தொழிலாளர்களை அடிமைகளாக்கும் நாசகர சட்ட திருத்தங்கள் – பகுதி -1

மோடியின் ஓர் ஆண்டு ஆட்சி தொழிலாளர் வர்க்கத்திற்கு நாசகரமாக அமைந்தது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனேயே பன்னாட்டு,உள்நாட்டு முதலாளிகளை திருப்திப்படுத்த ஓட்டு மொத்தமாக தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர் களின் நலன்களுக்கு விரோதமாக திருத்தும் நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் மேற்கொண்டது. இன்று சட்டப்பாதுகாப்பின் வரம்பிற்குள் உள்ள கொஞ்சநஞ்ச தொழிலாளர்களையும் சட்ட வரம்பிற்கு வெளியே தள்ளும் நோக்கத்தைக் கொண்டவைகளாக இந்த திருத்தங்கள் அமைந்துள்ளன. இது ஒன்றும் எதிர்பார்க்காதது அல்ல, பா.ஜ.க.வை எப்படியாவது ஆட்சியில் அமரவைப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் பணத்தை வாரியிறைத்தன. இப்பொழுது மோடி அரசு செஞ்சோற்றுக் கடனைத் திருப்பி செலுத்தும் காலம். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பன்னாட்டு கார்ப்பரேட்களுக்கு சேவகம் செய்யும் உறுதியை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

திருத்தங்கள் முதலாளிகளுக்காக
மத்திய அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் கொண்டுவரும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் என்பது தொழிலாளர்களை வேலையில் அமர்த்தவும், துரத்தவும்
முதலாளிகளுக்கு முழு அதிகாரம் வழங்குவதாகும். இந்த சட்டத்
திருத்தங்கள் முதலாளிகள், தாராளமாக கதவடைப்பு ஆலை
மூடல்,ஆட்குறைப்பு, உற்பத்தி முடக்கம் செய்வதற்கு உதவுகிறது.

மிகப்பெருமளவில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்திக்
கொள்ளவும் இந்த திருத்தங்கள் உதவுகிறது. நாட்டிலுள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை சட்ட வரம்பிற்கு

வெளியே தள்ளுகிறது இந்த சட்டத் திருத்தங்கள். சுரண்டலை தீவிரப்படுத்தவும் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தெடுக்கவும் இந்த சட்டத் திருத்தங்கள் முதலாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கிறது.
தொழிலாளர் சட்ட மீறல்கள்

நமது நாட்டில் தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப் பட்டதை விட மீறப்பட்டது தான் அதிகம் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டப்படியான குறைந்த பட்ச ஊதியமோ, பி.எப் இ.எஸ்.ஐ. போன்ற சமூக பாதுகாப்போ கிடைக்கவில்லை.

ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு பெயர்களில் நிரந்தர தன்மையுள்ள பணிகளிலும்,தொடர்பணிகளிலும் ஒப்பந்த தொழிலாளர் சட்டத்திற்கு விரோதமாக பணியமர்த்தப்
படுகிறார்கள். பொதுத்துறையில் சுமார் 50 சதவீதமானவர்களும்,

தனியார் துறையில் சுமார் 70 சதவீதமான தொழிலாளர்களும்
ஒப்பந்தத் தொழிலாளர்களே. வேலை நேரம், மிகைப்பணி நேரம், பணியிடங்களில் பாதுகாப்பு போன்ற பிற சட்டங்களும் மீறப்படுகின்றன.பல ஆலைகளிலும், சேவைப்பிரிவுகளிலும் மிகைப் பணி நேர ஊதியமின்றி 12 மணிநேர வேலை நேரம் என்பது
இன்றைய எழுதப்படாத விதியாகிவிட்டது.

மிகைப்பணிநேர ஊதியம் அளிக்கப்பட்டாலும், அது சட்டப்படி அளிக்கவேண்டிய இருமடங்கு ஊதியத்தைவிட மிகமிகக்குறைவு.
ஆலை மூடலும் கதவடைப்பும்
சர்வதேச நெருக்கடி, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் சுமைகள் மொத்த மாக தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டது. ஆலை மூடல், கதவடைப்பு, உற்பத்தி முடக்கம் ஆகியவை மிகவும் பரவலாக நடைபெறுகிறது.

பெரும்பாலானவைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படுவதில்லை.எனினும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்
பட்டவைகளின் எண்ணிக்கை அபாயகரமாக உள்ளது.

