பதில்: இந்தியாவில் கம்யூனிச இயக்கம் இரண்டு வரலாற்றுநிகழ்வுகளின் காரணமாக உருவானது –ஆங்கில ஆட்சிக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் 1917ல் நடைபெற்ற ரஷ்யப்புரட்சியின் தாக்கம் ஆகியவைகளே அவை. முழு சுதந்திரம் வேண்டும் என்ற கோஷத்தை முதல் முதலாக1921ஆம் ஆண்டே,ஆமாதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கம்யூனிஸ்டுகள்தான் எழுப்பினர். அப்போது காங்கிரசின் கோரிக்கை டொமினியன் அந்தஸ்து என்பதாகத்தான்இருந்தது. முதன் முதலில் வர்க்க அடிப்படையில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திரட்டியதில் கம்யூனிஸ்ட்டுகளே முன்னோடிகள்.
தனித்துவமான பங்களிப்பு
சுதந்திரப் போராட்டத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரம் என்பதற்கு முழுமையான ஒரு சித்திரத்தை வழங்கியது- அதுவேஇந்திய மக்களின் பொருளாதார மற்றும் சமூக விடுதலையை உள்ளடக்கிய அரசியல் சுதந்திரம் என்று வரையறுத்தது. கம்யூனிஸ்ட்டுகளின் மற்றொரு தனித்துவமான பங்களிப்புஎதுவெனில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்துடன் பிணைத்தது. அது ஏன் எனில், சுதந்திரம் அடைய வேண்டுமெனில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், அதன் உள்நாட்டு ஆதரவாளர்களான இராஜாக்கள், ஜமீன்தார்கள் மற்றும் நிலப்பிரபுக்களையும் எதிர்த்து போராட வேண்டும் என்ற வர்க்க அடிப்படையிலான புரிதலிலிருந்து தோன்றியது.
நிலப்பிரபுத்துவத்திற்கெதிரான மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் வெடித்தன. தெலுங்கானா, தேபாகா, புன்னப்புரா – வயலார் ஆகிய இடங்களில் விவசாயிகள் எழுச்சிகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தலைமையேற்று நடத்தினர்.இவைதவிர, நாடு முழுவதும் நடைபெற்ற நிலப்பிரபுக்களுக்கு எதிரான கணக்கற்ற போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையேற்று நடத்தினர். சுதந்திரத்திற்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகள், நிலம் குறித்த கேள்விகளை தேசிய (அரசியல்) மேடையின் மையத்திற்கு கொண்டு வந்தனர்- ஜமீன்தாரி ஒழிப்பு, நிலச்சீர்திருத்தத்திற்கான போராட்டம், நிலமில்லா விவசாயிகளுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் உச்சவரம்பு சட்டத்திற்கு அதிகமாகவுள்ள நிலங்களைக் கைப்பற்றி, பிரித்துக்கொடுப்பது போன்றவைகள். நிலக்குவியலை உடைப்பது, நிலப்பிரபுத்துவத்திற்கெதிரான திட்டவட்டமான செயல்பாடுகள் ஆகியன ஜனநாயகப் புரட்சியின்நிறைவேறாத பணிகளாகவும், புதிய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நிறைவேற்ற மறுத்த பணிகளாகவும் கம்யூனிஸ்ட்டுகள் பார்த்தனர்.
மொழிவழி மாநிலங்களுக்காக
கம்யூனிஸ்ட்டுகளின் மற்றொரு முக்கிய பங்களிப்பு ஐம்பதுகளில் மொழிவழி மாநிலங்கள் அமைந்திட நடத்திய போராட்டங்கள்.மாநிலங்களின் கட்டமைப்பை ஜனநாயகப் படுத்தியதில் இது ஒரு முக்கிய அம்சமாகும், இவற்றிற்கான தத்துவார்த்தப் பின்புலத்தை கம்யூனிஸ்ட் தலைவர்கள் உருவாக்கி,அவற்றை மாபெரும் மக்கள் இயக்கமாக நடைமுறைப்படுத்தியதுதான் விசாலாந்திரா, ஐக்கிய கேரளா, சம்யுக்த மகாராஷ்டிரா, மகா குஜராத் போன்ற பல போராட்டங்கள்.
