மனப்பாடம் செய்வது மூலம் கம்யூனிஸத்தைப் பயில முடியாது – லெனின்

கம்யூனிஸத்தை அறிந்து கொள்ள நமக்குத் தேவைப்படுவது என்ன?             

கம்யூனிஸம் குறித்த அறிவைப் பெறுவதற்கு பொது அறிவின் மொத்தத்திலிருந்து எதை தனியே பிரித்தெடுக்க வேண்டும்?

கம்யூனிஸத்தை அறிந்து கொள்கின்ற பணி தவறாக இருக்கும்போதோ, அல்லது அது ஒருதலைப்பட்சமாக விளக்கப்படும்போதோ, அதனால் ஏராளமான அபாயங்கள் தலைதூக்குவது தவிர்க்க முடியாதது.

கம்யூனிஸத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய உடனேயே ஒருவருடைய மனதில் இயற்கையாகத் தோன்றுவது என்னவெனில், கம்யூனிஸ பாடப் புத்தகங்கள். பத்திரிகைகள், புத்தகங்களில் அடங்கியுள்ள மொத்த அறிலை கிரகித்துக் கொள்வது என்பதாகும். கம்யூனிஸத்தைப் பயிலுதல் என்பதற்கு இப்படிப்பட்டதொரு விளக்கம் தருவோமேயானால் அது அநாகரிகமானதும் குறைபாடுடையதுமாகும்.

கம்யூனிஸத்தைப் பயிலுவது. கம்யூனிஸம் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளில் உள்ள விஷயத்தைக் கிரகித்துக்கொள்வது மட்டுமேயெனில், நாமெல்லோருமே மிகச் சுலபமாக கம்யூனிஸப் பாடங்களை அறிந்த ஜாலவித்தைக் காரர்களாகவும், பெருமையடிப்பவர்களாவும் மாறிவிடலாம். இது நமக்கு பெரும்பாலும் பாதகத்தையும் இழப்பையுமே ஏற்படுத்தும். கம்யூனிஸ புத்தகங்கள், பத்திரிகைகளில் உள்ள விஷயங்களை மனப்பாடம் செய்து அறிந்து கொள்ளும் நபர்கள், அவர்கள் பெற்ற இந்த அறிவை இணைத்துக் கொள்வதிலே திறமையற்றவர்களாய் இருப்பார்கள். மற்றும் கம்யூனிஸம் உண்மையில் கூறுகிறபடி அவர்களால் நடந்து கொள்ளவும் முடியாது.

பழைய முதலாளித்துவ சமூகம் நமக்கு விட்டுப்போன மாபெரும் கொடுமைகள் மற்றும் துரதிருஷ்டங்களில் ஒன்று என்னவெனில், புத்தகங்களை முழுமையாக நடைமுறை வாழ்க்கையிலிருந்து பிரித்தெடுத்ததுதான். எல்லா விஷயங்களுக்கும் மிகச் சிறந்த முறையில் விளக்கமளித்திருந்த புத்தகங்கள் நம்மிடம் நிறைய இருந்தன. இருந்தபோதிலும் இதில் பெரும்பாலான புத்தகங்கள் கம்யூனிஸ சமூகத்தை தவறாக சித்தரிப்பதற்காக வெறுப்பளிக்கக்கூடிய போலித்தனமான

பொய்களைப் புனைந்துரைப்பனவாகவே உள்ளன. இதன் காரணமாகவே புத்தகங்களில் உள்ள கம்யூனிஸம் பற்றிய எழுத்துக்களை மட்டும் கிரகித்துக் கொள்வது மிகத் தவறாகவே முடியும். நாம் நம்முடைய பேச்சுகளிலும் எழுத்துகளிலும் கம்யூனிஸம் பற்றி முன்பு சொன்னதையே இப்போது சொல்லவில்லை. ஏனெனில் நம்முடைய பேச்சுகளும் எழுத்துகளும் நம்முடைய பல்வேறு தினசரி வேலைகளோடு சம்பந்தப் பட்டதாகும். வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் வெறும் புத்தகங்களிலும், பத்திரிகைகளிலிருந்தும் மட்டுமே பெறப்படும் கம்யூனிஸ அறிவு ஒன்றுக்கும் பயனற்றது ஆகும். மேலும் இது நடைமுறையிலிருந்து தத்துவத்தைப் பிரிக்கக்கூடிய பழைய முறையின் தொடர்ச்சியேயாகும். இந்த தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள பிரிவினைதான், பழைய முதலாளித்துவ சமுதாயத்தின் மிகவும் வெறுப்பைத் தரக்கூடிய அம்சமாக இருந்தது.

