பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவரான ஜார்ஜ் டிமிட்ரோவின் சேவை உலகப் பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் கிடைக்கப் பெற்று அவர் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவராக விளங்கினார். சர்வதேச தொழிலாளர் வர்க்க கம்யூனிஸ்ட் இயக்கங்களில் டிமிட்ரோவ் பிரபல தலைவரானார். 1920ல் நடைபெற்ற 2வது சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்து கொண்டார். சர்வதேச கடமையை நிறைவேற்ற ரஷ்யா விற்குச் செல்ல, அபாயம் நிறைந்த கருங்கட லில் சிறிய மீன்பிடி படகில் பயணமானார். இதனால் கைது செய்யப்பட்ட டிமிட்ரோவ் சோவி யத் அரசின் தலையீடு மற்றும் ருமேனிய கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டம் ஆகியவற்றால் 1920 களுக்குப் பின் விடுதலையானார்.
லிவர்னோவில் நடைபெற்ற இத்தாலி சோஷலிஸ்ட் கட்சியின் 17வது காங்கிரஸில் பங்கேற்றார். வெகு ஜனப் புரட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது அவசியம் என்று சர்வதேச கம்யூனிஸ்டுகளின் முதல் காங்கிரஸ் விடுத்த அறைகூவலையும், லெனினது ஆலோசனைகளையும் டிமிட்ரோவ் ஏற்றுக் கொண்டார். 1921 ஜூலை 3 முதல் 22 தேதி வரை மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச தொழிற்சங்க காங்கிரசிலும் அதற்கான தயாரிப்புப் பணிகளிலும் முக்கியமான பங்கு வகித்தார்.
1923 டிசம்பர் 17ல் பால்கன் பிராந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சம்மேளன தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் செயலாளர் ஆனார். பல்கேரியா, கிரீஸ், யுகோஸ்லேவியா, ருமேனியா ஆகிய பால்கன் நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலைமையேற்று அப் பிராந்தியத்தில் நிலவிய ‘வெள்ளைக் கொடுமையை’ எதிர்த்துப் பிரச்சாரம் செய்து ஒன்றிணைந்த நடவடிக்கைகளுக்கு வழிகோலினார். உயிருக்கு ஆபத்து சூழ்ந்திருந்த நிலையிலும் ஆஸ்திரிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சனை களைத் தீர்க்க அரும்பாடுபட்டார். சர்வதேச தொழிற்சங்க 3வது காங்கிரஸிலும் அதன் நிர்வாகக்குழுவிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தின் ஆணையை ஏற்று பல்வேறு ஐரோப்பிய, உலக ஸ்தாபனங்களின் போராட்டங்கள், மாநாடுகள், பிளீனக் கூட்டங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்து அவற்றில் பங்கேற்றார். 1929ல் சர்வ தேச ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு, 1930ல் ஐரோப்பிய விவசாயிகள் மாநாடு, 1931ல் சர்வ தேச தொழிலாளர்களின் நிவாரணக் குழுவின் 8வது பேராயம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. 1932 ஆகஸ்டில் ஆம்ஸ்டர்டாமில் நடந்த சர்வதேச எதிர்ப்புப் பேரவையில் உலக யுத்த எதிர்ப்புக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டார். ஜெர்மனியில் அதிபயங்கரமாக பாசிச சக்தி வளர்ந்து வருவதை டிமிட்ரோவ் உன்னிப்பாக கவனித்து வந்தார். 1933ஆம் ஆண்டு ஜனவரி 30ல் ஜெர்மனியின் பாசிச சர்வாதிகாரத் தலைமைப் பொறுப்பில் ஹிட்லர் அமர்த்தப்பட்ட போது டிமிட்ரோவ் உயிருக்கு அபாயம் இருந்த போதிலும் தொடர்ந்து பெர்லினிலேயே செயல்பட்டார்.