கம்யூனிஸ்ட்டுகளே தேசிய அரசியல் மேடைக்கு தொழிலாளி-விவசாயி பிரச்சனைகளை கொண்டுவந்து, பொருளாதார மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வர்க்க-ரீதியான இயக்கங்களை வளர்த்தெடுத்தனர். கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு மாற்றாக இடது ஜனநாயக மாற்றை வளர்த்தெடுத்தனர். மேலும், ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளனர். பலதரப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக மாபெரும் மக்கள் போராட்டங்களை உருவாக்கி, அவர்கள் அரசியலில் பங்கெடுக்க வழிவகை செய்தனர். இந்தியாவில் மதரீதியான அரசியல் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவு எப்படி பிளவுவரை கொண்டு சென்றதோ, கம்யூனிஸ்ட்டுகள் எப்போதுமே,மதச்சார்பற்ற அரசியலில் நிலையான சக்தியாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் எப்போதுமே மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பது என்பதற்கான பாதுகாவலர்களாக இருந்து வந்துள்ளனர், ஆனால் ஆளும் வர்க்கத்தின் கட்சிகளால் அது எப்போதுமே தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்துத்துவா மற்றும் நவீன தாராளமயத்தினால் ஆபத்துகள்
கேள்வி: கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை இந்தியாவின் ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கிய அம்சமே நிலச்சீர்திருத்தம், கூட்டாட்சிக்கான போராட்டம் ஆகியவையே. இன்று ஜனநாயகப் புரட்சியின் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மிக அவசரமான மற்றும் முக்கியப் பணியாக உள்ளவை எவை?
பதில்: சுதந்திரம் அடைந்த பல பத்தாண்டுகளில் நிலச்சீர்திருத்தங்களில், கூட்டாட்சிமுறையில், ஜனநாயக உரிமையில்என்னென்ன முன்னேற்றங்கள் காணப்பட்டதோ அவற்றையெல்லாம் இன்று தலைகீழாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் கடந்த முப்பது ஆண்டுகளாக நவீன தாராளமயத்தின் கீழும்,வலதுசாரி இந்துத்துவா சக்தியின் ஊழியர்கள் உயர்ந்து தற்போது ஆட்சியில்இருக்கும் நிலையிலும் உள்ளோம்.தற்போது கம்யூனிஸ்ட்டுகளின் மிக அவசர மற்றும் அவசியப்பணி இந்த நாட்டு தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும்நவீன தாராளமயத்திற்கு எதிராக மிகவும் பலம் வாய்ந்த இயக்கங்களை கட்டுவதாகும். தற்போது சற்றும் ஓய்வில்லாமல், தொழிலாளர்-விவசாயிகள் உரிமைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுக்கப்படுவதற்கான காரணம், வேட்டையாடும் மிருகக்குணம் கொண்டமுதலாளித்துவ பண்பின்வெளிப்பாடு. இதன் கூடவே நமக்கு ஒரு இந்துத்துவா அதிகாரவெறி(அத்தாரிடேரியன்) கொண்ட ஆட்சி இந்த நவீன தாராளமய ஆட்சியை திணித்து வருகிறது. இந்த ஆட்சியானது தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் அமைப்பை உள்ளிருந்தே செயலிழக்கச் செய்கிறது. தற்போது அமலாகிவரும் பெரும்பான்மை(மத-மொர்) ஆட்சிநமது நாட்டின் மிகவும் ஆதாரமான ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையுமே அச்சுறுத்தி வருகிறது. ஆகவே கம்யூனிஸ்ட்டுகள் முன்பு உள்ள இரட்டைக் கடமை என்பது நவீன தாராளமயத்தையும், இந்துத்துவா அதிகாரவெறி ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போராடுவதுதான். சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலங்களிலேயே கம்யூனிஸ்ட்டுகள் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசை முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவ அரசு என அடையாளம் கண்டனர். இந்தியாவில் முதலாளித்துவம் தாராளமயம் மற்றும் இதர தனியார்மய நடவடிக்கைகளால் அதிக பலம் பெற்றுள்ளது. நிலச்சீர்திருத்தம் நடைபெற்றாலும், அவை மிகச் சிறிய அளவிலேயே மாநிலங்களுக்கிடையே வேறுபாடான அளவிலேயே அமலாகியுள்ளது.
