ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் ஊழியரை, முழு நேரப் புரட்சியாளரை தேர்வு செய்வது, அவர்களை நடைமுறை வேலைகளில் ஈடுபடுத்தி, குறைகளைக் களைந்து, மக்களின் தலைசிறந்த ஊழியர்களாக உருவாக்குவது, அவர்களை மக்கள் தலைவர்களாக்குவது என்பது கட்சியின் கடமையாகும். அதற்கு தோழர் லெனின் பின்வரும் நடைமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளார்.
ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும், அவர்களை நடைமுறையில் சோதித்துப் பார்ப்பதிலும்தான் கட்சியின் மிக முக்கிய கடமை அடங்கியுள்ளது. கட்சி வாழ்க்கைக்குத் தேவையானவர்களைத் தேர்ந்தெடுங்கள். பின்பு அவர்களது நடவடிக்கைகளை கண்காணியுங்கள். பின்பு மக்கள் அவர்களை மதிப்பிடுவார்கள்.
மகத்தான உழைக்கும் மக்களின் புரட்சிகரப் போராட்டத்திற்குத் தேவையான தலைவர்கள் – முழுநேரப் புரட்சியாளர்களைத் தயார் செய்யாமல் முதலாளிகளையும், நிலப்பிரபுக்களை வெற்றி கொள்ள முடியாது.
முழு நேர ஊழியர் என்பவர் முழு நேர எழுச்சியாளனாக, முழு நேர ஸ்தாபன அமைப்பாளனாக, முழு நேரப் பிரச்சாரகனாக இருக்க வேண்டும்.
மக்களுடன் இடையறாது தொடர்பு கொள்பவர்களாக, தன்னலமற்றுப் புரட்சிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, முழு நேர ஊழியர் இருக்க வேண்டும்.
மக்கள் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டவர்களாகவும், மக்களின் எல்லையற்ற நம்பிக்கையை பெற்றவர்களாகவும், அவர்கள் திகழ வேண்டும். முழுநேரப் புரட்சியாளர்கள் மக்கள் ஜனநாயக புரட்சிக்கு அவசியமான, உயர்ந்த, தனித்த குணங்களைப் பெற வேண்டும். மற்றவர்களுக்கும் அந்த அறிவினைப் புகட்ட வேண்டும். முன்னோடியாய் திகழ வேண்டும். வெறுமனே ஒரு அமைப்பின் பொறுப்பில் இருக்கக்கூடாது. மாறாக பொது மக்கள் மத்தியில் எப்போதும் ஜொலிக்கக்கூடிய மக்களின் மாமேதையாய் திகழ வேண்டும்.
வர்க்கங்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து அவர்களுக்கான கோரிக்கைகளை உருவாக்கிடத் தெரிய வேண்டும். பின்பு அந்தக் கோரிக்கைகளைப் பெற மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். இதில் வெறும் பொருளாதாரவாதம் மட்டும் என்ற சந்தர்ப்பவாதப் போக்குகளில் வீழ்ந்து மக்களோடு மக்களாய் கலந்து மறைந்துவிடக்கூடாது. பொருளாதாரப் போராட்டங்களை நடத்தும்போது அரசியல் போராட்டத்தையும், புரட்சிக் கல்வி புகட்டுவதையும் விட்டுவிடக்கூடாது.
வேலை நேரத்தைக் குறைத்தல், ஊதிய உயர்வு பெறுதல் போன்ற பொருளாதாரக் கோரிக்கைகளோடு மட்டும் நமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வலது திருத்தல்வாதிகளை லெனின் கண்டித்தார். தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் வாழ்வை
மேம்படுத்துவதற்கு நாம் பாடுபடவேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் நமது முக்கியக் கடமை அரசியல் புரட்சிப் போராட்டமே என்பதை மறந்துவிடக்கூடாது. தொழிலாளர்களைப் படிப்படியாகப் புரட்சிக்காரர்களாக வளர்த்து உயர்த்த வேண்டும். அவர்களை வெறும் பொருளாதார வாதத்தில் வீழ்ந்து கிடக்கும் “தொழிலாளர் மக்கள் திரள்” என்று தரம் சரியும் வகையில் செயல்படுத்தக்கூடாது.
