அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம் நடைபெற்று வருகின்ற காலம் இது. இந்நிலையில், இந்தக் கருத்தைப் பொய்யென நிரூபித்து வரும் நிறுவனம், புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனை.மத்திய அரசுத்துறையின் கீழ் இயங்கி கொண்டு, ஏழை,எளிய,நடுத்தர மக்களின் உயிர் காக்கும் தரமான, மருத்துவமனையாக, அது விளங்குகிறது. 1964-ம் ஆண்டிலிருந்து அரை நூற்றாண்டாக ஜிப்மர் மருத்துவமனை மக்களுக்கு செய்து வந்துள்ள சேவை மகத்தானது. அத்துடன், மருத்துவப்படிப்பு வணிகரீதியில் விலைக்கு விற்கப்பட்டு,கோடீஸ்வரகளின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவர்களாக முடியும் என்ற நிலையில்,ஏராளமான ஏழை மாணவர்களை சிறந்த மருத்துவர்கள் ஆக்கிய பெருமை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியைச் சாரும்.
ஆனால்,ஆளும் கூடாரத்தில் இருந்துகொண்டு,ஆக்கப்பூர்வமானதை எல்லாம் அழித்து ஒழிப்பதற்காக அயராது செயல்பட்டு வரும் நவீன தாராளமயவாதிகள் ஜிப்மரை விட்டுவைப்பார்களா?கடந்த பல ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை தனியார் கொள்ளைக்கு விட்டுவிட அடுத்தடுத்து முயற்சிகளை செய்துகொண்டே வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்மரை தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவது என்று சில முயற்சிகள் நடந்தது.ஜிப்மர் ஊழியர்கள் உள்ளிட்ட மக்கள் போராட்டம் நடைபெற்றது. ஜிப்மர் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக இலவச மருத்துவம்,இலவச மருத்துவக் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, ஊழியர் நலன் ஆகியவற்றில் தற்போது இருந்துவருகிற உரிமைகள் தொடரும் என்று பேராட்டக்குழுவிற்கு ஆட்சியாளர்கள் உறுதி அளித்தனர். இந்தப்பின்னணியில் ‘‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜவஹர்லால் நேரு மருத்துவ பட்டமேற்படிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனச்சட்டம்” இயற்றப்பட்டு 14.08.2008 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஆக, ஜிப்மர் ஊழியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம் காரணமாக,தனியார்மயம் என்ற தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது.
ஆனால்,ஆட்சியாளர்களுக்கு ஜிப்மரில் இலவசமருத்துவ சேவை தொடர்வது பிடிக்கவில்லை. ஏனெனில், இலவச மருத்துவசேவை என்பது நவீன தாராளமய கொள்கைக்குநேர் எதிரான நடைமுறை. அதனால், ஜிப்மர் நிர்வாகம் 14.7.2012 தேதியிட்ட சுற்றறிக்கையில் 16.07.2012 முதல் அனைத்துவித நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை மற்றும் உணவுஎன அனைத்திற்கும் கட்டணத்தை அறிவித்தது.மாத வருமானம் ரூ.2,499/-க்கு மேல் உள்ளஅனைவருக்கும் மருத்துவ சேவைக்கான கட்டணம்வசூலிக்க உத்திரவிடப்பட்டது.
மத வருமானம் ரூ.2500-லிருந்து,அதற்கு மேல் பெறுகின்ற அனைவருக்கும் கட்டணம் என்பது ஒரு கண்துடைப்பு.உண்மையில் இலவச மருத்துவம் என்ற மக்களின் சுகாதார உரிமை பறிப்புத்தான் இது.இதை அறிவித்தவர்கள் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவின் சீடர்கள் போல் தெரிகிறது. அவர்தான் ரூ.28-க்கு மேல் நாள் வருமானம் பெறுபவர்கள் வசதி படைத்தவர்கள் என்று சொல்லி,அவர்களுக்குக் கிடைக்கும் நலத்திட்டப் பயன்கள் கிடைக்காமல் செய்திட சதித் திட்டம் போட்டார்.இதே போன்றதுதான் ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ள வருமான வரம்பு.
