்துள்ள சீனாவை விட்டுவிட்டால் 2012 ஆம் ஆண்டு உண்மை ஊதிய வளர்ச்சி வெறும் 1.3 சதவீதம், 2013 ஆம் ஆண்டு 1 சதவீதம் என்ற அளவிலேயே இருந்துள்ளது (உலக ஊதியம் குறித்த அறிக்கை 2014-15 ILO)

1.10  ஐக்கிய நாடுகள் அவையின் 2014-ம் ஆண்டு உலகப் பொருளாதாரநிலை ஆய்வுகளும் வாய்ப்புகளும் (World Economic Studies and Prospects) அறிக்கையின் படி வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலையின்மை மிகவும் அதிக அளவில் 8.4 சதவிகிதமாக இருந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இன்னும் அதிகமாக 11 சதவீதமாக இருந்துள்ளது. இந்த அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் நிலமையை மிகவும் குறைத்து மதிப்பிடுகின்றன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரப்படி இளைஞர்கள் மத்தியிலான வேலையின்மை பொதுவான வேலையின்மையைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம். 20 ஆவது கட்சிக் காங்கிரசிற்குப் பிறகான 3 ஆண்டு காலகட்டத்தில் தொடர்ந்து நீடித்த அதிக அளவிலான வேலையின்மை, நீண்ட சராசரி வேலையில்லா காலம், மோசமான ஊதியநிலை ஆகியவையே முதலாளித்துவ உலகெங்கும் நிலவியது.

மேலாதிக்கத்தைத் தக்கவைக்கும் முயற்சிகள்

1.11  பொருளாதார வலிமையில் நீண்ட கால வீழ்ச்சி, குறிப்பாக 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியின் வெளிச்சத்தில் ஏகாதிபத்திய முகாமின் தலைமை பொறுப்பிலுள்ள அமெரிக்கா புதிய சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இராக்கில் துவங்கி ஏனைய மேற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகள், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை நிலைப் படுத்துவது என்ற அதன் தொலைநோக்கு குறிக்கோள் நிறைவேற வில்லை. அமெரிக்காவும் ஏனைய நேட்டோ நாடுகளும் கிழக்கு நோக்கி தம் செல்வாக்கு வளையத்தை விரிவாக்குவதை ரஷ்யா இப்போதும் எதிர்த்து நிற்கின்றது. சீனா இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் ஒரு முக்கியமான சக்தியாகவும் உருவாகியுள்ளது. ஆசியா – பசிபிக் பகுதியில் அமெரிக்க மேலாதிக்கம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்ற பன்முக அமைப்புகளில் அதன் அதிகாரங்களை செலுத்துவது எளிதல்ல எனும் நிலையும் உருவாகி வருகின்றது.

1.12  ஆசிய நாடுகளுக்கான தொலைநோக்கு ஆதாரத் தளமாக அமெரிக்கா கருதும் மேற்காசியாவில் தனது ராணுவத் தலையீடுகளை தொடர்வதன் மூலமும், உக்ரேன் போன்ற முன்னாள் சோவியத் யூனியன் குடியரசுகள் மீது மேற்குலகின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கிறது. இதனால் ரஷ்யாவுடன் தனது மோதல் போக்கை அதிகரித்திருக்கிறது. இதன் மூலமும் அமெரிக்கா முதலாளித்துவ உலகில் தனது ஆதிக்கமான பாத்திரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றது. சீனாவின் பொருளாதார வலிமையையும் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தில் அதன் உயர்ந்து வரும் செல்வாக்கையும் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா இரண்டு முக்கியமான வர்த்தக உடன்படிக்கைகளுக்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியதாகும் இந்த உடன்படிக்கைகள். இவை ஆசிய – பசிபிக் பகுதிகளோடும் ஐரோப்பிய யூனியனோடும் செய்து கொள்ளப்பட்டவையாகும்.

1.13  கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா – நேட்டோ நாடுகள் நடத்தி வரும் ராணுவத் தலையீடுகளின் சீர்குலைவான விளைவுகளை இந்தக் காலகட்டத்தில் காண முடிந்தது. இராக்கிலும் லிபியாவிலும் இருந்த அரசாங்கங்கள் ஏதேச்சாதிகாரமானவை என்றபோதும் மதச்சார்பற்றவை. அவற்றை தனது வல்லாண்மையைக் கொண்டு தூக்கி எறிந்ததால் தேசிய இறையாண்மை கேள்விக்குறியானது. பெருமளவிலான வன்முறையையும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளையும் அது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சிரியாவில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் செய்துவந்த தலையீடு உள்நாட்டுப் போரை மூட்டி பரந்துபட்ட அழிவுகளை ஏற்படுத்தியதோடு இஸ்லாமிய தீவிரவாதத்தின் கை ஓங்கவும் வழிவகுத்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இராக்கில் செய்த ஆக்கிரமிப்பு மூலம் ஐஎஸ்ஐஎஸ் போன்ற சக்திகளையும், லிபியாவில் கடாஃபிக்கு எதிரான இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அளித்த ஆதரவின் மூலமும், சிரியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு தனது கூட்டாளிகளான சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் ஆகியவற்றுடன் சேர்ந்து அளித்த ஆதரவின் மூலமும் இஸ்லாமிய தீவிரவாதிகளை அது வளர்த்துவிட்டுள்ளது. இராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ்ஐஎஸ்-ஸின் தளங்களின் மீது அமெரிக்கா வான்வழியாக குண்டுமழை பொழிந்து தாக்கிக் கொண்டிருக்கும்போது அதன் அரபுக் கூட்டாளிகள் சிரியாவில் தரைமார்க்கமாக இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இவற்றின் மூலம் அமெரிக்கக் கொள்கை களின் முரண்பாடான நிலைகள் அம்பலமாகியுள்ளன. அதேநேரத்தில் அணு ஆயுதப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வு காண்கிற முயற்சிகள் மூலமாக ஈரானுடன் உள்ள முரண்பாடுகளைக் குறைப்பதற்கு அதிபர் ஒபாமா முனைந்துள்ளார்.

1.14  துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஆரம்பமான வெகுமக்கள் எழுச்சிகளை திசைதிருப்பி அடக்குவதும் அமெரிக்கத் தலையீடுகளின் நோக்கமாக இருந்தது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான சவுதி அரேபியா, கத்தார் ஆகியவை லிபியாவிலும் சிரியாவிலும் நடத்திய தலையீடுகள் அடிப்படைவாத சக்திகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. ஏமன் நாட்டின் உள்நாட்டு கலகத்தில் சௌதி அரேபியா தலைமையிலான இராணுவத் தலையீட்டிற்கான அமெரிக்க ஆதரவு மற்றுமொரு இதனை ஒத்த உதாரணமாகும். ஒரு பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பு மூலம் முபாரக்கின் ஆட்சியைத் தூக்கி எறிந்தாலும் எகிப்தில் பதவிக்கு வந்த முஸ்லீம் சகோதர அமைப்பின் அரசாங்கத்தை தூக்கி எறிந்தபின் எகிப்து ராணுவ எதேச்சாதிகார ஆட்சிக்கு திரும்பியுள்ளது.

1.15  ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க ராணுவம் விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தாலும், பின்னர் அமெரிக்கா தனது ராணுவ இருப்பைத் தொடர முடிவெடுத்துள்ளது. 13000 அமெரிக்க – நேட்டோ நாடுகளின் துருப்புகளை அங்குள்ள ராணுவத் தளங்களில் நிறுத்தி வைக்க புதிய ஆப்கானிஸ்தான் அரசோடு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

1.16  அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகின்றது. இஸ்ரேலின் வலதுசாரி அரசாங்கம், அரபு நாடுகளில் நிலவும் குழப்பமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு காஸாவின் மீது அடுத்தடுத்து இரண்டு கொடூரமான தாக்குதலை நடத்தி குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவரை கொன்று குவித்ததோடு பெருமளவில் அப்பாவி பொது மக்களின் வீடு வாசல்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியிருப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒரு யூத அரசாங்கத்தை அறிவிப்பதற்கான முயற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன.

1.17  இணையத்திலும் தொலைத் தொடர்பு அமைப்புகளிலும் உள்நுழைந்து நாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோரை உளவு பார்ப்பதற்காக அமெரிக்கா ஒரு உலகளாவிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் அமெரிக்கா பிரிட்டனின் துணையோடு இதனை தயக்கமின்றியும் ஆணவத்தோடும் செய்து வருகின்றது. இது நாடுகளின் தேசிய இறையாண்மையையும் தனிநபர் அடிப்படை உரிமைகளையும் நேரடியாகவே அச்சுறுத்தும் நடவடிக்கை ஆகும்.

உக்ரேன்

1.18  நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு உக்ரேன் இலக்காகியுள்ளது. உக்ரேனை தமது செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டு வருவதற்காக அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் பதவியிலிருந்து இறக்குவதற்கான இயக்கத்திற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரவளித்தன. அங்கு கிளம்பியிருக்கும் புதிய நாஜி தீவிரவாதிகளுக்கும் அவை மறைமுகமாக ஆதரவு அளித்தன. இது ரஷ்யமொழி பேசும் உக்ரேனின் கிழக்குப் பகுதிகளில் கலகங்கள் உருவாக வழிவகுத்தது. ரஷ்ய அமைப்புகளுக்கும் பிரபலமான வணிக மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தடைகளை விதித்தன. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய யூனியனில் இருந்தும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதித்து ரஷ்யாவும் எதிர்நடவடிக்கை எடுத்தது. டானட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் அரசாங்கங்களை கவிழ்க்கும் முயற்சிகள் தோற்றபின் ஓர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுடன் மோதலை இன்னும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உக்ரேன் மோதல் ஐரோப்பாவில் முக்கியமான முதலாளித்துவ சக்திகள் மற்றும் அமெரிக்கா – ஐரோப்பிய யூனியன் ஒருபுறம் ரஷ்யா மற்றொருபுறமென அவற்றுக்கிடையேயான முரண்பாட்டை பிரதிபலிக்கிறது.

ஆசியாவிற்கான ஆதாரத் தளம்

1.19  ஆசிய – பசிபிக் பகுதியை கவனத்தில் கொள்ளும் தொலைநோக்குப் பார்வை மாற்றத்தை ஒபாமாவின் நிர்வாகம் அறிவித்தது. தனது கூட்டாளிகளுடனான ராணுவ உறவுகளை வலுவாக்கியும் தனது கப்பற் படையின் கணிசமான பகுதியை பசிபிக் பகுதியில் நிறுத்தியும் அமெரிக்கா ஆசியாவிற்கான ஆதாரத் தளத்தை நிறுவும் முயற்சியை செய்து வருகின்றது. இந்தியாவுடனான தனது ராணுவ உறவை வலுப்படுத்தவும், சீனாவிற்கு எதிரான சக்தியாக ஜப்பானை மீண்டும் ராணுவமயமாக்கவும் அமெரிக்கா முயற்சி செய்து வருகின்றது.

வணிக ஒப்பந்தங்கள்

1.20  அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது, சீனாவைக் கட்டுப்படுத்துவது என்ற தனது இரட்டை நோக்கத்தின் ஒரு பகுதியாக பலதரப்பு ஒப்பந்தங்களை நம்பாமல் தனித்தனியான நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்யவும் பிரதேச ரீதியிலான ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும் முயன்று வருகின்றது.

1.21. அமெரிக்கா தனக்கும் தனது ஆசிய – பசிபிக் கூட்டாளிகளுக்கும் இடையேயான பொருளாதார ஒருங்கிணைப்பை வலுவாக்குவது, அதே நேரத்தில் சீனாவை ஒதுக்கி அதனைக் கட்டுப்படுத்துவது என்ற இரட்டை நோக்கத்தோடு மிகப்பெரிய சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்கும் முகமாக பசிபிக் பகுதி ஊடான பங்கமைப்பை (TPP- Trans Pacific Partnership) ஏற்படுத்த முனைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மருந்துப் பொருட்களின் விலையினை உயர்த்துவதற்கு தடையாக உள்ள வணிகக் கட்டுப்பாடுகளை நீக்குவதையும் அறிவுசார் சொத்து உரிமைச் சட்டங்களை மாற்றுவதையும் நிதி நிறுவனங்களின் ஆற்றலை வலுவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

1.22  அதே சமயத்தில் அட்லாண்டிக் பகுதி ஊடான வணிக மற்றும் பங்கமைப்பு – (TTIP-Trans Atlantic Trade & Partnership) ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகளும் பேரங்களும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நடைபெற்று வருகின்றது. இதனை மேலே குறிப்பிட்ட பசிபிக் பகுதி ஊடான பங்கமைப்பின் இணையமைப்பு என்றே அமெரிக்கா கருதுகின்றது. இதற்கான பேரங்கள் முடிவடையும்போது இந்த அமெரிக்க – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தமானது, இதுவரை உலகில் செய்து கொள்ளப்பட்ட வற்றிலேயே மிகப்பெரிய வணிக ஒப்பந்தமாக இருக்கும். இந்த ஒப்பந்தம் பெரும் வணிக நிறுவனங்களின் வலிமையை அதிகரிக்கும்; எனினும் அரசாங்கங்கள் தங்களது சந்தையை ஒழுங்கமைப்பதை மேலும் சிரமமானதாக்கும்.

ஜப்பான்

1.23  ஷின்ஸோ அபே அரசாங்கம் ஜப்பானின் ராணுவத்திற்கு அதன் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள பாத்திரம் குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்து, அதன் வலிமையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அமெரிக்க ஆதரவோடு, அபே ஜப்பானின் ராணுவ வலிமையை அதிகரிக்கவும் ஆயுத உற்பத்தியைப் பெருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றார். கிழக்குச் சீனக் கடலில் உள்ள சில தீவுகள் குறித்து சீனாவுடன் உள்ள பிரச்சனைகளில் தீவிரப்போக்கை ஜப்பான் எடுக்கத் துவங்கியுள்ளது. அபே பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அமெரிக்கா – ஜப்பான் – ஆஸ்திரேலியா – இந்தியா ஆகியவற்றுக் கிடையே ஒரு நான்கு முனைக் கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு நெருக்கமானதொரு பாதுகாப்புக் கூட்டணிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

1.24  இதனோடு அமெரிக்கா, தென்கொரியாவுடன் தனது தொலைநோக்குப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது; அதனோடு இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் நடத்தி வருகின்றது. இது கொரியத் தீபகற்பத்தில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. தென் கொரியாவின் அதிபராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படிருக்கும் நிலையில் வடகொரியாவுடன் பதட்டத்தை தணிப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

வளர்ந்துவரும் பல்துருவ போக்கு

1.25 பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் (BRICS) நாடுகள் அமைப்புரீதியான கூட்டுறவிற்கு திட்டவட்டமான வடிவம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் 16-வது உச்சி மாநாடு புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank -NDB) யையும் ஓர் அவசரகால சேமநிதி அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உலக வங்கியின் வழிகளைப் பின்பற்றாமல் அது இயங்கினால் ஆக்கப்பூர்வமான செயல்படும் திறனை அது பெற்று விடும். அரசியல் தளத்தில், சிரியா, இரான் போன்ற முக்கியமான விஷயங்களில் அமெரிக்க நிலைபாடுகளை பிரிக்ஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது; அதன் ராணுவத் தலையீட்டையும் எதிர்த்துள்ளது. இந்த நாடுகளில் இருக்கும் அரசுகளின் தன்மை, அதனால் அவற்றுக்கு உள்ள வரம்புகள் இவற்றையெல்லாம் தாண்டி பிரிக்ஸ் அமைப்பு திடமாகியுள்ளது. பல்துருவ நிலை நோக்கிய வளர்ச்சியில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

1.26  ஏற்கனவே உள்ள பிராந்திய அமைப்புகளான ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு (SCO), லத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகளின் சமூகம் (CELAC), நமது அமெரிக்காவின் மக்களுக்கான பொலிவாரியன் கூட்டணி (ALBA), தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (UNASUR) ஆகியவை தங்களுக்கிடையேயான கூட்டுறவை மேலும் வளர்த் தெடுத்துள்ளன. பிரிக்ஸ் அமைப்பு தவிர இந்தியா உட்பட 46 நாடுகள் ஸ்தாபக உறுப்பினர்களாக பங்குபெற்றுள்ள சீனாவின் முன்முயற்சியில் உருவான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank) போன்ற ஏனைய பிராந்திய பன்முக அமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளும் நிறுவனங்களும் பல்துருவப் போக்கை வலுவூட்டி வருகின்றன.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள்திரள் போராட்டங்கள்

1.27 உலக நிதி நெருக்கடிக்குப் பின் பல்வேறு போராட்டங்களும் எதிர்ப்பு இயக்கங்களும் உருவாகியுள்ளன. வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (Occupy Wall Street) போராட்டத்திற்குப் பிறகு சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல நாடுகளில் நடந்து வருகின்றன. கிரீஸ் நாட்டில் PAME என்றழைக்கப்படும் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையின் கீழ் உழைக்கும் வர்க்கத்தின் பெரும் போராட்டங்கள் நடந்தன. கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஐரோப்பிய யூனியனின் மீட்பு வழிமுறைகளுக்கும் எதிராக சிரிஸா (Syriza) எனும் புதிய இடதுசாரி அணி உருவாகியுள்ளது. அது 2015 ஜனவரியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராளு மன்றத்தின் 300 இடங்களில் 149 இடங்களையும் பதிவான வாக்குகளில் 36 சதவிகிதம் வாக்குகளையும் பெற்றுள்ளது. இது முக்கியமானதொரு அரசியல் நிகழ்வு ஆகும். ஸ்பெயின் நாட்டில் கோபம் கொண்டோரின் இயக்கம் (Indignados Movement- Movement of Indignants) தொடர்கின்றது. பொடேமாஸ் (PodemoS) எனும் புதிய அரசியல் சக்தி அரசியல் அரங்கில் உள்ள கட்சிகளுக்கெல்லாம் சவால்விடும் வகையில் உருப்பெற்றுள்ளது. போர்ச்சுகல் நாடும் பெருமளவிலான உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்து வருகின்றது. அதேபோல பிரிட்டன், ஃபிரான்ஸ், இத்தாலி, ஐஸ்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் மக்கள் விரோத தாக்குதல்களை எதிர்த்து பிரம்மாண்டமான உழைக்கும் வர்க்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தேறி வருகின்றன. தொழிலாளர்கள், குறிப்பாக பிளாட்டினம் மற்றும் ஏனையச் சுரங்கத் தொழிலாளர்களின் தீவிரமான போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் நடத்தி வரும் வேறோர் நாடு தென்னாப்பிரிக்கா. ஃபெர்குசனில் காவல்துறை நிகழ்த்திய கருப்பின இளைஞன் மீதான நிறவெறித் துப்பாக்கிச் சூடும், அதனைத் தொடர்ந்து மற்ற நகரங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்கும் பின்னர் பரவலான எதிர்ப்பு இயக்கங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன.

