இந்து மதம் பற்றி வெகு மக்களிடையே விரிவான பரப்புரைகளை மேற்கொள்வதன் வாயிலாக இந்துத்துவம் மீதான பற்றுணர்வை வளர்த்தல் மற்றும் இந்துப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களைப் புகுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக பிரம்மோ சமாஜ் (1828) மற்றும் ஆரிய சமாஜ் (1875) போன்ற இந்துத்துவ அமைப்புகளினால் 19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்துத்துவ இயக்கங்கள் 20ஆம் நூற்றாண்டின் முதல் கால்பகுதி ஆண்டுகளில், தெளிவான, திட்டவட்டமான இந்து தேசியம் என்ற வல்லடிச் செயல் திட்டமாக வடிவு பெற்று, உரத்த குரலெடுத்து ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அந்தக் கூக்குரல் இந்து தேசியத்தில் நடைமுறைப்படுத்த இருக்கும் தீவிரவாத இந்துத்துவ அரசியல் மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஆகியவற்றிற்கு பழம் பெருமையுடைய ஒரே இந்திய மதம் இந்துமதம் என்பதாக இந்துத்துவம் கூறிய கதைகளையே அடித்தளமாகப் பயன்படுத்திக் கொண்டது.
அந்த இந்துத்துவத்தை ‘ஒருங்கமைந்த இந்துத்துவம்’ என்று அழைக்கும் ரோமிலா தாப்பர் ‘இந்திய மண்ணில் வாழ்ந்த ஆதிகுடிகளின் மதத்திற்கு ‘ஒருங்கமைந்த இந்துத்துவம்’ மட்டுமே உரிமையுடைய, ஒரே வாரிசு என்பதாக உயர்த்திக் காட்டப்படுகிறது என்றுரைக்கிறார். அந்த ஒருங்கமைந்த இந்துத்துவம், பழங்காலத்தில் வழக்கில் இருந்த ஒரு பண்டைய நடைமுறையை, சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய மதம் என்பதாகத் தோற்றம் காட்டுவதற்கு, பிராமணர் எழுதி வைத்த மத நூல்களான கீதை மற்றும் தர்ம சாஸ்திரங்களுக்கு (மத நடைமுறைகள்), பொருள் மயக்கம் தரவல்லதாக எழுதிக் கொண்ட பொழிப்புரைகளையே பெருமளவில் சார்ந்துள்ளது.
1909இல் லாலா லஜபதி ராய் கடிதின் முயன்று லாகூரில் உருச்செய்த இந்து சபை, எதிர்பாராத அளவுக்கு இந்து பயங்கரவாத ஆட்டத்தை நடத்துவிக்காது தளர்ந்து நின்ற நிலையில், அதை முன்னோடியாகப் பின்பற்றி 1915இல் இந்து மகா சபை பிறப்பிக்கப்பட்டது. பிறப்பிக்கப்பட்ட மகாசபை, பயங்கரவாத ஆட்டத்தை வலுவுடன் நிகழ்த்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான முக்கிய ஊட்டச்சத்து உணவாக ஒருங்கமைந்த இந்துத்துவம் ஆகியது. உரிமை உடைய ஒரே வாரிசு என்ற கற்பிதத்தை, ஒரு தரப்பினரின் ஒற்றை வரலாறாகக் கூறிய ஒருங்கமைந்த இந்துத்துவம், தன்னைப் போன்றே இசுலாமையும் வாரிசு உரிமை கோரும் பகைவன், பங்காளி என்றெல்லாம் கற்பிதம் செய்து, அந்தப் பகைப் படிமத்தை எதிர்த்துப் போராடும் அரண் என ஒற்றை வரலாற்றுக்கு நியாயமும் கற்பித்தது. கிலாஃபத் இயக்கம் (1919_24), மற்றும் மாப்ளா இசுலாமியர் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது (1921) ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் ஒருங்கமைந்த இந்துத்துவம் கற்பித்த நியாயத்தின் அடிப்படையில், உரத்த குரலெடுத்து ஓங்கி ஆர்ப்பரித்தவர்களாகவும், மதவெறி உணர்வைக் கூராக்கிக் கொண்டவர் களாகவும் இந்துக்களை பயங்கரவாதச் செயல்களுக்கு ஒன்று திரட்டுவது என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதே என்றாகிவிட்டது.