இந்த மருத்துவ சேவை கட்டணத்திற்கு அவர்கள் இட்ட பெயர் ‘பயனாளி கட்டணம்’ (User Charge). இந்த சொற்றொடருக்கு பூர்வீகம் எது தெரியுமா? உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும்தான்.இருபது ஆண்டுகளுக்கு முன்பு பயனாளி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை கட்டாய நிபந்தனையாக விதித்து மூன்றாவது உலக நாடுகளுக்கு கடன் கொடுத்தார்கள். அதாவது சுகாதாரம் முழுமையாக தனியார் கார்ப்பரேட்களுக்கு விட வேண்டும் என்பதுதான் இதற்கு பின்னணியாக இருக்கும் அடிப்படை நோக்கம். இந்த நிபந்தனையை ஏற்று கடன் வலையில் அன்று சிக்கிய கொலம்பியா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் தங்கள் நாட்டு பொது சுகாதார முறையை சீரழித்து பெரும்பான்மை மக்களை மரணப்படுக்கையில் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கினர். இந்த கொலைகாரத் திட்டம்தான் பயனாளிக் கட்டணம் வசூலிக்கும் திட்டம்.
வழக்கம்போல் இதற்கு சில ‘நியாயங்கள்’ சொல்லப்படுகின்றன.ஒவ்வொரு சிகிச்சைக்கும் செலவாகிற தொகையில் வெறும் 10 சதம்தான் பயனாளி கட்டணமாக வசூலிக்கப்போகிறோம் என்கின்றனர். அதாவது 90 சதம் அரசாங்கம் செலவழிக்கிறது, நீங்கள் ஏன் மீதியை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதுதான் முன்வைக்கப்படும் வாதம். 90 சதம் ஏற்கும் அரசு ஏன் இந்த பத்து சதத்தை மக்களிடம் வசூலிக்க முயற்சிக்கிறது?படிப்படியாக மக்களே தங்கள் செலவை ஏற்று கொள்வது என்பதை ஆரம்பித்து விட்டால் பிறகு அதை இலாபம் கொழிக்கும் நிறுவனமாக மாற்றி தனியாரின் வேட்டைக்கு விட்டு விடலாம்.அரசு ஒதுங்கி விடலாம்.’சுகாதாரத்திற்கு அரசு ஒதுக்கும் நிதியை குறைக்க வேண்டும்;அரசு சுகாதாரத்தை இலவசமாக வழங்க வழி வகுக்கும் பொதுச் சுகாதார முறையை முற்றாக ஒழிக்க வேண்டும்’ என்ற நவீன தாராளமய சித்தாந்தத்தின் வெள்ளோட்டம்தான், ஜிப்மர் அறிவித்துள்ள கட்டண அறிவிப்பு.
உண்மையில் பொது சுகாதார முறை என்பது மக்களின் போராட்டத்தால் உருவானது.விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான பங்காற்றியது இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டம்.அதனால்,விடுதலைக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் மக்களின் நலனை புறக்கணிக்க முடியாத கட்டாயத்தில் இருந்தனர்.அந்த சூழலில் உருவானதே மக்களுக்கு அரசு நிதி ஒதுக்கி இலவச மருத்துவ சேவை அளிக்கும் பொதுச் சுகாதார முறை.இது மக்களுக்கு அரசாங்கம் போடும் பிச்சை அல்ல.மக்களின் உரிமை.
தற்போது உருவாக்கப்பட்டு வரும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சுகாதாரம் குறித்த தலைப்பில் சொல்லப்பட்டுள்ள ஆலோசனைகள் அனைத்தும் தனியார் மெகா கார்ப்பரேஷன்களுக்கு மருத்துவத்துறையை மொத்தக் குத்தகை விடும் திட்டங்கள் ஏராளமாக சொல்லப்பட்டுள்ளன.இந்தப் பின்னணியில்தான் ஜிப்மரின் அறிவிப்பு வந்துள்ளது.
ஜிப்மரின் கட்டண உயர்வு அறிவிப்பு வந்தவுடன் புதுச்சேரியில் தொடர் போராட்டங்கள் நடந்ததால் நிர்வாகம் சிறிது பின்வாங்கி பல பிரிவுகளுக்கு கட்டண விதிப்பை வாபஸ் பெற்றது.ஆனாலும்,புற்றுநோய் உள்ளிட்ட இரண்டு முக்கிய மருத்துவப் பிரிவுகளின் கீழ் 34 வகை மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு கட்டண விதிப்பு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சி டி ஸ்கேன் போன்றவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணத்தை விட அதிகம்.இந்த கட்டண விதிப்பு முற்றாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை.