1933 பிப்ரவரி 27 அன்று ஜெர்மனி நாடாளுமன்றத்திற்குத் தீ வைக்கப்பட்டது. அதற்குக் கம்யூனிஸ்டுகள்தான் காரணம் என பாசிச அரசு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டது. தீப்பிடித்த அன்று இரவு காவல் துறையும் ராணுவமும் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகளின், சமூக ஜனநாயகவாதிகளின், முற்போக்காளர்களின் வீடுகளைத் தாக்கி அவர்களைக் கைது செய்தது. இது தொடர்பான விசாரணை துவங்கிய போதே டிமிட்ரோவும் பங்கு பெற்றதாக ஜோடிக்கப்பட்டது. டிமிட்ரோவ் 1933 ஏப்ரல் 4ல் கை விலங்கிடப்பட்ட நாளிலிருந்து அதை அகற்றக் கோரி 5 மாதங்கள் போராடினார். ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற பிரபலமான விஞ்ஞானிகளும், கலைஞர்களும், முற்போக்காளர்களும், நாடாளுமன்றத்திற்கு உண்மையிலேயே தீ வைத்தவர்களைப் பற்றி அம்பலப்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏதும் அறியாத மக்களைக் காப்பாற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். டிமிட்ரோவ் நீதிமன்ற விசாரணையில் அதன் போக்கையே மாற்றிவிட்டார். ‘”பொறுப்புள்ள நான் கம்யூனிஸ்ட் முன்னோடிகளில் ஒருவனாக இருப்பதனால் பல்கேரியா கம்யூனிஸ்ட் கட்சி முடிவுகளுக்கும், சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தின் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு முழுப் பொறுப்பு ஏற்கிறேன். நான் பயங்கரவாதியல்ல. கனாக் காணுபவனுமல்ல. பாட்டாளி வர்க்க புரட்சிக்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரத்திற்கும் நான் ஆதரவாளன். ஆனால் அதே காரணங்களுக்காக தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்ப்பவன்.” என முழங்கினார்.
“டிமிட்ரோவ் தமக்காகவும், தமது வாழ்க் கைக்காகவும், தமது பாதுகாப்புக்காகவும் மட்டுமே சிந்திக்காமல் கட்சியின் நலனுக்கா கவே தம்மையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்” என்று பிராவ்தா எழுதியது. ஜோடிக்கப் பட்ட சாட்சிகள் பற்றியும் கட்டுக் கதைகள் பற்றியும் டிமிட்ரோவ் ‘சாத்தானின் வட்டம்’ எனும் படைப்பில் அம்பலப்படுத்தினார்.
ஜெர்மனி நாடாளுமன்ற கட்டிடமான ரீச்ஷ்டாக் மீது தீ வைத்ததில் கம்யூனிஸ்டுகளுக்குப் பங்கு என்று பல்கேரியாவிலோ அல்லது மற்ற நாடுகளிலோ எவரும் நம்பப் போவதில்லை என டிமிட்ரோவ் தமது கடைசி உரையில் குறிப்பிட்டார். “ஆனால் ஜெர்மனியின் நிலை வேறுபட்டுள்ளதால் இத்த கைய அபத்தங்களை நம்பத்தான் செய்வர். இந்தக் காரணத்திற்காகத் தான் இந்த சம்பவத்திற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எத்தகைய தொடர்புமில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறேன் “ என்று கூறினார். 1933 டிசம்பர் 23ல் டிமிட்ரோவ் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பாதுகாப்புக் கைதியாகப் பிடிக்கப்பட்டார்.
1934 பிப்ரவரி 27ல் டிமிட்ரோவ் விடுவிக்கப்பட்டார். தொழிலாளர் வர்க்கமும் ஜனநாயக சக்திக ளும் விரிந்த அளவில் ஒன்றிணைந்து பாசி சத்திற்கு பதிலடி கொடுத்து, யுத்த அபாயத்தைத் தடுக்க வேண்டும் என்பது சர்வதேச கம்யூ னிஸ்ட் இயக்கங்களின் ஏழாவது பேராயத்திற்கு டிமிட்ரோவ் தயாரித்த அறிக்கையின் இரண்டாவது பொருளின் மையமாக இருந்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தின் நிர்வாகக் குழு செயலாளராக டிமிட்ரோவ் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அனைத்து நாடுகளிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி பாசிசத்தையும் யுத்தத்தையும் எதிர்க்கும் போராட்டத்திலும் அனைத்து சக்திகளையும் இணைப்பதிலும் ஏழாவது பேராயத்தின் முடிவுகளை ஆக்கப் பூர்வமாக செயல்படுத்துவதிலும், கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மத்தியில் உறவையும் பலத்தை யும் வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.
