கிரேக்க அமைப்பியல் மார்க்சிஸ்ட் பௌலன்ட்சாஸ் Nicos Poulantzas ( 21 September 1936 – 3 October 1979). முதலில் லெனினிஸ்ட் ஆக இருந்து பின்னாளில் ஐரோ கம்யூனிச விமர்சகராக புகழ்பெற்றார். அரசு குறித்த கோட்பாட்டு வரையறையை முன்வைத்ததில் மிகவும் பேசப்பட்டவர். பாசிசம் மற்றும் சமூக வர்க்கம் குறித்து மார்க்சிய ஆய்வுரையில் 1970 களில் தென் ஐரோப்பிய சர்வாதிகார வீழ்ச்சிகளை ஸ்பெயினில் பிராங்கோ ஆட்சி, போர்ச்சுக்கல் சாலசாரின் ஆட்சி, கிரேக்க பப்படோபௌலசின் ஆட்சி தகர்ந்ததை விளக்கியிருக்கிறார். கிரீஸில் சட்டக் கல்லூரி மாணவனாகப் பயின்ற காலத்தில் மாணவர் பெருமன்றத்தைக் கட்டியெழுப்பியவர்.
அரசு குறித்த கோட்பாடுகள்
அரசு குறித்த மார்க்சின் ஆய்வுகளை, கருத்தாக்கங்களின் புரிதல் தளத்தை முன்னெடுத்துச் சென்று ஓர் அமைப்பிய கோட்பாட்டாக்கத்தில் அரசை விளக்கிச் சொன்ன முன்னணிச் சிந்தனையாளர் பௌலன்ட்சாஸ். ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் கைப்பாவையாக, கருவியாக அரசு இயக்கப்படுகிறது என்ற அரசை ஒரு கருவியாகப்பார்க்கும் பார்வையை மறுக்கும் பௌலன்ட்சாஸ் அரசின் மொத்த அமைப்பையும் பராமரிக்கும் வர்க்க சக்தியாக முதலாளித்துவத்தைப் பார்ப்பதைவிட பெரும் முதலாளிகளின் உடனடி பெரும் லாபம் ஈட்டுவதையே, குறிப்பாக முனைப்புடன் செயல்படும் முதலாளித்துவம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறார். சுயலாபத்திற்காக மொத்த அரசு சக்தியையும் பிரயோகிக்கிறது முதலாளித்துவம். முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து விடுபட்டு சுயாட்சியாக அரசு செயல்படும் அதே வேளையில் மொத்த முதலாளித்துவ சமூகமும் ஒரே சீராக சமநிலையில் செயல்படுவதையும் பார்த்துக் கொள்கிறது. வெகுஜன அன்றாட வாழக்கைச் செயல்பாடுகளை பராமரித்துக் கொள்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்க நலன் பாதுகாத்து கொள்ளப்படுகிறது. அரசு ஓர் கருவி மற்றும் சார்புள்ள அரசு சுயாட்சி போன்ற கருத்தாக்கங்களை வலியுறுத்தும் ரால்ப் மிலிபான்ட்டின் (முதலாளித்துவ சமூகத்தில் அரசு) முன்வைக்கும் கருவி கொள்கைக் கோட்பாட்டிற்கு எதிராக; முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் செயல்படும் அரசு கருவி என்கின்ற வாதத்திற்கு எதிராக; அமைப்பியல் பார்வையில், செயல்படு வாதப்பார்வையில் உற்பத்தி முறையை வைத்து முதலாளித்துவத்தை காலவரிசைப் படுத்த முடியாது. சமூக உருவாக்கத்தை வைத்துத்தான் முதலாளித்துவ கால கட்டத்தை விளக்கமுடியும் போன்ற பல புதிய பார்வையை முன்வைக்கிறார் பௌலன்ட்சாஸ்.
