விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்; செல்போன் உடைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டாக மறியலில் ஈடுபட்டு அந்நிறுவன செல்போன் உடைக்கப்பட்டது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று (டிச. 14) உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலம், மறியல் போராட்டம் நடத்தினர்.

ஈஸ்வரன் கோயில் அருகில் புறப்பட்ட ஊர்வலத்துக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். ஊர்வலம் அண்ணாசாலையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ கடையை அடைந்தது. அங்கு கடையை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பெருமாள், முருகன், மதிவாணன், ராமசாமி, சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சிலையிலிருந்து முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமையில் ஊர்வலம் வந்தது. இவர்களும் அண்ணாசாலை ஜியோ நிறுவனம் முன்பு வந்தனர். அங்கு 2 கட்சிகளும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் நடத்தினர். மறியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, சிந்தனைசெல்வன், அமுதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின்போது ஜியோ செல்போனை தரையில் போட்டு உடைத்தனர்.

Leave a Reply