மக்களவைக்கான இறுதிக்கட்டத் தேர்தல் வரும் மே 12உடன் முடிவடையக் கூடிய நிலையில் இவற்றுக்காக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் சில சங்கடமான சங்கதிகளையும் முன்கொணர்ந்திருக்கிறது. முதலாவதாக, பாஜக/ஆர்எஸ்எஸ் கட்ட விழ்த்துவிட்ட மதவெறிப் பிரச்சாரம், குறிப் பாக உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் இவைமேற்கொண்ட பிரச்சாரம், மதவெறி வெப்பத்தை உச்சத்திற்குக் கொண்டு சென் றுள்ளது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வெடிகுண்டு விபத்துக்கள் சம்பந்தமாக இந்துத்துவா தீவிரவாதிகளுடன் சம்பந்தப்பட்டதாக விசாரிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவரான இந்த்ரேஷ் குமார், சமீபத்தில் ஒரு நேர்காணலில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட் பாளர்களுக்காக ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது இவர்கள் வெளிப்படை யாகவே சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் நல்ல அரசாங்கம் ஆகியவை குறித்துத்தான் நரேந்திர மோடியின் தேர்தல் மேடை அமைந் திருப்பதாக கார்ப்பரேட் ஊடகங்கள் என்னதான் பூசி மெழுகினாலும், மோடி பேசும் போது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான கண்ணோட்டத்துடன்தான் பிரச்சனைகள் குறித்துப் பேசிக் கொண் டிருந்தார். பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் மோடி, ஐ.மு.கூ. அரசாங்கத்தின் “இளஞ் சிவப்பு புரட்சி’’ குறித்து பேசினார். நாட்டில் ஐ.மு.கூ. ஆட்சியின்போது மேற் கொள்ளப்பட்ட எருமை இறைச்சி ஏற்றுமதி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்லப் பிராணியான பசுவைக் கொன்று அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதுபோல், சித்தரிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் மோடி பிரச்சாரம் மேற்கொள்கையில் தன்னுடைய அர சியல் வெற்றியைத் சிவபெருமானும் ஸ்ரீராமனும் தூக்கிப்பிடித்திட வேண்டும் என்றுகடவுள்களிடம் வேண்டிக் கொண்டிருக் கின்றார். மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமி லும் உரையாற்றுகையில் மோடி, வங்க தேசத்திலிருந்து வந்தவர்களை தாக்கிப் பேசினார். அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, வங்க தேசத்திற்குத் திரும்ப தயாராகிக் கொள்ள வேண்டும் என்றும் மிரட்டினார்.
வங்க முஸ்லிம்கள்
வங்க மொழி பேசும் முஸ்லிம்களை “ஊடுருவியர்கள்’’ என்று சித்தரித்த இத்தகைய பிரச்சாரத்தின் விளைவுகள் ஏற்கனவே அஸ்ஸாமில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. போடோ தீவிரவாதிகளின் தாக்குதலில் 31 பேர் படுகொலை செய் யப்பட்டார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் பெண்களும் குழந்தைகளுமாவர். அனைவருமே வங்கமொழி பேசும் முஸ் லிம்கள். போடோ எல்லை மாவட்டப் பகுதியில் ஏப்ரல் 24ல் தேர்தல் நடந்த சமயத்தில்தான் இது நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில்தான் இன சுத்திகரிப்பு என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். அந்த சமயத்திலும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம், வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் என்கிற தன்னுடைய வெறிபிடித்த மதவெறிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது.
இவ்வாறு நடைபெற்ற கொலைகளுக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போது, அக்கிளர்ச்சிகளுக்கு எதிராக விசுவ இந்து பரிசத்தும், பஜ்ரங் தளமும் 2012 ஆகஸ்ட்டில் மாநிலத்தில் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இப்போது மீண்டும் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் வங்கமொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக போடோ தீவிரவாதிகள் தாக்குதல் கொடுக்கக் காரணமாய் அமைந்தது.நாட்டில் தற்போது நிலவும் மத நல் லிணக்கத்திற்கும் மக்களின் ஒற்றுமைக்கும் மத்தியில் பாஜக தலைமையிலான பரிவாரம் அதிகாரத்திற்கு வருமானால் என்ன நடக் கும் என்பதற்கு அஸ்ஸாம் கொலைகள் ஒரு பயங்கரமான அச்சுறுத்தலாக அமைந் துள்ளது.
பாசிஸ்ட் தாக்குதல்
மற்றொரு முக்கியமான நிகழ்ச்சிப்போக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிக் கட்சிகளையும் நசுக்குவதற்காக மேற்குவங்கத்தில் தேர்தல்களில் மோசடிவேலைகளில் இறங்கியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாசிஸ்ட் முயற்சி களாகும். ஏப்ரல் 30 அன்று மூன்றாம் கட்டத்தேர்தலில் அம்மாநிலத்தில் நடைபெற்ற ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கானத் தேர்தலிலும் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப் பட்டமை, வாக்காளர்களுக்கு எதிரான மிரட்டல் மற்றும் வன்முறை நிகழ்வுகள் மிகவும் விரிவான அளவில் நடைபெற்றதைப் பார்த்தோம். 1300க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மிகவும் அராஜகமான முறையில், அனைவருக்கும் நன்கு தெரியும்படியே தேர்தல் அதிகாரிகளை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் வாக்குகளைப் போட்டுள்ளனர்.