சோதனைகளும், இன்னல்களும் வரும்போதும், துயரங்கள் மேலிடும்போதும் சித்ரவதைகளைத் தாங்கிக் கொள்ளும் மனத்திண்மை வேண்டும். தன்னலமும், பதவிமோகமும் ஒழிக்கப்பட வேண்டும். கட்சியின் நலன்களுக்குக் கேடு விளைவிக்கும் கர்வம் கூடவே கூடாது. கம்யூனிஸ்ட் மமதையை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
ஒரு ஊழியர் திட்டவட்டமான ஸ்தாபனக் கட்டுக்கோப்புக்குள் நிற்க வேண்டும். கடுமையான கட்சிக் கட்டுப்பாடும் பரஸ்பரம் உள்ளார்ந்த இணைப்பும் தேவை. கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் முழு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதன் அடிப்படையில் விமர்சனம் சுய விமர்சனம் இருத்தல் வேண்டும். கட்சியின் எல்லா நடவடிக்கைகளிலும் சுறுசுறுப்பாய் ஈடுபட வேண்டும். மக்களின் உண்மையான ஊழியனாக, உண்மையான தலைவனாக தன்னைப் பயிற்றுவித்துக் கொள்ளல் வேண்டும். போதனை மூலமாகவும், சுய பயிற்சி மூலமாகவும் பயிற்சிபெற வேண்டும். சம்பிரதாயமான, சிந்தனையற்ற, கீழ்ப்படிதல்கள் தேவையில்லை. ஆனால் கட்சி எடுக்கும் சரியான முடிவுகளுக்கு கீழ்ப்படிதல் வேண்டும்.
புரட்சிகர ஊழியரின் முதல்பெரும் கடமை புரட்சித் தத்துவ நூல்களைப் படிப்பதாகும். படிப்பதைப் படைப்பாற்றலுடன் படிக்க வேண்டும். படித்ததை ஆழ்ந்து புரிந்து உள்வாங்க வேண்டும். மனிதகுலம் உருவாக்கிய எல்லா அறிவுச் செல்வங்களையும் தனது அறிவால் எப்போது தனது நினைவாற்றலை ஒருவன் வளமூட்டிக் கொள்கிறானோ, அப்போதுதான் அவன் ஒரு கம்யூனிஸ்டாக முடியும்.
ஏனெனில் ஒரு கம்யூனிஸ்டுக்குச் சாதாரணமான எழுத்தறிவு மட்டுமே போதுமானதல்ல. ஆழ்ந்து கற்கும் அறிவு தேவை. அதேசமயம் எல்லாம் தெரிந்தவர் எனும் ஞானச் செருக்கு நல்ல பலனைத் தராது. தன்னடக்கம் தேவை. ஆனால் கம்யூனிசத்திற்கான அன்றாடப் போராட்டங்களில் தனிப்பட்ட முறையில் நேரடியாய் பங்கேற்காமல் – வேலை செய்யாமல் போராட்டங்களில் ஈடுபடாமல் – வெறும் புத்தக அறிவு என்பது உதவாக் கரையே ஆகும்.
ஒழுக்கமாய் வாழ்தல், நேர்மையாய் இருத்தல், நாணயம், நம்பிக்கையைப் பெறுதல் சமூகத்தால் போற்றுதலுக்குரிய ஒரு கம்யூனிஸ்டின் பண்புகளாகும். மார்க்சியத்தின் உயர்ந்த கோட்பாட்டு நெறிகளில் புதியதை உணரும் தன்மை தெரியவேண்டும். மார்க்சியத்திலிருந்து எவரும் பிறழுவதை சகித்துக் கொள்ளக்கூடாது. மக்களைக் கவரும் விதத்தில் திறமையுடன் உரையாற்றும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்சீய நூல்களையும், கட்சிப் பிரசுரங்களையும் விநியோகம் செய்ய வேண்டும். செய்திகளைத் திரட்டுவது, செய்திகளைப் பரப்புவது அவசியமாகும். துரோகிகளைக் கண்காணிப்பது, ரகசியங்களை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும். நிதி சேகரிக்கும் திறனின்றி ஊழியர் இருக்கக்கூடாது.
