புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு அறிக்கை
====================================
மனிதம் – மனித உரிமைகள் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கினைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் வழக்கறிஞர் R.சரவணன், மனிதம் அமைப்பின் தமிழ்நாடு மாநிலகுழு உறுப்பினர் ஜோ.லெனின், புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் என்.கொளஞ்சியப்பன், பொருளாளர் V.உமாசாந்தி, இணை செயலாளர்கள் குப்புசாமி, ஹரிகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் T.G.முனியம்மாள், துணைத் தலைவர் E. சத்தியா, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க இணை செயலாளர் V.லீலாவதி மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் M. மகாலஷ்மி, G. பிரீத்தி அகசினா, R. ராம்குமார், S. பிரித்திவிராஜ் மற்றும் A.ஆபேத் நெகொ ஆகியோர் உண்மை அறியும் குழுவாக தகவல்களை திரட்டி இவ்வறிக்கையை வெளியிடுகிறோம்.
கடந்த 21.03.2023 அன்று புதுச்சேரி எங்கள் குழுவின் சார்பில் சிறையில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களை காணச் சென்றோம். மதியம் 2 மணியளவில் நாங்கள் சிறை கண்காணிப்பாளருக்குக் கடிதம் கொடுத்து காத்திருந்தோம். 3.30 மணி அளவில் நாங்கள் கைது செய்யப்பட்டவர்களை காணலாம் என்று கூறினார்கள். ஆனால் எங்கள் கண்ணெதிரே நான்கு பேரை தமிழக காவல்துறையினர் புதுச்சேரி சிறையில் இருந்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் இரண்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நாங்கள் தலையிட்டு அவர்களிடம் பேச முயன்றபோது “நாங்கள் தமிழக காவல்துறை, உங்களை பார்க்க அனுமதிக்க முடியாது” என கூறினர். மனுகொடுத்து காத்திருந்த எங்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை. பிறகு நாங்கள் காட்டேரிகுப்பம் அருகிலுள்ள ஆறு புளியமரம் என்ற பகுதிக்குச் சென்றோம். அங்கு கஸ்தூரி என்ற பெண்ணை பார்க்க சென்ற பொழுது அவர்கள் அங்கு இல்லை. அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டதில் அவர் புதுச்சேரியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதாக கூறிவிட்டார். பிறகு 9 மணி அளவில் அவரை நேரில் சந்தித்து பேசினோம் அதற்கு அவர் நாளை காலை ஆறு புளிய மர பகுதிக்கு வர வருமாறு எங்களிடம் கூறினார்.
22.03.2023 அன்று மதியம் 3 மணி அளவில் செங்கேனி மற்றும் ரமேஷை சிறையில் சென்று பார்த்தோம் அவர்கள் இருவரும் ”நாங்கள் எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடவில்லை, எங்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி போலீஸார் தாக்குவதாக” கூறினார்கள். பிறகு 6 புளியமரம் பகுதிக்குச் சென்றோம் அங்கு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் 40க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடினோம். கற்பகம், வள்ளி, ராஜி, ஜெயலட்சுமி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் எங்களிடம் சம்பவம் சம்பந்தமாக கூறினார்கள்.
23.03.2023 அன்று மீண்டும் சிறைக்குச் சென்று சங்கர் மற்றும் அய்யனாரை சந்தித்தோம். அவர்களும் எங்களிடத்தில் தாங்கள் எந்தவிதமான குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்கள். பிறகு நாங்கள் செல்லிப்பட்டு பகுதிக்குச் சென்று அங்குள்ள பாலு செங்கல் சூலையில் வசித்து வரும் ஜெயலஷ்மி மற்றும் அவரது மகள் மாலதி மற்றும் மகன் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தோம். குழந்தைகள் தாக்கப்பட்டது சம்பந்தமாக எங்களிடம் தெரிவித்தார்கள்.
