தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய – லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்கும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், சோசலிசத்திற்காக உலகளாவிய முறையில் இயக்கத்தைக் கட்டுவதற்கும் அவர் அளித்திட்ட பங்களிப்புகளுடனும் அதனை இணைத்து நாம் பார்க்க வேண்டும்.
மார்க்சிச-லெனினியக் கொள்கையானது, முதலாளித்துவத்தை ஓர் உலக அளவிலான முறையாகவே கணிக்கிறது. ஒரு நாட்டில் சோசலிசத்திற்காக நடைபெறும் போராட்டம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடனும், உலக அளவிலான முதலாளித்துவ முறையைத் தூக்கி எறிவதற்கான போராட்டத்துடனும் பின்னிப் பிணைந்ததே யாகும். எனவே தோழர் இ.எம்.எஸ்., ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே உலக அளவில் நடைபெறும் போராட்டத்தின் பின்னணியிலேயே இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்வதற்கான போராட்டத்தையும், இந்தியாவில் சோசலிசத்திற்காக முன்னேறிச் செல்வதையும் பொருத்திப் பார்க்கிறார்.
தோழர் இ.எம்.எஸ். 1957இல் இந்தியாவில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் முதலமைச்சராக மாறிய சமயத்தில், சர்வதேச அளவில் அவர் புகழ் பெற்றார். அவர் முதன் முதலாக ஒரு சோசலிச நாட்டிற்குப் பயணம் செய்ததென்பது, சீனாவில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது கட்சிக் காங்கிரசில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சகோதரப் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் கலந்து கொள்வதற்காக சென்றதேயாகும். அந்த மாநாட்டில் அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை மட்டுமல்ல, சோவியத் யூனியன் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து சகோதரப் பிரதிநிதிகளாக வந்திருந்த பலரையும் அவர் சந்தித்தார்.
1960இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு, அவை முழுமையான முறையில் முற்றி இது கட்சிகளுக்கும் மற்றும் நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட சமயத்தில், ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள்ளும் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், திருத்தல் வாதத்திற்கு எதிராகவும், இடது குழுவாதத்திற்கு (Left sectarianism) எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தையும் சர்வதேச அளவில் இவ்விரு போக்குகளுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தோழர் இ.எம்.எஸ். பார்த்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட தவறான கொள்கைகள் மற்றும் தத்துவார்த்த நிலைப்பாடுகளின் காரணமாக திருத்தல்வாதமும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திட்ட சில தவறான தத்துவார்த்த மற்றும் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக இடது குழுவாத நிலைப்பாடுகளும் (Left sectarianism) வெளிப்பட்டன. சீனத்தில் 1966இல் கலாச்சாரப் புரட்சி நடைபெற்ற சமயத்தில் இது மிகவும் அதீதமான முறையில் வெளிப்பட்டது.
1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட வலது திருத்தல்வாதம் மற்றும் இடது குழுவாதத்திற்கு எதிராக தோழர் இ.எம்.எஸ். கேந்திரமான பங்களிப்பினை மேற்கொண்டார். ஒன்றுபட்ட கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான சமயத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றியிருந்த தத்துவார்த்தப் பிரச்சனைகளை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலோர் அப்போது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் 1966இல் விடுவிக்கப்பட்ட சமயத்தில், கட்சியானது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வலது திருத்தல்வாதத்தை மட்டுமல்ல, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஊக்குவிக்கப்பட்ட நக்சலைட்டுகளின் இடது குழுவாதத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கம் பர்த்வானில் 1968இல் தத்துவார்த்த பிளீனம் ஒன்றை நடத்தியது. பீளீனத்தில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்தத் தீர்மானம், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவாகி இருந்த திருத்தல்வாத திரிபுகளையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட இடது அதிதீவிரவாதப் போக்கையும் எதிர்த்து முறியடித்து சரியான நிலைப்பாட்டினை மேற்கொண்டது.
அடுத்த சில ஆண்டுகளில், தோழர் இ.எம்.எஸ். சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவாகி இருந்த திருத்தல்வாதம் மற்றும் வறட்டுத் தத்துவவாதத் திரிபுகளுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டார். இந்தியப் புரட்சிக்காக, சரியான போர்த்தந்திரத்தை (strategy)யும், அதனை எய்தக்கூடிய உத்திகளை (tactics)யும் கடைப்பிடிக்க வேண்டுமானால், மார்க்சியத் தத்துவத்தைத் துல்லியமாகக் கற்று, இந்தியாவின் நிலைமைகளுக்கேற்பப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று தோழர் இ.எம்.எஸ். நம்பினார். ‘‘மார்க்சியம் – லெனினியம் என்பது எங்களுக்குத்தான் சொந்தம் என்று எந்த ஒரு கட்சியும் அல்லது எந்த ஒரு நாடும் தனிப்பட்ட முறையில் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. அது தொழிலாளர் வர்க்கத்தின் சித்தாந்தம். எனவே அது உலகளாவியது’’ என்று இ.எம்.எஸ். கூறினார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பல ஆண்டு கால அனுபவத்திற்குப்பின், இந்தியாவின் புரட்சிப் பாதையை எந்த ஒரு நாட்டின் அனுபவத்தையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவோ அல்லது நகலெடுக்கவோ முடியாது என்பதில் தோழர் இ.எம்.எஸ். தெளிவாக இருந்தார். சோவியத் யூனியனில் சோசலிசம் மலர்ந்த பாதையையோ அல்லது சீனத்தில் புரட்சி ஏற்பட்ட விதத்தையோ இயந்திரகதியாக இந்திய நிலைமைகளுக்குப் பிரயோகிக்க முடியாது.
