2023 ஏப்ரல் 5 அன்று நடைபெறும் தொழிலாளர்-விவசாயிகள் பேரணி என்பது கார்ப்பரேட்டு கள் மக்களைக் கசக்கிப்பிழிவதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்தின் துவக்கமாகும். உலக மூலதனத்தின் கட்டளைகளுக்குக் கட்டுடப்ப்பட்டு ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே, மாநில அளவிலும் மற்றும் அகில இந்திய அளவிலும், இடது ஜனநாயக மாற்றுக்கொள்கையைக் கட்டி எழுப்பு வதற்கான அடித்தளமாகும். சுதந்திர இந்தியாவில் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தத் தடவை தொழிலாளர்க ளும்-விவசாயிகளும் மிகப்பெரிய அளவில் அணி திரண்டு வருகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பேரணியில் முன்வைத்திடும் கோ ரிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் துல்லியமான கோரிக்கைகள் அடிப்படையில் அமைந்துள்ளவைகளாகும். சர்வதேச நிதி மூலதனத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு ஆட்சி புரிந்து வருபவர்களின் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடியிலி ருந்து மீண்டெழுந்து, சரியான பாதையில் முன்னேறு வதற்கும் இந்த தொழிலாளர்-விவசாயிகள் பேரணி, கட்டவிழ்த்துவிட்டுள்ள போராட்டங்கள் வழி வகுத்திடும்.
பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்திலேயே விவசாய நெருக்கடி தோன்ற ஆரம்பித்துவிட்டது. சுதந்தி ரத்திற்குப்பின் இந்தியாவில் ஏகாதிபத்தியத்தின் ஒத்துழைப்புடன் பெரு முதலாளி வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஒருங்கிணைப்புடன் கூடிய ஆளும் வர்க்கம் இங்கே ஆட்சி புரியத்தொடங்கியது. இந்த சக்திகள் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தன. மாறாக, நிலப்பிரபுக்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தன. இவ்வாறு, சுதந்திரத்திற்குப்பின் கடந்த 75 ஆண்டுகளில், இந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் இந்தியாவை ஒரு நவீன முன்னேறிய தொழிற்சாலைகள் நிரம்பிய சமூகமாக வளர்த்தெடுப்பதில் முட்டுக்கட்டையாக இருந்து வந்திருக்கின்றன.
தற்கொலைகளும் புலம் பெயர்தலும்
நவீன தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் அமல்படுத்தத் தொடங்கியபின் சர்வதேச நிதி மூலதனம் மற்றும் ஏகபோக மூலதனம் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தக்கூடியவைகளாக மாறின. இடுபொருட்களின் விலைகள் அதிகரித்தது காரணமாகவும் பணவீக்கமும் ஏற்பட்டுள்ளது. எனினும் விவசாயிகளால் தாங்கள் விளைவித்த விவசாயப் பொருள்களின் விலைகளை உயர்த்த முடியவில்லை. விவசாயம் செய்வது என்பது நட்டத்தை ஏற்படுத்தும் தொழிலாக மாறியுள்ளது. விவசாயக் குடும்பங்கள் கடன் வலைக்குள் தள்ளப்பட்டுள்ளன. விவசாயிகள் மத்தியில் தற்கொலைகள் மேற்கொள்வதும், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமையும் அதிகரித்துள்ளன. நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் விவசாய நெருக்கடி, விவசாயிகளை ஓட்டாண்டிகளாக மாற்றியிருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்வதைக் கைவிட்டு புலம்பெயர் தொழிலாளர்களாக மாறியிருக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை நாளும் உயர்ந்து இன்றைய தினம் 23 கோடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் உள்ள ஒரு வர்க்கமாக விளங்குகிறது.
