நவீன தாராளமயம், வகுப்புவாதம்

1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய இலக்கணங்கள் உண்டு.  அவையாவன: தாராளமயம், தனியார்மயம், உலகமயம். இவற்றை இணைத்து நவீனதாராளமயக் கொள்கைகள் என்றும் அல்லது சுருக்கமாக நவீனதாராளமயம் என்றும் அழைப்பது வழக்கம். நவீன தாராளமயம் என்பது இந்தக் கொள்கைகளின் தத்துவ அடிப்படையையும் குறிக்கும் சொற்றொடர் ஆகும். ஒவ்வொன்றைப் பற்றியும் சரியான புரிதல் அவசியம்.

தாராளமயமாக்கல்

முதலாளித்துவம் மேலைநாடுகளில் 17-18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்துவந்த கட்டத்தில் அதற்கு முந்தைய காலத்தில் அரசர்களிடம் சில வணிகர்கள் சிறப்புசலுகைகள் பெற்றுவந்தனர். அரசர்களும் குறுநிலமன்னர்களும் தனியார் தொழில்முனைவோர்மீதும் வணிகத்தின்மீதும் பலநிபந்தனைகளையும் வரிகளையும் விதித்துவந்தனர். இவையெல்லாம் முதலாளித்துவத்தின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன. 18ஆம்நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டிலும் வளர்ந்துவரும் முதலாளிகள்மீது அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்ற கோட்பாடு முதலாளி வர்க்கத்தின் சார்பாக ஆதாம்ஸ்மித், ரிக்கார்டோ போன்ற பிரிட்டிஷ் நாட்டு அரசியல்-பொருளாதார அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. இந்த ‘அரசுதலையீடாமை’ என்ற தத்துவம்தான் தாராளமயதத்துவம் என்று அழைக்கப்பட்டது. இதன் தத்துவஇயல் பின்புலமாக இருந்தது ‘தனிநபர்சுதந்திரம்’ என்ற கோட்பாடு. இந்த கோட்பாட்டின் உண்மையான உள்ளடக்கம் அரசுதலையீடே பொருளாதாரத்தில் இல்லை என்பது அல்ல. மாறாக, முதலாளிகளின் செயல்பாடுகள்மீது அரசு கட்டுப்பாடு கூடாது என்பதுதான். டாக்டர்அம்பேத்கர் அவர்கள், “அரசு தலையீடு இன்மைதான் ‘சுதந்திரம்’ அளிக்கும்” என்ற வாதத்தைப்பற்றி பின்வருமாறு மிகச் சரியாக குறிப்பிடுகிறார்: “ யாருக்கு இந்த சுதந்திரம்? நிலப்பிரபுவிற்கு குத்தகையை உயர்த்த சுதந்திரம். முதலாளிகளுக்கு வேலைநேரத்தை அதிகரிக்க சுதந்திரம்.தொழிலாளியின் கூலியை குறைக்க சுதந்திரம்.” ஆனால் தாராளமயம் பற்றி ஆளும் வர்க்கங்களும் அவர்கள் ஊடகங்களும் எப்படி வாதாடுகின்றன? சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதுபோல் வேடம் தரிக்கின்றன. அரசு கட்டுப்பாடுகள் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிறுதொழில் முனைவோரை சிறைப்படுத்துகின்றன என்றும் உண்மையில் தாராளமயம் என்பது இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள்மீது எந்த கட்டுப்பாடும் விதிக்காமல், அவர்கள் தங்குதடையின்றி லாபவேட்டையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் கொள்கையாகும். இதன் மறுபக்கம், பெருமுதலாளிகளின் சுரண்டலையும் அதற்கு ஆதரவான அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடும் மக்கள்மீது கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகும்.

தனியார் மயமாக்கல்

தனியார்மயம் என்பதன் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்பதாகும். இதை எதிர்ப்பது அவசியம். தனியார்கள் அரசு விற்கும் பங்கை வாங்குகின்றனர் என்பதன் பொருள் என்ன? அதன்மூலம் அவர்கள் லாபம் அடைய முடியும் என்ற எதிர்பார்ப்புதானே? அது சரி என்றால், ஏன் அரசே அப்பங்குகளை கைவசம் வைத்துக் கொண்டு லாபம் ஈட்டி, வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது? ஆகவே, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பது என்பது எந்த வகையிலும் பொருத்தமில்லை. குறிப்பாக, லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகளை விற்பதை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நிகழ்வது என்னவெனில் லாபம் ஈட்டித்தரும் நிறுவனப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு அரசு விற்று வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அரசின் வரவு-செலவு பற்றாக்குறையை குறைத்துக் காட்டி, பன்னாட்டு மூலதனத்தை திருப்திப்படுத்த முற்படுகிறது. பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது. மாறாக, அவற்றை சமூக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உட்பட்டு லாபகரமாக இயக்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு.

ஆனால் தனியார்மயம் என்பது பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பது மட்டும் அல்ல. அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த பல துறைகளை – பொதுநன்மை நோக்கில் செயல்பட வேண்டிய துறைகளை – தனியாரிடம் ஒப்படைத்து, லாப அடிப்படையில் அவை செயல்படலாம் என்று அனுமதிப்பது தனியார்மயக் கொள்கைகளின் இன்னொரு மிக முக்கிய அம்சம். கல்வி, ஆரோக்கியம், மற்றும் கட்டமைப்பு துறைகள் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள். நமது நாட்டில் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் நீண்டகாலமாக தனியார் அமைப்புகள் பங்காற்றி வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் இவ்வமைப்புகள் லாபநோக்கத்துடன் கடந்த காலங்களில் செயல்பட்டதில்லை. பெரும்பாலும் சமூகமேம்பாடு என்ற நோக்கில் செயல்பட்டவை. இவற்றில் பல விடுதலைப் போராட்ட காலத்தில் சமூகத்தொண்டு என்ற நோக்குடன் நிறுவப்பட்டவை. பல சமயங்களில் சாதி, சமய சமூக அடிப்படையிலும்கூட உருவாக்கப்பட்டு, அதேசமயம் அனைத்து சமய, சமூக மாணவ மாணவியரையும் சேர்த்துக் கொள்ளும் நிறுவனங்களாக இயங்கின. ஆனால் 1991க்குப்பின், தனியார் மயம் என்பது கல்வித்துறையிலும் ஆரோக்கியத் துறையிலும் முழுக்க முழுக்க வணிகமயமாகவே அமலாகியுள்ளது. ஒரு துறையை தனியாருக்கு திறந்துவிடுவது என்பது வெறும் நிர்வாக ஏற்பாடு அல்ல. திறன் குறைந்த பொதுமேலாண்மைக்குப் பதிலாக திறன்மிக்க தனியார் மேலாண்மை என்ற தவறான படப்பிடிப்பை முன்வைத்து, இதை நியாயப்படுத்த ஆளும் வர்க்கங்கள் முயல்கின்றன. மறுபுறம், அரசிடம் காசு இல்லை, ஆகவே தனியாரிடம் கல்வியையும் ஆரோக்கியத்தையும் ஒப்படைப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் வாதிடப்படுகிறது. இந்த வாதங்கள் தவறானவை. பிரச்சினை மேலாண்மைத் திறன் அல்ல. தனியார் துறை மேலாண்மை பொதுத்துறை மேலாண்மையை விட அதிகத்திறன் கொண்டது என்று கருத எந்த ஆதாரமும் கிடையாது. சொல்லப் போனால், ஏராளமான தனியார் நிறுவனங்கள் நட்டத்தில் சிக்கி காணாமல் போகின்றன. மறுபக்கம், சமூக நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொண்டே பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. அதேபோல், அரசிடம் காசு இல்லை என்று சொல்வது, செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் உரிய வகையில் வரிகள் விதித்து வளங்களை திரட்ட அரசு தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.
உண்மையில், தனியார்மயம் என்பதன் பொருள், பொதுநோக்கு அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த துறைகளை தனியார் லாப நோக்கில் செயல்படுத்துவது என்பதாகும்.

இதன் மிக முக்கிய விளைவு ஏழை மக்களுக்கு கல்வியும் ஆரோக்கிய வசதிகளும் எட்டாக்கனியாக மாறுவது என்பதாகும். பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வியும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்ற நிலைக்குத்தான் இத்துறைகளில் அரசு தனது பொறுப்பை புறக்கணித்து தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பதன் விளைவுகள் இட்டுச் செல்லும். அதேபோல்தான் கட்டமைப்பு வசதிகள் விசயமும். சாலைகள், இதர போக்குவரத்து வசதிகள், வேளாண் விரிவாக்கப் பணிகள், பாசனம் உள்ளிட்டு அனைத்து துறைகளையும் நடவடிக்கைகளையும் தனியார் துறையின் கையில் ஒப்படைத்து லாபநோக்கில் அவை இவற்றை செயல்படுத்தலாம் என்ற பாதையை நாம் தனியார்மயத்தின் முக்கிய அம்சமாக பார்க்க வேண்டும். தாராளமயம், தனியார்மயம் இரண்டும் இணைந்து அமலாக்கப்படும் நிலையில், இத்துறைகளில் லாபநோக்கில் செயல்படும் தனியார் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றின்மீது சமூக நெறிமுறைகளை விதித்து செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான விசயங்களாக ஆகியுள்ளன.

உலகமயமாக்கல்

பொருளாதார ரீதியில் உலகமயம் என்பதற்கு கீழ்க்கண்ட இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு:

• சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்கி, “சுதந்திர” பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பது. நாட்டின் பொருளாதாரத்தை இந்த வகையில் பன்னாட்டு வணிகத்திற்கு முழுமையாக திறந்து விடுவது. இது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும்.