பதிவு செய்யப்பட்ட 13.70 லட்சம் கம்பெனிகளில் 19 சதவீத கம்பெனிகள் டிசம்பர் 2014-ல் மூடப்பட்டுவிட்டது என அதிகாரபூர்வ புள்ளி விவரங் கள்தெரிவிக்கின்றன மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட 279லட்சம் நிறுவனங்களில் 56008ம், மே.வங்கத்தில் 179 லட்சம் நிறுவனங்களில் 41629ம், டெல்லியில் 257 லட்சம் நிறுவனங்களில் 41458 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன சிறிய, பெரிய நிறுவனங்களில் நடைபெற்றுள்ள இத்தகைய ஆலை மூடல்கள் / கதவடைப்புகள். ஆட்குறைப்புகள் பெரும்பாலும் சட்டத்திற்கு விரோதமானவைகளே. மாருதிசுசுகி (ஹரியானா), நோக்கியா, பாக்ஸ்கான்(தமிழ்நாடு), சணல் ஆலைகள் (மே.வ) இவைகளில் அடங்கும். எனினும் எந்தவொரு முதலாளி மீதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்த நடவடிக் கைகள் அரசாங்கத்தின் ஆதரவையும், ஆசியையும் பெற்றுள்ளன.

மனிதாபிமானமற்ற முறையில் தொழிலாளர் உரிமைகளை நசுக்குவதும், சுரண்டுவதும் நவீன தாராளமய பொருளாதார கொள்கையுடன் இரண்டறக் கலந்தது ஆகும். தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களால் இந்த கொள்கைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமல் படுத்தப்பட்டு வருகிறது.இதன் விளைவாக தொழிலாளர்களின் சம்பள விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது.

குறைந்த பட்ச ஊதியம்

1982-83ல் உற்பத்திச் செலவில், 30 சதவீதமாக இருந்த சம்பள விகிதம் 2012-13 ல் 129 சதவீதமாக குறைந்துள்ளது.ஆனால் இலாபம் 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த கால கட்டத்தில் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் அதிகரித்து உள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின் படி. இந்தியாவில் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) அடிப்படையில் கணக்கிடப் படுகிறது. இந்தியாவில் தொழிலாளர் உற்பத்தித் திறன் என்பது ஒரு மணி நேரத்திற்கு 4.17. யு.எஸ். டாலர்கள். (ரூ.250.20) அதாவதுதொழிலாளி ஒரு நாளைக்கு செய்யும் உற்பத்தியின் மதிப்பு ரூ2000 இதை ஒவ்வொரு மாநிலத்திலும்/ துறையிலும் உள்ள சராசரி குறைந்தபட்ச ஊதியத்தோடு ஒப்பிடுகையில் நமது நாட்டில் நடைபெற்று வரும் சுரண்டலின் ஆழம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

நவீன தாராளமய ஆட்சியில் காட்டு தர்பார் எல்லா பணியிடங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இன்று முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வழக்குகளில் 90 சதம் தொழிலாளர் சட்டங்களை தொழிற்தகராறு அமல்படுத்தாதது குறித்ததே. நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டங்களை அமல்படுத்தக்கோரி தொழிலாளர்கள் போராடி னால் முதலாளிகளும் அரசாங்கங்களும் கைகோர்த்துக் கொண்டு பழிவாங்குகின்றன. 21ம் நூற்றாண்டில் நாகரீக சமுதாயத்தில் தான் இத்தகைய இழி நிலையில் நாம் வாழ்கின்றோம்.

அரசின் ஆதரவும் சட்ட மீறல்களும்

அரசு நிர்வாக இயந்திரத்தைக் கொண்டு அரசாங்கம் தொழிற்சங்கங்களை முடக்குவதும், முதலாளிகள் சட்டங்களை மீறுவதும், அரசாங்க ஆதரவுடன் தங்கு தடையின்றி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தொழிற்சங்கம் அமைப்பதும், அதனை பதிவு செய்வதும் மிகவும் சிரமமானதாக உள்ளது.பல மாநிலங் களில் இது இயலாததாகவே உள்ளது. பல மாநிலங்களில் தொழிற் சங்க பதிவு கோரும் பல்லாயிரக்கணக்கான மனுக்கள் மீது தூசு படிந்து உள்ளது. இது அப்பட்டமாக தொழிற்சங்க சட்டத்தை மீறுவதாகும்.