2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் மத்தியில் நிலவிய அமைதியின்மை காரணமாக தேசிய ஜனநாயக முன்னணி படுதோல்வி அடைந்தது. வரலாற்றில் முதன்முறையாக 64 இடது மற்றும் ஜனநாயக உறுப்பி னர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார் கள். அவர்களின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 அரசாங்கம், பொது குறைந்த பட்ச திட்டத்தின் அடிப்படையில் ஆட்சி புரிந்தது. விவசாய நெருக்கடியைக் களைவதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் ஒன்றை அமைத்தது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், வன உரிமைகள் சட்டம், சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் கடன் தள்ளுபடி முதலானவற்றைச் செய்தது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைந்திட்ட ஆணையம், வேளாண் விளைபொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக ஒரு சூத்திரத்தை அளித்தது. அதாவது, உற்பத்திச் செலவினங்களுடன், ஒன்றரை மடங்கு கட்ட ணம் உயர்த்தி (C2+50%) குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனாலும் இந்தப் பரிந்துரையை ஐமுகூ-1 அரசாங்க மோ, ஐமுகூ-2 அரசாங்கமோ அமல்படுத்தவில்லை. மாறாக, வங்கிகள், இன்சூரன்ஸ் தனியார் மயம் உட்பட கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையே அது மேற்கொண்டு வந்தது.
உக்கிரமாகும் தாராளமய சீர்திருத்தம்
2014இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்துவோம் என்று கூறியும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்போம் என்று கூறி யும், விவசாயிகளையும், கிராமப்புற மக்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. ஆயினும் ஆட்சிக்கு வந்த பின் நரேந்திர மோடி அரசாங்கம் எதனையும் நிறை வேற்றவில்லை. சுதந்திரத்திற்குப் பின் வேலையின்மை என்பது உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக நவீன தாராளமயச் சீர்திருத்தங்க ளை மேலும் உக்கிரமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. இந்தக் கொள்கைகள் மேலும் விவசாயிகளின் வறிய நிலையை அதிகரித்தது. பெரிய அளவில் கிராமப்புற மக்களும் நகர்ப்புற மக்களும் புலம் பெயர்ந்துள்ளார்கள். பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் கார்ப்பரேட்மயமாக்குவதற்கு வசதி செய்து கொடுக்கும் விதத்தில் தனியார்மயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவதற்காக மக்கள் மீது மூன்று வேளாண் சட்டங்கள், நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமுமின்றி, திணிக்கப்பட்டன.
பசி, பட்டினிச் சாவுக்கு இட்டுச் செல்லும்
2014இல் உலகளாவிய வறுமைக் குறியீட்டில் 56ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2021இல் 107ஆவது இடத்திற்குச் சரிந்தது. தொழிற்சங்க உரிமைகளையும், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைப் பாதுகாப்பை மறுக்கும் விதத்தில் நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் படிப்படியாக வெட்டிக் குறைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒதுக்க வேண்டிய தொகையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் வெட்டப்பட்டிருக்கிறது. நூறு நாட்கள் வேலை என்பது, சராசரியாக 42 நாட்களாகக் குறைந்துள்ளது. ஊதியமும் அற்ப அளவிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. பணவீக்கம் மிகவும் வேகமாக அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில் அளிக்கப்படும் ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவாகும். 2023 ஜனவரி 1 முதல் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி மற்றும் கோதுமை முறையே கிலோ 2 ரூபாய் என்றும் 3 ரூபாய் என்றும் வழங்கப்பட்டு வந்தவை ரத்து செய்யப்பட்டுவிட்டன. 2023-24 பட்ஜெட் ஒதுக்கீட்டில் உணவுப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட 90 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருப்பதால், அது பசி-பட்டினிச் சாவுகளுக்கு இட்டுச்செல்லக் கூடும்.