• நிதிவடிவில் மூலதனத்தை நாட்டுக்குள்ளே வரவும் அதன் விருப்ப்ப்படி நாட்டை விட்டு வெளியே செல்லவும் தங்குதடையின்றி அனுமதிப்பது.

முதல்அம்சம் வளரும் நாடுகளின் தொழில்வளர்ச்சிக்குப் பெரும் சவாலாக அமையும். சமத்துவம் அற்ற பன்னாட்டுச் சந்தைகளில் சுதந்திர வர்த்தகம் என்பது வளரும் நாடுகளுக்கு சமஆடுகளமாக இருக்காது. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதும் அல்லது நீர்த்துப் போகச் செய்வதும் இறக்குமதி வரிகளைக் குறைப்பதும் வளரும் நாடுகளின் சந்தைகளை கைப்பற்ற பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு வாய்ப்பாகவே அமையும். சுதந்திர வர்த்தகம் பேசும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் பலகாரணங்களை முன்வைத்து வளரும் நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்ப்பார்கள் என்று அனுபவம் பாடம் புகட்டுகிறது.

உலா வரும் நிதிமூலதனம்

உலகமயம் என்பதன் இரண்டாவது பொருளாதார அம்சம் நிதிமூலதனம் தங்குதடையின்றி நாடுகளின் எல்லைகளைத் தாண்டி தன்விருப்பப்படி பயணிப்பது என்பதாகும். ஒரு நாட்டின் பொருளாதார கொள்கைகளைப் பொறுத்தவரையில்,இதுதான் உலகமயத்தின் மிக முக்கிய அம்சம். ஏனென்றால், வெளிநாடுகளில் இருந்து நிதியாக மூலதனம் ஒரு நாட்டுக்குள்ளே தன் விருப்பப்படி நுழையலாம். அதேபோல் வெளியேறலாம் என்ற நிலை ஏற்படும் பொழுது அந்த நாடு தனது பொருளாதார கொள்கைகளை தன் தேவைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தை கணிசமான அளவிற்கு இழக்கிறது. அரசு ஒரு பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டால் நிதிமூலதனம் அதை எப்படி பார்க்கும் என்பதைப் பற்றி அரசுகள் கவலைப்படும் நிலை உருவாகிறது. அரசின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்று நிதிமூலதனம் கருதினால் அது நாட்டைவிட்டு தனது பணத்தை எடுத்துக்கொண்டு வேறு நாடுகளின் நிதிச்சந்தைகளுக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்திலேயே அரசுகள் செயல்படும் நிலை உருவாகிறது. இதனால் அரசின் வரவு-செலவு கொள்கைகள் நிதிமூலதனத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அமைகின்றன. இதில் ஒரு மிகப் பெரிய ஜனநாயக மறுப்பு அம்சம் உள்ளது. நிதிமூலதனத்திற்கு உலகை உலாவரும் உரிமையைக் கொடுத்துவிட்டதன் விளைவாக, தேர்தல் நேரங்களில் மக்கள் நலன்காக்கும் வகையில் அரசு வரவுசெலவு அமையும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் கஜானா காலி, வரவுசெலவு இடைவெளி கூடினால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு வெளியேபோய்விடும் என்று வாதிடுவது மாமூலாகி விட்டது.

நிதிமூலதனம், குறிப்பாக அந்நிய மூலதனம், வரவேற்கப்பட வேண்டும் என்பதும், அதன்மீது கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்பதும் உலகமயம் என்பதன் முக்கிய அம்சம். ஆனால் ஒரு நாட்டுக்குள் அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்கு இது மட்டும் போதாது. ஏனென்றால், பன்னாட்டு மூலதனம் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாமே! எனவே, அதனை ஒரு நாட்டுக்குள் ஈர்க்க வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகளைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அந்நிய மூலதனத்திற்கு சலுகைகள் அளித்தால் உள்நாட்டு முதலாளிகளுக்கும் அதே சலுகைகளை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் வரிவருமான இழப்பை ஈடுகட்டி, வரவுசெலவு பற்றாக்குறையை வரம்புக்குள் நிறுத்த, உழைக்கும் மக்களுக்குச் சேரவேண்டிய மானியங்களை வெட்டுவதே ஆயுதமாகிறது. இதுதான் உலகமயம் படுத்தும் பாடு.

அரசு முன்வைத்த வாதம்

1991இல் இருந்து தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற மூன்று அம்சங்கள் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையை மத்தியில் ஆட்சி செய்த அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளும், கூட்டணிகளும் பின்பற்றி வந்துள்ளன. இக்கொள்கைகள் அவசியம் என்று வாதிட்ட ஆளும் வர்க்கங்களின் அறிவுஜீவிகள் சொன்னது என்ன? அவர்கள் புனைந்த கதை இதுதான்:
இக்கொள்கைகளால் அந்நிய, இந்திய கம்பனிகள் ஏராளமாக முதலீடுகளை மேற்கொள்ளும். இதனால் வேலைவாய்ப்பு பெருகும். பன்னாட்டு மூலதனம் இங்கு வந்து குவியும். பெரும் தனியார் முதலீடுகள் மூலம் நிறுவப்படும் பெரிய ஆலைகளின் உற்பத்தி உலகச் சந்தைகளில் விற்கப்பட்டு நமது ஏற்றுமதி பாய்ச்சல் வேகத்தில் அதிகரிக்கும். இதனால் நாம் தேவைப்பட்டதை எல்லாம் தங்குதடையின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். உற்பத்தி பெருகும். வேலைவாய்ப்பு வளரும்.அந்நியச் செலாவணி குவியும். வளர்ச்சி விகிதம் உயரும். வறுமை மறையும்.
.ஆனால், தாராளமய காலத்தில் நடந்தது என்ன?

வேளாண் நெருக்கடி

வேளாண் நெருக்கடியின் மிகத்துயரமான அம்சம் தொடரும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997 முதல் 2016வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத் தற்கொலைகளுக்கும் வேளாண்நெருக்கடிக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. வேளாண் நெருக்கடியின் ஆழத்தை வேளாண்வளர்ச்சி பற்றிய விவரங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. தானியம், பருப்பு, எண்ணய்வித்துக்கள், கரும்பு ஆகிய முக்கிய பயிர்களை எடுத்துக் கொண்டால், 1981முதல் 1991வரையிலான காலத்தில் இப்பயிர்களின் உற்பத்தி வேகமாக வளர்ந்தது. ஆனால் அடுத்த 20ஆண்டுகளில் – 1991முதல் 2010முடிய – இவற்றின் உற்பத்தி வளர்ச்சியின் வேகம் பெரிதும் குறைந்தது. மகசூல் உயர்வும் இதேபாணியில்தான் இருந்தது. நெருக்கடி1998 – 2004 காலத்தில் மிகவும் தீவிரமாக இருந்தது என்பது உண்மை. வேளாண்உழைப்பாளிமக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளேக காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையை குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவு கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண்பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால், விளைபொருட்கள் விலைகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிதித்துறை சீர்திருத்தங்கள் விவசாயக் கடனைக் குறைத்து வட்டிவிகிதங்களை உயர்த்தியது. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமய கொள்கை கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண்விரிவாக்கம், வேளாண்ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது வினியோகமுறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன்வலையில் வீழ்ந்தன.

அதேசமயம், வேளாண்துறை நெருக்கடியில் இருந்த போதிலும், கிராமப்புற செல்வந்தர்கள் கொழுத்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பயிர்வாரியாகவும் பகுதிவாரியாகவும் காலவாரியாகவும் வேளாண்நெருக்கடியின் தன்மையும் தாக்கமும் வேறுபட்டு இருந்தன. அதேபோல், வேளாண்பகுதிமக்கள் அனைவர் மீதும் ஒரே மாதிரியான தாக்கம் இல்லை. முதலாளித்துவ-நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் தாராளமய கொள்கைகளால் பயன்பெற்றுள்ளனர். அவர்களிடம் நிலம், இயந்திரங்கள் உள்ளிட்ட உற்பத்திசார் சொத்துக்கள் குவிந்துள்ளன. 1992 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில்கூட, சற்று மந்தமான வேகத்தில் என்றாலும், வேளாண்துறையில் இயந்திரங்களின் உடமையும் பயன்பாடும் அதிகரித்தே வந்துள்ளன. உதாரணமாக, டிராக்டர்களின் எண்ணிக்கை 1992-2003 காலத்தில் இரண்டு மடங்காகியது. 2004-05க்குப் பிறகு 2011-12 வரையிலான காலத்தில் கிராமப்புறங்களில் வேளாண் பயன்பாட்டிற்கான இயந்திர விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.

இதன் பொருள் என்னவெனில், வேளாண்துறையில் கிடைக்கும் உபரிமூலம், உழைப்பாளி மக்களை சுரண்டுவதன் மூலம், மூலதன சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசின் கொள்கைகளும் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நிலஉச்சவரம்பு சட்டங்களை நீக்குகின்றன. மறுபுறம் விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துக்களை இழப்பதன் மூலமும், அரசுகள் இயற்கைவளங்களை அடிமாட்டுவிலைக்கு பன்னாட்டு இன்னாட்டு ஏகபோகங்களுக்கு வாரிவழங்குவதன் மூலமும், ரியல்எஸ்டேட் கொள்ளை மூலமும் சிறப்புபொருளாதாரமண்டலங்கள் என்றவகையிலும் ஆரம்ப மூலதன சேர்க்கை பாணியிலான மூலதனக் குவியலும் தொடர்கிறது.

