சேர்ந்திசை மேதை எம்.பி.சீனிவாசன்
கம்யூனிஸ்ட் இயக்கமும் – கலை இலக்கிய உலகமும்
“மக்கள் அனை வருக்குமே பாடத்தெரியும். ஆனால் பாட்டுத்தான் தெரியாது. ஆனால் ஆணும் பெண்ணுமாகப் பலர் சேர்ந்து பாடும் போது மக்களும் வாயசைப்பார்கள். பாடல்கள் பாடும் போது சேர்ந்திசை மக்களுக்கு உணர்வூட்டி உணர்ச்சி உண்டாகும்” என்பார் தோழர் எம்.பி.சீனிவாசன் (Manamadurai Balakrishnan Sreenivasan, 19 செப்டம்பர் 1925 – 9 மார்ச் 1988.) அவர் கர்நாடக சங்கீதத்தையும் மேற்கத்திய இசையையும் நன்கு பயின்றவர். கம்யூனிஸ்ட் கட்சிக்கே, உழைப்பாளி மக்களுக்கே தனது வாழ்வை அர்ப்பணித்தவர். எம்.பி.எஸ். மறைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனின் தம்பி மகன் எம்.ஆர்.வி.யின் தம்பி எம்.ஆர்.பாலகிருஷ்ணன். அவர் தூர கிழக்கு நாடுகளில் தூதராய் பணியாற்றியவர். இவரது மகன் சீனிவாசன் 19.9.1925ல் பிறந்தார். மாணவப் பருவத்திலேயே சென்னை மாணவர் சங்கத்திலும், தமிழக மாணவர் சம்மேளனத்திலும் தீவிரமாய் செயல்பட்டார். தேச விடுதலையும் உழைப்பாளி மக்கள் சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவதையும் லட்சியமாய் கொண்டார்.
எம்.பி.எஸ்.மாணவர் இயக்கப் பணிகளுக்காக நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளுக்குப் பயணித்தார். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் அவற்றையெல்லாம் உதறிவிட்டு பொதுவாழ்வுக்கு வந்தார். அவரைப் போன்றே அதே லட்சியத்துடன் கலைத்துறையில் பணியாற்றி வந்த சஹீதா மீது காதல் பிறந்தது. சஹீதா பிரபல காங்கிரஸ் தலைவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலுவின் மகளாவார். இந்து முஸ்லிம் வேறுபாடின்றி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒரே லட்சியத்தை நோக்கி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக வீரநடை போட்டனர். மதுரைத் தியாகி மணவாளன் எழுதிய “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழர்” என்று அவர் இசையமைத்துப் பாடிய பாடல் இன்று வரை பாடப்படுகிறது.
வங்கப் பஞ்சத்தின் போது எம்.பி.எஸ்., கார்டூனிஸ்ட் ராகி, ரமணிபாயுடன் தமிழகமெங்கும் கட்சிப் பொதுக் கூட்ட மேடைகளில் பஞ்சத்தின் கொடுமைகளை விவரித்துப் பாடினர். இப்பாடல்களைக் கேட்டு மக்கள் உளம் நெகிழ்ந்து பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர்.
வங்கம், கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பல புதிய சினிமாக்களைக் கொண்டு வந்தனர். அதேபோல் தமிழிலும் சினிமா கொண்டுவர எம்.பி.எஸ். முயற்சித்தார். அப்போது உருவான குமரி பிலிம்ஸ் எடுத்த படம்தான் ‘பாதை தெரியுது பார் ஆகும். இதன் இசை அமைப்பாளர் எம்.பி.எஸ். அன்றைய மக்களின் வளர்ச்சியற்ற தன்மையால் படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் பின்னணியில்தான் தோழர் ஜீவா 1961ல் கலை இலக்கியப் பெருமன்றத்தை துவக்கினார். எம்.பி.எஸ். அதன் மத்தியக்குழு உறுப்பினராகி இசைத் துணைக்குழுவின் கன்வீனராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ் திரையுலகில் அவர் உதாசீனப்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு கேரளம் கைகொடுத்தது. பிரபல பாடகர் கே.ஜே.ஏசுதாஸைத் திரைப்படத்தில் அறிமுகம் செய்துவைத்த பெருமை அவருக்கு உண்டு. 