இந்தியாவின் முதல் மே தினம் 1923

Red Flag Cpim (64)1923ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு மகத்தான நாளாகும். எட்டு மணி நேர வேலைநாள் கோரி அமெரிக்காவில் சிக்காகோ தொழிலாளிகள் ரத்தம் சிந்தி வென்றெடுத்த அந்த மகத்தான உரிமையை உலகத்தொழிலாளிகள் வர்க்கத்திற்கு நினைவுபடுத்தும் நாள்தான் மே முதல்நாள். இந்தியாவில் முதன் முறையாக அந்த பெருமைக்குரிய தினத்தை சென்னையில் சிறப்பாகக் கொண்டாடச் செய்தார் சிங்காரவேலர்.

பம்பாய், கல்கத்தா நகரங்களில் 1927ஆம் ஆண்டில்தான் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் (ஏஐடியுசியின்) வழிகாட்டுதலின் கீழ் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் சிங்காரவேலரின் முன் முயற்சி காரணமாக அது இந்தியாவில் முதன் முதலாக 1923ஆம் ஆண்டிலிருந்தே துவங்கிவிட்டது என்பது ஒரு எழுச்சிகர நிகழ்வாகும். அத்துடன் தொழிலாளி வர்க்கத்திற்கு அதனுடைய சொந்த அரசியல் கட்சி அவசியம் தேவை என்று மார்க்சும், ஏங்கெல்சும் வலியுறுத்திய அடிப்படையில் இந்தியாவில் முதல்முறையாக சிங்காரவேலர் இந்த கூட்டத்தில்தான் தொழிலாளர், விவசாயிகள் கட்சி என்ற கட்சியை உருவாக்கி அதன் தமிழ் பிரகடனத்தையும் அவர் முன்மொழிந்தார். இந்தக் கட்டுரையானது இந்தியாவில் மே தினம் உருவாக்கப்பட்டது, தொழிலாளி வர்க்கத்திற்கென தனி அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது ஆகியவற்றை விளக்குகிறது.

சென்னையில் தொழிலாளி வர்க்கத்தின் உரிமை நாளான மே தினத்தை கொண்டாடுவது அவசியம் என்ற முடிவுக்கு வந்த சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டின் மே முதல் நாள் சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப்படுமென அறிவிப்புச் செய்து அதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டார். அதே கூட்டத்திலேயே தான் உருவாக்கியுள்ள இந்துஸ்தான் தொழிலாளர் – விவசாயிகள் கட்சியைத் துவக்கி வைப்பதென்றும் அவர் முடிவு செய்தார். மே முதல் நாள் மதியத்தில் சென்னையில் இருபெரும் ஊர்வலங்கள் நடைபெற்றன. வட சென்னைத் தொழி லாளர்களின் பெரும் ஊர்வலம் பல பகுதிகளைச் சுற்றியலைந்து உயர்நீதிமன்றக் கடற்கரையில் (இன்றைய பீச் ரயில் நிலையம்) முடிவுற்றது. தென் சென்னைத் தொழிலாளர்களின் பெரும் ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையில் முடிவுற்றது. தென் சென்னைக் கூட்டத்தில் சிங்காரவேலர், பிரபல காங்கிரஸ் தலைவர் சுப்ரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா, சங்கர்லால் மற்றும் புதிய கட்சியின் செயலாளர் எம்.பி.எஸ். வேலாயுதம் ஆகியோர் மே தினத்தின் சிறப்புக்களையும் புதிய கட்சியின் கொள்கையையும் விளக்கிப் பேசினர்.

வடசென்னை தொழிலாளர் கூட்டத்திலும் சிங்காரவேலரும், எம்.பி.எஸ். வேலாயுதமும் பேசினர். அவர்களுடன் அச்சகத் தொழிலாளி பி.நடேச முதலியார் என்பவரும் உரையாற்றினார். இவ்விரு கூட்டங்களிலும் தொழிலாளர் – விவசாயிகள் கட்சியின் கொள்கை அறிக்கையை சிங்காரவேலர் தமிழில் வெளியிட்டுப் பேசினார். சிங்காரவேலர் மேதினத்தின் முக்கியத்துவத்தை விவரித்துக் கூறினார். மே தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளிகளுக்கு ஒரு புனிதமான தினமாகும். இந்தியாவிலுள்ள தொழிலாளிகளும் தங்களுடைய நிலைமைக்கேற்றவாறு அதைக் கொண்டாடுவதோடு உலகின் இதர பகுதிகளில் உள்ள தங்களுடைய தோழர்களோடு தங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். தொழிலாளர் – விவசாயிகள் கட்சியின் திட்டத்தையும், லட்சியத்தையும் விவரித்துப் பேசிய சிங்காரவேலர். அந்தக் கட்சியானது, ஒரு பொதுவான லட்சியத்திற்காகவே, தொழிலாளிகள் ஒருமைப்பாடு என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய இயற்கையான வளர்ச்சிப் போக்கின் விளைவாக ஒரு மகத்தான போராட்டத்தை நடத்தியபின் தொழிலாளிகள் இறுதியில் அதிகாரத்தைப் பிடிப்பார்கள் என்றும் சிங்காரவேலர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழிலாளர் சுயராஜ்யமென்பதை முதலாளிகள் வெறுத்த போதிலும் தொழிலாளர்கள் அதை தமது இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த சுயராஜ்யத்தை தொழிலாளர்கள் அடைந்தால் அன்றி அவர்களுடைய நிலைமைகள் திருந்தாது என்றும் சிங்காரவேலர் கூறினார்.  அவருக்குப் பின் கூட்டத்தில் பேசிய பி.நடேச முதலியார் ‘தொழிலாளிகளைப் பாதுகாக்க ஒரு கட்சி அவசியம்’ என்று கூறினார். திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.கிருஷ்ணசாமி சர்மா தலைமை தாங்கினார். விவசாயிகளும், தொழிலாளிகளும் தங்களுக்கென்று ஒரு அரசியல் கட்சியை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று அறைகூவல் விடுக்கும் தமிழ்ப் பிரகடனத்தின் பிரதானப் பகுதியை எம்.பி.எஸ். வேலாயுதம் வாசித்தார்.

Singaravelarகூட்டத்தில் சுப்ரமணிய சிவாவும் சங்கர்லாலும் பேசினர். சென்னையில் நடைபெற்ற முதல் மேதினக் கூட்டங்கள் ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றின. மே தினத்தை அரசாங்கம் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று கோரும் தீர்மானமே அது.

– என்.ராமகிருஷ்ணன்

Leave a Reply