வேலைவாய்ப்பு

நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவில்லை. தொழில்துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், பணியிடங்கள் கூடவேஇல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் பெரும்பாலும் உழைப்பாளி மக்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லாத அமைப்புசாரா பணிஇடங்களாகவே இருந்தன. 1993முதல் 2005வரையிலான காலத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுயவேலைஉட்பட) இருப்போர் எண்ணிக்கை 1கோடியே 20லட்சம் அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒருசெய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை வெறும் 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.

வறுமை

வறுமை பற்றி அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் நகைப்புக்கு உரியவை. அரசின் வறுமைக்கோடு என்பது ஒரு சாகாக் கோடு என்றுதான் சொல்ல வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள வறுமைகோட்டில் எவரும் வாழமுடியாது. ஆனால் சாகாமல் இருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்! 2011-12 தேசீய மாதிரி ஆய்வு தரும் விவரங்கள்படி நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 50க்கும் குறைவாக செலவு செய்தவர்களாகத்தான் கிராமப்புற குடும்பங்களில் 80ரூ இருந்தனர். நகரப் புறங்களிலும் கிட்டத்தட்ட பாதிகுடும்பங்களின் நிலைமை இதுதான். ஒரு நாகரீக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80சதமானத்திற்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த விகிதம் நாலில் ஒன்றுதான். இது போன்ற இன்னும் பல துயர்மிக்க புள்ளிவிவரங்கள் உள்ளன! அதுவும் நாட்டுக்கு விமோசனம் என்று ஆளும் வர்க்கங்கள் விளம்பரப்படுத்திய தாராளமய கொள்கைகள் 22ஆண்டுகள் அமலாக்கப்பட்ட பின்னர்!

மலையும் மடுவும் போன்ற ஏற்றத்தாழ்வுகள்

ஒரு விஷயத்தில் தாராளமய கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. அது எதில்என்றால், அசிங்கமான, ஆபாசமான அளவிற்கு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்ததில்! தொழிலிலும் நிலஉடமையிலும் பொதுவாக சொத்து வினியோகத்திலும் நம்நாட்டில் பெரும் ஏற்றத்தாழ்வு இருந்து வந்துள்ளது என்றாலும், கடந்த 23ஆண்டுகளில் இவை பலப்பல மடங்குகள் அதிகரித்துள்ளன.

2008இல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் – அதாவது, 100கோடிடாலர் – சொத்து மதிப்புகொண்ட இந்திய செல்வந்தர்கள் எண்ணிக்கை 41ஆக இருந்தது. அதன்பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்துள்ளது. இது இந்த எண்ணிக்கையைக் குறைத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக, 2013இல் 53, 2014இல் 70என்று இந்த இந்திய டாலர் பில்லியனேர்கள் எண்ணிக்கை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி வேகம் இரண்டு ஆண்டுகளாக 5ரூக்கும் குறைவுதான். ஆனால் டாலர் பில்லியனேர்கள் வளர்ச்சிவிகிதம் அமோகம்!

2014இல் முகேஷ்அம்பானியை முதலிடத்தில் கொண்டுள்ள இந்த 70 இந்திய டாலர் பில்லியனேர்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 390 பில்லியன்டாலர். அதாவது சுமார் ரூ. 24லட்சம் கோடி. இது இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜீ.டி.பி.யில்) கிட்டத்தட்ட நாலில் ஒருபங்கு ஆகும். முதல் பத்து செல்வந்தர்களின் மொத்தசொத்து மட்டும் தேசஉற்பத்தியில் கிட்டத்தட்ட 6ரூ ஆகும்.

இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துக்களை பிரும்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். டாட்டா குழுமத்தின் சொத்து 1990இல் 10,922கோடிரூபாயாக இருந்தது. 2012-13இல் இது 5,83,554 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. (ஆதாரம்: டாட்டாஇணையதளம்). இதே கால இடைவெளியில், அம்பானி குழுமத்தின் சொத்துக்கள் 3167கோடி ரூபாயில் இருந்து 5,00, 000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தது. முகேஷ் அம்பானியின்  மற்றும் அதன் உபநிறுவனங்களின் சொத்து 3,62,357 கோடி ரூபாயும், அனில் அம்பானியின்  கம்பெனியின் சொத்துக்கள் 1,80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் ஆகியுள்ளன. (ஆதாரம்: இக்குழுமங்களின் இணையதளங்கள்).

1991இல் இருந்து 2012 வரையிலான காலத்தில் நாட்டின் நிலை தொழில் மூலதனமதிப்பு 4மடங்கு அதிகரித்தது. இதேகாலத்தில் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து 9மடங்கு அதிகரித்துள்ளது. (ஆதாரம்: மத்திய புள்ளியியல்நிறுவனம், தேசீய கணக்கு புள்ளிவிவரங்கள்)
நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1991வரை தனியார் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைத்த நிகரவருமானத்தில் (ஈவுத்தொகையாக கொடுத்து விடாமல்) கைவசம் (மறுமுதலீடுக்காக) வைத்துக் கொண்ட தொகை தேசஉற்பத்தி மதிப்பில் 2ரூக்கும் கீழாகவே இருந்தது. இது 2007-08இல் தேசஉற்பத்தியில் 9.4ரூஆக உயர்ந்தது. தற்சமயம் 8ரூஆக உயர்நிலையிலேயே நீடிக்கிறது.

மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, கழிப்பறை இன்றி, குடிதண்ணீர் இன்றி, தலைக்குமேல் கூரைஇன்றி, வசிக்க வீடின்றி, குளிர்வந்தாலும் மழைபெய்தாலும் சாவை எதிர்நோக்கி வாழும் கோடிக்கணக்கான மக்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்தசோகையில் வாடும் பெண்கள், குழந்தைகள், பிறக்கும் 1000சிசுக்களில் 40சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவலநிலை (இது குஜராத் உட்பட பல மாநிலங்களில் அதிகம்) இப்படி தொடரும் கொடுமைப்பட்டியல்!
இதுதான் – பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் –தாராளமய வளர்ச்சியின் முக்கியதோர் இலக்கணம்.

மோடி அரசின் தீவிர தாக்குதல்கள்

ஊழல் மலிந்த யூ பீ ஏ அரசு தூக்கி எறியப்பட்டு பா ஜ க தலைமையில் 2014 மே மாதம் பொறுப்பேற்ற மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றியுள்ளது. பாஜக அரசு விலைவாசி உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மொத்த விலைப்புள்ளி உயர்வு முன்பை விட கூடியுள்ளது என்று அரசு தரும் புள்ளிவிவரங்களும், ரிசர்வ் வங்கியும், ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளன.

இது நமக்கு வியப்பளிக்கவில்லை. காரணம், தாராளமயக் கொள்கைகளின் அறுவடைதான் தடையில்லா விலைஉயர்வு என்று நமக்கு அனுபவம் சொல்கிறது.முந்தைய அரசு பின்பற்றிய அதே தாராளமயக் கொள்கைகளை இன்னும் தீவிரமாக மோடி அரசு பின்பற்றுகிறது. பல ஆண்டுகளாக அரசுகள் பின்பற்றிவரும் தாராளமயக் கொள்கைகளால், அரசு செய்ய வேண்டிய முதலீடுகள் செய்யப்படாமல், அளிப்பை அதிகரிக்கும் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடற்ற இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டதால் ரூபாய் மதிப்பு சரிவதும் அதனால் விலைவாசி உயர்வதும் தொடர்ந்து நிகழ்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 45 ரூபாய் என்பதிலிருந்து 67 ரூபாய் ஆக உயர்ந்தால் இறக்குமதிப்பொருட்களின் செலவு ரூபாய் கணக்கில் கிட்டத்தட்ட ஐம்பது சதம் அதிகரிக்கும் என்பது தெளிவு.1991ல் ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு பதிமூன்று ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது எழுபது ரூபாயை தாண்டியுள்ளது.

இதே காலத்தில் நமது நாட்டு இறக்குமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்தே விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் மற்றொன்று இறக்குமதியின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பிரச்சனை அது மட்டுமல்ல. தொடர்ந்து அரசு முதலீடுகள் வெட்டப்படுவது கட்டமைப்பு வசதிகளை கடுமையாகப் பாதிக்கிறது. பல முக்கிய துறைகளில் இறக்குமதியின் பங்கு அதிகரிக்கிறது. அரசின் தாராள இறக்குமதிக் கொள்கைகளும் இதற்கு இட்டுச்செல்கின்றன. இவை அனைத்தும் உணவுப் பொருள் சப்ளையை அதிகரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அரசின் வேளாண் கொள்கைகள் தானிய உற்பத்தியின் வளர்ச்சி குறைவதற்கு காரணமாக உள்ளன. இதோடு கட்டுப்பாடற்ற ஏற்றுமதி, முன்பேர வணிகம் ஆகியவையும் சேரும் பொழுது விலைவாசி உயர்வின் வேகம் அதிகரிக்கத்தானே செய்யும்? இன்னொரு புறம் உணவு, உரம் , எரிபொருள் ஆகியவற்றிற்கான மானியங்களை அரசு தொடர்ந்து வெட்டுகிறது. இக்கொள்கைகள் விலைவாசி உயர்வுக்கு நேரடி காரணமாக உள்ளன.

