என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2021 சட்டமன்ற தேர்தலில்போது, ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்ற இரட்டை எஞ்சின் ஆட்சி வந்தால் புதுச்சேரி மாநிலம் வளம் பெறும். மக்கள் பிரச்சனைகள் தீரும் எனக் கூறி என்.ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆனாலும், இதுவரை சந்திக்காத துன்பங்களை புதுச்சேரி மக்கள் சந்தித்து வருகிறார்கள். லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்துறை தனியார் மயம் என்கிற மிகப்பெரிய அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மின்துறை தனியார்மய விவகாரத்தில் முதல்வரின் நிலைபாடு என்ன என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களை கடந்தும் ரேசன் கடைகளை திறக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ரேசன்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களையும் அரிசிக்கான பணத்தையும் வழங்கவில்லை. புதுச்சேரி அரசுத் துறைகளில் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் 1,060 பணியிடங்களை மட்டுமே நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அனைத்து காலிப் பணியிடங்களையும் அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்தவில்லை. மாறாக, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்த அரசு, மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. துணை நிலை ஆளுநர் தமிழிசை பல இடங்களுக்கு செல்கிறார். அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. மக்களுடைய எந்த பிரச்சனையை ஆளுநர் தீர்த்துள்ளார். சுய விளம்பரத்துக்காக புதுச்சேரி மக்களை ஆளுநர் தமிழிசை ஏமாற்றி வருகிறார். என்ஆர் காங். – பாஜக அரசு செயல்படாத, ஊழல் மலிந்த அரசாக இருக்கிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, இந்த இரட்டை எஞ்சின் ஆட்சி வந்து பிறகு புதுவையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநிலம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. புதுச்சேரிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொய்யான தகவலை பரப்பிவிட்டு சென்றுள்ளார். மோடி அரசு புதுச்சேரியை ஒரு சோதனை எலியாகவே பாவித்து வருகிறது. அரசியல் மாநாடு மாநில உரிமையை மீட்டெடுக்கவும், பறிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை மீண்டும் பெறவும் ஒரு வலுவான மக்கள் போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் மற்றும் ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து முன்னெடுப்பதற்காக வரும் நவம்பர் 13இல் அரசியல் சிறப்பு மாநாடு புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின்போது மூத்த தலைவர்கள் தா.முருகன், சுதாசுந்தரராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.