புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம்.

வெ. பெருமாள்

கட்டுரையாளர் தோழர் வெ. பெருமாள்
சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர்.

துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்து ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேரம் வேலை அமலானது புதுச்சேரியில் தான்.

1936 ஜூலை 30 தியாகிகள் தினத்தின் 87 வது ஆண்டு இது. இன்றும் புதுச்சேரி தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களுக்கு கலங்கரை விளக்கமாக அது வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

1673ல் வணிகம் செய்ய வந்த பிரெஞ்சியர்கள் புதுச்சேரி பகுதிகளை அடிமைப்படுத்தினார்கள். 1700களின் துவக்கத்தில் இருந்து வரி வசூலிக்க துவங்கினர். வரி வருவாயில் பிரஞ்சிந்திய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடவில்லை. மாறாக ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினர். இதனால் 1761 தொடங்கி 1816 வரை மூன்று முறை சுமார் 37 ஆண்டுகளில் தங்களது ஆட்சியை அவர்கள் இழக்க நேரிட்டது. ஐரோப்பிய உடன்படிக்கையின் படி பிரெஞ்சிந்திய பகுதிகள் பிரஞ்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியை கைவிட்டு தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாகம் செய்ய முனைந்தது. பொதுப்பள்ளி, நூலகம் ஆகியவை துவங்கப்பட்டன. 1829ல் சவானாமில் {சுதேசி பஞ்சாலை}, 1890ல் கெப்லா மில் {ஸ்ரீ பாரதி பஞ்சாலை} 1898இல் ரோடியர் மில் {ஆங்கிலோ பிரெஞ்சு பஞ்சாலை} ஆகியவை துவங்கப்பட்டன. விவசாயம், கைத்தறி உள்ளிட்ட புராதன தொழில்களும் இருந்தன. பஞ்சாலை தொழிலாளர்கள் நேரடி சுரண்டலுக்கு உள்ளானார்கள். ஆகவே தான் தொழிலாளி வர்க்கம் சுரண்டலுக்கு எதிராக போராட வேண்டி இருந்தது.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழிகாட்டுதலில் பஞ்சாலை தொழிலாளர்களை அமைப்பாக்கி அரசியல் படுத்தும் பணியை தோழர் வ சுப்பையாவும் சக தோழர்களும் செய்து வந்தனர். அதன் விளைவாக சுதேசி பஞ்சாலை தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, கூலி உயர்வு, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றிற்கான போராட்டத்தை முன்னெடுத்தனர்.

1936 ஜூலை 30 தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பீரங்கி, துப்பாக்கி கொண்டு தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்தது. இதில் 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் தங்கள் உடல் உறுப்புகளை இழந்தனர். பலர் பெருங்காயம் உற்றனர். சுதேசி மில் மற்றும் சாலைகளில் ரத்தம் உறைந்து சாட்சிகளாக அவை காட்சியளித்தன. இப்போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் எழுந்தன.

12 பஞ்சாலை தொழிலாளர்களின் உயிர் தியாகத்தால் 1937 ஏப்ரல் 6ல் 8 மணி நேர வேலை உரிமை சட்டமானது. தெற்கு ஆசியாவில் முதன் முதலில் புதுச்சேரியில் தான் 8 மணி நேர வேலை உரிமை பெறப்பட்டது என்பது சரித்திரமானது.  பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் உத்வேகம் கொடுத்தது. மேலும் பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் விடுதலை போராட்டமாகவு ஜூலை 30 போராட்டம் கருதப்படுகிறது.

சுதந்திர புதுச்சேரி

புதுச்சேரி 1954 நவம்பர் 1ல் விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்படும், மாநில வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என இந்திய இணைப்பின்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதி அளித்தார். அதன்படி ஒன்றிய அரசு 90% மானியம் 10% கடன் என 100% நிதி உதவி தந்து வந்தது. கல்வி, மருத்துவம், பொது விநியோகத் திட்டம், சாலை உள்ளிட்ட சமூக முதலீடுகள் அதிகரித்தன. சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் புதிய தொழிற்பேட்டைகள் துவங்கப்பட்டன. இது மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. நேருவின் மறைவு இந்திய அரசியலில் ஏற்பட்ட அரசியல் நிகழ்ச்சி போக்குகள் புதுச்சேரிக்கு அளித்த உறுதிமொழிகள் படிப்படியாக கைவிடப்பட்டன .

ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான அதி தீவிர வலதுசாரி அரசு அமைந்த பின்னால் முழு நாடும் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. கார்ப்பரேட்டுகள் நலனை மையமாகக் கொண்டே பொருளாதாரக் கொள்கைகளும், சட்டங்களும் வடிவமைக்கப்படுகிறது. சமூக முதலீடுகள் வெகுவாக குறைக்கப்படுகிறது. மாநில உரிமைகள் பறிப்பும், அதிகாரங்கள் ஆக்கிரமிப்பும் ஒற்றை தலைமையை நோக்கிய நகர்வை பாஜக முன்னெடுத்து வருகிறது. ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி 2021 இல் புதுச்சேரி மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் நடைமுறையில் பாஜகவே ஆட்சியை வழிநடத்துகிறது.

ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி அமைந்தால் தாராளமாக நிதி கிடைக்கும் மாநிலம் வளர்ச்சி பெறும் என்ற அறிவிப்பு பொய்த்துப் போனது.


ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி அமைந்தால் தாராளமாக நிதி கிடைக்கும் மாநிலம் வளர்ச்சி பெறும் என்ற அறிவிப்பு பொய்த்துப் போனது. 15 மாத கால என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியில் மாநில அரசு கோரிய நிதி ஒதுக்கீடுகள் ஏதும் கிடைக்கவில்லை. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களின் செயல் வடிவம் இன்னும் காணப்படவில்லை.

ஒன்றிய அரசின் நிதி கொள்கை

2023 ஜூன் 27ல் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக மாநில நிதித்துறை துணைச் செயலாளர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஒன்றிய அரசு திருத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்துறை, தன்னாட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு மானியம் வழங்கக் கூடாது என்றும், சொந்த வருவாய் மூலம் ஈடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. துணைநிலை ஆளுநரின் பரிந்துரைப்படி சொத்து வரி. நில மதிப்பு. சேவை கட்டணம் ஆகியவற்றை உயர்த்த சம்பந்தப்பட்ட துறைகள் பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது அரசு சார்பு பொதுத்துறைகள். தன்னாட்சி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் 5000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தும் பணி நிரந்தரம் வழங்கவில்லை. இவ்வாறான சூழலில் ஒன்றிய அரசின் அறிவுறுத்தல் அடிப்படையிலான நிதி செலவின வழிகாட்டுதல் நிலைமைகளை மேலும் மோசம் அடையவே செய்திடும்.

நிதி அமைச்சரின் வருகையும் 5 கோடி ரூபாய் செலவும்

ஒன்றிய நிதியமைச்சர் 07.07.2023ல் புதுச்சேரிக்கு வருகை தந்தார். புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும், நலத்திட்டங்கள் துவக்கி வைக்கப்படும், கூடுதல் நிதி கிடைக்கும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டன, ஆனால் 5 கோடி ரூபாய் செலவு செய்து வழக்கமான வங்கி சேவையை மட்டுமே நிதி அமைச்சர் துவக்கி வைத்தார், 2024 தேர்தல் பிரச்சாரமாகவும் அமைந்தது.

மாநில முதல்வர், அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் தனித்தனியாக நிதி அமைச்சரிடம் மனு அளித்தனர், மனுவில் குறிப்பிட்டுள்ள நிதி குழுவில் புதுச்சேரிக்கு இடம் அளித்து திருந்திய பட்ஜெட்டில் கூடுதலாக 600 கோடி வழங்குவது, ரேஷன் கடைகளை திறக்க அனுமதி உள்ளிட்ட எந்த ஒன்றிற்கும் உறுதியான பதில் என்பது இல்லை பாஜக தேர்தல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ஒன்று கூட இதுவரை நிறைவு செய்யப்படவில்லை.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாடு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் திருமிகு தமிழிசை சௌந்தரராஜன் போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார். பாஜக அரசியலை வெளிப்படையாக செய்வதும், ஆட்சி நிர்வாகம் அனைத்திலும் தலையீடு செய்வதும் தொடர்கிறது. நகரத்திட்டத்தின் செயல்பாடு குறித்து வாரம் ஒரு உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடத்தப்படுகிறது. தனது கண்காணிப்பு, தலையீடு காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெறுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்.

முந்தைய காங்கிரஸ் திமுக ஆட்சியில் மருத்துவ கல்வியில் 10% அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கும் பரிந்துரை ஆனது. ஆனால் அதன் மீது மத்திய அரசு என்ன முடிவு எடுத்தது என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது அதே 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக தீர்மானத்தை கொண்டுவர மாநில அரசுக்கு கவர்னர் ஊடகம் வழியாகவும் வேண்டுகோள் விடுக்கிறார். மாநில நலனில் மிகுந்த அக்கறை கொள்பவராகவும், தனக்கு மட்டுமே கூடுதல் அதிகாரம் இருப்பதைப் போலவும் அவர் செயல்படுவது துரதிஷ்டவசமானது.

