புதுச்சேரி யூனியன் ஆட்சி பரப்புக்குக் கீழ் மூன்றுபுறம் தமிழகப் பகுதிகளாலும், ஒருபுறம் வங்காள விரிகுடாவாலும் சூழப்பட்ட நிலப்பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். இம் மக்களின் முக்கியமான பல்வேறு கோரிக்கை கள் பல ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் காதுகளுக்கு கேட்பதே இல்லை. ஆட்சியாளர்களின் கேளாத காதுகளுக்கு உரத்துக் குரல் எழுப்பும் வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) காரைக்கால் மக்களின் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
உரிமைகள் பறிப்பு
கடந்த பல ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலம் ஒன்றிய. மாநில அரசுகளின் மோசமான ஆட்சியால் துரோகத்தால் இருந்த உரிமைகள் அனைத்தையும் இழந்து எந்த நலத்திட்டங்களும் இல்லாமல் தவித்து வருகின்றது. இந்தியாவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலமாக, வேலையின்மையில், தற்கொலையில் இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றப்பட்டு விட்டது. புதுச்சேரி நன்றாக இருந்த காலத்திலேயே காரைக்கால் எப்போது புறக்கணிக்கப்பட்டே வந்ததது. தற்போது புதுச்சேரி மாநிலமே புறக்கணிக்கப்பட்டு ஒன்றிய பாஜக ஆட்சியால் சூறையாடப்படுகிறது. காரைக்காலை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு மாவட்டமாக அறிவித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாவட்டமாக செயல்படத் துவங்கிய பின்பும் இங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு உரிய முடிவெடுக்கும் அதிகாரமும், கட்டமைப்பு வசதிக ளும் இல்லை. சிறுசிறு விசயங்களுக்குக் கூட புதுச்சேரி தலைமையை எதிர்பார்த்து நிற்கும் நிலை தான் நீடிக்கிறது.
சுகாதாரமும் திண்டாடும் மக்களும்
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் காரைக்காலில் சமீபத்தில் ஏற்பட்ட காலரா தொற்று. சுத்தமான குடிநீர், முறையான கழிவுநீர் வசதி யின்மை, தெருக்குப்பைகளை தினசரி முறையாக அகற்றாததது, தொற்று நோய் தடுப்பு மருந்து வழங்காதது ஆகியவையே இதற்கான காரணங் களாகும். குடிதண்ணீர் தொட்டிகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, சுத்தப்படுத்தாத நிலையில் இருப்பதும், பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் போடப்பட்ட குடிநீர் செல்லும் குழாய்கள் இன்னமும் மாற்றப்படாமல் இருப்பதும், உடைந்த குழாய்கள் மூலமாக குடிநீரோடு சாக்கடை நீர் கலப்பதும் சமீபத்திய காலரா நோய் தாக்கத்திற்கான கூடுதல் காரணங்களாகும். இந்தகைய மோசமான நிலையை மாற்ற புதுச்சேரி அரசு போதிய நிதி ஒதுக்காததே, அனைத் திற்கும் முதன்மையான அடிப்படைக் காரண மாகும். ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற அரசின் அறிவிப்புக்கு மாறாக, அடிப்படை சுகாதார வசதிகளுக்கே மக்கள் திண்டாடுகிறார்கள் என்பதே உண்மையாகும். காரைக்கால் நகரப் பகுதியுடன் சேர்த்து, 37 கிராமங்களையும், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்ட இப்பகுதிக்கு என போதுமான மருத்துவமனைகள் இல்லை. காரைக்காலில் சிறப்பு நிலை மருத்து வமனை அமைப்பதாக அரசு அறிவித்து 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மருத்துவமனைக்காக நில மும் கையக்கப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இதுவரை இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. ஒரு காலத்தில் தமிழக மக்கள் காரைக்கால் மருத்துவமனைகளுக்கு அதிகளவில் சிகிச்சைக்காக வருவார்கள். ஆனால் இப்போது இங்குள்ள மக்கள் சிறு நோய் வந்தாலும் நாகப்பட்டினம், சிதம்பரம், கும்பகோணம் என தமிழக மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. தினசரி சிகிச்சைக்காக வரும் 10,000 பேர்களில் சுமார் 8,000 நோயாளிகள் தனியார் மருத்துமனை களிலும், 2,000 நோயாளிகள் அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெறுகிறார்கள். தேவை யான கட்டிட வசதி, மருத்துவர்கள், மருந்துகள் இல்லாத அவல நிலை தொடர்கிறது. உயிர்காக்க வேண்டிய உயர் சிகிச்சைக்கு தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவ்ட்டங்களுக்கு செல்ல வேண்டிய கொடுமையான நிலைதான் தற்போதைய காரைக்கால் நிலையாக இருக்கிறது.