உடனடியாக நாங்கள் சைல்ட் ஹெல்ப் லைன் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தோம் அதற்கு அவர் நாங்கள் கூறிய புகாரை பதிவு செய்து விட்டதாக கூறினார். பிறகு சில மணி நேரம் கழித்து எங்களுக்கு போன் செய்து நான் உதவி ஆய்வாளர் சரண்யா அவர்களை தொடர்பு கொண்டு ”நீங்கள் கூறுவது உண்மைதானா என்று கேட்டு மீண்டும் தொடர்பு கொள்கிறேன்” என்று வைத்து விட்டார்.
மறுநாள் சைல்டு ஹெல்ப் லைனில் இருந்து எங்களுக்கு பலமுறை போன் செய்தார்கள் எங்களை நேரில் வந்து புகார் அளிக்குமாறு கூறினார்கள். அன்று மதியம் இந்த குழுவில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் நேரடியாக புதுச்சேரி குழந்தைகள் நல குழுவிடம் சென்று புகார் அளித்தனர். குழந்தைகள் நல தலைவர் எங்களை காவல்துறை ஐ.ஜிக்கு புகார் அளிக்க சொன்னார். நாங்கள் அவ்வாறே காவல்துறை ஐஜிக்கு புகார் அளித்துள்ளோம்.
இருளர்கள் என்ற ஏளன பார்வை:
முதலில் இப்படி இருளர்கள் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணி மிகவும் சமூகத்தை வெட்கப்பட வைக்கும் பின்னணியை கொண்டதாக இருக்கிறது. இருளர்கள் என்னாறாலே அவர்கள் குற்றவாளிகள் என்ற என்னை அதிகார வர்க்கத்தில் இருப்பது பல வழக்குகளில் கண்கூடாக காணமுடிகிறது. ஜெய்பீம் என்ற திரைப்படமாக வந்ததால் கம்பாபுரம் ராஜகண்ணு வழக்கு உலகம் அறிந்த சம்பவமாயிற்று. இன்னும் இப்படியான சம்பவங்களை காவக்துறையினர் நிறுத்துவதாக இல்லை.
பிரிட்டிஷ் ஆட்சியில் குற்றப் பரம்பரை என அறிவித்து (Criminal Tribes Act 1911) அவர்கள் கொடுமை செய்யப்பட்டது, விடுதலைக்கு பிறகும் வேறு வடிவங்களில் தொடர்கிறது. காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் இவர்களே இலக்காக மாறுகின்றனர். இந்த வழக்குகூட 2022 நவம்பர் 4 ஆம் தேதி போடப்பட்ட வழக்காகும்.
காட்டேரிக்குப்பம் போலீசாரின் அட்டுழியம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காலிங்கமலை அஞ்சல், வழுதாவூர் ரோட்டின் அருகே உள்ள K.V.P செங்கல் சூலையில் வேலை செய்து வந்த பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த ஏழு பேரை கடந்த 26.02.2023 அன்று புதுச்சேரி மாநிலம், காட்டேரிக்குப்பம் காவல் நிலைய போலிசார் சட்டத்திற்கு புறம்பான வகையில் விசாரணைக்காக அழைத்துச் சென்று. சித்திரவதை செய்து பொய் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
காட்டேரிக்குப்பம் போலீசார் மேற்படி கே.வி.பி. செங்கல் சூளையிலிருந்து 25.02.23 சனி இரவு முதல் 26.02.2023 ஞாயிறு இரவுவரை அ.செங்கேணி (48). கு.அப்பு (18), ஆ.அய்யப்பன் (42), ஏ.செங்கேணி (24), க.கன்னியப்பன் (16). தே.சங்கர், அ.அருணாசலம் (20), கார்த்தி (24), சூளை உரிமையாளர் ரமேஷ் ஆகிய ஒன்பதுபேரை கடத்தி காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் மூன்று நாட்கள் கடுமையாக சித்திரவதை செய்து, செய்யாத குற்றங்களை ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர்.