அந்நிய மூலதனத்தின் பங்காளியாக…
கேள்வி: சிபிஐ(எம்) இந்தியாவில் தற்போதுள்ள முதலாளித்துவ நிலை குறித்தும், இந்தியாவின் ஆளும் வர்க்கங்களின் குணாம்சம் குறித்தும் எப்படி கணிக்கிறது?
பதில்: சிபிஐ(எம்), தனது கட்சி திட்டத்தில் இந்திய அரசைபெருமுதலாளிகளால் தலைமைதாங்கப்படுகிற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு என்று கணித்துள்ளது. பல பத்தாண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் முதலாளித்துவ வளர்ச்சியின்விளைவாக மூலதனக் குவியல் மேலும் தீவிரமடையவும்,பெருமுதலாளிகளின் பிடி இறுகுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.இவை நவீன தாராளமயக் கொள்கைகளில் மேலும் அதிகரித்துள்ளது. விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி கடும் வேகத்தில் அமலாகிவருகிறது. நாம் நிலச்சுவான்தார்கள் என்று சொல்லும் போது முதலாளித்துவ நிலச்சுவான்தார்களையே குறிக்கும். கிராமப்புறத்தில் நிலச்சுவான்தார்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், கிராமப்புறத் தொழில் முனைவோர் என்ற ஒரு கூட்டு உருவாகியுள்ளது. இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் தன்மை தற்போதும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவமே, அதில்நிலப்பிரபுத்துவம் என்பது முதலாளித்துவ வகையைச் சார்ந்தது.இந்த முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய நிதி மூலதனத்தின் பங்காளியாகவும் உள்ளது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயக செயல்பாட்டில்…
கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் செயலாற்றிய நீண்ட அனுபவம் உண்டு. அவர்கள் மே.வங்கம், கேரளா மற்றும் திரிபுராவில் மாநில அரசுகளை அமைத்து அவற்றில் செயல்பட்டும் உள்ளனர். இந்த அனுபவத்தை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? பதிவு செய்கிறீர்கள்? குறிப்பாக தற்சமயம் நாடாளுமன்றத்தில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் உங்கள் பிரதிநிதித்துவம் உள்ள நிலையில்?
பதில்: இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் 70 ஆண்டுகாலம் பணியாற்றிய தனித்துவமான அனுபவம் உண்டு. இந்த அனுபவம் ரஷ்யா, சீனா அல்லது வியட்நாம் போன்ற அனுபவம் இல்லை. அங்கெல்லாம், முடியாட்சிக்கு, காலனிய ஆட்சிக்கு, அரைக் காலனிய அமைப்புகளுக்குஎதிராக புரட்சிகள் நடைபெற்றுள்ளன. ஆரம்பத்தில் சிலகாலம் அதாவது 1948-51வரையில் நீடித்தஇடது அதிதீவிரவாதத்திற்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகள், நாடாளுமன்ற அமைப்புகளில் பணியாற்றி வெகுஜன இயக்கங்களை பலப்படுத்தவும், புரட்சிகரப் போராட்டங்களை தீவிரப்படுத்தவும் முடிவு செய்தனர். 1957ல் கேரளாவின் முதல் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிவெற்றி பெற்றதும், முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்ததும் குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. அதுவே மாநில அரசுகளில் பங்கெடுக்க அடித்தளம் அமைத்து, அதற்கான வரையறைகளையும் அளித்ததின் பேரிலேயே பின்னர் மே.வங்கத்திலும் திரிபுராவிலும் அமைந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக, 1952ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில்கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அன்று தொட்டு கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அரசியலில் வீச்சுடன்செயல்பட்டு வருகிறது.பொதுவாகப் பார்க்குமிடத்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கு நாடாளுமன்ற அமைப்புகளை எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள இயக்கங்களை கட்டுவதற்கு பயன்படுத்துவது என்பது பற்றிய தெளிவு உண்டு என்றாலும், அதில் முழுமையாகப் பங்கெடுத்ததின் விளைவாக சில பிரமைகளும் சீர்திருத்தவாதப் போக்குகளும் வளர்ந்தன. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேவும் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளை இணைப்பது என்பது தொடர் போராட்டமே!