1.28  சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பரந்துபட்ட மக்கள் திரளின் கோபாவேசம் வளர்ச்சி பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலிலும் அது எதிரொலித்தது. சிக்கன நடவடிக்கைகளை அமல் படுத்தும் தேசிய அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்களின் ஒரு பகுதியாக அவை நடந்துள்ளன. அதே சமயம் தீவிர வலதுசாரி கட்சிகளும் தமது தேசியவெறிப்பிரச்சாரம், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மேடை, ஐரோப்பிய யூனியனுக்கு எதிரான வெற்றுச் சொல்லாடல்கள் ஆகியவற்றின் மூலம் வெற்றிகளைப் பெற்று மேலெழுந்து செயல்பட்டு வருகின்றனர். அத்தகைய சக்திகள் கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் வளர்ச்சி அடைந்துள்ளன.

பிற்போக்கு இயக்கங்களின் எழுச்சி

1.29  உலகின் பல பகுதிகளிலும் நஞ்சு உமிழும் வடிவங்களில் அடிப்படைவாதம், தேசியவெறி, குறுங்குழுவாதம், இனவெறி ஆகியவை வளர்ச்சி கண்டுள்ளன. மிகச் சமீப காலத்தில் மேற்காசியாவில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகள், நைஜீரியாவில் பொகோ ஹராம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இலங்கையிலும் மியான்மாரிலும் பவுத்த மதவெறி அமைப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரி நவீன நாஜிக் கட்சிகள் போன்ற அமைப்புகள் எழுச்சி பெற்றுள்ளன. இவை ஏகாதிபத்திய தலையீடுகள் மூலம் உருவாகி யவை என்பது மட்டுமின்றி சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின் உலகம் தழுவிய முற்போக்கு விழுமியங்களுக்கு ஏற்பட்ட சரிவின் விளைவாகவும் இருக்கின்றன.

பருவநிலை மாற்றம்

1.30  அமெரிக்காவின் தலைமையிலான வளர்ச்சி பெற்ற நாடுகள் திட்டமிட்டு நடத்தியபடி மிகவும் வலுவற்ற முடிவுகளோடு லிமாவில் நிறைவடைந்த பருவநிலை குறித்த கடந்த மாநாட்டிற்குப் பிறகு அடுத்த பாரிஸ் உச்சி மாநாடு டிசம்பர் 2015 இல் நடைபெற தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கியோட்டோ உடன்படிக்கைக்குப் பதிலாக ஒரு புதிய உடன்படிக்கை முடிவு செய்யப்பட்டு கையெழுத்திடப்பட வேண்டும். அமெரிக்காவும் மற்ற வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளும் பெருமளவுக்கு பொதுக் காற்றுவெளியை (atmospheric commons) தமதாக்கிக் கொண்டு வளர்முக நாடுகள் வளர்ச்சி காணவும் தமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் குறைவான சாத்தியங்களை மட்டுமே விட்டுவைக்கும் என்பது இப்போதே வெளிப்படையாக தெரிகின்றது. வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்குமிடையேயான சமத்துவம் என்பது அகங்காரத்தோடு தூக்கி வீசப்பட்டு பொதுவான ஆனால் வெவ்வேறு அளவிலான பொறுப்பு(Common but Differentiated Responsibility- CBDR) என்ற அடிப்படையானது பெருமளவிற்கு நீர்த்து போகச் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா முன்மொழியும் சுய உறுதியின் அடிப்படையிலான பசுங்கூட வாயு உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்பு என்பதே 2020ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் பாரிஸ் உடன்படிக் கையின் அடிப்படையாக இருக்கும் எனத் தெரிகின்றது. இப்போது அமெரிக்காவும் இதர வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளும் உறுதியளிக்கும் மிகக் குறைவான உமிழ்வுக் கட்டுப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் விரைவில் புவிக்கோளத்தின் வெப்பநிலை நிச்சயிக்கப்பட்ட வரம்பான 2 டிகிரி செண்டிகிரேட் என்பதைத் தாண்டி 3-4 டிகிரி செண்டிகிரேட் வரை சென்றுவிடும். இது உலகிற்கு, குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளுக்கும் உலகெங்கும் உள்ள ஏழை மக்களுக்கும் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

லத்தீன் அமெரிக்கா : இடதுசாரிகளின் முன்னேற்றம்

1.31 ஹியூகோ சாவேஸ் அவர்களின் மரணத்தால் ஏற்பட்ட பின்னடைவையும் தாண்டி வெனிசுவேலாவும் ஏனைய லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களும் நவீன தாராளமயம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்குச் சவால் விடுத்து தமது மாற்றுப் பாதையில் முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன. பொருளதாரத் தடைகளை விதித்து வருகிற அமெரிக்க ஆதரவுப் பின்புலத்தோடு இயங்கும் நச்சு உமிழும் வலதுசாரி எதிர்க் கட்சிகளாலும் பெரும் சவால்களை பொருளாதார அரங்கில் வெனிசுவேலா எதிர்கொண்டு வருகின்றது. ஆனால் வெனிசுவேலா அதனையும் தாங்கிக் கொண்ட நிலைiல் மானிய விலை உணவுப் பொருள் அங்காடிகள், இலவச உணவுக் கூடங்கள், மக்கள் குழுக்களின் மத்தியில் இலவச மருத்துவ மையங்கள், இலவசக் கல்வி, மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்யும் முயற்சிகளுக்கான தனது கொள்கைகயைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது.

1.32  பொலிவியாவில் மொரேல்ஸ் அரசாங்கம் எண்ணெய், எரிவாயு துறைகளை தேசிய மயமாக்கியது. இது அரசின் வருமானத்தை 82 சதவீதம் உயர்த்தியது. தொலைத் தொடர்பு, மின்சாரம் ஆகியவையும் மீண்டும் பொதுத் துறைகளாகியுள்ளன. 2012 ஆம் ஆண்டு அளவிலிருந்து வறுமை 32.2 சதவிகிதம் குறைந்து, லத்தீன் அமெரிக்காவிலேயே அதிக அளவிலான வறுமைக் குறைப்பை சாதித்த நாடு எனும் பெருமையை பொலிவியா பெற்றுள்ளது. ஈக்வெடார் கல்விக்குச் செலவழிக்கும் தொகை அதனுடைய உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) யில் 2.6 சதவீதம் என்பதிலிருந்து 5.2 சதவிகிதம் என உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கு குறைந்தபட்ச ஊதியமானது உண்மை அளவில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான காலத்தில் வறுமை மிகவும் வியப்பூட்டும் வண்ணம் நான்கில் ஒரு பகுதியாக குறைந்துள்ளது.

1.33  கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இடதுசாரி அரசுகள் அதிகமான மக்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளன. பொலிவியாவில் அதிபர் ஈவோ மொரேல்ஸ் 61.6 சதவீத வாக்குகளோடு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈக்வெடார், உருகுவே, நிகரகுவா ஆகிய நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. தென் அமெரிக்காவிலேயே பெரும் நாடாகிய பிரேசிலில் தில்மா ரூசஃப் வலதுசாரி சக்திகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1.34  பொதுவாக இடதுசாரிகளின் முன்னேற்றம் லத்தீன் அமெரிக்காவில் தக்க வைக்கப்பட்டுள்ளது எனலாம். கியூபாவுடனான உறவை சகஜநிலைக்கு கொண்டு வர அமெரிக்கா அறிவித்திருப்பதை இந்தப் பின்னணியில்தான் நாம் பார்க்க வேண்டும். தென் அமெரிக்காவில் அனைத்து நாடுகளின் ஒன்றுபட்ட குரல் கியூபா தனிமைப்படுத்தக் கூடாது என்றே ஒலிக்கின்றது. அமெரிக்காவால் அதனை புறக்கணிக்க இயலவில்லை.

சோசலிச நாடுகள்

1.35  சென்ற காங்கிரசின் போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்த சீனா, தொடர்ந்து முன்னேறுகிறது. 2012 ஆம் ஆண்டிலிருந்து அது கடைப்பிடித்து வரும் பாதை வெறும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அளவு மட்டும் என்பதாக இல்லாமல் நீடித்த வளர்ச்சி மற்றும் தரத்துடன் கூடிய மேம்பாடு என்பதாக இருக்கின்றது. அங்கு நடைபெற்று வரும் இந்த சமூக பொருளாதார மறு கட்டமைப்பு என்பதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் 2014 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சியான 7.4 சதவீதம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். வியட்நாம் கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகின்றது; அதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதே இதன் அடிப்படையாக இருக்கின்றது. வறுமை ஒழிப்பில் அதன் சாதனையும் கணிசமானது. ஏற்றத் தாழ்வுகள் இன்னும் அதிகரித்தே வருகின்ற போதிலும் 2005 ஆம் ஆண்டில் அதன் வறுமை நிலை அளவான 22 சதவீதம் என்பது 2013 ஆம் ஆண்டில் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. வடகொரியா தன்மீது விதிக்கப்பட்ட தடைகளையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து வருகின்றது. அமெரிக்காவும் தென்கொரிய அரசாங்கமும் எடுக்கும் கோபமூட்டும் நடவடிக்கைகளையும் அது எதிர்கொண்டு வருகின்றது. கியூபா 2011 ஆம் ஆண்டிலிருந்து தனது பொருளாதார அமைப்பை நவீனப்படுத்தியதோடு சீர்திருத்தங்களையும் அமலாக்கி வருகின்றது. கியூபன் ஐவர் (Cuban Five) என அழைக்கப்படுவோர் விடுதலை பெறச் செய்ததும் கியூபாவுடனான அரசுமுறை உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என அமெரிக்கா அறிவித்ததும் கியூபாவின் பெரும் வெற்றி என்றே கூறவேண்டும். பொருளாதார தடைகளை திரும்ப பெறாவிட்டாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்த கியூபாவைத் தனிமைப்படுத்துவது என்ற கொள்கையின் தோல்வியை அமெரிக்க அதிபர் ஒபாமாவே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

தெற்காசியா

1.36  தெற்காசியாவில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் பின்பற்றிவரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உழைக்கும் மக்களின் வாழ்க்கைதரம் மேலும் மோசமாகி வருவதே இந்தப் பகுதியின் முக்கிய அம்சமாக இருக்கின்றது. பாகிஸ்தானில் 2012 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நவாஸ் ஷெரிஃபின் அரசாங்கம் அமைக்கப்பட்டது. பெஷாவரில் நடந்த பள்ளிக் குழந்தைகளின் படுகொலைச் சம்பவம் எடுத்துக்காட்டுவது போல இந்தக் காலகட்டம் முழுவதுமே அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நேபாளத்தில் 2013 ஆம் ஆண்டு இரண்டாவது அரசியலமைப்பு அவை கூட்டப்பட்ட பின்னும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி முடிப்பதற்கான முயற்சிகள் பலனைத் தராமல் இழுபறியாகவே தொடர்கின்றது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு வைத்திருந்த காலக்கெடுவான ஜனவரி 2015 முடிந்தும் பணி முடியவில்லை. வங்கதேசத்தில் போர்க் குற்ற டிரிபியூனல் சில உயர்மட்டத் தலைவர்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்புரைத்து தண்டனை வழங்கியவுடன் ஜமாய்த் இஸ்லாமியும் ஏனைய அடிப்படைவாத அமைப்புகளும் வன்முறைக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஷாபாக் இயக்கத்தில் கண்டதுபோல முற்போக்கு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் வலதுசாரி அடிப்படைவாத அமைப்புகளின் அச்சுறுத்த லுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி வருகின்றனர். இலங்கை யில் ஜனவரி 2015 அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷே ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, நிர்வாக அதிகாரம் கொண்ட அதிபர் அமைப்பை (Executive Presidency) முடிவுக்கு கொண்டுவரும் உறுதிமொழியோடு பதவி ஏற்றுள்ளார். உள்நாட்டுப் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை புதிய அரசு பதவியேற்றதால் துளிர்விட்டுள்ளது.

1.37  இந்திய பாகிஸ்தான் முரண்நிலை காரணமாக பொருளாதார கூட்டுறவு, வணிகம் ஆகியவற்றில் உள்ள சாத்தியப்பாடுகளை சார்க் அமைப்பு நடைமுறை எதார்த்தமாக மாற்ற இயலவில்லை. 2014 நவம்பரில் காத்மண்டு நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இது வெளிப்படையாகவே தெரிந்தது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருங்கிணைவு

1.38  தெற்காசியாவில் தனது செல்வாக்கையும் தனது தொலைநோக்கு பிணைப்புகளையும் வலுவாக்கும் முகமாக அமெரிக்கா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்து நிற்கும். தெற்காசியாவிலுள்ள இடதுசாரி, முற் போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளோடு கட்சி ஒத்துழைப்பதோடு உறவுகளையும் வலுப்படுத்தும்.

1.39  இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்தும் தமக்கு ஒரு சுதந்திரமான அரசுக்காகவும் பாலஸ்தீன மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு கட்சி தன் முழு ஆதரவை வழங்கும். இஸ்ரேலுடன் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை கட்சி எதிர்க்கிறது.

1.40  சோசலிச நாடுகளான சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் ஆகியவற்றோடு கட்சி தன் ஒருங்கிணைவை தெரிவித்துக் கொள்கின்றது. கியூப அரசும் அந்நாட்டு மக்களும் அமெரிக்கா தலைமையிலான தடைகளை முடிவுக்குக் கொண்டு வர நடத்தும் போராட்டத்திற்கு கட்சி தன் முழு ஆதரவை தெரிவிக்கிறது.

1.41  லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி, புரட்சிகர இயக்கங்களோடும் குறிப்பாக ஏகாதிபத்தியத்தின் ஆதரவுப் பின்னணியோடு இயங்கும் வலதுசாரி சக்திகளை எதிர்த்துப் போராடும் வெனிசுவேலாவோடும் கட்சி ஒருங்கிணைவை கட்டமைக்க முனைப்புடன் செயலாற்றும்.

1.42  ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் மூலம் திணிக்கப்படும் நவீன தாராளமயப் படிநிலைகளை எதிர்த்து நடக்கும் பல்வேறு விதமான போராட்டங்கள், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பருவநிலை குறித்த நீதிக்காகவும் நடக்கும் இயக்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வலிமை மிக்கதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக மாற்ற கட்சி முயற்சிகளை மேற்கொள்ளும்.

தேசிய நிலைமை

2.1    2014 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தல், அரசியல் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. 31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக முதன் முதலாக மக்களைவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. இது, புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றுவது, ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவா சக்திகள் தங்கள் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முழுஅளவில் முயற்சிப்பது ஆகியவை அடங்கிய ஒரு வலதுசாரித் தாக்குதலைத் தொடங்கக் களம் அமைத்துக் கொடுத்தது. இத்தகைய ஒருங்கிணைவு எதேச்சதிகாரம் வளரப்போவதன் முன்னறிவிப்பு ஆகும்.

2.2 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 20 ஆவது கட்சிக் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ) அரசாங்கம் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது எனக் குறிப்பிட்டிருந்தது. அம்பலப்படுத்தப்பட்ட பெரும் ஊழல்கள், சற்றும் நிற்காத விலைவாசி உயர்வு, வளர்ந்துவரும் வேலை யின்மை ஆகியவை பெரும் மக்கள் பகுதியை – குறிப்பாக மத்தியதர வர்க்கங் களையும் இளைஞர்களையும் அந்நியப்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் ஸும் அதன் அரசியல் அணியான பா.ஜ.க வும் தங்கள் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லத்தக்க வாய்ப்பிற் காகக் காத்திருக்கின்றன என்பதால் வகுப்புவாத அரசியல் ஒரு அச்சுறுத்தலாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் அரசியல் தீர்மானம் குறிப்பிட்டிருந்தது. எனவே அரசியல் தீர்மானம் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போராட அறைகூவி யிருந்தது. ஐ.மு.கூ அரசாங்கம் அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணியை வலுப்படுத்த அனைத்து மட்டங்களிலும் நடவடிக்கை களை எடுத்து வருவதையும் தீர்மானம் குறிப்பிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தில் கடும் தாக்குதலைச் சந்தித்த தோடு பொதுவாய் இடதுசாரிகளை அந்நியப் படுத்தும் முயற்சிகளும் நடந்தன. 20 ஆவது கட்சிக் காங்கிரஸ் இடதுசாரி ஜனநாயக மேடை யின் அடிப்படையில் கட்சியின் சுயேச்சை யான செயல்பாட்டை விரிவாக்கம் செய்யவும், ஒற்றுமையை வலுவாக்கவும் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் ஏனைய பகுதியினரை திரட்டவும் அறைகூவியது.

