புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் இன்று காலை கட்சியின் மொத்த தலைவர் தா முருகன் வெளியிட மாநில செயற்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் அவர்கள் அறிக்கையை பெற்றுக் கொண்டார்.‌

வணக்கம் வரும் 09.04.2026 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், பாசிச பாஜக, சந்தர்ப்பவாத என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கார்ப்பரேட் நலக் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மக்களைக் கேட்டுக்கொள்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டமன்றத்தில் இடம்பெறவும், மதச்சார்பற்ற இடதுசாரி ஜனநாயக சக்திகள் வெற்றி பெறவும் மக்கள் ஆதரவை நல்குமாறு கோருகிறோம்.

முன்னுரை

12 ஆண்டு கால மோடி ஆட்சியில் அனைத்துப் பகுதி மக்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை வளர்ந்துவருகிறது. குறைந்தபட்ச வங்கி இருப்பு, ஏடிஎம், SMS கட்டணம் என்ற பெயரிலும் பல நூறு கோடி ஏழை, எளிய மக்களின் பணம் பறிக்கப்படுகிறது. மறுபுறத்தில் நாட்டின் செல்வங்கள், வளங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுக்கிறது மோடி அரசு.

தொழிலாளர் சுரண்டல்: எளிதில் தொழில் செய்வது என்ற பெயரில் சட்டப்பூர்வமாக தொழிலாளர்கள் உழைப்பை சுரண்ட 4 சட்டத்தொகுப்புகள் 2026 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
100 நாள் வேலைத்திட்டம்: கிராமப்புற வளங்களை உருவாக்கிய, புலம் பெயர்தலை கட்டுப்படுத்திய, வருவாய் ஆதாரமாக விளங்கிய 100 நாள் வேலைத்திட்டம் புதிய சட்டத்திருத்தம் மூலம் சீர்குலைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பு: புதிய மின்சார சட்டம், புதிய விதைகள் சட்டம், அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றால் நுகர்வோர்கள், விவசாயிகள், சிறுகுறுதொழில் உடைமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்துப் பகுதியினரும் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் சுயசார்பு பொருளாதாரம் கேள்விக்குறியாகும்.

சர்வதேச சூழல் மற்றும் வெளியுறவுக் கொள்கை

ஈரான் மீதான போர்வெறி அமெரிக்க, இனவெறி இஸ்ரேலின் போரினால் பள்ளிக்குழந்தைகள் உட்பட பெரும் மனிதபடுகொலையும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கு ஆசியாவில் நிலவும் போர்ச்சூழல் எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்க இஸ்ரேலின் போர்வெறி செயலை மோடி அரசு கண்டிக்கவில்லை. இந்தியாவின் பாரம்பரிய சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை கைவிடப்பட்டுள்ளது.

மோடி ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் பரிசோதனை கூடமாக மாற்றப்பட்டது.
ரேசன் மற்றும் கல்வி: 2015 செப்டம்பரில் ரேசன் கடைகள் மூடப்பட்டன. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம், தாய்மொழிவழிக் கல்வி முழுமையாக தூக்கிஎறியப்பட்டது. இந்தி, சமஸ்கிருதம் மொழிகள் திணிக்கப்பட்டன.

தனியார்மயம்: மின்சாரம் அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கும் முயற்சி தொடர்வதோடு ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் என்ற பெயரில் நவீன கொள்ளை நடைபெறுகிறது. தற்போது மீண்டும் புதிய வடிவில் ரேசன் பொருட்களுக்குப் பதிலாக ”டிஜிட்டல் காயின்” திட்டம் புதுச்சேரியில் முன்மாதிரியாக அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் பறிப்பு: மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிறப்பு, இறப்பு பதிவுகள் ஒன்றிய அரசின் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமாகவே புதுச்சேரி தொடர்கிறது.