சோவியத் யூனியன் மற்றும் சீனக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட பிளவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திரிபுகளும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் பாதித்தன. கம்யூனிஸ்ட் அகிலம் இருந்த நாட்களில் அமைந்திருந்தபோல் சர்வதேச அளவிலான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மையம் இனி அமைப்பது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதை இ.எம்.எஸ். தேர்ந்து தெளிந்தார். அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் என்ன செய்ய வேண்டும்? ‘‘இன்றைய உலக நிலைமையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்டுகளும் தங்கள் நாட்டில் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடைவதற்கான பொருத்தமான பாதையை தங்கள் நாட்டின் நிலைமைகளுக்கேற்பத் தேர்ந்தெடுக்க வேண்டும். … ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் தங்கள் நாட்டில் சோசலிஸ்ட் புரட்சியை கொண்டுவருவதற்கான பாதையைத் தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும், உலக அளவில் மையப்படுத்தப்பட்ட தலைமையை அதற்காக அவர்கள் சார்ந்திருக்கக் கூடாது.’’ என்று இ.எம்.எஸ். கூறினார். (தி மார்க்சிஸ்ட், அக்டோபர் – டிசம்பர், 1996)
இ.எம்.எம். மேலும், உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகவும் பொதுப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதால், அவற்றிற்கிடையே கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
1964இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தம்தம் கட்சிக் காங்கிரசுகளை நடத்திய சமயத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் சகோதரப் பிரதிநிதிகளைக் கவர்ந்தது. ஏன் இப்படி நடந்தது என்றும், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு அதிக அளவில் வெளிநாட்டுச் சகோதரப் பிரதிநிதிகள் வரவில்லை என்றும் இ.எம்.எஸ்.-இடம் கேட்கப்பட்டது. அதற்கு இ.எம்.எஸ். ‘‘நாங்கள் எங்கள் நாட்டு மக்களிடமிருந்துதான் அங்கீகாரம் கோருகிறோம், அதுதான் எங்களுக்கு முக்கியம்’’ என்றார்.
அடுத்து வந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சர்வதேச பிரச்சனைகள் பலவற்றிலும் மார்ச்சியம்-லெனினியம் மற்றும் தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எழுந்த பல்வேறு அம்சங்கள் குறித்தும் சுயமான நிலைப்பாட்டினை மேற் கொண்டது. வியட்நாம் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய சமயத்தில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் கருத்துவேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, வியட்நாமிற்கு உதவிட முன்வர வேண்டும் என்றும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓர் ஒன்றுபட்ட முன்னணியைக் கட்ட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. மேலும் மேற்படி இரு சோசலிச நாடுகளின் அயல்துறைக் கொள்கையும் எப்போதெல்லாம் தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையிலும் தங்கள் நாடுகளின் குறுகிய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையிலும் அமைகிறதோ அப்போதெல்லாம் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் திருத்தல் வாதம் மற்றும் வறட்டுத் தத்துவவாதத்திற்கு எதிராக மார்க்சிய – லெனினியத்தின் அடிப்படையிலும் திட்டத்தின் கீழும் தோழர் இ.எம்.எஸ். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில், கட்சி நடத்திய போராட்டங்கள், கட்சியை உருக்கு போன்று உருவாக்கி வளர்த்தது. 1964இலிருந்து 1980வரை – 16 ஆண்டு காலம் – இந்தியத் தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்கவில்லை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்கவில்லை.
1981இல் தோழர் இ.எம்.எஸ். பொதுச் செயலாளராக இருந்த சமயத்தில், கட்சிக்குக் கட்சி உறவுகள் என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உறவினை ஏற்படுத்திக் கொண்டது. 1983இல் ஹர்கிசன்சிங் சுர்ஜித், பசவபுன்னையா ஆகியோருடன் இ.எம்.எஸ். தலைமையில் ஒரு குழு சீனத்திற்குச் சென்றது. அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்று முழுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், இரு கட்சிகளுக்கும் இடையே கட்சிக்குக் கட்சி உறவு ஏற்படுத்திக்கொள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வந்தது. இவ்வாறு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது இந்திய நிலைமைகளுக்கேற்ப மார்க்சியத்தை சுயேச்சையாக நின்று பிரயோகிப்பதாகவும், சோசலிசத்திற்கானப் பாதையை அமைத்துக் கொண்டுள்ளதாகவும் அவ்விரு கட்சிகளும் அங்கீகரித்தன.