நேர்மறை அனுபவம்…
இடதுகளால் தலைமை தாங்கப்பட்ட அரசுகளை கணக்கில்கொண்டால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அவை நேர்மறையான அனுபவம். 1957ல் கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசுதொடங்கி, கம்யூனிஸ்ட்டுகள் நிலச் சீர்திருத்தம், பஞ்சாயத்து ராஜ் மூலம் ஜனநாயகத்தில் அதிகாரப் பரவல், உழைக்கும் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவது, மத நல்லிணக்கத்தைக் காப்பது ஆகியவற்றில் வழிகாட்டியுள்ளன. எனினும், நவீன தாராளமயத்தின் பிடியில், இடது தலைமையிலான அரசுகளின் மாற்றுக் கொள்கைகளுக்கான இடம் மிகவும் சுருங்கியுள்ளதை காண முடிகிறது. சுருங்கும் மத்திய அரசின் நிதியுதவி மற்றும் முதலீடுகள் காரணமாக மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்கவேண்டியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களில் நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பிரதிநிதித்துவம் மிகவும் சுருங்கிவிட்டது என்பது உண்மையே!இந்திய அரசியலின் வலதுசாரி மாற்றம், நவீன தாராளமயச் சந்தைக் கொள்கைகள், தேர்தல்களில் செலவழிக்கப்படும் மிக அதிக பணம், வணிகத்திற்கும் அரசியலுக்கும் இடையேயான கூட்டு ஆகிய இவையனைத்தும் கம்யூனிஸ்ட் மற்றும் இடது தேர்தல் வாய்ப்புகளின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
மிக மோசமான நிலை
கேள்வி: “எந்த காலத்திலும், ஜனநாயகத்திற்கும் நாடாளுமன்ற அமைப்பு முறைக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது போன்றுமிக மோசமான அச்சுறுத்தல் ஏற்படவில்லை ” என்று சமீபத்தில்நீங்கள் எழுதியுள்ளீர்கள். நீங்கள் நிலைமை 1975ஐ விட மோசம்என்று நினைக்கிறீர்களா? நாம் எங்கு போய்க் கொண்டு இருக்கிறோம்?
பதில்: இந்த அச்சுறுத்தல் மிகவும் பரந்துபட்டது, மிக ஆழமானது. தற்போது எது நிலை நிறுத்தப்பட்டுள்ளது எனில், அதிகார வெறி கொண்ட இந்துத்துவா ஆட்சி, மிகவும் திட்டமிட்டு அரசியல்சாசனத்தையும், அரசின் சகல அமைப்புகளையும் உள்ளிருந்தே குழிபறிக்கும் வேலையை செய்கிறது. அதிலும் குறிப்பாகமோடியின் இரண்டாவது அரசு வந்ததிலிருந்து, ஆர்.எஸ்.எஸ்.-ன் திட்டமான, இந்துத்வா குடியரசு என்னும் திட்டம் அரங்கேறிவருகிறது. இத்தகைய அதிகாரவெறிக்கு எதிரான அனைத்து விதமான மாற்றுக் கருத்து மற்றும் எதிர்ப்புகள் பாசிச முறையில் எதிர்கொள்ளப்படுகிறது. தற்போதைய நிலை 1975 அவசரநிலையைவிட மிக மிக மோசம். அதோடு ஒப்பிடவே முடியாது.இது இந்திய அரசாங்கத்தை ஒட்டு மொத்தமாக மாற்றியமைப்பது, இந்து ராஷ்டிரத்தை திணிக்கும் முயற்சிகள் அடிமேல்அடியாக மேற்கொள்ளப்படுகிறது.
கலாச்சார இயக்கத்தின் நிலை…
கேள்வி: இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சியோடு மிகவும் பலம் வாய்ந்த மற்றும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற கலாச்சார இயக்கம் பின்னிப் பிணைந்திருக்கும். அதேபோன்று அறிவுஜீவிகள் வட்டத்திலும் இடது சாரிகள் பல பத்தாண்டுகளாக மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஆனால், இன்று வலதுசாரிகள் மிகவும் பீற்றிக்கொள்ளும் ஒரு விசயம், ஒருபுதிய தேசிய விவரணைகளில் இடதுசாரிகளையும், சுதந்திரக் கருத்துடையவர்களையும் மிகவும் எளிதாக வெளியேற்றிவிட்டோம் என்பதே! அதைப் போன்றே வரன்களற்ற நுகர்வு, தனிமனித முக்கியத்துவம் (Individualism) போன்றவற்றின் வெற்றி முழக்கங்கள், அதிலும் குறிப்பாக புதிய தலைமுறை தொழில் நுட்பத்தின் வாயிலாக ஏற்பட்டுள்ளது. இது இடது கலாச்சார தலையீடுகளுக்கு எத்தகைய சவாலாக அமைந்துள்ளது? உங்களை புத்தாக்கம் செய்ய தேவைகள் உள்ளதா?
