சுருக்கம் இந்திய விடுதலைப்போராட்ட வீரர், மாபெரும் தெலுங்கான ஆயுத போராட்டத்தின் தளபதி, இந்தியாவின் மிகச்சிறந்த உருது கவிஞர் கல்லூரி பேராசிரியர், உருது கவிதைகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஒன்றுப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திரமாநில அமைப்பாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்தவர். ஹைதராபாத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர், ஏற்னவே செயல்பட்டுவந்த தோழர்கள் சங்கத்தில் பங்கேற்றவர். திரைப்பட பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட மாபெரும் தலைவர்.
தோழர் மக்தூம் மொஹியுதீன், என்று அழைக்கப்படும் அபு சயீத் முகமது மக்தூம் மொஹியுதீன் குத்ரி (Makhdoom Mohiuddin, or Abu Sayeed Mohammad Makhdoom Mohiuddin Khudri), (4 பிப்ரவரி 1908 – 25 ஆகஸ்ட் 1969) ஆந்திர மாநிலம் அண்டோலில் பிறந்தவர் மக்தூம் மொகிதீன்.
இவர் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். புரட்சிகரமான உருதுக் கவிதைகளை எழுதிக் குவித்தார். இவர் ஆந்திர மாநிலத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர். இவர் தமது புரட்சிகர உருதுக் கவிதைகளுக்காக 1969ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். இவரது பல பாடல்கள் இந்தித் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியராகச் செயல்பட்ட மக்தூம் மொகிதீன் 1946-47 காலகட்டத்தில் ஆந்திராவில் நிஜாம் மன்னனை எதிர்த்து நடைபெற்ற தெலுங்கானா போரில் ஈடுபட்டார்.இந்திய ஒன்றியத்துடன் ஒன்றிணைக்க ஹைதராபாத் இளவரசரின் முடியாட்சிக்கு முடிவுகட்டியவர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 1956-59 காலகட்டத்தில் செயல்பட்ட அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.
மாக்தூம், எப்போதும் சர்வதேசவாதியாகவே இருக்க விரும்பினார் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான போரினால் (1936-39) மிகவும் வேதனையடைந்தார், உண்மையில் அவர் பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போராட ஸ்பெயினுக்குச் செல்லவும் தயாரானார். இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்த பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றும் சீனாவிற்குப் பயணம் செய்துள்ளார். உலகில் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்று சாதனை நிகழ்த்திய யூரிககாரினை மாஸ்கோவில் சந்தித்ததுடன் அவரைப் பற்றிய கவிதையையும் படைத்தவர் மக்தூம் மொகிதீன். இவர் 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் காலமானார்.
விரிவான கட்டுரை
மக்தூம் மொகிதீன் ஓர் அபூர்வ கலவை, அவர் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர், ஒரு கவிஞர், மறைமுகமாக ஒரு சினிமாக்காரர், தொழிற்சங்கவாதி, சட்டமன்ற உறுப்பினர், மலைமலையாய் எழுதிக் குவித்தவர் என இப்படி ஓர் அசாதாரணக் கலவை! சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அவருடைய ‘சமலி கே மன்டுவே டாலே’ மற்றும் ‘ஜானேவாலே சிப்பாகி சே பூச்சுஹோ’ (பிரிந்து செல்லும் வீரனிடம் கேளுங்கள்) போன்ற பாடல்கள் மிகமிகப் பிரபலமானவை. அவரால் ஒரு ரிக்க்ஷா இழுப்பவரிடம் தனது கவிதையைப் பெரும் மகிழ்ச்சியுடன் இசைக்க முடியும், அதே உற்சாகத்துடன் கவிஞர்கள் (ஷயார்ஸ்) நிறைந்த சபையிலும் கவிதையை அரங்கேற்ற முடியும்; எனவேதான் அவர் ‘புரட்சியின் கவிஞர்’ (ஷயர் இன்குலாப்) என்று அறியப்படுகிறார். அவர் தெலுங்கானா ஆயுதப் போராட்டத் தலைவர் மற்றும் தெலுங்கு பகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டிய தலைவர். அவருடைய சிலை ஹைத்தராபாத், ஹுசைன் ஸாஹர் எல்லையில் மற்ற 32பேர் சிலைகளுடன் நிற்கிறது. வெகு தொலைவுகளிலிருந்து மக்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
