தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎம் பிரதேசசெயலர் ராஜாங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த காவல்துறை மற்றும் தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது அமைதியான சூழல் இருக்கின்ற இந்நேரத்தில் 144 தடை உத்தரவு என்பது தேவையற்ற, உள்நோக்கம் கொண்டது. தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேர்தல் என்பது சாதாரண மக்கள் சுதந்திரமாக தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றக்கூடிய செயலாகும்.
அரசு பிறப்பித்துள்ள 144 தடைஉத்தரவு ஒரு இடத்தில் இருந்துஇன்னொரு பகுதிக்கு செல்வதை, மக்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும்வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் ஆலோச னைகள் ஏதுமின்றி தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதன்மூலம் வாக்குப்பதிவு சதவீதம் கண்டிப்பாக குறையும். சுதந்திரமாக மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கக்கூடிய வகையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் நீதிமன்றத்திற்கு செல்வது உட்பட மக்களை திரட்டி இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக தேர்தல் களத்தில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை வரும் என்று தெரிவித்துள்ளார்.