பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த புதுச்சேரி, தொழிலாளி வர்க்க தலைமையிலான மக்கள் போராட்டத்தால் 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962 ஆகஸ்ட் 16 அன்று சட்டபூர்வமாக இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 239ல் திருத்தம் செய்யப்பட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவானது. 1963ல் புதுச்சேரி யூனியன் ஆட்சி பரப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. மேற்படிச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்படும் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி உள்ளது. துவக்க காலத்தில் இது ஒரு பிரச்சினையாக எழவில்லை. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் மாறுபட்ட கட்சிகள் அதிகாரத்திற்கு வருகிற போது பிரச்சனைகள் எழுகிறது.
புதுச்சேரி இந்திய ஒன்றியத்துடன் இணைந்த போது புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்படும். மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் உறுதிமொழி அளித்திருந்தார். அதற்கு ஏற்ப புதுச்சேரிக்கு திட்ட செலவில் 90% மானியம், 10% கடன் வழங்கப்பட்டன. வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. காலப்போக்கில் ஒன்றிய அரசு பின்பற்றிய புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அரசியல் நிகழ்ச்சி போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் புதிய சிக்கல்களை கொண்டு வந்தன. 1980களில் துவங்கிய புதிய பொருளாதாரக் கொள்கைகள் திட்டமிட்ட வளர்ச்சி என்ற பொருளாதார. செயல்பாட்டில் இருந்து விலகி சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நிலைக்கு மாறியது. இது கூட்டாட்சி அமைப்பு முறையில் புதிய சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கொண்டு வந்தன.
மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சியாலும் மற்றும் மேற்கு வங்க முதல்வர் தோழர் ஜோதிபாசு அவர்கள் ஒன்றிய மாநில உறவுகளை சீரமைத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிலையில் ஒன்றிய அரசு 1983ல் மத்திய மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய சர்க்காரியா கமிஷனை அமைத்தது. அதன் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்த முன்வரவில்லை. தமிழகத்தில் திமுக அரசு அமைத்த ராஜமன்னார் கமிஷன் பரிந்துரையும் ஒன்றிய அரசு பரிசீலிக்கவில்லை. மாறாக அரசியல் அதிகாரம், நிதியாதாரம், மாநில உரிமைகள் மையப்படுத்துவது தொடர்ந்தன.
2014ல் அதிகாரத்திற்கு வந்த தீவிர வலதுசாரி பாஜக ஆட்சியில் இந்திய கூட்டாட்சி முறையை சிதைப்பதும், மாநில உரிமைகளை பறிப்பதும் வேகம் எடுத்துள்ளது. மாநில ஆளுநர், துணைநிலை ஆளுநர்களை பயன்படுத்தி பாஜக தனது அரசியலை விரிவுபடுத்தத் துணிந்து விட்டது. புதுச்சேரி, கேரளம், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆளுநர்களின் அப்பட்டமான அதிகார அத்துமீறல் சமீபத்திய உதாரணங்களாகும். ஜனநாயகத்தை உச்சரித்துக் கொண்டே சர்வாதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறது. இது ஒற்றைத் தலைமையை நோக்கிய அரசியல் என்பது புலப்படும். ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தனது சித்தாந்தத்திற்கு எதிராக பாஜக கருதுகிறது.
01.11.2022 புதுச்சேரி சுதந்திர தினக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் என். ரங்கசாமி புதுச்சேரி மாநில அந்தஸ்து வேண்டும் என்று பேசியது வியப்பாக உள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற கோட்பாட்டை கொண்ட பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு மாநில அந்தஸ்து பற்றி பேசுவது அரசியல் சாகசமாகும். சட்டமன்றத்தில் மாநில அத்தஸ்து கோரும் தீர்மானம் நிறைவேற்ற அரசியல் துணிவு இல்லை என்பது வெளிப்படையாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி அல்லது ஒரே கூட்டணி ஆட்சி அமைந்தால் தாராளமாக நிதி கிடைக்கும். பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும். புதுச்சேரி வளம் பெறும் என்று பாஜக என்.ஆர்.காங் கட்சிகள் அறிவித்தன. ஆனால் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. ஒன்றிய அரசிடம் கேட்ட நிதி உதவி கிடைக்கலில்லை. மாநிலம் கோரிய பட்ஜெட் மதிப்பீட்டிற்கும் அனுமதி கிடைக்கவில்லை. 16 மாத கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமையவில்லை.
