கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக இன்னுயிர் நீத்தும் செங்குருதி சிந்தியும் சிறைத் தண்டனை அனுபவித்தும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகத் திகழ்ந்த தோழர்களை நினைவுபடுத்திக் கொண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் அவசியம். தியாகிகள் மாரி மணவாளனும் அப்படித்தான். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக இன்னுயிர் நீத்த தீரர்கள்.தந்தை, சித்தப்பா, மாமா என தேசபக்தி மிக்கவர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த பின்னணியில் மணவாளன் பொதுவாழ்க்கைக்குத் திரும்பியது இயல்பானதாய் அமைந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டு தனியாக இந்தி மொழியைக் கற்று, இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். மணவாளன் மாணவர்களுக்கு இந்திப் பாடம் நடத்துகின்ற போதும், வெள்ளையர் கொடுமை பற்றியும், தேச விடுதலை பற்றியும் சொல்லிக் கொடுத்தார். இதை அறிந்த ஆங்கிலேய அரசு அவர் மீது வழக்குத் தொடுத்தது. காலப் போக்கில் மணவாளன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார்.
தமிழ், இந்தி, சௌராஷ்டிரா, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த மணவாளன், இயக்கப் பிரசுரங்களை விற்பது, கட்சிக்காக நிதி வசூலிப்பது, பஞ்ச நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது, பொதுக்கூட்டங்களில் தாம் எழுதிய பாடல்களைப் பாடுவது என பன்முனைப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இந்தப் பின்புலத்தில் அவர் கட்சியின் மதுரை நகரக் குழு உறுப்பினரானார். ‘புதுமைக் கலா மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கி, வங்க எழுத்தாளர் ஹரிந்திரநாத், சட்டோபாத்யாய எழுதியஒரு நாடகத்தை ‘சிறைக் காவலன் தீபம்’ என்ற தலைப்பில்தமிழாக்கம் செய்து மணவாளன், மகத்தான கலைஞனாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். மணவாளனின் இயக்கப் பணிகள் அவருக்குக் கட்சியின் மதுரை நகரச் செயலாளர் பொறுப்பைத் தேடித் தந்தது.
மணவாளன் எழுதிய ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே’ என்ற பாடலை அந்தக் காலத்தில் முணுமுணுக்காத தோழர்களே இல்லை எனலாம்.சிறுவயதிலேயே தாயை இழந்த மாரி, ஒரு முஸ்லிம் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின் ஒற்றை மாட்டுவண்டி ஓட்டுகின்ற பணி கிடைத்தது. இதன்பின் பாலகிருஷ்ணா வீவிங் மில்லில் மாரி பணியாற்றினார். இங்குதான் தொழிலாளி வர்க்கச் சிந்தனை மாரிக்கு அரும்பியது. இந்தச் சிந்தனை அவரை கம்யூனிஸ்ட் ஆக்கியது. சமத்துவ வாலிபர் சங்கத்தில் பறந்து கொண்டிருந்த செங்கொடியை காங்கிரஸ் ரவுடிகள் அறுக்க முயன்ற போதும், நீதிமன்றத்திலிருந்து வெளிவந்த தோழர் பி.ராமமூர்த்தியை நாயுடு சங்க ரவுடிகள் கொலை செய்ய முயன்றபோதும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை காங்கிரஸ்காரர்கள் தகர்க்க வந்தபோதும் அந்த ரௌடிக் கும்பலை விரட்டியடித்த சிறப்பு மாரிக்கு உண்டு. இதன் பொருட்டு அவர் பதினெட்டு மாதங்கள் சிறையில் வாழ நேர்ந்தது.