மேலும் விசாரணை என்ற பெயரில் கேவிபி செங்கல் சூளையில் வேலை செய்துவரும் கற்பகம், அவருடைய மகள் கார்த்திகா, மேற்படி ஏ.செங்கேணி மனைவி ராஜி, ரமேஷ் மனைவி சித்ரா, அருகில் உள்ள செல்லிப்பட்டு செங்கல் ஜெயலட்சுமி, அவரது மகள் மாலதி. சூளையில் அவரது மகன் சந்தோஷ், அருணாசலம் ஆகியோரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். பெண்களை மானபங்கப் படுத்தியுள்ளனர்.
கடந்த 25. 02. 2023 அன்று நள்ளிரவு 1:30 மணி அளவில் புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் ரோடு ஆறு புலியமரம் அருகே உள்ள வெங்கடேசன் என்பவரின் கேவிபி செங்கல் சூலையில் பணிபுரியும் செங்கேனி (45) வயது த/பெ ஐயப்பன் மற்றும் அப்பு (17) ஆகியோரை மீன் பிடிக்க சென்று திரும்பும் பொழுது விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை 26/3/2023 சுமார் 8:30 மணி அளவில் மீண்டும் அதே செங்கல்சூலைக்கு சென்ற காட்டேரிக்குப்பம் போலீசார் அய்யனார் என்கின்ற ஐயப்பன் 50 காட்டுப்பூனை என்கின்ற செங்கேனி (25), கட்டப்பா என்கின்ற கன்னியப்பன் (17) ஆகியோரை போலீசார் ஜீப்பில் ஏற்றி உள்ளனர் இதை கண்ட ஐயப்பனின் மனைவி கற்பகம் “யார் நீங்கள் எங்கு அழைத்து செல்கிறீர்கள்” என கேட்டதற்கு ஒரு போலீசார் அவரை தோள்பட்டையில் அடித்துள்ளனர். மாலை 6:30 மணிக்கும் போலீசார் சென்று மிரட்டி சென்றுள்ளனர் பிறகு நள்ளிரவு 12 மணிஅளவில் 5 போலீசார் அய்யனார் மற்றும் செங்கேனியை அழைத்துக் கொண்டு குடிசைக்கு சென்றுள்ளனர் கற்பகத்தின் மகள் ராஜியை முட்டி போடவைத்து மாறிமாறி அடித்து அவரது ஜாக்கெட்டை கழட்டிவிட்டு மார்பில் அடித்துள்ளனர்.
அருகில் இருந்த சின்ன ஓனர் என அழைக்கும் ரமேஷ் மற்றும் இருளர்களை பார்ப்பதற்கு சூலைக்கு வந்திருந்த உறவினரான, விழுப்புரம் மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் த/பெ தேவராஜ் (35) என்பவரையும் அழைத்து சென்றுள்ளனர்.
ஏழு பழங்குடி இருளர்களையும் காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சரண்யா அவர்கள் தலைமையில் சுமார் ஐந்து போலீசார், நகை கேசை ஒத்துக்கொள்ளச் சொல்லி லத்தி, கடப்பாறை போன்றவற்றைகளால் கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர் மேலும் உதவி ஆய்வாளர் சரண்யா பச்சைமிளகாயை பிழிந்து சாறை இருளர்களான கன்னியப்பன், அப்பு ஆகிய இருவரின் கண்ணிலும் விட்டும், முகம் முழுவதிலும் தேய்த்தும் சித்திரவதை செய்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் சூலையில் உள்ள கொட்டாயில் சோதனையிட்டுள்ளனர் பின்பு ரமேஷ் வீட்டிலிருந்த வெள்ளி கொலுசு வெள்ளி, குருமாத் நகை அடகுவைத்த ரசீது மற்றும் 3 டச்சு செல்போன், ஒரு சாதா செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர் மேலும் காவல்நிலையத்தில் இருந்த அப்புவை திருக்கனூரில் உள்ள ஒரு நகை அடகு கடைக்கு அழைத்து சென்று இங்குதான் நகைகளைக் கொடுத்ததாக சொல்ல சொல்லியுள்ளனர் மேலும் கடும்சித்திரவதைகளுக்கு பின்பு போலீசார் அருணாச்சலம் என்பவரை விட்டுள்ளனர்.