மோடி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள் புதுச்சேரியில் தடையின்றி அமலாக்கப்படுகிறது. அரசியல் சகிப்பு இன்மையும், வகுப்புவாத நடவடிக்கைகளும் தலைதூக்குகின்றன.
ஜனநாயக அரசியலை விழுங்கும் ஆக்டோபஸ்: ஒரு எச்சரிக்கை!
2014-ல் ஒன்றிய ஆட்சியைப் பிடித்த பாஜக, ஏழே ஆண்டுகளில் (2021) புதுச்சேரியிலும் கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற பாஜக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தி, என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்தாலும், நிஜத்தில் பாஜகவே மாநிலத்தை ஆளுகிறது.
2011-2016 என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்க ஒன்றிய காங்கிரஸ் அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தபின், ஒரு நியமனப் பதவியை பாஜகவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டு, 2 இடங்களை என்.ஆர். காங்கிரஸ் பெற்றது. அடுத்ததாக வந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் (2016-21), மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களையும் பாஜக தன்னிச்சையாக நியமித்துக் கொண்டது. 2021 தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் மற்றும் திமுக அமைச்சர்களை பாஜக தன்வசப்படுத்தி, ஆட்சியைக் கவிழ்த்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலைச் சந்தித்த பாஜக, என்.ஆர். காங்கிரசை நிர்ப்பந்தித்துக் கூட்டணி அமைத்தது. ஆட்சி அமைப்பதற்கு முன்பே 3 நியமன உறுப்பினர்களைத் தன்னிச்சையாக நியமித்தது. வெற்றி பெற்ற 6 பாஜக உறுப்பினர்கள், 3 சுயேச்சைகள் மற்றும் 3 நியமன உறுப்பினர்கள் என 12 பேரின் ஆதரவைக் காட்டி முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவிக்கு பாஜக பேரம் பேசியது.
2026-ல் முழுமையான பாஜக ஆட்சியை அமைக்க இப்போதே தனது அரசியல் ஆடு-புலி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. மாநில அந்தஸ்து வாக்குறுதி லாட்டரி அதிபர் கட்சியுடன் கூட்டணிக்கு தடை போன்ற நிபந்தனைகள் கைவிடப்பட்டு, இன்று ‘நான்காம் தர வணிக அரசியல்’ முன்னுக்கு வந்துள்ளது. சமூக நீதி மற்றும் அனைவரயும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய இடதுசாரிகளின் ஒற்றுமை இன்று காலத்தின் கட்டாயமாகும்.

போலி ‘இரட்டை எஞ்சின்’ அரசின் தோல்வி !
என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியில், ஆரம்பம் முதலே அமைச்சரவைக்குள்ளும், ஆளுநர் – முதல்வர் இடையிலும் அதிகார உரசல்கள் தொடர்ந்தன. ஒருவரை ஒருவர் சமரசம் செய்துகொண்டு காலத்தைக் கடத்தும் அரசாகவே இது அமைந்தது. இறுதியாக, 6 அந்நிய மதுபானத் தொழிற்சாலைகளுக்கு ஆளுநரால் உரிமம் வழங்கப்பட்டிருப்பது திரைமறைவு பேரங்களை அம்பலப்படுத்துகிறது.
நிறைவேறாத வாக்குறுதிகள் – ஏமாற்றப்பட்ட மக்கள்: ஐந்தாண்டு ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளும், சட்டமன்ற அறிவிப்புகளும் காகித அளவிலேயே உள்ளன. குறிப்பாக:
மாநில அந்தஸ்து மற்றும் மின்துறைப் பாதுகாப்பு.
10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்தல்.
வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18,000 ஊதிய உயர்வு.
காலியாக உள்ள 10,501 அரசுப் பணியிடங்களை நிரப்புவது.
கூட்டுறவுச் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது.
குப்பை வரி ரத்து மற்றும் ரேஷனில் மானிய விலை மளிகைப் பொருட்கள்.
பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம்.
பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்பு தொகை, சென்டாக் கல்வி உதவி நிதி திட்டங்கள் தடுமாற்றத்தில் உள்ளன.
இவை அனைத்தும் அறிவிப்புகளாகவே உள்ளன. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்புத் துணைத்திட்ட நிதியை மடைமாற்றி, ‘பெஞ்சால்’ புயல் நிவாரணம் போன்ற பொதுச் செலவுகளுக்குப் பயன்படுத்துவது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.