குடும்பப் பின்னணி
நிஜாமின் ஹைத்தராபாத் சமஸ்தான ஹைத்தராபாத் நகரிலிருந்து 60கிமீ தள்ளியுள்ள மேடக் மாவட்டம் அண்டோலியில், மத நம்பிக்கையுள்ள கீழ் நடுத்தர வர்க்க ஏழைக் குடும்பத்தில் மக்தூம் 1908ம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாள் பிறந்தார்.அவரது வாப்பா கௌஸ் மொகிதீன் தாலுக்கா சுப்பிரண்டெண்ட். மொகிதீனின் முழு பெயர் அபு சயீது மொகமது மக்தூம் மொகிதீன் குட்ரி. (குட்ரி என்ற பதம் நபி நாயகத்துடன் தொடர்புடையது). அவரது முன்னோர்கள் பரம்பரை, ஹஸ்ரத் மொகமத் அவர்களுடனே மிக நெருக்கமானது என ஒரு சிலர் உரிமை கோருகிறார்கள். நான்கு வயதிலேயே தந்தையை இழந்த மக்தூம் கடினமான வாழ்வை மேற்கொள்ள நேர்ந்தது. அவரது தாயோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்; ஆனால் துயரம் யாதெனில் நீண்ட காலத்திற்குப் பின்னரே தனது தாய் உயிருடன் இருப்பதை அறிந்தார். ஒரு குழந்தையாக அவர் கிராம மசூதி தரையைத் துடைப்பது, தொழுகை நடத்த வருபவர்களுக்குச் சேவை செய்வதை வழக்கமாகக் கொண்டார்.
மக்தூம் சங்கரேட்டியிலிருந்து மெட்ரிக் தேர்வு பெற்று பின்னர் ஹைத்தராபாத்திலிருந்து எம்ஏ முதுகலை பட்டம் பெற்றார், அந்நாட்களில் அது மிகப் பெரும் சாதனை. அவர் ஜாமியா இஸ்லாமியா கல்லூரியில் ‘ஏ –ஹாஸ்ட’லில் தங்கி இருந்தபோது ராஜ் பகதூர் கவுர் அங்கே தங்கியிருந்தார். மக்தூம் ஹைத்தராபாத் சிட்டி காலேஜில் உருது இலக்கியத் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
இளைஞர் லீக் இயக்கம்
அந்நாட்களில் ஜவகர்லால் நேரு தலைமையில் தீவிரமாகப் பரவிய இளைஞர் லீக் இயக்கம் மக்தூனிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது ஹைத்தராபாத் பல்கலைக் கழக அலுவலகமாக இருக்கும் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் இல்லத்தில் லக்னௌவிலிருந்து வந்த ஒரு குழுவினரைச் சந்திந்தார்; அங்கே அவர்கள் பல்வேறு அரசியல் மற்றும் இலக்கிய கலாச்சாரப் பிரச்சனைகளை விவாதித்தனர். இந்தக் கூட்டங்களில் டாக்டர் ஜெயசூர்யா, ஜெ வி நரசிம்ம ராவ் மற்றும் பிறர் கலந்து கொண்டனர்.
நியாஸ் ஃபடேபுரி வெளியிட்டு வந்த ‘நிகர்’ (அழகான சித்திரம்) என்ற உருது பத்திரிக்கையின் செல்வாக்கிற்கு ஆளான மக்தூம் அந்த இதழில பல கவிதைகளை எழுதினார். மக்தூம் 1933 முதலே (ஷயாரி) கவிதைகளை யாத்து இயற்றுவார். சாதாரண சாமான்ய மக்களின் வாழ்வை நெருக்கமாக அவதானித்தார்; அந்தத் திறமையில் அவரை ரஷ்ய நாவலாசிரியர் அலெக்ஸான்டர் குப்ரின் மற்றும் மாக்ஸிம் கார்க்சியுடன் ஓரளவு ஒப்பிடலாம். இன்றைய எத்தியோப்பியா நாடான அபிசீனியாவை முஸோலினி 1935ல் தாக்கினார். மக்தூம் போருக்கு எதிரான தனது முதலாவது கவிதையை எழுதினார்.
1936ல் நிறுவப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் அசோஸியேஷனில் (PWA) மக்தூம் இணைந்தார்; அவருடைய கவிதைகளும் எழுத்துக்களும் புதிய தெளிவைப் பெற்றன. இப்போது அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனிய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போன்ற ‘விடுதலைக்கான கவிதை’களை (‘ஆஸாதி இ வதன்’) இயற்றத் தொடங்கினார்.