இந்நிகழ்வுகள் பா.ஜ.க.அரசாங்கம் மத்தியில் அமைந்ததிலிருந்து மிகவும் தீவிரமாகியுள்ளது. அரும்பாடுபட்டு தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகளை நசுக்கிடவும், அவர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் ‘சட்டமீறல்கள்’ என இன்று குறிப்பிடப்படும் நடவடிக்கைகளை சட்டமாக்கும் முயற்சிகள் தான் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் மற்றும் சட்டத் தொகுப்பு நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றுவதற்காக, அரசாங்கத்தின் தீயநோக்கத்தை மறைப்பதற்காக, ‘வேலைவாய்ப்பு உருவாக்கம்’, ‘எளிமையாக்குதல்’, ‘இலகுவாக தொழில் நடத்துவது’மூலதனத்தை ஈர்த்தல்’ போன்ற முழக்கங்கள் முகமூடிகளாக அணியப்படுகிறது. தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் குறித்து தொழிலாளர்கள் புரிந்து கொள்வது மட்டுமல்ல.தங்கள் பணி சூழல்கள் மீது இந்த திருத்தங்கள் ஏற்படுத்தும் தாக்குதல்கள் குறித்தும் புரிந்து கொள்வது மிகமிக அவசியமாகும்.

வெற்று முழக்க முகமூடிகளின் திரையைக் கிழித்து மக்களிடையே பிரச்சாரம் செய்வதும், தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், மக்கள் விரோத நவீன தாராளமய கொள்கைக்கு எதிரான போராட்டத்திற்காகவும் மக்களிடையே ஆதரவை திரட்டவேண்டும்.

ராஜஸ்தான் பா.ஜ.க. அரசாங்கம் வழிகாட்டுகிறது(?)

ராஜஸ்தான் அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதில்லை என்ற குறைபாடு ஏற்கனவே உண்டு. குறைந்த பட்ச ஊதியம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், பி.எப்.,இ.எஸ்.ஐ., வேலை நேரம், சட்டவிரோத ஆட்குறைப்பு போன்ற தொழிலாளர் சட்ட விதி மீறல்கள் குறித்த பல்லாயிரக் கணக்கான புகார்கள் பல தொழிற்பகுதிகளில் மாநிலம் முழுவதும் எவ்வித தீர்வுமின்றி குவிந்து கிடக்கின்றன.

ஆகஸ்ட் 2014-ல் ராஜஸ்தான் அரசாங்கம் தொழிற்தகராறு சட்டம், தொழிற்சாலை சட்டம், ஒப்பந்த தொழிலாளர்(ஒழுங் குபடுத்துதலும்மற்றும் ஒழித்தலும்) சட்டம்,பழகுநர் சட்டம், பயிற்சி யாளர்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற் கொண்டது. மிகவும் நாசகரமான, முதலாளிகளுக்கு சாதக மாகவும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் இந்த நாசகர சட்டத் திருத் தங்கள் செய்யப்பட்டுள்ளன. மூலதனத்தை ஈர்ப்பதற்கு எல்லா மாநிலங் களும் இதனை முன் மாதிரியாக கொள்ளவேண்டும் என மத்தியிலுள்ள பா.ஜ.க.அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

300 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் நிறுவனங்களில் அரசாங்கத்தின் ஒப்புதலின்றி தொழிலாளர்களை விருப்பம்போல் ஆட்குறைப்பு செய்ய முதலாளிகளுக்கு அதிகாரத்தை வழங்குகிறது ராஜஸ்தான் அரசாங்கத்தின் திருத்தப்பட்ட தொழிற் தகராறு சட்டம்.

