2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சூழ்நிலைகளில் அல்ல’’ என்று மாமேதை மார்க்ஸ் ஒருதடவை சொல்லி இருந்தார். அந்தச் சூழ்நிலைகள் அவர்களுக்கு ஆதரவானதாக இல்லாமல் இருக்கலாம், உண்மையில் நாம் சுதந்திரம் பெற்ற சமயத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு ஆதரவான நிலையில் சூழ்நிலைமைகள் இல்லாமல் தான் இருந்தது.
எனவேதான் நாம் இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியபோது, ஆர்.எஸ்.எஸ் கூடாரம் இந்தியாவை ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன் மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றிட சாதகமான சூழ்நிலை இருப்பதாக அனைவரையும் நம்ப வைப்பதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டன. நம் நாட்டில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றுக் கிடையிலும் ஒற்றுமையுடன் வளர்ந்து வந்த நம் நாகரிக வரலாற்றைச் சிதைத்தும், திரித் தும் கூறுவதன் மூலம் மட்டுமே அவ்வாறு சூழ்நிலை இருந்தது என்று மக்களை நம்ப வைக்க முடியும்.
‘இந்தியாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள், இந்துக்கள் மட்டுமே, எவ்வித இடையூறு மின்றி மிகவும் பெருமைகொள்ளும் விதத் தில் வாழ்ந்தார்கள்’ என்று இந்தியாவின் வர லாற்றைச் சித்தரிப்பதன் மூலம் மட்டுமே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். தற் போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்பும் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கான அவர்களு டைய தத்துவார்த்த அடித்தளங்களின் மையக்கூறு இதுவேயாகும். இந்தியாவின் வரலாற்றை அவர்கள் விரும்பும் வண்ணம் திரித்து மாற்ற முயலும் போது ஆர்.எஸ்.எஸ். பல்வேறு பிரச்சனை களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றிற்கான சாட்சியங்கள் பலவற்றை இதற்காக அது மாற்றிட வேண்டிய கட்டாயத் திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இவற்றில் மிக வும் முக்கியமான பகுதி என்பது இந்திய மக்க ளின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத் தில் ஆர்.எஸ்.எஸ். முழுமையாகவே பங்கேற் காது ஒதுங்கி இருந்ததாகும்.
இவ்வாறு ஒதுங்கி இருந்ததற்கான காரணங்களை மக்கள் மத்தியில் விளக்க முடியா நிலையில் அது இருக்கிறது. ஒருகாலத்தில் அவர்களு டைய தத்துவ ஆசானாக விளங்கிய நானாஜி தேஷ்முக் தன்னுடைய புத்தகமொன்றில் ஆர் . எஸ்.எஸ். இந்திய விடுதலைப் போராட்டத் தில் பங்கேற்காமல் விலகி இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இந்து மத உணர்ச்சிகளை மக்கள் மத்தியில் விசிறிவிட இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் காரண மாக, முஸ்லீம் லீக் கட்சியும் முஸ்லீம்கள் மத்தியில் மத உணர்வைக் கிளப்பிவிடுவதற்கும் அதன் மூலம் பிரிட்டிஷார் தங்களுடைய ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் பங்களிப் பினைச் செய்தது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் சம்பந்தப் பட்ட நபர் ஒருவர் விடுதலைப் போராட்டத் தில் கலந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டுமானால் ஒரேயொரு வரைத்தான் சொல்ல முடியும். அது வி.