2.3    கடந்த கட்சிக் காங்கிரசிற்குப் பிறகான காலத்தின் முக்கியமான வளர்ச்சிப் போக்குகளும் அம்சங்களும் என பின்வருவனவற்றைக் கூறலாம்

பொதுவான அம்சங்கள்

  1. i) ஐ.மு.கூ-2 அரசாங்கம், உயர்மட்ட மகா ஊழல்கள், வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பெருகும் வேலையின்மை ஆகிய வெட்கக் கேடான சாதனைகளோடு தனது ஆட்சிக் காலத்தை முடித்தது. இந்தக் காலகட்டத்தில், மன்மோகன் சிங் அரசாங்கம் அன்னிய நேரடி முதலீட்டிற்கு சில்லறை வணிகம் முதலிய பல புதிய பகுதிகளைத் திறந்து விடுவது, தனியார் மயத்தை அதிகரிப்பது என நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு புதிய உந்துதலை அளித்தது.
  2. ii) முந்தைய இரண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்திருந்த பா.ஜ.க இந்த நிலமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. பெருமுதலாளித்துவத்தினாலும் ஆர்.எஸ்.எஸ் ஸின் முழு வலிமையாலும் ஆதரிக்கப்பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களின் உதவி யோடு நரேந்திர மோடி நல்ல அரசாளுமையைத் தரக்கூடியவர், தேவைகளை நிறைவேற்றக் கூடியவர் என மிகவும் ஆழமாய் மனதில் பதியும் வண்ணம் தூக்கி நிறுத்தப்பட்டார்.

iii)  அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஸும் அதன் பரிவாரங்களும் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே வகுப்புவாத பதட்ட நிலையை உருவாக்கவும் அதன் மூலம் வகுப்புரீதியான பிளவை உருவாக்கி ஆதரவு திரட்டும் வேலையையும் செய்தன. நாடு மிகவும் குறிப்பிடத் தக்க அளவில் வகுப்புவாத மோதல்கள் அதிகமானதைக் கண்ணுற்றது. உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்த வகுப்புவாத மோதல் மிகவும் பளிச்செனத் தெரிந்த நிகழ்வு ஆகும்.

  1. பா.ஜ.க வின் தேர்தல் வெற்றியும் மோடி அரசாங்கம் தோன்றியதும் ஒரு வலதுசாரித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கார்ப்பரேட் சக்தி மற்றும் இந்துத்துவா எனும் இரட்டை விசைகள் வலதுசாரி நகர்வுக்கு தீனி போட்டுள்ளன.
  2. பாஜக அரசாங்கத்தின் 11 மாத ஆட்சிக் காலம் பொருளாதாரத்தின் எல்லா துறைகளிலும் நவீன தாராளமயத்தை முனைப்போடு அமலாக்குவது, குறிப்பாக அன்னிய முதலீட்டை அதிகரிப்பது; தனியார்மயமாக்கலின் அதிகரிப்பு; தொழிலாளர் சட்டங்கள் நிலம் கைக்கொள்ளல் சட்டங்களை நீர்க்கச்செய்தல் ஆகியவற்றிற்கான கடும் அழுத்தத்தோடு பின்பற்றியதை பறைசாற்றுவதாக இருந்தது. இந்தியக் குடியரசின் மதர்ச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையையே அச்சுறுத்தும் வண்ணம் இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் பேரளவு திணிக்கப்படுகிறது.
  3. ஐ.மு.கூ-2 அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் திசைவழி அமெரிக்காவுடனான கேந்திரப் பிணைப்புகளை வலுவாக்குவதாக, அந்தக் காரணத்தால் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கைக்கு கேடுவிளைவிப்பதாகவும் இருந்தது. மோடி அரசாங்கம் இந்த அணுகுமுறையை இன்னும் தீவிரப்படுத்துவதாக உள்ளது.

vii)    ஐ.மு.கூ அரசாங்கம் தொடர்ச்சியான ஊழல்களில் சிக்கித் தவித்ததானது உயர்மட்ட ஊழலை மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அத்தகைய மெகா ஊழல்கள், நவீன தாராளமய அதிகாரக் கட்டமைப்பின் வெளிப்பாடாகும். மேலும் பெரும் நிறுவனங்கள் – ஆளும் அரசியல்வாதிகள் – அதிகார வர்க்கத்தினர் ஆகியோர் இடையே செழித்து வளரும் கூட்டணியின் விளைவாகும்.

viii)   சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பது வேகப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள் ஆகியோர் மீதான சுரண்டல் மேலும் தீவிரமடைந் துள்ளது. ஏற்கனவே ஒடுக்கப்பட்டவர்களாகவும் வாய்ப்புகள் மறுக்கப் பட்டவர்களாகவும் உள்ள பழங்குடியினர், தலித்துகள், சிறுபான்மை யினர், பெண்கள் ஆகியோரே மிகவும், துயருபவர்களாக உள்ளனர்.

  1. அஸ்ஸாமில் போடோலேண்ட் (BTAD) பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் மீதான போடோ தீவிரவாத அமைப்புகளின் பெருமளவிலான தாக்குதல்கள், மறுபுறத்தில் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் என பிரிவினை வாதிகளின் சீர்குலைவு நடவடிக்கைகள் முளைத்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு மாநில மக்களின் மீது தாக்குதல்களும் நடந்துள்ளன.
  2. பெண்களின் மீதான தாக்குதல்களின் கொடுந்தன்மையும் சம்பவங் களின் எண்ணிக்கையும் கவலை தருமளவில் அதிகரித்துள்ளன. மாதர்கள், இளம் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதல்கள் தறிகெட்டு உயர்ந்து வருகின்றன. ஆணாதிக்க மற்றும் சந்தைசார் விழுமியங்கள் பெண்களின் மீதான வன்கொடுமைகள் பல்கிப் பெருகுவதை உருவாக்கியுள்ளது.
  3. இந்தக் காலகட்டம் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டுப் போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதையும் அது 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வரலாற்று நிகழ்வான இருநாள் பொது வேலைநிறுத்தத்தில் உச்சம் பெற்றதையும் கண்டது. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் போக்கிற்கெதிரான ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்கின்றது.

xii)    இந்தக் காலகட்டம் மேற்கு வங்காளத்தில் மாநில அரசும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகள் மீதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் நடத்தும் தாக்குதல் தொடர்வதைக் கண்ணுற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மக்களவைத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் முன்னுரிமை அளித்து வலுப்படுத்த வேண்டியதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

பொருளாதாரச் சூழல்

2.4    நவீன தாராளமய வளர்ச்சிப் பாதை கடுமையான நெருக்கடி கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதை இரண்டாண்டு நிகழ்ச்சிகள் நிறுவியுள்ளன. உலக முதலாளித்துவத்தின் நீடித்த நெருக்கடியி லிருந்து இந்தியா போன்ற நாடுகள் தப்பிவிடும் என்று ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயுள்ளன

2.5    உலகப் பொருளாதார நெருக்கடியை ஒட்டிய காலம் தவிர கடந்த பத்து ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட உயர் அளவிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து வருவது இந்த நெருக்கடியின் மிக முக்கியமான அறிகுறியாகும். 2011-12ன் இரண்டாம் அரை ஆண்டிலேயே இந்த வளர்ச்சி வேகம் குறைதலின் அறிகுறிகள் உருவாக ஆரம்பித்தன. 2012-13 ஆம் ஆண்டிலும் 2013-14 ஆம் ஆண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. 2014-15 ஆம் ஆண்டின் முதல் இரு காலாண்டுக் கணக்குகள் இது மிக மிகச் சிறிய உயர்வையே காணப்போகிறது என்பதைக் காட்டுகின்றன. வளர்ச்சி குறைவு பரவலாக பல சேவைத் துறைகள் மற்றும் கட்டுமானத் துறை என எல்லா துறைகளையும் தழுவியதாக இருந்தாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட துறை தொழிற்துறைதான். பொருளுற்பத்தி வளர்ச்சி ஜூலை 2011 இல் இருந்து சுமார் 40 மாத காலத்திற்கு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலேயே இருந்துள்ளது.

2.6    ஐ.மு.கூ அரசு இந்தச் சூழலை எதிர்கொள்ள மேலும் அன்னிய முதலீட்டாளர்களின் நலன் பேணுவது, பெரும் தொழிலகங்களை ஊக்குவிப்பது என்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அன்னியப் பெருநிறுவனங்களுக்கும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் மேலும் வரிச் சலுகைகள் அளிப்பதும் வரிச் சட்டங்கள் தளர்த்தப்படுவதும் நடந்தது. அரசாங்கம், பன்பெயர் (mutibrand) சில்லறை வணிகத்தில் 51 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கத் தீர்மானித்தது. அன்னிய வங்கிகளுக்கு உள்நாட்டு வங்கிகளிலிருந்த 10 சதவீத வாக்குரிமை எனும் உச்ச வரம்பைத் தளர்த்தி, அவர்கள் 26 சதவீதம் வரை வாக்குரிமை பெற அனுமதி அளித்து வங்கிச் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டன. அது தொழில் நிறுவனங்கள் தனியார் வங்கிகளை நடத்தவும் வழிகோலியது. ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப் பட்டு ஓய்வூதிய நிதியில் தனியார் மயமாக்கலுக்கு வழிசெய்யப்பட்டு அதில் 26 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தேசிய மருந்து விலைக் கொள்கை அறிவிக்கப்பட்டு மருந்துத்துறை பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட்ட பெரு நிறுவனங்களுக்கு பெருமளவு லாபங்களைப் பெற உதவும் வகையில் மருந்து விலைக் கட்டுப்பாடு அதிகார அமைப்பு நடைமுறைக்குக் கொணரப்பட்டது.

2.7    சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி, உரம் மற்றும் உணவுப் பொருட்களுக்கான மானியம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் அரசு முதலீடுகளும் வெட்டிக் குறைக்கப்படுவதே ஐ.மு.கூ அரசாங்கத்தின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இருந்தது. ஐ.மு.கூ-2 ஆட்சி நடந்த 5 ஆண்டுகளில் இந்த வகைகளிலான செலவுகளின் உண்மை மதிப்பு அதற்கு முந்தைய ஐ.மு.கூ-1 அரசாங்கத்தின் கடைசி ஆண்டு காலத்தைவிட குறைவானது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான (MGNREGA) ஒதுக்கீடு, மக்கள் நல்வாழ்விற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஏனைய மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான செலவுகளை வெட்டிச் சுருக்குவது ஆகிய பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், தனியார் மயமாக்கல் முயற்சி களும் வரும் காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டு வரையறைகளைச் சுருக்குதல், உணவுப் பொருட்களுக்கு பதிலாக நேரடி பணப்பயன் திட்டம், உணவுப் பொருள் கொள்முதல் நடைமுறைகளைத் தகர்த்தல் ஆகியவற்றுக்கான ஆலோசனைகள் உணவுப் பாதுகாப்பை மிகக் கடுமையாகப் பாதிப்பவையாகும்.

2.8    பா.ஜ.க அரசாங்கம் ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அறிவித்தது; பாதுகாப்புத் தளவாட உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டிற்கு இருந்த வரம்புகளை உயர்த்தியது; காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டிற்கான வரம்பை 49 சதவீதமாக உயர்த்தியது; ரியல் எஸ்டேட் வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு இருந்த விதிமுறைகளைத் தளர்த்தியது. இவ்வாறு பாஜக அரசாங்கம் நவீன-தாராளமயக் கொள்கைகளை மிகவும் உக்கிரமாக தொடர்கின்றது. திட்டக் குழு, பிரதமர் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிதி ஆயோக் எனும் அமைப்பின் மூலம் மாற்றீடு செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மேலும் மையப்படுத்தப்படும்.

2.9    மத்திய பட்ஜெட் 2015-16, ரூ. 69500 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனைக்கு வழிவகுத்துள்ளது. நிலக்கரி தேசியமயச் சட்டத்தைத் திருத்தியதன் மூலம் தனியார் சுரங்கம் வெட்டுவதை அனுமதித்து, தேசிய மயத்தையே பாதித்துள்ளது. மின்னணு ஏலம் மற்றும் சுரங்கங்களின் எதிர் ஏலங்கள் ஆகியவை இம்முறையில் அடங்கும். அரசாங்கம் டீசல் விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. வனப்பகுதிகளில் ஏராளமான சுரங்கம் மற்றும் மின்சாரத் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதிகளை வழங்கியது. இது வனங்களில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகளையும், சுற்றுப்புறச் சூழலையும் மோசமாகப் பாதிக்கும். பாஜக அரசாங்கம் பதவிக்கு வந்த பின் பொருளாதாரம் குறைவான வேகத்தில்தான் வளர்ந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவீதத்தைத் தாண்டாது எனத் தெரிகின்றது. 2014-15 ஆம் ஆண்டின் வேளாண் உற்பத்தி 1.1 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

2.10  பணவீக்கப் போக்கு உணவுப்பொருட்கள் மீதுதான் மிகவும் அதிகமாக உள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தும் உணவுப் பொருட்களின் கடும் வேக விலையேற்றப் போக்கால், இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகமானது. பொருளாதார வளர்ச்சி மிக மங்கியதாக இருக்கும் அதே வேளையில் சாமானிய மக்கள் பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்கின்றது. அரசாங்கம் மொத்த விற்பனை விலைவாசிப் புள்ளிகள் இறங்கி வருவதாகச் சுட்டிக் காட்டினாலும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு 2014-15 ஆம் ஆண்டில் 8.63 சதவீதம் எனும் உயர் அளவில்தான் உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழலிலும் இது எரிசக்தி விலைகளில் வீழ்ச்சியைக் கொண்டு வந்து பொதுவாக விலைவாசி உயர்வு சதவீதத்திலும் வீழ்ச்சியைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. ஜூன் 2014 இல் இருந்து சர்வதேச எண்ணெய் விலையில் செங்குத்தாக 55 சதவீத விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் இந்தக் கால கட்டத்தில் நான்கு முறை எண்ணெய் இறக்குமதி மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. அதன் மூலம் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீதான விலைக் குறைப்பின் பலனை பொது மக்களுக்கு அளிக்க மறுத்துள்ளது.

2.11  கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையின்மை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பு வளர்ச்சி ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இது நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வேலையற்றோரின் கூட்டத்தைப் பெருக்கியுள்ளது. மொத்தத்தில் 15-29 வயதினர் மத்தியில் வேலையின்மை 13.3 சதவீதமாக (33 கோடிப்பேர்) இருக்கின்றது. பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தம் பொறியாளர்கள் மற்றும் ஏனைய தொழிற்கல்வி பயின்றோர் மத்தியிலும் வேலையின்மையை உருவாக்கியுள்ளது. பெண் தொழிலாளர் எண்ணிக்கை கடும் சரிவைக் கண்டுள்ளது. கிடைக்கும் சில வேலைகளும் மிகக் குறைவான ஊதியம் தருபவையாகவும் பணிப் பாதுகாப்பு சற்றும் இல்லாதவைாகவும் உள்ளன. இதுதான் நவீன தாராளமய அதிகார அமைவின் வழக்கமான போக்காகும்.

2.12  பொது செலவுகளையும் முதலீடுகளையும் அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியைத் தூண்டும் கொள்கைகளுக்குப் பதிலாக தனியார் மூலதனத்தை கவரக்கூடிய, லாபத்தை ஊக்குவிக்கக் கூடிய நடவடிக் கைகள் விரைவாக்கப்படுகின்றன. இதன் முக்கியமான அம்சங்கள் என பின்வருவனவற்றைக் கூறலாம்:

  1. உழைப்பவருக்கும் மூலதனத்திற்கும் இடையேயான உறவில் மூலதன உடமையாளரின் வலிமையையும் அவர்களது சுதந்திரத் தையும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் “நெகிழச் செய்வதன்” மூலம் அதிகரிப்பது.
  2. நிலம் கையகப்படுத்தும் சட்டங்களில் அவசரச் சட்டம் மூலம் மாற்றங்களைக் கொண்டுவந்து நில வணிகம் (real estate), உள்கட்டமைப்புகள்,, சுரங்கங்கள், தொழிற்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றுக்காக நிலம் கையகப் படுத்துவதை பெரும் நிறுவனங் களுக்கு எளிதாக்குவது.
  3. ஐ.மு.கூ அரசாங்கத்தின் போது காளான்போல ஊழல் வளர்வதற்குக் காரணமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதன் வாயிலாக தேசிய வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கையளிக்கும் நடைமுறையை இன்னும் அதிகமாக்குவது.
  4. அதிகத் தொழில் திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கும் வண்ணம் சுற்றுச்சூழல் நியமங்களை குறைப்பது.
  5. மக்கள் தேவைகளுக்கான அரசுச் செலவுகளுக்கு பணமில்லாது போகுமளவிற்கு வரிச் சலுகைகளையும் வரித் தள்ளுபடிகளையும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அளிப்பது
  6. சமூக நலப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறிப்பிடத்தக்க அளவுகளில் வெட்டிச் சுருக்குவது.

2.13  நெருக்கடி குறித்த இந்திய அரசின் எதிர்வினை அதன் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அடிப்படையிலான குறுகிய வர்க்கக் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது. நெருக்கடியைத் தீர்ப்பதற்கென்று அது எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் மீது மேலும் பெரும் சுமைகளை ஏற்றுவதாகவே உள்ளன. அது ஆளும் வர்க்கங்களுக்கும் உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர் – விவசாயிகள் ஆகியோருக்குமிடையேயான முரண்பாட்டை இன்னும் உறுதிப்படுத்தும் போக்காகும். மக்களின் மீதான இந்தக் கொடும் தாக்குதல் இன்றைய நிலையில் எதேச்சாதிகாரத்தை ஆளும் வர்க்கங்களின் அத்தியாவசியத் தேவையாக ஆக்கியுள்ளது.

விவசாய அரங்கின் நிலை

2.14  மூன்று ஆண்டுகளில் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என பரந்துபட்ட மக்கள் திரளைச் சார்ந்தவர்களுக்கு இந்திய நாட்டின் விவசாயச் சூழல் மேலும் மோசமாகியுள்ளது. நீண்டகால அளவிலான விவசாயத் துறை வளர்ச்சியின்மை தொடர்ந்துள்ளது; தனிநபர் உணவுதானிய இருப்பு அளவு தேங்கிப்போயுள்ளது. விவசாய உள்நாட்டு மொத்த உற்பத்திப் புள்ளியில் பொதுத் துறை முதலீட்டு சதவீதம் குறைந்துள்ளது. மகாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, மேற்கு வங்காளம் என பல மாநிலங் களில் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. தேசியக் குற்ற ஆவணங்களின் அமைப்பு (NCRB) 2013 ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் 11,772 பேர் தற்கொலை புரிந்துள்ளனர் எனக் கூறுகின்றது. குறிப்பாக, சிறு, குறு விவசாயிகளுக்கு நெருக்கடிக்கான மிக முக்கியமான காரணம் விவசாயம் கட்டுப்படியாகாததும், நட்டங்கள் அதிகரித்து வருவதுமேயாகும். விவசாய இடுபொருட்களின் கிடுகிடுவென்ற விலையேற்றமும் அதற்கீடு கொடுக்கும் அளவிற்கு விவசாய விளைபொருளின் விலைகளில் ஏற்றமின்மையும் சிறு விவசாயப் பொருளாதாரத்தின் நெருக்கடியைத் தீவிரமாகியுள்ளன.