தினந்தோறும் தொலைகாட்சியில் தரிசனம் தந்து ஊர் உலகப் பிரச்னைகள் அனைத்திலும் தலையிடுகிற புதுச்சேரியை சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி இந்த பிரச்னையில் அசையாமல் இருக்கின்றார்.ஏழை மக்களுக்கு எதிராக கட்டண உயர்வுக்கு ஆதரவாக நிற்கும் காங்கிரஸ் கட்சியின் அந்த ‘சாமி’ அப்படியிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், காங்கிரசை எதிர்த்து ஆட்சியைப் பிடித்த முதல்வர் ரங்கசாமி இந்தப் பிரச்னையில் உறுதியாக தலையிடவில்லை. கட்டண உயர்வை வாபஸ் பெற முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவர் கடந்த தேர்தலின் போது பெற்ற ஆதரவை இழப்பது நிச்சயம்.
தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை.அவர்கள் இது ஏதோ புதுச்சேரி மக்கள் பிரச்னை என்று நினைத்தால் அது தவறு. தினந்தோறும் மருத்துவ உதவி நாடி வருகின்ற சுமார் 5000 நோயாளிகளில் 4000-க்கு மேற்பட்டவர்கள் தமிழக மாவட்டங்களிலிருந்து செல்கின்றனர். குறிப்பாக,புதுச்சேரிக்கு பக்கத்தில் இருக்கும் விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களிலிருந்து வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான மக்கள் வெறும் பேருந்து செலவுக்கு மட்டும் சிறிது பணம் ஏற்பாடு செய்துகொண்டு இலவச மருத்துவ சேவையை பெற்று வீடு திரும்புகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய இயலாத பலர், இங்கு வந்து இதய அறுவை சிகிச்சை பெற்றதால் இன்றளவும் உயிர் வாழ முடிந்துள்ளது. ஜிப்மர் இல்லையென்றால் அவர்களது வாழ்வு கேள்விகுறியாகி இருக்கும். சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். பல தமிழக மாவட்டங்களில் ஏழைக் குடும்பங்கள் ஜிப்மரை நம்பியிருக்கின்றனர். அவர்களின் வாக்குகளை வாங்கி சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் சென்றுள்ளவர்கள் எல்லாம் இந்தப் பிரச்னை பற்றி அக்கறையற்று இருக்கின்றனர். எல்லாப் பிரச்னைகளுக்கும் பிரதமருக்கு கடிதம் எழுதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா,ஜிப்மரை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களைச் சார்ந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு வேட்டு வைத்த மத்திய அரசின் நடவடிக்கையை ஏன் இதுவரை கண்டுகொள்ளவில்லை?.’
இப்பிரச்னை எழுந்தவுடன் தமிழகத்திலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் புதுச்சேரி வந்து கருத்தரங்கில் கலந்து கொண்டு கண்டனக்குரல் எழுப்பினார்; மற்ற தலைவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?’ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நவீன தாராளமயத்திற்கு எல்லோரும் தலைவணங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இடதுசாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில்லை. முன்பு ஜிப்மர் தன்னாட்சிப் பிரச்னை வந்த போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி மக்களின் உரிமையை பாதுகாத்தது. இப்போது இந்தப் பிரச்னை வந்த போதும், ஒருபுறம் ஜிப்மர் ஊழியர்கள் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஜிப்மர் போராட்ட குழு சார்பாகவும் தனியாகவும் தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் 21 அன்று மாபெரும் கண்டனக் கருத்தரங்கை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. பல நூற்றுக்கணக்கான மக்கள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் கட்டண உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மூன்று மாவட்ட உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பும் வகையில் செப்டம்பர் 1-அன்று கருப்புக்கொடி உயர்த்தி கண்டன ஆர்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டது. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள ஒன்றியத் தலைநகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் வெகுமக்கள் ஆர்ப்பாட்டமாக இது நடைபெறவுள்ளது. இதில் உயர்த்தப்படுவது கருப்புக்கொடி மட்டுமல்ல:மருத்துவத்தை சந்தைச் சரக்காக்கி, மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை இருள்மயமாகச் செய்யும் ஆளும் வர்க்கங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி.
ஜிப்மரில் மருத்துவசேவை கட்டண விதிப்பு: செப்.1.2012 கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கட்டுரையாளர் என்.குணசேகரன்