மக்கள் ஜனநாயக குடியரசு மற்றும் ராணுவ சர்வாதிகார அரசு இவையிரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை வேறுபாட்டை காணத்தவறும் பேராபத்தைச் சுட்டிக்காட்டும் மிலிபாண்ட் அல்தூஸ்ஸரிய அமைப்பிய நிர்ணய வாதம், சூப்பர் நிர்ணய வாதம் போன்றவை புறவய உறவுகளை அளவுக்கதிகமாக வலியுறுத்துவதால் தோல்வியை சந்திக்கின்றன என்கிறார். தன்னை மறு உற்பத்தி செய்துக் கொள்ளும் பொருட்டு உள் நெருக்கடியும் உட்பிரிவுமுடைய முதலாளித்துவம் போன்ற அமைப்பு சமூக சமச்சீர் நிலை, சமாதான சகவாழ்வு வேண்டி நிற்பது குறித்து ஆய்வு செய்யும் வேளையில் குறிப்பாக தேசியவாதம் என்பதை, வர்க்கப் பிரிவுகளைக் களைவதற்கான அல்லது வர்க்கப் பிரிவினையை சுருக்குவதற்கான வழியாக முதலாளித்துவம் தேர்ந்தெடுத்துள்ளது என்கிறார். அரசு குறித்த மார்க்சிய கொள்ளைகளை வகுத்தளித்ததில் பௌலன்ட்சாஸின் பங்களிப்பு முக்கியமானது.
அரசின் செயல்படுகளைப் பார்த்தோமானால் கிராம்சி சொன்ன கலாச்சார மேலாண்மை என்ற கருத்தாக்கத்தின்படி ஒடுக்கப்பட்டோரின் இயக்கங்களை முடமாக்குவது ஒன்றே அரசின் முக்கிய வேலையாக இருக்காது. மாறாக ஒடுக்கப்பட்டோரின் ஒப்புதலையும் அரசு சக்தி சம்பாதித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெகுஜன சம்மதத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவையும் முதலாளித்துவத்திற்கு இருக்கிறது. இதை எப்படி சாதிக்கிறது. வர்க்கக் கூட்டணி மூலம் மேலாதிக்ககுழு கீழ்நிலை குழுவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோ கூட்டுச் சேர்ந்து கொண்டோ கீழ்நிலை குழுக்களின் ஒப்புதலைப் பெற்றுவிடுகிறது. இந்த வேலையைச் செய்பவர்கள் குட்டி முதலாளிகள். முதலாளித்துவத்தின் ஆசீர்வாதத்தோடு உருவான இந்தப் புதிய குட்டிமுதலாளிகள் ஆளும் முதலாளித்துவத்தின் மேலாண்மையை உறுதிப்படுத்தவும் நிலைநாட்டவும் பாட்டாளிவர்க்கம் பேரியக்கமாக ஒன்று திரள்வதைத் தடுத்தும் ஒன்று சேராவிடாமல் பார்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள்
இப்படி முரண்பட்ட வர்க்க நிலைகளை, அதாவது ஒடுக்குவோருடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் தொழிலாளி வர்க்கத்தின் இந்தப் பிரிவினர்த்தான் தன்னைப் பிழைக்கவைக்கும் தலைவிதி என்று (தப்பாக) பங்கு போட்டுக் கொள்கிறது முதலாளிவர்க்கம். இன்றைய பிந்தைய முதலாளித்துவத்தின் முக்கியமான பண்பே வர்க்க அமைப்பையே சிதைப்பதும் (இல்லாமல் ஆக்குவதும்) பாட்டாளி ஒற்றுமையை குலைப்பதும் தான். உருப்படியான அரசியல் ஆய்வு என்பதே புதிதாக உருவாகி வரும் இந்த நலன்களின் சக்தியின் குழுமத்தை பற்றிய வரையறை செய்வதுதான். அமெரிக்காவின் புதிய ஒப்பந்தம் நிர்ப்பந்திக்கும் திட்டத்தை ஆய்வு செய்த பௌலன்ட்சாஸ் பல காத்திரமான முடிவுகளுக்கு வருகிறார். தொழிலாளர் சட்டங்கள் கூலி உயர்வு போன்ற சில சலுகைகள் ஆளும்வர்க்கம் செய்ததால் மூலதனம் மற்றும் அரசுக்கும் தொழிலாளருக்குமான இணக்கம் வலுப்பெற்றது. மூலதனத்தை தக்க வைப்பதற்கான இந்த அரசியல் தந்திரத்தால் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தை முடமாக்கி பெரும் சோசலிசப் புரட்சியையே முறியடித்தது.
