1892இல் நூறு ஆண்டுகளுக்கு முன், கேரளத்தை மூடப்பழக்கங்களும் . சமூகக் கொடுமைகளும் தீண்டாமை இருளும் சூழ்ந்திருந்தன. திருவனந்தபுரம் வந்த சுவாமி விவேகானந்தர், கேரளத்தை மனநோய் பிடித்தவர்களின் புகலிடம் எனவும், பைத்தியங்களின் குடியிருப்பு எனவும் சாடினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கேரளத்தின் பகுதிகள் தீண்டாமை, சாதிக் கொடுமைகளால் நிறைந்திருந்தன. இந்த அநீதிகளைத் தாங்க முடியாது அடித்தள மக்கள் மதமாற்றத்தைப் புகலிடமாகக் கொண்டனர்.
இத்தகைய கொடுமைகளுக்கு இடையே சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள் கேரளத்தில் தோன்றின. நாராயண குரு போன்ற மகான்கள் சமயத்தின் வழியாகச் சமூக விடுதலையைத் தேடியபோது, உரிமைப் போராட்டத்தின் வழியாகச் சமூக விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் அய்யன்காளி கேரளத்தின் புகழ்மிக்க சமூகப் போராளியான அய்யன்காளி நவீன கேரளத்தின் முதன்மையான சிற்பிகளில் ஒருவர். மனித வளர்ச்சிக் குறியீட்டிலும், நீடித்த வளர்ச்சிக் குறியீட்டிலும் இந்திய மாநிலங்களின் தரவரிசையில் கேரள மாநிலம் இன்று முன்னணியில் இருப்பதற்கு அடித்தளமிட்டவர்களில் அய்யன்காளியும் ஒருவர்.
அய்யன்காளியின் போர்க் குரல்: 1863 ஆகஸ்ட் 28 அன்று வெங்கனூர் என்னும் ஊரில் புலையர் குடும்பத்தில் பிறந்த அய்யன்காளி, ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும் போர்க் குரல் கொடுக்கும் சமூகப் போராளியாக உருவெடுத்தார். ‘அநீதிக்கு இடம் கொடாதே, அநீதிக்கு அடிபணியாதே‘ என்பது அவரின் புகழ்மிக்க முழக்கமாக இருந்தது. அநீதிக்கு எதிராக இடைவிடாது தொடர்ந்து செயல்பட வேண்டும். ‘பேச்சல்ல… செயல்‘ என்பதே அவரின் செய்தி. ‘சாதி உயர்வினை எப்போதும் ஏற்காதே, உனது சமூகத்தின் சுயமரியாதையை எப்போதும் விட்டுக்கொடுக்காதே’ என வலியுறுத்தினார். ‘அஞ்சாதே, தீரமுடன் போராடு‘ என்னும் அவரின் போர்க் குரல், அடிமைப்பட்டுக் கிடந்த புலையர்களின் மனத்தில் ஆழமாகப் புகுந்தது.
1889 முதல் அய்யன் காளி பொதுவழி உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தெருக்களில் மணிச்சத்தத்துடன் மாட்டுவண்டியில் பயணம் செய்தார். பலமுறை சாதிவெறியர்களால் தாக்கப்பட்டபோதும் அவர் பின்வாங்கியதில்லை. 1912 இல் பட்டியல் வகுப்பு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நெடுமங்காடு சந்தையில் அய்யன்காளி நுழைந்தார். அதன் பிறகு அனைவரும் சந்தையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
1904ல் பட்டியல் வகுப்பு மக்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை வெங்ஙானூரில் ஆரம்பித்தார். 1904ல் புலையர்களுக்கு அடிப்படைக்கூலி நிச்சயிக்கப்படுவதற்காக திருவிதாங்கூர் முழுக்க ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தை அய்யன்காளி ஆரம்பித்தார். 1905ல் இந்தபோராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. 1905ல் அய்யன்காளி சதானந்த சாமிகளின் உதவியுடன் சாதுஜன பரிபாலன சங்கம் என்ற பேரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் தன் மக்களுக்கான கல்வி முயற்சிகளை ஒருங்கிணைத்தார். அரசுப்பணிகளில் புலையர்களுக்கான ஒதுக்கீடுக்காக 1916ல் அய்யன்காளி குரலெழுப்பினார். 1916ல்இதற்காக சாது ஜன பரிபாலினி என்ற இதழை வெளியிட ஆரம்பித்தார். 1924ல் நாராயணகுருவின் இயக்கமும் காங்கிரஸும் இணைந்து டி.கெ.மாதவன் தலைமையில் நிகழ்த்தப்பட்ட வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அய்யன்காளி முக்கியமான பங்கு வகித்தார். வைக்கம் போராட்டத்தின் இறுதிவெற்றியாக 1936ல் ஆலயப்பிரவேச சட்டம் அமலானபோது வெற்றிவிழாவில் காந்தியுடன் அய்யன்காளியும் கலந்துகொண்டார். அய்யன்காளி 1940ல் புலையர் மகாசபை என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார்.
சமூகக் கொடுமைகளை வேருடன் களையும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்திட வேண்டும். போராட்ட உணர்வினை இளைஞர்களின் ஆழ்மனதில் புகுத்திட வேண்டும் என அவர் அரும்பாடுபட்டார். மேலாடை அணியத் தடை இருந்த பகுதிகளில் தலைப்பாகையுடன் மிக உயர்ந்த ஆடை அணிந்து செல்வது அவரது வழக்கம்.
