வெண்மணி நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது!

maxresdefault (1)ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் இன்றைய நாகப் பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா வுக்குட்பட்ட சின்னஞ்சிறிய கிராமம் கீழவெண்மணி. “உன்னைப் போலவே உன் பக்கத்து வீட்டானை யும் நேசி” என்று உலகுக்கு அன்பை போதித்த ஏசுநாதர் பிறந்தநாளான டிசம்பர்-25ஆம் தேதிதான் உலகையே உலுக்கிய அந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டது.
1968 டிசம்பர் 25ஆம் தேதி கீழவெண்மணி கிராமம் தீக்கிரை யாக்கப்பட்டது. 22 குடிசைகள் தீ வைத்து எரிக்கப் பட்டன. உயிர்பிழைத்து விடலாம் என்ற நப்பாசையில் ராமய்யாவின் குடிசைக்குள் புகுந்திருந்த 44 மனிதர் கள் வெந்து மடிந்து கரிக்கட்டையாய்க் கிடந்தனர்.
இந்தக் கொடுமை நடந்து 53 ஆண்டுகள் ஆகி விட்டாலும் தீயின் வெம்மை தாங்காமல் அவர்கள் கதறிய கதறல் ஒலி இன்னமும் நம் செவிகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
கொடியவர்களால் வைக்கப் பட்ட தீ இன்னமும் கொழுந்துவிட்டு எரியும் காட்சி கண்முன் அப்படியே விரிகிறது.
கற்பனைக்கெட்டாத கொடூரமான ஒரு வாழ்க்கையை அம்மக்கள் வாழ்ந்து வந்தனர். பெரும் நிலப்பிரபுக்களின் பண்ணை அடிமைகளாய் மக்கள் வைக்கப்பட்டிருந்தனர்.
நிலப்பிரபுக்களின் நிலங்களில், 16 மணி நேரம், 18 மணி நேரம் ஆண் – பெண் அனைவ ரும் கட்டாயம் உழைக்க வேண்டும். ஆண்டைகளால் கொடுக்கப்பட்டது தான் கூலி. இவ்வளவு கூலி என்று கேட்க முடியாது. வாயிருந்தும் ஊமையாய், கண்ணி ருந்தும் பார்வையற்றவராய் அம்மக்கள் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
கையளவு நிலம் கூட இம்மக்களுக்கு சொந்த மில்லை. படுத்து எழுந்திருக்கும் குடிசையும் நிலப்பிர புக்களுக்கே சொந்தம். நடக்கத்துவங்கிய குழந்தை முதல் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் முதியவர் வரை பண்ணையில் உழைக்க வேண்டுமென்பது எழு தப்படாத சட்டம். இதை மீறுபவர்கள் பண்ணைக்கு முன்பாக மரத்தில் கட்டி வைக்கப்பட்டு சாட்டையால் தாக்கப்படுவார். உடலிலிருந்து ரத்தம் கொட்டும். மேலும் சாணிப்பால் கட்டாயமாக வாயில் ஊற்றப்படும்.
இந்த தண்டனைக்கு உள்ளாகாதவர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது. இந்த மனிதத்தன்மையற்ற கொடூரமான தண்டனையை எவரும் எதிர்த்துக் கேட்க முடியாது. கேட்டால் அவர்களுக்கும் இதே தண்டனை உறுதி.
முழுமையாக துணி உடுத்தக் கூடாது. தெருவில் நடக்கக்கூடாது. எடுபிடி வேலைகள் அனைத்தையும் இலவசமாக செய்ய வேண்டும். நிறைமாத கர்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்கள் எவருக்கும் எந்த விதிவிலக் கும் கிடையாது. விலங்கினும் கீழாய் அம்மக்கள் நடத்தப் பட்டனர்.
தலை நிமிர்ந்த மக்கள்
இப்படி அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை ஒன்று திரட்டி, உணர்வூட்டி, உரிமைகளை கேட்கும் தைரி யத்தை உருவாக்கியது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், செங்கொடி இயக்கம். அடங்கி, ஒடுங்கி கிடந்தவர் கள், ஒருவேளை கஞ்சிக்காக வீட்டுவாசலில் காத்துக் கிடந்தவர்கள், வாயை பொத்திக் கொண்டு இருந்தவர் கள், சங்கம் சேர்வதும், கொடி பிடித்து கோஷம் போடுவ தும், சங்க கூட்டமிருக்குது, இன்று வேலைக்கு வர முடியாது என்று சொல்வதையும் எப்படி சகித்துக் கொள்ள முடியும்.
ஆண்டுதோறும் கூலி உயர்வு கேட்கி றார்கள். வெளியூர் ஆட்களை வேலைக்கு அழைத்து வந்தால் விதைத்த நாங்கள் தான் அறுப்போம் என்று வெளியூர் ஆட்களை வேலை செய்யவிடாமல் தடுக் கிறார்கள். குனிந்த தலை நிமிராமல் சென்றவர்கள் இப்போது தலைநிமிர்ந்து நடக்கிறார்கள். எவ்வளவு பெரிய திமிர்த்தனம்.