பழைய பள்ளிக்கூடமானது விஷயங்களை உருப்போடும் பள்ளிக்கூடமாகும். இது தன்னுடைய மாணவர்களை பயனற்ற, மேம்போக்கான வெற்று அறிவை ஏராளமாகக் கிரகித்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் மூளை வளர்ச்சியடையாமல் தடுக்கப்பட்டதோடு, இளைய தலைமுறையினர் மாதிரி அதிகாரிகளாக உருமாற்றப்பட்டனர். அதே நேரத்தில் இதிலிருந்து மனித அறிவு சேகரித்து வைத்துள்ள விஷயங்களை அறிந்து கொள்ளாமலேயே ஒருவன் கம்யூனிஸ்டாகி விட முடியும் என்ற முடிவிற்கு நீங்கள் வர முயற்சிப்பீர்களேயானால், நீங்கள் மாபெரும் தவறைச் செய்தவராவீர்கள். அறிவின் மொத்தத்தைப் பெறாமல் வெறும் கம்யூனிஸ கோஷங்களையும் கம்யூனிஸ விஞ்ஞானத்தின் முடிவுகளையும் மட்டுமே கிரகித்துக் கொண்டால் போதும் என்று நினைப்பது தவறாகும். ஏனெனில் கம்யூனி ஸம் என்பதே இந்த மொத்த அறிவின் ஒரு விளைவாகும். மொத்த மனித அறிவிலிருந்து கம்யூனிஸம் எவ்வாறு உருவானது என்பதற்கு மார்க்சியம் ஒரு உதாரணமாகும்.

கம்யூனிஸக் கோட்பாடு மற்றும் கம்யூனிஸம் பற்றிய விஞ்ஞானம், ஏதோ 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தனிப்பட்ட சோஷலிஸ்டின் படைப்பு என்பது முடிந்து போன ஒன்று என்பதையும், அதே நேரத்தில் அது பிரதானமாக மார்க்சால் உருவாக்கப்பட்டது என்பதையும், அவர் ஒரு மாபெரும் மேதை என்பதையும் நீங்கள் படித்திருக்கவும் கேட்டிருக்கவும் கூடும். அதாவது இப்போது இந்தக் கொள்கையானது உலகம் முழு வதிலுமுள்ள கோடிக்கணக்கான பாட்டாளிகளுக்கான கொள்கையாய் மாறிவிட்டது. அவர்கள் இந்தக் கொள்கையை முதலாளித்துவத்துக்கு எதிரான தங்களுடைய போராட்டத் தில் பயன்படுத்துகின்றனர்.

ஏன் மார்க்சியக் கொள்கை புரட்சிகர வர்க்கத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டு விட்டது என்று கேட்பீர்களேயானால் அதற்கு ஒரே ஒரு பதிலைத்தான் நீங்கள் பெறுவீர்கள். மார்க்ஸ், முதலாளித் துவத்தின் கீழ் பெற்ற மனித அறிவின் உறுதியான அடித்த ளத்தின் மீதுதான் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்தார் என்பதுதான் அந்தப் பதில். மனித சமூக வளர்ச்சியின் விதி களைப் படித்தறிந்ததன் மூலம் மார்க்ஸ, முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதபடி கம்யூனிஸத்திற்கு இட்டுச் செல்லும் என்று உணர்ந்தார். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், முதலாளித்துவ சமூகம் குறித்த மிகச் சரியான மிக விளக்கமான, மிக ஆழமான தன் படிப்பை அடிப்படையாக வைத்தே மார்க்ஸ் இதை நிரூபித்தார். இதற்கு முன்பாக இருந்த விஞ்ஞானம் போதித்த அனைத்து விஷயங்களையும் முழுமையாக கிரகித்ததாலேயே அவரால் இதைச் செய்ய முடிந்தது.