குறிப்பிட்ட நிறு வனத்தில் பணிபுரியும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 30 சத வீதம் இல்லா விட்டால், தொழிலாளர்கள் குறைகளை தொழிற் சங்கம் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையை இந்த சட்டத்திருத்தம் பறிக்கிறது.ஒப்பந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கும் ஷரத்துகள்அனைத்தையும், குறிப்பாக முதன்மை முதலாளியின் பொறுப்பு நீக்கப்பட்டுள்ளது. மெதுவாக பணிபுரிதல் என்பதன் விளக்கங்கள் விரிவுபடுத்தப்பட்டு உற்பத்திகுறைவு மற்றும் செயல்முறை குறைபாடுகளுக்கும், தொழிலாளர்கள் மீது பழி சுமத்துவதற்கு முதலாளிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. வழங்குகிறது.ராஜஸ்தானிலுள்ள பெரும்பான்மையான தொழிற் சாலைகளில் முதலாளிகள் தங்கள் விருப்பம் போல் ஆட்குறைப்பு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது, ஒப்பந்த தொழிலாளர்களை அனைத்து விதமான பணிகளுக்கும் அமர்த்துதல், ஒப்பந்த தொழிலாளர்களின் அனைத்து உரிமை களையும் மறுப்பது, குறைந்த பட்ச ஊதியம் மறுப்பது, சமூக பாது காப்பு மறுப்பது, பழிவாங்குதல் போன்ற நடவடிக்கைகள் இச்சட்டத்திருத்தங்கள் மூலம் தாராளமாக நடைபெறுகிறது.

மின்சாரம் பயன்படுத்தாத 20 தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலைகள், மின்சாரம் பயன்படுத்தும் 10 தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலைகள். தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டும் என தற்போதுள்ள சட்டத்தில் மின்சாரத்தை பயன்படுத்தாத தொழிற்சாலைகளில் 20 பேர் என்பதை 40 பேர் எனவும்,மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் 10 பேர் என்பதை 20 அதிகரித்து தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த திருத்தம் தொழிலாளர்களை எவ்வித கட்டுப்பாடும் இன்றி சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

மாநில அரசாங்கத் திடமிருந்து எழுத்துப் பூர்வமாக முன் அனுமதி பெறாமல், நீதிமன்றங்கள் முதலாளிகள் மீதானசட்டமீறல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று திருத்தப்பட்ட சட்டம் சொல்கிறது. தொழிற் தகராறு சட்ட மீறல்களுக்கான தண் டனைகள் வெகுவாக குறைக்கப் பட்டுள்ளன. இந்த வகையில் மிகப்பெரும் எண்ணிக்கை யிலான தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் தொழிலாளர் சட்ட வரம்பி லிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

சுரண்டலுக்கான முழுச் சுதந்திரம்

ஒப்பந்த தொழிலாளர் சட்ட திருத்தமும் அதுபோலவே உள்ளது.49 தொழிலாளர்கள் வரை பணிக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர் தொழிலாளர் சட்ட வரம்பிலிருந்து நீக்கப்படுகிறார். இதன் விளைவாக அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் தொழிலாளர் சட்ட வரம்பிலிருந்து வெளியே தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தர நிலையிலுள்ள அனைத்து தொழிலாளர் களையும் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றுவதற்கு இந்த சட்ட திருத்தம் ஊக்கம் அளிக்கிறது.

நிரந்தர தொழிலாளர்கள்.ஒப்பந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக வேலை பழகுநர்களுக்கு உதவித்தொகை என்ற பெயரில் அற்ப தொகையை வழங்கி பணியில் அமர்த்த இந்த சட்டத் திருத்தம் வாய்ப்பு அளிக்கிறது. மேலும் சான்றிதழ் வழங்காமலேயே அவர்களை பல ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிய நிர்ப்பந்திக்க முடியும். மொத்தத்தில்,இந்த சட்டத் திருத்தங்கள் தொழிலாளர் களை சுரண்டுவதற்கு முதலாளி வர்க்கத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. பணிபுரியும் இடங்களில் காட்டு தர்பார் நடத்தப் படுகிறது. இந்த சட்டத்திருத்தத்தின் விளைவாக ராஜஸ்தானில் உள்ள 7622 ஆலைகளில் 7252 ஆலைகள் தலா 300 க்கும் குறைவாகவே தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றன. இந்த ஆலைகளில் ‘அமர்த்து; துரத்து’ சட்டபூர்வமாக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர் சட்ட வரம்பிலிருந்து 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்70 சதமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் தொழிற்சாலை சட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
ம.பி. ஆந்திரபிரதேசம், ஹரியானா உட்பட பல மாநிலங் கள் ராஜஸ் தானைப் பின்பற்றி சட்டத் திருத்தங்களை மேற் கொண்டுள்ளன. இந்திய அரசாங் கத்தின் பரிந்துரைகளை உளப் பூர்வமாக அமலாக்கியுள்ளன. தங்கள் மாநில சட்ட மன்றங்களில் அவைகளை நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவரின் ஒப்புதலுக் காக அனுப்பியுள்ளன.இமாச்சல் பிரதேசம், உ.பி. உட்பட பல மாநில அரசுகள் சட்டங்களை திருத்த முடிவு செய்துள்ளன.

