கன்னட வார இதழான லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி பசவன்குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் சென்றபோது, பிஜேபி வழிகாட்டுதலில் RSSன் துணை அமைப்பை சேர்ந்த நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கௌரி லங்கேஷின் மார்பு, கழுத்து, வயிறு பகுதியில் மூன்று இடங்களில் குண்டு பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், மதவாத எதிர்ப்பாளருமான கெளரி லங்கேஷ் (55) பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்தார். உயிரிழந்த கெளரி லங்கேஷ், மூத்த பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள். இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்தார். கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தெரிவித்தவர்.
1980ம் ஆண்டு ஆங்கில ஊடகத்தில் தனது பணியைத் தொடங்கிய கௌரி, 2000-ஆவது ஆண்டில் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். மேலும் கௌரி லங்கேஷ் பத்திரிகா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதிலும் வெற்றி கண்டார். இந்த நாள் வரை எந்த விளம்பரமும் இல்லாமல் வெறும் வாசகர்களின் கட்டணத்தைக் கொண்டே இந்த பத்திரிகை இயங்கி வருகிறது.
கொலை மிரட்டல்களுக்கு அஞ்சாதவர்
2000ஆவது ஆண்டில் கௌரி லங்கேஷ்கரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில், கொலை மிரட்டல்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, என் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து என்றுமே நான் பயம் கொண்டதில்லை. நான் நள்ளிரவு 3 மணிக்குக் கூட வீடு திரும்புவேன். ஒரே ஒரு நாள் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது சேலைக்கட்டிக் கொண்டு ஒரு ஆண் என்னை நடுரோட்டி வழிமறித்தார். அதைத் தவிர இதுவரை வேறு எந்த அச்சுறுத்தலையும் நான் சந்திக்கவில்லை. ஆனால் அதன் பிறகு, வீடு வரை என் கார் ஓட்டுநரை துணைக்கு அழைத்து வர ஆரம்பித்தேன். இது தவிர சில முறை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், என்னை மிரட்டுபவர்களிடம், உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவேன். என்னைப் பற்றி மோசமாக எழுத வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். அதற்கும் நான் கவலைப்பட மாட்டேன் என்றே பதிலளித்துள்ளேன் என்றார்.
பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானவர்
இந்திய குடிமகனாக பாஜகவின் மதக் கொள்கைகளையும், மத ரீதியிலான அரசியலையும் எதிர்க்கிறேன். இந்து தர்மா என்ற பெயரில் மக்களுக்கு செய்யும் இடையூறுகளையும், மத நடைமுறைகளையும் கண்டிக்கிறேன். இந்து தர்மம் என்ற பெயரில், நியாயமற்ற, நீதியற்ற, பாலின பாகுபாடு நிறைந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறேன் என்று தெரிவித்தவர்.
ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், விமரிசிக்கும் சுதந்திரத்தை நான் முழுமையாக நம்புகிறேன். பாஜகவுக்கு எதிரானவர், மோடிக்கு எதிரானவர் என என்னை மக்கள் அழைப்பதையும் வரவேற்கிறேன். ஏன் என்றால், என்னுடைய கருத்துகளைக் கூற எனக்கு சுதந்திரம் இருப்பதுபோல, மற்றவர்களுக்கும் என்னைப் பற்றி கருத்துக் கூற சுதந்திரம் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். தலித் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்.
ஆபரேஷன் அம்மா’..! ஒரு குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
நாட்டையே உலுக்கிய பெங்களூரு பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்குக் காரணமான பரசுராம் வாக்மோர் என்பவரைக் கர்நாடக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டம் சிந்தகி பகுதியைச் சேர்ந்தவரைக் கைது செய்ததன் மூலம் கௌரி லங்கேஷ் படுகொலை வழக்கின் மர்மம் விலகியுள்ளது.