அரசின் வரவு-செலவு கொள்கை

பா ஜ க அரசின் மூன்று பட்ஜெட்டுகளிலும் தாராளமய கொள்கைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன. மறைமுக வரிகளை உயர்த்தி மக்கள் மீது விலைவாசி மற்றும் வரிப்பளுவை ஏற்றுவதும் பெரும் கம்பனிகள் மற்றும் செல்வந்தர்கள் மீதான நேர்முக வரிகளை குறைப்பதும் வரிஏய்ப்போருக்கு வெகுமதி அளிப்பதும்தான் பா ஜ க அரசின் வரிக்கொள்கையாக இருந்துள்ளது. அதேபோல், பாதுகாப்பு துறை, நிதித்துறை உள்ளிட்டு எல்லா துறைகளிலும் அந்நிய முதலீடு மீதான வரம்புகளை நீக்குவதும் இறக்குமதி வரிகளை குறைப்பதும்தான் மோடி அரசின் கொள்கையாக உள்ளது.

சென்ற ஆண்டு ஜெட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7,000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்துவரி வேண்டாம்; வாரிசு வரி வேண்டாம்; வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65ரூ க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன. வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, வரி தொடர்பான தாவா அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம் பைசல் செய்துகொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட் அழைப்பு விடுத்துள்ளது.

மோடி அரசு பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப்பதில், மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது. வளங்களை திரட்டுவதற்குப்பதில், செலவுகளை குறைப்பதில்தான் அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது.

சில படிப்பினைகள்

தாராளமய கொள்கைகள் பெரும் துயரங்களை மக்கள் வாழ்வில் அரங்கேற்றியுள்ளன. கடந்த பதினெட்டு ஆண்டுகளில் 3லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதற்கு இவைதான் பிரதான காரணம். தாராளமய காலத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி மிகவும் மந்தமாக இருந்துள்ளது. உருவாக்கப்பட்ட பணியிடங்களும் முறைசாரா, குறை கூலி தன்மையுடையவை. தொழில் வளர்ச்சியும் சுமார்தான். ஆலை உற்பத்தி சில ஆண்டுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது. சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பழங்குடி மக்கள், தலித் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் பெண்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்சி திட்டம், இந்திய அரசு அதிகாரம் நிலப்பிரபுக்கள் – முதலாளிகள் வர்க்கக் கூட்டின் கையில் உள்ளது என்றும், இந்த கூட்டிற்கு பெருமுதலாளிகள் தலைமை தாங்குகின்றனர் என்றும், இப்பெரு முதலாளிகள் காலப்போக்கில் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் மேலும் மேலும் இணைந்து செயல்படுகின்றனர் என்றும் மிகச் சரியாகவே வரையறுத்துள்ளது. எனவே,தாராளமய கொள்கைகளை முன்பின் முரணின்றி, சமரசமின்றி, எதிர்க்க வேண்டும்.அதன் தாக்கத்தை சரியாக மதிப்பிட்டு ஸ்தல மட்டத்தில் மாற்று கோரிக்கைகளை எழுப்பி,மக்களைத் திரட்டி போராட வேண்டும்.

வகுப்புவாதம்

“பாசிசம் என்பது மிகவும் பிற்போக்குத்தனமான, நிதி மூலதனத்தின் ஏகாதிபத்திய, முக்கிய கூறுகளை உள்ளடக்கிய வெளிப்படையான, பயங்கரவாத சர்வாதிகாரம் ஆகும்” (ஜியர்ஜி டிமிட்ரோவ், ஏழாவது கம்யூனிஸ் அகிலம், 1935) பாசிசம் என்பது பிற்போக்குத் தனமானது மட்டுமல்ல. ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட. மக்களை பற்றி கவலைப்படாமல், வலுவான தலைவர் வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பாகும். அதிதீவிர தேசியவாதம் மற்றும் ராணுவமயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறையாகும். அதுமட்டுமின்றி, கொள்கையற்ற சந்தர்ப்பவாதமும், அந்த சந்தர்ப்பவாதத்திற்கேற்ப பேசுவதும், செயல்படுவதும் பாசிசவாதிகளுக்கு வரித்தானது. பாசிசம் சமூக வாழ்வை டார்வினிய அடிப்படையில் அணுகும் அமைப்பாகும். அதாவது வலுவானவன் சொல்தான் எடுபடும். அதேபோல் வலுவான தேசங்கள், பல வீனமானவற்றை மறையச் செய்துவிடும்.

பாசிசம் பற்றிய விவாதம் மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை புதிதல்ல. ஆனால் மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டதிலிருந்து, பாசிசம் பற்றிய விவாதம் அதிகரித்திருப்பதை காண முடிகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘இந்து தேசியவாதம்’ என்பதை மறைத்துக் கொண்டு, தன்னை ஒரு சிறந்த நிர்வாகியாக மோடி முன்னிறுத்திக் கொண்டார். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள சூழலில், தன்னால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை கொண்டுவர முடியும் என்றும், ‘அனைவருக்குமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, (சப்கே சாத், சப்கா விகாஸ்), ‘நல்ல நாள் வர உள்ளது”, ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ என்பது போன்ற கோஷங்களை முன்வைத்து பிரதமராக வந்தார்.

மோடி ஒரு ஆர்எஸ்எஸ் சேவகர் மட்டுமல்ல. நவீன தாராளமயவாதியும் கூட என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். அப்பொழுதுதான் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மார்க்சீய பார்வையில் ஆராய முடியும். பாசிச பொருளாதாரக் கொள்கை என்பது என்ன? தனியார் லாபம் ஊக்குவிக்கப்பட வேண்டும். பெருமுதலாளிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் நலம் தரும் வகையில் பணக் கொள்கை, வரி, வணிகக் கொள்கைகள் இருக்க வேண்டும். “பாசிஸ்டுகள் கார்பரேட்டிசத்தை ஆதரிப்பவர்கள். வர்க்க வேறுபாடுகள் இருப்பதையும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதையும், பல வர்க்கங்கள் இருப்பது சமூகத்திற்கு நல்லது என்று கூறுவதுடன், வர்க்கங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட வேண்டுமென்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் ‘லாபம் தனியாருடையது, தனிநபருடையது. நஷ்டம் பொதுவானது, சமூகத்தை சார்ந்தது” (ழுஹநுகூஹசூடீ ளுஹடுஏநுஆஐசூஐ) பாசிசம் பற்றி மார்க்சியம் கூறுவது என்ன? பாசிச ஆட்சி தொழிற்சங்கம் மற்றும் இதர உழைக்கும் வர்க்க அமைப்புகளை ஒடுக்கி, நசுக்கும். உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும். பணக்கார வர்க்கம் ஆட்சியை தனது பிடியில் வைத்திருக்கும் என்பதாகும்.

மோடி மட்டுமல்ல, பல எம்.பிக்கள், அமைச்சர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு தாங்கள் ஆர்.எஸ்.எஸ் சேவகர்களாக இருந்ததை முன்னிறுத்திக் கொள்ளும் தைரியம் பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சேவகர்களில் பலர் பா.ஜ.க கட்சி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (மாதவ் குறிப்பிடத்தக்கவர்) ஆர்.எஸ்.எஸ் ஐரோப்பிய பாசிச இயக்கத்தைப் போன்று துவக்கப்பட்டதுதான். முப்பதுகளில் செயல்பட்ட பாசிச இயக்கங்கள் போல் இன்றும் தினமும் காக்கி உடை அணிந்து ‘டிரில்’ செய்வது ராணுவ ‘சல்யூட்’ அடிப்பது தொடர்கிறது. தேர்தலின் பொழுதும் அதன் பின்பும் ‘இந்துத்துவா’, ‘அகண்ட பாரதம்’ என தங்கள் நோக்கத்தை வெளிப்படையாகவே பா.ஜ.க பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டது. இந்தியா இந்துக்களுக்கே, இதர மதத்தினர் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்துகிறது. யார் அமைச்சர், யாருக்கு எந்தத் துறை என்பது உட்பட ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தை கேட்டு அதன்படிதான் பா.ஜ.க செயல்படுகிறது. எந்த ஒளிவுமறைவுமில்லை. பெரும்பான்மை என்பதால், அசுர பலத்துடன் தனது அஜெண்டாவை செயல்படுத்த முனைகிறது.
இந்தியாவின் மக்கட்தொகையில் இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். உலக மக்கட் தொகையை மதரீதியாக பார்க்கும் பொழுது, 0.1 ‘பஹாய்’, 1.28 சதவிகிதம் பௌத்தர், 32.8 சதவிகிதம் கிறித்துவர், 13.8 சதவிகிதம் இந்துக்கள் 22.5 சதவிகிதம் முஸ்லீம்கள், 0.3 சதவிகிதம் சீக்கியர்கள், 0.1சதவிகிதம் iஜைனர்கள் 9.8 சதவிகிதம் எந்த மதத்தையும் சாராதவர், 6.54 சதவிகிதம் மத நம்பிக்கையற்றவர்கள் என்று தெரிய வருகிறது.   உலக இந்துக்களில் 90 சதவிகிதம் இந்தியாவில் வசிக்கின்றனர். இந்தியாவில் 13 சதவிகிதம் முஸ்லீம்கள் இருந்தபோதும், பா.ஜ.கவின் 449 வேட்பாளர்களில் (2014 பாராளுமன்ற தேர்தல்) 8 பேர் தவிர அனைவரும் இந்துக்களே. ‘முஸ்லீம் வேட்பாளர்களை நிராகரியுங்கள்’ என அமீத்ஷா வெளிப்படையாகவே அறைகூவல் விடுத்தார். ஆனால் ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற பொய்யான கோஷத்தை முன்வைக்கின்றனர். பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்தபின் ஆர்.எஸ்.எஸ் தனது அமைப்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டு வருகிறது.