விவசாயிகள் – தொழிலாளர்கள் துயரம்
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தபின், புதுச்சேரியில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வியாபாரிகளின் சிண்டிகேட் காரணமாக விளைபொருட்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்படுகின்றன.

கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டம் வெறும் 20 நாட்களாகக் குறைந்துவிட்டது. புதிய சட்டத் திருத்தம் மூலம் 125 நாள் வேலை என்று சொல்லிக்கொண்டே திட்டத்தையே சீரழித்துவிட்டனர். 2026 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், உழைப்புச் சுரண்டலையும் பணிப்பாதுகாப்பற்ற சூழலையும் சட்டப்பூர்வமாக்கப் போகின்றன. ‘கிக்’ (Gig) தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்புத் திட்டமும் இந்த ஆட்சியில் இல்லை.
பெருகும் வேலையின்மை: முடங்கிய தொழில்துறையும், பெருகும் மது வணிகமும்
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் சுதேசி, ரோடியர், பாரதி உள்ளிட்ட பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (IT Parks) மற்றும் புதிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை. மாறாக, இக்காலகட்டத்தில் மட்டும் 84 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சேதராப்பட்டு, கரசூர், காரைக்கால், போலகம் ஆகிய பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்காகக் கையகப்படுத்தப்பட்ட சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கிடக்கின்றன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை வழங்கும் ‘பாப்ஸ்கோ’ (PAPSCO) நிறுவனம் இந்த ஆட்சியில்தான் மூடுவிழா கண்டது. வளர்ந்து வரும் வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசியல் துணிவு இல்லாத மாநில அரசு, மக்கள் தொகைக்கு ஏற்ப மது வணிகத்தை விரிவுபடுத்துவதை வெட்கமின்றி நியாயப்படுத்துகிறது.
உச்சம் தொட்ட ஊழல்கள்:
கோவில் மற்றும் தனிநபர் சொத்துக்களை அபகரித்தல், தரமற்ற மருந்து கொள்முதல், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் லஞ்ச ஊழல், மதுபானத் தொழிற்சாலை மற்றும் ரெஸ்டோ-பார் உரிமம் வழங்குவதில் நடந்த முறைகேடுகள் எனப் பல துறைகளில் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை ஊழல், புதுச்சேரி வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய ஊழலாகும். இது உயர் மட்ட அதிகார வர்க்கத்தின் துணையின்றி சாத்தியமில்லை. கைது செய்யப்பட்ட 26 பேர் பிணையில் வெளிவந்துள்ள நிலையில், மருந்து கட்டுப்பாட்டுத் துறை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் திடீரெனத் திரும்பப் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ (CBI) இந்த வழக்கை மிகவும் தாமதமாகவே பதிவு செய்துள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். இதில் தொடர்புடைய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கடனில் சிக்கிய புதுச்சேரி: தோல்வியடைந்த ‘இரட்டை எஞ்சின்’ அரசு
ஒரே கூட்டணி ஆட்சி அமைந்தால் தாராளமாக நிதி கிடைக்கும், மாநிலம் வளர்ச்சி பெறும் என்ற “இரட்டை எஞ்சின்” கருத்தாக்கம் புதுச்சேரியில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு தனது முதல் பட்ஜெட்டிற்கு ரூ.11,000 கோடி நிதி கோரியது. ஆனால், ஒன்றிய அரசு அதற்கு அனுமதியளிக்காமல், வெறும் ரூ.9,924.41 கோடிகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது. மேலும், ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டில்தான் (2023-24) முழுமையான பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டது.
ஒன்றிய அரசின் பாராமுகம்: 2024 செப்டம்பர் 23 அன்று ஒன்றிய உள்துறைச் செயலாளர் திரு. கோவிந்த் மோகன் புதுச்சேரிக்கு வந்தபோது, முதல்வர் திரு. என். ரங்கசாமி அவர்கள் கூடுதல் நிதி கோரி மனு அளித்தார். ஆனால், கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது 2024-25-ல் வெறும் 4.85% மட்டுமே கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10% கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. 16-வது நிதிக்குழுவிலும் புதுச்சேரிக்கு இடம் வழங்கப்படவில்லை. கூடுதல் நிதி, சிறப்பு நிதி என முதல்வர் கேட்ட எதற்கும் ஒன்றிய பாஜக அரசு செவிசாய்க்கவில்லை.
BEST புதுச்சேரி: வெற்று முழக்கமும் ஏமாற்றப்பட்ட மக்களும்
2021 பிப்ரவரி 25 அன்று புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி, ‘BEST’ புதுச்சேரி என்ற முழக்கத்தை முன்வைத்தார். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டிலிருந்து மக்கள் விடுதலை பெற்றுவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். ஆனால், யதார்த்தம் என்ன?
பாரம்பரியப் பஞ்சாலைகள் இன்னும் மூடப்பட்டே கிடக்கின்றன.
உள்ளூர் தொழில்கள் நலிவடைந்துவிட்டன.
புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
தேர்தல் நெருங்கும் வேளையில் 01.03.2026 சமிபத்தில் புதுச்சேரி வந்த பிரதமர் அன்று சொன்ன ‘BEST’ புதுச்சேரி திட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் எவை என்று பட்டியலிட முடியவில்லை. பிரதமரின் பேச்சு புதுச்சேரி மக்களை ஏமாற்றும் வெற்று முழக்கமாகவே முடிந்தது.
புதுச்சேரி மாநிலத்தின்  பாரம்பரியம், பண்பாடு, மொழி மற்றும் ஜனநாய உணர்வுகளை மீட்பதும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்துவதும் உடனடி கடைமையாகும். அதற்கு CPIM, CPI கட்சி வேட்பாளர்கள் பெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு அனுப்பிவைப்பது அவசியமாகும்.
வாக்காளர்களுக்கு வேண்டுகோள்:
லாஸ்பேட்டை & திருபுவனை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம்.
உழவர்கரை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – கதிர் அரிவாள் சின்னம்.
மாஹே: இடது முன்னணி வேட்பாளர் – தொலைக்காட்சி சின்னம்.
இதர தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை வெற்றி பெறச் செய்யுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