வீடின்றி தவிக்கும் ஏழைகள்
வீடற்ற ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வீடுகட்ட நிலம் வழங்கப்படவில்லை என்பதோடு, அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில், 10 விழுக்காடு நிலத்தில் கூட பயனாளிகளால் வீடுகள் கட்டப்பட வில்லை. முன்னாள் அமைச்சர் சந்திரகாசு 30 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த இலவச மனையில் இருந்து, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய எல்.ஜி.ஆர். பட்டா நிலங்களில், குறைந்த அளவு மக்களே வீடு கட்டியுள்ளார்கள். காரணம் வழங்கப்பட்ட வீட்டு மனைகள் எல்லாம் சாலை மட்டத்திலிருந்து 5 அடி பள்ளத்தில் உள்ளது. இலவச மனைப்பட்டா வழங்கும் விழாக்கள் நடத்தி, ஆடம்பர அரசியல் செய்த அரசியல்வாதிகள், காரைக்காலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வீடின்றி தவித்துக் கொண்டிருப்பதை கவனத்தில் கொள்வதில்லை.
வஞ்சிக்கப்படும் அமைப்புகள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடை பெற்று, அதற்கான நிதி உள்ளாட்சி அமைப்புக ளுக்கு வழங்கப்பட்டதால், கிராமத்தின் தெருக்கள் உள்பட அனைத்து சாலைகளும் பளபளக்கின்றன. ஆனால் காரைக்கால் தெருக்களின் சாலை வசதிகள் படுமோசமாக உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றம் வரை முறையிட்டு, ஆணை பெற்ற பின்பும், சொத்தைக் காரணங்களைக் காட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த அரசு இன்று வரைக்கும் முயற்சிக்கவில்லை. ஆள்பவர்க ளும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் அதிகாரம் பறிபோய் விடும் என்ற அச்சத்தில், தேர்தல்களை நடத்தி, ஒன்றிய அரசின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறாமல் மக்களை வஞ்சிக்கிறார்கள்.
வறுமையின் பிடியில் கிராமங்கள்
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது ஏழை மக்களின் கைகளில் குறைந்த அளவிலாவது பணம் கிடைத்திட வேண்டும்; விவசாய வேலை கிடைக்காத கிராமப்புற மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்க சிறிதளவாவது பயன்பட வேண்டும் என்பதற்காகத் தான் கொண்டு வரப்பட்டது. புதுச்சேரி பகுதிகளில் கிடைக்கும் வேலை நாட்கள் கூட காரைக்காலில் பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என்றும், 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியவர்களுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது.
தத்தளிக்கும் தலித் மக்கள்
அடுக்கப்பட்ட மூட்டையில் அடி மூட்டையாகக் கிடக்கும் காரை தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. தலித் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக ‘பட்டியல் சாதியினருக்கான துணைத் திட்ட நிதி’ ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். ஆனால் அவ்வாறாக ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதம் கூட அந்த மக்களுக்குக்காக செலவிடப்படுவதில்லை. புதுச்சேரி பகுதியின் நிலையே இப்படியென்றால், காரைக்கால் பகுதியின் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கான திட்டங்களுக்கு 25 சதம் நிதி கூடகிடைப் பதில்லை என்பதே உண்மை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சேதமடைந்த கூரை வீடுகள், கழிவு நீரில் மிதக்கும் தெருக்கள், மின் விளக்குகள் இன்றி இருளில் மூழ்கி இருக்கும் இரவுகள், தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டுக்கு முறையான பாதை இல்லை என அவலம் நீடிக்கிறது. அந்த நிதி தாழ்த்தப்பட்டோரின் வீடு கட்டும் திட்டங்களுக்கும், அலங்கோலமாக கிடக்கும் மாணவர்களின் தங்கும் விடுதியை பழுது பார்க்கவும் கூட நிதி ஒதுக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவச கல்வி திட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது, 80 விழுக்காடு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில், புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் காரைக்காலைச் சேர்ந்தவர். இதுதான் காரைக்கால் மக்கள் பெற்ற பாக்கியம்.