‘காம்ரேடுகள் அசோஸியேஷ’னில் மக்தூம்
மக்தூம் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கத்தில், குறிப்பாக அனைத்து ‘ஹைத்தராபாத் மாணவர் சங்கத்துடன் (AHSU) இணைந்த, 1939ல் நிறுவப்பட்ட ‘காம்ரேடுகள் அசோஸியேஷ’னில் சேர்ந்தார். அதன் மூலம் சி ராஜேஸ்வரராவ், ராவி நாராயண் ரெட்டி மற்றும் பிரபலமான பிற கம்யூனிஸ்ட்களின் தொடர்பு கிடைத்தது. அப்போது நடைபெற்ற சமூகத்தின் பல பிரிவுகளின் இயக்கங்கள் ஆந்திர மகாசபா மூலம் ஒருங்கிணைக்கப்பட்டன.
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் புகழ்பெற்ற 1938ன் ‘வந்தே மாதரம் இயக்க’த்தைத் தொடங்கினார்கள். புகழ்பெற்ற உருது விமர்சகர் சிப்தே ஹஸன் மாணவர்களை ஒன்று திரட்டி ஹைத்தராபாத்தில் ஏஐஎஸ்எஃப் மாணவர் மன்றத்தை அமைத்தார். ‘வந்தே மாதரம் இயக்கம்’ அவ்வப்போதும் இப்போதும்கூட வகுப்பு ரீதியான வர்ணம் பூசப்படுவதற்கு ஆட்பட்டாலும், அது நிஜாமிற்கு எதிரான இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ‘வந்தே மாதரம் மாணவர்கள் அசோஸியேஷன்’ நாக்பூரில் 1939 மே – ஜூனில் அமைக்கப்பட்டது. அது விடுத்த வேலைநிறுத்த அழைப்பு ஹைத்தராபாத் மாநிலம் முழுவதும் பரவியது. உஸ்மானியா முஸ்லீம் மாணவர்கள் சையத் ஆலம் கௌந்த்பிரி தலைமையில் வந்தே மாதரம் இயக்கத்தை ஆதரித்தனர். இப்போராட்டங்களிலெல்லாம் மக்தூம் தீவிரமாகப் பங்கேற்றார்.
ராஜ் பகதூர் கௌர், மிர்ஸா ஹைதர் ஹூசைன் மற்றும் பிறரோடு மக்தூமும்கூட அதன் பிரபலமான தலைவரானார். 1940 டிசம்பர் 22ல் ஹைத்தராபாத் சுல்தான் கடைவீதியில் நடைபெற்ற காம்ரேட்கள் அசோஸியேஷன் மாநாட்டில் மக்தூம் தீவிரமாகச் செயலாற்றினார். 1940ல் ஏஐஎஸ்எஃப் மாணவர் மன்றத்தின் நாக்பூர் அமர்வில் ராஜ் பகதூர் கௌர் மற்றும் பிறரோடு மக்தூம் மொகிதீனும் பங்கேற்றார்.
1942 ஜூலை 31ல் ஹைத்தராபாத்தில் ‘ஜப்பான் எதிர்ப்பு நாள்’ அனுசரிக்கப்பட்டது. அதுபோழ்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்குக் காம்ரேடுகள் அமைப்பின் சார்பாக மக்தூம் தலைமையேற்றார். ஜம்ருத் மகால் டாக்கீஸில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மக்தூம் எழுதிய ‘ஜாங்-கே ஆஸாதி’ (விடுதலைக்கான போர்) கவிதை விநியோகிக்கப்பட்டது.
மக்தூம் இல்லத்தில் புகாரி தலைமையில் நடந்த கட்சித் தோழர்கள் கூட்டத்தில் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் தோழர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புக்களிலும்கூட பணியாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 1943 வாக்கில் மக்தூம் முழுநேர சிபிஐ கட்சி ஊழியராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு கூட்டத்தில் வைசிராய் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் பற்றி விமர்சித்ததற்காக அவர் 1943ல் கைது செய்யப்பட்டார். சிறையில் ஆர்எஸ் திவான், ஏ ஆர் தேஷ்பாண்டே, சுவாமி இராமநந்த தீர்த்தர் முதலான காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. சிறையின் நிலைமை மிகவும் மோசமாகப் பரிதாபகரமாக இருந்தது.