பகுதி – II

மாற்று பொருளாதார திட்டம்

கீழ்க்கண்ட மாற்று பொருளாதார கொள்கைகளை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:

முதன்மை ஆதாரத் துறையான விவசாயம், கால்நடை, பால் உற்பத்தி, மீன்பிடி மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு முன்னுரிமை அளிப்பது.
விவசாயம் சார்ந்த  பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான பருத்தி, கரும்பு உற்பத்தி மற்றும் உணவுப் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான நெல் மற்றும் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பது.
வேலை பாதுகாப்புடன் கூடிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது.
புதுச்சேரி – மாமல்லபுரம் – சென்னை மற்றும் திண்டிவனம் – புதுச்சேரி – கடலூர் இரயில் பாதைத்திட்டம் அமைப்பது.
விமான போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவது.
மின்சாரம், கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகிய சமூக ரீதியான கட்டமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது.
மது வணிகத்தை கட்டுப்படுத்துவது, புதிய மதுபான தொழிற்சாலைகள் மற்றும் ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்ட ரெஸ்ட்டோபார் (Bar), பப்புக்களுக்கான உரிமத்தை ரத்து செய்வது.
அரசு வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்பாடு, வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்துவது.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைக் கண்காணிப்பது விசாரணை நடவடிக்கைக்கு கட்படுத்துவது.
அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் முடிப்பது. காலந்தாழ்த்துவதால் ஏற்படும் நிதி மற்றும் கால விரயத்தைத் தவிர்ப்பது.

சொந்த நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல்

மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, உள்ளாட்சித் துறையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வசூலித்திட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவது. முதலீடு வருவாயை உருவாக்குவது.
அந்நிய மதுபான உற்பத்தியை அரசுப் பொறுப்பில் நேரடியாக மொத்த கொள்முதல் (FL1) செய்து, சில்லரை வணிகத்திற்கு (FL2) வழங்குவதன் மூலம் வருவாய் பெருக்குவது.
அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கி, பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையும், சேவை வரி மற்றும் தனியார் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டத் திட்டமிடுவது.
மாநிலத்தின் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் பொருத்தமான சுற்றுலா வளர்ச்சி கொள்கையை உருவாக்குவது.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் (PPP) கூடிய சில திட்டங்களில், வெளிப்படைத்தன்மை மற்றும் மாநில நலனை உள்ளடக்கியதாக திட்டத்தை மாற்றி வடிவமைப்பது.
ஊழல், முறைகேடு தொடர்பாகக் கண்டறியப்படும் அனைத்து துறைகள் மற்றும் திட்டம் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகள் பொறுப்பாக்கப்படுவதையும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதையும் வலியுறுத்தப்படும்.