வேறு இரண்டு நிகழ்வுகள் _ 1923இல் விநாயக் தாமோதர் சவர்கார் எழுதிய இந்துத்துவா: யார் இந்து? என்ற நூல் வெளியாகியது மற்றும் 1925இல் ராஷ்டிரிய சுயசேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) உருவாக்கப்பட்டது _ அளித்த அருங்கொடை, 1920களில் இந்து தேசியம் மிகுதியான விளைச்சலை அறுவடை செய்யவும், அதற்கு அந்தப் பத்தாண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள் என்றாகவும் வழிவகை செய்தது. முதலில் இந்துத்துவம் பற்றிய தகவல்கள் என்று தலைப்புப் பெயரிடப்பட்ட சவர்காரின் நூல், உயர்வாகப் போற்றுதற்குரிய பழங்காலச் சடங்கு முறைகளில் இருந்து தோன்றியதே இந்துத்துவம் (இந்துவாக இருப்பதன் தனி இயல்பு) என்றும், அதிலிருந்து உருவாகிய ஓர் உறுப்பு மட்டுமே இந்து இசம் என்றும், இந்துத்துவம் வரலாற்றில் விளைந்தது என்றும், கற்பிதம் கூறுவதற்குச் செய்த முயற்சி அன்றி அந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம் வேறல்ல.
இந்து இசம் ஒரு பண்பாடு, இந்து இசம் ஒரு மதநம்பிக்கை என்ற இரண்டு சொல்லாடல்களுக்கு வேறுபாடு காட்டிய சவர்கார், (டார்வின், டி.ஹெய்ச்.ஹக்ஸ்லே மற்றும் ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஆகியோரது படைப்புகளிலிருந்து தாராளமான மேற்கோள்-களைக் காட்டி) இந்து இன அடிப்படையிலான தேசியத்தை வடிவாக்கவும் முயற்சித்தார். ஹிந்து என்ற சொல்லையும் சிந்து (இண்டஸ் நதியின் மிஸீபீus ஸிவீஸ்மீக்ஷீ – சமஸ்கிருதப் பெயர். இதிலிருந்தே இந்தியா என்ற பெயர் உருவாகியது) என்ற சொல்லையும் ஒன்றினிடத்தில் ஒன்றை மாற்றி வைத்துப் பயன்படுத்திய சவர்கார் சமஸ்கிருதத்தின் ஷி உச்சரிப்பு தரும் எழுத்து சில பிராகிருத மொழிகளில் பி என்று மாற்றப்பட்டதாக வாதுரை செய்தார்.
ஆர்.எஸ்.எஸ்.அய் உருவாக்கிய கே.பி.ஹெட்கேவார் நாடு என்பது பற்றிய தனது சொந்தக் கருத்தியலை இவ்வாறு மொழிந்தார்: “ஏதோ ஒரு துண்டு நிலம் மட்டுமே நாடு என்று அழைக்கப்-படுவதற்கானது அல்ல. ஒரே சிந்தனையுடைய, ஒரே பழக்க வழக்கங்களையுடைய, ஒரே பண்பாடுடைய, பழம்பெரும் காலத்திலிருந்தே ஒரே மரபு சார்ந்த நடைமுறைகளையுடைய மக்களால் உருவாக்கப்படுவதே ஒரு நாடு என்றாகும். இந்தக் கருத்து விளக்கம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரமாகிய விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.இ.ப.) ஆகியோரை, நேபாள நாடும் இந்து தேசத்தின் ஒரு பகுதி என்று உரிமை பேச இட்டுச் சென்றது. ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இன் கோட்பாடுகளால் தூண்டுதல் பெற்ற வேறு சில அமைப்புகள் ஒன்றிணைந்து உருவானது சங்க பரிவாரம் _ ஆர்.எஸ்.எஸ். குடும்பம்.