போலீசாரில் சித்திரவதை தொடர்பாக 27ஆம் தேதி கற்பகம் க/பெ அய்யனார் என்கின்ற ஐயப்பன் 28 ஆம் தேதி ஜெயலட்சுமி க/பெ பச்சையப்பன் மற்றும் 02.03. 2023 ஆம் தேதி அருணாச்சலம் ஆகியோர் உயர்அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியுள்ளனர். காட்டேரிக்குப்பம் காவல் கடந்த 03.11.2023 அன்று பதியப்பட்டிருந்த குற்றவியல் எண் 70/2022 என்கிற திருட்டு வழக்கில் 28.2.2023 அன்று 5 பழங்குடி இருளர்களையும் கைதுசெய்து, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர் இவர்கள் ஐந்துபேரும் தங்களை போலீசார் அடித்து சித்திரவதை செய்ததை சிறை கண்காணிப்பாளரிடம் கூறி அவற்றை பதிவு செய்துள்ளனர்.
அப்பு மற்றும் கன்னியப்பன் ஆகிய இருவரையும் வயது குறித்த சந்தேகம் காரணமாக நீதிபதி சிறையில் அடைக்க மறுத்துள்ளார் அதன் பிறகு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்ற போலீசார் மருத்துவச் சான்று பெற்று 01.03.2023 அன்று புதுச்சேரி அரியாங்குப்பம் சிறுவர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த இருவரும் நீதிபதியிடம் தங்களை போலீசார் அடித்து சித்திரவதை செய்ததை கூறியுள்ளனர்.
காட்டேரிக்குப்பம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மின்சார ஒயர் திருட்டு சம்பவம் தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போலீசாருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர் இதனால் கடந்த இதழ் 2022 ல் பதியப்பட்ட வழக்கு ஒன்றில், செங்கல் சூளையில் வேலை செய்யும் பழங்குடி இருளர்களை பொய்யாக சேர்த்துள்ளனர் எனஅறியமுடிகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு பிரச்சனை:
புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பொதுக் கழிப்பிடம் இல்லை. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சூழலை உருவாக்க, வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கழிப்பிடம் கட்டித்தர அரசுநிதி ஒதுக்கீடு செய்து அனுமதிதந்தது.
இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகளை ஒப்பந்த தாரரிடம் ஒப்படைத்தனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, கழிப்பிடம் கட்டுவதற்கான பொருட்களை வாங்கி வைத்துவிட்டு சென்ற ஒப்பந்ததாரர் அதன்பிறகு பணிகளை செய்யவில்லை. இதையடுத்து ஆட்சியர், எம்.எல்.ஏ ஆகியோரிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
கடந்த சில மாதங்கள் முன்பு ஆட்சியர் நேரில் வந்து பார்த்தார். அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டபோது, “டெண்டர் விட்ட ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டார். அதனால் இப்பணி நடக்கவில்லை” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்காக ஒதுக்கிய பணம் எங்கு போனது என தெரியவில்லை.
இந்த செய்தி தமிழ் இந்து பத்திரிக்கையிலும், செய்தி தொலைகாட்சிகளிலும் 19.02.2023 அன்று வெளியான பின்னணியில், இப்பிரச்சனை ஆளும் ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாய் உருவன சூழலில், இம்மக்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட அடுத்த சில நாட்களில் அதாவது 25.02.2023 அன்று அவர்கள் மீது பொய் வழக்குகளும், கொடூரமான தாக்குதல்களும் நடந்துள்ளது. இந்த கோணத்திலும் இந்த வழக்கு விசாரனையை தொடங்கிட வேண்டும்.
இதுவரை போடப்பட்டுள்ள பொய் வழக்குகள்:
மேற்படி சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 8 புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இறுதியாக கடத்திச் செல்லப்பட்ட அருணாச்சலம் மற்றும் கார்த்தி ஆகிய இருவருரையும் 28.02.2023 அன்று மாலை விடுவித்துள்ளனர். மீதி 7 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்களான அப்பு, கன்னியப்பன் ஆகிய இருவரும் கடலூர் ஆல்பேட்டை இரா.பாபு, வழக்கறிஞர் பிரவீன் உதவியுடன் 07.03.2023 அன்று பிணையில் வெளிவந்துள்ளனர்.