முழு மாநில அந்தஸ்து

மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு சுதந்திரமாக திட்டமிடுகிற அதிகாரம் கொண்ட மாநில அந்தஸ்து உரிமைக்காக கட்சி பாடுபடும்.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட ஒன்றிய அரசை வெகு மக்கள் போராட்டத்தின் வழியாக நிர்பந்திப்பது.
12-வது நிதிக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசின் கடன் வழங்கும் முறை கைவிடப்பட்டு, பொதுக்கணக்கு துவங்கி வெளிச்சந்தையில் கடன் பெறும் முறை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மீது திணிக்கப்பட்டன. 17.12.2007-ல் புதுச்சேரி பொதுக்கணக்கு தொடங்கிய போது நிலுவையில் இருந்த மாநிலக் கடன் ரூ. 2177 கோடியை ரத்து செய்திட வலியுறுத்துவது.
மாநிலத்தின் சமூக பொருளாதார மற்றும் பூகோள தன்மைக்கு ஏற்ப பொருத்தமான பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடுவது.
அரசு காலிப் பணியிடங்களுக்கு பணி நியமன வாரியம் (Recruitment Board) அமைத்து மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வது.
மின்சாரத் துறையை அரசுப் பொறுப்பில் தொடர்ந்து இயக்குவது. மின் விநியோகத் திறன் மற்றும் மின் இழப்பை மேம்படுத்திட உள்கட்டமைப்புகளை உருவாக்குவது.
மாநில மக்களாட்சி மற்றும் அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர்களின் தலையீடுகளைத் தவிர்ப்பது.
மத்திய, மாநில உறவுகளை, அதிகாரங்களை சீரமைத்திட உறுதியான தலையீடு செய்வது.

பொது விநியோகத் திட்டம்

அனைவருக்கும் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவது அரசின் கடமையாக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தும்.
புதுச்சேரியில் ஒன்றிய அரசு செயல்படுத்தியுள்ள டிஜிட்டல் காயின் கைவிட வலியுறுத்துவது.
இலவச அரிசி மற்றும் கோதுமையுடன், பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, சிறுதானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுப்பது.
பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான அரிசி, கேழ்வரகு, உளுந்து உள்ளிட்ட தானியங்களை மாநில விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது. விவசாயிகளை ஊக்குவித்திட கொள்முதல் மானியம் வழங்குவது.
ஆதரவற்றவர்கள், குடும்பத்தினால் கைவிடப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட ஏழை எளியோருக்கும் மற்றும் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் ரேசன் அட்டை வழங்கிட நடவடிக்கை எடுப்பது.
அரசுப்பள்ளிகளில் மதிய உணவு முறையை அரசுப் பொறுப்பில் தொடர்ந்து வழங்கிடச் செய்வது.
அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவது ஆகியவை வலியுறுத்தப்படும்.

அனைவருக்கும் வீடு/இலவச மனை/வாடகை மானியம்.

வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு ‘வீடு’ என்ற நிலையை நிறைவேற்ற, மார்க்சிஸ்ட் கட்சி கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தும்:
குடிமனைக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் வருவாய் துறை மூலம் கையகப்படுத்திய நிலங்களை தகுதியான மக்களுக்கு வீட்டுமனை வழங்கிடவும், 80:20 என்ற விகிதத்தில் மனைகள் ஒதுக்கவும் வலியுறுத்தப்படும்.
இலவச மனைப் பட்டா வழங்கும் அளவை 800 சதுர அடியாக நிர்ணயம் செய்வது.
பயனாளிகள் தேர்வை வெளிப்படைத்தன்மையுடன் அமைத்திட, உள்ளாட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தேர்வுக் குழு அமைத்திட வேண்டும்.
வீடில்லாத மக்கள் குறித்து முறையான ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்துவது.
சொந்த வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்கும் வரையிலான இடைக்காலத்தில், மாத வாடகை மானியம் ₹ 4,000 வரை வழங்கிட வலியுறுத்தப்படும்.