புதுவையின் நெற்களஞ்சியம்
புதுவையின் நெற்களஞ்சியம் என அழைக் கப்படும் காரைக்காலில் விளைவிக்கப்படும் நெல்லைக் கொள்முதல் செய்ய, புதுச்சேரி அரசு தயாராக இல்லை. மாறாக, இரவோடு இரவாக யாரும் அறியாமல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் நெல்லை விற்க வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால் விவசாயிகள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. விதை, உரம், பூச்சி மருந்து என அனைத்துக்கும் தமிழகம் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. வளமான விவசாயம் நடந்த நிலை மாறி, இன்று ஆட்சி யாளர்களின் புறக்கணிப்பால் வறட்சியை எதிர் நோக்கும் பிரதேசமாக காரைக்கால் இருக்கிறது. காரைக்கால் பகுதியில் சாகுபடிக்குப் பயன்படும் நிலத்தில், பெரும்பகுதி கோவில் மற்றும் மடங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காலம்காலமாய் மேற்படி நிலத்தில் பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கு நில அடங்கல் வழங்கப்ப வில்லை. குறைந்தபட்சம் பயிர் செய்து வரும் நிலத்திற்கு சாகுபடிச் சான்றிதழ் கூட இல்லை, இதனால் அரசு மானியங்கள் கிடைக்காதோடு, பயிர் பாதுகாப்பு திட்டங்களும் இல்லை.
கரையேறாத காவேரி நதி
காவிரி நதி நீர்பங்கீட்டில் 6 டிஎம்சி தண்ணீர் காரைக்காலுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், இதுநாள் வரை அந்த தண்ணீரை பெற எந்த முயற்சியையும் அரசும் மேற்கொள்ளவில்லை. மழைவெள்ள காலத்தில் கடலுக்குப் போகும் உபரி நீரைத் தடுத்துப் பாதுகாத்து, பாசனத்திற்கு பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதாக கூறும் விவசாயிகளின் குரலுக்கு புதுச்சேரி அரசு செவிசாய்ப்பதே இல்லை. இவ்வாறாக அனைத்து வகையிலும் காரைக்கால் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி விவசாயத்தை பொறுத்தே அமையும். விவசாயத்தை பற்றிக் கவலைப்படாத எந்த அரசாங்கமும் நீடிக்க முடியாது.
தலைவிரித்தாடும் வேலையின்மை
25 ஆண்டுகளுக்கு முன்பாக போலகத்தில் தொழில் தொடங்க 700 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டும் அங்கு எந்த ஒரு தொழிற்சாலையும் நிறுவப்படாததால். இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அரசு வேலையும் கிடைப்பதில்லை. தற்போதைய விவசாய சாகுபடியில் உழவு செய்வதில் இருந்து அறுவடை வரை எல்லாம் எந்திரமயமாகி விட்டதால், கிராமப்புற ஏழை மக்கள் மத்தியில் வேலை யின்மை தலைவிரித்தாடுகிறது. காரை மீனவர்க ளுக்குப் பாதுகாப்பு இல்லை. கட்டுமரம் சிறுபடகு, விசைப்படகு மீனவர்களுக்கு வருமானம் இல்லை. கடல் அரிப்பில் ஆண்டுக்கு 10 வீடுகள் நாசமாகிறது.
தனியார் துறைமுகத்தால் தவிக்கும் மக்கள்
காரைக்கால் திருப்பட்டினம் வாஞ்சூரில் மார்க் தனியார் கப்பல் துறைமுகத்தில் இருந்து கடந்த 13 ஆண்டுகளாக சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான டன் நிலக்கரி காரைக்கால் துறைமுகத்திற்கு வருகிறது. நிலக்கரிதுகள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் மாசுபட்டு பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக துறைமுகத்தால் பல்வேறு மீனவ கிராமங்கள், மீனவர்கள் பாதிக்கப்படுகின்ற னர். ஆனால் தரும் லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு கண்மூடி மவுனியாக இருக்கிறது புதுச்சேரி அரசு.