நெடிய போராட்டங்களும் நீண்ட பயணமும்
இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் நோக்கத்தோடு தான் தொழிலாளி-விவசாயிக் கூட்டணி கிராமப்புற அளவில் தொடங்கப்பட்டிருக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்தியத் தொழிற்சங்க மையம் தனித் தனியாகவும் கூட்டாகவும் இந்தக் காலத்தில் பூமி அதிகார் அந்தோலன், அகில இந்திய விவசாயிகள் மகா கூட்டணி (AIKSCC-All India Kisan Sangharsh Samanwaya Samithi), சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற பெயர்களில் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கின்றன. மகாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகளின் நீண்ட பயணம் உலகில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரையும் உலுக்கியுள்ளது. 2018 செப்டம்பர் 5 அன்று தில்லியில் நடைபெற்ற தொழிலாளி-விவசாயி மாபெரும் பேரணி, சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரிய அணிவகுப்பாகும். இந்தப் பேரணியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதானது, தொழிலாளர்-விவசாயிகள் மத்தியில் போராட்ட உறுதியை உருக்குபோன்று பதப்படுத்தியது. தொழிற்சங்க இயக்கத்தின் ஆதரவுடன் ஒன்றுபட்ட விவசாயிகள் இயக்கம் நடத்திய மாபெரும் இயக்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து, வரலாறு படைத்தது. உலக முதலாளித்துவ அமைப்பில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, நடப்பு ஏகாதிபத்திய நவீன தாராளமய உலக ஒழுங்கைப் புரட்சிகரமான முறை யில் மாற்றியமைத்திடக்கூடிய விதத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளர்கள்-விவசாயிகள் போராட்டங்கள் உத்வேகத்துடன் நடைபெற்று வருகின்றன.
இரண்டாவது மாபெரும் பேரணி
இந்தப்பின்னணியில்தான் இந்தியாவிலும் வரும் 2023 ஏப்ரல் 5 அன்று இரண்டாவது தொழிலாளர்-விவசாயி மாபெரும் பேரணி நடைபெறுகிறது. ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்துவரும், சர்வதேச கார்ப்பரேட்டுகள்-ஏகபோக மூலதனத்தின் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றிய மைக்கப்பட வேண்டியது அவசியமாகும். விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் இவர்களின் முயற்சிகள் எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு மாற்றாக, கூட்டுறவு விவசாய முறை வளர்த்தெடுக்கப்பட்டு, விவசாய நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி காண வேண்டும். வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும். இதுபோன்ற பிரதான கோரிக்கைக ளுடன், தொழிலாளர்களுக்குக் கேடு பயக்கும் நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளும் ஒழித்துக்கட்டப் பட வேண்டும். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப் பட வேண்டும், ஓய்வூதியம், உணவுப் பாதுகாப்பு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
2021இல் கேரளாவில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றதானது, அகில இந்திய அளவில் தொழிலாளர்கள்-விவசாயிகளின் தீர்மான கரமான வெற்றியாகும். இந்தியாவிலேயே தினந்தோறும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் குறைந்த பட்ச ஊதியத்தை அளித்து வருகிறது. நெல் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அளித்து வருகிறது. ஆர்எஸ்எஸ்/ பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம், கேரள இடது முன்னணி அரசாங்கத்தை அனைத்து விதங்களிலும் முடக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் இந்த முயற்சிகளை இடது முன்னணி அரசாங்கம் முறியடித்திடும். இவ்வாறு, 2023 ஏப்ரல் 5 பேரணி இடது ஜனநாயக முன்னணியை நாடு தழுவிய அளவில் முன்னெ டுத்துச்செல்வதற்குக் கட்டியம் கூறும் விதத்தில் அமைந்திடும். இந்தப் பேரணி, நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஓர் உண்மையான அரசியல், சமூக, பொருளாதாரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் துல்லியமான அரசியல் திசை வழியை, நாட்டு மக்களுக்குக் காட்டுவதன் மூலம் உண்மையிலேயே வரலாறு படைத்திடும்.
கட்டுரையாளர் : – பி.கிருஷ்ண பிரசாத், நிதி செயலாளர்,
அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழில் : ச.வீரமணி