மதசார்பின்மைக்கு பலத்தஅடி:

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்; அது பொது வாழ்க்கையுடன் கலக்கக் கூடாது என்பது முக்கியம். ஆனால், பா.ஜ.க எம்.பிக்கள், அமைச்சர்கள் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம்/ வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டும் ‘இந்துத்துவா’ பற்றியும் பேசத் தவறுவதில்லை. பா.ஜ.க எம்.பி. யோகி ஆதித்யநாத் மத விஷம் கக்கும் வார்த்தைகளை பேசுகிறார். பாஜகவுடன் இணைந்து ‘சங்’ பரிவார அமைப்புகள் உ.பி மாநிலத்தில் மட்டும் தேர்தலையொட்டி, சிறிதும், பெரிதுமாக 50 மதக்கலவரங்களுக்கு காரணமாக இருந்தன. அதிலும் குறிப்பாக மேற்கு உ.பியில் ஜாட்-முஸ்லீம் அரசியல் கூட்டணியை குறிவைத்து மத அடிப்படையில் உடைத்தது.

சங் பரிவாரம் மும்முனை தாக்குதலை தொடுத் தது. ஒன்று ‘லவ் ஜிகாத்’. சங் பரிவாரம் வீடு, வீடாகச் சென்று, உங்கள் மகள்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் முஸ்லீம் ஆண்கள் அவர்களை திருமணம் செய்து கொண்டு, இஸ்லாத்திற்கு மாற்றிவிடுவார்கள் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. கல்வியறிவு குறைந்த, மூடநம்பிக்கை, பழமையில் ஊறிப்போன உ.பி மக்களிடம் இது எடுபட்டது. விஸ்வ இந்து பரீஷத், தலைமையில், பல புதிய அமைப்புகள் துவக்கப்பட்டன. ‘இந்து கன்னி பாதுகாப்பு சமிதி’ ‘மகளை காப்பாற்று’ ‘மருமகளை காப்பாற்று’ போன்ற அமைப்புகள் ‘லவ் ஜிகாதுக்கு எதிரான பிரச்சாரம் செய்து, மனதில் அச்சத்தை தோற்றுவித்தன. உ.பியின் கிராமப்புறங்களில் இத்தகைய பிரச்சாரம் பா.ஜ.கவின் நோக்கங்கள் நிறைவேற உதவியது.

மத மாற்றம்:

சங் பரிவாரத்தின் இரண்டாவது அஸ்திரம் மதமாற்றம் ஆகம். மத மாற்றம் சரியா? தவறா என தற்போது நாடு முழுவதும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஒருவர் தானாக விரும்பி வேற்று மதத்தை தழுவலாம். ஆனால் கட்டாய மதமாற்றம் கூடாது என்றும்; அதற்கு தடைவிதிக்க வேண்டுமென்றும், மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டுமென்றும் கூறப்படுகிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத பொழுதும், மத மாற்றம் செய்தது. பல கிறிஸ்துவ அமைப்புகளுடன் இதனால் மோதல்கள் ஏற்பட்டன. வன்முறை சம்பவங்கள் நடந்தன. (கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் படுகொலை, நபுவா கன்னியா ஸ்திரீகள் பாலியல் பலாத்காரம் மறக்க இயலாதவை).

கட்டாய மதமாற்றம் கூடாது என்றும் கூறும் பா.ஜ.க கடந்த சில மாதங்களில் அதே கட்டாய மத மாற்றத்தை செய்துள்ளது. சிறுபான்மையினரை ‘சுத்திகரண்’ (சுத்தம் செய்தல்) என்ற சடங்கின் கீழ் இந்துக்களாக மாற்றியுள்ளனர். ‘கர் வாபசி’ (வீடு திரும்புதல்) மீண்டும் இந்துவாகிவிடு என்று கூறி கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்த பின் துவக்கப்பட்ட ‘தரம் ஜாக்ரண் விவத்’ தர்ம விழிப்பு அமைப்பு) என்ற அமைப்பு உ.பி.யிலுள்ள அலிகரில் அஸ்ரோய் என்ற கிராமத்தில் 72 கிறித்துவ வால்மீகி (தலித்) குடும்பங்களை இந்துக்களாக மாற்றியுள்ளது. அந்த அமைப்பு, ‘சர்ச்’ இருந்த இடத்தில் சிவன் கோவில் இருந்ததெனக் கூறி, மீண்டும் சிவன் சிலையை வைத்துவிட்டது. பல ஆண்டுகளாக வால்மீகி சாதியினர் கிறிஸ்துவர்களாக இருந்தனர். கடந்த 4 மாதங்களில் சர்ச்சுகள் தாக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசை தடுக்கப்பட்டுள்ளது. “இவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டதால், மீண்டும் இந்துக்களாக்குகிறோம்” என தங்கள் நடவடிக்கைகளை இந்த அமைப்பு நியாயப்படுத்துகிறது. இப்படி மதமாற்றம் செய்த அனைத்து கிராமங்களிலும், கோவில்கள் கட்ட உள்ளனர்.

‘இந்து மகாசங்’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதமாற்றம் செய்வதுடன் நிற்பதில்லை. இந்துக்கள் அல்லாதவர்கள் ஓரம் கட்டப்படுகின்றது. இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பா.ஜ.க ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தில், சிர்சிகுடா கிராமத்தில், இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை விதிக்கும் வண்ணம் ‘சத்தீஸ்கர் பஞ்சாயத்’ ராஜ் சட்டம் (1994) திருத்தி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் வேற்று மதத்தினர் கட்டிடங்கள் எழுப்பக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் 50 கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, சிர்சிகுடா கிராமத்தில் உள்ள 50 கிறித்துவ குடும்பங்களுக்கு ரேஷன் தரப்படுவதில்லை. சிவில் சப்ளை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து, அவர்கள் விசாரணைக்கு வந்தால், வி.எச்.பி அமைப்பினர் கிறித்துவர்களை அடித்து நொறுக்கினர். எப்.ஐ.ஆர். போடப்பட்டு 4 மாதங்களாகியும் யாரும் கைது செய்யப்படவில்லை. மோடி பிரதமரான பின்னர் தாக்குதல் அதிகமாகியுள்ளது என்கின்றனர் கிறித்துவர்கள். 100-125 வருடங்களாக கிறித்துவர்கள் வசிக்கும் பகுதியில் இப்படி தாக்குதல் நடத்துவது சரியல்ல என்கின்றனர்.

சத்தீஸ்கர் கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போல், பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேச முஸ்லீம்களை குறிவைக்கிறது. அம்மாநிலத்தில் 8 சதவிகிதம் முஸ்லீம்கள். அவர்களில் பெரும்பாலொர் இந்தோரில் வசிக்கின்றனர். நவராத்திரி விழாவின்போது, முஸ்லீம்கள் அங்கு வர தடை விதிக்கப்பட்டது. கொடுமை என்ன வென்றால், விழாவுக்கு வரும் அனைவரும் அடையாள அட்டை எடுத்து வர வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக வங்கதேச மக்கள் குறிப்பாக, முஸ்லீம்கள் குடிபெயர்வதாகவும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. கசிரங்கா தேசிய பூங்காவுக்குள் வந்து வேட்டையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மே.வங்க மாநிலத்தில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு அம்மாநில அரசு அடைக்கலம் தருவதாக குற்றம்சாட்டி, பா.ஜ.க அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலுகிறது. இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த வரை எந்தவிதமான மதக்கலவரமும் இல்லை. மும்பை கலவரம், பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு கூட, மே.வங்கத்தில் அமைதி நிலவியது. மதரீதியான வன்முறைகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் ஆட்சிக்கு வந்தவுடனேயே அங்கும் இங்குமாய், பல மாவட்டங்களில் உரசல்கள் தொடங்கின. கர்நாடக மாநிலத்திலும், வடக்கு கன்னட பகுதிகளில் இந்துத்துவா பரி வாரங்கள் மாடுகளை கொண்டு செல்வோர் தாக்கப்படுகின்றனர். சமீபத்தில் மாட்டு இறைச்சிக்கென மாடுகளை கொண்டு சென்ற மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய அமைப்புகள் மோடி பிரதமரான பின் கூடுதல் துணிவை பெற்றுள்ளன. தமிழகத்தையும் சங்பரிவாரம் விட்டுவைக்கவில்லை. ‘சர்ச்சுகளை’ தாக்குவது நடக்கிறது. ராமநாதபுரம் போன்ற முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திட்டமிட்டு இந்து – முஸ்லீம் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைநகர் புதுதில்லியில் திரிலொக்புரியில் சங்பரிவாரம் நடத்திய தாக்குதல் திட்டமிடப்பட்ட செயலாகும் திரிலொக்புரி காலனியில் உள்ளவர்கள் தலித்துகள் (வால்மீகி) முஸ்லீம்கள் மற்றும் பீஹார் கிழக்கு உ.பியிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர். தீபாவளியன்று அங்கு முஸ்லீம்களை வால்மீகிகள் கற்கள் கொண்டு தாக்க, முஸ்லீம்கள் திரும்பித் தாக்க கலவரம் வெடித்தது. பா.ஜ.க எம்.எல்.ஏ தலையீட்டால் கைது செய்யப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லீம்கள். புதுதில்லியில் தேர்தல் வர இருக்கும் சூழலில், இதுபோன்ற பிளவுகளை திட்டமிட்டே பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது. இந்த கலவரம் வால்மீகிகளை பா.ஜ.க பக்கம் இணைய உதவியுள்ளது.