1987இல், மாஸ்கோவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இ.எம்.எஸ். தலைமையில் ஒரு குழு சென்றது. அப்போது கோர்பசேவ் ஆற்றிய உரையைக் கேட்டபின், அவரது உரை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சேபணைகளை அப்போதே இ.எம்.எஸ். சோவியத் தலைமையிடம் தெரிவித்தார். கோர்பசேவ் அப்போது ‘‘வர்க்க மாண்புகளை விட மனித குலத்தின் மாண்பு’’களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியதையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முரண்பாடுகளில் திருத்தங்கள் கூறியதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. அவற்றிற்குத் தங்கள் மறுப்பினை அங்கேயே தெரிவித்தன. கோர்பசேவ் தலைமையின் சீர்திருத்த நிலைப்பாடுகளுக்கு எதிராக முதன்முதல் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.
சோவியன் யூனியன் 1991இல் தகர்ந்தபின் உலகில் புதியதொரு நிலைமை உருவானது. முதலாளித்துவத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் அனைத்தும் தகர்ந்தன. இந்த சமயத்தில் இ.எம்.எஸ். எண்ணற்ற கட்டுரைகளை எழுதினார். சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டும் பணி நடைபெற்றக் காலங்களில் அதற்கு ஏற்பட்ட அனுபவங்களை முழுமையாகப் பரிசீலனை செய்ய ஆரம்பித்தார். லெனின் காலகட்டத்தில் நடைபெற்ற பணிகளையும் புதிய பொருளாதாரக் கொள்கை (New Economic Policy (NEP)யையும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சோவியத் பாணியில் இருந்த திருத்தல்வாதம் மற்றும் வறட்டுத்தத்துவவாதம் ஆகியவற்றின் வேர்களைக் கண்டறிந்தார். இந்தப் பின்னணியில்தான் அவர் சோவியத் யூனியனில் ஏற்பட்ட தவறுகளைத் தவிர்த்திடும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை சீனா மேற்கொண்டபோது அதற்கு ஆதரவாக அவர் நின்றார். ‘‘சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் முதலாளித்துவம் வெற்றி அடைந்திட முடியாது’’ என்று அவர் பகுத்தாய்ந்து கூறினார். மேலும் அவர், ‘‘உலகின் நான்கு முக்கிய முரண்பாடுகள் – ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயே உள்ள முரண்பாடு, மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையேயுள்ள முரண்பாடு, ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடு – இன்னமும் நீடிக்கின்றன, அவை சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளுக்கு வழிகோலியிருக்கின்றன’’ என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
அவர் மேலும், தற்போது சோசலிச நாடுகளாக நீடிப்பவை உலக அளவில் சூழ்நிலைகள் பாதகமாக இருந்தபோதிலும், தங்கள் நாடுகளில் சோசலிச முறையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதில் தங்களாலானஅனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் கூறினார். ‘‘இன்றையதினம் சோசலிச நாடுகளாக உள்ள நான்கு நாடுகளும் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றிருக்கின்றன. முந்தைய சோசலிச நாடுகள் செய்திட்ட தவறுகளை ஆராய்ந்து, அதுபோன்று தங்கள் நாட்டில் நடைபெறாதவாறு பாதுகாத்து முன்னேற அவை முயல்கின்றன. சீனம், வியட்நாம், கொரியா மற்றும் கியூபா ஆகியநாடுகளில் எவ்விதமான சீர்குலைவு நடவடிக்கைகளும் இருக்காது என்று நம்மில் எவரும் உத்தரவாதம் அளித்திட முடியாது. ஆயினும் சோசலிசத்தை இன்னமும் உயர்த்திப்பிடிக்கின்ற இந்நான்கு நாட்டுத் தலைவர்களும் மிகவும் எச்சரிக்கையாக நின்று தங்கள் மக்களை வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். (ப்ரண்ட்லைன், ஜூலை 1, 1994).
தோழர் இ.எம்.எஸ். தன் கடைசிக் காலங்களில், மார்க்சியம் – லெனினியத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் நாடுகளில் சோசலிசத்தை அடைவதற்கான பாதையை சொந்தமாகவே அமைத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும், மற்ற மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சிகள் மற்றும் சக்திகளுடன் சகோதரத்துவ உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதையும் வலியுறுத்தினார். சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர் மார்க்சியத்தைக் கைவிட மறுத்த அனைத்து சக்திகளையும் மீண்டும் அணிதிரட்டக்கூடிய வகையில் ‘இன்றைய உலக நிலைமையில் மார்க்சியம் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே’ என்கிற தலைப்பில் 1993இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சர்வதேச கருத்தரங்கை அவர் பார்த்தார்.
இ.எம்.எஸ். 1998இல் இறக்கும் சமயத்தில், உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான முயற்சிகள் கனியத் தொடங்கின. 1998இல் ஏதன்ஸ் நகரில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் முதல் மாநாடு நடைபெற்றது. அதன்பின்னர் ஒவ்வோராண்டும் அத்தகைய மாநாடுகள் நடைபெறத் துவங்கியுள்ளன. கடைசியாக, சமீபத்தில் புதுடில்லியில் முதன்முறையாக 11ஆவது மாநாடு நடைபெற்றது.
(தமிழில்: ச.வீரமணி)