டி. சாவர்கர் மட்டுமேயாகும். இந்துத்துவா கொள்கைப் பிடிப்புள்ள வரலாற்றாசிரியர் ஆர்.சி. மஜும்தார் அந்தமான் செல்லுலர் சிறைகளில் இருந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து ஆவணப்படுத்தியுள்ளார். அவ்வாறு அவர் எழுதியுள்ளதில் வி.டி.சாவர்கர்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷாரிடம் எவ்வாறெல்லாம் கூழைக் கும்பிடு போட்டுள்ளார் என்பதை விவரித்துள்ளார். இந்த சாவர்கர்தான் இந்து மகா சபைக் கூட்டம் ஒன்றில் தலைமையுரை ஆற்றுகையில் இந்தியாவில் இரு தேசங்கள் இருக்கின்றன, அவை இந்து மற்றும் இஸ்லாமிய தேசங்கள் என்று முதன் முறையாக ஒரு கருத்தை முன்வைத்தார். முகமது அலி ஜின்னா தன்னுடைய இரு தேசக்கொள்கையை முன்வைத்து நடை முறைப்படுத்த முயல்வதற்கு ஈராண்டுகளுக்கும் முன்பே வி.டி.சாவர்கர் இவ்வாறு கூறினார். இவ்வாறான இவர்களுடைய இரு தேசக் கொள்கையை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாட்டைப் பிரித்திடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அதேபோன்று ‘இந்துத்துவா’ என்ற சொல்லையும் உருவாக்கியது வி.டி.சாவர்கர்தான். அவ்வாறு இந்தச் சொல்லை அவர் உருவாக்கும்போது இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்றும் இரண்டுக்கும் அநேகமாக எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் கூறினார். மேலும் இந்து தேசத்தை உருவாக்கிட அவர் ஒரு கோஷத்தை முன்வைத்தார். அதாவது, ‘‘ராணுவத்தை இந்துமயமாக்குங்கள், இந்து தேசத்தை ராணுவமயப்படுத்துங்கள்’’ என்றார். இந்தக் கோஷம்தான் இந்துத்வா பயங்கரவாதத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக்கும் உந்துசக்தியாக இருந்திருக்கிறது. இந்தக் குறிக்கோளை இந்துத்வாவாதிகள் எய்த வேண்டுமானால், மதவெறியைக் கூர்மைப்படுத்துவதுடன், நாட்டின் வரலாற்றையும் மிகப்பெரிய அளவிற்கு மாற்றி எழுத வேண்டியது அவசியமாகும்.
‘‘நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது, பாடப்புத்தகங்களை மாற்றி எழுத இருக்கிறோம்’’ என்று பாஜகவின் முன்னாள் தலைவர் ஒருவர் பேசியதை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின் றன. (இந்துஸ்தான் டைம்ஸ், 2013 ஜூன் 24). ‘‘இவ்வாறு செய்வதற்கு முன்பும் முயற்சித் தோம், மீண்டும் முயற்சிப் போம்’’ என்று அவர் கூறியிருக்கிறார். அன்றைய தினமே அத்வானியும், ‘‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத் திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது விதியை ரத்து செய் வதற்காக நாடு இன்னமும் காத்துக் கொண்டி ருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் கூடாரம், சர்தார் வல்லபாய் பட்டேலைத் தவறாகப் பயன்படுத்த மேற் கொண்டுள்ள சமீபத்திய முயற்சிகள் ‘‘இந்து தேசம்’’ என்னும் தங்கள் குறிக்கோளை உயர்த்திப் பிடிப்பதற்காக இந்தியாவின் வரலாற்றைத் திருத்தி எழுதுவதற்கான ஒட்டு மொத்த முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்து சர்தார் பட்டேல் வெளியிட்ட அறிக்கை குறித்து இப்பகுதியில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். சர்தார் பட்டேல் ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறி சித்தாந்தத் திற்கு முற்றிலும் எதிரானவர் என்பதையே இது காட்டுகிறது.