பதில்: கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்காளர்கள் பேராதரவுடன் 1930 மற்றும் 40 களில் உருவான கலாச்சார இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சுதந்திரப் போராட்ட இயக்கங்களின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தன. அதே போன்று ஒரு இடதுசாரி தேசிய அங்கமும் கூட இருந்தது. எனினும், இந்தமுற்போக்கு கலாச்சார இயக்கம் சுதந்திரம் பெற்ற பத்தாண்டுகளுக்குள் பிளவு பட்டது, ஒரு பகுதி அறிவு ஜீவிகளும், கலாச்சார பணியாளர்களும், தேசிய முதலாளிகளின் பின்னால் அணி திரண்டு, ஒரு நேரு அரசமைப்பு உருவாக்குவதற்கான ஜோதியைபிடிப்பவர்களாக மாறிப் போனார்கள். இத்தகைய சுதந்திர -முதலாளித்துவ கருத்தாக்கங்கள், முதலாளித்துவப் பாதையின்வளர்ச்சி மேலும் மேலும் திவாலான பின்னர் இவர்கள் தேய்ந்துபின்னர் உடைந்து போனார்கள்.
இந்த முதலாளித்துவ சுதந்திர கருத்து வட்டங்கள், மதசார்பின்மையிலும்,முற்போக்கு மதிப்பீடுகளான சாதிக்கு எதிரானபோராட்டங்கள் மற்றும்சமூக ஒடுக்குமுறைகள் போன்றவற்றில்சமரசம் செய்து கொள்கின்றன என்பதையே நாம் பார்க்கிறோம்.இடது முற்போக்கு கலாச்சார ஓட்டங்கள் 1980களிலேயே சிறுபான்மைப் போக்காக மாறியது. இடது கலாச்சார தலையீடுகளுக்கு எதிரான மிகப்பெரும் சவாலாக இருப்பது இரட்டைச் சவால்களான நவீன தாராளவாதமும், இந்துத்துவாவும். இடது, அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் பழங்கால கலாச்சாரப் பாரம்பரியத்திலும் நடைமுறைகளிலுமே சார்ந்துள்ளனர். அவர்கள் ஒரு புதிய கலாச்சார விழிப்புணர்வை உருவாக்கி, தற்காலச் சவால்களை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை கண்டறிந்து, புதிய தகவல் தொழில்நுட்பங்களை மிகவும் திறம்பட பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றொரு சவால், இந்துத்துவா தேசியவாதத்தை எதிர்கொள்வது. நாம் தேசியத்தை ராஷ்டிரிய சுயம் சேவக்கும், இந்துத்துவாசக்திகளும் அபகரித்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. இடதுசாரிகள் ஒரு மாற்று தேசிய வாதத்தை முன்னிறுத்த வேண்டும், அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாகவும், மதச்சார்பின்மை கொண்டதாகவும், மக்களின் அபிலாஷைகளான மேம்பட்ட வாழ்க்கை என்பதற்கு ஒத்திசைந்தும் இருக்க வேண்டும்.
சுரண்டல் – சாதிய ஒடுக்குமுறை
கேள்வி: காஞ்சா இலியாவிலிருந்து கெயில் ஓம்வெத் வரையுள்ள அறிவுஜீவிகள் கம்யூனிஸ்ட்கள் மீது வைக்கும் கூரான விமர்சனம் என்னவெனில், இந்திய கம்யூனிஸ்ட்கள் சமூகத்தின் சாதியை எதிர்கொள்வதில் தோல்வியடைந்து விட்டனர் என்பதாகும். இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில்என்ன? அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒற்றைப் புள்ளியான சாதிகளை ஒழிப்பது என்பதில் ஒன்றிணைவதற்கான நேரமில்லையா இது? அல்லது ஒவ்வொருவரும் மற்றவர்களோடு எந்தத் தொடர்பும் இன்றி தனித்தனியாக உட்கார்ந்து இருக்கப் போகிறோமோ?