2.15  ஒருபுறத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு விவசாய இடுபொருட்களான விதைகள், உரம், பூச்சிக் கொல்லிகள், மின்சாரம் மற்றும் ஏனைய எரிபொருட்களின் விலை செங்குத்தாய் உயர்ந்துள்ளது. விவசாய ஆய்வுகளில் அரசு முதலீடு மிகவும் குறைந்துவிட்ட காரணத்தால், விதைகள் உற்பத்தி மற்றும் வழங்கலில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவங்களின் சந்தைச் சக்தி வளர்ந்துள்ளது. விவசாய இடுபொருட் களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் பல்வேறு வகையான விவசாய இடுபொருட்களின் கடும் விலையேற்றத்தை ஈடு செய்யும் வகையில் விளைபொருள் விலை உயரவில்லை. உண்மையில் தேயிலை, ரப்பர், மிளகு, தேங்காய், பருத்தி, துவரை, கடலை, பருப்புகள், வெங்காயம் ஆகிய விளை பொருட்களின் விலைகள் தேங்கிப் போயுள்ளன அல்லது குறைந்து போயுள்ளன. சர்வதேசச் சந்தையில் விவசாய விளை பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி விவசாயிகளைப் பாதித்துள்ளது. அரசாங்கக் கொள்முதல் அமைப்பை வலுவாக்குவது அந்தச் சூழல்களிலிருந்து விவசாயிகளுக்கு சற்று நிவாரணம் அளிக்கக் கூடியதாகும். ஆனால் புதிய அரசாங்கம் அரசாங்கக் கொள்முதல் முறைகளை நீக்குவதிலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளையும் சில்லறை விற்பனை பகாசுர நிறுவனங்களையும் களத்து மேட்டிலிருந்தே விளைபொருட்களை கொள்முதல் செய்து கொண்டு போகுமாறு வரவேற்பதிலும் உறுதியாக உள்ளது. சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவையிலுள்ள பணம் ரூ. 11,000 கோடியை அரசு பெற்றுத் தராதது கரும்பு விவசாயிகளைப் பாதித்துள்ளது.

2.16  விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன் பெருமளவு பன்னாட்டு நிறுவனங்கள், விவசாய வணிக நிறுவனங்கள், பெரும் பணக்கார விவசாயிகள் ஆகியோருக்கே போய்ச் சேர்ந்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் முறைசார் கடன் வசதிகளிலிருந்து நெருக்கிப் புறந்தள்ளப்பட்டு லேவாதேவிக் காரர்களிடம் விடப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கடன்படுதன்மை அதிகரித்த வண்ணம் உள்ளது.

2.17 கூட்டுறவுக் கடன் சங்கங்கள் குறித்த புதிய கொள்கைகள் இந்தியாவின் முதன்மையான வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் அடித்தளத்தையேத் தகர்க்க முனைகின்றன. அவற்றை வணிக வங்கிகளின் தொடர்பு நிறுவனங்களாக மாற்றுகின்றன. அவை தாமாக வைப்புநிதிகளைப் பெறுவதை தடை செய்து அவற்றை வணிக வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடைநிலை நிறுவனங்களாக குறைத்து இதனைச் செய்ய முனைகின்றன. இயற்கைச் சீரழிவுகள், விலைவீழ்ச்சி, பயிர் பொய்த்தல் ஆகிய பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான விரிவான பயிர்க்காப்பீட்டு திட்டங்கள் இல்லை.

2.18 தாராளமயக் கொள்கைகளின் கீழ் ஏற்பட்டுள்ள கிராமப்புற மாற்றங்களில் நிலப்பிரபுக்களும் பெரு முதலாளித்துவ விவசாயிகளும் பயனாளர்களாக ஆகியுள்ளனர். கூலித் தொழிலாளர்களைப் பொருத்த மட்டிலும் விவசாயப் பணிகளுக்கும் ஏனைய பணிகளுக்குமான அவர்களது கூலி வீதம் உண்மையான அளவுகளில் மிகக் குறைவானதாகத் தொடர்கின்றது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவு மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளில் அது நிலவுகிறது. அத்தோடு கிராமப்புற தொழிலாளர்கள் குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் பெறும் ஆண்டின் சாராசரி வேலை நாட்கள் மிகவும் மோசமான அளவில் குறைவாக இருக்கின்றது. இடம்பெயர் தொழிலாளர்களின் நிலையும் அவர்கள் சொந்த கிராமத்தில் விட்டு வந்துள்ள அவர்களது குடும்பத்தின் நிலையும் மிகவும் பரிதாபகரமாக இருக்கின்றது.

2.19 பாஜக அரசு அவசரச்சட்டம் மற்றும் மறு அவசரச்சட்டம் வாயிலாக நாடாளுமன்றத்தால் 2013ல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தப்படுகிற சட்டத்தை திருத்தியுள்ளது. இத்தகைய ஜனநாயகத்திற்குப் புறம்பான நடைமுறைகள் பெரும் தொழிலகங்கள், ரியல் எஸ்டேட், ஊக வணிகத்தில் லாபமீட்டுபவர்கள் மற்றும் நில அபகரிப்புக் கும்பல்கள் ஆகியோருக்குப் பயனளிப்பவையாக உள்ளன. அவசரச்சட்டமும், திருத்தப்படவுள்ள சட்டமும் இசைவு அம்சம் வாயிலாக அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீர்ததுப்போகச் செய்வதோடு நிலத்தைச் சார்ந்துள்ள லட்சோப லட்சக் கணக்கான மக்களின் கவலைகளையும், நிராகரிப்பவையாக உள்ளன. பாஜக அரசின் பிடிவாதமான இந்நடவடிக்கை அதன விவசாயி விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது.

கூர்மையடைந்துள்ள ஏற்றத் தாழ்வுகள்

2.20 இந்தக் காலகட்டத்தில் புதிய தாராளமயக் கொள்கைகள் காரணமாக பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் வணிக ஏட்டின் பட்டியலின்படி இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்கள் அனைவரும் அமெரிக்க டாலரில் 1 பில்லியனுக்கும் மேலாகச் சொத்து ( 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது 6200 கோடி ரூபாய்க்குச் சமம்) வைத்துள்ளவர்கள். 2011 ஆம் ஆண்டு பட்டியலில் இவர்களின் எண்ணிக்கை 55 ஆக இருந்தது. இப்போது 45 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இந்த நூறு பில்லியனர்களின் மொத்த சொத்து 346 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். நாட்டில் உள்ள குடும்பங்களின் மொத்தச் செல்வவளத்தில் முதல் 1 சதவீதத்தினரின் பங்கு, 2000 ஆம் ஆண்டில் 36.8 சதவீதமாக இருந்தது, 2014 ஆம் ஆண்டு எங்கும் காணவியலாத அளவில் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. (கிரடிட் சுயிஸ், உலக செல்வவள அறிக்கை)

2.21  இந்த வக்கிரமான செல்வ வளக்குவிப்பு ஒருபுறமிருக்க 2011-12 ஆம் ஆண்டுகளில், 80 சதவீதத்தினருக்கும் மேலான கிராமப்புற குடும்பங் களில் தனிநபர் தினசரி செலவு என்பது வெறும் 50 ரூபாய் அல்லது அதற்கும் கீழ் எனும் நிலையிலேயே இருந்தது. 45 சதவீத நகர்ப்புற குடும்பங்களின் நிலையும் இவ்வாறே இருந்தது. 2012 ஆம் ஆண்டு தனிநபருக்குக் கிடைக்கப்பெற்ற உணவுதானியங்களின் அளவு ஆண்டிற்கு 164 கிலோவாக இருந்தது. இது, 1991 ஆம் ஆண்டின் தனிநபர் அளவான ஆண்டிற்கு 186 கிலோ என்பதைக் காட்டிலும் குறைவு ஆகும்.

2.22 பெரிதும் வளர்க்கப்பட்ட பெரு முதலாளிகளின் செல்வ வளமும் லாபமும் உழைப்புச் சுரண்டல் தீவிரமாக்கப்பட்டதன் விளைவு ஆகும். உற்பத்தி துறையில் நிகர மதிப்புக் கூட்டலில் கூலியின் பங்கு 1990-91 ஆம் ஆண்டு 25.6 சதவீதமாக இருந்தது. 2011-12 ஆம் ஆண்டு இது 11.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2.23 அரசு வாரி வழங்கிய கொடைகளைப் பெற்ற பயனாளிகளாகவும் கார்ப்பரேட்டுகளும், பெரும் பணக்காரர்களும் உள்ளனர். 2008-09 -க்கும் 2013-14 க்கும் இடைப்பட்ட 4 ஆண்டு காலத்தில் வரி விலக்கு என்ற பெயரில் அரசு இழந்த வருவாயின் அளவு 29.52 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

தொழிலாளர் நிலை

2.24 நவீன தாராளமயக் கொள்கைகளின் அதிகார அமைவு தீவிரமான உழைப்புச் சுரண்டலை ஏதுவாக்கும் வண்ணம் தொழிலாளர்களின் பணிச் சூழலை மாற்றியமைத்தையே தன் அடையாளமாகக் கொண்டுள்ளது. முறைசார் தொழிற்துறையில் சராசரி தனிநபர் உண்மை ஊதியம் குறைந்துள்ளது. 1990-91 ஆம் ஆண்டில் 108.41 ரூபாயாக இருந்த இது 2010-11 ஆம் ஆண்டு 103.76 ஆக குறைந்தது. ஒப்பந்தக் கூலி, அத்துக்கூலி, வெளியாரிடம் பணியினை ஒப்படைத்தல் என்பவை உழைப்புச் சுரண்டலை தீவிரமாக்கும் வழிமுறைகளாக உள்ளன. 1995-96 இல் 10.54 சதவீதமாக இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு 2009-10 இல் 25.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் அதன் பணிகளை வெளியாரிடம் ஒப்படைக்கும் முறையில் வீட்டில் இருந்து பணியாற்றும் தொழிலாளர்கள் குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் உற்பத்திப் பொருளுக்கான கூலி என்ற வகையில் எள்ளளவு சிறுதொகையே கூலியாக அளிக்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர். அரசுத் திட்டங்கள் பலவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பெயரளவிலான மதிப்பூதியம் மட்டும் வழங்கப்படுகிறது; அவர்களுக்கு அனைத்து சட்ட ரீதியான பலன்களும் மறுக்கப்படுகின்றன. முறைசாராத் தொழில் துறையில் பணிபுரிவோரில் பெரும்பங்கு வகிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலைமை தான் தினசரிக் கூலி, சமூக பாதுகாப் பின்மை போன்ற நெஞ்சம் பதைக்கும் வேலை நிலமைகளோடு இருப்பதிலேயே மிகவும் மோசமானதாக உள்ளது.

ஊழலும் கருப்புப் பணமும்

2.25 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-II ஆட்சியில் இருந்தபோது அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெளிப்பட்டது. அது, நவீன தாராளமயக் கொள்கை அதிகார அமைவில் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு ஊழல் எப்படி வழிவகுக்கின்றது என்பதைக் காட்டுவதாக உள்ளது. முன்னர் 2ஜி அலைக்கற்றை வழக்கு பெருமுதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தினர் கூட்டுக் கொள்ளையை அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அரசாங்கக் கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) அறிக்கை நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் தனியார் நிறுவனங்கள் எப்படி மக்கள் பணத்தில் 1.86 லட்சம் கோடியை தங்களின் செல்வமாக்கிக் கொண்டனர் என்பதைக் காட்டியது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் உடன்பாட்டு ஊழலும் ரயில்வே அமைச்சகத்தின் ஊழலும் இவற்றைப் பின்தொடர்ந்தன. மேற்கு வங்காளத்தில் சாரதா நிதிநிறுவன ஊழல், ஒடிசாவின் நிதி நிறுவன மற்றும் சுரங்க ஊழல், மகாராஷ்டிராவின் நீர்ப்பாசன ஊழல், மத்தியப் பிரதேசத்தின் நுழைவுத்தேர்வு ஊழல், கேரளாவின் சூரிய மின்தகடு ஊழல் என மாநிலங்களிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது.

2.26 கார்ப்பரேட் ஊடகங்களும் பொதுமக்கள் பார்வைகளும் இந்த ஊழல்களை லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் அரசியல் வாதிகளையும் அதிகாரவர்க்கத்தினரையும் மாத்திரம் பொறுப்பாக்கி, இந்த ஊழல்கள் அனைத்திற்கும் மூல ஊற்றான நவீன தாராளமயக் கொள்கை அதிகார அமைவு என்பதைச் சுட்டிக் காட்டாது விட்டுவிடுகின்றன. இதுதான் பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் ஊழல்மயமான நடவடிக்கைகளில் ஈடுபட ஏதுவாக்குகின்றது. 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டம் ஊழல் தடுப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ஊழல் வழக்குகளைக் கவனிக்கும் ஒரு அமைப்பை உருவாக்கியது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் ஊழலுக்கெதிரான போராட்டம் என்பது தவிர்க்கவொண்ணாத வகையில் நவீன தாராளமய அதிகார அமைப்பையும் ஊழலுக்கான பெருமுதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தினர் கூட்டணியையும் உடைப்பதை உள்ளடக்கியதாகும்.

2.27 விடுதலை பெற்றதிலிருந்து 20.92 லட்சம் கோடி ரூபாய் பணம் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டை விட்டு வெளியே பாய்ந்துள்ளது என அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் 11.28 லட்சம் கோடி இழப்பு 2008-2010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டவிரோதமான பணத்தை நாட்டிற்கு மீட்டுவர ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்து நூறுநாட்களில் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் அனைத் தையும் மீட்டுவர சூளுரைத்த மோடி அரசாங்கமும் அதே பாதையைத் தான் பின்பற்றி வருகின்றது. காங்கிரசும் சரி, பாஜகவும் சரி உள்நாட்டில் கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவோ சட்டவிரோதமாய்ப் பதுக்கப்படும் பணத்தை வெளிக்கொணரவோ நடவடிக்கை எடுப்பது குறித்துப் பேசுவதும் இல்லை.

இந்துத்துவா திட்டம்: மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து

2.28  நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றிக்கு முன்னால், ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் முன்னணி ஸ்தாபனங்களும் வகுப்புவாத செயல்திட்டத்தை பிராச்சார முறையாக மேற்கொண்டன. பசுவதை, இந்துப்பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் வசப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள், வங்காள தேசத்திலிருந்து இஸ்லாமியர் ஊடுருவல், முஸ்லிம்களை வாக்குவங்கி அரசியலுக்காகத் தாஜா செய்வதாகப் பிரச்சாரம் என இந்துத்வா அமைப்புகள் வகுப்புவாத பதட்டத்தை தூண்டி வகுப்புவாத அடிப்படையில் மக்களை பிரித்து வைத்தன. 2013ம் வருடம் நாட்டில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில், வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் மிகுதியாகின. முசாஃபர் நகரில் செப்டம்பர் 2013ல் நடந்த வன்முறைகள் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் வகுப்புப்பிரிவினையை உருவாக்குவதில் வெற்றி பெற்றது. பீகார், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்தன. தேர்தலுக்குப் பிறகு, பாஜக அரசு பொறுப்பேற்றதன் பின் வெவ்வேறு மாநிலங்களில் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. பா.ஜ.க ஆட்சியின் கீழ் சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்கள் தான் என அவர்களுக்கு அறிவிப்பதே இதன் நோக்கம்.

2.29  பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தை நிறைவேற்று வதன் மூலம் சூழ்நிலையில் குணாம்ச ரீதியிலான மாற்றம் ஏற் பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மந்திரிகளுக்கும் உறவு இருக்கிறது. இதை செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைந்து செயல்படும் ஆறு குழுக்களை நியமித்திருக்கிறது. நாட்டின் கல்வி முறை தான் பிரதான இலக்கு. பாட்த்திட்டத்திலும், பாடப்புத்தகங்களிலும் வகுப்புவாத உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை மாற்றப்பட விருக்கிறது. வரலாறு மாற்றி எழுதப்படப் போகிறது. மற்ற மொழிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சம்ஸ்கிருதம் முதல்நிலைபடுத்தப்படப்போகிறது. இந்த வேலைக்காக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் கொள்கைகளை வகுக்கும் உயர்மட்டக் குழுக்களுக்கான தலைமை பொறுப்பாளர்களை வேலையில் அமர்த்தும் பணி துவங்கிவிட்டது. பிரதம மந்திரியிலிருந்து கீழ்வரை பத்தாம் பசலித்தமான கருத்துக்களைப் பரப்பு வதும், விஞ்ஞானக் கண்ணோட்டத்தை குழிதோண்டி புதைப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன.

2.30  சீர்குலைக்கும் இந்துத்துவா திட்டத்தை பல்வேறு தளங்களில் அமுல்படுத்தி இந்தியக் குடியரசின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குறியாக மாற்றும் முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா கோட்பாட்டை ஒத்துக்கொள்ளா தவர்களை பா.ஜ.க தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிரட்டி அறிக்கை விடுவது; நாதுராம் கோட்சேயை பெருமைப் படுத்துவது; முஸ்லிம்கள், கிறித்துவர்கள் இந்துமதத்துக்கு மறு மதமாற்றம் செய்யப்படுவது; அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரிக்கை வைப்பது ஆகிய அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் பகுதிகளே. இந்துத்வா, இந்து பாரம்பரியம் என்ற பெயரில் நிலவும் ஜாதிய அமைப்பு முறையைப் பாதுகாத்து வலுவூட்டுகிறது. பெண்களை குடும்ப கௌரவம் மற்றும் சமூகத்தின் சொத்தாக பார்ப்பதாகக் கூறிக்கொண்டு பிற்போக்குத்தனமான ஆணாதிக்க சமூக சிந்தனைகளை முன் வைக்கிறது. இதன் மூலம், பாரம்பரியம் என்ற பெயரில் பெண்களை ஆண்களுக்கு சேவகம் செய்பவர்களாக நிர்பந்திக்கிறது. இந்துப் பெண்கள் பல குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சமீபத்தில் விடப்பட்ட உத்தரவு பெண்கள் மீது அண்மையில் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

2.31  அரசாங்கத்தின் ஆதரவுடன் ஸ்தலத்தில் பணிபுரியும் அனைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கும் அரசின் ஆதரவும், நிதியும் கிடைக்கும். ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபனங்கள், குறிப்பாக தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களை இந்துத்வா சித்தாந்தம் மற்றும் ஒழுங்குடன் இணைப்பதற்கு முயல்கின்றன.

வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடும் வழி

2.32  இந்துத்வா சக்திகளுக்கும், மற்ற வகுப்புவாத சக்திகளுக்கும் எதிரான போராட்டம் என்பது அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும், அக்கொள்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கும் எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். பா.ஜ.க. அரசும், அதன் மாநில அரசுகளும் அவர்கள் மீது சுமத்தும் சுமைகளுக்கு எதிராகவும், மக்களது வாழ்வு பாதுகாக்கப் படுவதற்காகவும், மக்களை அணி திரட்டுவதன் மூலமே ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான பிரச்சாரம் வெகுஜனங்களை ஈர்க்கும்.

2.33  இந்துத்வா சக்திகள் சிறுபான்மை வகுப்பினர் மீது தொடுக்கும் தாக்குதல்கள், சிறுபான்மை வகுப்பினரிடம் தீவிரவாத சக்திகள் மற்றும் அடிப்படைவாத சக்திகள் வளரும் சூழலை உருவாக்குகிறது. எனவே, சிறுபான்மை வகுப்புவாதத்தை எதிர்த்து போராடுவதிலும் நமது கவனம் இருக்கவேண்டும். ஏனென்றால், சிறுபான்மை வகுப்புவாதம் மீண்டும் பெரும்பான்மை வகுப்புவாத சக்திகளுக்கு வலுவூட்டுகிறது.

2.34  வகுப்புவாத சக்திகளின் அபாயத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நாம் மிகப் பரந்த அளவில் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டவேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிராக பரந்த, ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்த பொதுமேடை உருவாக்குவது அவசியம்.

2.35  அரசியல் துறையில் மட்டுமல்ல. தத்துவார்த்த, சமூக, கலாச்சார, கல்வித் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான போராட்ட யுக்திகளுக்கு அழுத்தமான வடிவம் கொடுக்கப்பட வேண்டும். இந்தத் துறைகளில்தான் வகுப்புவாத சித்தாந்தமும், மதிப்பீடுகளும் நுழைக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசியல் போராட்டத்தோடு கூடவே, கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் கீழ்க்கண்ட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

  • இந்துத்துவா மற்றும் ஏனைய வகுப்புவாத சக்திகளின் பிற்போக்கு, பிரிவினை கொள்கைகளை தோலுரிக்கும் சித்தாந்த, அரசியல் பிரச்சார சாதனங்கள் பொதுமக்களை ஈர்க்கும் நடையில் தயாரிக் கப்பட வேண்டும். அறிவுஜீவிகள், வரலாற்றாசிரியர்கள், கலாச்சார நிபுணர்கள் ஆகியோரை வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த கட்சியின் அறிவு வளங்கள், ஆராய்ச்சி மையங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • கல்வித் துறையில் பள்ளிக்கு முந்தைய நிலையிலும், பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • கட்சியும், தொழிற்சங்கங்களும் தொழிலாளி வர்க்கத்திடையேயும் அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் சமூக, கலாச்சார நிகழ்ச்சிகள் மூலமாக மதச்சார்பற்ற, விஞ்ஞான அணுகுமுறை களை வளர்த்தெடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • வகுப்புவாத சக்திகள் ஆபத்தான, ஜாதிய ரீதியான, பிற்போக்குத் தனமான மதிப்பீடுகளை சமூகத்தில் திணிப்பதற்கு எதிராக கலாச்சார மற்றும் விஞ்ஞான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மக்களை ஈர்க்கும் விஞ்ஞான இயக்கம் இந்த நோக்கத்திற்காக முடுக்கிவிடப்பட வேண்டும்.
  • ஆதிவாசி, தலித் பிரிவினரிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பன்முகப்பட்ட செயல்களை முறியடிக்க அப்பகுதியினரிடம் கட்சியின் ஸ்தாபன பணிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு

2.36  இந்துத்துவா அமைப்புகள் முஸ்லிம் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குகின்றன. மறு மதமாற்றம், காதல் புனிதப்போர் போன்ற பிரச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் தோற்றுவிக்கின்றன. கிறித்தவ தேவலா யங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும், வன்முறைகளும் டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறியுள்ளன. முஸ்லிம் மக்களின் சமூக, பொருளாதார பின்தங்கிய நிலைமையும் சச்சார் அறிக்கை பரிந்துரைகளும் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மகாராஷ்டிராவின் பாஜக தலைமையிலான அரசு கல்வியில் இஸ்லாமியருக்கு தரப்பட்டு வந்த 5 சதவிகித ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டது. மாட்டுக்கறி உணவு மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு, அவர்களது கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக விசேஷ நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

ஜம்மு – காஷ்மீர்

2.37  பி.டி.பி – பிஜேபி கூட்டணி அரசாங்கம் இம்மாநிலத்தில் உருவாகியிருப்பது ஜம்முவிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் மதமோதல்களை மேலும் அதிகரிப்பதற்கே வழி செய்யும். அரசியல் சட்டப்பிரிவு 370, ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மீது நேர் எதிரான நிகழ்ச்சி நிரல்களை இக்கூட்டணிக் கட்சிகள் கொண்டுள்ளன. ஐம்மு காஷ்மீரின் அரசியல் பிரச்சனைகள் ஐ.மு. கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அர்த்தமுள்ள வகையில் கையாளப்படவில்லை. இம்மாநிலத்திலுள்ள எல்லாக் கருத்தோட்டங்களைக் கொண்டவர்களோடும் மத்திய அரசு பேச்சு வார்த்தைகளைத் துவக்க வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 370 அதன் மூல நோக்கங்களுக்கேற்ப பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை மாநிலத்திலிருந்து திரும்பப் பெற வேண்டுமெனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீண்டும் வலியுறுத்துகிறது. இப்பிரச்சனைக்கு மாநில அளவில் அதிகபட்ச சுயாட்சியும், ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பிராந்தியங்களுக்கும் பிராந்திய சுயாட்சியும் வழங்குகிற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

வெளியறவுக் கொள்கையின் திசைவழி

2.38  1990களில் தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கியதிலிருந்து இந்தியா அமெரிக்க சார்பு வெளியறவுக் கொள்கை நிலையை எடுத்து வருகிறது. வாஜ்பாய் காலத்தில் தொடங்கிய முயற்சியான அமெரிக்காவுடனான கேந்திரமான கூட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பூர்த்தி செய்யப்பட்டது. பா.ஜ.க. அரசாங்கமும் இதே பாதையில் தொடர்வதற்கான எண்ணத்துடன் செயல்படுவது வெளிப்படை. செப்டம்பர் 2014ல் மோடி, வாஷிங்டன் சென்றபோது, ஜனவரி 2015லிருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கான மீண்டும் புதுப்பிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் அறிவிக்கப் பட்டது. இதைப்போல பா.ஜ.க அரசாங்கம், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கேந்திர, ராணுவ உறவுகளை வலுப்படுத்தி, ஆஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜனவரி 2015ல் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, இரு நாடுகளும் ஆசிய-பசிஃபிக் பிராந்தியம் தொடர்பான தொலைநோக்கு கூட்டறிக்கையை விடுத்தனர். இது முதல் முறையாக சீனாவைக் கட்டுப்படுத்த ஆசியாவில் ஒரு அச்சை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சியை இந்தியாவின், “கிழக்கு நோக்கிய செயல்” என்ற கொள்கையோடு இணைப்பதாகும். இப்படிப்பட்ட அணுகுமுறையின் விளைவு என்னவென்றால் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு கூட்டணியின் தோற்றமே.

2.39  பா.ஜ.க அரசு இஸ்ரேலுடன் பாதுகாப்பு மற்றும் கேந்திரமான ஒத்துழைப்பை வலுவாக்குகிறது. வெளியுறவு செயலர்களின் பேச்சுவார்த்தையை சென்ற வருடம் ரத்து செய்து பாகிஸ்தானுடன் மோதல் கொள்கையை கடைப்பிடிக்கிறது. ரஷ்யாவுடனான உறவை சீராட்டுகிறது. பாஜக அரசாங்கம் தனது சித்தாந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு சீனாவுடனான உறவை மேம்படுத்தி வலிமையானதாக்க வேண்டும்.

2.40  அமெரிக்காவுடனான கேந்திரமான கூட்டுக்கு எதிராகவும், நமது நாட்டின் நலன் காக்க சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிப்பது தான் சரியாக இருக்கும் என்பதை கட்சி தொடர்ந்து பிராச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையும், இயக்கங்களையும் வளர்ப்பதற்கான முயற்சிகளைக் கட்சி அதிகரிக்க வேண்டும்.

அரசும் நவீன தாராளமய ஆட்சியும்

2.41  அரசும் அதன் நிர்வாக எந்திரங்களும் நவீன தாராளமயக் கண்ணோட்டத்தின் தாக்கத்துக்கு ஆளாகி செல்லரித்துப் போய்க் கொண்டிருக்கின்றன. பெருமுதலாளித்துவம் நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கவும், மூலதனத்தை பெருக்கவும் அரசு ஒரு கருவியாக தொடர்ந்து செயல்படுகிறது. சந்தை சக்திகளுக்கு ஆதரவாகவும் அதற்கு எதிரான தடைகளை நீக்குவதற்கும் வழிவகை செய்யும் அமைப் பாகவும் அரசு செயல்படுகிறது. அதேநேரத்தில் அரசு மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்தும் அமைப்பு என்பதும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. நவீன தாராளமயக் கொள்கையின் தாக்கம் அரசியலுக்கும் தொழிலுக்கும் இடையே அதிகரிக்கும் பிணைப்புக்கு வழி வகுத்துள்ளது. தேர்தல் நடைமுறைகளில் பணம் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசியலுக்கும், தொழிலுக்கும் உள்ள இந்த பிணைப்பு ஜனநாயக அமைப்புகளை அரிக்கிறது. இதன் விளைவாக நாடாளுமன்ற ஜனநாயகம் முடக்கப்படுகிறது. அடிப்படை பொருளாதாரக் கொள்கைகள் நாடாளுமன்றத்தையும், சட்டமன்றங் களையும் புறந்தள்ளி தீர்மானிக்கப்படுகின்றன. பாஜக அரசு பொருளாதார நடவடிக்கைகளை எல்லாம் அவசரச் சட்டங்கள் மூலம் நிறைவேற்றுகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கிறது.

2.42  உலக வங்கியிடம் கடன்கள் பெறுவதன் மூலமும் மற்றும் நிதி மாற்றங்கள் மூலமும் தனியார்மயக் கொள்கைகளையும், உபயோகக் கட்டணம் விதிப்பதையும் விவசாய சந்தைகளை தனியார்மயமாக்கு வதையும் அமலாக்க மாநில அரசுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் அரசின் நிர்வாக இயந்திரங்களில் வகுப்புவாதத்தை புகுத்தும் முயற்சிகள் பாஜக ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றன. “தேசிய பாதுகாப்பு அரசு” என்ற கருத்து உருவாக்கப் படுகிறது. இவை எல்லாம் சர்வாதிகார ஆட்சி அமைப்பதற்கான முன்னறிவிப்புகளாக உள்ளன.

தேர்தல் சீர்திருத்தத்துக்கான போராட்டம்

2.43  நாடாளுமன்ற ஜனநாயகம் பெரும் பணத்தால் அரிக்கப்படுவதும், அதிக வாக்கு பெற்று முதலில் இருப்பவரே வெற்றியாளர் என அறிவிக்கும் தேர்தல் முறையில் உள்ள திரிபுகளும் தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை உணர்த்துகின்றன. பகுதி அளவிலான பட்டியலோடு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர கட்சி பிரச்சாரம் செய்ய வேண்டும். மேலும், தேர்தல் சாதனங்களை பொருளாக அரசு வழங்க வேண்டும். சட்டவிரோதமாக தேர்தலில் பணம் செலவழிக்கப் படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தேர்தலில் வேட்பாளர் செலவோடு வேட்பாளருக்கு கட்சி செய்யும் செலவையும் சேர்க்க வேண்டும்.

அரசு ஒடுக்குமுறையும் ஜனநாயக உரிமைகள் மீதான தடைகளும்

2.44  ஜனநாயக உரிமைகள் மீதும், குடிமக்களின் சுதந்திரங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிப்பது அரசின் வளரும் சர்வாதிகாரப் போக்கை காண்பிக்கின்றன. எதிர்ப்பினை காட்டும் உரிமை, கண்டனக் கூட்டங்கள் நடத்துவது, பொதுக்கூட்டங்கள் கூட்டுவது ஆகியவற்றை வெவ்வேறு மாநில அரசுகள் தடை செய்கின்றன. நீதித்துறையும் இப்படிப்பட்ட தடைகளைப் போட பயன்படுத்தப்படுகின்றன.

2.45  கொடுங்கோல் சட்டங்கள் மூலம் அரசு ஒடுக்குமுறை நடக்கிறது. ஜம்மு-காஷ்மீரிலும், மணிப்பூரிலும் உள்ள ராணுவ வீரர்களுக்கான விஷேச அதிகார சட்டம் ராணுவ வீரர்கள் மக்களை எந்தவித பயமும் இல்லாமல் கொல்ல துணிச்சல் அளிக்கிறது. அரசு இயந்திரங்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதன் பெயரில் முஸ்லிம் இளைஞர்களை குறிவைக்கின்றன. கடந்த மூன்று வருடங்களில் பொய் வழக்குகளில் சிறைபட்ட எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றங்கள் விடுதலை செய்த உதாரணங்கள் பல. இந்திய குற்றவியல் சட்டத்தின் உட்பிரிவுகள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடுபவர்கள் மீதும், வெகுஜன இயக்கங்கள் மீதும் கண்மூடித் தனமாக பிரயோகிக்கப்படுகின்றன. அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் அரசியல் சாசன விரோதம் என அறிவிக்கப்படுகிற வரை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் எழும் மாற்றுக் கருத்துக்களை நசுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. காவல்துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக பணிபுரிகிறது. சில இடங்களில் காவல்துறை, ஆளும் கட்சியினர் மற்றும் சமூக விரோதக் கும்பல் ஆகியவற்றுக்கு இடையே பினைப்பு உள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்துத்வா சக்திகளின் சட்டவிரோத கட்டளைகளை நிறைவேற்றும் அங்கமாக காவல்துறை உபயோகப்படுத்தப்படுவது மிக ஆபத்தான சமீபப்போக்கு.

2.46  மேற்கூறியவை எல்லாம் ஜனநாயக, குடிமக்கள் உரிமைகளுக்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் குடிமக்கள் குழுக்களையும் திரட்டும் உடனடி அவசியத்தை வலியுறுத்துகின்றன.

II

தற்போதைய அரசியல் நிலைமை

பா.ஜ.க – காங்கிரஸ்

2.47  இன்றையச் சூழ்நிலை, ஆளும் வர்க்கத்தின் இரண்டு பெரும் கட்சிகளின் பலங்களில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதை உள்ளடக்கியதாகும். காங்கிரஸின் இழப்பு பாஜகவின் பலம் அதிகரிக்க உதவியுள்ளது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 31 சதவிகிதத்தை மட்டுமே பெற்று பாஜக 282 சீட்டுகளை பெற்றுள்ளது. இருப்பினும் அந்தக் கட்சி மத்தியதர வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புறத்திலுள்ள பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரிடையே புதிய ஆதரவைப் பெற்றது. டெல்லியில் தோல்வி கண்டாலும் அரியானா, மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட், ஐம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி புதிய பகுதிகளுக்கு அது முன்னேறி யுள்ளதை காண்பிக்கிறது. இரண்டு தடவை பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப்போய் அந்தக் கட்சி பரிதாபமான நிலையில் இருந்தது. கடைசியில் ஆர்எஸ்எஸ்-ன் தலையீட்டின் காரணமாக புதிய தலைமையை தேர்ந்தெடுத்தது. அதன் விளைவு, பாஜகவின் மீது ஆர்எஸ்எஸ்-ன் பிடியும் கட்டுப்பாடும் வலுவாகியுள்ளது.

2.48  காங்கிரஸ் கட்சியின் நீண்டகால சரிவு 2004, 2009 தேர்தல் வெற்றிகளினால் சற்றே மறைக்கப்பட்டிருந்தாலும் அது மீண்டும் முன்னால் வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் காலப்பகுதியின் படுமோசமான செயல்பாடுகள் வெகுஜன அதிருப்தியை தூண்டியதோடு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் மிகப் பெரிய சரிவையும் உண்டாக்கியது. காங்கிரஸ் கட்சி தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்ததன் காரணமாகவும் அதன் விளைவான ஊழலின் காரணமாகவும் விளைந்ததே இந்தச் சரிவு. மகாராஷ்ட்ரா, அரியானா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், டெல்லி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி அந்தக் கட்சி இன்னும் மீளவில்லை என்றே தெரிகிறது. புதிய தலைமையைத் தேர்வு செய்வதிலும் அந்தக் கட்சிக்கு நெருக்கடி இருக்கிறது.

பிராந்திய கட்சிகள்

2.49  கடந்த பதினைந்து வருடங்களாக பிராந்தியக் கட்சிகளின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை கட்சி உணர்ந்திருக்கிறது. வர்க்க அடிப்படையில், பிராந்திய கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுபவையாகத் தான் உள்ளன. அதனால் பொதுவாக இந்தக் கட்சிகள் நவீன தாராளமய கொள்கைகளை தழுவிக் கொண்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுடன் தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக சந்தர்ப்பவாதப் போக்கையும் ஊசலாட்டத்தையும் காண்பிக்கின்றன. தெலுங்குதேசம், லோக் ஜன்சக்தி கட்சிகள் பா.ஜ.கவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டு வைத்துக் கொண்டன. மஹாராஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, சட்டசபை தேர்தல் முடிந்தவுடன், பா.ஜ.கவுடனான உறவினை நாடுகிறது.