கல்வியை காவிமயமாக்கும் முயற்சிகள்:

கல்வியில் காவி மயம். வணிக மயம் ஆகியவற்றுடன் இந்தியாவின் பன்முகத்தன்மையை மாற்றும் வகையில் பல மோசமான நடவடிக்கைகளை புகுத்திட புதிய கல்விக்கொள்கையை மோடி அரசு கொண்டு வர முயற்சித்து வருகிறது. கல்வியறிவு மக்களை சிந்திக்க வைக்க வேண்டும். சங்பரிவாரமோ, அறிவியலுக்கு புறம்பாக, மூடநம்பிக்கைகளை வளர்க்கும்/ தக்கவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது புதிதல்ல. வாஜ்பாயி ஆட்சி காலத்தில் பல்கலைகழகங்களில் ஜோதிடத்தை பாடமாக வைக்கவும், தனித்துறை அமைக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் மறக்கவில்லை. “பாரதீய சிக்ஷாநிதி ஆயோக்” என்ற அமைப்பை ஆர்.எஸ்.எஸ்.ஸின் இணைப்பான ‘சிக்ஷா சன்ஸ்க்ருதி உத்தன் நியாஸ்’ எற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் கல்வியை “பாரத்-சென்ட்ரிக்” (பாரதத்தை மையப்படுத்திய) என மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பத்ரா எழுதியுள்ள நூல்கள் அறிவியலுக்கு புறம்பானவை.

2014ம் ஆண்டு ஆசிரியர் தின “குரு உத்சவ்” தினம் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் அன்று உரையாற்றுவார் என்றும், மாணவர்களுடன் கலந்துரையாடல் இருக்குமென்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கான நேரம் பொருத்தமானதாக இல்லையென்று பள்ளி நிர்வாகங்கள் முறையிட்டும், அது நடைபெற்றது இளம் மனங்களில் இந்துத்துவா விதையை ஊன்ற, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மோடி அரசு பயன்படுத்திக் கொள்கிறது. 1952ல் ஆர்.எஸ்.எஸ் ‘சரஸ்வதி சிஷூ மந்திர்’ என்ற நர்சரி பள்ளிகளை உ.பியில் துவக்கியது. அதன் நோக்கம் என்ன? தாய்மொழிப் பற்று (நமக்கும் அதில் மாற்று கருத்து இல்லை -மொழி வெறியாக மாறாத வரை) “இந்து” கோட்பாடுகள் அடிப்படையில் ஒழுக்க போதனை, கட்டுப்பாடு, தேசப்பற்று என அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த சிசு மந்திர் ‘வித்யா பாரதி’ என இன்று வளர்ந்து, நர்சரி முதல், முது நிலைப்பட்டம் வரை கல்வி அளிக்கும், நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதாக உள்ளது. கிறித்துவ மிஷினர்களுக்கு மாற்றாக 1980களில் பாரதீய வனவாசி கல்யாண் என்ற அமைப்பு 21 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுகிறது. இதன் மூலம் மதமாற்றம் தடை செய்யப்பட்டு, மீண்டும் அவர்கள் இந்து மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள்.

திருத்தி எழுதப்படும் வரலாறு:

2006ம் ஆண்டே, முந்தைய ஆட்சிக் காலத்திலேயே வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை என்.சி.இ.ஆர்.டி சுட்டிக்காட்டியுள்ளது. பாட நூல்களில் மதவாத அம்சங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் பாடநூல்கள் மத அடிப்படையில் பிளவுகளை தூண்டும் வண்ணம் உள்ளன என்றும் கூறப்பட்டது. பையன்கள் மத்தியில் ஆண்மை என்பது வலியுறுத்தப்படுவதுபோல் பெண்கள் பாரம்பரியம், குடும்பம் கலாச்சாரத்தை காப்பாற்றும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டுமென்று பாடநூல்கள் மூலம் கருத்துக்கள் புகுத்தப்படுகின்றன. பெண்கள்/ சிறுமிகளுக்கு மதத்தின் முக்கயத்துவத்தை வலியுறுத்தி, ஒழுக்கம் போதிக்கப்படுகிறது. இத்தகைய பாடநூல்கள் குஜராத்தில் மட்டுமல்ல. கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் என பல மாநிலங்களில் கல்வி காவிமயமாகியுள்ளது என தனியார் பள்ளி பாடநூல்கள் பற்றி ஆராயும் மத்திய கல்வி ஆலொசனை வாரியத் தலைவர் பேராசிரியர் சோயா ஹாசன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சமூகவியல், வரலாறு பாட நூல்கள் காவிமயமாகி உள்ளன என்பது தொளிவாகியுள்ளது.

கல்வி காவிமயமாவதை தடுக்கும் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகாவில், “பாடநூல்கள் காவிமயமாதலை தடுக்கும் குழு” என்பது பாடநூல்களை ஆய்வு செய்து, முஸ்லீம்கள்/ இந்துக்கள்/ கிறித்துவர்கள் பற்றிய கருத்துருவாக்கம் செய்யப்படுகிறதென சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல, தலித்துகள், பெண்கள், வேத பாரம்பரியம் இல்லாதவர்களின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. பாடநூல்கள் ‘வலதுசாரி தத்துவத்திற்கு’ அழுத்தம் அளிப்பது பற்றி, இக்குழு கவலை தெரிவித்துள்ளது. ஆங்கிலேயரின் ஒடுக்குமுறை விளக்கப்படுகிறது. ஆனால் உயர் சாதியினர் தலித்துகளை ஒடுக்குவது பற்றி ஏதுமில்லை என இக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த பாட நூல்கள் 6 விதமான பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றி விளக்குகிறது. ஆனால் “காவி பயங்கரவாதம்” பற்றி எதுவுமில்லை. சாதிய கட்டமைப்பு, தீண்டாமை போன்ற விஷயங்கள் குறிப்பிடப்படவில்லை. தவிர, வரலாற்று நூல்களும், அறிவியல் நூல்களும் காவிமயமாதலை எதிர்த்து, கர்நாடகாவின் முன்னாள் கவர்னரிடம் 2012ல் மனு கொடுக்கப்பட்டது. 5ம் வகுப்பு சமூகவியல், 8ம் வகுப்பு அறிவியல் மற்றும் இந்திப் பாடநூல்கள் மனுவில் எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளன. மோடி மும்பையில் மருத்துவமனை திறக்கும் பொழுது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், பிள்ளையாருக்கு யானை முகம் அதையே குறிக்கிறது என்று அறிவியலுக்கு முற்றிலும் புறம்பாக பேசியுள்ளார். அதேபோல் ஏவுகணை விடப்பட்ட பொழுது ‘புஷ்பக விமானம்’ இருந்ததெனக் கூறுகிறார்.

மேலே கூறப்பட்டவை தவிர, உணவு பற்றிய நச்சுக் கருத்துக்கள் பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகின்றன. மாமிச உணவு கூடாது, பசுவதை சட்டம், கோஷாலா (பசு பராமரிப்பு கூடங்கள்) அமைப்பு பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. ‘வெஜிடேரியன்’ உணவு ஒரு மனிதனை அமைதியாக இருக்க வைக்கும் (தமஸ்); ஆனால் மாமிசம் அப்படிப்பட்டதல்ல என்கின்றனர். உணவு என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அது சாதி, மத அடிப்படையில் வேறுபடுகிறது. மாமிசம் சாப்பிடும் பிராமணர்கள் உள்ளனர். அதுபோல், மருத்துவ காரணங்களுக்காக மாமிச உணவைத் தொடாத முஸ்லீம்கள், கிறித்துவர்கள் இந்துக்களில் பல பிரிவினர் உள்ளனர். எந்த உணவை உட்கொள்கின்றனர் என்பதற்கு பழக்கம்தான் காரணம். மோடி வெளிநாடு சென்றபொழுது, அவருக்கு வெறும் பழங்கள், காய்கறிகள் மட்டும் உணவாக உண்பார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இன்று மேலை நாடுகளில் கூட சைவ உணவுக்கு பலர் மாறியுள்ளனர். பால், பால் சார் உணவைக் கூட ஏற்காதவர்கள் (வேகன்) உள்ளனர். சைவம், அசைவம், வேகன் என்பது சொந்த விஷயம். இதைக்கூட, மதத்துடன் இணைப்பது என்பது தனிமனித உரிமையில் தலையிடுவது மட்டுமல்ல, அசைவ உணவு பற்றி தவறான பிரச்சாரம் செய்வது கண்டிக்கதக்கதாகும். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும், காவி பிரச்சாரம் தொடர்கிறது. மோடி பிரதமரான பின் துணிச்சலுடன் இந்து, இந்தி, இந்துத்துவா பேசப்படுகிறது. ஜெர்மன் மொழிக்கு பதில் சமஸ்கிருதம் என்ற மொழி கற்பிக்கப்பட்ட வேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டு சர்ச்சை எழுந்தது.