கிடப்பில் போடப்பட்ட மாநில அந்தஸ்து தீர்மானம் 2023-24 ஆம் நிதியாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் 30-3-2023ல் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பவில்லை என்பது திருப்பூர் தோழர் க. சுப்பராயன், MP எழுப்பிய கேள்வியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கவர்னரின் அரசியல் உள்நோக்கம் கொண்ட வஞ்சக செயல் வெளிச்சத்துக்கு வராது போயிருந்தால் அத்தீர்மானம் கவர்னரின் அலுவலகத்திலேயே காலாவதி ஆகி இருக்கும்.

துணைநிலை ஆளுநருக்கு இது ஒன்றும் புதியதல்ல. மூடிய ரேஷன் கடைகளை திறக்க ஒன்றிய அரசின் அனுமதி கோரும் அமைச்சரவை தீர்மானத்திற்கு இதே அணுகுமுறை தான் அவர் பின்பற்றினார். 2022 செப்டம்பரில் அமைச்சரவை எடுத்த முடிவு 2023 ஜனவரி 25 இல் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை மக்கள் அறிவார்கள். இவ்வாறு ஒன்றிய பாஜக ஆட்சிக்கு விசுவாசமாகவும் பாஜகவின் தீவிர ஊழியராகவும் தன்னை முன்னுறுத்திக் கொள்கிறார். இதன் வழியாக மேலும் உயர் பதவிகளுக்கு குறி வைப்பதாக கருத வேண்டியுள்ளது. சமீபத்தில் அதன் வெளிப்பாடாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆண்டவனும், ஆள்பவர்களும் முடிவு செய்வார்கள்” என தனது உள்ளார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

முதல்வரின் மனநிலை

மாநில முதல்வருக்கும், ஆளுநருக்கும் மற்றும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான முரண்பாடு தொடர்கிறது. சுதந்திரமாக செயல்பட முடியாத கையறு நிலையில் முதல்வர் திரு ந. ரங்கசாமி அவ்வப்போது “எனக்கு அதிகாரம் இல்லை; ஏன் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்; பின் வாசல் வழியாக போய்விடலாமா என்ற எண்ணம் வருகிறது; விழாவிற்கு சென்றால் கூட என் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது; பல அதிகாரிகள் VRS தர கோருகிறார்கள்” என்று முதல்வர் புலம்புவது கடந்து விடக் கூடியது அல்ல. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுவது போல அண்ணன் தங்கை பிரச்சினை என்று மழுப்பும் பிரச்சனையும் அல்ல. இது பாஜக தலைமையிலான ஒற்றை ஆட்சியின் நகர்வாகவே இதை கருத வேண்டி இருக்கிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதி பெறுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தும் மாநிலம் முன்னேறவில்லை. மூடிய ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை மூடிய பஞ்சாலைகளை செயல்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டங்கள் ஏதும் இல்லை. மின்சாரத்துறை 100 சதமாணம் தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்து வருகிறது. 5000 மேற்பட்ட அரசு சார்பு நிறுவன தொழிலாளிகளுக்கு பல மாத சம்பள பாக்கி வழங்கிடவும் அவர்களை பணிகளை பாதுகாக்கவும் தவறிவிட்டது. விவசாய நிலங்கள் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது, இதனால் மக்கள் பல துன்ப துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்துவிட்டது. கோயில் நிலங்கள் தனி நபர்களால் அபகரிக்கப்படுகிறது.

அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் போராடி வருகிறார்கள். இத்தகப் போராட்டங்கள் மேலும் வலுப்பெறுவதும், சமூக நீதி அடிப்படையிலான மாற்று அரசை மத்தியிலும் மாநிலத்திலும் அமைத்திட புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் இடைவிடாது போராடி வருகிறது. ஜூலை 30 தியாகிகள் தினம் மக்கள் போராட்டங்களுக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டுகிறது. மாற்று அரசியலை கட்டமைத்திட ஜூலை 30 தியாகிகளில் தினத்தில் நாம் உறுதி ஏற்போம்.

1 Comment

  • மிகச்சிறப்பான பதிவு. புதுவையின் இன்றைய ஆட்சியாளர்யாளர்களின் திறமையற்ற நிர்வாக
    அலங்கோலத்தையும் ஒன்றிய அரசின் அரசியல் 2024 தேர்தல் தகிடுதத்தத்தையும் சுருங்க விளக்கியுள்ளிர்கள் அருமை

Leave a Reply