உண்டியல் குலுக்கிகள்

அரசியலில் காலங்காலமாக கம்யூனிஸ்ட்டுகளைக் கிண்டல் செய்வதற்கு எல்லோரும் எடுக்கும் ஒரு வசைச்சொல் ஆயுதம்.

உண்டியல் குலுக்கிகள் என்றால் என்ன?

ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பாவையோ அல்லது சில்லறைகள் போட மட்டும் ஒரு சிறிய ஓட்டை இருப்பது போன்ற பழைய டின்னையோ எடுத்துக்கொண்டு, தெருத்தெருவாக மக்களிடம் தங்களது கருத்துகளைப் பேசி, பணம் வசூலிப்பது.

சரி, எதற்காக வசூல் செய்கிறார்கள்?

பொதுவாகவே எல்லா அரசியல் கட்சிகளும் இயங்குவதற்கு பணம் தேவை. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்ந்து இயங்குவதற்கு பணம் தேவைப்படுவதால், மக்களிடம் இருந்து வசூல் செய்கிறார்கள். அதுவும், அந்த பணத்தை வைத்து என்னென்ன மாதிரியான வேலைகளுக்குப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதையும், தங்களது கொள்கையும் போராட்டமும் எதற்காக என்பதையும் விளக்கிவிட்டுத்தான், விருப்பம் இருப்பவர்களை உண்டியலில் பணம் போடச் சொல்லிக் கேட்கிறார்கள் உண்டியல் குலுக்கிகளாகிய கம்யூனிஸ்ட்டுகள்.

அரசியல் கட்சிகளுக்கு அப்படி என்ன செலவு?

ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், மாநிலத் தலைமை அலுவலகம் இருக்கும்.
1. அந்த அலுவலகம் சொந்தமானதாக இருந்தால், அதற்கான இடம் வாங்கவும், கட்டிடம் கட்டவும் தேவைப்படும் பணம்
2. அந்தக் கட்டிடத்தில் தலைவர்கள் இருப்பார்கள், ஏராளமான ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்குமான மாத ஊதியம், அன்றாட செலவு
3. அந்தக் கட்டிடத்தின் மின்சாரக் கட்டணம், இன்னபிற வரிகள், கட்டிடப் பராமரிப்பு செலவு
4. அந்தக் கட்டிடத்தில் அனுதினமும் கட்சியின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த கூட்டங்கள் நடந்துகொண்டே இருக்கும். அதற்கான செலவுகள்
5. மாநில அலுவலகம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அலுவலகங்கள் இருக்கும். சில கட்சிகளுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் அலுவலகங்கள் இருக்கும். அவற்றுக்கான செலவுகள்
6. கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக செய்யப்படும் பிரச்சாரங்களுக்கான செலவுகள்
7. அரசுகளின் தவறான கொள்கைகளை எதிர்த்துப் போராடும் போராட்டங்களுக்கான செலவுகள்
8. தேர்தல் வந்துவிட்டால், தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர் டெப்பாசிட், போஸ்டர், விளம்பரம், உணவு, பயணம், உள்ளிட்ட செலவுகள்
9. கட்சியின் இணைய, சோசியல் மீடியா, தொழிற்நுட்ப செலவுகள்
10. கட்சிக்காக முழு நேரமும் உழைப்பதற்கு வாழ்க்கையைக் கொடுக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம்
11. கட்சிக்கான பத்திரிக்கை நடத்துவதற்கான செலவுகள்
12. கட்சியின் கொள்கைகளை விவாதிப்பதற்கான மாநாட்டு செலவுகள்
13. கட்சி மீது போடப்படும் வழக்குகள், மக்களுக்காக கட்சி போடும் வழக்குகள் ஆகியவற்றுக்கான செலவுகள்

இப்படியாக எண்ணற்ற செலவுகள் எந்தவொரு கட்சிக்கும் இருக்கும்.

அதுசரி, இதெல்லாம் ஒரு கட்சியின் செலவு மாதிரி தானே தெரிகிறது. இதற்கு அந்த கட்சியே சொந்தமாக செலவு செய்ய வேண்டியதுதானே?