மக்தூம் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை
1941 ஜூன் 22ல் சோவியத் யூனியன் மீது பாசிச ஜெர்மனி நடத்திய தாக்குதல் மக்தூம் மொகிதீன் வாழ்வில் ஒரு திருப்பு முனையானது. தன்னை முழுமையாக மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்க முடிவு செய்த அவர் முழு நேர செயற்பாட்டாளர் ஆனார்.
அவர் ஏற்கனவே பத்தம் எல்லா ரெட்டி, ராவி நாராயண் ரெட்டி, ராஜ் பகதூர் கௌர் போன்ற பல கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார். இத்தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து 1939ல் ஹைத்தராபாதில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர். விரைவில் மக்தூம் சிபிஐ ஹைத்தராபாத் கட்சிச் செயலாளரானார். 1943ல் மக்தூம் ஆந்திரா மாகாணக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
தொழிற்சங்க இயக்கத்தில்
1938ல் ஹைத்தராபாத்தில் நடந்த தொழிற்சங்கவாதிகளின் மாநாடு ஒன்றில் ராஜ் பகதூர் கௌர், கேஎல் மகேந்திரா மற்றும் பிறர் கலந்து கொண்டனர். 1941ல் ஹைத்தராபாத் பாதுகாப்பு விதிகளின் கீழ் தொழிற்சங்க இயக்கங்களைத் தடை செய்ததற்கு எதிராகச் சார்மினார் ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் மக்தூம் பங்கேற்றார்; வாஸீர் சுல்தான் புகையிலை தொழிலாளர்கள் போராட்டம் மற்றும் ஆல்வின் மெட்டல் பாக்டரி, பருத்தி ஆலை தொழிலாளர்கள் சங்கம், ஷகாபாத் சிமெண்ட் தொழிலாளர்கள் சங்கம், சிங்கனேரி சுரங்கத் தொழிலாளர் சங்கம் போன்றவை தொடங்கிய இயக்கங்களிலும் பங்கேற்றார். இதன் விளைவாய் இறுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் நிறுவனத் தலைவரானார். ஆசிரியர்களின் சங்கத்திற்கும்கூட அவர் தலைவரானார்.
விரைவில் தொழிற்சங்க இயக்கத்தின் பெரும் தலைவராக உருவானார். மக்தூமும் காம்ரேடுகள் அமைப்பும் நிஜாம் அரசின் இரயில்வே, கட்டுமானம், டெக்கான் பட்டன் உற்பத்தித் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் பிற பிரிவுகளின் தொழிலாளர்களை ஒன்று திரட்டினர். முதன் முறையாக முஸ்லீம் தொழிலாளர்கள் நிஜாமின் மஞ்சள் கொடி இருக்கும் இடத்தில் செங்கொடிகளை ஏற்றினர்.
1942 நவம்பர் – டிசம்பரில் நிஜாம் அரசு இரயில்வே தொழிலாளர்கள் 45 நாட்கள் வரலாற்றுப் புகழ் வாய்ந்த வேலை நிறுத்தம் செய்தனர். இரயில்வே தொழிலாளர்கள் லீக், இரயில்வே தொழிலாளர்கள் சங்கத்துடன் சங்கமித்து இணைந்தபோது தாராளவாதத் தலைவரான அப்போராட்டத்தின் தலைவர் ஃபதேஹ் உல்லா கான் போராட்டக் களத்தில் வெளிப்பட்டார். மக்தூம், ராஜ் பகதூர் கௌர் மற்றும் மற்றவர்கள் அந்த வேலைநிறுத்ததிற்கு உதவினர். பின்னர் மக்தூம் அதன் முதன்மைத் துணை தலைவரானார். ஹைத்தராபாத் நெசவாளர்கள் மற்றும் நூல் நூற்கும் ஸ்பின்னிங் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக மக்தூமும், ராஜ் பகதூர் கௌர் தலைவராகவும் ஆனார்கள்.
ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு
எம்என் ராய் எழுத்துகள் உட்பட மார்க்ஸிய இலக்கியங்கள் ஹைத்தராபாத் மக்களை வந்தடைந்தது. இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதால் கட்சி காம்ரேட்டுகள் அமைப்பு மூலம் செயல்பட்டது. 1939 –40களில் ஹைத்தராபாத் நகரக் குழு மாகாணக் கமிட்டியின் கீழ் பணியாற்றத் தொடங்கியது.
