2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவதற்காக ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மிஷ்ரா “டிராய்’’ எனப்படும் டெலிகாம் ஒழுங்குமுறை குழுமத்தின் (TRAI-Telecom Regulatory Authority of India) தலைவராக இருந்தவர். டிராயின் தலைவர் மத்திய, மாநில அரசாங்கங்கள் எதிலும் நியமிக்கப்பட முடியாது என்று இந்திய சட்டங்கள் விதிமுறைகள் நிர்ணயித்திருக்கின்றன. மோடி தனக்கு வேண்டியவரை நியமிப்பதற்கு இந்திய சட்டம் இடம் கொடுக்கவில்லையா? அப்படியானால் அந்த சட்டத்தைத் தூக்கி எறியுங்கள். அந்த சட்டத்தைத் திருத்துவதற்காக நாடாளுமன்றம் கூடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்க முடியாது, மேலும் அது சட்டமாவதற்கு காலதாமதமாகக்கூடும். எனவே நாடாளுமன்றத்தையே ஒதுக்கி வைத்துவிட்டு, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
மோடியின் அரசாங்கமானது நாட்டிலுள்ள ஜனநாயக செயல்பாடுகளின் அனைத்து நெறிமுறைகளையும் மீறும் என்பதற்கான சமிக்ஞை இவ்வாறு அவர் பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே வெளியானது. மிகவும் அற்பமான ஒரு விருப்பத்திற்காக, ஓர் அவசரச்சட்டமே பிறப்பிக்கப்படும் என்றால், மற்ற மிகப்பெரிய விருப்பங்கள் என்றால் நிலைமைகள் எப்படி இருக்கும்?
இந்த சமிக்ஞையானது கடந்த ஈராண்டுகளில் பூதாகரமாகிவிட்டது. இவர்களின் பகட்டாரவாரத் தன்மைகள் ஒளிவுமறைவின்றி தெள்ளத்தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன. மோடியும் அவரது அரசாங்கமும் தாங்கள் நினைத்ததைச் செய்வது என்ற வழியில் துணிந்து செல்லத் தொடங்கிவிட்டனர். ஜனநாயக நெறிமுறைகள் என்னவாக இருந்தாலும், அவை எப்படிக் குறுக்கிட்டாலும் அவற்றை அவர்கள் பொருட்படுத்தவில்லை. தங்களுக்கு எதிராக வந்த கருத்துவேறுபாடுகளை காலில் போட்டு மிதித்து நடந்தனர். அது நாடாளுமன்றத்திற்கு உள்ளே என்றாலும் சரி, அல்லது வெளியே என்றாலும் சரி.
நாடாளுமன்றத்திற்குள்ளே, மோடி அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடனான அணுகுமுறை என்பது முழுக்க முழுக்க மோதல் போக்கையே கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினர் என்ன கூறினாலும் அதனைக் காலில்போட்டு மிதித்து நடந்திடத் தயங்கிடவில்லை. நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்காக அவசரச்சட்ட மார்க்கத்தை முயற்சித்துப் பார்த்தது. ஆனாலும் அதனை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லாததால், கடைசியில் அதனை அது கைவிட வேண்டியதாயிற்று. இதிலிருந்து படிப்பினையைக் கற்றுக்கொண்ட பின்னர், அரசாங்கம் சட்டவிரோதமான பாதையில் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. மாநிலங்களவையில் தனக்குப் பெரும்பான்மை இல்லாததால் அறநெறியற்ற முறையில் செயல்பட முனைந்துள்ளது. ஆதார் சட்டமுன்வடிவை நிதிச் சட்டமுன்வடிவாக மாற்றியது. ஏனெனில், நிதிச் சட்டமுன்வடிவு என்றால், மாநிலங்களவையில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நிதிச்சட்ட முன்வடிவுக்கான ஷரத்துக்கள் அரசாங்கத்தால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பார்த்து அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்திய போதிலும், அரசாங்கம் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இதே உத்தியை இப்போது பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (GST-Goods and Services Tax) சட்டமுன்வடிவுக்கும் பயன்படுத்திட நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. தாங்கள் செய்ய விரும்புவதைச் செய்வதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்றால், சட்டத்தையே ஒதுக்கித்தள்ள மீண்டும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு இவர்கள் நடந்துகொள்வது நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டும்தான் என்று கிடையாது, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவற்றில் மாணவர்களின் எதிர்ப்புக் கிளர்ச்சிகளை இவர்கள் எங்ஙனம் கையாண்டார்கள்?
