1920- அக்டோபர் 17-ல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உதயமான பிறகு இந்திய விடுதலை இலட்சியம் புதிய வடிவம் தரத் தொடங்கியது.
புதிய சிந்தனை, புதிய பார்வை, புதிய இந்தியக் கனவினை முழு விடுதலை எனும் முழக்கத்துடன் கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்தனர்.
1920-ம் ஆண்டு முதல் கிளை துவக்கத்திலிருந்தே இந்திய விடுதலை பற்றி ஆழமான சிந்தனையை கம்யூனிஸ்டுகள் கொண்டிருந்தனர். 1921-ம் ஆண்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு விடுதலை என்கிற குறிக்கோளை தொடர்ந்து எழுப்பி வந்தது. 1921-ல் அகமதாபாத்தில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் எம்.என் ராய், அபானி முகர்ஜி கையெழுத்திட்ட ஒரு அறிக்கையை மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகள் இடையே கம்யூனிஸ்டுகள் விநியோகித்தனர்.
அந்த அறிக்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா முழு விடுதலை பெற வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தது. பிரிட்டிஷ் பேரரசிடம் இருந்து காங்கிரஸ் கட்சி முழுமையாக தனது உறவுகளை துண்டித்துக் கொண்டு ,தொழிலாளி வர்க்க ,விவசாய பிரிவினரின் போராட்டங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்தது .
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அகற்றப்பட்டு அந்த இடத்தில் இந்திய முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆட்சி வரக்கூடாது என்றும், தொழிலாளிகள் விவசாயிகள் கொண்ட வர்க்க கூட்டணியே விடுதலைக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்றும் கம்யூனிஸ்டுகள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் .
முழு விடுதலை இலட்சியத்துடன் தொழிலாளிகள், விவசாயிகள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் அன்றைக்கிருந்த குறுகிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு பணியாற்றினர்.
1928-ம் ஆண்டுகளில் விவசாயிகள் தொழிலாளர்கள் போராட்டம் உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் எழுச்சியுடன் நடைபெற்றன.1928-ம் ஆண்டு குஜராத்தில் வரிகொடா இயக்கம் விவசாயிகள் தலைமையில் நடைபெற்று வெற்றியை பெற்றது. 1928-ம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக வேலைநிறுத்தம் நடைபெற்றது . அன்றைய பம்பாயில் பஞ்சாலை மில்களில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 1928-ம் ஆண்டு மட்டும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன .இதில் பல வேலை நிறுத்தங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கினர்.
புரட்சிகர பாட்டாளி வர்க்க அரசு
இந்த நிகழ்வுகளுடன் இணைந்ததாக புரட்சிகர குழுக்கள் செயல்பட்டு வந்தன .புரட்சியின் வழியாக தொழிலாளர் விவசாயிகளின் அரசு அமைய வேண்டும் என்று அவர்கள் புரட்சிகர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த இயக்கங்களின் உன்னத தலைவராக பகத்சிங் திகழ்ந்தார். தங்களுடைய நோக்கத்தைப் பற்றி குறிப்பிடுகிற போது “மனிதனை மனிதன் சுரண்டும் முறையை முடிவுக்கு கொண்டும் வரும புரட்சிக்காக பணியாற்றுவது தான் “என்று பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் அழுத்தமாக அறிவித்தனர். எனவே, ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து முழு விடுதலை பெற்று புரட்சிகர பாட்டாளி வர்க்க அரசு அமைய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் கம்யூனிஸ்டுகளும் புரட்சியாளர்களும் அன்று செயல்பட்டு வந்தனர்; மற்றவர்கள் அடிமைத்தனம் அகல வேண்டும் என்று ஒரு எல்லைக்கு உட்பட்டு சிந்தித்த நிலையில் இந்தியாவுக்கு பொருத்தமான ஒரு மாற்றினை கம்யூனிஸ்டுகளே கொண்டிருந்தனர்.
இந்திய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைமைகளை ஆராய்ந்து ,இந்திய மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான ,தீர்வுகளை காண முயன்ற முதல் கம்யூனிஸ்ட் யாராக இருக்க முடியும்? நிச்சயமாக அந்த முதல் கம்யூனிஸ்ட் கார்ல் மார்க்ஸ்தான். அவருடன் இணைந்து பிரெடெரிக் எங்கல்ஸ் அந்த பணிகளை மேற்கொண்டார்.
1850களில் இருந்தே, ஆசியப் பொருளாதாரம் பற்றி மார்க்ஸ் எழுதி வந்தார். இந்திய, சீன பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சனைகள், அவை மீது ஐரோப்பிய முதலாளித்துவம் ஏற்படுத்தி வந்த பாதிப்புகள் குறித்தும் மார்க்ஸ் எழுதிவந்தார். அதுமட்டுமல்ல, எதிர்கால உலக முன்னேற்றத்திற்கே, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் விடுதலை பெற வேண்டியது அவசியம் என்றும் மார்க்ஸ எழுதினார்.
