புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேசன் கடைகளையும் திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். முறை சாரா தொழிலாளர்கள், நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் உட்பட தகுதியுள்ள அனைவருக்கும் சிகப்பு நிற குடும்ப அட்டை வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட இலவச அரிசிக்கு சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.9 ஆயிரம், மஞ்சள் அட்டை உள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி தலைமைச் செயலகம் முன்பு ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமையன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை வகித்தார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு இந்த போராட்டத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆதரித்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மத்தியக் குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன், மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப் பினர்கள் வெ.பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், பிரபுராஜ்,கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி, சத்தியா, இடைக்குழு செயலாளர்கள் மதிவாணன், அன்புமணி, ராம்ஜி, சரவணன், ராமமூர்த்தி மாநிலக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சங்கர், இளவரசி, ரமேஷ், மாரிமுத்து உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். தடுப்பு வேலி அமைத்த காவல்துறை முன்னதாக பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலம் நேருவீதி வழியாக வந்தது. அப்போது மிஷன் வீதி சந்திப்பில் தடுப்பு வேலிகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அதே இடத்தில் சாலையில் அமர்ந்து போராட்ட த்தை தொடர்ந்தனர். பின்னர் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தலைமை செயலாளரை சந்திக்க அனுமதித்தனர்.
வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய நிதியமைச்சர், ஆளுநர்
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசுகையில்,“ பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு சாதாரண ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தி வரும் அரிசி, கோதுமை, பருப்பு, பால் என அனைத்துக்கும் வரி போட்டுள்ளது. நம் கழுத்தில் ஒரு இயந்திரத்தை தொங்கவிட்டு நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றுக்கும் கூட வரி போடுவார்கள் என்று சாடினார். மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மூடப்பட்ட ரேசன் கடைகளை திறப்போம் என ரங்கசாமி வாக்குறுதி கொடுத்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து பல மாதங்களை கடந்தும் ரேசன் கடைகளை திறக்கவில்லை. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது புதுச்சேரிக்கு வருகை தந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரேசன் கடைகளை திறப்போம் எனவும் துணை நிலை ஆளுநர் தமிழிசையோ, ரேசன் கடைகளை சூப்பர்மார்க்கெட்டாக மாற்றுவோம் என்றும் கூறினர். ஆனால் 15 மாதங்களை கடந்தும் அரிசியும், அரிசிக்கு பதில் வழங்க வேண்டிய பணமும் தராமல் வாய்ச்சொல் வீரர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள் என்று பேசினார்.
தலைமைச் செயலாளர் உறுதி
பின்னர் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை, மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமையில் கட்சி தலை வர்கள் சந்தித்து ரேசன் கடைகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, பணம் வழங்கும் திட்டம் அரசின் கொள்கை முடிவாக உள்ளது என்றும் உங்கள் கோரிக்கையின்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்களின் கருத்துக்களை கேட்டு ரேசன்கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதுவரைக்கும் போராட்டத்தை நிறுத்தி வைக்குமாறும் தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை பரிசீலித்த கட்சித் தலைவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்துள்ளதாக அறிவித்தனர்.