மத்திய அரசின் சட்டத் திருத்தங்கள்

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் வெளிநாட்டு மூலதனங்களை ஈர்க்கவும், ‘இலகுவாக தொழில் செய்தல்’ குறியீட்டில் முன்னேறுவதற்காகவும் மத்திய பா.ஜ.க.அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது.

தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் இணையதளத்தில் தொழிலாளர் சட்டத்திருத்தங்களை மத்திய பா.ஜ.க. அரசாங்கம் வெளியிட்டது.இரண்டு சட்டங்கள்- பழகுநர்சட்டம், தொழிலாளர் சட்டம்(பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் பதிவு விலக்கு அளித்தல்) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் பழகுநர் சட்டத்தை ஏற்கனவே திருத்தியுள்ளது. இந்த சட்ட திருத்தத்தில், ‘தொழிலாளி’ என்று விளக்கம் அளிக்கையில் ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலிகள் தற்காலிக தொழிலாளர் கள் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்த சட்டத்தில் பழகுநரின் விகிதத்தை 30 சதமாக அதிகரித்துள்ளது. பழகுநர் சட்டதிருத்தத்தின் விளைவாக ஒப்பந்த தொழிலாளர்கள்/ தினக் கூலிகள்/ நிரந்தர தொழிலாளர்கள் ஆகியோருக்கு பதிலாக பழகுநர்களை உற்பத்தியில் குறைந்த செலவில் ஈடுபடுத்தி ஒட்டு மொத்த உழைப்புக் கூலியை குறைத்து இலாபத்தை அதிகரித்திட வழிவகை செய்துள்ளது. தொழிலாளர் சட்ட விதிமீறல்களுக்கான சிறைத்தண்டனை முற்றிலுமாக நீக்கப் பட்டுள்ளது. சட்ட மீறல்களுக்கான அபராதம் ரூ.500/- மட்டுமே.

மாருதி சுசுகிதொழிற்சாலையில் உற்பத்தித்துறையில் பழகுநர் / தினக் கூலிகள் மிக பரவலாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதிலிருந்து இந்த சட்டத்திருத்தத்தின் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். அனைத்து அதிகாரங்களும் மத்திய கவுன் சிலிருந்து மாநில அரசுகளின் கீழுள்ள கவுன்சிலுக்கு மாற்றப் பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்கள்(குறிப்பிட்ட நிறுவனங்கள் ஆவணங்கள்

சமர்ப்பித்தல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தலிருந்து விலக்கு)

திருத்த மசோதா-2011

இந்த சட்டத் திருத்தம் சிறு நிறுவனங்கள் வரையறைக்கான தொழிலாளர்களின் எண்ணிக்கையை 19 லிருந்து 40 ஆக அதிகரித் துள்ளது. இதன் விளைவாக இந்நிறுவனங்களுக்கு நடைமுறை களை எளிமையாக்குதல் என்ற பெயரில் ஆவணங்கள் சமர்ப்பித்தல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தலில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. தொழிற்சாலை சட்டம்,சம்பள சட்டம், குறைந்த பட்ச ஊதிய சட்டம், போனஸ் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், கட்டுமான தொழிலாளர்கள் சட்டம், சமஊதிய சட்டம், வாராந்திர விடுமுறை நாட்கள் சட்டம்,தோட்டத் தொழிலாளர் சட்டம் உட்பட16 அடிப்படையான சட்டங்களிலிருந்து இந்த நிறுவனங் களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

பெரியமூலதனங்களுடனும் அதிக வியாபாரத்துடனும்அதிக லாபமும் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் 40 க்கும் குறைவாகவே தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றன. நாட்டிலுள்ள 72 சதமான ஆலைகள் அடிப்படையான 16 தொழிலாளர் சட்டங்களை தண்டனைக்கு உள்ளாகாமலேயே மிக எளிதாக மீற முடியும்.அதன் விளைவாக தொழிலாளர்களை தீவிரமாக சுரண்டமுடியும்.
தொழிற்சாலை சட்டம்

