குமரி மாவட்ட மக்களால் அன்புடன் ‘ஜே.ஹெச்’ என அழைக்கப்படும் மக்கள் தலைவர் தோழர் ஜே.ஹேமசந்திரன் (J. Hemachandran; நவம்பர் 10, 1932 – பிப்ரவரி 8, 2008.) தோழர் ஜே. ஹெச் ஒரு சாதித் தலைவர் அல்ல, ஒரு மதத்தலைவர் அல்ல, உழைப்பாளி மக்களுக்காகவும், கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி மற்றும் அமைதிக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாபெரும் தலைவர்.
தமிழகத்திலே கன்னியாகுமரி மாவட்டத்தை கல்வியிலும், வாழ்வாதாரத்திலும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தலைசிறந்த மாவட்டமாக மாற்றியதில் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு. குறிப்பாக ஜாதிய ஏற்றதாழ்வுக்கு எதிராகவும் மத வேற்றுமைக்கு எதிராகவும் போராடிய மக்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்த மாவட்டம்.
தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி. மணி, பி.திவாகரன் உட்பட ஏராளமான வர்க்கப் போராளிகள் கன்னியாகுமரி மாவட்டத்தை சிவப்பாக்கினர். அவர்களுடன் இணைந்து தனதுமகத்தான பங்கை தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நிறைவேற்றினார். வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக் கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அவற்றை தலைமை ஏற்று நடத் திய பாங்கு மிகவும் மகத்தானது.
எந்த உரிமையும் இல்லாமல் ஒதுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், முந்திரி ஆலைத் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் இன்று தலைநிமிர்ந்து நின்று தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் என்றால் அது தோழர் ஜே.ஹெச் போன்ற கம்யூனிஸ்டுகள் கற்பித்துக் கொடுத்த பாடம். தன்னை எப்போதும் முதன் மைப்படுத்த விரும்பாதவர் தோழர்.ஜே.ஹச். சிறியவர், பெரியவர் என பாகுபாடு பார்த்து பழகும் குணம் கொண்டவர் அல்ல.
எந்த நேரத்திலும் தன்னை ஒரு தலைவன் என்று பகட்டு காட்டியதில்லை. வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் ஒரு எளிய மனிதனாகவே வாழ்ந்து காட்டினார். 1982ம் ஆண்டு விரும்பத்தகாத ஒரு நிகழ்வு மதவெறியர்களால் அர சியல் லாபத்திற்காக உருவாக்கப்பட்டது. மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மதக் கலவரம் தீமூட்டப்பட்டது.
மாவட்டம் முழுவதும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த குமரி மாவட்ட மக்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். தீவைத்தனர், திருடினர், குழந்தைகள் கல்வி நிலையங்களுக்கு போக முடியவில்லை, பல ஊர்களில் பல வாரங்கள் பேருந்துகள் இயக்க முடியவில்லை. பல மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன, குரங்கின் கையில் கிடைத்த பூ மாலை போன்று மத வெறியர்களின் கையில் சிக்கி மாவட்டமே சின்னாபின்னமானது. அந்த நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்களில் பலர் கூட மதரீதியாக பிளவுபட்டு மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் தலைவர்களும் மதவெறி தீயை அணையாமல் பாதுகாத்தனர். அந்த நேரத்தில் தோழர் ஜே. ஹெச் சட்டமன்ற உறுப்பினர்.
அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை மண்டைக்காட்டு கலவரப்பகுதிக்கு அழைத்து வந்தார். நிலைமையை புரியவைத்தார். இன்று ஏதோ சிலர் வேணு கோபால் கமிஷன் அறிக்கையென புலம்புகின்றனரே அந்த வேணு கோபால் கமிஷனை அமைக்கவும், அதில் தான் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் வாதாடி ஒரு நல்ல அறிக்கையை பெற்றுத் தந்தவர் தோழர் ஜே.ஹெச் என்றால் அது மிகையாகாது. மாவட்டம் முழுவதும் மதவெறி பரவாமல் தடுக்க குன்றக்குடி அடிகளாரை வரவழைத்து அமைதியை உருவாக்கப் பாடுபட்டவர். அவருடைய முயற்சியால் அமைதி திரும்புவதை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் ஜே.ஹெச்-சைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
கம்யூனிஸ்ட்டுகள் இந்து மத விரோதிகள் எனவும் பிரச்சாரம் செய்தனர். ஹேமச்சந்திரன் தேசத் துரோகி என்றனர். அத்தனை தாக்குதல்களையும் தாங்கி கன்னியாகுமரி மாவட்டத் தில் அமைதியை ஏற்படுத்துவதில் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் என்ற வகையிலும் முன் னணி பாத்திரம் வகித்தார். கம்யூனிஸ்டுகள் மத நம்பிக்கையுள்ள மக்களின் விரோதிகள் அல்ல, மத வெறியர்களின் விரோதிகள் என்பதை உறுதிபட நிலைநிறுத்தி னார். எனவேதான் உண்மையை புரிந்த மக்கள் அவர் மறைவால் வருந்தினர், கூடினர், வீரவணக்கம் செலுத்தினர். ஓவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8ம் தேதி அவர் நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர்.
நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைத்து புகழாரம் சூட்டுகின்றனர். கம்யூனிஸ்ட் இயக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் புறக்க ணிக்க முடியாத சக்தியாக வளரு கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குரலை மக்கள் ஓங்கி ஒலிக்க வைத் துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் அணிதிரள்கின்றனர்.
கடந்த 2008 பிப்ரவரி 8ம் தேதி திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் இறந்த செய்தி வெளியானதும் பார்வதி புரத்திலுள்ள கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திலும், குல சேகரம் தோட்ட தொழிலாளர் சங்க அலுவலகத்திலும் மக்கள் கூட்டம் கண்ணீருடனும், மன வேதனையுடனும்; அலைமோதியது இன்றும் மறக்க இயலாத நினைவாக உள்ளது.
நீரோடி முதல் ஆரோக்கிய புரம் வரை கடற்கரை பகுதியிலும், களியக்காவிளை முதல் ஆரல்வாய்மொழி வரையிலும், மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் கிரா மங்களிலும் செங்கொடி அசைந்தாடி போர்ப்பரணி பாடி கொண்டிருக்கின்றதென்றால் அவை தோழர் ஜே.ஹெச் போன்றவர்கள் செய்த தியாகமும், அர்ப்பணிப்புமே ஆகும்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தை முடமாக்க கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும், மதவெறியர்களும் பல்வேறு அவதூறு முயற்சிகள், தாக்குதல் செய்தாலும் அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி குமரி மாவட்ட கிராமங்கள் தோறும் செங்கொடி அசைந்தாடவும், உழைக்கும் மக்களை மேலும் மேலும் அணிதிரட்டவும், குமரி மண்ணின் மகத்துவமான மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் ஆயிரம் ஆயிரம் கம்யூனிஸ்டுகள் தோழர்ஜே.ஹெச் நினைவு நாளில் சபதமேற்போம்.
என்.முருகேசன், செயலாளர், சிபிஎம் குமரி மாவட்டக்குழு