இதுவொரு நல்ல கேள்வி. கட்சிகள் என்பது ஒரு தொழில் நிறுவனம் அல்ல. அவை இயங்குவதே மக்களுக்காகத்தான். மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல்தான். மக்களுக்கு ஆயிரம் வேலைகள் இருப்பதால், மக்களின் பிரதிநிதிகளாக அரசியல்வாதிகள்தான் அரசியல் பணிகளை செய்கிறார்கள். அதனால், அரசியல் கட்சிகளின் செலவுகளை மக்கள்தான் ஏற்பதுதான் சரி.

ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் தவிர வேறு எந்தக் கட்சியும் இப்படி மக்களிடம் காசு கேட்பதில்லையே?

நேரடியாகக் கேட்கவில்லை. ஆனால், திருட்டுத்தனமாக எடுத்துக்கொள்கிறார்கள். மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கேட்காத ஒரு கட்சி இருக்கிறதென்றால், அந்தக் கட்சிதான் இருப்பதிலேயே ஊழல் மிகுந்து கட்சி என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடம் காசு கேட்காத தமிழ்நாட்டின் பெரிய கட்சிகள் அனைத்தையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வட்டச் செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில அளவிலான தலைவர்கள் என அனைவரும் என்ன வேலை செய்கிறார்கள் என்று நிதானமாக கவனித்துப் பாருங்கள். அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்ப காசு சம்பாதிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படையான உண்மையாகத்தான் இருக்கும். உங்கள் ஊரில் ஒரு ரோடு போடுவதாக இருந்தாலும், அதில் பெரும்பங்கு வட்ட செயலாளர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, மந்திரி, எதிர்க்கட்சி புள்ளிகள் என பலருக்கும் பங்கு போகும். இல்லையென்று சொல்லவே முடியாது. ரோடு போடுவது மட்டுமல்லாமல், எல்லாவித அரசு பணிகளுக்கும் இதேதான் நிலை. ஆளுங்கட்சிகள் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளும் அதேதான். உள்ளூரில் அதிகாரமிக்க கட்சியுடன் நட்பாக இருந்தால் பல நன்மைகள் உண்டு என்பதால், தொழிலதிபர்கள் பலரும் காசு கொடுப்பார்கள். இப்படி செய்யப்படுகிற ஊழல்களில் புழங்கும் பணத்தையெல்லாம் கூட்டிப் பாருங்கள். மக்களிடம் உண்டியலில் பணம் கேட்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட, பல ஆயிரம் மடங்கு அதிகமாக மக்களின் பணம் அவர்களின் கைகளுக்குப் போய்ச் சேர்வதைப் பார்க்க முடியும். கம்யுனிஸ்ட் கட்சிகள் உண்டியலைத் தூக்கிக்கொண்டு மக்களிடம் கேட்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருப்பார்கள். ஆனால், மக்களிடம் சுரண்டி சம்பாதிக்கும் கோடிகளுக்கு மற்ற அரசியல் கட்சிகள் கணக்கும் வைப்பதில்லை. அத்துடன், மக்களிடம் உரிமையாக விருப்பம் இருந்தால் கொடுங்கள் என்றுதான் கம்யுனிஸ்ட்டுகள் கேட்கிறார்கள். ஆனால், மற்ற கட்சிகளோ, மக்களிடம் அனுமதி எல்லாம் வாங்காமல் திருடிக்கொள்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள். முதல் போட்டு அரசியல் கட்சி ஆரம்பிப்பவர்கள் அனைவரும், அந்த முதலை விட அதிக இலாபம் அரசியலில் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக ஊழல், இலஞ்சம், சுரண்டல், நில ஆக்கிரமிப்பு, பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்பட அவர்களிடம் பணம் பெறுதல், தேர்தல் பத்திரம் மூலம் பணத்தை பெறுதல் என பலவழிகளில் இலாபம் அடைவார்கள்.

ஆனால், எந்த முதலும் போடாமல், தங்களது உழைப்பை தியாகம் செய்தும், மக்களிடம் இருந்து கருத்தையும் சில சில்லறைப் பணத்தையும் பெற்றுக்கொண்டு மக்களுக்காக உழைப்பவர்கள் உண்டியல் குலுக்ககள் என்றால், அது கம்யூனிஸ்ட்டுகளை பெருமைப்படுத்துவதன்றி வேறில்லை…

ஆம், நாங்கள் உண்டியல் குலுக்கிகள்தான். அதுக்கு என்ன இப்போ?

இ.பா.சிந்தன்

Leave a Reply