தொழிற்சாலை சட்டத்தின் 56-வது பிரிவு திருத்தத்தின் விளைவாக, அரசு திருப்தியுற்றால் ஒரு தொழிலாளி தொழிற் சாலை வளாகத்தில் இருக்கவேண்டிய நேரம் (Spread over time) 10.5 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கலாம் தொழிற்சாலை முதன்மை ஆய்வாளர் பரிசோதித்து தகுந்த காரணங்களை எழுத்துப்பூர்வாக தெரிவிக்கவேண்டிய அவசிய மில்லை. திருத்தத்தின் காரணமாக மாநில அரசு திருப்தியுற்றால், அல்லது அரசுத்துறை அதிகாரி திருப்தியுற்றால் நேரிடையாக 12 மணிநேரமாக அதிகரிக்கலாம்.இது தொழிலாளர்களை பல மடங்கு அதிகமாக சுரண்டுவதற்கு வழி வகை செய்கிறது. எவ்விதமான வருமானமுமின்றி தொழிலாளி, தொழிற்சாலை வளாகத்தில் அதிசு நேரம் இருக்கநேரிடும். இது கூடுதல் தொந்தரவுக்கு வழிவகுக்கும்.

பிரிவு 64 மற்றும் பிரிவு65 – திருத்தங்களின் விளைவாக, காலாண்டிற்கு 50 மணிநேரம் மிகை நேரபணி என்பது நேரடியாக 100 மணிநேரமாக அதிகரிக்கப்படுகிறது. பொதுச்சேவை என்ற காரணம் காட்டி மிகைநேரபணியை 125 மணிநேரமாக தலைமை ஆய்வாளர் மூலமாக மாநில அரசு அதிகரிக்கலாம்.இந்த திருத்தம் தொழிலாளர்களை கூடுதலாக பழிவாங்குவதற்கும், தொழிலாளர்களுக்கு தொல்லை கொடுக்கப்பதற்கும் வழிவகை செய்கிறது. மிகைநேர பணி அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தை தடுக்கிறது. அதே சமயம் உற்பத்தியில் தொழிலாளர் பெறும் கூலியின் பங்கை குறைக்க முதலாளிகளுக்கு உதவும்.

66-வது பிரிவு திருத்தம் பெண் தொழிலாளர்கள் இரவுநேரப்பணியில் அமர்த்தப்படுவதை எளிதாக்குகிறது

மிகவும் பிற்போக்கான திருத்தம் என்னவெனில், தொழிற்சாலை சட்டத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை9 லிருந்து 40 ஆக. அதிகரிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது ஆகும் மூலதனத்தை ஈர்ப்பதற்காக மாநிலங்களுக்கிடையே போட்டி நடைபெற்று வரும் சூழலில் முதலாளிகளுக்கு சாதகமாக பெரும் பான்மை தொழிலாளர்களை தொழிலாளர் சட்ட வரம்பிலிருந்து வெளியேற்றுவதற்கு மாநில அரசுகள் இந்த சட்டத்திருத்ததை பயன்படுத்த வழிவகை செய்கிறது.

இந்த மாற்றங்கள் மிக கடுமையான விளைவுகளை உருவாக்கும். தொழிற்சாலைகள் வருடாந்திர ஆய்வறிக்கையின் படி(2011-12 . 2014-ல் வெளியிடப்பட்டது) மொத்தமுள்ள 1,75,710 தொழிற் சாலைகளில் 71.31 சதவீதம், அதாவது 125301 தொழிற்சாலைகள் 50 க்கும் குறைவாகவே தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றன. பெரும்பாலானவைகள் 40க்கும் குறைவாகவே பணியில் அமர்த்து கின்றன. தொழிற்சாலை சட்டத்தின் இந்த திருத்தத்தால் 36,10,056 ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட மொத்தத்தில் 1,34,29956 தொழி லாளர்கள் தொழிற்சாலை சட்ட வரம்பிலிருந்து வெளியேற்றப் படுவார்கள்.

சிறு ஆலைகள் மற்றும் பிற நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு ஒழுங்குபடுத்துதலும் பணி வரன் முறைகள் ) மசோதா 2014.

இந்த மசோதா தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்கப்படாமல் தொழிலாளர் அமைச்சக இணைய தளத்தில் வெளியிடப் பட்டது. பின்னர் மத்திய சங்கங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கக் கோரி அனுப்பப்பட்டது. முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. சிஐடியு இந்த மசோதாவை முற்றிலுமாக நிராகரித்தது.

