மக்களுக்கு பாகுபாடில்லாமல் மிக்ஸி, கிரைண்டர்களை வழங்கவேண்டும்

பத்திரிக்கைச் செய்தி

15.12.2015

         புதுச்சேரி என்.ஆர். அரசாங்கம் மக்களிடம் வாங்கும் சக்தியை ஏற்படுத்துகிற வகையில் வேலை வாய்ப்பை அளித்திருந்தால் தங்களுக்கு தேவையான தரமான மிக்ஸி, கிரைண்டர்களை அவர்களே தேர்வு செய்து வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆனால், புதுச்சேரி என்.ஆர். அரசு வேலை வாய்ப்பினை உருவாக்கவோ, ஏழை எளிய மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்கவோ எந்த ஆக்கபூர்வமான திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

 ஆட்சி முடிய சில மாதங்களே இருக்கிற நிலையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்குவதற்கான டோக்கன்களை கடந்த மாதமே விநியோகித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை உண்டாக்கினார்கள். மக்கள் வரிப்பணத்தில் புதுச்சேரி அரசாங்கம் செயல்படுகிறது என்பதை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு எடுத்துரைக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

 23 தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அவர்களுக்கு வசதிக்கேற்ப மேற்படி பொருட்களை வழங்குவதற்கான நடைமுறைகளை பின்பற்றாமல் முதலமைச்சரின் தொகுதியில் பல்வேறு தொகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்து இதன் காரணமாக ஏற்பட்ட பதட்டத்தை உருவாக்கி காவல்துறையை ஏவிவிட்டு தடியடி நடத்தி பொதுமக்களை சிறுமைப்படுத்திய என்.ஆர். காங்கிரசின் செய்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையின் விளைவாக 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

 இத்தகைய அர்த்தமில்லாத என். ஆர். அரசாங்கத்தின் நிர்வாகத்திறமையற்ற அர்த்தமில்லாத நடவடிக்கைகளால் இத்தகைய சம்பவங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி மக்களுக்கு சிரமமில்லாமல் பொருட்களை பெற்றுக் கொள்கிற வழிமுறைகளை ஆராயாமல் பள்ளிக் கட்டிடங்களில் இத்தகைய திட்டங்களுக்கான பொருட்களை விநியோகிப்பது என்பது பொதுமக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கும் செயலாகும். எனவே, அந்தந்த தொகுதிகளில் மக்களுக்கு பாகுபாடில்லாமல் மிக்ஸி, கிரைண்டர்களை வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு கேட்டுக்கொள்கிறது.

இவண்

ஆர். இராஜாங்கம் பிரதேச செயலாளர்.

Leave a Reply