1972ல் சுயம்வரம் என்ற படத்திற்கு இசையமைத்தார். படம் ஜனாதிபதி பரிசு பெற்றது. சிறந்த இசையமைப்பாளர் விருதை கேரள அரசு வழங்கியது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘எலிப்பத்தாயம்’, ‘சுயம்வரம்’, சேது மாதவன் இயக்கிய ‘ஒப்போள்’ போன்ற மலையாளத் திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ திரைப்படத்தில் பிரதானப் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு அவர் இசையமைத்தார். ‘சித்திரைத் திருநாள்’ என்ற படத்தில் ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டினார். தமிழில் அவர் இசையமைத்த “தென்னங்கீற்று ஊஞ்சலிலே – தென்றலில் நீந்திடும் ஓலையிலே – சிட்டுக்குருவி பாடுது – தன் பெட்டைத் துணையைத் தேடுது சின்னச் சின்ன மூக்குத்தியாம் – சிவப்புக் கல்லு மூக்குத்தியாம். துளி துளி மழைத்துளி, சித்திரப்பூஞ்சோலையடி சிரித்தமுகம் போன்ற பாடல்களை இன்று கேட்டாலும் இனிக்கிறது. கட்சிக்கென்று கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஒரு இசைத் தட்டை உருவாக்கியது. 1964ல் எம்.பி.எஸ். இசையமைத்து வெளிவர இருந்தது. அக்காலத்தில் இசைத்தட்டு தயாரிக்கும் ஒரே நிறுவனம் மெய்யப்பச் செட்டியாருக்குச் சொந்தமான சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆகும். அவர்கள் கம்யூனிஸ்ட் வாடையே ஆகாது என்று மறுத்துவிட்டனர்.
எம்.பி.சீனிவாசனும், ஒளிப்பதிவாளர் இயக்குநர் நிமாய் கோஷும் இணைந்து திரைப்படத்தொழிலில் இருந்த அனைவரையும் ஒன்றுபடுத்தி சங்கமாக்கினர். தென்னிந்திய இயக்குநர்கள் சங்கம், இசைக்கலைஞர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர் சங்கம் போன்ற பத்து தனித்தனி சங்கங்களை உருவாக்கினர். பின்பு அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தையும் உருவாக்கினர். அதன் பின் அகில இந்திய சம்மேளனத்தையும் இருவரும் இணைந்து உருவாக்கினர்.
தமிழகத்தில் திரைப்படத்தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் நடந்தது. முதலாளிகள் தோழர் எம்.பி.எஸ்.ஐக் கொலை செய்ய முயற்சித்து தோற்றனர். பின்பு கருங்காலிகள் சங்கங்களை நிறுவினர். காலப்போக்கில் அவையனைத்தும் காணாமல் போய்விட்டன. 1976ஆம் ஆண்டு சென்னை வானொலியில் 300 பாடகர்களை வைத்து சுதந்திரத் தினத்தன்று பாரதியாரின் பாடல்களை சேர்ந்திசையாகப் பாடினார். அதைகேட்டு பாரதியின் பேத்தி லலிதா பாரதி எம்.பி.எஸ்.ஐ மிகவும் பாராட்டினார்.
மும்பையிலும் கல்கத்தாவிலும் உள்ளது போல சென்னையில் சேர்ந்திசைக் குழுவை உருவாக்கினார். களை எடுக்கும்போதும் நாற்று நடும்போதும், இழப்பிலும், பூரிதத்திலும் கூட்டாகப் பாடப்பட்டது சேர்ந்திசை. ஆனால், காலப்போக்கில் அது மெல்ல மறையத் தொடங்கியது. இசை என்பது தனிமனிதனின் (அதாவது பாணர், பாணினிகளின்) தனிச்சொத்தாக மாறியது. எம்.பி.சீனிவாசனின் பெரிய சாதனை, தனிச் சொத்தாக மாறிய இவ்விசையைப் பொதுச் சொத்தாக மாற்றி, அதன் பிறப்பிடத்துக்கே கொண்டு சேர்த்ததுதான். 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கலைஞர்களுக்கு பொள்ளாச்சியில் மூன்று நாட்கள் சேர்ந்திசைப் பயிற்சியளித்தார். பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு தனது மாணவி திருமதி ராஜேஸ்வரி மூலம் பாடல் பயிற்சியளித்தார். தன்வாழ்வின் இறுதிவரை மார்க்சியத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் நம்பிக்கை வைத்து செயலாற்றினார். சேர்ந்திசைப் பயிற்சியளிக்க லட்சத்தீவுகளுக்கு எம்பிஎஸ் சென்றிருந்தார். 9.3.1988ல் அங்கேயே காலமானார். சேர்ந்திசை இருக்கும் வரை, இசை உள்ள வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.
– எஸ்.ஏ.பெருமாள்