இத்தகைய கருத்து விளக்கங்கள் வளர்த்து-விட்ட தெளிவான இனவெறுப்புக் கோட்-பாடுகள், மற்றும் கூர்படுத்திவிட்ட மத அடையாள உணர்வுகள், 1920களில் இந்துக்களும் இசுலாமியரும் கொடூரமாக மோதிக் கொண்ட தொடர்ச்சியான மதக் கலவரங்களுக்கு அடிப்படையாக அமைந்தன. அந்தக் கலவரங்களில் நடந்தேறிய கொடூர, கொலைபாதக வன்செயல்கள் ஏராளமானவை. அந்தப் பத்தாண்டுகளின்போது நாட்டின் நீள அகல வாக்கில் _ மலபாரில் மாப்ளா கலவரம் (1921), ஆஜ்மீர் மற்றும் சிந்து (1923), தில்லி மற்றும் லக்நௌ (1924), அலகாபாத், கல்கத்தா, ஷோலாபூர் (1925), லாகூர் மற்றும் நாக்பூர் (1927), பம்பாய் (1929) _ நடந்து முடிந்த கலவரங்களின் மேலோட்டமான எண்ணிக்கை இருபத்தொன்பது.
இந்து தர்மத்தைக் கட்டிக்காத்தல்
அறவழி மீறல்கள் அளவிலாது நடந்து முடிந்த இந்தப் பத்தாண்டுகளின் நடுவில் பிறந்த கல்யாண், அது தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, இந்து_இசுலாம் பூசல்களில் அது தேர்ந்து கொண்ட நிலைப்பாடு மிகத் தெளிவாகத் தெரிந்தது. தொடக்கமாக அமைந்த முதல் இதழில் தலையங்கம் எழுதிய போத்தார் கலவரங்களுக்கான முழுக் குற்றச்சாட்டையும் இசுலாமியர் மீது சுமத்தினார். இந்துக்கள் வெறிகொண்டு எழுந்தவர்களாகப் பயங்கரவாதச் செயல்களில் முழுமையாக ஈடுபடாததற்காக, இந்துக்களை குறை கூறினார். இந்துக்கள் தங்களது தோள் வலிமையைக் காட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவருடைய இந்து இனத்தவர்கள் அகிம்சை என்ற பெயரால் கோழைகளாக இருந்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இசுலாமியருக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்துக்கள் ஈடுபடுவது என்பது இந்து மதத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று பரப்புரை செய்யப் பட்டது. 1927இல் மதக் கலவரத்தில் பங்கு கொண்ட கல்யாண்இன் இந்து வாசகர் ஒருவர், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததால், ஜெய்தயாள் கோயந்த்காவிடம் அறிவுரை கேட்டார். அவருக்கு மனத்திடம் ஊட்டிய கோயந்த்கா, அவர் குற்றவாளியென்றால் அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும், அவர் இந்து மதத்தைப் பாதுகாக்-கும் செயலில் ஈடுபட்டதனால் அவர் கோழையைப் போன்று நடந்துகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். “நீங்கள் மக்கள் பணி ஆற்றியதற்காக இடர்ப்பட நேர்ந்தால், மனத் திடத்துடன் சிறை செல்லுங்கள். சான்றுகளை நிறுவுவதன் வழியாக நீங்கள் குற்றமற்றவர் என்று விடுதலை பெறுங்கள்… கைது செய்யப்படுவது பற்றி ஏன் கலங்குகிறீர்கள்? நீங்கள் இதுபோன்ற மக்கள் பணி ஆற்றியதற்காகத் தூக்கிலிடப்பட்டாலும், அது மகிழ்ச்சிக்குரியதே.’’