இதை இப்படியே விடக்கூடாது. முளையிலேயே இதை கிள்ளி எறிய வேண்டும். இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென்று நிலப்பிரபுக்களெல்லாம் சேர்ந்து நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற பெய ரில் கிராமங்கள் தோறும் செங்கொடி இயக்கத்தை எதிர்க்க ஒன்றுதிரண்டனர்.
அதன் தலைவராக இரிஞ்சூர் கோபால கிருஷ்ணநாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவ ருடைய தலைமையிலான குண்டர்படைதான் தீ வைத்து எரிக்கும் கொடூரத்தை அரங்கேற்றியது. செங்கொடியை இறக்க வேண்டும். நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மஞ்சள் கொடியை கிராமங்களில் ஏற்ற வேண்டுமென்று நிர்ப்பந்தித்தார்கள்.
பண்ணையடிமைகளாய் இருந்து விவசாயத்தொழிலாளர்களாக மாறியிருந்தவர்கள் மறுத்தார்கள். எதிர்த்தார்கள்.
எங்களுக்கு மனிதர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது இந்த செங்கொடி. சாட்டையடி, சாணிப்பால் தண்டனையை ஒழித்தது இந்த செங்கொடி. இந்தக் கொடி எங்கள் உயிரோடும், உதி ரத்தோடும் கலந்தது. இதை எக்காரணம் கொண்டும் இறக்க மாட்டோம் என்று தெரிவித்து விட்டனர்.
உழைக்கும் மக்களின் இந்த உறுதி நிலப்பிரபுக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பாடம் கற்றுக் கொடுக்க மீண்டும் பழையபடி அடிமைப்படுத்த வேண்டும். நமக்கு அடங்கி நடக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியை இல்லாமல் முற்றாக அழித்தொழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டது தான் இந்தப் படுகொலை.
எரிக்கப்பட்டவர்களில் 5 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள், 19 பேர் குழந்தைகள். யார், எவர் எந்த அடையாளமும் காண முடியவில்லை.
ஒட்டுமொத்த மாக வாரிச் சென்று மீண்டும் எரித்தது அரசு நிர்வாகம். ஆம்! பிணத்தைக் கூட உரியவர்களிடம் ஒப்படைக்க வில்லை.
முதற்கோணல் முற்றும் கோணல்
கீழ்வேளூர் காவல்நிலையம் துவங்கி சென்னை உயர்நீதிமன்றம் வரை அதிகார வர்க்கம் அனைத்தும் ஒன்றாக நின்று குற்றவாளிகளை காப்பாற்றுவதில் கண்ணுங்கருத்துமாக செயல்பட்டனர். முதற்கோணல் முற்றும் கோணல் என்பதைப் போல முதல் தகவல் அறிக்கையிலேயே தீப்பிடித்ததால் குடிசைகள் எரிந்தன. தீப்பிடித்ததால் குடிசைக்குள் இருந்தவர்கள் எரிந்து போயினர் என்று தான் குறிப்பிட்டுள்ளனர். தீ வைத்ததால் என்று குறிப்பிட்டிருந்தால் யார் தீ வைத்தது, எதனால் தீ வைத்தார்கள் என்ற கேள்வி எழும் அல்லவா?
குற்றம் சாட்டப்பட்டிருந்த 23 பேருமே மிராசு தாரர்கள். அவர்களுடன் வந்த குண்டர்கள் எவருடைய பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற வில்லை. இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவ சாயத் தொழிலாளர்கள் பலருடைய உடம்பில் துப்பாக் கிக் குண்டுகள் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.
மருத்துவம் பார்த்த மருத்துவர்களின் சான்றிதழ் என்ன தெரியுமா?
முனியன் என்ற விவசாயத் தொழிலாளியின் உடம்பில் மட்டும் 14 குண்டுகள். இரண்டு குண்டுகள் அகற்றப்படவே இல்லை. அவர் உயிர்பிழைத்துக் கொண்டார். ஆனால் 14 குண்டுகள் பாய்ந்தவருக்கு சாதாரணக் காயம் தான் என்று மருத்துவர்கள் சான்றி தழ் கொடுத்துள்ளனர். மண்டை ஓடு உடைந்தவருக் குக்கூட சாதாரணக் காயம் என்று தான் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அரசுத்தரப்பு
இந்த வழக்கில் முதலில் நாகப்பட்டினம் கோட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.எம்.குப்பண்ணன் என்ற நீதி பதியால் 1970 நவம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள் ளது.