அரசியல், பொருளாதார விஷயங்களில் மக்கள், எதிர்க்கட்சிகள் கவனம் போகாத வண்ணம் தொடர்ந்து, மதம் சார்ந்த சர்ச்சை கிளப்பப்பட்டு, அவை விவாதிக்கப்படுகின்றன. கொலைகாரர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. ‘இந்து ராஷ்டிர சேனா’ என்ற அமைப்பு ஆறு மாதங்களுக்கு முன்பு மோசின் ஷேக் என்ற முஸ்லீம் இளைஞனை சுட்டுக் கொன்ற தனஞ்சய் தேசாய்க்கு “இந்துத்துவா ஷெளரி புரஸ்கார்” (வீரத்திற்கான விருது) அளிக்கிறது. மோசமான பிற்போக்குவாதி பிரமோத் முத்தலிக்குக்கு, “வீர் ஜீவ மஹலே” என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சத்ரபதி சிவாஜி அதில்ஷாவின் ஜெனரலான அப்சலை கொன்ற தினம் என்று கருதப்படும் “சிவ பிரதாப் தின் உத்சவ் ” அன்று வழங்கப்படுகிறது. மிகப் பெரிய விவாதத்தை இது கிளப்பியுள்ளது. அதேபோல் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேக்கு தேசபற்றுள்ளவன் என்றும், சிலை வைக்க வேண்டும் எனவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்கு வங்கி உருவாக்கத்தில், அரசியல், சேவை ஆகியவற்றைப் போல் கலவரமும் முக்கிய இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. மதத்தின் பெயரில், சாதியின் பெயரில், இனத்தின் பெயரில், மொழியின் பெயரில் இந்தக் கலவரங்கள் தூண்டப்படுகின்றன. வகுப்புவாதம் இதைத் தீவிரமாக செயலாற்றும் நோக்கம் கொண்டது. வகுப்புவாதம் ஒரு அடையாளத்தை முன்னிறுத்தி மற்றொரு அடையாளத்தின் மீது வெறுப்பை உருவாக்குகிறது.

இத்தகைய குணம் கொண்ட, ஃபாசிசத் தன்மையை நோக்கி செல்லும் ஒரு அரசை கட்டமைக்க, இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் அமைப்புகள் இயங்கி வருகின்றன. பாபர் மசூதி, ராமர் பிறந்த இடத்தில் செயல்பட்டு வந்த ராமர் கோவிலை அழித்து அதன் மீது, கட்டப்பட்டதாகும், என பிரச்சாரம் செய்தது. இதன்மூலம் பாஜக தனது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டது. சில மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுதலும் நடந்தது. வாக்குவங்கி உருவாக்கத்தில், பாபர் மசூதி மற்றும் ராமருக்கு கோவில் கட்டுவது என்ற பிரச்சாரம், முக்கியப் பங்கு வகித்தது.

பாபர் மசூதியை இடித்து, ராமர் கோவிலைக் கட்டுவோம், என்ற முழக்கத்துடன், கிராமத்திற்கு ஒரு செங்கல் சேகரிக்கும் நிகழ்ச்சியும், பாபர் மசூதியை நோக்கி ரத யாத்திரை என்ற அணிவகுப்பும், சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கியது. பதட்டம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் அச்சமாக வடிவெடுக்கிறபோது, தன் அடையாளம் சார்ந்த மக்களுடன் ஐக்கியமாவது என்பதை பெரும்பான்மை வகுப்புவாதமும், அதைத் தொடர்ந்து சிறுபான்மை வகுப்புவாதமும் வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தது. இந்த அனுபவத்தை இந்தியாவில் உள்ள பாஜகவும், இந்துத்துவ அமைப்புகளும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.

கலவரங்கள் செய்த காரியங்கள்:

வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கு, எப்போதுமே, மதவாதப் பதற்றங்கள் வழிவகை செய்து வந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை வகுப்புவாதக் கலவரங்கள் இந்தியாவில் அநேகமாக இல்லை. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் பசுவதை எதிர்ப்பு, பன்றிக்கறி உண்ணுதல், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களின் வழியாக செல்லும் இந்து ஊர்வலங்களில் ஒலி எழுப்புதல் ஆகிய காரணங்களால் மதக்கலவரங்கள் எழுந்தன. இந்த மதக் கலவரங்கள், மதவாத அரசியலின் வெளிப்பாடாக மட்டும் அல்லாமல், பெரும்பான்மை வகுப்புவாதத்தை நோக்கி, நகர்புற ஏழைகள் மற்றும் தலித் மக்களை ஈர்க்கப் பயன்பட்டுள்ளது, என்று, ’நம்மை சூழும் அபாயத்தை எதிர் கொள்ள’ என்ற பிரசுரத்தில், முனைவர். த.செந்தில்பாபு கூறுகிறார். இந்தியாவைப் பொறுத்த அளவில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதமாக இந்துமதம் குறிப்பிடப்படுவதால், இந்து மதத்தின் வளர்ச்சியைக் காட்டுவதற்காக ஒரு எதிரி தேவைப்படுகிறது. நமது நாட்டில் அந்த எதிரிகளாக முஸ்லீம்களும், கிறித்துவர்களும் அடையாளம் காட்டப்படுகின்றனர்.

அண்மைக் கால உதாரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், சிலைகளுடன் பெரும் ஊர்வலங்களாக வளர்ச்சி பெற்றுள்ளதை குறிப்பிடலாம். சிறிய கோவில் விழாக்கள் கூட பிரமாண்ட செலவில் நடத்தப்படுவதும் இந்தப்பின்னணியில்தான். இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய, விநாயக் தாமோதர் சவர்க்கார், “இந்துத்துவா என்பது இந்துயிசத்துடன் எவ்விதத்திலும் சம்மந்தப்பட்டதில்லை” எனக் கூறியுள்ளார். இந்துத்துவா என்பது அரசியல் திட்டம், அதனடிப்படையில் அரசியல் ஒழுங்கை எப்படிக் கட்டியமைப்பது, என்பதை கோல்வாக்கர் கூறியுள்ளார் என சீத்தாராம் யெச்சூரி தனது புத்தகமான, ’மோடி  அரசாங்கம் வகுப்பு வாதத்தின் புதிய அலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் திட்டம் இந்து மத மக்களிடையே முழுமையாக ஏற்புடையதாக அமையவில்லை. கலவரங்களை அரங்கேற்றுவதன் மூலம், துவக்க கட்டமாக அரசியல் திட்டத்திற்குள், வளைக்கப்படுகின்றனர்.
கலவரங்கள் மூலம் ஆட்சியை பிடித்த பின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற, பாஜக கடந்த காலத்தில் குஜராத் மாநிலத்தில், மேலும் கலவரங்களை உருவாக்கியதையும், அம்மாநிலத்தின் சிறுபான்மையினரை அச்சம் கொள்ளச் செய்ததையும், நம் சமகால வரலாற்றில் கண்டிருக்கிறோம். இந்துத்துவாவை தங்களின் அடையாள அடிப்படையில் அறவே வெறுக்கும், இஸ்லாமியர்களின் ஒரு பகுதியினர் கூட பாஜகவிற்கு வாக்களிக்கும் அளவிற்கு அச்சம் ஊட்டப்பட்டனர், என்பதை இந்தியாவின் தேர்தல் ஆணையம் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் நடத்திய தேர்தலின்போது குறிப்பிட்டுள்ளது.

2002 பிப்ரவரி இறுதியில் நடந்த கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, நடந்த கலவரத்தில் பல ஆயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஆனால் மாநில அரசு, சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. தேர்தல் மற்றும் மனித உரிமை ஆணையங்கள், ”இன்னும் இஸ்லாமியர்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பியதாக எதை வைத்து கூறுகிறீர்கள்?”, என்ற கேள்வியை, எழுப்பியது. ஆனாலும் மத்திய பாஜக அரசில், தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, தேர்தலை சில மாதங்களுக்கு முன்னதாகவே நடத்தியது. அத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

இதேபோன்ற ஒரு அனுபவம் உ.பி யில் முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இஸ்லாமியர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அச்சூழலில் நடந்த தேர்தலில், பாஜக அதிக எண்ணிக்கையிலான, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. கலவரங்களுக்கான பிரச்சாரம் மூலம் ஆட்சிக்கு வருவதும், ஆட்சியில் அமர்ந்தபின், வகுப்புவாத உணர்வுகளை தூண்டி, தனக்கான செல்வாக்கை உறுதி செய்து கொள்வதும், இந்துத்துவா அமைப்பினரின், நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, 2013இல், வகுப்புவாத வன்முறையின் கீழ் 823 நிகழ்வுகள் நாடுமுழுவதும் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 247 வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபின் மகராஷ்ட்ரா மாநிலம் உள்ளிட்ட சில பகுதிகளில், 2014 ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், 149 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றுள்ளன. உ.பி.யில் 605 நிகழ்வுகள் இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவை ஒருபுறம் தேர்தலை மையப்படுத்தியும், மற்றொரு புறம் தனது வகுப்புவாத அரசியலை அரங்கேற்றும் வகையிலும், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பிரிவு மக்களை தனக்கு சாதகமாக உறுதி செய்து கொள்வதையும், உள்ளடக்கி உள்ளது.

இப்போது மதுரா பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரின் மையமாக மாறியுள்ளது. அங்குள்ள கிருஷ்ணன் கோவில், மற்றும் மசூதிக்கு இடையில் புனைந்த மத அடிப்படையிலான சிக்கல், மற்றும் பதட்ட உணர்வு, தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அண்மையில் மதுரா ஜவஹர் பாக்-இல் உள்ள 288 ஏக்கர் நிலம், இரண்டு ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு, ஜெய்குரு தேவ் அறக்கட்டளை அமைப்பை சார்ந்தோர் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். தர்ணா போராட்டம் நடத்த அனுமதி பெற்ற இந்தக் கூட்டம், காவல்துறையினருடன் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் அளவிற்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஐச் சார்ந்த ராஜீவர் என்ற குருஜி என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பது வெளி வந்து கொண்டிருக்கும் உண்மை ஆகும். ஜூன் 30 இந்தியன் எக்ஸ்பிரஸ், இது குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளது. ஜவஹர் பாக் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தலைமை தாங்கிய, வீரேஷ் யாதவ் ஒரு மாதம் கழித்துதான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காவல் துறைக்கு அளித்து வரும் வாக்குமூலத்தில், கொள்ளைக்கார கும்பலின் செயல் வடிவங்களும், அவர்கள் தங்களுடைய குழுவை நிர்வாகம் செய்யும் நடைமுறையும் சொல்லப்பட்டு இருக்கிறது.