பதில்: இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மீது சாதி குறித்து செய்யப்படும் சில விமர்சனங்கள், யாரிடமிருந்து வருகின்றது என்றால், இந்திய சமூகத்தின் அடுக்குகளில் சாதி மட்டுமே ஒரே அல்லது பெரும்பான்மை பிரிவு என்ற கருத்து உடையவர்களிடமிருந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு புரிதலை கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது. வர்க்கமும் சாதியும் இரண்டும் ஒருசேர இணைந்து இருக்கின்றன அவையிரண்டும் பின்னிப் பிணைந்துள்ளன. இதில் சிக்கலானது எதுவெனில், வர்க்க-சாதி பலாபலன்கள் முதலாளித்துவ வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. மார்க்சியவாதிகளாக நாங்கள், வர்க்க சுரண்டலுக்கு எதிரான போரையும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான யுத்தத்தையும் ஒன்றுடன் ஒன்றுபின்னிப் பிணைந்தது என்று பார்க்கிறோம். வர்க்கச் சுரண்டல் மற்றும் சாதிப் படிநிலைகள் இரண்டுமே இந்திய சமூகத்தின் அடிப்படையாக உள்ளன.
மிகவும் ஆரம்பகாலத்திலேயே, கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் முதல் கொள்கை ஆவணத்திலேயே (செயல்மேடைக்கான நகல்-டிராப்ட் பிளாட்பார்ம் ஆஃப் ஆக்சன்) சாதி முறையை ஒழிப்பதற்கும், சாதி அடிமைமுறையை ஒழிக்கவும் அறைகூவல்விடுத்துள்ளனர். இவ்வாறு சொன்னாலும், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு போக்கு உள்ளது (கடந்த காலங்களில் இந்த போக்குமிகவும் ஆதிக்கம் செலுத்தியது). அந்தப் போக்கு இயந்திரத்தனமாக புரிதலாகும், அதாவது வர்க்கப் போராட்டங்களின் காரணமாக வரும் ஒரு புரட்சி, அதன் மேற்கட்டுமானமாகிய சாதி போன்றவற்றையும் அடித்துத் தள்ளிவிடும் என்பதே அது. இது உண்மையில் புரட்சிகர இயக்கத்தை கட்டுவதில் தடைகளை உருவாக்கியது. புரட்சிகர இயக்கம் பல்வேறு வடிவங்களிலுள்ள வர்க்க மற்றும் சாதி ஒடுக்குமுறைகளை கணக்கில் கொண்டது. தற்போது அத்தகைய புரிதல் நிலவவில்லை.
கம்யூனிஸ்ட்டுகள் பீகாரில் நிலத்திற்காக பல போராட்டங்களையும், உயர்சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுகளே தீண்டாமைக்கு எதிரான,அது எந்த வடிவத்தில் இருந்தாலும், அதற்கு எதிரான போரில் முன்னணியில் உள்ளனர். ஆனால் நடைமுறையில், வர்க்கச் சுரண்டல், ஒடுக்கும் சாதி அமைப்பு இரண்டையும் உள்ளடக்கிய, ஒரு இயக்கத்தை கட்டுவது இன்னமும் சற்றுக் கடினமாகவே உள்ளது. முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும் சாதி அடையாளத்தை மிகவும் தீவிரமாகப் பயன்படுத்தும் யதார்த்தநிலை உள்ள போது, அடையாள அரசியல் என்பது நவீன தாராளமயத்தோடும் உலகமயத்தோடும் இரண்டறக் கலந்துள்ள நிலையில் இது மேலும் சவாலாக உள்ளது. இந்த சகாப்தத்தில், சாதி ஒழிப்பு என்பது நவீன தாராளமயத்திற்கு எதிராகவும், இந்துத்துவா நாட்டிற்கு அளிக்கும் மனுவாத படிநிலைக்கும் எதிராக ஒரு திட்டவட்டமான போராட்டத்தினை கோருகிறது.