மோசமான வாழ்க்கை நிலைமைகளையும், தங்களது கடுமையான இடுப்பை முறிக்கும் வேலைகளையும் பொருட்படுத்தாமல் இடையறாது படித்துக் கொண்டேயிருக்க வேண்டும். தங்களை சுய உணர்வு மிக்க கம்யூனிஸ்டுகளாகவும், தொழிலாளி வர்க்க அறிவுஜீவிகளாகவும், மாற்றிக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் குணாம்சத்தையும், லட்சிய வேட்கையையும் வளர்த்துக் கொள்ளும் மெய்யான வீரர்களாக வளரவேண்டும். ஒவ்வொரு ஜனநாயகப் பிரச்சனையையும் எழுப்புவதிலும், வற்புறுத்துவதிலும், தீர்ப்பதிலும் அனைவரையும் முந்திக் கொண்டு நிற்க வேண்டும். இந்தக் கடமையை நடைமுறையில் மறப்பவன் கம்யூனிஸ்ட் அல்ல.
புரட்சி நடவடிக்கையில் முழு நேரமாக ஈடுபட்டுள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் போன்ற பல நூறு பேர்களை உருவாக்கிப் பயிற்றுவித்து வளர்க்க வேண்டும். அதற்கு முன்பாக முழு நேரப் புரட்சியாளர்கள் பொறுமையோடும், உறுதியோடும், தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் நமது பக்குவமின்மை காரணமாக முழுநேர ஊழியர்களின் கௌரவத்தைத் தாழ்த்திவிடக்கூடாது. தத்துவ சம்பந்தமான பிரச்சனைகளில் உரமின்மை, உறுதியின்மை, குறுகிய பார்வையுடன் தான்விரும்பும் வேலைகளை மட்டுமே செய்வது என்பது கூடாது.
மக்களைத் திரட்டித் தெருக்களில் இறக்குவது பற்றி வியட்னாமியப் புரட்சித்தலைவர் தோழர் ஹோசிமின் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கதாகும். ஒரு ஊழியர் ஒரு கிராமத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார். கொஞ்ச காலம் கழித்து அவர் திரும்பிவந்து ஹோசிமின்னிடம் “அந்த கிராமத்து மக்களைத் திரட்டுவதற்கு வழியே இல்லை. அவர்கள் அனைவரும் புத்தமதப் பழமைவாதிகள். அவர்கள் நாள் முழுக்க தியானம் செய்து கொண்டேயிருக்கிறார்கள்” என்றார். ஹோசிமின் இதைக் கேட்டுவிட்டு அந்த ஊழியரிடம் “நீ திரும்பவும் அந்த கிராமத்துக்கே போ. நீயும் அவர்களோடு தியானம் செய். அவர்களோடு நீரில் மீனைப் போல இரு. அவர்களை தியானத்திலிருந்து மீட்டுவிடலாம்” என்று கூறினார்.
சுரண்டப்பட்டுக் கிடக்கும் மக்களைத் திரட்டுவதற்கு, ஊழியர் கூறிய பிரச்சனைக்கு ஹோசிமின் கூறியது அருமையான பாடமாகும். உன்னிடமுள்ள புரட்சிகர நெருப்பை உனது கடைசி நாள் வரை கொடு என்பதே இதன் பொருளாகும்.