ஓராண்டு முதல் பத்தாண்டுகள் வரை எட்டு பேருக்கு மட்டும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டு மென்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் விடுதலை.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படுகிறது. மேல் முறையீட்டில் 1973 ஏப்ரல் 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டது. போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்க வில்லை என்று கூறியது நீதியரசர் வெங்கட்ராமன், நீதி யரசர் மகாராஜன் என்ற இருநபர் அமர்வு. எனவே, குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை.
நீதிமன்றங்கள் வர்க்க நலன் சார்ந்து தான் செயல் படும் என்பதற்கு வெண்மணி படுகொலை குறித்த தீர்ப்பு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!
இதோ, தீர்ப்பின் சில வரிகள் “25.12.1968 அன்று இரவு நடந்த சம்பங்க ளில் முதல் குற்றவாளிக்கு எந்த தொடர்பும் இல்லை” (முதல் குற்றவாளி கோபாலகிருஷ்ணநாயுடு), “வீட்டில் தஞ்சம் புகுந்த 42 அப்பாவி விவசாயிகள் அந்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் உயிர் இழந்தி ருக்கிறார்கள் என்பது உண்மையாகவே வருந்தத்தக் கது.
வீட்டுக்கு தீ வைத்தவர்களுக்கு அந்த வீட்டுக்குள் 42 பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாது என்பதையும், அவர்களை எரித்துக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பதையும் அறிவது கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
தீ வைத்தது குற்றமில்லையா?
42 பேர் இருந்தது தெரியாது. சரி, நான்கு பேர் இருந்தால் தீ வைத்து எரிக்க லாமா? நோக்கமில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது என்று குற்றவாளிகளுக்கு நற்சான்று வேறு!
இதையெல் லாம் விட இன்னும் மோசம் என்ன வென்றால் “இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்ற வாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது.
இவர்களில் பெரும்பா லோர் பெருமளவு நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்று தெளிவு.
இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூ னிஸ்ட் விவசாயிகளை பழிவாங்கும் அளவுக்கு பலவீன மான எண்ணங்கொண்டிருப்பார்கள். இவர்கள் தாங்க ளாகவே சம்பவ இடத்திற்கு நடந்து வந்து பணியாளர் கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்கு தீ வைத்தி ருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது.
தங்களுக்கென்று ஏராளமான நிலங்களைக் கொண்டுள்ள மிராசுதாரர்கள் மூர்க்கமான மற்றும் பட்டினி கிடக்கிற தொழிலாளர்களை விட அதிக பாது காப்புடனே இருப்பார்கள். மிராசுதாரர்கள் பின்னால் இருந்து கொண்டு கூலிக்கு அமர்த்திய தங்களின் கையாட்களைக் கொண்டே பல குற்றங்களை செய் வார்கள் என்றே எவரும் எதிர்ப்பார்ப்பார்கள்.
ஆனால் சம்பவ இடத்திற்கு மிராசுதாரர்களே நேரடியாக வந்து குற்றங்களைச் செய்தார்கள் என்பது அரசு தரப்பு வாதம்” தீ வைத்த நிலப்பிரபுக்களை விட நீதியரசர்களின் இந்த தீர்ப்பு எரியும் உடலின் மீது நெய்யை ஊற்றியது போல் இருக்கிறது. குற்றவாளிகள் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றால் அதற்கேற்ப நீதியை வளைத்து கொள்வது என்பதுதான் நீதிபதிகளின் இந்த வாதம்.
புதிதாக கட்டப்பட்ட நினைவகம்
ராமய்யாவின் குடிசை இருந்த இடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் விலைக்கு வாங்கப்பட்டு அந்த இடத்தில் வெண்மணி வீரத்தியாகிகள் நினைவகம் அமைக்கப்பட்டது.
இதை தோழர்.பி.ராமமூர்த்தி தலை மையில் 28.6.1969 அன்று மேற்கு வங்க துணைமுதல்வர் தோழர்.ஜோதிபாசு திறந்துவைத்தார். 52 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. எனவே, ஈடு இணையற்ற தியாகிகளுக்கு, அதே இடத்தில் நினைவு சின்னத்தை புதிதாக கட்டுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக்குழு முடிவு செய்தது.
அதனடிப்படையில், பல்லாண்டு காலத்திற்கு நிலைத்து நிற்கும் வகையில் புதிய நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நினைவகத்தை டிசம்பர் 25ஆம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைக்கி றார் . ‘வெண்மணித் தீ’ என்றென்றும் நமது நெஞ் சங்களில் கனல் மூட்டிக் கொண்டேயிருக்கும். வீர வெண்மணி தியாகிகளின் தியாகம் வீண் போகாது. முதலாளித்துவத்தையும், நிலப்பிரபுத்து வத்தையும் வேரோடு வீழ்த்த மேலும் முனைப்புடன் செயல்படுவோம். தியாக பூமிக்கு திரண்டு வாரீர்.
கட்டுரையாளர் :
பெ.சண்முகம்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்
தீக்கதிர்

Leave a Reply