12-வது நிதிக்குழு (2007-2008) பரிந்துரையின் பேரில் ஒன்றிய அரசு வழங்கி வந்த கடன் உதவி ரத்து செய்யப்பட்டு விட்டது. இதில் புதுச்சேரி மாநிலமும் தப்பவில்லை. மாநில பொதுக்கணக்குத் துவங்கி வங்கிக் கடன் பெற நிர்பந்தித்தது. 2007 இல் பொதுக்கணக்குத் தொடங்கிய போது மாநில அரசின் கடன் ரூபாய் 2177 கோடியாக இருந்தது. தற்போது 31-3-2022 தேதி வரையில் கடன் தொகை ரூபாய் 9859.20 கோடியாக உயர்ந்துள்ளது. இது மாநில ஆண்டு வரவு செலவு திட்டத்தொகைக்கு இணையாகும்.
புதுச்சேரி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைகிற போது நாடு இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை நிறைவு செய்திருந்தது. இந்த இடைவெளியை கவனத்தில் கொண்டு மாநில அரசின் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யாதது துரதிஷ்டவசமாகும்.
நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, நீராதார மேம்பாடு, சுகாதாரம், கல்வி அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கு என மிகப் பெரும் செலவின பொறுப்புகளை மாநிலங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மறுபுறத்தில் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விகிக்கிறது. இதனால் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமல் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.
புதுச்சேரி அரசு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநில அரசு சுதந்திரமாக செயல்பட இயலவில்லை. வரவு செலவுத் திட்டம் ஒன்றிய அரசின் அனுமதி பெற்று தாக்கல் செய்யப்படுகிறது சட்டம் இயற்றவும், திட்டம் உருவாக்கவும் ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. பணி நியமனம் செய்யவும், உயர்த்தவும் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதும் ஒன்றிய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது.
மக்களாட்சியில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் தான் முதல்வர் போல் செயல்படுகிறார். உயர்மட்ட அதிகாரிகள் சட்டம், கள ஆய்வு, மக்கள் குறை கேட்டு அரசு திட்டங்களை அறிவிப்பது, துவக்கி வைப்பது என அதிகாரிகள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த தென்னிந்திய முதல்வர்கள் கூட்டத்தில் கூட ஒன்றிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டார். பாஜக அரசின் செயல்பாடு குறித்தான அரசியல் விமர்சனங்கள் முன்னுக்கு வரும்போது பாஜக தலைவரைப் போல் விளக்கம் அளிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் மத்திய அரசால் ஒரு மாநில அரசின் ஆளுநர் நியமிப்பதில்லை. மாநிலங்களுக்கு ஆளுநர் தேவை இல்லை. கூட்டாட்சி அமைப்புக்கு ஏற்றதாகவும் இருக்கவில்லை. இத்தகைய குழலில் ஆளுநர் நியமனம் தேவையில்லை என்ற சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி –மாநிலத்தின் சார்பாக பரிந்துரைக்கப்படும் மதிப்பிற்குரிய மூன்று நபர்களில் ஒருவரை குடியரசுத் தலைவரை தலைவர் நியமிக்கும் நியமனம் செய்வதே பொருத்தப்பாடு உடையதாகும்.
யூனியன் பிரதேசங்களாக இருந்த மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்றுவிட்டன. புதுச்சேரி விடுதலை அடைந்து 68 ஆண்டுகள் ஆகிறது. சட்டப்பேரவை அமைத்து 58 ஆண்டுகள் ஆகிறது. 13 முறை மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றளவும் ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் தொடர்வது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகும். ஆகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதன் மூலம் மாநிலத்தின் சமூக பொருளாதாரம் உயரவும் மக்கள் நலன்களை பாதுகாக்கவும் முடியும். ஆகவே புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
நவம்பர் 13. 2022ல் கம்பன் கலையரங்கில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். சீத்தாரம்யெச்யூரி பங்கேற்ற புதுச்சேரி மாநில உரிமை சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
புதுச்சேரி மாநில உரிமை தீர்மானத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் மாநில செயலாளர் தோழர் பெ பெருமாள் அவர்கள் முன்மொழிந்தார்.