கோயில் நில மோசடி பேர்வழி பாஜக ஜான்குமார் பதவி ஏற்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி மாநிலக் குழு

பத்திரிகை செய்தி

பாஜகவை சேர்ந்த நில, வரி மோசடி பேர்வழியை புதிய அமைச்சராகவும் சட்டவிரோத நேரடி நியமன எம்எல்ஏ பதவியேற்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி, ஜூலை 13, 2025:

வணக்கம், புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து, ஊழல் மற்றும் கிரிமினல் பின்னணி கொண்டவர்களுக்கு அமைச்சர் பதவிகளையும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையும் வழங்கி, கேவலமான அரசியல் சாகசங்களை அரங்கேற்றி வரும் பா.ஜ.க – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் அலங்கோலங்களை அம்பலப்படுத்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக் குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

ஆட்சியாளர்களின் இத்தகைய மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மக்கள் நலனைப் புறக்கணித்து, வரிப்பணத்தை வீணடித்து வரும் நிர்வாகச் சீர்கேடு, வரவிருக்கும் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் அரசியல் ஆதாயத்திற்காக அரங்கேற்றப்படும் நாடகங்கள், மதவெறி பிடித்த, கிரிமினல் பின்னணி கொண்டவர்களுக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டது போன்ற மக்கள் விரோதச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

மேலும், ‘கோவில் நில மோசடி’ புகழ் பெற்ற ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதன் மூலம் ஊழலுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

சமூக நீதிக் கோட்பாடுகளை அப்பட்டமாக மறுத்து அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை, அரசியல் மரபுகளையும், ஜனநாயக நெறிமுறைகளையும் தொடர்ச்சியாக மீறி, ‘கட்டப்பஞ்சாயத்து’ பாணியில் செயல்படும் சபாநாயகர் ஆகியோரின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன.

தங்கள் உட்கட்சிப் பூசல்களையும், நெருக்கடிகளையும் புதுச்சேரி மாநிலத்தின் நெருக்கடியாக மாற்றி, மக்கள் நலனைப் பலியிடும் ஆட்சியாளர்களின் போக்குக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பப்படும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் 2025 ஜூலை 14, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு காமராஜ் சிலை அருகில் (ராஜா திரையரங்கு), புதுச்சேரியில் நடைபெறும்.

அனைத்துத் தோழர்களும், ஜனநாயக சக்திகளும் பெருந்திரளாகப் பங்கேற்று, மக்கள் விரோத ஆட்சியாளர்களை அம்பலப்படுத்த முன்வருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
எஸ். ராமச்சந்திரன்
செயலாளர்.
Communist Party of India (Marxist) CPIM
Puducherry State Committee

Leave a Reply