பாலாறும் சாக்கடையும்
இதன் பின்னணியில் புதுச்சேரியில் பா.ஜ.க வெற்றிபெற்றால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். தற்போது சாக்கடைகள்தான் ஓடுகிறது. அரசு மாவட்ட மக்களின் மக்கள் பிரதிநிதி களாக இருந்துவரும் ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் துரோகத்தால் மேலும் மோசமான நிலைக்கு காரை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வழக்கத்தை விட கூடுதலாய் எந்த நிதியும் மாநிலத்திற்கு கிடைக்க வில்லை. வாயால் வடை சுடும் மோடியின் திருவாளர்கள் மவுனமாய் ஆகிவிட்டார்கள். ஆனால் பாவம் முதல்வர் ரங்கசாமி பாஜகவை நம்பி ஏமாந்து நம்மையும் ஏமாற்றிவிட்டார். பெயருக்குத் தான் முதல்வர் அவரையே ஓரம் கட்டி விட்டார்கள். குறைவான நிதி ஆதாரமும் புதுச்சேரிக்கே செல விடப்படுகிறது என்றால் புதுச்சேரி வரைபடத்தில் காரைக்கால் மாவட்டம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தொடர்ந்து எழுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் காரைக் காலுக்கு போதுமான அமைச்சர்கள் கொடுப்பதில்லை, அனைத்து திட்டங்களிலும் காரை மக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அதனால்தான் காரைக்காலை தனியாகப் பிரிப்போம் தமிழகத் தோடு இணைப்போம் என்றெல்லாம் சட்டிக்கு பயந்து நெருப்பில் விழும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. மாறாக காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக பிரிப்பது என்பது தீர்வாகாது. அது பயன் அளிக்காது. தீவிரமான மக்கள் போராட்டமே அதற்கு தீர்வு அனைத்து முனைகளிலும், காரைக்கால் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டு, பின் தங்கியுள்ளது மக்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக ஒன்றுதிரண்டு போராடாமல் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. எனவே காரைக்கால் பகுதி மக்கள், கோரிக்கைகளை வென்றெடுக்க கோடிக்கால் பூதமாகவும், கோபத்தின் ரூபமாகவும் திரண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது.
கோரிக்கைகள்
மக்கள்தொகை அடிப்படையில் காரைக் காலுக்கு கல்வி, விவசாயம், சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்றவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை கைவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில், வயதுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு துறைகளான உள்ளாட்சி அமைப்பு மற்றும் இதர துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், அவர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை முறையாக வழங்க வேண்டும். லாபத்தில் இயங்கி வரும் மக்களின் சொத்தான மின்துறையை தனியார் மயமாக்கும் அபாயகரமான என்.ஆர்.எஸ். பாஜக கூட்டணி அரசு திரும்பபெற வேண்டும். காரை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சட்டப்படி நியாயமான கூலியும் இல்லை. எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. இதை எதிர்த்து போராட இளைஞர்கள் முன் வர வேண்டும். ஏரிகளிலிருந்து வெட்டப்படும் மணல்களை சட்டவிரோதமாக கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். வெட்டப்படும் ஏரிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஏரியிலிருந்து வெட்டப்படும் மண்ணை அந்தந்த பகுதிகளுக்கே பயன்படுத்த வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப காரைக்காலில் போதுமான பேருந்துகள் இல்லை. அனுமதி வாங்கி உரிய வழித்தடங்களில் பேருந்துகள் இயங்குவதில்லை. காரைக்கால் – கோட்டுச்சேரி – நெடுங்காடு மயி லாடுதுறை வரையில் அரசு பேருந்துகளை இயக்கி மக்களின் சிரமத்தைப் போக்கிட வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் மினி பஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்விச் சான்றுகள் அரசு ஆன்லைன் மூலம் தனியாருக்கு விடப்பட்டு இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காரைக்கால் மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பாதுகாப்பான தடுப்பு அமைப்பு வேண்டும். மீன் பிடிப்பின் போது கடலில் மீனவர்கள் இறந்து போனவர்கள், காணா மல் போனவர்களின் அவர்களது குடும்பத்தை அரசு பாதுகாத்திட வேண்டும், மீனவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் போதுமானதாக இல்லை. இதை உயர்த்தவும், அரசியல் பாரபட்ச மின்றி மானிய உதவிகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாவட்ட கட்டமைப்புக்குத் தேவையான அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு உரிய அதிகாரம் வழங்கவேண்டும். காவிரி தண்ணீரை பெறுவதற்கும், அதை தேக்கி வைக்க புதிய ஏரி, குளங்கள் அமைக்க வேண்டும். விளைந்த நெல்லை அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலம்காலமாய் கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். புதிய வீடு கட்ட தேவையான நிதி வழங்கவேண்டும். தலீத் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி காரைக்காலுக்கு முழுமையாக ஒதுக்க வேண்டும். நீட் தேர்வு பல மாணவர்களைக் கொன்றது போதாது என்று இப்போது குயூட் தேர்வை புதுச்சேரியில் அமல்படுத்தி இருப்பதை ரத்து செய்யவேண்டும். 15 ஆண்டுகளாக போடப்படாத பிரதான சாலைகள், கிராமத் தெருச் சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும், காரைக்கால் மருத்து வமனையை தரம் உயர்த்தி போதுமான மருத்து வர்கள், ஊழியர்களை நியமித்து, மருந்துகள், மருந்துவ உபகரணங்களை வழங்க வேண்டும். – வே.கு.நிலவழகன்
நன்றி தீக்கதிர்