இயக்க வரலாற்றில் சவாலான காலம்
கேள்வி: வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, சுதந்திரத்திற்குப் பின் உள்ள இந்திய வரலாற்றில், கம்யூனிஸ்ட்டுகளுக்கு மிகவும் சவாலான போக்கு எது என்பதை சுயவிமர்சன குறிப்புகளோடு, நீங்கள் கற்ற பாடங்கள் எங்கு என்பதை சொல்லமுடியுமா? அது சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும் நவீனதாராளமய முதலாளித்துவ உதயத்தின் போதா அல்லது பாரதீய ஜனதா கட்சி மற்றும் வலதுசாரிகள் பலம் பொருந்தியவர்களாக மாறிய தற்காலமா?
பதில்: ஏகாதிபத்தியத்திற்கு (ஆங்கில-மொர்) எதிரான போரில் கம்யூனிஸ்ட்கள் ஒரு சிறு ஆனால் முக்கியமான போக்காக இருந்தனர். அது எப்போதுமே தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைக்கு வரமுடியவில்லை. அந்த தலைமை என்பது காந்தி தலைமையிலான காங்கிரசிடம் தான் இருந்தது. இதுவே, இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கிற்கும், சீனஅல்லது வியட்நாம் நாடுகளில் அவரவர் நாடுகளின் விடுதலையில் தலைமைப் பங்கு வகித்த கம்யூனிட்டுகளுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம். சோவியத் யூனியன் வீழ்ச்சி என்பது நிச்சயமாக உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஆனால் இந்தியாவில் அந்த புயலை சிபிஐ(எம்) மற்ற உலக கம்யூனிஸ்ட் கட்சிகளை விட மேம்பட்ட வகையில் சமாளித்தது. அந்த ஏனைய கட்சிகளைப் போலல்லாமல், சிபிஐ(எம்)சோவியத் யூனியன் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையையோ அல்லது பாராட்டுதல்களையோ கொண்டிருக்கவில்லை. நாங்கள் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து மேலும்மேலும் பல விமர்சனங்களை வெளிப்படையாகவும், கட்சிகளுக்கிடையேயான மட்டத்திலும் தெரிவித்து வந்துள்ளோம். சிபிஐ(எம்) மார்க்சியத் தத்துவத்திலிருந்து வழுவவில்லை, ஏனெனில் அது உருவான காலந்தொட்டே பிரகடனப்படுத்தியது என்னவெனில், இந்திய நிலைமைகளுக்குப் பொருந்தும் வகையில் மார்க்சிய -லெனினியத்தை பிரயோகிப்பதில் இந்திய மார்க்சிஸ்ட்களே பொருத்தமானவர்கள், அவர்கள் இந்தியாவிற்கு ஏற்ற பாதையை வகுப்பார்கள் என்று அறிவித்தோம்.
ஆனால் எல்லா அனுமானங்களும் சர்வதேச நிலையிலும், தேசிய அளவிலும் மாறிவிட்டது. இந்தியாவிலும் நவீன தாராளமயம் மற்றும் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சி 1991க்குபிறகான காலகட்டத்தில்தான். அந்த நூற்றாண்டின் இறுதியில்இந்த இரட்டைப் போக்குகளின் பாதகமான தாக்கங்கள் கம்யூனிஸ்ட்டுகளாலும் இடதுசாரிகளாலும் உணரப்பட்டன. நான் இந்தியா சுதந்திரம் அடைந்ததிற்குப் பின் கம்யூனிஸ்ட்களின் இயக்க வரலாற்றில் இதையே மிகவும் சவாலான காலமாகப் பார்க்கிறேன். இந்திய சமூகத்திலும் வர்க்கங்களிலும் பெரும் மாற்றங்களை கொண்டு வந்து பேரழிவை உண்டாக்கும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவது,மாறுதல்களுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் புரிதல்களையும், எங்கள் யுக்திகளையும் எப்படி மாற்றியமைப்பது போன்றவற்றிற்கு எங்களுக்கு கொஞ்சம் காலம் பிடித்தது என்பதை நாங்கள் சுயவிமர்சனத்தோடு பதிவு செய்துள்ளோம். நாங்கள் சுதந்திரமான இடதுசாரிகளின் (லிபரல் லெப்ட்)விவரணையில் நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு பற்றிய பார்வையில் உள்ள குறைகள் மற்றும் விலகல்களை பொருட்படுத்தாமல் இந்தியாவின் பலமான ஜனநாயக மதச்சார்பின்மை பற்றிய விவாதங்களை உள்ளே கொண்டு வந்துள்ளோம். இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக வரும் போது அதன் திரட்டக் கூடிய திறன் மற்றும் வளம் பற்றிய குறைமதிப்பீட்டிற்கு இட்டுச் சென்று விட்டது.இவைகளிலிருந்து கற்ற பாடங்கள் கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் புத்துயிர்ப்புடன் ஒரு பொது மேடையை உருவாக்க உதவியுள்ளது.