அவரது விரிந்த உலகப் பார்வையில் உலக பிரச்சனைகளுக்கான தீர்வில் இந்திய நிலையை ஆராய்ந்து இந்திய விடுதலையை அவர் வலியுறுத்தியது இன்றைக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.இந்த அளவில் அந்த காலகட்டத்தில் சிந்தித்த அறிஞர் யாருமில்லை.
1850களில் இந்திய நிலை பற்றி மார்க்ஸ் ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வருகின்றார். ஒன்று, இந்தியாவில் ஆங்கிலேயர் செய்துவருவது அழித்தல் வேலை. அதாவது உள்நாட்டு பாரம்பரியமான தொழில்களை அழிப்பது, கிராமங்களின் பொருளாதார வாழ்க்கையை குலைத்து வேளாண்மையில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது, இரக்கமில்லாத வரி வசூலை மேற்கொண்டது, கிழக்கிந்திய கம்பெனி நேரடிக் கொள்ளை மூலம் இந்தியாவின் செல்வ களஞ்சியங்களை கொள்ளை கொண்டு சென்றது போன்ற அத்தனையும் அவர்களது அழித்தொழித்தல் வேலையாக இருந்தது என்பதை ஏராளமான விவரங்கள் ஆவணங்கள் அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் விளக்குகிறார். இவ்வாறு பலவற்றை அழித்து அவற்றால் நிர்க்கதியான மக்களுக்கு மாற்று வழியும் இல்லாமல் போன ஒரு நிலைமையை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படுத்தியது.
அவர்களது ஆட்சியின், இரண்டாவது அம்சமாக மார்க்ஸ், இந்தியாவில் முதலாளித்துவத்தை கட்டமைக்க அவர்கள் செய்த பணியை விளக்குகிறார்.
ரயில்வே போக்குவரத்தை கொண்டு வந்தது; சாலைகள் அமைத்தது உள்ளிட்ட தொழில்துறை வளர்ச்சிக்கான சில அடிப்படைகளை தங்களது சுரண்டல் தேவைக்காக அவர்கள் மேற்கொண்டாலும் அது எதிர்கால முதலாளித்துவ வளர்ச்சிக்கான பயணத்தை துவக்கியது. இந்த அம்சத்தை மார்க்ஸ் விளக்கி இறுதியாக ஒரு முடிவினை முன்வைக்கின்றார் .
இந்தியாவில் தங்களுக்கான ஒரு புதிய சமூகத்தை மக்களே அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு ஏகாதிபத்தியத்திடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிற ஒரு அரசியல் மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி மார்க்ஸ் வழிகாட்டுகிறார். சாதாரண ஏழை மக்களின் விடிவிற்கு அன்றே சிந்தித்தவர் மார்க்ஸ். எனவே, இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்தவர் காரல்மார்க்ஸ் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மை.
நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி
இந்த நெடிய சிந்தனை வரலாற்றின் தொடர்ச்சியே, 1920களில் கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் முன்வைத்த முழுமையான விடுதலை என்கிற முழக்கம். முழுமையான விடுதலை என்கிற முழக்கத்தை என்கிற இந்திய நிலைமைகளில் பொருத்தி கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்துச் சென்றனர். இந்த முழக்கம் காரணமாகவே ஆங்கிலேய அரசின் கொடூரமான அடக்குமுறைகளை கம்யூனிஸ்டுகள் எதிர் கொண்டனர். ஏராளமான கம்யூனிஸ்டுகள் கைதாகி பல சதி வழக்குகளுக்கு ஆளாகினர்.
1929 மீரத் சதி வழக்கில் விரிவான அரசாங்க விசாரணை நடைபெற்றது 31 தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் அவர்களில் முசாபர் அகமது, எஸ்.ஏ. டாங்கே, பிசி ஜோஷி, ஜி.எம் அதிகாரி போன்ற பலர் பின்னாளில் கம்யூனிச இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக செயல்பட்டனர்.
சதி வழக்குகளுக்கு ஆளாகி குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து புதிய இந்தியாவை பற்றி ஏராளமான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள் உண்மையிலேயே அவர்கள் நீதிமன்றத்திலிருந்து ஆற்றிய அந்த உரைகள் இந்திய விடுதலை இயக்கத்தில் மிக முக்கியமான ஆவணங்கள் அவர்களது நீதிமன்ற உரைகள் இந்திய மக்கள் மீதும், சோசலிச லட்சியத்தின் மீதும் அவர்களது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.
அக்டோபர் 17 கம்யூனிஸ்டுகளின் வரலாற்றை பெருமையுடன் நினைவுபடுத்திக் கொள்வதற்கான தினம். உழைக்கும் மக்களின் அரசு அமைய வேண்டும் என்ற கனவினை நனவாக்கிடும் பாதையில் உறுதியாக பயணிக்க உறுதியேற்கிற நாளாக அக்டோபர் 17 அமையட்டும்!!!
-தோழர் என்.குணசேகரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > சிறப்புக் கட்டுரைகள் > இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை அமைப்பு தினம்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை அமைப்பு தினம்.
posted on
You Might Also Like
ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்
October 4, 2024