பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காவல்துறையினரை கண்டித்து CPIM போராட்டம்.

பத்திரிக்கை செய்தி
பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காட்டேரிக்குப்பம் காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்.
புதுச்சேரியில் கடந்த மாதம் 25ஆம் தேதி பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை விசாரணைக்காக காட்டேரிக்குப்பம் காவல்துறையினர் அழைத்துச் சென்று அவர்களை கொடூரமாக தாக்கி குற்றவாளிகள் கிடைக்காத, முடிக்கப்படாத வழக்குகளை ஒத்துக்கொள்ள செய்து அவர்களின் உறவினர்கள் என இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேரை கைது செய்து மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து துன்புறுத்தி பல்வேறு பொய் வழக்குகளை அவர்கள் மீது சுமத்தி கொடுமைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து ஆளும் என் ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசின் கவனத்திற்கு புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் இணைந்து கோரிக்கை வைத்தும் போராட்டம் நடத்தியும் ஆளும் புதுச்சேரி அரசும் காவல்துறையும் தனது ஆன்மாவை இழந்து இந்த எளிய மக்களின் தனது அரசு இயந்திரத்தை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது கண்டிக்கதக்கது. புதுச்சேரியில் கட்டுக்குள் இருந்த காவல்துறையின் ஜாதிய கண்ணோட்டத்துடன் கூடிய பாரபட்சமான அணுகுமுறை, பழிவாங்கும் போக்கு தற்போது பாஜக என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியில் மீண்டும் தலை தூக்கி உள்ளது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூகத்தின் அடிமட்டத்தில் கேட்பாரற்று கிடக்கின்ற இப்படிப்பட்ட மக்களை காவல் துறையினர் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் யாரும் இவர்களுக்காக பரிந்து பேச வர மாட்டார்கள் என்கிற காரணத்தால் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்ற செயல்களை அவர்கள் மீது சுமத்துவது, குற்றத்தை ஏற்றுக் கொள்ள சொல்லி இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்வது, கணவன் முன்னால் மனைவியை தாக்குவது, மனைவிக்கு முன்னால் கணவனை தாக்குவது போன்ற கொடுமைகளை காட்டேரிக்குப்பம் காவல்துறையினர் அரங்கேற்றி உள்ளார்கள். ஒரு பெண் எஸ்.ஐ இருக்கும் இந்த காவல்நிலையே ஒரு இருளர் இளம் பெண்ணின் ரவிக்கையை கழற்ற பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம் முதனை கிராமத்தை சேர்ந்த ராஜாகண்ணுவின் உண்மை சம்பவத்தை வைத்து ஜெய்பீம் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. உலக அளவில் பேசப்பட்டது அப்படத்தில் உள்ள காட்சிகளை போலதான், புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல்துறையினர் கொடூரமாக நடந்து கொண்டு உள்ளனர். அந்த வழக்கில் எப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி நீதியை பெற்று தந்ததோ அதே போல் பாதிக்கப்பட்ட இந்த அப்பாவி இருளர் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர் போராட்டம் மற்ற அமைப்புகளுடன் இணைந்து நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே மனிதாபிமானமற்ற, கொடூரமான முறையில் செயல்பட்ட காட்டேரிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது புதுச்சேரி அரசு உடனடியாக எஸ் சி -எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பொய் வழக்கு போட்டு சிறையில் உள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஒரு பகுதி காவல்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள சட்டத்திற்கு விரோதமான தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான அணுகுமுறையை கலைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இது தொடர்பாக வருகிற வெள்ளிக்கிழமை 17-ஆம் தேதி மாலை 4:30 மணியளவில் காட்டேரி குப்பம் காவல் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து பல்வேறு அமைப்புகளின் சார்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஆர்.ராஜாங்கம்,செயலாளர்,
சிபிஎம், புதுச்சேரி
15.03.2023

Leave a Reply