மக்கள் இயக்கங்களை உருவாக்கித் தலைமை தாங்குவதில் குறியாய் இருக்க வேண்டும். தனது சொந்தச் சோம்பல்களுக்கு மக்களின் தன்னியல்புத் தன்மையைச் சாக்காகச் சொல்லக்கூடாது. மக்களின் தலைவராக இருப்பதைவிட ஒரு வெகுஜன அமைப்பின் தலைவர்போல மட்டும் தான் என்று தோற்றமளிக்கக்கூடாது. நமது எதிரிகளும் கூட மதிக்கத்தக்க, விரிவான, தைரியமான திட்டத்தை உருவாக்கியளிக்கத் திறனின்மை – தானே விரும்பி ஏற்றுள்ள புரட்சித் தொழிலில் – தானே தொழிலாக ஏற்றுக் கொண்டுள்ள கலையில் அரசியலிலும், அரசு எந்திரத்தை எதிர்த்துப் போராடும் கலையில் அனுபவமின்மையும், நயமின்மையும் கூடவே கூடாது. இவர்கள் புரட்சியாளர்கள் அல்ல. படுமோசமான கற்றுக்குட்டிகளே!
நமது பணி மிக விரிவான, முழுதளாவிய பணியாகும். ஆனால் கற்றுக் குட்டிகளின் பணியானது புரட்சித் தொழிலுக்கே அவமானத்தை உண்டாக்குகிறது. ஒரு புரட்சியாளன் தனது புரட்சித் தொழிலைக் கற்றுக் குட்டியின் தரத்துக்குக் கீழிறக்கி விடாமல் ஒரு கற்றுக் குட்டியின் தரத்தைப் புரட்சியாளனின் தரத்திற்கு உயர்த்துவதில் கவனமாக இருத்தல் வேண்டும். இவ்வாறு செயலாற்றத் தகுதியுள்ள புரட்சிகர சக்திகளான முழுநேர ஊழியர்கள் நம்மிடம் போதுமான அளவு இல்லாதிருப்பது வருந்தத்தக்கது ஆகும்.
ஒரு ஊழியர் பலவிதமான திறமைகளைக் கொண்டிருத்தல் அவசியமாகும். ஸ்தாபன அமைப்பாளன், ஈடு இணையற்ற கிளர்ச்சியாளன், வெகுஜனத் தலைவன், வேலைகளுக்குத் திட்டமிட்டுத் தருகிறவன், வேலைகளைத் திட்டமிட்டுச் செய்கிறவனாக இருக்க வேண்டும். கட்சி முடிவுகளை அமல்படுத்துவது, கண்காணிப்பது, அடுத்த கட்டத்தை நோக்கி நகருவது, தாவுவது வேண்டும்.
மக்களுடன் அதிக அளவில் தொடர்பு கொண்டு அவர்கள் மத்தியில் நல்ல பெயருடன் விளங்கும் புரட்சியாளர்களை உடனே கமிட்டிக்குக் கொண்டு வரவேண்டும். அனுபவக் குறைவான இளைஞர்களை அதிகமான நடைமுறை ரீதியிலான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களைச் சும்மா இருக்க விடக்கூடாது. ஆழ்ந்த நடைமுறை ரீதியான காரியங்களுக்கு முழுமையான தயாரிப்பும், பயிற்சியும் அவசியம், ஆனால் ஆரம்பத் தோழர்களுக்கு வேலை கண்டுபிடிப்பது எளிது. இதில் வேலை செய்பவர்கள் வெட்டிப் பேச்சாளர்களைப் பிரித்துப் பார்க்காவிடில் தீமை விளையும்.
ஒவ்வொரு ஊழியரும் கட்சிக்குப் பொறுப்பானவர். கட்சியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பொறுப்பானதாகும். கட்சி வளர்ச்சி, அரசியல் புரட்சியின் மீது அக்கறை இவற்றைப் பின்தள்ளிவிட்டு தன்னலம், பொறாமை, கருத்து வேற்றுமைகள், குழுவாதம், கோஷ்டிப் பிளவுகள் ஆகியவற்றை தீவிர கண்காணிப்புக்கும், உடனடியாகக் களைவதற்கும் தயாராயிருக்க வேண்டும்.
