நம் புதுச்சேரியிலும் 1930களில் மதிய உணவு திட்டத்தில் முன்னோடியாக பிரஞ்சு ஆட்சி காலத்திலேயே இருந்து வந்தது. பின்னர் சுதந்திர இந்தியாவில் 1955 முதல் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாய்ப்பற்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து அரசு பள்ளியில் கல்வி பயில வரும் இளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவை அரசு தானே தருவதிலிருந்து பின்வாங்கி, தனியார் அமைப்புகளிடம் அரசு பணத்தியும், சமையல் கூடத்தையும் சமையல் பொருப்பையும் தருவது, சொந்த மக்களை பராமரிக்க திராணியில்லாத அரசு செய்யும் மனிதாபிமானமற்ற செயலாகத் புதுவை ஆட்சி வரலாற்றில் கருதப்படும்.
புதுவையில் அரசு புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் ஆக்ஷய பாத்ரா நிறுவனத்துடன் 12.6.2018ல் பல்வேறு எதிர்ப்புக்களை மீறி அரசு பள்ளிகளில் அறுசுவை வழங்க போவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த அமைப்பினர் உணவுத் திட்டத்தில் முட்டை வழங்கவில்லை. (தனியாக வழங்கப்பட்டு வருகிறது) இஸ்கான் அமைப்பில் சைவ உணவுக்கு மட்டுமே இடம் உண்டு. சைவ உணவிலும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் கண்டிப்பாக சேர்ப்பதில்லை. ஒப்பந்தத்தில் 6.1 ல் வெங்காயம் பூண்டு முட்டை சேர்க்கத் தேவையில்லை என்று ஒப்பந்தமாகி இருக்கிறது. தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. வெங்காயம் பூண்டின் நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது உலக அளவில் அறியப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மை. ஆனால், இஸ்கான் அமைப்பின் அட்சயப் பாத்திரம் திட்டத்தில் அவை முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன. உணவுபழக்கத்தில் இடையில் சிலவற்றை நீக்கி ஒரு அசம நிலையை உருவாக்க கூடாது.அதை மறுப்பது என்பது இந்த குழந்தைகளுடையே உடல்நலத்தில் மிகப்பெரிய கேட்டை உருவாக்கும்.
ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர் தம் உணவு பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவு பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ் நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும். மண்ணும், மண்ணில் வாழும் உயிர் வகைகளும், மண்ணில் விளையும் பயிர் வகைகளும், இவற்றின் ஊடான மனித அசைவுகளும், பன்முகத் தன்மை கொண்டவை இஞ்சி பூண்டு சீரகம் மல்லி பட்டை கிராம்பு இவை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இல்லாமல் இருக்காது.
மக்களின் மண்ணின் உணவுப் பழக்கத்தில் நுழைந்து இதை சாப்பிடக்கூடாது என தடுக்க இவர்கள் யார்? சாப்பிடுபவர்களை அவர்களின் விருப்பப்படி சாப்பிட விட்டால் போதும். அங்கும் வந்து இதைச் சாப்பிடாதே, அதைச் சாப்பிடாதே என்று கையை பிடித்துக் கொண்டிருப்பது நாகரீகமல்ல. வெங்காயம் பூண்டு சாப்பிடாதவர்கள் அதற்கு ஏற்றார்போல அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேறு வகை உணவுகளை தங்கள் உணவு பழக்கத்தில் சேர்த்திருப்பார்கள். ஆனால் பூண்டு வெங்காயத்தை நமது குழந்தைகளுக்கு பறிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும். ஏனெனில் நமது உணவில் வெங்காயம் பூண்டு என்பது தவிர்க்க முடியாதது.
ஒப்பந்தத்தம் சொல்வது என்ன ?
ஒப்பந்தத்தில் 5.1 ல் குறிப்பிட்டுள்ளபடி உணவானது சமைத்து நான்கு மணி நேரத்திற்குள்ளாக பள்ளிகளுக்கு சென்று சேர வேண்டும் என்றும் உணவின் வெப்பம் 65 டிகிரி பராமரிக்கப்பட வேண்டும் என்பதாக உள்ளது. ஆனால் பொறியல் கெட்டுப்போய் ஊசி போய் வருவது சமீபகாலங்களில் அரங்கேறி வருகிறது. இதற்கும் சூட்டினை தக்கவைக்கும் insulated பாத்திரத்தில் உணவு பள்ளிகளுக்கு வருகிறது. காரணங்களை ஆராயாமல் கடந்து விடுவது எப்படி நியாயமாகும்? இந்தத் திட்டத்தின்படி லாஸ்பேட் மத்திய சமையல் கூடமாக செயல்பட்டுவருகிறது ஒட்டுமொத்த புதுச்சேரி பள்ளிகளுக்கும் இந்த ஓரிடத்திலிருந்து உணவு செல்கிறது உணவு பயணப் படுவதையும் அதற்கும் நேரத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஒப்பந்தத்தில் 10.1 மற்றும் 10.2ல் உணவின் தரத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் தலைமை ஆசிரியரோ சோதித்துக் கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். அப்போது தான் இவ்வளவு தூரம் பயணப்படும் உணவில் கெட்டுப்போகாமல் இருக்க ஏதேனும் பொருட்கள் சேர்க்கப்படுகிறதா என்பதையும் செயற்கை நிறம் மற்றும் சுவையூட்டிகள் ஏதேனும் கலக்கப்படுகிறதா என்பதையும் நம்மால் கண்டறிய இயலும்.