தீவிரமான தத்துவார்த்த அரசியல், ஸ்தாப னங்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றில் டிமிட்ரோவ் பெரிதும் அக்கறை செலுத்தினார். சோவியத் யூனியன் மீதான யுத்தத்திற்கு எதிராகவும், பாசிச அடக்குமுறை அபாயத்திற்கு எதிராகவும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களைத் திரட்டி யுத்த எதிர்ப்பு நட வடிக்கைகளில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் ஈடுபட்டபோது அதன் நாயகனாக விளங்கினார். எத்தியோப்பியா மீது பாசிச இத்தாலி தாக்குதல் தொடுத்ததற்கெதிராக, நிர்ப்பந்தித்து, கூட்டாக செயல்பட சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தின் நிர்வாகக் குழு சார்பில் சர்வதேச சோஷலிஸ்ட் தொழிலாளர்கள் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பாசிசத்தை எதிர்த்துப் போராடிய ஸ்பெயினில் ஜுன் 8 தேதியில் சர்வதேச கம்யூனிஸ்ட் கழகம் கலைக்கப்படும் வரை அதன் பொதுச் செயலாளராக பணியாற்றியதும், போல்ஷ்விக் கட்சியின் செய்தித்துறை பிரிவின் தலைவராகத் செயலாற்றியதும் யுத்தத்தையும் பாசிசத்தையும் எதிர்த்தும் பல்லாண்டுகள் அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாகும்.
அகிலத்தின் ஏழாவது மாநாடும் உலகைச் சூழ்ந்த பாசிசமும்
1935இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டில் பொதுச்செயலாளராக ஜார்ஜ் டிமிட்ரோவ் தேர்வு செய்யப்பட்டார். அம்மாநாட்டில் ஐக்கிய முன்னணி தந்திர கோட்பாட்டை அவர் முன்வைத்தார். பாசிச இருள் உலகை சூழ்ந்து கொண்டிருந்த காலமது. ஏகாதிபத்திய கட்டத்தில் பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் தன்மையும் விளைவுமாகும். ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக மூலதனம் என்றார் லெனின். இதில் நிதி மூலதனத்தின் இயல்பே பிற்போக்கானதாகி விடுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தில், முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட நெருக்கடி பிற்போக்கின் கோர வடிவமான பாசிசத்தை பிரசவித்தது. அரசு ஏகபோக ஒழுங்குமுறையை மேற்கொள்ளுமாறு கீன்ஸ் யோசனை கூறினார். முதலாளித்துவ நாடுகளில் அத்தகைய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதே சமயம், தொழிலாளர்கள் சுரண்டப்படுவது மேலும் அதிகரித்தது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தை ஈவு இரக்கமின்றி நசுக்குவதன் மூலம், புரட்சிகர சக்திகள் வளருவதை தடுக்கும் ஒரே சாதனம் என்ற வகையில், பாசிசத்தை ஏகாதிபத்திய நாடுகள் பின்பற்றத் தொடங்கின.