தொழில் வளர்ச்சி – வேலைவாய்ப்பு

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்களின் மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்திட மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
சுதேசி, ரோடியார், பாரதி பஞ்சு ஆலைகளின் இடங்களில் ஒருங்கிணைந்த தொழில் பூங்காக்கள் அமைத்திட ஒன்றிய அரசை வலியுறுத்தப்படும்.
கூட்டுறவு நூற்பாலைகள், சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்தி மீண்டும் இயங்கச் செய்வது.
தகவல் தொழில்நுட்ப (IT) பூங்கா திட்டத்தைச் செயல்படுத்திட நடவடிக்கை எடுப்பது.
சேதராப்பட்டு, கரசூர், காரைக்கால் பகுதிகளில் புதிய தொழில்கள் துவங்கிட மாநிலக் கொள்கையை உருவாக்குவது.
தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்திட பாடுபடுவது.
அரசு காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பப்படவும், அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்களைக் கொண்டு நிரப்பவும் வலியுறுத்தப்படும்.
கடல் சார்ந்த சுற்றுலாத் திட்டங்களில் மீனவர் சமூக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது.
கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA)  சீர்குலத்திடும் ஒன்றிய அரசின் புதிய சட்டத்தினை ரத்து செய்து ஒன்றிய அரசின் முழு பங்களிப்புடன் 100 நாள் வேலை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிக் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வழங்கிட.‌
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மாநிலத்தில் கிடைக்கப் பெறும் கச்சா பொருட்களை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்துவது, ஆர்வமுள்ள இளைஞர்கள் பெண்கள் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வலியுறுத்துவது.
படித்து முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 10000 வழங்க வலியுறுத்துவது. 

அனைவருக்கும் மருத்துவம்

அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை, நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு கீழ்க்கண்ட அம்சங்கள் செயல்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் போராடும்:

அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவையை அடிப்படை உரிமையாக சட்ட ரீதியாக அங்கிரித்தல்.
அரசு சுகாதார மையங்கள், ஜிப்மர் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் பயனர் கட்டணத்தை ரத்து செய்யவும், அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வழங்கிடவும் வலியுறுத்தப்படும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் தொற்று நோய்களைக் கண்டறிய ஆண்டுதோறும் இலவச முழுமையான பரிசோதனை செய்திட.
அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு/தனியார் மருத்துவமனைகளில் முதியோர் மருத்துவ சேவைக்காக தனிப்பிரிவு அமைத்திட.
24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, அவசர சேவை மற்றும் விபத்து சிகிச்சைகளை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வலுப்படுத்திட.
வெளிப்படைத்தன்மையுடன் தரமான மருந்து கொள்முதல் மற்றும் நவீன கருவிகள் வழங்குவதை உறுதிப்படுத்திட.
சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்பவும், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் NRHM, ஆஷா ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யவும் மற்றும் ஊதிய முரண்பாடுகளைக் களைந்திடவும் உறுதியான தலையீடு செய்திட வலியுறுத்தப்படும்.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் கட்டணங்களை முறைப்படுத்திடவும், சுகாதார நடைமுறைகளைக் கண்காணிக்கவும் உரிய சட்டம் இயற்றப்படும்.
மருந்து உற்பத்தி கம்பெனிகள், மருந்துக் கடைகளில்  கால முறை இடைவெளியில் ஆய்வு செய்வதை உறுதி செய்தல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு – சுத்தமான குடிநீர் வழங்கல்