அரலுமூடு என்ற இடத்தில் புலையர் இனப் பெண் ஒருவர் மேலாடை அணிந்ததற்காகத் தாக்கப்பட்டதை அறிந்த அய்யன்காளி, அங்குள்ள புலையர் இனப்பெண்கள் அனைவரையும் ஒரு சேர மேலாடைகள் அணியச் செய்தார். தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ என்ற அமைப்பினை உருவாக்கினார். சட்டப் போராட்டத்தில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அதே நேரம், அநீதிகளை முடிவில்லாது பொறுத்துக்கொள்ள அவர் தயாராக இல்லை. “அணிதிரண்டுப் போராடுவோம்” என்ற அவரது போராட்ட உத்தி பெரும் வெற்றிகளை மக்களுக்குப் பெற்றுத் தந்தது. ஏழை எளியவர்கள் தாக்கப்பட்டால் அவர்களைப் பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட ‘அய்யன்காளிப் படை’ என்னும் கெரில்லா அணி உருவானது.
கடும் போர்க் குணத்துடன் உரிமைகளுக்காகப் போராடினாலும், வெறுப்பு அரசியலை அய்யன்காளி தூண்டியதில்லை. எல்லாச் சமூகங்களும் சரிசமமான உரிமைகளைப் பெற வேண்டும் என நம்பினார். சமயத்தின் மூடப்பழக்கங்களையும் சமயத்தினால் வந்த சமூக அநீதிகளையும் அவர் எதிர்த்தாலும் சமய நம்பிக்கைகளை அவர் எப்போதும் தாக்கியதில்லை. மலையாளி மெம்மோரியல் அளித்த கோரிக்கையின்படி திருவிதாங்கூர் சட்ட சபையான ஸ்ரீமூலம் பிரஜா சபையில் ஈழவர், புலையர் போன்றோருக்கு இடமளிக்கப்பட்டது. 1911 டிசம்பர் ஐந்தாம் தேதி அய்யன்காளி பிரஜாசபையில் உறுப்பினராக ஆனார். 1941ல் இறப்பது வரை அங்கே அவர் பணியாற்றினார். தனது மக்களுக்குக் கல்வி, நில உரிமை, இடஒதுக்கீடு ஆகியவை அவரின் முக்கியமான கோரிக்கைகளாக இருந்தன.
அய்யன்காளியும் சந்திக்க நேர்ந்தபோது, காந்தி தான் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அய்யன்காளியைக் கேட்டுக்கொண்டார். அய்யன்காளி அதில் ஆர்வம் காட்டவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேசம் முக்கியமானதல்ல. பள்ளிகளுக்குள் பிரவேசமே முக்கியம் என்றார். “உங்களுக்கு என்னதான் வேண்டும்?” என காந்தி கேட்டபோது, “நான் இறப்பதற்கு முன்னர் எனது சமூகத்தில் பத்து பட்டதாரிகளாவது உருவாக வேண்டும் என்பதே என் ஆசை” என்று அய்யன்காளி பதிலளித்தார்.
சமூக மாற்றத்திற்கான அடிப்படை, ஒடுக்கப்பட்ட மக்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களை உரிமைக்கான போராட்டத்திற்குத் தகுதிப்படுத்துவது என்னும் புள்ளியில் காந்தியும் அய்யன்காளியும் இணைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதியாகவும், மிகுந்த வலிமையுடனும், வன்முறையற்ற சட்டபூர்வமான வழிகளில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் திறனை அய்யன்காளி தந்தார். தனது சமூக மக்கள், அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற வேண்டும் எனப் போராடிய அதே வேளையில், மாற்றுச் சமூகத்தினரின் மீது கடுகளவும் வெறுப்பைத் தூண்டாது நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டார். எனவேதான் கேரள மக்கள் அவரை ‘மகாத்மா அய்யன்காளி என அழைக்கின்றனர்.
கேரள மாநிலம் இன்று கண்டுள்ள சமூக வளர்ச்சியில் அய்யன்காளிக்குப் பெரும் பங்குண்டு என்பதனை இப்போதுதான் நம்மால் அறிய முடிகிறது. கொடுமையான சமூகச் சூழலில் எவ்வாறு இத்தகைய மாறுதல்களைக் கொண்டுவர முடிந்தது என்பதை அய்யன்காளி குறித்த மீனா கந்தசாமியின் நூல் வெளியான பிறகே பலராலும் முழுமையாக உணர முடிந்தது. கேரளமும் தமிழ்நாடும் சமூக வளர்ச்சியில் முன்னணியில் நிற்கின்ற இத்தருணத்தில், அய்யன்காளி போன்றவர்கள் நமக்கு ஊக்கத்தைத் தருகின்றனர். திராவிட வளர்ச்சி வடிவம் தமிழ்நாட்டில் பெரும் சமூக மாறுதல்களைச் சாதித்த நிலையில், தலித்துக்கள் முழுமையான, சமமான உரிமைகளைப் பெற மேலும் பணி செய்வது அவசியம். தமிழ்நாட்டின் தலித் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தாங்கள் சந்திக்கும் தடங்கல்களை சட்டபூர்வமான வழிகளில் தீர்த்திட முடியும் என்னும் நம்பிக்கையை அய்யன்காளி தருகிறார்.