புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புனர்நிர்மான பணிகளை செய்க- சிபிஎம்
வணக்கம், பிரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட புதுச்சேரியின் பாரம்பரியம் மிக்க குபேர் அங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக அகற்றி புதிய மார்க்கெட் கட்டுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாகவும் இதற்காக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக அறிகிறோம்.
சுமார் 11500 சதுர அடி பரப்பளவில் 550 நிரந்தர கடைகளும் 800 அடிக்காசு கடைகள் என 1400 க்கும் மேற்பட்ட கடைகளுடன் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மார்க்கெட் வேலை வாய்ப்பு வழங்கிவரும் நிலையில். எல்லாவிதத்திலும் தோல்வி அடைந்த ஆளும் தகுதியை இழந்து விட்ட என்.ஆர்.காங்கிரஸ்–பிஜேபி கூட்டணி அரசு தான் தோன்றித்தனமாக இந்த கடைகளை அகற்ற முடிவு எடுத்து இருப்பது கண்டிக்கதக்கது.
புதுச்சேரி அரசு பெரிய மார்க்கெட் வியாபாரிகளின் மீதும், பொது மக்களின் மீதும் உள்ள அக்கரையினால் இந்த திட்டம் கொண்டுவரப்படவில்லை நிச்சயம். மாறாக இத்தகைய புதிய கட்டுமான பணிகள் மூலமாக நன்மை பெறக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகள், தனியார் கட்டுமான நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக செய்யப்படுவதாக தெரிகிறது. இதுபோன்ற மோசடிதிட்டங்களை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது.
புதுச்சேரி மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் ஒன்றிய பிஜேபி அரசும், மாநில என்.ஆர்.காங்கிரஸ் –பிஜேபி கூட்டணி அரசும் புதுச்சேரி மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது இல்லை. லாபத்தோடு செயல்பட்டு வரும் மின்துறை விற்பனை, ரேஷன் கடை, பஞ்சாலை, சர்க்கரை ஆலை, என எல்லாவற்றை முடியும் அழித்து வருகிறது.
நெல்லித்தோப்பு மார்க்கெட், அண்ணா சாலை குபேர் பஜார், தட்டாஞ்சாவடி மீன் மார்க்கெட், முத்தியால்பேட்டை மார்க்கெட் போன்ற மார்க்கெட் கட்டுமான பணிகளை பல ஆண்டுகாளாக முடிக்காமல் அங்கு வியாபாரம் செய்துவந்த வியாபரிகளின் வாழ்வை அழித்துவிட்டது. எதன் அடிப்படையில் தற்போது பெரிய மார்க்கெட் வியாபாரிகளிடம் மட்டும் 6 மாதத்தில் கட்டுமான பணிகளை முடித்து விடுவோம் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என அரசு சொல்வது ஏமாற்று வேலையாகும்.
அதேபோல் புதுச்சேரி நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் உள்ளது, கலவை கல்லூரி கட்டிடம், வ உ சி பள்ளி போன்ற கட்டிடங்கள் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. இவைகள் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்று தெரியவில்லை. மறைமலை அடிகள் சாலை முதல் காமராஜர் சாலை வரை வாய்க்கால் பால கட்டுமான பணிகள் பாதியிலேயே நின்று பல ஆண்டுகள் ஆகிறது.
இப்படிப்பட்ட நிலையில் அரசு சொல்வதை நம்பி பெரிய மார்க்கெட்டை காலி செய்து விட்டால் வியாபாரிகளும் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்க கூடிய நிலை ஏற்படும் என அஞ்சுகிறார்கள். எனவே அரசு வியாபாரிகளின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்தும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
பெரிய மார்க்கெட் கட்டுமான பணிகள் சம்பந்தமான வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களுக்கு பாதிப்பு வராத வகையிலும், பாரம்பரியமான இந்த மார்க்கெட் கட்டிடத்தின் பழமை மாறாமல் கூடுதல் வசதிகளுக்கு மட்டும் புதிய கட்டுமானத்தை செய்ய வேண்டும். மேலும் தற்போது அங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் குறித்து முழுமையான அனைது விவரங்களும் பெற்று அவர்களுக்கே அந்த இடத்தை மீண்டும் ஒப்படைக்கும் வகையில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.
மக்களுக்காகதான் திட்டங்கள், திட்டங்களுக்காக மக்களை துயரத்தில் தள்ள கூடாது அதையும் மீறி புதுச்சேரி ஆட்சியாளர்கள் மக்களை துன்புறுத்தினால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
29.06.2023