பரந்துபட்ட ஒற்றுமையே
கேள்வி: பீகார் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு பொதுவான கூட்டணி, மகாகட்பந்தன், உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டீர்கள். நீங்கள் இதரமாநிலங்களிலும், இத்தகைய ஒரு கூட்டணியில் பங்கேற்பீர்களா? இந்துத்துவா சக்திகளின் சவால்களின் காரணமாக மீண்டும்தனித்து நிற்கவோ அல்லது மூன்றாவது அணி அமைக்கவோ வாய்ப்பே இல்லையா?
பதில்: சிபிஐ(எம்) எல்லாக் காலங்களிலும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தல் புரிந்துணர்வோ கூட்டணியோ அமைத்து, ஆளும் வர்க்கம் மற்றும் அதன் கூட்டணிகளின் முக்கியக் கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு வந்துள்ளது. பீகாரில்,மகாகட்பந்தன் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததிற்கு அது பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதள் கூட்டணிக்கு எதிர்ப்பாக உள்ளஅனைத்து கட்சிகளையும் தன்னகத்தே சேர்த்துக் கொண்டதுதான். மகாகட்பந்தனில் இடதுசாரிகளின் பங்களிப்பு மிகவும்முக்கியமானது. இதர மாநிலங்களிலும் பரந்துபட்ட பாஜக எதிர்ப்புகட்சிகளின் ஒற்றுமை அவசியமாகவுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலுள்ள வலுவான கூட்டணியில் பல கட்சிகள் அஇஅ திமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து போட்டியிடப் போகின்றன. அதிகாரவெறி ஆபத்து உள்ள தற்போதைய நிலைமையில், எங்களின் அழுத்தம் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பரந்துபட்ட ஒற்றுமை என்பதே தவிர, மூன்றாவது அணி இல்லை.
சோசலிசத்தின் மீது ஈர்ப்பு
கேள்வி: உலகம் முழுவதும் கோவிட்19 பெருந்தொற்று காலத்தில் அரசுகளின் பொது தலையீடு என்பது மக்களின்கவனங்களை ஈர்த்தது. நீங்கள், உலகளாவிய பெருந்தொற்றுச்சூழல், சோசலிசம் என்ற தத்துவத்தின் ஈர்ப்பை பலப்படுத்தியுள்ளதாக பார்க்கிறீர்களா?
பதில்: கோவிட் பெருந்தொற்று, பொது சுகாதார அமைப்புகளின் தேவை, இத்தகைய வைரஸ் தொற்றுகளை சமாளிக்க மிகவும் அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது.மருத்துவ அமைப்பு கிட்டத்தட்ட முழுமையாக தனியார் வசமுள்ள அமெரிக்காவுக்கும், சீனா, வியட்நாம், கியூபா போன்ற பலமான பொது மருத்துவ சேவை உள்ள நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொது மருத்துவம் மற்றும் கூட்டு முயற்சியே பெருந்தொற்றை எதிர்த்துப் போராடத் தேவை என்பது மக்களின் கவனத்தை கவர்ந்திருப்பது சோசலிசத்திற்கு நன்மை பயப்பதாகும். உதாரணமாக அமெரிக்காவில்16 மில்லியன் பேருக்கு தொற்று மற்றும் உலகில் இறந்தவர்களின் 20 சதமானம் பேர் அமெரிக்கர்கள் என்பது முதலாளித்துவம் மக்களின் ஆரோக்கியத்திற்கு என்ன செய்துள்ளது என்பதற்கு கடுமையான எச்சரிக்கை. கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு நாம் இந்த செய்தியை மக்களிடம் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும்.
கட்டுரையாளர் : பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) நன்றி: பிரண்ட்லைன் தமிழாக்கம்: தூத்துக்குடி க.ஆனந்தன்