அரசுக்கு சொந்தமான பொது இடத்தை ஆக்கிரமிக்க மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தது. அதன் பின் ஆக்கிரமித்த பகுதிகளுக்குள் செக்போஸ்ட் அமைப்பது, குழுக்கள் மூலம் பராமரிப்பது, குடியிருப்புகள் உருவாக்கி அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட்டது, நகரில் அல்லது வேறுபல இடங்களில் நடந்த வன்முறை நிகழ்வுகளில், தாக்குதல் நடத்தும் கும்பலாக பயன்படுத்தப்பட்டது ஆகியவை, பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு குழுவினரால் மட்டும்தான், முடியும்.
ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள், நக்ஸல் அமைப்பின் செயல்பாடுகள் ஆகியவை, பொது மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் வீரேஷ் யாதவ் மற்றும் அவர் குழுவினரின் செயல்பாடுகள், ஒரு நாள் செய்தியாக முடிக்கப்படும் நிலை உள்ளது. இதுவே திட்டமிட்ட ஒன்றாக கருத இடமளிக்கிறது. 15 முதல் 20 வயது மதிக்கத் தக்க இளைஞர்கள் இந்தக் குழுக்களில் பயன் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்ற வாக்குமூலத்தை, இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிடவில்லை.

உ.பி.யில், எதிர்வரும் தேர்தலை தன் வசப்படுத்த, தொடர்ந்து பல ஆண்டுகளாக பாஜக செயலாற்றி வருகிறது. முசாபர் நகர் கலவரங்கள் குறிப்பிடத்தக்கது. இந்துத்துவா அமைப்பினர் வைத்துள்ள பட்டியலில், கைரானா இப்போது முக்கிய இடம் பிடித்துள்ளது. `ஹூகும் சிங், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் வெளியிட்ட ஆதாரமற்ற செய்தியை, அமித் ஷா மற்றும் மோடி இருவரும் அலகாபாத் பாஜக கூட்டத்தில் பேசுகின்றனர். காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல், கைரானாவில் இருந்து இந்துக்கள் முஸ்லீம்களால் வெளியேற்றப் படுகின்றனர் என்பதே அந்த விஷம் கக்கும் செய்தியாகும்.

தமிழ் நாளேடுகளும் இந்த செய்திகளை வெளியிட்டனர். இது உண்மையற்ற செய்தி என்பதை, உ.பி. அரசு அமைத்த விசாரணைக்குழு மூலம் அறியலாம். பாஜக வெளியிட்ட 119 நபர்கள் கொண்ட பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன், கைரானா நகரத்தை விட வேறு நல்ல வேலை தேடி சென்ற, இடம்பெயர்ந்த 66 மனிதர்கள் உள்ளனர். ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்திகளுக்கு முக்கிய இடத்தை ஊடகங்களும், மத்திய அரசும் வழங்கவில்லை. பிரதமர் உள்ளிட்ட, அரசின் முக்கியப் பிரமுகர்கள், தங்களது அரசியல் உரையில், இப்படி எந்த ஒரு ஆதாரமும் இல்லாத அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பது, ஃபாசிச நிகழ்ச்சி நிரலின் பகுதியே என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இத்தகைய அனுகுமுறை காரணமாக, உ.பி.யின் பல கிராமங்கள், முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு, முஸ்லீம்கள் இல்லாத கிராமங்களாக உருவெடுக்கின்றன. நகருக்கு வெளியே புதிய குடியிருப்புகளை கட்டமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அதையும் லிட்டில் பாகிஸ்தான் என நக்கலடிக்கும் பிரச்சாரமும் நடந்து வருகிறது. இவை அனைத்துமே இந்துத்துவா என்ற அரசியல் திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் செய்யப்படுகிற ஒன்று. இதில் மத அடையாளம் காரணமாக அப்பாவிகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர். சாதாரண மக்கள் உள்ளிட்டு படிப்படியாக இனவெறி ஊட்டப்பட்டு. இந்த வளையத்திற்குள் வளைக்கப்படுகின்றனர் என்பதை, முசோலினி ஆட்சியை விமர்சனம் செய்த, அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று இந்தியாவில் மதவெறி ஊட்டப்பட்டு பாசிச போக்கு தீவிரமாகி வருகிறது. (இந்த இடத்தில் சமீபத்திய வகுப்புவாத நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை வகுப்பாசிரியர் விளக்கிடலாம், குறிப்பாக தலித் மீதான தாக்குதல்கள். துசூரு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் வகுப்புவாத நடவடிக்கைகள்)

மதவாதத்தை எதிர்கொள்ள……

புதுச்சேரியில் மதவாத அலை வேகமாக வீசுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவாரத்தின் செயல்பாடுகள் தீவிரமாகியுள்ளன. மதவாதத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் கடமை முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதையொட்டி வகுப்புவாதத்தை வீழ்த்துவதற்கு ஏற்ற நடைமுறைகள் தேவைப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு நகல் அரசியல் தீர்மானத்தில் வகுப்புவாதத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி விவரிக்கிறபோது “வகுப்புவாதத்தை எதிர்த்து மிக விரிவான ஒன்றுபட்ட இயக்கம் கட்டுவதற்கு கூட்டு மேடைகள் அவசியமானது” (2.34) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பின்னணியில் உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
கடந்த முறை வாஜ்பாய் அரசாங்கம் இருந்தபோதும் சங் பரிவார நடவடிக்கைளை எதிர்த்து மதச்சார்பற்ற சக்திகள் ஆவேசமாக திரண்டெழுந்தனர். அது வரவேற்கத்தக்கதாக, வரலாற்றில் போற்றத் தகுந்த நிகழ்வாக அமைந்தது. ஆனால் சமுகத்தை மதச்சார்பற்ற உணர்வுகள் தழைத்து, அந்த உணர்வுகள் வேரூன்றிய சமுகமாக இந்திய சமுகத்தை மாற்ற வேண்டுமென்ற இலட்சியம் ஈடேறவில்லை. அதனால்தான், மீண்டும் சங்பரிவாரங்கள் சமூக உணர்வை கைப்பற்றுவதில் முன்னேறி வருகின்றனர். உதாரணமாக, மாதொரு பாகன் நாவல் பிரச்னையில் அந்தப் பகுதி மக்கள் சிலரிடம் கருத்து கேட்டு ஒரு தின இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் தங்களது சமுக வரலாற்றுப் பாரம்பரியத்தை இழிவுபடுத்திவிட்டதாக அவர்களை பேட்டி கண்ட சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். பாரம்பரியம் பற்றி பிற்போக்கான கருத்துக்கள், சாதிப் பெருமை என்ற வகையில் நீடிக்கிற இந்த மனப்பாங்கு சங் பரிவாரங்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்கள் கருத்துரிமையை பறிப்பதில் வெற்றி கண்டது மட்டுமல்லாது ஒரு பகுதியினரை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டிடவும் அவர்களால் முடிந்துள்ளது.

மதச்சார்பற்ற சமூக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடத்துவதில் மதச்சார்பற்ற சக்திகளின் தோல்வியையும் இது காட்டுகிறது. உள்ளூர் மட்டத்தில் முற்போக்கான, மதச்சார்பற்ற உணர்வை வலுப்படுத்திட தொடர்ந்து செயல்படும் உள்ளூர் சமூகங்களை உருவாக்க வேண்டுமென வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் வலியுறுத்தி வந்தார். இரவு பள்ளிகள், படிப்பகங்கள் என பல வடிவங்களை மேற்கொண்டு உள்ளூர் மட்டத்தில் உணர்வு மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

தற்போது வடிவங்களை மேலிருந்து வழி காட்டுவதற்கு பதிலாக கிராமம், நகர வார்டு மட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று கூடி விவாதித்து வடிவங்களை உள்ளூர் நிலை மைகளுக்கு ஏற்ப முடிவு செய்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில் குறிப்பாக இடதுசாரி சக்திகள் முன்முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் இன்னமும் உள்ளூர் அளவில் மக்கள் உணர்வை மாற்றிட உள்ளூர் மட்டத்தில் வினையாற்றிட வேண்டும் என்ற சிந்தனை வரவில்லை. அடையாளப்பூர்வமான எதிர்ப்புக்கள் ஆர்பாட்டங்கள் அறிக்கைகள் எழுத்துக்கள் என்கிற எண்ணவோட்டத்தை மாற்ற இயலாத நிலை உள்ளது. ஒரு சிலர் கூடி ஒரு அடையாளப்பூர்வமாக எதிர்ப்பு அல்லது மக்களோடு ஒட்டாத சிறப்பு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பேரணிகள் நடத்தி ஊடகங்களின் தலைப்புக்களில் இடம் பெற்றுவிட்டால் வகுப்புவாதத்தை முறியடித்துவிடலாம் என்ற கருத்து நீடித்து வருகிறது. இதனால்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் நகல் அரசியல் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டினை அரசியல் தளத்தில் மட்டுமல்லாது “சமூக, கலாச்சார, கல்வித் துறைகளில் எதிர்த்திட சரியான உத்திகளை உருவாக்கிட வலியுறுத்தியுள்ளது.”

Leave a Reply