இந்துத்துவ எதிர்ப்பாளராகச் செயல்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோர் படுகொலை செய்யப்பட்டதைப் போன்றே கௌரி லங்கேஷ்சும் கொல்லப்பட்டுள்ளார். அதுவும் தபோல்கர், கல்புர்கியை சுட்டுக் கொன்றது போன்றே அதே துப்பாக்கியில் கௌரி லங்கேஷூம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதைக் கண்டுபிடித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், அந்தக் கோணத்தில் விசாரணையைத் தொடர்ந்தனர்.
கௌரி லங்கேஷ் படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. காரணம், இதற்கு முன்பு கொல்லப்பட்ட எழுத்தாளர்களின் கொலை வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததே இதற்குக் காரணமாகும். இதனால் காவல்துறை ஐ.ஜி பி.கே.சிங் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் அனுசேத் தலைமையில் அமைந்த விசாரணைக் குழு, கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தியது.
கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு ஒரு வாரம் முன்பும், பின்புமாக அவருக்கு வந்த ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் மட்டுமல்லாது, டெலிபோன் பூத்களில் இருந்து பேசப்பட்ட தொலைபேசி அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். ஒருசில தொலைபேசி பூத்களில் இருந்து பேசியவர்கள் சங்கேத மொழியில் பேசி தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனர். அவர்கள்தான் கௌரி லங்கேஷ் படுகொலையில் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிந்தனர்.
இப்படித் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்ட அதே சமயத்தில் மற்றொரு டீம், கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் பற்றி, பக்கத்து வீட்டில் கட்டடப் பணி செய்த தொழிலாளியிடமும், சம்பவத்தின் போது அந்த வழியாகச் சென்ற தாவணகரே மாவட்டத்தைச் சேர்ந்த பெங்களூருவில் ஜர்னலிசம் படித்து வரும் மாணவியிடமும் விசாரணை நடத்தியது. அவர்களின் சாட்சியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர்கள் உதவியுடன் கொலைக் குற்றவாளிகளின் மாதிரி படத்தை வரைந்து வெளியிட்டனர்.
இந்த நிலையில்தான், மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரை கெம்பகவுடா பேருந்து நிலையத்தில் 2018 பிப்ரவரி 18-ஆம் தேதி, மத்திய புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 காலிபர் வகை துப்பாக்கியும், கவுரியை கொல்லப் பயன்படுத்திய 7.65 காலிபர் வகைத் துப்பாக்கியில் பொருத்தக் கூடிய தோட்டாக்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
விசாரணையில் இந்துத்துவ அமைப்பின் முக்கிய நிர்வாகி நவீன்குமார் என்பதும், ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்த சுஜித்குமார் (எ) பிரவீன் பரசுராம் வாக்மோர் உள்ளிட்ட ஐந்து பேர் குறித்த விவரம் கிடைத்தது. பிரவீனைக் கைதுசெய்து விசாரித்தபோது, கௌரி லங்கேஷைக் கொல்ல ‘ஆபரேஷன் அம்மா’ என்ற திட்டத்தை வகுத்ததும், அதை நிறைவேற்றச் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோரைத் தேர்வுசெய்து பெல்காமில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
பரசுராம் வாக்மோர் அளித்த வாக்குமூலத்தில், “துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடிந்ததும் இந்து மதத்தைக் காக்க ஒரு பெண்ணைக் கொலைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நான் கொல்லப்போகும் நபர் யார் என்று எனக்குத் தெரியாது. கௌரி லங்கேஷைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு வந்த உத்தரவின்படி செப்டம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு அருகே உள்ள பிரவீன்குமார் வீட்டில் தங்கினேன். பிறகு நான் கொலை செய்ய வேண்டிய பெண்ணின் வீட்டையும், அந்தப் பெண்ணையும் காட்டினார்கள். அந்தப் பெண் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று காட்டினார்கள். கொலை செய்யும் முன்பாக என்னைப் பலர் வழிநடத்தினார்கள். அந்தப் பெண்ணை நான் கொலை செய்வதற்கு ஒருநாள் முன்னதாக என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்கள்.
செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு, நான் கௌரி லங்கேஷை அவருடைய அலுவலகத்தில் இருந்து பின்தொடர்ந்து சென்று, அவரின் வீட்டு வாசலில் துப்பாக்கியால் நான்கு முறை சுட்டுக் கொன்றுவிட்டு உடனடியாக என்னுடைய அறைக்குத் திரும்பி விட்டேன். அப்போது என்னிடம் இருந்த துப்பாக்கி மற்றும் நான் அணிந்து இருந்த ஜர்கினை மட்டும் வாங்கிச் சென்றுவிட்டனர். பிறகு நான் பெங்களூருவில் இருந்து கிளம்பி மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் என்று ஐந்து மாதம் வரை தலைமறைவாக இருந்துவிட்டு பிறகு சொந்த ஊரான சிந்தகி திரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
பரசுராம் வாக்மோர் தலைமறைவாக இருந்த காலத்தில் அவருடைய குடும்பச் செலவுக்குத் தேவையான நிதியை நேரடியாக வழங்காமல் இந்துத்துவா ஆதரவாளர் பரசுராம் வாக்மோர் குடும்பம் ஏழ்மையில் சிக்கித் தவிப்பதாக ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்கள் மூலம் வங்கிக்கணக்கைக் குறிப்பிட்டு, உதவி கேட்டு அறிவிப்பு கொடுத்து பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகையை வசூல் செய்துள்ளனர். வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய ரசீது அனைத்தையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இணையதளத்தில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
இது மட்டுமின்றி கௌரி லங்கேஷ் கொலை வழக்கிற்குத் தேவையான முக்கிய சாட்சிகளான சி.சி.டி.வி-யில் கிடைத்த கொலையாளியின் தோற்றமும், பரசுராம் வாக்மோரின் தோற்றமும் ஒன்றுபோல் இருக்கிறது. அதேபோல பரசுராம் பெங்களூருவில் தங்கியிருந்த வீட்டில் கிடைத்த தலைமுடியை சேகரித்த போலீஸார், அவரின் தலைமுடியுடன் ஒப்பிட்டு உறுதிசெய்துள்ளனர். குற்றவாளிகளிடமிருந்து முக்கியமான டைரி ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில் 10 முற்போக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வழுவான ஆதாரங்களைச் சிறப்புப் புலனாய்வு டீம் சேகரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் கல்புர்கி கொலை வழக்கையும் இந்தச் சிறப்பு புலனாய்வு டீமிடமே கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது.
ஆனால் பி.ஜே.பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா அமைப்பினர்கள் கூட்டு படுகொலைதான் இதுதான் கொலையாளி பரசுராம் வாக்மோர், ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உடன் இருக்கும் புகைப்படம் அதை உறுதி செய்து உள்ளது.
கௌரி லங்கேஷ் வழக்கில் கைதாகியுள்ள பரசுராம் வாக்மோர், பிரவீன்குமார், நவீன்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யவும், அவர்களது குடும்பத்தினருக்கு நிதி வழங்கவும் ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நிதி திரட்டி அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளான நாயக் அமோல் காலே மற்றும் ராஜேஷ் பங்கெரா ஆகியோர், 2013-ல் புனேவில் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை, மகாராஷ்டிரா, கோலாப்பூரில் கோவிந்த பன்சாரே கொலை உள்ளிட்ட பிற குற்றங்களையும், கர்நாடகாவில் எம்.எம் கல்புர்கி கொலை வழக்கிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவி புரிந்ததன் அடிப்படையில், இந்தக் கொலை வழக்கில் மோகன் நாயக் மீதும் KCOCA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது ஆனால் குற்றவாளிகளுக்கு தன்டனை வழக்கு முடிவு பல்வேறு தடைகளை சந்தித்துவருகிறது குறிப்பாக மத்திய மோடி அரசும் கர்நாடக மாநில அரசும் தொடர்ந்து இந்த வழக்கை நீர்த்து போக செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்துவருகிறது. அதை மீறி மறைந்த தோழர் கௌரி லங்கேஷ் தங்கையும் வேறு சில அமைப்புகளும் தொடர்ந்து கண்கானித்து உச்ச நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து நடந்துவருகிறது.