பௌலன்ட்சாஸும் உலக மயமாக்கலும்
ஜனநாயக முறையிலும் அரசியல் வெற்றி கொள்வதன் மூலமும் மட்டுமே வெகுஜன சக்தி உணரப்படும்; வெகுஜன இயக்கம் என்கின்ற கருத்தாக்கம் உருவாகும். இதுமாதிரியான அரசியல் மற்றும் ஜனநாயகம், அரசு மற்றும் அதன் அமைப்பும் மொத்த பூர்ஷ்வா அமைப்பை உருவாக்கினாலும் வெகுஜன சக்தி இவைகளை கடந்து செல்வாக்கு பெறும். இந்த அர்த்தத்தில் வெகுஜன எழுச்சி என்பது அரசியல் ஜனநாயகம் இவற்றின் பக்கபலத்தோடு அரசு மற்றும் அதன் நிறுவன ஆதாயம் பெற்றும் அதே சமயம் பூர்ஷ்வ சமூக அமைப்புச் சட்டத்தையும் மீறி மேலும் மக்கள் ஜனநாயகத்தை நோக்கியும் நகரமுடியும். உற்பத்தி அமைப்பை உலகமயமாக்கும் இன்றைய மெகா கார்ப்ரேட்டுகள் காலகட்டத்தில் வர்க்க அமைப்பை ஆய்வு செய்திருக்கும் பௌலன்ட்சாஸ்; உரிமை சக்தி அதிகாரத்தை தொழிலாளரிடமிருந்து பிடுங்கி முதலாளி வர்க்கத்திற்கு நகர்த்தும் இன்றைய உலகமயமாக்கலின் உச்சத்தில் மார்க்சிய வட்டாரத்தில் பேசப்படும் விவாதிக்கப்படும் வர்க்கம் பூர்ஷ்வா கிராம்சியின் மேலாண்மை தத்துவம் போன்றவை இன்றைய அரசியல் விஞ்ஞானச் சூழலில் நம்முடையப் புரிதலை தூலமான புறவய வகையினத்தை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது என்கிறார்.
பௌலன்ட்சாஸும் பூக்கோவும்
நவீன சமூகங்களின் மீது அரசு அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு சட்டங்கள் எவ்வாறு சாதகமாகத் துணைபுரிகின்றன என்பதைப் பற்றி பூக்கோவின் மதிப்பீடு குறைவாகவே உள்ளது. அரசு குறித்தும் மற்றும் வெகுஜனங்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் அமைப்புகளான ராணுவம், போலீஸ், நீதிமன்றச் செயல்பாடு போன்றவற்றைப் பற்றியும் பூக்கோ குறைத்து மதிப்பிடுகிறார். நவீன அரசின் இதயத்தில் குடிகொண்டுள்ள (புரட்சியை) இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் மேற்படி அமைப்புச் கச்தியின் அதிகாரத்தைப் பற்றியும் குறைத்து மதிப்பிடுகிறார். கிளர்ச்சி, போராட்டம் எங்கும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் சகவாழ்க்கையை, நீதிபரிபாலனம் செய்யும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கருவிகளாக உள்ஒடுக்கு முறைகளாக மதிப்பிடுகிறார். பௌலன்ட்சாஸின் குற்றச்சாட்டு இது. அரசு வெறும் கருவியாக செயல்படுத்தப்படுகிறது என்ற சிறிய புரிதலை மறுத்து சிக்கலான அல்லது முரண்பாடுகளின் போட்டிக்களமாக அரசை அமைப்பியல் அணுகுமுறையில் முன்வைக்கிறார். உள்முரண்பாடுகளின் போராட்டக்களம் அரசு. வர்க்கப் போராட்டம் அரசின் மீது முத்திரை பதித்திருக்கிறது.