மக்கள் பங்கேற்புடன் நீர் மேலாண்மை மற்றும் நீர் வழங்கல் மேலாண்மைக் கொள்கையை வலியுறுத்தப்படும்.
மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஆறுகள், உப்பங்கழிகள் மற்றும் நீராதாரங்களைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும் கட்சி போராடும்.
சுத்தமான குடிநீர் வழங்கலை அரசுப் பொறுப்பில் ஏற்று, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கச் செய்திட.
குடிநீர், மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்புகள் தனித்தனியாக அமைப்பதையும் தரமானதாக இருப்பதையும் உறுதி செய்திட.
பழமையான குடிநீர் வழங்கல்  குழாய்களை மாற்றி, புதிய நீண்டகாலப் பயன்பாடு கொண்ட  குழாய்களை அமைத்திட.
புதுச்சேரி கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தில் (CZMP) மீனவர் சங்கங்களின் பங்களிப்புடன், அறிவியல் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்திட.
மீனவ சமுதாய மக்களின் கடல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்திட.
திடக்கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதிப்படுத்திட மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் போராடும்.

அனைவருக்கும் தரமான கல்வி – தமிழுக்கு முதலிடம்

அனைவருக்கும் தரமான கல்வி, தாய்மொழி வழிக் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கீழ்க்கண்ட இலக்குகளை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது:
புதுச்சேரி மாநிலத்திற்கெனத் தனியாக பள்ளிக் கல்வி வாரியம் அமைத்திட.
அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் தாய்மொழி வழிக் கல்வி அளிப்பதை உறுதிப்படுத்திட.
ஆட்சி மொழி, பயிற்று மொழி மற்றும் நீதிமன்ற மொழியாக தமிழை முழுமையாகச் செயல்படுத்தவும், இரு மொழிக் கொள்கை  தொடரவும் வலியுறுத்தப்படும்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் பாதகமான அம்சங்களை நீக்கி, மாநில மாணவர்களின் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் பயன்படுத்திட.
மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்படும்.
ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பிடவும் நீண்ட காலம் ஒப்பந்த ஆசிரியர்களாக உள்ளவர்களை பணிவந்திரம் செய்யவும்.
பி எம் ஸ்ரீ பள்ளிகளுக்கு வழங்கும் நிதியைப் போல பாரபட்சமின்றி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கூடுதல்/சிறப்பு நிதி உதவியாக வழங்கிட.
கல்வித் துறைக்கு மாநில பட்ஜெட்டில் 6% நிதி ஒதுக்கிட.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் வேலை நேரம், ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்திட.
உயர்கல்வித் துறையில் தகுதி உயர்த்தப்பட்டு கற்பித்தல் மற்றும் கட்டமைப்பில் சீர்கெட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பெண்கள் பொறியியல் கல்லூரியின் தரம் உயர்த்திட
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு (கல்வி வாய்ப்பு) கிடைத்திட.
NEET தேர்வை ரத்து செய்திட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்டாக் மாணவர்களுக்குத் காமராஜர் கல்வி உதவித்தொகை தடையின்றி கிடைத்திட
உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு காலத்துடன் ஊதியம் வழங்கிட, மணிகூலி, தற்காலிக பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்திட.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீடாகக் கிடைத்திட
தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தப்படும்.

அதிகாரப் பரவலாக்கல்


அதிகாரங்களைப் பரவலாக்கவும், மக்கள் பங்கேற்புடன் கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சிக்கு உதவும் வகையில் கீழ்க்கண்ட அம்சங்கள் வலியுறுத்தப்படும்:
புதுச்சேரி மாநிலத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்திட
15 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பாக்கப்பட வலியுறுத்தப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 73, 74-வது திருத்தத்தின்படி வழங்கப்பட்டுள்ள கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 29 அதிகாரங்களும், நகராட்சிக்கு 18 அதிகாரங்களும் வழங்கிட உறுதி செய்யப்படும்.

தொழிலாளர் நலன்

அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை (Labor Codes) ரத்து செய்திட அதிகாரப்பூர்வமாகப் போராடும்.
அமைப்பாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவும், ஓய்வூதியம், மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகை, திருமண உதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தவும் வலியுறுத்தப்படும்.
அனைத்துத்  தொழிலாளர்களுக்கும் பஞ்சப்பபடியுடன் கூடிய குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்யவும், அமலாக்கவும் வலியுறுத்தப்படும்.
தொழிலாளர் துறை ஆணையர் நியமனம் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பவும் பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னுக்கு வரும் தொழில் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளில் கொள்கை முடிவு எடுத்திட ஆலோசனை வழங்கிட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளடக்கிய மாநில ஆலோசனை குழு அமைத்திட
தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு எதிராக சேலியமேடு மற்றும் மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியை (Toll Plaza) அகற்றிட மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் போராடும்.