2.50  அஇஅதிமுகவும், பிஜு ஜனதா தளமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியாகவே போட்டியிட்டு சிறப்பான வெற்றிகளை பெற்றன. எனினும் தேர்தலுக்குப் பிறகு இந்த இரண்டு கட்சிகளுமே பிஜேபி அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையையே எடுத்து வருகின்றன. ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம், தமிழ்நாட்டில் அஇஅதிமுக ஆகியவற்றின் அரசுகள் நவீன தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் அஇஅதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் மேல்மட்ட தலைவர்களும் ஊழல் வழக்குகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சி, பிஎஸ்பி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் அரசாங்கத்தில் உள்ள போது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றுபவையாக உள்ளன.

2.51 மக்கள் விரோத, தொழிலாளி வர்க்க விரோத நிலைபாடுகளை மேற்கொள்கின்ற மாநிலக் கட்சிகள் நடத்தும் அரசாங்கங்களின் கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாகும். அதைப் போலவே மாநில அளவில் பலம் வாய்ந்த கட்சிகளின் அரசியல் மற்றும் முதலாளித்துவ தத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்வதும் அவசியமான ஒன்றாகும். அதன் மூலமே இக்கட்சிகளின் செல்வாக்கிலிருந்து மக்களை வென்றெடுக்க முடியும்,

2.52 ஜனதா தள கட்சியிலிருந்து பல்வேறு காலங்களில் தனித்தனியாகப் பிரிந்து சென்ற கட்சிகள் இப்போது ஒன்றிணைவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தள், சமாஜ்வாதி ஜனதா கட்சி ஆகியவை ஒரே கட்சியாக ஒன்றிணைகின்றன. இது வெற்றி பெறுமெனில் உத்திரப் பிரதேசம், பீகார், வட இந்தியாவின் ஒரு சில பகுதிகள் ஆகியவற்றில் தீர்மானகரமானதொரு சக்தியாக அவர்களால் உருவாக முடியும். எனினும் ஜனநாயக பூர்வமான சமூக-பொருளாதார உள்ளடக்கத்துடன் கூடிய முறையானதொரு திட்டத்தை அவர்களால் உருவாக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2.53  இஸ்லாமிய சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட கட்சிகள் குறிப்பிட்ட பகுதிகளில் செயலூக்கத்தோடு முன்னேறியுள்ளன. அகில இந்திய ஐக்கிய ஐனநாயக அமைப்பு (ஏஐயுடிஎப்) அஸ்ஸாமில் நிலை நிறுத்திக் கொண்டு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களுக்கும், அது விரிவடைவதற்கு முயற்சித்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லை. ஐதராபாத்தில் வேர் கொண்ட மஜ்லி இ-இடேஹதுல் முஸ்லிமீம்(எம்.ஐ.எம்) கட்சி தனது செல்வாக்கை விரிவாக்கி வருகிறது. 2014 நவம்பரில் நடந்தேறிய மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதோடு மேலும் மூன்று இடங்களில் இரண்டாவது இடத்திற்கு வந்தது. அதன் தீவிரவாதத்தன்மை கொண்ட சொல்லாடல்கள் இஸ்லாமிய இளைஞர்களில் ஒருபகுதியை ஈர்க்கிறது. பாப்புலர் ஃபிரண்ட் என்ற தீவிரவாத அமைப்பு (ஐ.பி.எப்) உருவாக்கிய அரசியல் கட்சியான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) தென் மாநிலங்களில் செல்வாக்கை விரிவாக்க முயற்சித்து வருகிறது. சில பகுதிகளில், மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகள் மீது சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி இதுபோன்ற கட்சிகள் ஆதரவைத் திரட்டுகின்றன.

2.54  ஆம் ஆத்மி கட்சி கடந்த கட்சி காங்கிரஸிற்குப் பிறகு உருவான புதிய அரசியல் கட்சியாகும். அன்னா ஹஸாரேயின் தலைமையில் நடந்த ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்துதான் அந்தக் கட்சி தோன்றியது. 2014 நவம்பரில் தில்லி சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலின்போது பஞ்சாபிலும் முக்கியமானதொரு கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்தது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 2015-ல் நடைபெற்ற தேர்தல்களில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. நடுத்தர வர்க்கப் பிரிவினர், நகர்ப்புற ஏழைகள், இளைஞர்கள் ஆகிய பிரிவினரை குறிப்பாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியால் ஈர்க்க முடிந்துள்ளது. எனினும் மக்களின் கவனம் பெறும் பிரச்சனைகளில் போராட்டம் நடத்துவதைத் தவிர தெளிவானதொரு திட்டத்தையோ, கொள்கைகளையோ அக்கட்சி உருவாக்கவில்லை.

வெகுஜனப் போராட்டங்களும் வெகுஜன இயக்கங்களும்

2.55  உணவுப் பாதுகாப்பை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரி கட்சிகளும் தொடர்ச்சியானதொரு இயக்கத்தை நடத்தின. வட்ட அளவில் துவங்கிய இந்த நாடு தழுவிய பிரச்சாரமானது 2012 ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தில்லியில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வரை தொடர்ந்தது. இதை அடுத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை கோரிக்கையாக முன்வைத்து மக்களிடையே கையெழுத்து இயக்கம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த இயக்கத்தின்போது நாடு முழுவதிலும் மூன்றரை கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத் துறை நிறுவனங்களின் அரசுப் பங்குகளை விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத இதர மதசார்பற்ற எதிர்க்கட்சிகளை அணிதிரட்டு வதற்கான முன்முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும் மேற்கொண்டன. 2012 செப்டம்பர் 20ஆம் தேதியன்று நாடு தழுவிய வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. இது வலிமையானதொரு கண்டன நடவடிக்கையாக மாறியது. பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராகக் கண்டன தினம் ஒன்றையும் கட்சி கடைப்பிடித்தது. 2012 அக்டோபர் 30ஆம் தேதியன்று நாடு முழுவதிலும் நடைபெற்ற இந்தக் கண்டன தினமானது பெண்களுக்கு எதிரான இது போன்ற வன்முறையை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

2.56  சமீப காலத்தில் மிகப் பெரியதொரு வெகுஜன பிரச்சார இயக்கத்தை கட்சி மேற்கொண்டது. சங்கர்ஷ் சந்தேஷ் ஜாதாக்கள் என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணிகள் (மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப் பயணம்) நான்கும் 2013 மார்ச் மாதத்தில் 11,000 கி,மீ தூரத்தைக் கடந்தன. இது மார்ச் 19ஆம் தேதியன்று மாபெரும் பேரணியாக முடிவடைந்தது. இந்தப் பேரணியானது ஆறு கோரிக்கைகளை முன்வைத்து மே 15 முதல் 31 வரை திரளான மக்கள் பங்கேற்புடன் மறியல் போராட்டம் ஒன்றை நடத்துமாறு அறைகூவல் விடுத்தது. 2013 ஜூலையில் மாற்றுக் கொள்கைகளை உள்ளடக்கிய திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கென சிறப்பு மாநாடு ஒன்றையும் இடதுசாரி கட்சிகள் நடத்தின. இந்த மாற்றுத் திட்டத்திற்கான மேடையை பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கென பல்வேறு மாநிலங்களிலும் பேரணிகள் நடைபெற்றன.

2.57  வரும் நாட்களில் வெகுஜனப் போராட்டங்களும் இயக்கங்களும் கட்சியால் வளர்த்தெடுக்கப்படுவதற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், பிரச்சனைகள் ஆகியவற்றின் மீது போராட்டங்களையும் இயக்கங்களையும் உருவாக்கிடவும் வேண்டும். வலுவான வெகுஜன மற்றும் வர்க்க அமைப்புகளை வளர்த்தெடுப்பதன் மூலம் மட்டுமே கட்சியினால் முன்னேறிச் செல்ல முடியும் என்பதோடு இடதுசாரி-ஜனநாயக சக்திகளையும் வலுப்படுத்த முடியும்.

2.58  நவீன தாராளமயக் கொள்கைகள், வகுப்புவாதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனில் தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆதிவாசி கள், தலித்துகள் ஆகிய பிரிவினரின் வர்க்க, வெகுஜன அமைப்புகள், வெகுஜன இயக்கங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது அவசியமாகும். கட்சியின் சுயேச்சையான வலிமையை மேம்படுத்தவும், இடதுசாரி-ஜனநாயக சக்திகளை அணிதிரட்டவும் ஒரே வழி வெகுஜன மற்றும் வர்க்க அமைப்புகளை விரிவுபடுத்துவதும், அவற்றின் வெகுஜன செல்வாக்கை விரிவுபடுத்துவதுமே ஆகும்.

தொழிலாளி வர்க்கம்

2.59  அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தேசிய அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றின் கூட்டு மேடையின் கீழ் உருவான ஒன்றுபட்ட போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இவ்வகையில்தான் 2013 பிப்ரவரியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க 2 நாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளுக்கு எதிராகவும், தற்போதுள்ள சமூக நலப்பயன்களைத் திரும்பப் பெறுவதற்கு எதிராகவும் இந்த ஒன்றுபட்ட மேடையின் மூலம் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் இத்தகைய ஒற்றுமையின் விளைவால் வெற்றி கரமாக நடைபெற்றது.

2.60  கேந்திரமான தொழில்களிலும் புதிய உற்பத்திக் கூடங்களிலும் விரிவடைந்து வரும் சேவைத்துறையிலும் உள்ள தொழிலாளர் களை அணிதிரட்டுவதில் தொழிலாளர் அரங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அணிதிரட்டப்படாத துறைகளில் பணிபுரியும் பெருமளவிலான தொழிலாளர்களை அணி திரட்டுவதிலும் குறிப்பாக உழைக்கும் மகளிரைத் திரட்டுவதற்கான சிறப்புக் கவனத்தோடு அவர்களுக்கான இயக்கத்தை வளர்த்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர்கள் அதிகமான அளவில் வசித்துவரும் பகுதிகளில் சமூக, கல்வி, கலாச்சாரத் துறைகள் சார்ந்த நடவடிக்கைகளிலும் தொழிற்சங்கங்கள் ஈடுபட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் வகுப்புவாத அமைப்புகளின் நடவடிக்கை களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கட்சி கவனம் செலுத்திச் செயல்பட வேண்டும்.

விவசாயிகள்

2.61  விவசாயத் துறையில் நாம் மேற்கொள்ள இருக்கின்ற போராட்டங்களும் இயக்கங்களும் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் ஆகியோரின் நலன்களை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும். விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தாக்கமானது விவசாயிகள், வசிக்கும் பகுதிகள், பயிர்கள், பருவ காலங்கள் ஆகியவற்றுக்கிடையே பல்வேறு வகையான தன்மை கொண்டதாக அமைந்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தும்போது நிலப்பிரபுக்கள், பணம்படைத்த பிரிவினரின் வலுவான தத்துவார்த்த ரீதியிலான செல்வாக்கை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகளை அணிதிரட்ட வேண்டும். விரிவான நிலச் சீர்திருத்தங்களுக்காகவும், கண்மூடித் தனமான முறையில் நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்தும் நிலத்திற்காகவும், வன உரிமைகளுக்காகவும், குத்தகை விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், இயக்கங்களை வளர்த்தெடுப்பது; நவீன தாராளமயக் கொள்கைகள், சுதந்திரமான வர்த்தகம் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கும், விவசாயம், தண்ணீர், விதைகள் மற்றும் வனங்கள் ஆகியவற்றை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுவதை எதிர்த்தும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையைக் கோரியும், கடன் வசதிகளை விரிவுபடுத்தக் கோரியும் போராட்டங்களை நடத்துவது என்ற வகையில் திட்டமிட்ட, தீர்மானகரமான ஸ்தாபன வேலைகள், சரியான கோஷங்களை எழுப்புதல் ஆகியவற்றின் மூலமே இந்தப் பிரச்சனைகளை வெற்றி கொள்ள முடியும். நவீனத் தாராளமயமாக்கல் திணித்துள்ள பெருகி வரும் துயரங்கள் இக்கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகளை ஓரணியில் திரட்டுவதற்கான வாய்ப்புகளைப் பரவலாக உருவாக்கியுள்ளது.

விவசாயத் தொழிலாளர்கள்

2.62  விவசாயத் தொழிலாளர்களுக்கான அரங்கம் வேலைவாய்ப்பு, கூலி, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், புலம்பெயர் தொழிலாளர் கள், நிலம், வனப்பகுதி நிலங்கள், விலைவாசி உயர்வு, உணவுப் பாதுகாப்பு, வீட்டு மனை, சமூகப் பாதுகாப்பு, சாதிய வேறுபாடு, விவசாய பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகள், விவசாயத் தொழிலாளர்களுக்கென ஊதியத்திற்காகவும் சமூகப் பாதுகாப்பிற் காகவும் என முழுமையானதொரு மத்திய சட்டம் போன்றவை குறித்த விஷயங் களை தொடர்ந்து கையிலெடுக்க வேண்டும். அதே போன்று இந்தப் பிரச்சனைகளின் மீது பல்வேறு மாநிலங்களிலும் கிளர்ச்சி களையும் போராட்டங்களையும் நடத்த வேண்டும். வரும் காலத்தில் பெரும்பாலான மாநிலங்களில் வலிமையானதொரு விவசாயத் தொழிலாளர் களின் இயக்கங்களை வளர்த்தெடுக்க இந்தப் பிரச்சனைகள் கையிலெடுக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களின் வேலைத் தன்மையில் வெளிப்படையான மாற்றங்கள் தெரிகின்றன. இவற்றை துல்லியமாக ஆராய்ந்து கிராமப்புறத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான நடைமுறைத் தந்திரங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பெண்கள்

2.63  பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமை குற்றங்கள் பிரம்மாண்டமாக அதிகரித்துள்ள நிலையில் மாதர் அமைப்புகள், இதர வெகுஜன அமைப்புகள், குழுக்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் விரிவான வகையில் எதிர்ப்பியக்கத்தை வளர்த்தெடுக்க தீவிரமான முயற்சிகள் தேவைப்படுகிறது. வகுப்புவாத சக்திகளின் தாக்குதலோடு கூடவே மிக முக்கியமான பிரச்சனை என்பது இந்துத்வா சக்திகள் பெண்களிடையே செயலாற்றி வரும் வகுப்புவாத, பெண்கள் விரோத தத்துவத்தை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதே ஆகும். பெண்களின், குறிப்பாக ஏழ்மையான பிரிவுகளைச் சேர்ந்த பெண்களின், வாழ்க்கை, வாழ்நிலை ஆகியவற்றின் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் ஏற்படுத்தி வரும் குறிப்பிட்ட தாக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்ற போராட்டங்களோடு மேலும் அதிகமாக இணைக்கப்பட வேண்டும். மிக மோசமான வகைகளில் வடிவெடுத்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரச்சனையின் மீதான தனது செயல்பாடுகளை பெண் அமைப்புகள் வரும் நாட்களில் தீவிரப்படுத்தி பாலியல் ரீதியான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு இலக்காகும் நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்களின் விரிவான பகுதியினரை எட்டுவதற்கான வழிகளையும் கண்டறிய வேண்டும்.அனைத்து மதங்கள், சமூகங்களுக்குள்ளும், சமூக சீர்திருத்த முன்முயற்சிகள் எடுப்பதற்கு சிறப்பு அழுத்தம் தரப்பட வேண்டும். ஒட்டுமொத்த ஜனநாயக இயக்கத்தின் ஒத்துழைப்போடு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இளைஞர்கள்

2.64  வேலையின்மை, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை, விளையாட்டு, கலாச்சார வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலை, இளைஞர்களை அரசியல் உணர்வற்றவர்களாக மாற்றுவதற்கான தீவிரமான முயற்சிகள் போன்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை கையிலெடுப்பதன் மூலம் வாலிபர் இயக்கம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சமூக, கலாச்சாரப் பிரச்சனைகளை கையிலெடுப்பதிலும் வாலிபர் அரங்கம் முன்னணியில் இருக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களை ஜனநாயக, மதசார்பற்ற குறிக்கோள்களை நோக்கி கவர்ந்திழுக்க முடியும். வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது விளங்க வேண்டும்.

மாணவர்கள்

2.65  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையில் நிகழ்ந்த வணிக மயமாக்கல், மையப்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக மாணவர் அரங்கம் போராடி வருகிறது. பா.ஜ.க அரசு ஆட்சியில் அமர்ந்தவுடன் கல்வித் துறையை வகுப்புவாத மயமாக்குவதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன. கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் எவ்வித உயர்வும் இல்லாத நிலையில் கல்வியானது வணிக மயமாவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாணவர் இயக்கத்தின் பிரதானமான உந்துதல் கல்வியை வணிக மயமாக்குவதையும் வகுப்புவாத மயமாக்குவதையும் எதிர்ப்பதாகவே இருக்க வேண்டும். மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் அழுத்தம் தரப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைகளின் மீது விரிவான ஒன்றுபட்ட இயக்கங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதிகரித்துக் கொண்டே போகும் தனியார் கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்களை இயக்கத்திற்குள் கொண்டு வரவும், அவர்களை அணிதிரட்டவும் சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பழங்குடி மக்கள்

2.66  பழங்குடி மக்களுக்கென தனியான ஒரு மேடையை உருவாக்கியதானது பல்வேறு மாநிலங்களிலும் இப்பகுதி மக்களி டையே செயல்படுவதற்கான உத்வேகத்தை அளித்துள்ளது. இது வன உரிமைகள் சட்டம், வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்படுதல், கல்விக்கான உரிமைகள், வனத்திலுள்ள சிறு பொருட்களை சேகரிப் பதற்கான பழங்குடி மக்களின் உரிமைகளோடு தொடர்புடைய பிரச்சனைகள், பழங்குடி பெண்களின் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகளை கையிலெடுத்து அவற்றை அமல் படுத்த இயக்கம் நடத்தியுள்ளது. உள்ளூர் அளவிலான போராட்டங் களை வலுப்படுத்துவதன் மூலமும் ஸ்தாபனத்தை வளர்த்தெடுப் பதன் மூலமும் இந்தப் பணி மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். ஐந்தாவது அட்டவணையின்படியும், பஞ்சாயத்து (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டப்படியும் பழங்குடியினர் நிலத்தைப் பாதுகாக்கிற பிரச்சனையைக் கையிலெடுக்க வேண்டும். சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதிலுள்ள பிரச்சனைகள், பழங்குடியினர் பட்டியலில் குறிப்பிட்ட பழங்குடி இனங்களை இணைப்பது ஆகியவற்றிற்கும் தீர்வு காணப்பட வேண்டும். பழங்குடி மக்களின் பிரச்சனைகள் குறித்த வர்க்க ரீதியான அணுகுமுறையோடு கூடவே அவர்களின் சமூக, கலாச்சார பிரச்சனைகளும் இணைக்கப்பட வேண்டும். பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.சின் வகுப்புவாத தாக்குதலுக்கு திறன்மிக்க பதிலடியாக இந்த முயற்சிகள் அமையும்.

