1991 அக்டோபர் மாதம் ஜெயலலிதா தலைமையிலான அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அக்டோபர்-23 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய மறியல் தமிழகத்தை எழுச்சிகொள்ள செய்து, ஆட்சியாளர்களை உலுக்கியது.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் 1987 டிசம்பர் மாதம் மரணமைடைந்தார். முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்காக அதிமுகவில் வி.என்.ஜானகி ஜெயலலிதா இடையே கடும் போட்டி நடைபெற்றது. வி.என்.ஜானகி திமுக ஆதரவுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1989-ஆண்டு விஎன் ஜானகி ஆட்சி கவிழ்ந்து அதிமுக இரண்டு அணிகளாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தன. திமுக ஆட்சி அமைத்தது. 1991-ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 7 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த சந்திரசேகர் அவர்களால் 1991 ஜனவரி 30ஆம் தேதி கலைக்கப்பட்டது. 1991 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயலலிதா தலைமையில் ஆட்சியை கைப்பற்றினார்கள். தமிழகத்தில் முதல் முதலாக ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டு 168 இடங்களில் அதிமுகவும் 60 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. திமுக தலைமையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட்டார்கள். திமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இரண்டு இடம் மட்டுமே வெற்றி பெற்றது துறைமுகம் தொகுதியில் கலைஞர் கருணாநிதி அவர்களும் எழும்பூர் தொகுதியில் இளம்வழுதி அவர்களும் வெற்றி பெற்றனர்.
திருவாரூரில் மார்க்சிஸ்ட் கட்சியும் திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் தான் பாட்டாளி மக்கள் கட்சி முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது. எதிர்க்கட்சிகள் பெரும்தோல்வியால் துவண்டு கிடந்தனர்.
ஜெயலலிதாவோ பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதால் அதிகார ஆணவத்தில் முடிவுகள் எடுக்க ஆரம்பித்தார். ஆட்சிக்கு வந்த சிலமாதங்களில் அக்டோபர் மாதம் பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தினார். மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். காரணம் அன்றைய தினம் பஸ் போக்குவரத்து மட்டும்தான் உழைக்கும் மக்களின் பிரதான போக்குவரத்து சாதனமாக இருந்தது. மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருந்ததாலும், திமுக தோல்வியை கண்டு துவண்டு போயிருந்ததால் போராடுவதற்கு தயாராக இல்லாத நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்விக்கு வாலிபர் சங்கம் பூனைக்கு மணியை கட்டியது.
அக்டோபர் 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மறியல் நடைபெறும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது. எதிர்ப்பின் முதல் வடிவம் இளைஞர்களிடம் இருந்து வரும் என்பதை ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை. எனவே கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.
மறியலை தடைசெய்கிறோம் என்று அறிவித்தார். மறியலில் கலந்து கொள்ளக் கூடாது என்று முதல் முறையாக ஒரு வாலிபர் அமைப்புக்கு எதிராக மாநில அரசு வானொலியிலும், தொலைக்காட்சியிலும், தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் பத்திரிகைகளில் மறியலுக்கு எதிராக பேட்டி கொடுப்பதுடன் உள்ளூர் அளவிலும் ஒடுக்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்கள்.
மறியல் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான இளைஞர்களை தமிழகம் முழுவதும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
குறிப்பாக ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்ததால் மறியல் நடத்துவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அரசும், காவல் துறையும் அவற்றை நம்பவில்லை. அந்த மாவட்டத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 450 வாலிபர் சங்க தோழர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தார்கள்.
அப்பொழுது மறியல் என்று சொன்னாலே காவல்துறை கூட்டமாக சேர்ந்த பிற்பாடு கைது செய்யும் வழக்கம் இன்று இருப்பதுபோல் இல்லை மறியலுக்கு வரவர உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்று விடுவார்கள், கூட்டம் சேராமல் தடியடி நடத்துவார்கள். சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அண்ணா சாலையில் தொடர்ந்து மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கும்.