பெண்களின் முன்னேற்றம்

பொருளாதாரம் மற்றும் அரசியல் தளத்தில் பெண்கள் முன்னேற்றம் அடைய மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும்:
அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய அனைத்து நிர்வாக அமைப்புகளிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்திட.
கல்வி மற்றும் சமூகத்தில் அறிவியல் பூர்வமான மற்றும் சமத்துவக் கருத்துகளை வலுப்படுத்துவது.
போதை மற்றும் மதுப்பழக்கத்தை நீக்குவதன் வழியாக பெண்கள் மீதான வன்முறை மற்றும் கணவனை இழக்கும் இளம்பெண்களின் துயரங்களை தடுப்பது.
POSH சட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காண தனி நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தப்படும்.
ஸ்டார்ட் அப் (Start-up), MSME ஆகிய தொழில்களில் பெண்கள் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கிட.
பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்குக் கைவினை மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில் பயிற்சியும், வங்கிக் கடன் உதவியும் பெற்றிட வழிவகை செய்வது.
நுண் நிதி நிறுவனங்களின் அநியாய வட்டி மற்றும் மோசமான வசூல் முறையில் கடனை வசூலிப்பது ஆகியவற்றை உறுதியாக தடுத்திட நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவர
கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், ஆளுநர் மாளிகை மற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களிலும் பாலியல் புகார் குழுக்களை (ICC) அமைத்திட.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடும், சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும்.

சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் – திருநர்கள் – முதியோர்கள் சமூகப் பாதுகாப்பு

மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், முதியோர்கள் ஆகிய நமது உறவுகளின் பாதுகாப்பிற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.
திருநர்களுக்கு எதிரான திருநர் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2026-ஐ திரும்பப் பெற்றிட வலியுறுத்துவது.
மக்கள் தொகைக்கு ஏற்ப திருநர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 4 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்திட.
சைகை மொழிக் கல்வி, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி (Braille) கல்விப் பயிற்சியை ஊக்கப்படுத்திட.
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநர்களுக்குத் தனித்தனியான தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை உருவாக்கிட.
கைவிடப்பட்ட, ஆதரவற்ற, ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த முதியோர்களுக்கு இல்லம் அமைத்துப் பராமரித்திட.
முதியோர்களுக்கு இல்லம் தேடி மருத்துவ உதவியை உறுதிப்படுத்திட.

சமூக நீதி மற்றும் நல்லிணக்கம்.

தலித் மக்களுக்கான சிறப்புத் துணைத் திட்ட நிதி (SCP) மடைமாற்றத்தைத் தடுத்து, அவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ‘நிதிப் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றுதல்.

புதுச்சேரியில் நிலவும் தீண்டாமை கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைளும் உறுதியாக எடுக்கப்படுவதோடு பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் அனைவருக்கும் சம உரிமையைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்தல்.

அரசுப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சாதி மற்றும் மதவாத ஊடுருவல்களைத் தடுத்தல். மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான சிந்தனைகளையும் (Scientific Temper), சமூக நல்லிணக்கத்தையும் வளர்க்கும் பாடத்திட்டங்களை ஊக்குவித்தல்.

வெறுப்புப் பேச்சாளர்கள் மீது கடும் நடவடிக்கை; தொகுதி வாரியாக ‘அமைதித் தூதுவர்’ குழுக்கள் அமைத்துப் புதுச்சேரியை மதவாதமற்ற அமைதிப் பூங்காவாகக் பாதுகாத்திட!

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தாய்வழி சாதி சான்றிதழ் வழங்கிட.

அனைத்து அட்டவனை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் பாகுபாடின்றி கல்வி உதவித் தொகை வழங்குவதை உறுதிசெய்திட மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.

வெளியீடு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுச்சேரி மாநிலக்குழு

Leave a Reply