உச்சக்கட்ட வர்த்தக போராட்டத்தின் வெளிப்பாடே பூர்ஷ்வா அரசு அமைப்பு. வர்க்கப் போராட்டம் என்கின்ற பேரொளிச் சீற்றத்தில் சிக்கித் திணறுகிறது அரசு. ஆகவே அரசு என்பது கோட்டை கொத்தளம் என்கின்ற பார்வையை எதிர்த்து சூதாட்டக்களம் அரசியல் செயல்தந்திரங்களின் போட்டிக்களம் அரசு என்று விளக்கும் பௌலன்ட்சாஸ், ஆளும் வர்க்கத்தின் வலுவான கருவி அரசு என்ற பழைய புரிதலை வெட்டி, தகர்க்கப்பட வேண்டிய அழிக்கப்படவேண்டிய பூர்ஷûவா அரசு அழிந்தபிறகு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றார். ஏஜண்டுகளுக்கு இடம்தர மறுக்கும் அமைப்பியல் நிர்ணயவாதம் அமைப்பியல்வாதிகளுக்கேயுரிய மைனஸ்பாயிண்ட். இந்தத்தவறு இல்லாமல் வாதத்தை வைக்கவேண்டுமென்றால் வர்க்கப்போராட்டம் அமைப்பியல் ரீதியாக மட்டும் நடைபெறுகிறது என்று அழுத்தாமல் வர்க்க உணர்வு பீறிட்டு வர்க்கப் போராட்ட உச்சத்தை எட்டும்போது வரலாற்று நாயகனான ஒன்று சேர்ந்த பாட்டாளி வர்க்கம் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும். வர்க்க போராட்டம் மட்டுமே அரசின் மீது முத்திரைக் குத்தவில்லை, அரசின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை கூடவே அனைத்து வகையான அரசியல் போராட்டங்களும் அரசை உலுக்குகின்றன. மார்க்சியர் அல்லாதோர் அரசுகுறித்து சில கோட்பாடுகளை முன்மொழிந்துள்ளனர். சமூகத்தின் மேல்தட்டு குழுவினரின் கடுமையானப் போட்டிக்களம் அரசு என்று அரசின் இயல்பு குறித்த ஒற்றைப் பரிமாண பார்வையை முன்வைத்தனர்.
பௌலன்ட்சாஸின் அரசு குறித்து சுயசிந்தனையின் விளைவாக வகுத்தளித்த, ஆய்வு செய்து கொடுத்த கோட்பாடுகள், கொள்கைகள் உண்மையிலேயே அரசின் அரசியல் பொருளாதார விஞ்ஞான கண்டுபிடிப்பாகும். இதுவரைக்குமான பொதுவான கோட்பாடுகளை முறியடித்து இதுவரைக்கும் யாரும் பேசாத கண்டுபிடிக்காத வர்க்க சக்தி வடிவங்களை, சோசலிசத்திற்குத் தேவையான காத்திரமான சில வர்க்க சக்திகளை இனங்கண்டு வர்க்க போராட்டத்திற்குள் வென்றெடுக்கும் வழிமுறைகளையும் சொன்னார்.
அரசு எந்திரத்தின் மூலமாக சமூக வர்க்கம் தனது புறவய நலன்களை, காரியங்களை இயக்கங்களை இன்னதென்று உணர்ந்து கொள்ள அறிந்து கொள்ளும் வசதியே அரசு சக்தியாகும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், கிராம்சி போன்றோரின் அரசு குறித்த கோட்பாட்டு புரிதலை முன்னெடுத்துச் சென்று விளக்கியவர் பௌலன்ட்சாஸ். இதன் மூலம் பிந்தைய சமீபத்தில் முதலாளித்துவத்தில் முளைத்தெழும் புதிய வர்க்க சக்திகளை சோசலிச சேர்மானத்திற்கு புழங்கவிட்டிருக்கிறார். மார்க்ஸின் மூலதனம் நூலே ஆகப்பெரும் கொள்கையறிக்கையாகும்.