மறியலுக்கு பஸ்ஸில் வரக் கூடியவர்களை பஸ் நிறுத்தத்தில் நின்று கைது செய்வதும், சைக்கிளில் கொடிகட்டு வருபவர்களை மடக்கி கைதுசெய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. காவல்துறையின் இந்தப் போக்கை முறியடிப்பதற்காக நாங்கள் அண்ணாசாலையில் அருகருகில் இருக்கக்கூடிய திரையரங்குகளாகிய சாந்தி, அண்ணா, தேவிபாரடைஸ், வெலிங்டன், கேசினோ,கெயிட்டி ஆகிய திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பதற்கு (அப்பொழுது காலை காட்சி அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும்)வரிசை நிற்பதுபோல் நின்று விடுவோம். குறித்த நேரத்தில் உரத்த விசில் சத்தம் கொடுத்து காவல்துறையின் கண்களில் மண்ணைத்தூவி சாலைகளில் கூட்டமாக அமர்ந்து மறியல் செய்வது வழக்கம். காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தி கைது செய்தது வழக்கமாக நடந்து கொண்டிருந்தது. தடியடி என்பதும் தள்ளுமுல்லு என்பதும் ஒவ்வொரு மறியலிலும் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
இதே போன்ற உத்தியைதான் அக்டோபர் 23ஆம் தேதியும் கடைபிடித்தோம். ஆனால் காவல்துறை தனது உத்தியை மாற்றி அவர்களும் சீருடை அணியாமல் எல்லா திரையரங்குகளிலும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் விசில் சத்தம் கேட்டவுடன் அரங்கிலிருந்து ஓடிவரக் கூடியவர்களை அங்கேயே தடுக்க முயற்சித்தார்கள்.இதனால் மோதல் பெரிதாக மாறியது. காவல்துறை தடியடியில் 105 தோழர்கள் படுகாயமடைந்து 14 பேர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இவ்வளவு தாக்குதலையும் மீறி 1500 பேருக்கு மேல் சென்னை நகரத்தில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். சென்னையில் காவல்துறையின் கடுமையான தாக்குதளையும் மீறி மறியல் நடைபெற்றதால் கடுப்பாகிய காவல்துறையில் அகில இந்திய மாநாட்டிற்கு செல்லவிருந்த மாநிலச் செயலாளர் ரவீந்திரன் உட்பட சில பிரதிநிதிகளை மாநிலக்குழு அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து கைது செய்து சிறையில் அடைத்தது.
இதேபோன்று மதுரை மாநகரில் கட்டபொம்மன் சிலையை சுற்றி இருக்கக்
கூடிய தெருக்களில் இளைஞர்களை நிற்க வைத்துவிட்டு ஒரே நேரத்தில் மறியல் நடத்திய பொழுது காவல்துறை கடுமையான முறையில் நெருக்கடி கொடுத்து கைது செய்தார்கள்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற எழுச்சிமிகு மறியல்கள் நடைபெற்றது. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் வாலிபர் சங்கத்தின் மறியல் தலைப்புச் செய்தியாக மாறியது. ஏன் எந்த வானொலியில் மறியல் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார்களோ அதே வானொலியில், தொலைக்காட்சிகளில் மறியல் செய்தியை வாசித்தனர்.
அரசின் இத்தனை தடைகளையும் மீறி மறியல் நடைபெற்றுவிட்டதே என்ற கோபத்தில் ஜெயலலிதா கைதான 8,500 இளைஞர்களை சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டார். வாலிபர் சங்கம் சிறையில் இருந்தாலும் இருப்பேனே தவிர ஜாமீனில் வெளிவர மாட்டோம் என்று முடிவெடுத்து 15 நாட்கள் சிறையில் இருந்தார்கள்.
கோவை சிறையில் சுற்று வட்டார மாவட்டங்களில் எல்லாம் சேர்த்து 3000 இளைஞர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். மதுரை சிறையில் 1500 பேர்களும் சென்னை சிறையில் 2800 பேர்களும் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவை தவிர வேலூர், கடலூர், சேலம், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய சிறைகளில் 124 பெண்கள் உட்பட 8500 பேர்கள் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.சென்னை சிறையில் இருந்த தோழர்களை அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த அருமை தோழர் நல்லசிவன் அவர்களும் நானும் சென்று சந்தித்தோம். தோழர் ரவீந்திரன் அவர்களே பிணையில் எடுத்து அகில இந்திய மாநாட்டிற்கு பிரதிநிதிகள் சென்றோம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 4-வது அகில இந்திய மாநாடு அக்டோபர் 28ம் தேதி மும்பையில் தாதரில் நடைபெற்றது. மாநாட்டு துவக்கநாள் அன்று கிளைகள் கொடியை ஏற்றுவது வழக்கம். பெரும்பாலான ஊழியர்கள் சிறையில் இருந்ததனால் அதை வெளியில் செய்ய முடியவில்லை.