நிஜாம் மாநில கம்யூனிஸ்ட் குழு உண்மையில் நான்கு கம்யூனிஸ்ட் குழுக்கள் ஒன்றிணைந்த பிறகு அமைக்கப்பட்டது. அவை, காம்ரேடுகள் அசோஸியேஷனில் இருந்த கம்யூனிஸ்ட் குழு, வந்தே மாதரம் குழு, ஆந்திர மகாசபாவில் இருந்த கம்யூனிஸ்ட்கள் மற்றும் மகாராஷ்ட்டிரா பரிக்க்ஷத்தைச் சேர்ந்த சோஷலிசக் கருத்துடைய தோழர்கள் ஒன்றிணைந்தது. மக்தூம் ஒருபுறம் லக்னௌ குழுவுடனும் மறுபுறம் அவுரங்காபாத் ஹபிபுதின் குழுவுடனும் தொடர்பு கொண்டார். அவர்களுக்னான சிபிஐ கட்சி பத்திரிக்கை ‘நேஷனல் ப்ரண்ட்’ இதழ்கள் அவுரங்காபாத் மூலம் கிடைத்தன. பத்தம் எல்லா ரெட்டி, ராவி நாராயண ரெட்டி, டி வெங்கடேஸ்வர ராவ், வி டி தேஷ்பாண்டே மற்றும் பிறருடன்கூட மக்தூம் மாநில மற்றும் மாகாணத் தலைவரானார்.1946 ஆகஸ்ட் 16ல் அனைத்து ஹைத்தராபாத் தொழிற்சங்க காங்கிரஸ் (AHTUC) அமைப்பை ஏஐடியுசியின் புகழ்பெற்ற தலைவர் என்எம் ஜோஷி தொடங்கி வைத்தார்.
1946 அக்டோபர் 17ல் ‘ஒடுக்குமுறை எதிர்ப்பு நாள்’ இயக்கத்திற்குச் சிபிஐ அறைகூவல் விடுத்தது. நிஜாமின் பாசிச ஒடுக்குமுறைகளின் விளைவாய் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தலைமறைவாகச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்நேரத்தில் மக்தூம் ஷாகாபாத் சிமெண்ட் தொழிலாளர்களிடையே பணியாற்றி வந்தார். அவரை ஷோலாப்பூர் செல்லும்படி கட்சி கூறியது. ஷோலாப்பூரிலிருந்து பம்பாய் சென்ற அவர் அங்கே அவரது புகழ்பெற்ற “தெலுங்கானா” கவிதையை எழுதினார். மக்தூம் மகாராஷ்ட்டிராவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். அங்கிருந்து அவர் 1948 பிப்ரவரியில் நடந்த சிபிஐ இரண்டாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள கல்கத்தா சென்றார். ரபியா பேகம் என்பவரை மக்தூம் திருமணம் செய்து கொண்டார்.
1940களில் இலக்கிய மற்றும் கலாச்சார நடவடிக்கைகள்
இத்தகைய அனைத்து அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியில் மக்தூம் தனது கலாச்சார மற்றும் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்தார். 1940கள் காலகட்டம் அவர் ஏராளமாக எழுதி, பாடல்கள் புனைந்த காலம். பல கம்யூனிஸ்ட்கள் தூக்கிலிடப்பட்ட 1943ன் கையூர் நிகழ்வுகளை அவரது எழுத்துக்கள் படம் பிடித்தன; அப்போதைய வங்காளப் பஞ்சம் மற்றும் பிற நிகழ்வுகள் குறித்தும் எழுதினார்.
மக்தூம் புகழ்பெற்ற ‘ஜான்பாஸ் இ கையூர்’ (துணிச்சலான கையூர்) கவிதையை எழுதினார். இந்த நேரத்தில்தான் ‘யஹ் ஜுங் ஹை ஜுங்கே ஆஸாதி’ (இது போர், விடுதலைக்கான போர்) என்ற புகழ்பெற்ற எழுச்சிப் பாடலை எழுதினார். 1943 மே 22 முதல் 25 வரை பம்பாயில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் நான்காவது மாநாட்டில் மக்தூம் தீவிர பங்காற்றினார். அவர் இந்திய மக்கள் நாடக மன்றம் (இப்டா)வில் முக்கிய அகில இந்தியத் தலைவரானார். பின்னர் 1943 மே மாதம் பம்பாயில் நடைபெற்ற சிபிஐ முதலாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார்.
தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்பு
1946 –50 ஆண்டுகளின் தெலுங்கானா ஆயுதப் போராட்ட முன்னணித் தலைவர்களில் மக்தூம் மொகிதீனும் ஒருவர் என்பதை ஒரு சிலரே அறிவர். பி சி ஜோஷியின் தலைமையின் கீழ் தெலுங்கானா ஆயுதப் போராட்டம் ஒரு பரந்த அடிப்படையிலான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, நிஜாம் மன்னராட்சி எதிர்ப்புப் போராட்டமாகும். உண்மையில் அப்போராட்டத்திற்கு பிசி ஜோஷிதான் பச்சைகொடி காட்டினார். காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்ட்கள் மற்றும் பிறரையும் உள்ளடக்கிய பரந்துபட்ட நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முன்னணியாக ஆந்திர மகாசபா மாறியது. 1948 முதல் 1950 வரை கட்சி பொதுச் செயலாளர் பிடிஆர் தலைமையின் கீழ் தெலுங்கானா இயக்கம் பிளவுபட்டு தனிமைப்பட்டது. பெரும் பிரிவுகள் விலகி பிரிந்து செல்ல, கம்யூனிஸ்ட் குழுக்கள் தனிமைபடுத்தப்பட்டு கிராமங்களிலிருந்து காடுகளுக்குள் பின்நோக்கிச் செல்ல வேண்டி வந்தது. இப்படி நிகழ்ந்ததற்குக் காரணம், (ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தெலுங்கானா பகுதியில் நிஜாமுக்கு எதிராக எழுந்த) தெலுங்கானா போராட்டம் நேரு அரசுக்கு எதிராகப் புரட்சி நடத்துவது என்று சொல்லப்பட்ட (குழுப் போக்கு சாகச) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டதுதான். (இதனால்) நிஜாம் படைகளுக்கு பதிலாக, மோதல் நேரடியாக இந்திய இராணுவத்துடன் என ஆகி, தோற்கடிக்கப்பட்டது.
கல்கத்தாவிலிருந்து இரகசியமாக பல இடங்களுக்கும் பயணம் செய்து மக்தூம் ஹைத்தராபாத்தை அடைந்தார். ஆந்திராவின் சிறிய பகுதியில் அவர் “பரிதலா ரிபப்ளிக்” நிறுவினார். (ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்த பரிதலா கிராமம் மற்றும் அதைச் சுற்றி இருந்த கிராமங்கள் நிஜாமின் ‘ரஜாக்கர்கள்’ படையை எதிர்த்துப் போராடி தங்களின் சொந்தக் குடியரசை இரண்டாண்டுகள் நடத்திய புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட கால வரலாற்று நிகழ்வே “பரிதலா குடியரசு” –நன்றி தகவல் தி HANS INDIA) அவரே துப்பாக்கியைத் தூக்கிப் போரிட்டார், நிஜாம் அரசு அவர் தலைக்குச் சன்மானம் அறிவிக்க 1946ல் அவர் தலைமறைவானார்.
கைது, விடுதலை மற்றும் புதிய கட்டம்
1951 மே மாதம் மக்தூம் கைது செய்யப்பட்டார். சிறையில் புகழ்பெற்ற கவிதை ‘Quaid’ (சிறைவாசம்) என்பதை எழுதினார். 1952 முதல் பொதுத் தேர்தலின்போது விடுதலையான அவருக்கு ஹைத்தராபாத் மக்கள் வரலாறு காணா வரவேற்பு அளித்தனர். சட்டமன்றத்திற்கு ஹைத்தராபாத்திலிருந்து போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். அதன் பிறகு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றார்.
உலகத் தொழிற்சங்கச் சம்மேளன (WFTU) தலைமையகமான வியன்னாவுக்கு 1953ல் அனுப்பப்பட்ட அவர் 1954ல் திரும்பினார். ஏஐடியுசி 1954 கல்கத்தா மாநாட்டில் இணைச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்தூம் (தெலுங்கானா, பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட) கொத்தகூடம் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1956ல் சிங்கனேரி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார். அதன் பிறகு அவர் டெல்லி ஏஐடியுசி தலைமையகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
1958ல் சிபிஐ தேசியக் கவுன்சிலுக்கு மக்தூம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத்திற்குத் தேர்வான அவர், சிபிஐ சட்டமன்றக் குழு தலைவரானார். ஆந்திரப் பிரதேச மேல் சபை உறுப்பினராக அவர் 1956 முதல் 1969 வரை பொறுப்பு வகித்தார். மக்தூம் ஆந்திரப் பிரதேச வீட்டு வசதி வாரியத் தலைவர், ஆனால் ஒருபோதும் அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருந்ததில்லை!