ஆயினும் பாஜக சார்பில் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர், வரலாற்றை எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி சிதைத்தும் திரித்தும் ‘‘தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை’’ உருவாக்குவதற்காக, அவசரகதியில் புதிதாக ஒரு ‘வரலாற்றை உருவாக்க’ முயல்வது போலவே தோன்றுகிறது. சர்தார் பட்டேலின் புரவலர் என்று தன்னைச் சித்தரிக்க முயற்சிப்பதுடன், பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் மோடி, தட்சசீலம் (தற் போது அது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கிறது) பீகாரில் இருந்ததாக உரிமை கொண்டாடி யிருக்கிறார். அவர் மேலும், பீகாரில் கங்கை நதிக்கரை யோரம்தான் அலெக்சாண்டர் இறந்தார் என்றும் கூறி யிருக்கிறார். என்னே ஆச்சர்யம்! பின்னர். ஒரு நேர்காணலின்போது, ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேலுடன் தங்களுக்குள் தீர்க் கப்பட முடியாத அளவிற்கு அரசியல் கருத்து வேறுபாடுகளின் காரணமாக, சர்தார் பட்டே லின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளா மல் ஒதுங்கி இருந்தார் என்று அளந்திருக் கிறார். பின்னர் இந்த உண்மையின்மையை பல்வேறு தரப்புகளில் இருந்தும் வந்த தாக்கு தலைத் தொடர்ந்து அவர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
அதேபோன்று, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உண்மையில் இறந்ததற்கு இருபதாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று கூறியது குறித்தும், அவர் குஜராத்தின் பெருமைமிகு புதல்வர் என்றும் கூறியிருந்தார். இவ்வாறு வரலாற்றைத் திரித்துக் கூறியமைக்காக மீண்டும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல, இதே போன்று எல்.கே.அத்வானியும் வரலாற்றைத் திரிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். எம்.கே.கே.நாயர் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றை மேற்கோள்காட்டி, ஹைதராபாத் மாகாணத்தில் போலீஸ் நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பட்டேலை நேரு ஒரு ‘வகுப்புவாதி’ என்று அழைத்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை வரலாறு என்ன? அத்தகையதோர் அமைச்சரவைக் கூட்டம் 1948 ஏப்ரலில் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் திருவாளர் எம்கேகே நாயர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்ததே 1949இல்தான். மேலும், அத்வானி, அப்போது இந்திய ராணுவத் தளபதியாக இருந்த சர் ராய் புச்சர் என்பவர், 1948 செப்டம்பரில் ஹைதராபாத் தில் நடைபெற்ற போலீஸ் நடவடிக்கை தொடர்பாக மற்றொரு வெள்ளைக்காரனான பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு சில தகவல்களைக் கசிய வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு அதற்காக ராஜினாமா செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டார் என்றும் கூறியிருக்கிறார்.
இதுவும் உண்மையல்ல. மேற்படி புச்சர் 1949 ஜனவரி 15 வரை, அதாவது ஜெனரல் கரியப்பா பொறுப்பேற்கும் வரை, ராணுவத் தளபதியாக தொடர்ந்து பணியாற்றி இருக்கிறார். இதுபோல் எல்.கே. அத்வானியும் தன் பங்கிற்கு வரலாற்றைத் திரித்தும் சிதைத்தும் கூறிக் கொண்டிருக்கிறார். தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தங்கள் சித்தாந்தமான ஓர் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்காக, இவர்கள் இவ்வாறு என்னதான் வரலாற்றைச் சிதைத்திடவும் திரித்திடவும் முயற்சிகள் மேற்கொண்டாலும், நம் நாட்டின் ஒற்று மையையும் ஒருமைப்பாட்டையும் குலைப்பதில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் வெற்றி பெற முடியாது. சிறந்ததோர் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதற்காக நடைபெற்று வரும் மக்கள் போராட்டங் களையும் இவர்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது. நம் மக்களுக்காக சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான முக்கியமான பிரச்சனையிலும், ஆர்எஸ்எஸ் / பாஜக கூடாரம் மவுனம் சாதிக்கிறது. ஏனெனில், நாட்டு மக்களில் பெரும்பான்மையோருக்குத் துன்பங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தி வரும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங் களை இக்கூட்டமும் தாங்கிப் பிடிப்பதேயாகும்.
(தமிழில்: ச.வீரமணி)