கோவை சிறையில் இருந்த தோழர்கள் எப்படியாவது மாநாடு அன்று கொடியேற்றி விட வேண்டும் என்று முடிவெடுத்து முயற்சிகளை மேற்கொண்டு உள்ளே இருக்கக்கூடியவர்களுடன் பேசி ஒரு கொடிக்கம்பத்தை தயார் செய்துவிட்டார்கள்.
கொடியை சிறைக்கு செல்லும் போது எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.
ஆனால் கொடியை ஏற்றுவதற்கான கயிறு இல்லை என்ற வருத்தமும், நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ என்று அச்சமும், ஏக்கமும் இருந்தது. அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் என்னிடம் பூணூல்கயிறு இருக்கிறது அதை கழட்டி தருகிறேன் என்று கழட்டிக் கொடுத்தார்.
சிறைச்சாலைக்குள் வேறு எந்த கயிறும் அனுமதி இல்லை. பூணூல் அனுமதிக்கப்பட்டது. அந்த பூணூல் கொடிக்கம்பத்திற்கு ஏற்ற உயரத்திற்கு வரவில்லை.
மேலும் முயற்சிகளை மேற்கொண்ட பொழுது 3000 பேர் கொண்ட இளைஞர்களை சிறைக்குள் அனுப்புகிறபோது சிலர் அரைஞான்(இடுப்பில் கட்டுவது) கயிறுகளுடன் வந்துவிட்டனர்.
அவர்கள் தங்களது அரைஞான் கயிற்றை கழற்றி கொடுத்தார்கள் இவற்றையெல்லாம் இணைத்து கொடிகயிராக மாற்றியபொழுது 3000 இளைஞர்களின் உற்சாகம் சிறையின் சுவர்களை கடந்து விண்ணோக்கி சென்றது. மும்பை நகரத்தில் மாநாடு கொடி ஏற்றிய பொழுது, கோயம்புத்தூர் சிறையில் பூணூலும் அரைஞான் கயிறும் இணைந்து அந்த வெண்கொடியை பறக்கவிட்டார்கள்.
எங்களை வேண்டுமானால் சிறையில் அடைக்கலாம் எங்கள் சிந்தனைகளையும். செயல்களையும் சிறைபடுத்த முடியாது என்று வெளிப்படுத்திய இளைஞர் கூட்டம். கோவையில் மட்டுமல்ல சேலத்திலும், மதுரை சிறையிலும், மரக்கிளைகளை ஒடித்து அதிலேயே கொடிகளை கட்டி மாநாடு தினத்தன்று கொடியேற்றினார்கள்.
சென்னை சிறையிலும் 2800 பேர்கள் அடைக்கப்பட்டனர். ஒருநாள் பொறுத்துகொண்டார்கள். அடுத்த நாளும் உணவு படுமோசமாக இருந்ததால் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். உணவு சாப்பிட கொடுக்கப்பட்ட தட்டுக்கள் பறக்கும் தட்டுகள் போல் மேலெழும்பி பறந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் சிறை நிர்வாகம் உணவு வழங்களை உறுதிப்படுத்தியது. தலைவர்களும் முறைப்படுத்தினார்கள். மதுரை சிறைச்சாலை 1500 இளைஞர்களை இரவு அழைத்து சென்றபொழுது அடைமழை பெய்தது. சிறைத்துறை அவர்களை சிறையில் உள்ள அறைகளுக்கு அனுப்பவில்லை. பெரும் மழையில் நனைந்து கொண்டே இளைஞர்கள் கோஷம் போட்டார்கள். அவர்களின் காதுகளுக்கு கேட்கவில்லை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று கொட்டும் மழையில் நின்றவர்கள் பொறுமை இழந்து சிறைக்குள்ளே இருக்கக்கூடிய ஒரு அரங்கின் கதவை உடைத்து உள்ளே சென்று விட்டார்கள். இளைஞர்களுக்கும் சிறையில் இருந்த காவலர்கள் கான்விக்ட் வார்டர்களுக்கும் இடையேயான மோதலும், தடியடியும் நடைபெற்றது சிறை அதிகாரி தலையிட்டு அரங்கத்துக்கு உள்ளே தங்குவதற்கு அனுமதி கொடுத்து பிரச்சனையை தீர்த்துவைத்தார்.
