நமது அரசியல் நிர்ணய சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் சாதிய அடிப்படையில் நிலவும் இடஒதுக்கீட்டை அகற்றுவதற்கு இது சரியான தருணம் அல்லவா? அரசுப்பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டின் நன்மைகள் அனைத்து ஏழை மக்களுக்கும் தரப்படவேண்டும் என்பது தேவை அல்லவா ? -ஆர்.கே.சிங்/புலந்தர்ஷர்/உ.பி.
சமூக, பொருளாதார மற்றும் கல்வி வசதிகள் அடிப்படையில் பின் தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு நமது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளது. தலித் மக்களும் பழங்குடியின மக்களும் சமூக பாரபட்சம் காரணமாக பாதிக்கப்பட்ட நீண்ட வரலாறு உள்ளது. இதன் காரணமாகவே, இடஒதுக்கீடு என்பது பரவ லாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடுபற்றி அரசியல் சட்டத்தில் கூறப்பட்டது. ஆனால் அப்பொழுது அது சட்டமாக இயற்றப்படவில்லை.டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து தனதுசட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ராஜினாமாவிற்கான பல காரணங்களை குறிப்பிடுகிறார். அக்காரணங்களில் ஒன்று (உயர்வகுப்பினரின் எதிர்ப்பு காரணமாக) பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்காக சட்டத்தை தன்னால் இயற்றமுடியவில்லை என்பதாகும். இது அம்பேத்கர் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
அரசியல் நிர்ணய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அதன் 16(4)ம் பிரிவு தலித் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் மக்கள் தொகையில் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. மத்தியில் இது தலித் மக்களுக்கு 15 சதவீதம் எனவும் பழங்குடி மக்களுக்கு 7.5 சதவீதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. (மாநிலங்களில் இது தலித் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்றவாறு வேறுபடும்). இந்த இடஒதுக்கீடு மத்திய – மாநில அரசுப்பணிகள், பொதுத்துறை, அரசு உதவி பெறும் தன்னார்வ அமைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும். முப்படைகள் மற்றும்நீதித்துறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 15(4) அடிப்படையில் தலித் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொறி யியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் அனைத்திற்கும் இது பொருந்தும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இந்த இடஒதுக்கீட்டை வலுப்படுத்தும் வகையில் பல நிதித் திட்டங்களும் செயல்படுத்தப் படுகின்றன. கல்வி உதவித்தொகை, விசேட விடுதிகள், புத்தகங்கள் உதவி, கல்விக் கட்டணத்தில் சலுகை, விசேட பயிற்சி போன்றவை இதில் அடங்கும்.ஒவ்வொரு பத்தாண்டிற்குப் பிறகும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங் களால் இந்த இடஒதுக்கீடு நீட்டிக்கப்படுகிறது. ஏனெனில் அரசாங்க ஆய்வுகள் மற்றும் பிற ஆய்வுகளின்படி பெரும்பாலான தலித் மற்றும் பழங்குடியின மக்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வசதிகள் அடிப்படையில் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர் என்பது தொடர்கிறது. அரசியல் நிர்ணய சட்டம் இயற்றப்பட்ட பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு தேவை என கோரிக்கை மீண்டும் மீண்டும் எழுந்தது. இதற்காக பல ஆணையங்கள் உருவாக்கப்பட்டன. பல பரிந்துரைகளும் தரப் பட்டன. இறுதியாக மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் ஏற்றுக் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு என நிர்ணயித்தது. உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடுக்கு 50 சதவீதம் என வரையறை நிர்ணயித்ததால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு 27 சதவீதம் என முடிவெடுக்கப்பட்டது. நமது கட்சி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்பதை ஆதரித்தது. அதே சமயத்தில் (பிற்படுத்தப்பட்ட மக்களில் ஏழைகள் இந்த நன்மை பெறுவதை உத்தரவாதப்படுத்துவதற்கு) வசதி படைத்தோர் (கிரீமி லேயர்) இந்த இடஒதுக்கீட்டின் வரம்பிற்கு வெளியே இருக்கும் வகையில் பொருளாதார உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
பல மாநில அர சாங்கங்கள் இத்தகைய பொருளாதார உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளன. உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடுக்கு 50 சதவீதம் என வரையறை நிர்ணயித்துள்ளது. இதன் பொருள் என்ன வென்றால் அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு பொருந்தாத முற்பட்ட பிரிவினர் மீதமுள்ள 50 சதவீத இடங்களை பெற முடியும் என்பதாகும். முற்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை விகிதாச்சாரத்தை விட இந்த 50 சதவீதம் என்பது மிக அதிகமாகும். குடிமக்களின் ஏனைய சில பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிடுவது அவசியம். காஷ்மீர் தீவிரவாதிகளால் பலியானவர்கள், பஞ்சாபில் ஒரே பெண் குழந்தை உள்ள குடும்பங்கள், புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பாதுகாப்புப் பணியில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
சில கல்வி நிலையங்களில் அயல்நாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கும் கூட இட ஒதுக்கீடு உள்ளது. தலித் கிறித்துவர்கள் மற்றும் இசுலாமியர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனை நமது கட்சி ஆதரிக்கிறது. எனினும் உச்சநீதிமன்றத்தின் 50 சதவீத வரையறை காரணமாக இது அமலாக்கிட சாத்தியமற்றதாக உள்ளது. ஏழை குடும்பத்தினரின் குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு நன்மைகள் தரப்பட வேண்டும் என்பது உண்மை தான்! இதனை நமது கட்சி ஆதரிக்கிறது. இதற்கும் உச்சநீதிமன்றத்தின் 50 சதவீதம் எனும் வரையறை குறுக்கே நிற்கிறது. இவையெல்லாம் இருந்தாலும் வேலையின்மைக்கும் தரமான உயர் கல்விக்கும் இடஒதுக்கீடு மூலம் மட்டுமே நிரந்தரத் தீர்வு அளிக்க முடியாது என நமது கட்சி வலுவாகக் கருதுகிறது. பல நூற்றாண்டு காலமாக சமூக பாரபட்சத்தாலும் உரிமை பறிப்புகளாலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு என்பது சில நிவாரணங்களையும் உதவிகளையும் அளிக்க முடியும். உண்மையான நிரந்தரத் தீர்வு என்பது அரசின் கொள்கைகளில் அடிப்படை மாற்றம் ஏற்படுவதில் தான் அடங்கியுள்ளது.