தலித்துகள்

2.67  தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஜனநாயக இயக்கத்தின் முக்கியமானதொரு பகுதியாக விளங்குகிறது. தீண்டாமை கொடுமை மற்றும் சாதிய ரீதியான புறக்கணிப்பின் இதர வடிவங்கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம்; தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்; தலித்களுக்கான இட ஒதுக்கீட்டையும் இதர நலத் திட்டங்களையும் முழுமையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகப் போராடும் தலித்து களுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட/ பழங்குடிப் பிரிவினருக்கான துணைத் திட்டம்/ சிறப்பு ஏற்பாடு ஆகிய நிதி ஒதுக்கீட்டிற்கு சட்டரீதியான அடித்தளத்தை உருவாக்குவது; சாதிய கட்டமைப்புக்கு எதிரான ஒட்டுமொத்த போராட்டம் ஆகிய நடவடிக்கைகள் முன்னுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். தலித் பிரிவினருக்கென மேடை ஒன்றை ஏற்படுத்தியதானது தலித் விடுதலை இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதாக அமையும்.

அரசியல் நிலைபாடு

2.68  பிஜேபி-க்கு எதிராகவும், மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் கட்சி போராட வேண்டும். நமது முக்கிய கடமையாக இது அமைகிறது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், இந்துத்வா நோக்கம் கொண்ட அதன் சமூக, கல்வி, கலாச்சாரக் கொள்கைகள் ஆகியவற்றை மிகுந்த முனைப்புடன் எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது. பிஜேபி-ஆர் எஸ் எஸ் கூட்டணிக்கு எதிராக அரசியல் ரீதியான, தத்துவார்த்த ரீதியான போராட்டம் ஒன்றை கட்சி மேற்கொள்ள வேண்டும். எனினும், வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தனியாக நடத்திவிட முடியாது. நவீன தாராளமயக் கொள்கைக்கு எதிரான, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் அது ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

2.69 போராட்டத்தின் முக்கிய திசைவழியானது பிஜேபிக்கு எதிரானதாக இருக்கும் அதே நேரத்தில், கட்சியானது காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்கும். அக்கட்சி நவீன தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றி வந்தது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளும் பெருமளவிலான ஊழலும்தான் பிஜேபி பரவலான மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு உதவி செய்தது. கட்சி எந்த வகையான உடன்பாட்டையோ அல்லது தேர்தல் கூட்டணியையோ காங்கிரஸ் கட்சியுடன் ஏற்படுத்திக் கொள்ளாது.

2.70  நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமானது, மாநிலக் கட்சிகளால் ஆட்சி நடத்தப்படும் மாநிலங்கள் உள்ளிட்டு மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் இத்தகைய கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் உள்ளடக்கியதாகும். உழைக்கும் மக்களை அணிதிரட்டவும், அவர்களை இடதுசாரி-ஜனநாயக மேடையை நோக்கி திரளச் செய்யவும் வேண்டுமெனில் மாநிலக் கட்சிகளின் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆதரவு அரசியல் மற்றும் கொள்கைகளை அரசியல்ரீதியாக எதிர்த்துப் போராட வேண்டியதும் அவசியமாகும்.

2.71  சுயேச்சையான வலிமையை வளர்த்தெடுப்பதற்கும், கட்டமைப் பதற்கும் கட்சி தனது முதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதே வேளையில் மக்களின் பிரச்சனைகளுக்காகவும், நாட்டின் இறையாண் மையும், மாநில உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும், ஏகாதிபத் தியத்திற்கு எதிராகவும், இதர ஜனநாயக சக்திகளுடனும், காங்கிரஸ் அல்லாத மதசார்பற்ற கட்சிகளுடனும் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க கட்சி முன்முயற்சி எடுக்கும். கட்சி தனது சுயேச்சை யான வலிமையை விரிவுபடுத்த வேண்டுமெனில் வெகுஜன இயக்கங் களுக்கான கூட்டு மேடைகள், ஒன்றுபட்ட போராட்டங்கள் ஆகியவை அவசியமாகும். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் இத்தகைய கூட்டு நடவடிக்கைகள் காங்கிரஸ், பிஜேபி மற்றும் இதர முதலாளித்துவ கட்சிகளை பின்பற்றி வரும் பரவலான மக்களை கவர்ந்திழுக்க உதவும்.

2.72 இடதுசாரி-ஜனநாயக அணி ஒன்றை படிப்படியாக உருவாக்க ஏதுவாக இடதுசாரி-ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட கட்சி தீவிரமாகச் செயல்படும். ஒன்றுபட்ட போராட்டங்கள், கூட்டு இயக்கங்கள் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் செயல்முறைகளின் மூலமாகவே (இடதுசாரி-ஜனநாயக அணியை உருவாக்குவது என்ற) இந்த முயற்சியை நிறைவேற்ற முடியும். தன்னை வலுப்படுத்திக் கொள்வது, இடதுசாரி-ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க உதவுவது ஆகிய கட்சியின் நலன்களே தேர்தல் குறித்த கட்சியின் நடைமுறைத் தந்திரங்களுக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

இடதுசாரி ஒற்றுமையும் இயக்கங்களும்

2.73 இடதுசாரி ஒற்றுமை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, பார்வார்ட் ப்ளாக், ஆர் எஸ் பி ஆகிய நான்கு கட்சிகளின் தேசிய அளவிலான கூட்டுச் செயல்பாடு என்பதாகவே இதுவரையில் இருந்து வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவது; விரிவுபடுத்துவது ஆகியவற்றுக்குக் கூடுதல் அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிபிஐ (எம் எல்) லிபரேஷன், எஸ் யூ சி ஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளையும் இணைத்த வகையில் ஆறு இடதுசாரி கட்சிகள் ஒன்று கூடி 9 அம்சக் கோரிக்கையின் அடிப்படையில் 2014 டிசம்பரில் கூட்டுப் பிரச்சார இயக்கம் ஒன்றை மேற்கொண்டன. மாநிலங்களிலும் கூட ஒன்றுபட்ட இடதுசாரி மேடைகள் உருவாயின. பஞ்சாப் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, சிபிஐ (எம் எல்) லிபரேஷன் மற்றும் சிபிஎம் (பஞ்சாப்) ஆகியவை கோரிக்கை சாசன அடிப்படையில் அணிதிரண்டு 2014 செப்டம்பர் முதல் கூட்டு இயக்கத்தை நடத்தி வருகின்றன.

2.74 மேற்கு வங்கத்தில் ஏகாதிபத்தியத்திற்கும் வகுப்புவாதத்திற்கும் எதிராக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென 17 இடதுசாரி கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்று திரண்டுள்ளன. தெலுங்கானாவிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் 11 இடதுசாரி கட்சிகள் ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சி-சிபிஐ ஆகியவற்றுடன் இணைந்தது. இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை விரிவுபடுத்தவும், கட்சிகள்-குழுக்கள்-தனிநபர்கள் ஆகியோர் உள்ளிட்ட விரிவானதொரு இடதுசாரி மேடையை கட்டமைக்கவுமான முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

இடதுசாரித் தளங்கள்

2.75 மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ரீதியான பின்னடைவுகள் மற்றும் இதர வேறெந்த மாநிலங்களிலும் குறிப்பிடத் தக்க அளவிற்கு கட்சி முன்னேற்றம் அடையாதது ஆகியவற்றால் அகில இந்திய அளவில் நமது கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலவீனமான நிலையை 20வது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் சுட்டிக் காட்டியிருந்தது. அதைத் தொடர்ந்த நாட்களில் குறிப்பாக கட்சி வலுவாக உள்ள மூன்று மாநிலங்களைப் பொறுத்த வரையில், இந்த நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

2.76 2009 ஆம் ஆண்டில் இருந்து மேற்கு வங்கத்தில் துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள் மீதான தொடர்ச்சியான வன்முறை மற்றும் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்தே வருகின்றன. இந்த வன்முறை அளவும், தன்மையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 1970களில் நிலவிய வன்முறை மற்றும் பயங்கரவாத நிலையின் அளவை மீறியதாகவே உள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கட்சியின் நடவடிக்கைகளை முடக்கவும், கட்சி ஊழியர்களை அச்சுறுத்தவும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் நிகழ்ந்த வன்முறை இதையே சுட்டிக் காட்டுகிறது. தொடர்ந்து நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களில் கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்கள் மட்டுமின்றி கட்சிக்கு வாக்களித்தவர்களும் கூட இலக்காகி இருந்தனர். இந்த வன்முறையின் வீச்சை பெண்களும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும் பல பகுதிகளில் அவர்கள் துணிவுடன் இத்தாக்குதல்களை எதிர்த்துப் போராடினார்கள். கட்சியின் ஊழியர்களுக்கு எதிராகப் பொய்வழக்குகளை பதிவு செய்வதற்காக அரசு இயந்திரமானது அப்பட்டமாகப் பயன்படுத்தப் பட்டது. வன்முறை, பாலியல் ரீதியான வன்கொடுமைகள், படுகொலை வெறியாட்டம் ஆகியவற்றைத் தூண்டிவிடும் வகையில் திரிணாமூல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 2011ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இதுவரையில் கட்சி உறுப்பினர்கள் 163 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2.77 திரிணாமூல் அரசின் மோசமான ஆட்சிமுறை, சாரதா சிட்ஃபண்ட் மோசடி, அதில் திரிணாமூல் கட்சியின் உயர்மட்டத் தலைமையின் நேரடியான ஈடுபாடு, மோசமாகிக் கொண்டே வரும் தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் ஆகியோரின் நிலைமை, பெண்களுக்கு எதிராக விரிவான அளவில் நிகழ்த்தப்படும் குற்றங்கள், கொள்ளை, மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய இவை அனைத்துமே இன்றைய நிலைமையின் அம்சங்களாக விளங்குகின்றன. திரிணாமூல் கட்சியின் சந்தர்ப் பவாத அரசியல் மற்றும் பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை பிஜேபி ஆதாயம் பெறுவதற்கான அடித்தளத்தை உருவாக்கி யுள்ளன. இந்த மோசமான நிலையிலிருந்து மீள்வதற்கான முயற்சி களை கட்சி மேற்கொண்டு வருகிறது. ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை கட்சி மேற்கொண்டு வருவதுடன் வாழ்க்கை நிலைமைகள், பொருளாதாரப் பிரச்சனைகள் ஆகியவற்றிற்காக போராட்டங்களை நடத்தவும் கட்சி மக்களை அணிதிரட்டி வருகிறது. வகுப்புவாத சக்திகளின் அதிகரித்துவரும் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையிலும் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பிரச்சாரங்களுக்கும் போராட்டங் களுக்கும் மக்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது.

2.78 கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நமது கட்சியும் இடது ஜனநாயக முன்னணியும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இக்காலத்தில் பல்வேறு வெகுஜன இயக்கங்களும் நடைபெற்றன. அவற்றில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான பலகைகளை வாங்குவதில் நடைபெற்ற ஊழலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டுமென்று கோரி மாநில தலைமைச் செயலகம் இரண்டு நாள் முற்றுகையிடப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். இப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். உணவுப் பாதுகாப்பைக் கோரியும், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், அமைச்சரவையில் நிலவும் நிதியமைச்சர் மீதான மதுக்கூட லஞ்ச வழக்கு உள்ளிட்ட ஊழல்கள் குறித்தும் கட்சியும் இடது ஜனநாயக முன்னணியும் போராட்டங்களை நடத்தின. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது என்ற போதும் ஆர்.எஸ்.பி. நமது அணியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விலகியதானது பின்னடைவை ஏற்படுத்தியது. இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

2.79 கடந்த கட்சிக் காங்கிரஸிற்குப் பிறகு திரிபுரா மாநிலம் மட்டுமே கட்சி மற்றும் இடதுசாரிகளின் அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொண்ட ஒரே மாநிலமாகத் திகழ்கிறது. 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடது முன்னணி தீர்மானகரமான வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 60 சட்டமன்ற இடங்களில் 52.3 சதவிகித வாக்குகளுடன் 50 இடங்களை இடது முன்னணி வென்றது. 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலிலும் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது. கிராமப் பஞ்சாயத்துகளில் 95 சதவீதத்தையும், பஞ்சாயத்து சமிதிகளில் 98.3 சதவீதத்தையும், ஜில்லா பரிஷத்தில் 99 சதவீதத்தையும் இடது முன்னணி கைப்பற்றியது. 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தின் இரண்டு தொகுதிகளிலுமே நமது கட்சி வெற்றி பெற்றது மட்டுமின்றி பதிவான வாக்குகளில் 64.4 சதவீத வாக்குகளைப் பெற்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இடது முன்னணியின் சிறப்பான செயல்முறைகள் மற்றும் அனைத்து அரசியல், வெகுஜன பிரச்சனைகளிலும் கட்சியின் உடனடியான தலையீடு ஆகிய நடவடிக்கைகள் கட்சியின் செல்வாக்கு விரிவடை வதற்கு உதவின. இந்த வளர்ச்சியை வலுப்படுத்து வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மத்தியில் உள்ள பிஜேபி அரசின் தாக்குதல்களிலிருந்து இடது முன்னணி அரசைப் பாதுகாப்பதிலும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

கட்சியை வலுப்படுத்துக, விரிவுபடுத்துக

2.80. 20 ஆவது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மானம் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

இடதுசாரி கட்சிகள் தேர்தலில் மோசமான பின்னடைவை சந்தித் துள்ள, கட்சியின் வலுவான தளமாக விளங்கிய மேற்கு வங்க மாநிலத்தில் தாக்குதலை சந்தித்து வருகின்ற இன்றைய சூழ்நிலை யில், இதர மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கையும் அடித்தளத்தை யும் விரிவுபடுத்த வேண்டியது மிக முக்கியமானதொரு கடமையாக மாறியுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு கட்சியின் சுயேச்சை யான பங்களிப்பை வலுப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டியது அத்தியாவசியமாகும். கட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்ல இதுவே வழியாகும். அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனை களின் மீது கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகள்தான் மக்கள் திரளை செயல்படச் செய்வதற்கும், இத்தகைய இயக்கங்களிலும் போராட்டங்களிலும் இணையும் வகையில் மக்களின் உணர்வு நிலையை உயர்த்துவதற்கும் அவசியமாகும். மக்களை அணிதிரட்ட வும், அவர்களை அமைப்பு ரீதியாக ஒழுங்குபடுத்துவதற்குமான சுயேச்சையான அமைப்புகளாக வெகுஜன அமைப்புகள் மாற வேண்டும். நமது அணிக்கும் வெளியே உள்ள பெருமளவிலான மக்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் விரிவான அளவிலான இயக்கங்களை நமது வெகுஜன அமைப்புகள் செயல்படுத்த வேண்டியதும் அவசியமாகும். (பாரா 2.140)

2.81 இந்த மதிப்பீடு தொடர்ந்து பொருத்தமானதாகவே இருக்கிறது என்பதோடு இன்றைய சூழ்நிலையில், குறிப்பாக 2014ஆம் ஆண்டின் நாடாளு மன்றத் தேர்தலுக்குப் பிறகு மேலும் கூடுதலாகவே பொருத்தம் உடையதாக அமைகிறது. நாடாளுமன்றத்தில் நமது பலம் குறைந்ததும், கட்சியின் வெகுஜன அடித்தளத்தில் பலவீனம் ஏற்பட்டுள்ளதும் ஆகிய பின்னணியில் கட்சி அதன் வலிமையையும் வெகுஜன அடித்தளத்தையும் மேம்படுத்துவதும் கட்சியின் சுயேச்சையான பங்கை விரிவுபடுத்துவதும் முற்றிலும் அவசியமான ஒன்றாகிறது. வர்க்க, வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கு கட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துடன் உள்ளூர் பிரச்சனைகள் மீதான நீடித்த போராட்டங்களை வளர்த்தெடுப்பதாக இந்த இணைப்பு அமைய வேண்டும்.

2.82 விரிவான அளவிலான இயக்கங்களையும் போராட்டங்களையும் கட்டவிழ்த்துவிடும் வகையில் வர்க்க, வெகுஜன அமைப்புகள் தங்களது சுயேச்சையான செயல்பாட்டை வளர்த்தெடுப்பதில் கட்சி முன்னோடியான பங்கை வகிக்க வேண்டும்.

2.83 முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ கட்சிகளின் அரசியல், தத்துவம் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாடு மற்றும் இடது ஜனநாயக திட்டம் ஆகியவற்றை மாற்றாக முன்வைக்கத் துணிவான முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். சமூகப் பிரச்சனைகளில் கட்சி தலையிட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

2.84 இந்த அரசியல் போராட்டத்தை மேற்கொள்ளவும் ஆளும் வர்க்கங்களின் தத்துவம், அரசியல் ஆகியவற்றிற்கு மாற்றாக நமது தத்துவத்தை முன்னெடுக்கும் வகையிலும் ஊழியர்களை தத்துவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கட்சி தயார்ப்படுத்த வேண்டும்.

2.85 தீவிரமான போராட்டங்களை நடத்துவதற்கான திறமையை வளர்த்து அரசியல், தத்துவார்த்த ரீதியான கட்சிக் கடமைகளை மேற்கொள்ளும் வகையில் கட்சி தன்னை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு ஸ்தாபனத்தையும் மறுசீரமைக்க வேண்டும்.