இருந்தாலும் அடுத்தநாள் சிறைச்சாலையில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் அரசின் ஒதுக்கீடுக்கு மாறாக படுமோசமாக இருந்தது. இதை எதிர்த்து சிறைச்சாலைக்குள் போராட்டம் நடத்தி மீண்டும் ஒரு லேசான தடியடி சந்தித்து உணவு ஒழுங்காக வழங்கப்பட்டது. உரிமைகளுக்காக ஒவ்வொரு இடத்திலும் போராடுவதுதான் இளைஞன். எதிர்பார்ப்புகளுக்காக அடிபணிந்து போகக் கூடியவன் அல்ல இளைஞன் என்பதையும் மதுரை இளைஞர் நிரூபித்துக் காட்டினார்கள்.
இதேபோன்று கடலூர் சிறையில் 450 இளைஞர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடைக்கப்பட்டார்கள் அவர்கள் ஜாமீனில் வெளி வரவில்லை. தென்னார்க்காடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு வெளியில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியை சிறைக்குள்ளேயே கொடியேற்றி கொண்டாடினார்கள்.
மதுரை சிறையில் பெண்களும் கைதாகி சிறையில் இருந்தனர். பழனி நகரத்தைச் சேர்ந்த தோழர் நாகம்மாள் தனது கைகுழந்தையான அன்னலட்சுமியுடன் 15 நாட்கள் சிறையில் இருந்தார். குழந்தையுடன் சிறையிலிருந்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெருமை நாகம்மாளை சாரூம்.
அன்று கைக்குழந்தையாக இருந்த அன்னலட்சுமி இன்றையதினம் பழனி நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு உறுப்பினராக தீவிரமாக செயல்படக்கூடிய ஊழியராக இருக்கிறார். சிறை எங்களது மன உறுதியை சிதைத்து விட முடியாது என்பதற்கு நாகம்மா அன்னலட்சுமியும் கண்முன் சாட்சியாக இருக்கிறார்கள்.
திருச்சி சிறையில் 700 பேர்வரை கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார்கள். வாலிபர் சங்கம் மறியல் முடிந்து இருநாட்கள் கழித்து பாட்டாளி மக்கள் கட்சியினரும் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து போராடினார்கள். அவர்களை கைது செய்து திருச்சி சிறைக்கு கொண்டு வந்த பொழுது அங்கு இருக்கக்கூடிய அதிகாரி வாலிபர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் அவர்களிடம் ஒரே இடத்தில் வைத்தால் பிரச்சினை இல்லையா என்று கேட்டு அவர்களை வேறு இடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று தெரிவித்த பொழுது ஸ்ரீதர் ஒரே கோரிக்கைக்காக வந்து இருக்கிறார்கள் அவர்களும் இங்கே வரட்டும் என்று சொல்லி பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளே வந்த பொழுது அவர்களுக்கு வாசலில் நின்று வரவேற்ப்பை வாலிபர் சங்கம் கொடுத்தது.
சில நாட்கள் கழித்து வாலிபர் சங்க தோழர்களை விடுதலை செய்வதற்கு முன்பாகவே அவர்களை விடுதலை செய்த உடன் அவர்களும் வாசலில் நின்று வாலிபர் சங்க தோழர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டு விட்டு சென்றார்கள். மக்களுக்காக போராடுபவர்கள் யாராக இருந்தாலும் வாலிபர் சங்கம் அவர்களை வாஞ்சையுடன்தான் அணுகும் என்பதற்கு இச்செயல் நிருபணமாகும்.
சிறையிலிருந்த நாகப்பட்டினம் தோழர்களுக்கு வரக்கூடிய கடிதங்கள் அனைத்தும் மாறுபட்டதாக இருக்கும். நாங்கள் வயல்வேலைகளை பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் உறுதியுடன் எந்தக்கவலையும் இல்லாமல் இருங்கள் என்றுதான் தபால் கார்டு வரும். சிறையில் இருந்த மற்றவர்கள் இதைக்கண்டு அதிசயித்துப் போனார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அன்பழகன், குடவாசல் தியாகராஜன் ஆகிய தோழர்களின் தாயார்கள் இறந்த செய்தி கிடைத்தது. அப்பொழுதும் அவர்கள் ஜாமீனில் வெளிசெல்லாமல் சிறையில் இருந்தார்கள். ஒரு சில தோழர்களின் திருமணம்கூட தள்ளி வைக்கப்பட்டது. திருச்சி சிறையில் தையல் கலைஞர் சரிப்பட்டு விட்டார். தீபாவளி நேரத்தில் துணி தைக்க கொடுத்தவர்களுக்கு தைத்துத்துக் கொடுக்க முடியவில்லை. இந்த சிரமங்களையும் விடுதலையான பிற்பாடு மக்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்கிறார்.