தொடக்க ஆண்டுகளில் கல்யாண் தனது முத்திரை பொறித்த மதவெறியூட்டும் பயங்கரவாதச் சரக்குகளை, அதனுடைய பக்கங்களில் வாசகர்களுக்கு மெல்ல மெல்ல, ஆனால் முழுமையான செயல் திட்டத்துடன் மலிவு விலையில் விற்பனை செய்து கொண்டிருந்தது. இந்து மதப் பற்றுணர்வு குறைந்து போனதால் எந்த அளவுக்கு இந்து சனாதன தர்மம் பாதிப்பிற்குள்ளாகி விட்டது என்று கூறுவதோடு நில்லாது, கல்யாண், உடனடித் தீர்வு கிடைப்பதற்கு உறுதி அளிப்பதான ஒரு புதுவகை மத நம்பிக்கை பற்றியும் எடுத்துரைத்தது. அது பனியா (குஜராத்தி, மார்வாடி, வைசிய இனத்தவர்) வஞ்சக வணிகமுறையில் உடனடியாக வந்து குவியும் கொள்ளை லாபம் போன்றதான பக்தி வணிகம். வைணவ பக்தியில் மூழ்கியவர்களாக பகவான் நாமத்தை ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்று வாசகர்களுக்கு அறிவூட்டிய கல்யாண், அதனால் புண்ணியம் பெருகி அவர்கள் நல்ல உடல்நலமும், செல்வ வளமும், மன அமைதியும் அடையப் பெறுவார்கள் என்றும் வரும்பொருள் உரைத்தது. அதேபோன்று, வாசகர்கள், குறிப்பாக மார்வாடி வணிகர்கள் கொடையளித்து, கல்யாண்இன் விற்பனைப் பரப்பை விரிவுபடுத்த உதவ வேண்டும் என்றும் அறிவிப்புக் கொடுத்தது.
புகழ்பெற்ற மனிதர்களான காந்தி, மாளவியா, மற்றும் சில சாமானியர்களான வாசகர்கள் ஆகியோரின் வாழ்க்கைக் கதைகளைப் படங்களுடன் எடுத்துக்காட்டாக எழுதிக் காட்டியதன் வாயிலாக, கீதை பதிப்பகம் தனது அறிவியல் கண்டுபிடிப்பான, பக்தியைச் செலுத்தி அதற்-குப் பண்டமாற்றாக அனைத்து வகையான உடனடிப் பலன்களைப் பெற்றுக் கொள்ளும் வணிக முறையை வாசகர்களிடையே வழங்கி வந்தது. நாராயணன் நாமத்தை உச்சரித்த மாளவியா நல்ல வெற்றிகளை அடையப் பெற, சக்திமிக்க தாயத்தாக ராம நாமம் காந்திக்கு வழிகாட்டியதாம். பக்திமான் ஒருவர், அவரது மகளின் மணநிகழ்வின்போது எதிர்பாராத ஒரு தபால் வழிப் பணவிடை பெற்றதை நேரில் பார்த்த அனுபவத்தை ஒரு வாசகர் எழுதினார். பக்திக்குப் பண்ட மாற்றாக உலகாதாய நலன்களைப் பெற்றதாகக் கூறிக்கொண்ட இத்தகைய செய்திகளை கல்யாண் காலமெல்லாம் கதைத்துக்கொண்டே இருந்தது.
போத்ததாரைப் பொறுத்த அளவிலும்கூட, அவரது வாழ்க்கையில் எதிரிட்ட இடர்ப்பாடுகள் விலகவும், இறைவனின் கொடையை இடைவிடாது பெறவும், அவர் இறுதியும் உறுதியுமானதாகத் தேர்ந்து கொண்டது கடவுளின் பெயரைக் கரைந்து கொண்டே இருக்கும் பக்தி வழிமுறையே என்று சாட்சியம் கூறினார். குடும்பத் திருமண நிகழ்வின்போது பாலியல் வன்முறைக்கு ஆட்பட்ட ஒரு பெண், போத்தாரிடம் அறிவுரை கேட்க, ஆண்களிடையே நன்னடத்தை நலிந்துவிட்டதாக நனிது புலம்பிய அவர், அது பற்றிக் கணவனிடம் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தி, பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டவள் கடைத்தேறும் வழிமுறையாக, நாள்தோறும் நூறு மாலைகள் (ஒரு மாலையில் 108 விதைமணிகள் கோர்க்கப்பட்டிருக்கும்) என்ற எண்ணிக்கையில் ஓராண்டுக்கு ராம நாமம் கூறும்படி ஆன்மிகமும் அளந்தார்.