இடது ஜனநாயக அணி

2.86 இடது ஜனநாயக அணிதான் பிஜேபி, காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கான உண்மையான மாற்று சக்தியாகும். மக்கள் ஜனநாயக முன்னணிக்காக அணிதிரட்டப்பட வேண்டிய வர்க்கங்களை உள்ளடக்கியதாக இந்த முன்னணி திகழ்கிறது. எனவே தேர்தலை சந்திப்பதற்கோ அல்லது ஓர் அரசை உருவாக்குவதற்கோ பயன்படும் வெறும் தேர்தல்கால கூட்டணியாக இது இருக்க முடியாது. மாறாக, தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், கைவினைஞர்கள், சிறு வியாபாரிகள், வியாபாரிகள் போன்ற பிரிவினரை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற, அவர்களுக்காகப் போராடுகின்ற அனைத்து சக்திகளின் ஒரு முன்னணியாக அது உருப்பெற வேண்டும்.

2.87  தற்போது இடது ஜனநாயக அணிக்குள் ஈர்க்கப்பட முடிகின்ற சக்திகளின் மையமாக, இடதுசாரி கட்சிகள் மற்றும் அவற்றின் வர்க்க, வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள்; பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கின்ற சோஷலிஸ்டுகள்; மதசார்பற்ற முதலாளித்துவ கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகபூர்வமான பிரிவினர்; மலைவாழ் மக்கள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மை யினர் ஆகிய பிரிவினரின் ஜனநாயகபூர்வமான அமைப்புகள்; ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளை கையிலெடுத்துச் செயல்படும் சமூக இயக்கங்கள் ஆகியவை அமையும். முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு நேர்விரோதமான, முற்றிலும் மாறுபட்டதொரு திட்டத்தின் அடிப்படையில் இந்தச் சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையை நோக்கி அணிதிரட்டுவதன் மூலமே இடது ஜனநாயக அணியை நோக்கிய இயக்கமானது திட்டவட்டமான வடிவத்தைப் பெறும். இத்திசைவழியிலான ஒரு நடவடிக்கைதான் பொதுவான கோரிக்கை சாசனத்துடன் பல்வேறு வகையான வர்க்க, வெகுஜன அமைப்புகள் அடங்கிய பொதுமேடை ஒன்றை உருவாக்குவதாகும். தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

2.88 இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைக் கட்டுவதற்கான போராட்டம் என்பது வெவ்வேறு மாநிலங்களிலும் பல்வேறுபட்ட வகையில் நடைபெறும். மாநிலங்களில் இடது ஜனநாயக அமைப்புகளின் சேர்க்கை பல வகைகளில் உருவாகும். அகில இந்திய அளவில் இடது ஜனநாயக அணியைக் கட்டுவதில் அவை முக்கிய பங்கும் ஆற்றும். கட்சியினால் மேற்கொள்ளப்படும் நடைமுறைத் தந்திரங்கள் அனைத்தின் கவனமும் வலுவானதொரு இடது ஜனநாயக அணியை சாத்தியமாக்குவதாகவே இருக்க வேண்டும்.

இடது ஜனநாயகத் திட்டம்

2.89  இடது ஜனநாயகத் திட்டம் என்பது முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ, நவீன தாராளயமயக் கொள்கைக் கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான கொள்கைகளை உள்ளடக்கியதாகவும், தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவுஜீவிகள் ஆகிய பிரிவினரின் உடனடிக் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும். இந்தத் திட்டத்தில் அடங்கியுள்ள கோரிக்கைகளும் பிரச்சனைகளும் இடது ஜனநாயக சக்திகளால் மேற்கொள்ளப்படும் அரசியல் ரீதியான பிரச்சாரங்கள், போராட்டங்கள், வெகுஜன இயக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும்.

2.90 இத்திட்டமானது கீழ்கண்டவற்றை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்:

  1. உலகளாவிய பொருளாதாரத்துடன் தொடர்பு வைத்திருக்கும் அதேநேரத்தில் சுயசார்பை வளர்த்தெடுக்கின்ற, உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுக்கின்ற, வேலைவாய்ப்பை பெருமளவிற்கு உருவாக்கு கின்ற, பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்கின்ற ஒரு வளர்ச்சிப் பாதையை நோக்கியதாக அமையும். அதிகாரப் பரவலோடு கூடிய திட்டமிட்ட வளர்ச்சியை நோக்கியதாகவும் அது அமையும்.
  2. முழுமையானதொரு நிலச்சீர்திருத்தம் மற்றும் விவசாய உற்பத்தி உறவுகளை ஜனநாயகபூர்வமானதாக மாற்றியமைப்பது; கூட்டுறவை அடிப்படையாகக் கொண்ட விவசாய செயல்பாடு மற்றும் விற்பனை அமைப்பை வளர்த்தெடுப்பது.
  3. ஏகபோகங்களை கட்டுப்படுத்துவது; கேந்திரமான தொழில்களிலும் அடிப்படையான சேவைத் துறைகளிலும் பொதுத் துறைக்கு ஊக்கமளிப்பது; செல்வ மறுபங்கீட்டிற்கான நிதி மற்றும் வரி ஏற்பாடுகள்; கறுப்புப்பணத்தைத் தடுப்பதற்கான கடும் நடவடிக்கைகள், ஊழலை அனைத்து மட்டங்களிலும் தடுப்பது.
  4. அரசு அமைப்பையும் மதத்தையும் பிரித்து வைப்பது என்ற மதச்சார்பின்மையின் அடிப்படைக் குறிக்கோள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பதியப்படும். மத்திய-மாநில உறவுகளை மறுசீரமைக்கும் வகையில் ஜனநாயக பூர்வமான, கூட்டாட்சி வகையிலான ஒரு கட்டமைப்பை உருவாக்குவது.
  5. தொழிலாளி வர்க்கம்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக   மாதம் ரூ. 15,000/- என்பதை சட்டபூர்வமான வகையில் உறுதிப்படுத்துவது; நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்ணுடன் ஊதியத்தை இணைப்பது; ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் பெறுவதை உறுதிப்படுத்துவது; சமூகப் பாதுகாப்பிற்கான             உத்திரவாதம்; நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பு; ஒப்பந்த முறையிலான வேலைகளுக்கு முடிவு கட்டுவது.
  6. விவசாயிகள்விவசாய வேலைகள் கட்டுப்படியாவதை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது; விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவது; வணிக ரீதியான நோக்கத்திற்காகவோ, விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகவோ வலுக்கட்டாயமாக, நெறிகளற்று விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் இருந்து பாதுகாப்பது; பெரும் வணிக நிறுவனங்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுவதையும் தனியார்மயமாவதையும் தடை செய்வது.
  7. விவசாயத் தொழிலாளர்கள்: விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கென மத்திய சட்டம் ஒன்றை இயற்றுவது; கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வீட்டு மனைகள், வீட்டு வசதி ஆகியவற்றை வழங்குவது.
  8. கல்விமாணவர்கள்: கல்விக்கான பொதுச் செலவை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் 6 சதவிகிதம் ஒதுக்கீடு செய்வது; உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையில் இலவச, கட்டாயக் கல்விக்கான ஏற்பாட்டைச் செய்வது; தரம், விரிவாக்கம் ஆகிய இரு வகையிலுமே பொதுக் கல்வி முறையை வலுப்படுத்துவது; தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டண முறை, பாடத்திட்டம் ஆகியவற்றை முறைப்படுத்துவது.
  9. இளைஞர்கள்: வேலைக்கான உரிமையை அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாகப் பதிவு செய்வது; இளைஞர்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைய உதவும் வகையில் விளையாட்டு, கலாச்சாரம், சிறப்புத் திறன்களுக்கான பயிற்சி ஏற்பாடுகள் ஆகிய சேவைகளை உறுதிப்படுத்துவது.
  10. சுகாதாரம்: சுகாதார சேவைகளுக்கான அரசின் ஒதுக்கீட்டு அளவை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் குறைந்தபட்சம் 5 சதவீதமாக உயர்த்துவது; பொதுச் சுகாதார முறையை வலுப்படுத்தி, விரிவுபடுத்துவது; தனியார் மருத்துவ மையங்களை ஒழுங்குபடுத் துவது; உற்பத்திச் செலவின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்து களின் விலைகளை கட்டுப்படுத்துவது.
  11. சுற்றுச்சூழல்: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பசுங்கூட வாயுக்கள் வெளியேறுவதன் அளவை சிறப்பான ஒழுங்கமைப்பின் மூலம் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது; உற்பத்தி, நுகர்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வகையில் எரிசக்தியை பயன்படுத்துவதை உறுதி செய்வது; மறுசுழற்சி முறையிலான எரிசக்தி முறைக்கு ஊக்கமளிப்பது; எரிசக்தித் துறையில் நிலவும் ஏற்றத் தாழ்வை குறைப்பது; ஆறுகள் மற்றும் இதர நீர்நிலை அமைப்புகள் மாசடைவதை கட்டுப்படுத்துவது; நீர்நிலை அமைப்புகள் எந்த வகையிலும் தனியார் மயமாக்கப்படமாட்டாது,
  12. மக்கள் நலம்: உணவு தானியங்கள் மட்டுமின்றி இதர அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கும் வகையில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம்; அனைவருக்குமான ஓய்வூதிய வசதி; மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல்; பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள்; நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டு வசதி ஏற்பாடுகள். கட்டுப்படியாகும் செலவினத்தில் பொதுப் போக்குவரத்தை விரிவாக்குதல்.
  13. பெண்கள்: நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு; பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளை யும் தடுக்கவும், குறைக்கவும், இவற்றில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கவும் உரிய ஏற்பாடுகளைச் செய்வது; சம வேலைக்கு சம ஊதியம்.
  14. தலித்துகள்: சாதிய அமைப்பையும் அனைத்து வகையிலான சாதிய ஒடுக்குமுறைகளையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது; தீண்டாமையைக் கடைப்பிடிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு கடுமையான தண்டனை விதிப்பது; பல ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாத ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி இடங்களையும், நிலைகளையும், பதவி உயர்வுகளையும் முழுமை யாகச் செயல்படுத்துவது; தலித் கிறித்துவர்களுக்கு தாழ்த் தப்பட்ட பிரிவினர்களுக்கான அந்தஸ்து வழங்கப்படும்; தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமலாக்கப்படும்.
  15. பழங்குடியினர்: பழங்குடியினர் நிலங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் பறிக்கப்பட்ட நிலங்களும் திருப்பி அளிக்கப்படும்; வன உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். வனங்களில் இருந்து இவர்கள் எடுத்து வரும் சிறு வனப் பொருட்களுக்கு குறைந்த பட்ச அரசு ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்; பழங்குடி மொழிகள், கலாச்சாரங்களைப் பாதுகாத்தல்.
  16. சிறுபான்மையினர்: சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படும்; கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலம் ஆகிய துறைகளில் முஸ்லீம் பிரிவினருக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
  17. சிறார் உரிமைகள்: அனைத்து வகையிலான சிறார் வேலைகளுக்கும் தடை விதிக்கப்படும்; 1 முதல் 6 வயது வரையிலான சிறார்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சிறார் வளர்ச்சித் திட்டம் மூலம் பாதுகாப்பு பெறுவர்.
  18. மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளிகள் உரிமைகளின் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும்; மாற்றுத் திறனாளிகள் என்ற அடிப்படையில் காட்டப்படும் பாரபட்சம் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை நிலைநாட்டும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படும்; சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும்; பொது இடங்கள் அனைத்திலும் இவர்கள் தடையின்றி புழங்குவதற் கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
  19. ஜனநாயக உரிமைகளும் தேர்தல் சீர்திருத்தங்களும்: பகுதிப் பட்டியல் முறையுடன் கூடிய விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும்; தேர்தலின்போது பொருளாக அரசியல் கட்சிகளுக்கு அரசு உதவி வழங்குவதற்கான ஏற்பாடு; ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அகற்றப்படும்; சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் சீரமைக்கப்படும்; இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள தேசவிரோதம் குறித்த பிரிவுகள் அகற்றப்படும்; மரணதண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
  20. கலாச்சாரமும் ஊடகமும்: சந்தையால் தூண்டப்படும் மதிப்பீடுகளின் மோசமான செல்வாக்கிலிருந்து மக்களை விடுவிக்கும் வகையில் ஜனநாயக பூர்வமானதொரு கலாச்சார முறை வளர்த்தெடுக்கப்படும்; பிற்போக்குத்தனமான மதவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றின் செல்வாக்கை முறியடிக்கும் வகையில் மதசார்பற்ற மற்றும் கூட்டு கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்படும்; பாரம்பரிய கலைகள், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவை போற்றிப் பாதுகாக்கப்படும்; பொது ஒலி,ஒளிபரப்பு சேவைகள் வலுப்படுத்தப்படும்; பல்வேறு வகையிலான ஊட கங்களை ஒருவரே சொந்தமாக வைத்திருக்கத் தடை விதிக்கப்படும்; ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கென சுயேச்சையான ஆணையம் ஒன்று உருவாக்கப்படும்.

2.91 கடமைகள்:

  1. வலதுசாரி தாக்குதலுக்கு எதிரான போராட்டம் உடனடியாகக் கையிலெடுக்கப்பட வேண்டும். நவீன தாராளமய உந்துதலின் ஒரு பகுதியாக விளங்கும் பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களுக்கு எதிரான நவீன தாராளமய தாக்குதலின் அனைத்து வெளிப்பாடுகளையும் உழைக்கும் மக்களின் அனைத்து பகுதியினரையும் அணி திரட்டி எதிர்த்துப் போராட வேண்டும்.
  2. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் இந்துத்வா திட்டத்தை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், பொதுக் களத்திலும் போராட வேண்டும். இதில் சமூக, கலாச்சார, தத்துவார்த்த, கல்வித் தளங்களில் கட்சியும் இதர வெகுஜன அமைப்புகளும் தீவிரமாக இந்த சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும். வகுப்புவாத அபாயத்திற்கு எதிராகவும், மதசார்பற்ற குறிக்கோள்களை பாதுகாக்கவும் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளை விரிவான அளவில் அணிதிரட்ட வேண்டும்.
  3. ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டத்தை கட்சி தொடர்ந்து கையில் எடுக்க வேண்டும். அதிகரித்துக் கொண்டே போகும் அமெரிக்காவுடனான கேந்திரமான உறவுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நிர்ப்பந்தங் களுக்கு ஆளும் வர்க்கங்கள் அடிபணிந்து போவதற்கு எதிராகவும் மக்களை பரவலாக அணிதிரட்டுவதும் இதில் அடங்கும். உலகளாவிய வகையில் நடைபெற்று வரும் அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.
  4. சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினர், தலித்துகள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகளை கட்சி மேலும் அதிகரிக்க வேண்டும். பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கட்சி நேரடியாகத் தலையிட வேண்டும். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல் களுக்கு எதிராகப் போராட வேண்டும்.
  5. ஜனநாயக உரிமைகள், படைப்புச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரிவான முறையில் மக்களை அணிதிரட்ட வேண்டும். வலதுசாரி மாற்றம் ஏற்படுத்தியுள்ள எதேச்சாதிகார அபாயத்திற்கு எதிராகப் போராடுவதோடு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது விதிக்கப்படும் தடைகளை எதிர்த்தும் போராட வேண்டும்.
  6. மேற்கு வங்கத்தில் நமது கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் அகில இந்திய அளவிலான ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் மூலம் ஆதரிக்கப்பட வேண்டும். திரிபுரா இடது முன்னணி அரசை பிற்போக்குவாத சக்திகளின் தாக்குதல்கள், மத்திய அரசின் விரோதப் போக்கு ஆகிய தாக்குதல்களிலிருந்து இடதுசாரி ஜனநாயக சக்திகள் பாதுகாக்க வேண்டும்.
  7. தனது சுயேச்சையான பங்கை விரிவுபடுத்துவதிலும், அதன் வலிமையையும் வெகுஜன அடித்தளத்தை மேம்படுத்துவதிலும் கட்சி தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். வர்க்க, வெகுஜன பிரச்சனைகளின் மீது ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் கட்சி மேலும் அதிகமான அழுத்தம் தர வேண்டும். முதலாளித்துவ கட்சிகளை பின்பற்றி வரும் மக்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் வகையில் ஒன்றுபட்ட போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்துவதில் வர்க்க, வெகுஜன அமைப்புகள் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
  8. இடதுசாரி ஒற்றுமையை வளர்ப்பது, விரிவுபடுத்துவது; பல்வேறு வர்க்கத்தினரையும் உழைக்கும் மக்களையும் இடது ஜனநாயக திட்டத்தின்பால் அணிதிரட்டுவது; இதன்மூலம் இடது ஜனநாயக அணியை உருவாக்குவதில் மேலும் முன்னேற்றம் காண முடியும்.

வலுவான கட்சியை கட்டுக

2.92 நாடு இன்று சந்தித்து வரும் சிக்கலானதொரு சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதும் வலுப்படுத்துவதும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. அத்தகையதொரு வலுவான கட்சியை கட்டுவதை நோக்கி நடைபோடுவோம்:

*   உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினருக்கான போராட்டங் களையும் செயல்படுத்தும் வகையில் துடிப்பானதும், போர்க் குணமிக்கதுமான கட்சியை உருவாக்குவோம்.

*   கட்சியின் மார்க்சிய-லெனினிய தத்துவார்த்த அடித்தளத்தை வலுப்படுத்துவோம்.

*   தீர்மானிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றும் வகையில் கட்சி ஸ்தாபனத்தை புனரமைத்து வலுப்படுத்துவோம்.

ஜனநாயகம்மதச்சார்பின்மைசமூக நீதிசோஷலிஸம் ஆகிய குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வோம்!

நவீன தாராளமய முதலாளித்துவமும்பெரும்பான்மை வகுப்புவாத வெறியும் ஏற்படுத்தியுள்ள அழிவுகளிலிருந்து இடது ஜனநாயக மாற்றுக் கொள்கை மட்டுமே நாட்டைக் காப்பாற்றும்!

வலுவானதொரு இடது ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறுவோம்!

இந்தச் செய்தியை பரவலான மக்களிடம் கொண்டு செல்லுமாறு கட்சி அணிகள் முழுவதற்கும் 21வது காங்கிரஸ் அறைகூவல் விடுக்கிறது.

Leave a Reply