மதுரை தெப்பக்குளம் அருகே ஒருநாள் தில்லைவனம், கருப்பையா ஆகியோருடன் மாரியும் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு போலீஸ் லாரி விரைந்து வந்து அவர்களை மடக்கியது. இந்தச் சூழலில் நாட்டு வெடிகுண்டை மாரி வீசினார். இதைக் கண்டு போலீசார் திகைத்தனர். அதைப் பயன்படுத்தித் தோழர்களுடன் மாரியும் தப்பிச் சென்றார். மாரியின் இதுபோன்ற தீரச் செயல்களைக் கண்டு எதிரி வர்க்கமும் காவல் துறையும் கதி கலங்கியது. தமிழ், உருது, சௌராஷ்டிரா ஆகிய மூன்று மொழிகளில் பேசவும் எழுதவும் கற்றிருந்த மாரி, இயக்கப் பணிகளில் அஞ்சா நெஞ்சனாக ஆர்ப்பரித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியைத்தடை செய்த காங்கிரஸ் அரசு, கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய காங்கிரஸ் அரசு, கம்யூனிஸ்டுகள் வாழும் பகுதிகளில் நடக்கின்ற சமூகக் கேடான செயல்களிலும் கம்யூனிஸ்டுகளை சம்பந்தப்படுத்தி மக்களிடத்தில் அசிங்கப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.1949ல் மதுரை நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளையில் மணவாளனையும் 19 தோழர்களையும் இணைத்து போலீசார் வழக்குத் தொடுத்தனர். இதன் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தோழர்களை காவல்துறை தேடி வந்தது.1949 நவம்பர் 19 இரவு..மதுரை நரிமேட்டில் ஒரு வீட்டில் மணவாளன் தலைமறைவாக இருந்தார். இயக்கப் பணிகளைப் பற்றிப் பேசுவதற்காகவும், போஸ்டர் ஒட்டுவதற்காகவும், மாரியும் பிற தோழர்களும் அந்த வீட்டில் கூடினர். வேலைப் பிரிவினை முடிந்ததும் மணவாளன், ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே!’ என்ற பாடலை மெல்லிய குரலில் பாட, அங்கிருந்த அனைத்துத் தோழர்களும் அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் ஐநூறு போலீசார் அந்த வீட்டைச் சூழ்ந்தனர். துப்பாக்கிக் கட்டையால் கதவைத் தட்டினர். கதவு திறக்கப்பட்டதும் போலீசார் உள்ளே புகுந்தனர். அனைவர் கைகளையும் துண்டுகளால் பின்னுக்கு இழுத்துக்கட்டி, துப்பாக்கிக் கட்டைகளால் அடித்தனர். போலீசுக்கு இந்த இடத்தைக் காட்டிக் கொடுத்த துரோகி, மணவாளனை அடையாளம் காட்ட, சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் மணவாளன் நெஞ்சின் இடதுபுறத்தைக் குறிவைத்துச் சுட, மணவாளன் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழங்கியபடியே மண்ணில் சரிந்தார்.
அடுத்ததாக மாரியைத் துரோகி அடையாளம் காட்ட, சப் இன்ஸ்பெக்டர் மாரியின் நெஞ்சில் குறிவைத்துச் சுட அவரும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழங்கியபடியே மண்ணில் சரிந்தார். இந்த நிகழ்வு நடந்தபோது மாரிக்குத் திருமணமே ஆகவில்லை. அவருக்கு வயது இருபத்தேழுதான்.மாரியையும் மணவாளனையும் தனித்தனி மனிதர்களாக எண்ணிப் பார்க்க விரும்பாமல் காவல்துறையினர் ஒரேநேரத்தில் ஒரே மாதிரியாக இருவரையும் சுட்டுக் கொன்றனர். அதனால்தான் ‘மாரி மணவாளன்’ என்று இருவரும் இணைத்தே உச்சரிக்கப்படுகின்றனர். இவர்களின் பெயர்களையும் தியாக வரலாறுகளையும் கம்யூனிஸ்ட் இயக்கம் காலத்துக்கும் உச்சரித்துக் கொண்டே உத்வேகமூட்டும்.