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை
மார்க்ஸ்எங்கெல்ஸின் ஆய்வுகளின் முடிவுகள் நிறுவன வடிவ அரசுக்கும் மாறிக் கொண்டிருக்கும் பண்புடைய அரசியல் வர்க்கசக்திக்குமிடையேயான உறவுகளினூடே தன்னை மறு உற்பத்தி செய்துகொள்ளும் சமூக உறவே அரசு சக்தி என்பதை விளக்கிச் சொன்னதன் மூலம் அரசு குறித்த பொதுவான புரிதலிலிருந்து இன்னும் ஆழ அகலத்துடன் அரசு கோட்பாடுகளை முதன்முதல் சொன்னவர் பௌலன்ட்சாஸ்.
“மார்க்ஸினுடைய கருத்தாக்கங்களையும், சொற்றொடர்களையும் பிரதிகளையும் நான் அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறேன். ஆனால் இந்த மேற்கோள்களை விளக்குவதற்காக அடிக்குறிப்போ, புகழ்ச்சி வார்த்தைகளோ சேர்த்துக்கொண்டதில்லை. அப்படி புகழ்பாடியவர் மார்க்ஸை அறிந்தவராகவோ, அடிவருடியாகவோ இருந்தால் தான் மார்க்சிய பத்திரிகைகளில் மதிக்கப்படுவர். ஆனால் நான் எந்தவித மேற்கோள் குறியீடின்றியும் தூக்கிப்பிடிக்காமல் மார்க்ஸை அப்படியே சொல்லியிருக்கிறேன். ஏனெனில் ஜனங்களுக்கு மார்க்ஸின் நூல்கள் பிடிபடாது தெரியாதாகையால் மார்க்ஸை மேற்கோள் காட்டாதவர்கள் என்று என்னைப் பற்றி நினைத்துக்கொள்வர். ஒரு பௌதிகவாதி பௌதிகத்தைப் பற்றி எழுதும் போது நியூட்டனையும் ஐனஸ்டீனையும் மேற்கோள் காட்டவேண்டிய அவசியமிருப்பதாகவா நினைத்துக் கொள்கிறான்.?” – பூக்கோ
அதிகம் மார்க்சியர் என்பதைவிட அதிகம் பூக்கோவாதி, பௌலன்ட்சாஸ் என்றொரு குற்றசாட்டு உண்டு. 1967க்குப் பிறகு அல்தூஸ்ஸரும் பௌலன்ட்சாஸும் தத்துவம் குறித்த பார்வையில் வேறுபடுகின்றனர். நடைமுறைச் செயல்பாட்டின் தத்துவமாக மார்க்சியத்தைப் பார்த்த கிராம்சியின் பார்வைக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்துப் பேசினார் பௌலன்ட்சாஸ். ஆனால் 1970க்கு பிறகும் அல்தூஸ்ஸரின் கோட்பாடும் பூக்கோவின் கோட்பாடும் பல இடங்களில் சந்திக்கின்றன.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் அமைப்பே முரண்பட்ட வர்க்க நடைமுறைச் செயல்பாடுகளையும் நெருக்கடிச்சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. அரசியல்பொருளாதார சித்தாந்தம் அனைத்து மட்டங்களிலும் முதலாளித்துவ அமைப்பையே உலுக்குகின்றது. இந்த நெருக்கடி சிக்கல்களுக்கு வர்க்க முரண்பாடுகளை ஈடுசெய்து முதலாளித்துவ அமைப்பை ஒரே சீராக இயங்க வைக்க வேறொரு முதலாளித்துவ அமைப்பை உருவாக்கும் தேவை ஏற்படுகிறது.