ஹைதராபாத்தில் மாணவர்களின் குழு ஒன்று, தூக்கு தண்டனைக்கு எதிராக கிளர்ச்சி மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். யாகூப் மேனன் தூக்கிலிடப்பட்டுள்ள பின்னணியில் இவ்வாறு இவர்கள் கிளர்ச்சி செய்திருக்கிறார்கள் என்றும், எனவே இவர்கள் அனைவரும் தேச விரோதிகளாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ்/பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி) கூறியது. பாஜக எம்பி ஒருவரிடமிருந்தும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருத இரானியிடமிருந்தும் வந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக பல்கலைக் கழகம் சில மாணவர்களை பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றியது. இவர்களில் ஒருவர், தலித் மாணவரான ரோஹித் வெமுலா, தற்கொலை செய்து கொண்டார்.
புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏபிவிபி அமைப்பானது, சில சிறிய இடதுசாரிக் குழுக்கள் “இந்தியாவுக்கு எதிராக’’ முழக்கங்கள் எழுப்பியதாகக் குற்றம் சாட்டியதன் அடிப்படையில், ஜேஎன்யு சங்கத்தின் மாணவர் தலைவர் கன்னையா குமார் உட்பட பல மாணவர் சங்க முன்னணி ஊழியர்கள் மீது தேச விரோத பிரிவினைக் குற்றச்சாட்டு (sedition charge) சுமத்தப்பட்டது. கன்னையா குமாரின் சங்கமான அனைத்திந்திய மாணவர் பெருமன்றமானது, ஓர் அதிதீவிர இடதுசாரி அமைப்போ அல்லது எந்தக் காலத்திலும் நாட்டில் காஷ்மீரிலோ அல்லது வேறெங்குமோ இயங்கிடும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை ஆதரித்ததோ கிடையாது. இவ்வாறு மாணவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு அடிப்படையாக இருந்த `வீடியோ கிளிப்’ போலியாக ஜோடனை செய்யப்பட்டது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னரும்கூட அம்மாணவர் தலைவர்கள் மீதான வழக்குகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. உள்துறை அமைச்சரிலிருந்து கீழ்மட்டம் வரையிலும் அதிகாரத்தில் உள்ள அனைவருமே “தேச விரோதிகளை’’ சகித்துக்கொள்ள மாட்டோம் என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் சிலவற்றுடன் நம்மாம் ஒத்துப்போக முடியாமல் போகலாம். அது வேறு விஷயம். ஆனால் இங்கே நம்முன் உள்ள பிரச்சனை என்னவெனில், தங்கள் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தால் அதனைச் சகித்துக் கொள்ள மாட்டோம், கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிற முறையில் இந்த அரசாங்கம் செயல்பட்டிருக்கும் விதம்தான். வெறும் முழக்கங்கள் முழங்குவது மட்டுமே பிரிவினைவாதக் குற்றச்சாட்டை ஈர்ப்பதற்குப் போதுமானது என்று கூறமுடியாது என்று சட்டம் மிகத் தெளிவாக இருந்தபோதிலும், அரசாங்கம் அதனை உதாசீனம் செய்துள்ளது. ஏனெனில் தங்களுக்கு எதிராகக் கிளம்பும் ஜனநாயக எதிர்ப்புக் குரலை மிரட்டிப் பணியவைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வேறு பல விதங்களிலும் காண முடிகிறது. அருணாசலப் பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் மாநில காங்கிரஸ் அரசாங்களைக் கலைத்ததிலும் இப்போது மேகாலயாவில் அதனை மேற்கொண்டிட முயற்சித்து வருவதிலும் பார்க்க முடிகிறது. இவ்வொவ்வொன்றிலும் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்களைப் பயன்படுத்திக் கொண்டு, அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திடவும், அதனைத் தொடர்ந்து பாஜக அரசாங்கத்தை அங்கே அமைத்திடவோ அல்லது தங்களுக்குத் தலையாட்டக்கூடிய விதத்தில் ஓர் அரசை அமைத்திடவோ முயற்சிக்கிறது. இவர்களின் இத்தகைய இழி முயற்சி அருணாசலப்பிரதேசத்தில் வெற்றி பெற்ற போதிலும், உத்தர்காண்ட் மாநிலத்தில் உத்தர்காண்ட் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கடுமையான முறையில் தலையில் குட்டியதைத் தொடர்ந்து தோல்வி அடைந்தது.