வங்கத்திலிருந்து வெளி வரும் தொலைக்காட்சி ஊடகங்களும் செய்திஊடகங்களும் இவர்களின் அராஜக நடவடிக்கைகளில் பலவற்றைப் படம் பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வாக் காளர்கள் திரிணாமுல் குண்டர்களின் ரவுடித்தனத்தை எதிர்த்துநின்று முறியடித்தபின் தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளார்கள். இவ்வாறு தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில் வாக்களித்தமைக்காக இவர்களில் பலர் தாக்குதல் களுக்கு உள்ளாகியுள்ளனர்.தங்களுடைய ஆதிக்கத்தை மேற்கு வங்கத்தில் எப்படியும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறி திரிணாமுல் காங்கிரசுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் இத்தகைய இழிவு நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபடும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.
ஆனால் மிகவும் அதிர்ச்சி தந்த விஷயம் என்னவெனில் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட அதிகாரிகளில் பலரே இத்தகு கொடு மைகளுக்கு உடந்தையாக இருந்ததேயாகும். தேர்தல் ஆணையத்தால் அமர்த்தப்பட்ட சிறப்புப் பார்வையாளர் இவ்வாறு ஊடகங் கள் தாக்கல் செய்த சாட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தேர்தல் நியாய மாக நடந்ததாகவும், தாக்கல் செய்த முறை யீடுகளுக்கு அடிப்படை எதுவுமில்லை என்றும் கூறியிருக்கிறார். கணிசமான அளவில் வாக்குச்சாவடிகளில் மோசடி நடைபெற்றிருந்தும் அவற்றில் தலையிட்டு, அவற் றைச் சரிசெய்திட இயலாத நிலையில் தேர்தல் ஆணையம் இருப்பது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும், வருந் தத்தக்கதாகவும் உள்ளது. இவ்வாறான தேர்தல் ஆணையத்தின் செயலானது, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்கு மிகவும் ஆணிவேராக இருக்கக்கூடிய தேர்தல் ஆணை யத்தின் மீதான நம்பகத்தன்மையையும், நேர்மையையுமே பாதிக்கும்.
மேற்குவங்க மக்கள் தங்களின் உரிமைகளை நிலைநிறுத்தி, திரிணா முல் காங்கிரஸ் குண்டர்களின் அச்சுறுத்தல் களுக்கும், குண்டாயிசத்திற்கும் அடுத்து நடக்கும் இரு கட்டத் தேர்தல்களின்போதும் (மேற்கு வங்கத்தில் அதிகமான இடங்களில் கடைசி இரு கட்டங்களில்தான் தேர்தல் கள் நடக்கின்றன) தக்க பதிலடி கொடுப் பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் மக்களுடன் இணைந்து நின்று ஜனநாயகத்தையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாத்திட உறுதியாகப் போராடும். இத்தேர்தலின் மூலம் இடது முன்னணி மீண்டும் வலுவடைந்தால், அது திரிணாமுல் காங்கிரசின் ரவுடித்தனமான ஆட்சியால் நாளுக்கு நாள் அதிகமான அளவில் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் மக்கள் அதிலிருந்து விடுபடக்கூடிய அளவில் மீண்டும் தங்கள் வெகுஜனப் போராட்டங்களை நடத்துவார்கள் என்பது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு மிக நன்கு தெரியும்.
எனவேதான், அவை இடது முன்னணியை நசுக்கிட வேண்டுமெனத் துடிக்கின்றன. தற்சமயம், பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் ஒருவர்மீது ஒருவர் பொதுக்கூட்ட மேடைகளில் வார்த்தைகளால் ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் ஆதரவுத் தளத்திற்கு முட்டுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வகுப்புவாதத் தலைவர்களை ஊட்டி வளர்த்து மேற்குவங்க மண்ணில் வகுப்புவாத அரசியலை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. பாஜக, மதவெறி போட்டி அரசியலின் மறுபக்கமாகத் திகழ்கிறது.
அது, மம்தா பானர்ஜியையும், திரிணாமுல் காங்கிரசையும் சிறுபான்மை இனத்தினருக்குத் துதி பாடுவதாக முத்திரை குத்துகிறது. இவ்வாறு விமர்சனம் செய்யும் அதே சமயத்தில் மம்தா பானர்ஜியிடம் இச்சகம் பேசவும் அது தயங்கவில்லை. நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் அணுகுமுறையும் பேச்சுக்களும் இதை நன்கு புலப்படுத்திடும். பாஜகவின் முன்னால் கூட்டணி சகாவான திரிணாமுல் காங்கிரசுக்கு அது தெரிவித்திடும் செய்தி இதுதான்: “தேர்தலுக்குப்பின் எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்.’’ மக்கள் தங்கள் இரு கைகளிலும் ரசகுல்லாவை வைத்துக்கொள்ள முடியும் என்று நரேந்திர மோடி பேசியிருப்பதன் பொருள் இதுதான்.
இவ்வாறு, நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதி ரான போராட்டம் என்பதும், மேற்கு வங்கத்தில் இடது முன்னணியும் ஜனநாயக சக்திகளும் மேற்கொண்டுள்ள போராட்ட மும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை களாகும். தேசிய அளவில் பாஜகவைத் தோற்கடிப்பதும், மேற்கு வங்கத்தில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த கம்யூனிச விரோத பிற்போக்கு சக்தியான திரிணாமுல் காங்கிரசைத் தோற்கடிப்பதும் இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகும்.
-தமிழில்: ச.வீரமணி