மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் நூல்களுக்கும் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகழ் பெற்ற புத்தகம் `சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?’ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவரான லியூ – ஷோ – சி கட்சி ஊழியர்களின் கூட்டத்தில் ஆற்றிய உரையே இந்நூல்! இந்தச் சொற்பொழிவு சீனாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்டது என்றாலும் கட்சி அமைப்பு, அதன் தன்மை, புரட்சிகர தொலைநோக்குப் பார்வை, கட்சி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு, அவர்களை சிறந்த கம்யூனிஸ்ட் ஆக்குவதற்கான வழிவகைகள் என்ற முறையில் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சிறந்த வழிகாட்டும் நூலாகும்.
அதன் சில முக்கிய அம்சங்கள்:
- கோட்பாடு மற்றும் கொள்கை சார்ந்திருக்கிற பிரச்சனைகளில் சமரசம் இல்லாத, சரணாகதி அடையாத உறுதியோடு, கட்சி கோட்பாடுகளை பாதுகாக்க போராட வேண்டும். அதே நேரத்தில் கொள்கை, கோட்பாடுகள் தொடர்பில்லாத சாதாரண நடைமுறை சர்ச்சைகள் வந்தால், கூடிய வரை சமரசம் செய்து கொள்ள வேண்டும்.
- கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களான நாம்தான் நவீன கால வரலாறில் மிகவும் வளர்ச்சி பெற்ற புரட்சிவாதிகளாவோம். சமூகத்தையும், உலகையும் மாற்றி அமைப்பதற்கு இன்று போர்ப்படையாகவும், முன்னோட்டச் சக்தியாகவும் இயங்குவது நாம் தான்.
- கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களின் பயிற்சியானது ஒரு புரட்சிகர பயிற்சியாகும். புரட்சிகர நடைமுறையின் நலன்களுக்குப் பாடுபடுவதும், வெகு ஜனங்களின் நடைமுறை புரட்சி இயக்கத்தை மேலும் அதிகமாக பயன்தரத் தக்கவாறு வழி நடத்திச் செல்வதும்தான் நம்முடைய பயிற்சியின் ஒரே நோக்கமாகும்.
- மார்க்சியம் – லெனினியம் என்பது தான் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் விஞ்ஞானம். முழுக்க முழுக்க தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்தை மேற்கொள்பவர்களும், தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்தை தனது சொந்த லட்சியங்களாக ஏற்றுக் கொள்பவர்களும் தான் மார்க்சியம் – லெனினியத்தில் பரிபூரண ஞானமும், பாண்டித்தியமும் பெற முடியும்.
- சித்தாந்தப் பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு வர்க்கங்களின் பொருளாதார, அரசியல் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஒன்றுக்கொன்று விரோதமான கருத்துக்களிடையே, நடைபெறும் ஒரு போராட்டத்தைக் குறிக்கிறது என்று நான் கருதுகிறேன். மனிதனின் சகல நடவடிக்கைகளும் அவனுடைய சித்தாந்தத்தால் வழி காட்டப்படுகிறது.
- கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களின் அடிப்படையான பொதுவான கடமை என்ன? கம்யூனிசத்தை அமைப்பதே, இன்றுள்ள உலகை ஒரு கம்யூனிஸ்ட் உலகாக மாற்றுவதே அந்தக் கடமை.
- கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எல்லா சூழ்நிலைகளிலும் தன் சொந்த நலன்களை கட்சியின் நலன்களுக்கு பரிபூரணமாகவும், நிபந்தனையின்றியும், கீழ்ப்படுத்துகிறாரா என்பதைக் கொண்டே கட்சிக்கும் புரட்சிக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அவர் செலுத்தும் விசுவாசத்தை மதிப்பிட வேண்டும்.
- சொந்த நலன்கள் கட்சியின் நலன்களுக்கும், பகுதி நலன்கள் பூரண நலன்களுக்கும், தற்காலிக நலன்கள் நீண்ட கால நலன்களுக்கும் ஒரு நாட்டின் நலன்கள் முழு உலகின் நலன்களுக்கும் கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்பது மார்க்சிய – லெனினியக் கோட்பாடு ஆகும்.