தில்லி மாநில அரசைப் போன்று, தங்களுக்கு எதிரான அரசாங்கங்களை எங்கெல்லாம் தன்னால் கலைக்க முடியவில்லையோ அங்கெல்லாம் அவை செயல்படுவதில் முட்டுக்கட்டை போட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசாங்கத்திடம் குறைகள் இருக்கலாம். ஆனாலும் அது மக்களால் அபரிமிதமான ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஆயினும் அதன் செயல்பாடுகளுக்கு மத்திய அரசின் பிரதிநிதியான துணை ஆளுநர் (லெப்டினன்ட் கவர்னர்) முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
மோடி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நிலைப்பாடு என்பது இந்தியாவை ஆண் சாதி இந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் (male Caste Hindus) இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்கிற சங் பரிவாரக் கொள்கையின் ஓர் அங்கமேயாகும். இத்தகைய ஒட்டுமொத்த பின்னணியில்தான் இது பார்க்கப்பட வேண்டும். மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடனேயே ஆர்எஸ்எஸ்–இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுக்கு ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளதை நன்கு பார்க்க முடிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டுக் கறிக்குத் தடை விதித்திருப்பது, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி என்னுமிடத்தில் முகமத அக்லாக் தன் வீட்டின் பிரிட்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று சந்தேகத்தின் பேரில் அவரை அடித்துக் கொன்றது, இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் பலரை சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொன்றுகொண்டிருப்பது — ஆகிய இவை அனைத்துமே இவர்களின் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின் பல்வேறு அம்சங்கள்தான். எது எதற்கெல்லாம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கதை அளக்கும் பிரதமர் மோடி இவைகுறித்து மட்டும் எதுவுமே கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார். இவற்றைக் கண்டிக்காதது மட்டுமல்ல, இவற்றுக்கும் தனக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்பதுபோல் காட்டிக்கொள்ளவும் முயல்கிறார்.
இவர்களுடைய நிகழ்ச்சிநிரலின் மற்றோர் மிக முக்கியமான விஷயம் என்பது தாங்கள் ஆளும் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் குறித்த விதிகளை மாற்றி இருப்பதாகும். இத்தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்க வேண்டுமானால் குறைந்தபட்ச கல்வித் தகுதி அவசியம். இதன் மூலம் இவர்களது குறிக்கோள், பஞ்சாயத்து அமைப்புகளுக்குப் போட்டி போடுவதிலிருந்து பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் பெரும்பான்மையோரைக் கழட்டி விடுவது என்பதேயாகும். இதைக் கண்டித்து அரசியல் நோக்கர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டியிருந்த போதிலும், பலன் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. சங் பரிவாரத்தைப் பொறுத்தவரை இத்தகைய விதிகள் அதற்கு ஒரு பிரச்சனையே அல்ல. அவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய உண்மையான நோக்கமும் அதுதான். இந்துத்துவாவின் கீழ் அமைக்கப்படும் நல்லதொரு சமூகத்தில் பெண்களுக்கும், அழுக்கடைந்தோருக்கும் ஆட்சி பரிபாலன அமைப்பில் செயல்பட எவ்விதப் பங்கும் கிடையாது. எனவே அவர்களைச் சட்டரீதியாகவே தேர்தலில் நிற்க முடியாமல் செய்துவிட்டால் அதைவிடச் சிறந்தவழி இந்துத்துவாவிற்கு வேறெதுவும் கிடையாது.
நன்றி தீக்கதிர்
கட்டுரையாளர் ஷ்யாம்
(தமிழில்: ச. வீரமணி)