சேலம் சிறைச்சாலையில் 270 பேர்களுக்கு மேல் கைதாகி இருந்தனர். முதலில் ஒவ்வொரு அறைக்கும் எட்டு பெயர்களை அடுத்து இடவசதிகள் கழிப்பிட வசதி இல்லாத நிலை. அடுத்தநாள் போராட்டம் நடத்தி மூன்று பேர்களுக்கு ஒரு அறை என்று ஒதுக்கப்பட்டது.
பாளையங்கோட்டை சிறையில் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்க தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட கே.ஜி. பாஸ்கரன் அவர்களும் முன்கூட்டி கைதுசெய்யப்பட்டாலும் மறியல் அன்று விடுதலை செய்யப்பட்டபொழுதும் மறியலில் கலந்து கொள்வேன் என்று சொல்லி சிறை சென்றார்.
வேலூர் சிறைச்சாலையில் தோழர் சங்கரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் உட்பட 12 பெண்கள், மொத்தம் 260 பேர்கள் சிறைச்சாலையில் இருந்தார்கள்.
தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைச் சாலைகளும் வாலிபர் சங்க தோழர்களால் நிரம்பிவழிந்தது. சிறைச்சாலைகளில் வகுப்புகள் நடைபெற்றது. பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், நாடகம், விளையாட்டு என்று சொல்லி பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
வாலிபர் சங்கத் தோழர்கள் சிறைக்கூடங்களை கலைக்கூடங்களாக மாற்றி விட்டார்கள். இதர கைதிகள் வாலிபர் சங்க தோழர்கள் விடுதலையாகி வருகிற பொழுது கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்து அனுப்பினார்.
வாலிபர் சங்கம் பிணையில் வருவதற்கு தயாராக இல்லை. ஜெயலலிதா அரசுக்கு எதிராக பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். சங்கத்தின் போராட்டம் நியாயமானது என்று பலரும் பேச ஆரம்பித்தனர். இடதுசாரி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் விடுதலை செய்ய வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலித்த வண்ணம் இருந்தனர்.
இந்தப் பின்னணியில் தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டிருந்தது. மாநில அரசு வேறுவழியின்றி தீபாவளித் திருநாளுக்கு முதல்நாள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தது.
விடுதலைசெய்தது மட்டுமல்ல பஸ் கட்டண உயர்வின் ஒரு பகுதியை குறைத்து அறிவித்தது.
சங்கத்தின் எழுச்சிமிகு இந்த போராட்டம் பொதுமக்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றதுடன் பஸ் கட்டண உயர்வையும் குறைக்க வைத்தது.
மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி இடைக்கமிட்ட நிர்வாகிகள் என அனைவரும் சிறை ஏகினர். சென்னை மத்திய சிறையில் தோழர்கள் ரவீந்திரன் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சண்முகம் பீமாராவ், சுரேஷ் ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள்,
வேலூர் சிறைச்சாலையில் தோழர்கள் வீரபத்திரன், எஸ்.டி.சங்கரி கடலூர் சிறைச்சாலையில் தோழர்கள் எஸ்.தனசேகரன், ஜி.ஆனந்தன், சேலம் சிறைச்சாலையில் தோழர் குழந்தைவேலு சண்முகராஜா, கோவை சிறைச்சாலையில் தோழர்கள் சிவஞானம், ஈரோடு பழனிச்சாமி, சி. பத்மநாபன் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் சேவியர், கே.ஜி பாஸ்கரன் தென்காசி பட்டாபிராமன் மதுரை சிறைச்சாலையில் தோழர்கள் ராதா சுப்பையா லெனின் விக்ரமன் மகாலிங்கம் அண்ணாதுரை, திருச்சி சிறைச்சாலையில் தோழர்கள் ஸ்ரீதர் மாரிமுத்து மயிலாடுதுறை சீனிவாசன் போன்ற நிர்வாகிகள் இணைந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளும் 15 நாட்கள் சிறையில் இருந்தனர்.
போராட்டத்தின் வீச்சு தமிழகத்தில் வாலிபர் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் மாவட்ட அளவில் மருத்துவமனை போராட்டங்களை தீரமுடன் நடத்துவதற்கும் உந்துசக்தியாக அமைந்தது. தமிழக இளைஞர் வரலாற்றில் இது மறக்கமுடியாத போராட்டம்.
அ.பாக்கியம் (A. Bakkiam)
DYFI முன்னாள் மாநிலச் செயலாளர்.