நாம் போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்திடுவோம் பறிபோகும் புதுச்சேரி உரிமைகளை மீட்டெடுப்போம் !!!

ஏகாதிபத்திய ஆட்சியின் அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15ஆம் தினத்திற்கும் புதுச்சேரி இந்திய இணைப்பு தினமான ஆகஸ்ட் 16ஆம் விழாவிற்கும் குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டின் விடுதலையை சாத்தியமாக்க இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு இந்த 76வது விடுதலைத் திருநாளில் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது இலக்குகள், இலட்சியங்களை நிறைவேற்ற சூளுரைப்போம்.

விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலாக இந்திய மண்ணிலும் புதுச்சேரி மண்ணிலும் பொதுவுடமை இயக்கம் உருவானது. ‘பூரண விடுதலையே தேசத்தின் இலட்சியம்’ என்ற முழக்கத்தை முதன் முதலாக எழுப்பியவர்கள், ஆசியாவிலேயே முதன் முதலில் 8 மணிநேர வேலையை வென்று எடுத்து புதுச்சேரியில் விடுதலை வேள்வி நடத்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்ற வரலாற்று உண்மையை இந்த நாட்களில் நினைவு கொள்வோம்.

அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட மைய அரசு, பெயரளவுக்கான மாநில அரசு என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டம். அதை சிரமேற்கொண்டு மத்திய பாஜக மோடிஅரசு நிறைவேற்றி வருகிறது. அனைத்து முனைகளிலும் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்படுகிறது. இன்றைக்கு புதுச்சேரிக்கு ஏற்பட்ட கதி நாளை எந்த ஒரு மாநிலத்திற்கும் ஏற்படக்கூடும்.

தேசிய விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வி என்ற முழக்கம் எழுந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகும் கடைக்கோடி இந்தியருக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் பணி முழுமை பெறவில்லை. ஆனால் தற்போது மோடி அரசு செயல்படுத்தும் புதியக் கல்விக்கொள்கை நாட்டில் மீண்டும் குலக்கல்வி முறையை புகுத்தி, கல்லாதவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வகை செய்கிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை வம்படியாக திணிக்க முயல்வதன் மூலம் அனைத்துப் பகுதி மக்களின் சமச்சீரான தாய்மொழிகளின் வளர்ச்சிக்கு தடைக்கற்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆளும் பாஜக கட்சி நிறைவேற்றிய பல மசோதாக்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக, மதரீதியான பிளவை அதிகரிக்கச் செய்வதாக, குடிமக்களின் குடிமை சார் உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில் கார்ப்பரேட் கனவான்களுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தேசத்தின் அனைத்து கதவுகளையும் திறந்துவிடும் பணி நடக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை முற்றாக அழித்துவிட முனைகின்றனர். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை கார்ப்பரேட்டுகளின் காலடியில் காணிக்கையாக்குகிற ஆட்சியாளர்களை எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்துப் பகுதியினரையும் இணைத்துக் கொண்டு மாபெரும் போராட்டங்கள்எதிர்வரும் காலத்தில் இன்னும் வலிமையாக நடைபெறும் என்பது திண்ணம். விடுதலை போராட்டத்தின் பகுதியாக உருவாக்கப்பட்ட சுதேசி, சுயசார்பு போன்ற விழுமியங்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.

இந்திய , புதுச்சேரி பொருளாதாரம் தள்ளாடி தடுமாறி நிற்பதை மறைக்க மக்களை சாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும் மோத விட முயல்கின்றனர். இதை முறியடித்தாக வேண்டும்.

இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்று அடிமை இந்தியாவில் இருந்ததை போன்று, பல்வேறு சட்டத்திருத்தங்கள் மூலம் கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும்.

அதேபோல் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் புதுச்சேரி மண்ணிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். 1954 நவம்பர் 1ல் பிரஞ்சு இந்திய ஒப்பந்தப்படி, புதுச்சேரி விடுதலைப் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. 1962 ஆகஸ்ட் 16ல் பிரஞ்சு இந்திய பகுதிகள் சட்டப்பூர்வமாக இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது அன்று முதல் சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரியில் கொண்டாடப்படுகிறது.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல், தோழர் வ.சுப்பையா தலைமையில் தோழர்கள் வி.பி.சிந்தன், பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், சி. கோவிந்தராஜன், மேஜர் ஜெய்பால் சிங் உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பும், வெகுமக்கள் பங்கேற்பும் புதுச்சேரி விடுதலைக்கு வழிவகுத்தன.

அப்போது உறுதியளிக்கப்பட்ட பல்வேறு உரிமைகளை ஒன்றிய மோடி அரசு காலில் போட்டு மதித்து வருகிறது.

புதுச்சேரியில் ஆட்சி நடத்தி வரும் என்.ஆர் காங்கிரஸ்- பிஜேபி கூட்டணி அரசு புதுச்சேரி உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படும் போது, வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமின்றி அவை அனைத்தையும் நியாயப்படுத்துகிற, துணை நிற்கிற அளவுக்கு துணிந்து விட்டது மாநில அரசு.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணை நிலை ஆளுநர் பிஜேபி RSS தலைமையில் ஒரு குழு ஆட்சியும், என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும், மத்திய அரசு அதிகாரிகளின் ஆட்சி என மூன்று ஆட்சிகள் நடைபெறுகின்றன.

இதனால் புதுச்சேரி பிரதேசத்தில் ஒரு புதிய திட்டமும் இல்லை எந்த ஒரு புதிய வேலை வாய்ப்பும் இல்லை. மக்கள் வாழ வழி தெரியாமல் தவிக்கின்றனர்.‌

புதுச்சேரியில் கடந்த ஆண்டு மட்டுமே 2000க்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன, அதில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் எதிர்காலத்தை இழந்துள்ளனர்.

வன்முறை, கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. இதைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாக, தொடர்ந்து மின்துறை விற்பனை, ஆலைகள் மூடல், சம்பளம் இன்றி தவிக்கும் உள்ளாட்சித்துறை, கூட்டுறவு அமைப்பு ஊழியர்கள். மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ரேஷன் கடை மூடல் பல்வேறு புதிய வரிகள் என மக்களின் அனைத்து விதமான உரிமைகளும் பறித்து வருகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதமான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி ஆகிய மாண்புகளையும், மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற நம் தேசத்தின் உள்ளார்ந்த மரபுகளையும் உயர்த்திப்பிடிக்க பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாத்திடவும் பறிபோகும் புதுச்சேரி உரிமைகளை மீட்டெடுக்கவும் வரும் நாட்களில் உறுதி கொள்வோம்.

இரா.இராஜாங்கம்
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
14.8.2022

Leave a Reply