பழைய தோழர்கள் புதிய தோழர்களிடம் இறக்கிவிடும சரக்கு பற்றி உஷார் தன்மை வேண்டும். அதில் எச்சரிக்கை உணர்வோடு கற்றுக் கொள்ளப்பட வேண்டியவை- நிராகரித்து தூக்கி எறியப்பட வேண்டியவை எனப் பிரித்துப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். தோழர்களின் தனிப்பட்ட சிறப்பியல்களையும், அவர்களது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களது வெற்றிகளையும் தோல்விகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஊழியர்களின் தகுதிக்கேற்ப கமிட்டிப் பொறுப்புகளுக்கு அவர்களை உயர்த்த வேண்டும். “நிறைய வெளிச்சம் பரவட்டும். நமக்கு மிகப்பெரிய இசை நிகழ்ச்சி தேவை. அதற்கு இசை கருவிகளை இயக்கும் பணியைப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஒருவருக்கு உணர்ச்சிபூர்வமான வயலின், மற்றொருவருக்கு ட்ரம், மூன்றாமவருக்கு இயக்குநருக்கான குச்சியைத் தர வேண்டும். இந்த வேலைப் பிரிவினைக்கான அனுபவத்தை நாம் பெற வேண்டும். அசைவின்மை, பதவிகளை வழிபடுதல் ஆகியவற்றின் எல்லாப் பழைய பழக்க வழக்கங்களையும் தூக்கி எறிய வேண்டும்.
இளைஞர்களையும், மாணவர்களையும் அஞ்சாது கமிட்டிகளில் சேருங்கள். தவறுகள் ஏற்பட்டால் ஒன்றும் மோசம் போய்விடாது. அவர்களது அனுபவமின்மை, தயாரிப்பின்மை, வளர்ச்சியின்மை குறித்து கவலைப்படாதீர்கள். அவர்கள் இளந்தளிர்களாய் இருப்பது கண்டு விம்ம வேண்டாம். அவர்கள் வந்து வேலைகளில் ஈடுபடட்டும். தவறுகளை நாம் நாசூக்காய் திருத்திவிடலாம்.
அறிவுத்துறையினரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் முடிந்த அளவு அவர்களது அறிவுத் திறனுக்கேற்ப செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்கள் மத்தியில் ஏராளமான தனி ஆற்றல் படைத்த அமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கேவலமாக அடக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்களைக் கட்சிக்குள் கொண்டு வந்து, அவர்களது ஆற்றலைப் பயன்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். மக்களைத் திரட்டிப் போராடுவதற்குக் கிடைக்கும் சிறிய சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தும் அணுகுமுறை அனைவருக்கும் வரவேண்டும்.
எந்த விசயத்தையும், இயக்கத்தையும் மிகைப்படுத்தலும், சிறுமைப்படுத்தலும் கூடாது. டாம்பீகமும், இழிநிலையும் – பவிசும், பஞ்சப் பாட்டும் கூடவே கூடாது. ஒடுக்கப்பட்ட மக்கள் திரளிலிருந்து ஊழியர்களைத் தேர்வு செய்து கொண்டு வருவதில் தனித்த அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் மிகவும் அவசியமாகும். தாழ்வு மனப்பான்மையும் உயர்வு மனப்பான்மையும் வரவே கூடாது. ஒளிந்து மறையும் குணமும், உறுதியற்ற நிலையும் கூடாது. போராடுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வதற்கும் போராட வேண்டும். நமது கட்சி எதற்கும் தயாரானதாகும். எதற்கும் தயாரானவர்களாய் நாம் திகழ வேண்டும். -எஸ். ஏ. பெருமாள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > சிறப்புக் கட்டுரைகள் > ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்
ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்
posted on
You Might Also Like
ஜூலியஸ் பூசிக்
December 27, 2024
செங்கொடியே எம் கொடியே – பாடல்கள்
December 12, 2024
அன்னியமாதல்
October 20, 2024
கீழூர் வாக்கெடுப்பு
October 18, 2024