- சொந்த நலனைவிட கட்சி நலனே பிரதானமானவை. இதுதான் கட்சி உறுப்பினர்களின் மிக முக்கியமான கோட்பாடாகும். கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் தன் சித்தாந்தத்தில் இந்தக் கருத்தை மிகவும் உறுதியாக நிலைநாட்ட வேண்டும். இதைத்hன் நாம் அடிக்கடி `கட்சி மனப்பான்மை’, `கட்சி உணர்வு’ `ஸ்தாபன உறவு’ என்று கூறி வருகிறோம்.
- நம் தோழர்கள் கட்சியின் நலன்களுக்குப் புறம்பான சொந்த நோக்கங்களைத் கொண்டிருக்க கூடாது. நம் கட்சி உறுப்பினர்களின் சொந்த நோக்கங்கள் கட்சியின் நோக்கங்களின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.
- தொழிலாளி வர்க்கத்தின், மனித குலத்தினுடைய விடுதலையின் நலன்களை அல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறெந்த நலனோ, நோக்கமோ கிடையாது.
- சில சமயங்களில் உறுப்பினர்களின் சொந்த நலன்கள், கட்சி நலனுக்கு விரோதமாக இருந்தால் உறுப்பினர் தன் சொந்த நலனை நிபந்தனையின்றி தியாகம் செய்ய வேண்டும்.
- கட்சி உறுப்பினர் என்பவர் சாதாரண ஆள் அல்ல. அவர் உணர்வுப்பூர்வமான தொழிலாளி வர்க்க முன்னணிப் போர் வீரராவார்.
- கட்சி உறுப்பினர் தங்கு தடையின்றி முழு மனதுடன் கட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். அவர் தன்னிடம் கறாராக இருக்க வேண்டும். பொது நலக் கண்ணோட்டமுடையவராக இருக்க வேண்டும். தனக்கென சொந்தமான நோக்கங்களையோ, இச்சைகளையோ கொண்டிருக்கக் கூடாது. எல்லா விஷயங்களிலும் தன்னைப்பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. தனக்கு உயர்ந்த பதவி தரவில்லையென்றோ, தன்னைப் போற்றி புகழவில்லை என்றோ கட்சி மீது புகார் செய்து கொண்டிருக்கக்கூடாது. கம்யூனிஸ்டுகள் சுய திருப்தி மனப்பான்மையோ அல்லது கர்வமோ கொண்டிருக்கக்கூடாது.
- பிரமைகளில் மூழ்கிக் கிடப்பதும், பயன்தரத்தக்க நடைமுறை வேலைகளையும், போராட்டத்தையும் கண்டு அஞ்சுவதும் குட்டிபூர்ஷ்வாக்களின் குண விசேஷங்களாகும்.
- கட்சியும், கட்சியின் தலைவர்களும் கட்சி உறுப்பினர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணும் பொழுது அவர்களுடைய வேலை நிலைமைகள், வாழ்க்கை நிலைமைகள், கல்வி நிலைமைகள் முதலியவற்றில் கவனம் செலுத்தி அவர்கள் கட்சிக்காக சிறந்த முறையில் செயலாற்றுவதற்குமுன் தங்களை விருத்தி செய்து கொள்வதற்கும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர லட்சியம் பற்றி தங்களுடைய உணர்வை உயர்த்தி செழுமைப்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுக்குச் சக்தி அளிக்க வேண்டும்.
இவர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்ட்டாக முடியாது.
சுரண்டும் வர்க்கங்களின் சித்தாந்தத்தை வன்மையாகப் பிரதிபலிக்கும் தோழர்கள் ஒரு சிலர் கட்சியில் இருந்து வருகின்றனர்.
இவர்கள் பரஸ்பர உதவி, ஒருமைப்பாடு என்னும் மனப்பான்மை கிஞ்சித்தும் இன்றி- கம்யூனிஸ்டுகள் உடைய- தொழிலாளி வர்க்கத்தின் உடைய மகத்தான மிகவும் நேர்மையான இந்த மனப்பான்மை கிஞ்சித்தும் இன்றி- பகைவர்களிடம் கையாளப்படும் முறைகளையே கட்சி உறுப்பினர்கள் சம்பந்தமாகவும் உள்கட்சி பிரச்சனைகள் சம்பந்தமாகவும் பல சந்தர்ப்பங்களிலும் கையாளுகின்றனர்.இத்தகைய சித்தாந்தத்தை உடையவர்கள் கட்சியில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவும், தங்களை வளர்ச்சி செய்து கொள்ளவும் விரும்பி அதன் பொருட்டு மற்றவர்களைப் பிடித்து கீழே இழுக்கின்றனர்.
மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு இடைஞ்சலாக குறுக்கே நிற்கின்றனர். மற்றவர்களுடைய தலை மீது ஏறி தாண்டி சென்று விட விரும்புகின்றனர். தங்களை விட அதிக திறமை காட்டுபவர்களைக் கண்டு பொறாமைப்படுகின்றனர். மற்றவர்கள் தங்களை விட அதிகமாக முன்னேறிச் செல்வதையோ அல்லது தங்களுடைய நிலைக்கு உயர்ந்து வந்து விடுவதையோ காணும் பொழுது அவர்கள் அதிருப்தி அடைகின்றனர். மற்றவர்களைக் கீழே இருத்தி வைப்பதில் அல்லது தங்களை விட பின்தங்கி இருக்கும் படி செய்வதில் வெற்றி பெற்றாலொழிய அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கு கீழ் இருக்க அவர்கள் விரும்புவதில்லை.
மற்றவர்களுடைய கஷ்டங்களைப் பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதே இல்லை. அவர்கள் கவலைப்படுவதெல்லாம் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும், தாங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே. மற்ற தோழர்களுக்கு கஷ்டங்கள், தடங்கல்கள், மனச்சோர்வு அல்லது தாக்குதல்கள் ஏற்படுவதைக் காணும் பொழுது அவர்கள் இன்புறுகின்றனர். ரகசியமாய் ஆனந்தப் பட்டுக் கொள்கின்றனர் .சிறிதும் அனுதாபம் இன்றி இருக்கின்றனர். மற்ற தோழர்களை கெடுத்துவிட வேண்டும் என்று கூட திட்டமிடுகின்றனர்.’ கிணற்றுக்குள் விழுந்து தவிப்பவர்கள் மீது கல்லை விட்டெறிவதற்கு கூட துணிகின்றனர்’ மற்ற தோழர்களிடம் உள்ள பலவீனங்களையும் அவர்களுடைய கஷ்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை தாக்கி அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தருகின்றனர்.
மேலும் கட்சிக்குள் இவர்கள் கட்சி ஸ்தாபனத்தின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய சொந்த நோக்கங்களை பூர்த்தி செய்துகொள்ள முயலுகின்றனர். சொந்த முறையில் தங்களுக்கு லாபம் உண்டாகும் படி செய்து கொள்கின்றனர்.
கட்சிக்குள் வதந்திகளைப் பரப்பி விடுவதிலும், மற்றவர்களைப்பற்றி முதுகிற்குப் பின்னிருந்து அவதூறு செய்வதிலும், தோழர்கள் இடையே நிலவும் உறவுகளை உடைத்து சிண்டு முடித்துவிடுவதிலும் இவர்களுக்கு அலாதியான பிரியம் உண்டு. கட்சிக்குள் நடைபெறும் கோட்பாடற்ற தகராறுகள் யாவற்றிலும் பங்கு எடுத்துக் கொள்வதற்கும், எல்லா ‘தர்க்கங்களிலும்’மிகுந்த அக்கறை காட்டுவதற்கும் விரும்புகின்றனர்.
குறிப்பாக,கட்சி மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே இருக்கும் பொழுது இவர்கள் கட்சிக்குள் இத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றனர். அல்லது தீவிரமடையச் செய்கின்றனர் சுருங்கக் கூறுமிடத்து,இவர்கள் மிகக் கொடியவர்கள்.கிஞ்சித்தும் நேர்மை இல்லாதவர்கள். இத்தகைய ஆட்கள் மார்க்சியம் -லெனினியத்தின் தத்துவத்தையும் வழிமுறையையும் கற்று பாண்டித்தியம் பெற முடியும், தொழிலாளிவர்க்க சித்தாந்தத்தை பிரதிபலிக்க முடியும் என்று கூறுவது நகைக்கத் தக்கதாகும். இவர்களுடைய சித்தாந்தம் சுரண்டும் வர்க்கங்களுடைய சித்தாந்தத்தின் தத்ரூபமான பிரதிபிம்பம் என்பதில் சந்தேகமே இல்லை!”