இந்த மசோதா மிகவும் கொடூரமானது. மின்சாரத்தை பயன்படுத்தி னாலும், பயன்படுத்தாவிட்டாலும் 40 தொழிலாளர்கள் வரை பணியமர்த்தி யுள்ள நிறுவனங்கள் சிறிய நிறுவனங்கள் என அழைக்கப்படும். அந்நிறுவனங்கள் தொழிற்சாலை சட்ட வரம்பிலிருந்து வெளியேற்றப்படும். இந்த சிறிய நிறுவனங் கள் எல்லாம் 14 அடிப்படையான சட்டங்களின் வரம்பிலிருந்து வெளியேற்றப்படும்.

தொழிற்சாலை சட்டம்,தொழிற் தகராறு சட்டம்,சம்பள சட்டம், குறைந்த பட்ச ஊதிய சட்டம், போனஸ் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம்,பி.எப்.சட்டம், இஎஸ்ஐசட்டம், மகப்பேறு பலன் சட்டம்,சமானதிய சட்டம், தொழிலாளி இழப்பீடு சட்டம், மாநிலங்களிடையே இடம்பெயர்தல் சட்டம், கடைகள்* நிறுவனங்கள் சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம்,தொழில் வேலைவாய்ப்பு சட்டம் ஆகிய அடிப்படையான சட்டங்கள் மேற்கண்ட சிறு நிறுவனங்களுக்கு பொருந்தாது.அதாவது, 40 தொழிலாளர்கள் வரை பணியமர்த்தும் நிறுவனங்களில் நாட்டி லுள்ள தொழிலாளர்களில் 80 சதமானவர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் தங்களது முதலாளிகளின் கருணையில் தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும். வேலை நேரம், பணி பாதுகாப்பு. சமூக பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகள், குறைதீர்த்தல்,சம ஊதியம், மகப்பேறு பலன்கள் என அனைத்திற்கும் முதலாளிகளின் தயவில் தான் வாழ வேண்டும்.சுருக்கமாகச் சொன்னால் கொத்தடிமைத் தனத்திற்குள் தள்ளப்படுவார்கள்.

தொழிலாளர் சட்டங்களை தொகுப்பாக்கும் முயற்சி

தொழிலாளர்கள் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு அளித்து வரும் கொஞ்ச நஞ்ச குறைந்த பட்ச பாதுகாப்பையும் உடைத்தெறிய மத்திய பா.ஜ.க. அரசாங்கம் நடவடிக்கைளை வேகமாக துவங்கி விட்டது. தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்காக, குறிப்பாக, தொழிற்தகராறு சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகள் முதலாளிகளின் தூண்டுதலால் 1970- களிலிருந்தே துவங்கி முப்பதாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக் கைகள் நவீன பொருளாதார கொள்கைகளால் தீவிரமடைந் துள்ளன. எனினும் தொழிலாளர் வர்க்கத்தின், தொழிற்சங்க இயக்கத்தின் தீவிரமான எதிர்ப்பின் காரணமாக இன்று வரை அரசாங்கங்களால் வெற்றிபெற முடியவில்லை.

பா.ஜ.க.அரசாங்கம் யுக்தியை மாற்றியுள்ளது. தனித்தனியாக சட்டங்களை மாற்றுவது தொழிலாளர்களிடையே வலுவான எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று கருதி, எளிமைப்படுத்துதல் மற்றும் வரைமுறைப்படுத்துதல் என்ற போர்வையில் 44 சட்டங்களை 5 சட்டத் தொகுப்புகளாக மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊதிய சட்டத் தொகுப்பு மற்றும் தொழிலுறவு சட்டத்தொகுப்பு ஆகிய இரண்டு தொகுப்புகளை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் களின் உரிமைகளைப் பறித்து நிராயுதபாணியாக்குவதும், தங்களது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதை தடுப்பதையும் நோக்கமாககொண்டுள்ளது. தொழிலா
ளர்களை சுரண்டுவதற்கும் அவர்களது
எதிர்ப்பை முறியடிப்பதற்கும் முதலாளிகளுக்கு அதிக அதிகாரத்தை வாரி வழங்குகிறது.

தோழர் தபன்சென், MP, பொதுச்செயலாளர் CITU

தொடரும்

Leave a Reply