மக்தூம் பிரபலமான இலக்கிய ஆளுமை!
மக்தூம் நேரடியாகச் சினிமாவுக்கு எழுதாவிட்டாலும், அவரது பாடல்கள், கவிதைகள் சினிமாவில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் இந்தியச் சினிமா உலகில் மக்தூம் ஆழமான தடத்தை விட்டுச் சென்றுள்ளார். மேடைகள், இலக்கிய அரங்குகளுக்காகவும் அவர் ஏராளமாக எழுதியுள்ளார். அவருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்த அவருடைய கவிதைகள் தொகுப்பு ‘பைசாட் இ ராக்ஸ்’ (நாட்டிய அரங்கம்) நூலால் அவர் சிறப்பாக அறியப்படுகிறார்; அந்த உருது
கவிதைகள் தொகுப்புக்காக அவருக்கு உருது இலக்கியப் பிரிவில் 1969ல் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அந்தத் தொகுப்பில் ‘சுர்க் சவேரா’ (சிகப்பு விடியல்) என்ற அவரது முந்தைய தொகுப்பும் சேர்க்கப்பட்டது. அவர் உருது மாயகோவ்ஸ்கி என அறியப்படுகிறார். உலகில் முதன் முறையாக விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்த விண்வெளி வீரர் (காஸ்மோநாட்) யூரி காகரினை மாஸ்கோவில் சந்தித்து அவர் குறித்து ஒரு கவிதையும் எழுதியுள்ளார். அவருடைய 60வது பிறந்த நாள் விழா மிகத் தன்னெழுச்சியாக 1968ல் பரவலாகக் கொண்டாடப்பட்டது.கடுமையான மாரடைப்புக் காரணமாக டெல்லியில் 1969 ஆகஸ்ட் 25ல் காலமானார். அப்போது அவர் ஏஐடியுசி செயற்குழு கூட்டம் மற்றும் சிபிஐ தேசியக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார். மக்தூமின் நூற்றாண்டு விழா 2008ல் பரவலாகக் கொண்டாடப்பட்டது. ஹைத்தராபாத்தில் உள்ள சிபிஐ கட்சியின் மாநிலத் தலைமையகம் அவரது பெயரால் “மக்தூம் பவன்” எனப் பெயரிடப்பட்டது. ராஜ் பகதூர் கௌர் கூற்றுப்படி மக்தூம் போன்ற மனிதர்கள் ஒருபோதும் சாவதில்லை. இறப்புக்குப் பிறகு, “மக்தூம் சென்று விட்டார், கல்லறைக்கு அல்ல, ஆனால் மக்களின் இதயங்களில் நீங்கா நினைவுகளாய்!
நன்றி
1. தீக்கதிர்
2. நியூ ஏஜ் , நீலகண்டன்
Revolutionary Urdu poet Makhdoom Mohiuddin (Abu Sayeed Mohammed Makhdoom Mohiuddin Qudri) was born on February 4, 1908 in a lower middleclass family in Medak district of Telangana, Andhra Pradesh. In his twenties, Makhddom came to Hyderabad. Those were times of world fascism. He was deeply disturbed by the Italian fascist invasion of Abyssinia (current Ethiopia) and wrote his first anti-fascist poem. Makhdoom joined the Comrades’ Association in 1930’s, which became crucial in his future development. After Hitler’s invasion of the Soviet Union on June 22, 1941, Makhdoom resigned from his post as a lecturer in City College Hyderabad and became a whole timer of the Communist Party of India (CPI).Makhdoom Mohiuddin: “Gun of a revolutionary guerrilla & sitar of a musician”
Let’s walk along with life, lets march with the universe,
When we proceed, let’s take the entire humankind along
Our Magnificent Makhdoom: Urdu’s Mayakovsky
‘Carry life as you walk, and carry the firmament too
Walk so, that the entire world should choose to walk with you’