இதற்கு முன்பும் இத்தனை ஆண்டுகளாக மதிய உணவு வழங்கும் மிக நீண்ட வரலாறு கொண்ட புதுவையில் வட்டத்திலும் மத்திய சமையற்கூடங்கள் வழியாக உணவு தரமானதாக வழங்கப்பட்டது . இன்சுலேட்டட் பாத்திரங்களை நாம் பயன்படுத்தவில்லை. ஆனால் உணவு கெடாமல் நம் பாரம்பரிய சமையல் முறையில் குழந்தைகளுக்கு வந்து சேர்ந்தது என்பதையும் நாம் தற்போது சூழலோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒன்பதாம் பக்கத்தில் வழங்கப்படும் உணவின் பட்டியல் நாள் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
அரிசியும் சாம்பாரும் தனித்தனியாக வழங்கப்பட வேண்டும் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் இதுவரையும் பள்ளிகளுக்கு அவ்வாறு தனித்தனியாக வரவில்லை. கலவை உணவாகவே வருகிறது. சுடுசோற்றில் குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிடும் உணவு பழக்கம் கொண்ட நம் குழந்தைகளுக்கு இவ்வாறான கலவை உணவு என்பது ஈர்ப்பை குறைக்கிறது. மேலும் உணவு பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள புளிசாதம் புலவ் போன்ற கலவை சாதங்களிலும் கலவையாக வரும் சாம்பாரிலும் சேர்க்கப்படும் மசாலாக்களின் தன்மையானது நம் வழக்கமான உணவு முறையில் தயாரிப்பது போல அல்ல. அந்த உணவு பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் தயிர் என்ற அந்த உணவை இதுவரையும் எந்த பள்ளிகளிலும் கண்ணால் கூட கண்டதில்லை இவர்கள் உணவில் சேர்க்கப்படும் அதிக மசாலாவின் தன்மையை மட்டுப்படுத்த தயிர் ஓரளவுக்கேனும் உதவும் ஆனால் அதுவும் வழங்கப்படாமல் இருப்பதனால் சில குழந்தைகளுக்கு செரிமான தொந்தரவு ஏற்படுவதாக பெற்றோர்களும் ஆங்காங்கே புகார் தெரிவித்துக் கொண்டு உள்ளனர்.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” என்பார் திருவள்ளுவர் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். எனவே பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை தவிர்து சில சூழல்கலில் வெளியில் கிடைக்கும் தரமற்ற உணவை வாங்கி சாப்பிடும் மற்றும் பட்டினியாகவே இருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோரை கட்டாயப்படுத்தி உணவு தயாரித்து கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்; ஆனால் தினக்கூலிகளாக உள்ள பெற்றோரால் அதிகாலையில் தாங்கள் தூர பணியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழலால், தங்கள் பிள்ளைகளுக்கு மதிய உணவு சமைத்துக் கொடுக்க இயலவில்லை; அதனால், வீட்டிலிருந்தும் மதிய உணவு கிடைக்காமல், பள்ளியிலும் தான் வழக்கமாக உண்ணும் உணவில்லாமல், அறைப் பட்டினி முழுபட்டினி என்று இருக்கிறார்கள். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருவதை அனுமதிக்காமல் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை உட்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள் .கட்டாயத்தின் பேரில் குழந்தைகள் உணவினை வாங்கி அதனை சரியாக சாப்பிடாமல் வீணடிக்கும் நிலையும் அதிகரித்துள்ளது .
இந்நிலை தொடருமாயின் நாளடைவில் இந்த மதிய உணவு திட்டத்தின் நோக்கமே திசைமாறும். பின்னர் இந்த திட்டத்தினை கைவிடும் நிலை ஏற்படலாம். ஏழை எளிய குழந்தைகள் உணவு பிடிக்காததன் காரணமாக தங்களுடைய பெற்றோரை வற்புறுத்தி உணவை வீட்டிலிருந்து கொண்டு வருகிறார்கள் நம் பள்ளிகளில் பெரும்பாலான குழந்தைகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப சூழலில் இருந்து வருகிறார்கள் மதிய உணவு தரமானதாக ஆரோக்கியமாகவும் பள்ளிகளில் வழங்கப்படுவது உறுதிப்படுத்தபடுத்தப்பட வேண்டும்.