இயக்கவியலும் இயக்கமறுப்பியலும் (Dialectics and metaphysics)

தர்க்கவியல் என்றும் இயக்கவியல் என்றும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்னும் டைலக்டிக்ஸ் (DIALECTICS) என்னும் ஆங்கிலச் சொல், கிரேக்க மொழியில் உள்ள டையலெகோ (DIALEGO) என்பதிலிருந்து வந்ததாகும். எதிரிகளின் வாதத்தில் காணப்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி, அந்த முரண்பாடுகளை அகற்றுவதன் வாயிலாக உண்மையைக் கண்டறியும் கலைக்கு பண்டைக் காலத்தில் ‘டைலக்டிக்ஸ்’ என்று கூறுவதுண்டு. சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவதும் ஒன்றுக்கு ஒன்று எதிரான கருத்துக்களை மோதவிடுவதும்தான் உண்மையைக் கண்டறிவதற்கான மிகச் சிறந்த முறை என்று பழங்காலத் தத்துவவாதிகள் நம்பினர். சிந்தனைகளின் உண்மையைக் கண்டறிவதற்குக் கையாளப்பட்ட இந்த முறை, பிற்காலத்தில் இயற்கைத் தோற்றங்களின் உண்மையைக் கண்டறிவதற்கும் கையாளப்பட்டது.

இயற்கைத் தோற்றங்கள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன என்றும், அவை ஒவ்வொரு கணமும் தொடர்ச்சியான மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்றும் இந்த இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது. மேலும், இயற்கையினுள்ளே இயங்கும் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதன் விளைவாகவும், இயற்கையினுள்ளே இயங்கும் எதிர்எதிரான சக்திகள் மோதிக்கொண்டு இயங்குவதன் விளைவாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என்றும் இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது.

இயக்க மறுப்பியல் அல்லது மாயாநிலைத் தத்துவம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்படும் METAPHYSICS இதற்கு நேர்மாறான தத்துவம் ஆகும். பொருள் இயலுக்கு (materialism) அப்பாற்பட்டது என்று பொருள்தரும் கிரேக்க சொல்லிலிருந்து உண்டான சொற்றொடர் மெடாபிசிக்ஸ் என்பதாகும். அதாவது பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதுதான் மெடாபிசிக்ஸ். இந்தப் பெயர் கிடைத்தது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு தற்செயலான நிகழ்ச்சியால்தான். தர்க்க சாஸ்திரத்தைப் பற்றிய விரிவுரை என்ற நூலை எழுதிய அரிஸ்டாடில் நிறைய எழுதியிருக்கிறர். அரிஸ்டாடில் இறந்தபிறகு, அவரது சீடர்கள் அவரது நூல்களை வகை வகையாகப் பிரித்துத் தொகுத்துப் பட்டியலிட்டார்கள். பொருள் இயல் (பிசிக்ஸ்) என்ற தலைப்பின் கீழ் அரிஸ்டாடில் எழுதிய ஒரு நூல் இருந்தது. அதோடு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றிய வேறொரு நூலொன்றும் இருந்தது. அதற்குத் தலைப்பு ஒன்றும் கிடையாது. சீடர்கள் பார்த்தார்கள். பொருளியலுக்கு என்று நூல் இருக்கிறது. ஆகவே இந்த நூலுக்குப் பொருளியலுக்கு அப்பாற்பட்டது என்று தலைப்புக் கொடுப்போமே என்று கருதி ‘‘மெடாபிசிக்ஸ்’’ என்று பெயர் கொடுத்து வகைபிரித்து விட்டார்கள்.

Leave a Reply