மனித சமுதாயம் உருவாக்கிய அனைத்து விஷயங்களையும், ஒரு சிறு விஷயத்தையும் விடாமல் விமர்சனாரீதியாகக் கற்றறிந்தோம். மனித சிந்தனை இதுகாறும் உருவாக்கிய அனைத்து விஷயங்களையும் கற்றறிந்தோம். அதனை விமர்சனம் செய்தோம். தொழிலாளி வர்க்க இயக்கத்திலே அதனைச் சோதித்துப் பார்த்தோம். அதிலிருந்து முடிவுகளுக்கு வந்தோம். முதலாளித்துவ எல்லைகளிலோ அல்லது முதலாளித்துவ தவறான கண்ணேட்டங்களிலோ அடைபட்டிருப்பவர்களால் இத்தகைய முடிவுகளுக்கு வர முடியவில்லை.

பழைய பள்ளிகளில் இருந்ததுபோல, இளைஞர்களின் மூளை யில் அளவற்ற விஷயங்களை திணிக்கும் முறையை நாம் பின் பற்றக் கூடாது. அவ்வாறு திணிக்கப்படும் விஷயங்களில் பத்தில் ஒன்பது பங்கு பயனற்றதும் மீதி ஒரு பங்கு திரிக்கப்பட்டதும் ஆகும். வெறும் கம்யூனிஸ முடிவுகளுக்குள்ளே நம்மை முடக்கிக் கொள்வதும், வெறும் கம்யூனிஸ்டு கோஷங்களை கிரகித்துக் கொள்வதும் என்பது இதன் அர்த்த மல்ல. கம்யூனிஸத்தை அந்த முறையில் உங்களால் உரு வாக்க முடியாது. மனிதகுலம் உருவாக்கிய அனைத்து அறிவுப் புதையல்களையும் கொண்டு உங்கள் மூளையை வளப்படுத்திக் கொள்வதன் மூலமே நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக முடியும்.

உருப்போடுதல் நமக்குத் தேவையில்லை. ஆனால் எல்லா மாணவர்களின் மூளையையும் முக்கியமான உண்மைகளைப் பற்றிய அறிவைக் கொண்டு வளர்ச்சியடைய செய்வதும் சரி செய்வதும் நம்முடைய பணியாகும். ஒருவனுக்கு, தான் பெற்ற அனைத்து அறிவும் அவன் மூளையிலே செரிக்கவில்லை யெனில், அவனைப் பொறுத்தவரை கம்யூனிஸம் என்பது ஒரு செல்லாப் பொருளாகவும், வெறும் பெயர்ப் பலகையாகவும், கம்யூனிஸ்டு என்பவன் வெறும் அறிவுப் படாடோபக்காரனா கவும் மாறிவிடுவான். நீங்கள் அறிவை வெறுமனே கிரகித் துக்கொள்ள கூடாது. விமர்சனா ரீதியாகக் கிரகித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பயனற்ற விஷயங்களைக் கொண்டு உங்கள் மனதை உருப் போடுவதைத் தவிர்த்து, கற்ற நவீனமனிதனுக்குத் தேவைப்படும் அனைத்து உண்மைகளையும் கொண்டு உங்கள் அறிவை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு கம்யூனிஸ்டு தீவிர மற்றும் கடின உழைப்பில் ஈடுபடாமல், விமர்சனாரீதியாக ஆராய வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல், தனக்குத் தயாராய்க் கிடைத்த உண்மைகளை மட்டுமே மனதில் கொண்டு, கம்யூனிஸத்தை குறித்து தற்புகழ்ச்சி கொள்வானேயெனில், அவன் மிகவும் பரிதாபத்திற் குரிய கம்யூனிஸ்டாக இருப்பான். அத்தகைய மேம்போக்குத் தன்மை அழிவைத்தரக் கூடியதாக இருக்கும். எனக்கு ஒரு சிறிது தெரியும் என்று தெரிந்தால், நான் இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளத்தான் முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஒருவன்தான் கம்யூனிஸ்டு என்றும், தனக்கு எல்லாமே முழுமையாகத் தெரியும் என்றும் சொல்லிக் கொள் வானேயெனில்,  அவனால் ஒருபோதும் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.


-லெனின், “ரஷ்ய இளம் கம்யூனிஸ்டு கழக மாநாட்டில் ஆற்றிய உரை’ (1920).

Leave a Reply