இறைவனால் ஏற்படுத்தப்பட்ட நால்வருண ஜாதி முறையை அடித்தளமாகக் கொண்டே நாட்டின் சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவை கட்டமைக்கப்பட வேண்டும் என்று கதை கூறிய கல்யாண், ஜாதிய சமூக அமைப்பைக் கட்டிக் காக்கவேண்டும் என்பதில் தீவிரமாக முனைந்து நின்றது. இவ்வாறு முனைந்து நின்ற கீதை பதிப்பகம், அதனுடன் இணைந்து பயணிக்கும் ஆரிய சமாஜம் மற்றும் இந்து மகாசபை ஆகியவற்றின் செயல் நோக்கமான தீண்டத்தகாதவர்களையும் இந்து அமைப்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு நின்றது. இந்து மகாசபை மற்றும் ஆரிய சமாஜம் தலைவர்கள் கட்டுரைகள் எழுதுவதற்காக கல்யாண் இதழ் தனது பக்கங்களைக் கொடுத்து வந்தது. கோட்பாடுகளில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர்களுடன் அதுபற்றிய நேரடி மோதலை கீதை பதிப்பகம் தவிர்த்து வந்தது. பிறப்பு வழி வரும் ஜாதியம் பற்றிய தன்னுடைய நிலையைத் தளர்த்திக் கொள்ள கீதை பதிப்பகம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
இந்த உள்ளார்ந்த முரண்பாடு, ஒன்றுபட்ட இந்து என்ற தோற்றம் காட்டி, அதனுடைய ஒரே அறிவிப்பாளராக வேண்டும் என்ற கீதை பதிப்பகத்தின் பெரு முயற்சிக்குத் தடையாக இருந்தது. அது பெருந்தன்மையுடன் அறிவித்த சலுகையெல்லாம், அனைத்து ஜாதி இந்துக்களும், தீண்டத்தகாதவர்கள் உட்பட, அவரவருக்கு உகந்த நேரத்தில் உகந்த இடத்தில் கடவுளின் நாமத்தை ஓதுமாறு விடுத்த அழைப்பு மட்டுமே. 1939 டிசம்பரில் மதக் கலவர வன்செயல்கள் மிகுதியாக நடந்தேறியதன் விளைவாக கோரக்பூர் கூர்மையான பகையுணர்வுடன் பிளவுபட்டு நின்றதில் கீதை பதிப்பகத்தின் நேரடித் தலையீடு இருந்தது. அதனால் அது கோரக்பூரில் நிலைத்திருக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. அப்பொழுது உடல் நலமற்றிருந்த போத்தார் அவரது சொந்த ஊரான ரத்தன்கர்இல் தங்கியிருந்தார். இரண்டாம் உலகப் போரில் இந்தியா இறங்கும் என்று பிரிட்டிஷார் காங்கிரசைக் கலந்து கொள்ளாமல் முடிவெடுத்ததனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் அரசு பதவிகளை விட்டு விலக, 1939 டிசம்பர் 22ஆம் நாளை இந்திய இசுலாமியரின் மீட்பு நாள் என முகமது அலி ஜின்னா அறிவிப்புச் செய்தார்.
நூல்: இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்
ஆசிரியர்: அக்ஷய முகுல்
ஆங்கில வழி தமிழில்: அறவாணன்
வெளியீடு: விடியல் பதிப்பகம், தொலைபேசி: 0422-2576772, 9443468758
[email protected]
பக்கங்கள்: 720 விலை: ரூ.650/-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > வரலாறு > இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்
இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்
posted on
You Might Also Like
புதுச்சேரியின் புல்டோசர் ஆட்சிக்கு கடும் கண்டனம்
November 25, 2024
பிரஞ்சியரின் ஆட்சியில் புதுச்சேரி (1816-1954) கால வரிசை
November 10, 2024