புதுச்சேரி போலீசார் காட்டேரிக்குப்பம், மங்களம், வில்லியனூர் காவல்நிலையங்களில் 4 திருட்டு வழக்குகளையும், மயிலம் போலீசார் 2 திருட்டு வழக்குகளையும் போட்டுள்ளனர். இன்னும் கண்டமங்கலம் 2, காட்டேரிக்குப்பத்தில் பலவழக்குகள் போடுவதற்கு வசதியாக அப்பாவி இருளர்களை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மேற்கண்ட சம்பவங்களில் நாங்கள் விசாரித்த வரை காவல்துறை கைது செயும் போது கடைபிடிக்க வேண்டிய எந்த நடைமுறையையும் மேற்கொள்ளவில்லை என்பதும், தேவையற்ற முறையில் பெண்களின் ஆடைகளை கலைந்தும் கண்ணியம் இல்லாத முறையில் நடந்து கொண்டதும் தெரிய வருகிறது, சிறுவர்களை அடிப்பதும், துன்புறுத்துவதும் மனித தன்மையற்ற செயல் மட்டுமல்ல, சட்ட விரோத செயலுமாகும். அப்பாவி இருளர்கள் மீது பலவந்தமாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வன்முறையை ஏவி விடுவது சகிக்க முடியாத குற்றமாகும்.
இதுவரை களத்தில்..
- 13.03.2023 அன்று மக்கள் உரிமை கூட்டமைப்பு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புகள் சார்பில் இந்த சம்பவத்தை கண்டித்தும், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 17.03.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (துண்டறிக்கை இணைப்பு)
- 20.03.2023 அன்று விழுப்புரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இருளர் பழங்குடி அமைப்புகள் சார்பில் இருளர் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் (துண்டறிக்கை இணைப்பு)
- 21.03.2023 அன்று விடுதலை சிறுத்தைகள் அமைபின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
- 25.03.2023 அன்று புதுசேரி சட்டசபை முன்பு தலித் மக்கள் மற்றும் பழங்கிடியினர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரிந்துரைகள்:
- 1. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பழங்குடி இருளர்கள் என்பதால் காட்டேரிக்குப்பம் உதவி ஆய்வாளர் சரண்யா உள்ளிட்ட அனைத்து போலீசார் மீதும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018 ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
- காட்டேரிக்குப்பம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா உள்ளிட்ட சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசாலரயும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு தலா 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்ல அவர்கள் மீது புனையப்படுள்ள பொய்வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.
- 20 ஆயிரம் மதிப்புள்ள 50 கழிவரை பிரச்சினையில் உரிய விசாரனை மேற்கொள்வது மட்டுமல்ல அம்மக்களுக்கு உடனடியாக அக்கழிவரைகளை கட்டிக்கொடுக்க வேண்டும்.
- இந்த சம்பவத்தில் தமிழகம் மற்றும் புதுசேரி ஆகிய இரண்டு மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதால் இவ்வழக்கை மத்திய புலணாய்வு குழு (CBI) விசாரிக்க வேண்டும்.
இணைப்புகள்:
1. காட்டேரிகுப்ப காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை
2. மயிலம் காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை
3. புதுச்சேரி அரசு குழந்தைகள் நல குழுவிடம் அளித்த புகார் மனு
4. புதுச்சேரி காவல்துறை தலைவர் (IG) அவர்களிடம் அளித்த புகார் மனு
5. பாதிக்கப்பட்ட அய்யனாரின் மனைவி கற்பகம் கண்டமங்களம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவிம் ரசீது
6. இதுவரை நடந்த போராட்டங்கள் குறித்த துண்டறிக்கைகள்
7. கள ஆய்வின் போது எடுத்த புகைப்படங்கள்
8. காடேரிகுப்பம் இருளரின மக்கள் கழிவரை பிரச்சினை குறித்த செய்தி