பிரான்சில் பாசிசம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு டிமிட்ரோவ் பின்வருமாறு பதிலளித்தார்: “பாசிசத்தின் வெற்றிக்கு பிரான்சும் விதிவிலக்கல்ல. 1830, 1848 புரட்சிகள் மற்றும் பாரிஸ் கம்யூன் போன்ற ஆழமான புரட்சிகர பாரம்பரியம் அம்மண்ணில் இருப்பதால், இத்தாலி, ஜெர்மனியைப் போல வெகு எளிதில் பாசிசம் வேரூன்றிவிட முடியாது. ஆனாலும், இங்கு ஹிட்லர்கள் உருவாவதற்கான அடிப்படையை மறந்து விட இயலாது. வறுமை, வேலையின்மையை எதிர்த்தும், நெருக்கடியில் இருந்து மக்களை காக்கவும், புரட்சிகர இயக்கம் மக்களைத் திரட்டி போராட வேண்டும். இப்போராட்டம் தற்காப்புக்கானதாக இல்லாமல் தாக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும். பிற்போக்கு சக்திகளும், பாசிசமும், சமூகத்தில் அதிருப்திக்கு ஆளான மக்களை கவருவதை தடுத்து நிறுத்தினால்தான் வெற்றியை உறுதிப்படுத்த இயலும். பாசிஸ்டுகளின் தேசியவெறி, இனவெறி சித்தாந்தத்தையும், அவர்களை பின்னணியில் இருந்து இயக்கும் நிதி மூலதனத்தையும், மக்களிடம் தோலுரித்து காட்டுவதின் மூலமே வெற்றி இலக்கை அடைய முடியும். பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் சக்திகளிடம் இருந்து, தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, விடாப்பிடியான போராட்டத்தின் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும்”.
பாசிசத்தின் தன்மைகளைடிமிட்ரோவ் அம்பலப்படுத்தினார். முதலாளித்துவ பொது நெருக்கடி அதிகரித்து வருகையில், அதற்கு எதிரான, புரட்சியை தவிர்ப்பதற்காக முதலாளித்துவம் பாசிசத்தில் புகலிடம் தேடுகிறது என்றார். சோசலிசப் புரட்சியை நெருங்கும்போதுதான் பாசிசம் தாக்குதலை தொடங்கும் என நினைப்பது தவறு. உண்மையில் அதற்கு முன்பே தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களை தாக்கி அழித்து விட பாசிசம் முயல்கிறது என்றார் டிமிட்ரோவ். நிதி மூலதனத்தின் கடைக்கோடி பிற்போக்கும், கடைக்கோடி இனவெறியும், கடைக்கோடி ஏகாதிபத்திய தன்மையும் கொண்ட பகுதிகளின், பகிரங்கமான, பயங்கரவாத, சர்வாதிகார முறையே பாசிசம் என்றார். பாசிசம், ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய வேட்டை விலங்கு; மிகக்கொடிய பகைவன் என்றார். பாசிசம் முதலாளித்துவ ஜனநாயகத்தை தாக்குகிறது. உழைக்கும் மக்கள் மீதான அநாகரிகமான சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், உழைக்கும் மக்களை நசுக்கவும் முயல்கிறது. எனவே, முதலாளித்துவ நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் இன்றைய தினம் உறுதியாக தேர்ந்தெடுக்க வேண்டியது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லது முதலாளித்துவ ஜனநாயகம், இரண்டில் ஒன்றை அல்ல. முதலாளித்துவ ஜனநாயகம் அல்லது பாசிசம், இரண்டில் ஒன்றைத்தான் என்றார்.
பாசிசம் எவ்வாறு மக்களை கவருகிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்: “மக்களின் கோரிக்கை, தேவைகளை பற்றி வாய்ச்சவடால் அடிப்பது, தேசத்தின் கெளரவத்தை காப்பாற்ற தேசியவெறி உணர்வுகளை தூண்டுவது, முந்தைய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை பாசிசம் பயன்படுத்திக் கொள்கிறது” என்றார். முதலாளித்துவ சமூகத்தில் அரசியல் அமைப்புகள் படிப்படியாக பாசிச மயமாவதையும், பாசிசத்தின் நேரடி தாக்குதலையும் கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை செய்தார். பாசிசத்தை முறியடிக்க பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை கட்ட வேண்டிய அவசியத்தையும் டிமிட்ரோவ் வலியுறுத்தினார்.
பாசிசம் என்பது கடிவாளம் இல்லாத இனவெறியும், ஆதிக்க வெறியும்பிடித்த யுத்தமாகும்.