பௌலன்ட்சாஸின் ஆய்வு முதன்முதலாக வர்க்க முரண்பாட்டை முதலாளித்துவ அமைப்பை நிலைகுலையச் செய்யும் ஓர் இயக்கமாக முன் நிறுத்துகிறது. அமெரிக்க முறை கொள்கையாளர் மற்றும் செயல்படுவாதிகளிடமிருந்து உலகில் நிலையான ஆட்சி அமைந்திட பூர்ஷ்வ உற்பத்தி முறையே ஆளும் அரசின் தலையாயக் கடமையும் உலகச்சமநிலை பூர்ஷøவா அமைப்பிற்காக அது பாடுபடும் என்பதும் புரிந்துகொண்ட பௌலன்ட்சாஸ், இன்றைய பிந்தைய முதலாளித்துவ வர்க்கங்கள் என்ற ஆய்வேட்டில், இன்றைய வளர்ந்த முதலாளித்துவ சமூகத்தில் வர்க்க அமைப்பின் மிகவும் அடிப்படையான, யாரும் இதுவரை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாத, வர்க்க முரண்பாடுகளை உறுதியான ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். பொதுவான கோட்பாட்டுத்தளத்தில் தமது ஆய்வைத் தொடங்கி மிகவும் காத்திரமான முறையில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் நிலைப்பாடுகளுக்கும் ஏஜெண்டுகளுக்குமான வித்தியாசங்களை மிகவும் கவனமாக செயல்படுவதை, வரலாற்றுவாத தவறுகளுக்கு இடம் கொடாமல் விவரிக்கிறார்.
இன்றைய அரசியலுக்கு மிகவும் தேவையான தேச அரசு குறித்த புரிதல் பிரச்சனைகளுக்கிடையேயான மோதல்களையும், மூலதனத்தை உலகமயமாக்கும் பூர்ஷ்வா அரசமைப்பையும் முன்வைக்கிறார்.
இறுதியாக இதுவரைக்கும் தவறாகவும், கொச்சையாகவும் புரிந்து கொள்ளப்பட்ட, பிரயோகிக்கப்பட்ட குட்டி பூர்ஷ்வா என்ற கருத்தாக்கம் குறித்து நீண்ட, மிகவலுவான, மிகச்சரியான விளக்கத்தைத் தருகிறார். பொதுவான புரிதலான மரபான குட்டி பூர்ஷ்வா வகையறாவான கடைமுதலாளி கைவினைத் தொழில் முதலாளி, சிறு விவசாய முதலாளி, லேவாதேவி முதலாளி வரிசையில் இன்றைய நவீன தொழில் நுட்பம் மற்றும் வியாபார சமூகத்தின் கம்யூட்டர் தொழில் முதலாளி, போர்மன்சூபர்வைசர்கள், மற்றும் சம்பளம் பெறும் மேனேஜர்கள், கார்ப்பரேட் மேனேஜர் போன்ற (ஒன்று திரட்டப்படாத தொழிலாளர்கள்) புதிய வகையினருக்குமுள்ள வேறுபாடுகளை வித்தியாசங்களை வலியுறுத்திச் சொல்வதன் மூலம் குட்டி முதலாளித்துவ கருத்தாக்கத்தை ஒரு தனிவகை வர்க்கமாக வரையறுக்கிறார்.
இங்குதான் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நிலவும் உற்பத்தித் திறனுடைய உழைப்பு, திறனற்ற உழைப்பு போன்ற கடினமான கேள்விக்கு முதன் முதலாக ஓர் அறிவார்ந்த புதிய பார்வையில் மாற்றுவிளக்கம் தரப்படுகிறது.
இந்த புதிய குட்டி முதலாளிகள் ஆளும் அரசை எதிர்த்து மூர்க்கமாகப் போராடுவர். எதற்கு? தரமான நுகர்வு வேண்டுமென்றும் தரமான வாழ்க்கை வேண்டியும் நல்ல உணவும், வீடு, கார், சுற்றுச்சூழல் போன்ற விஷயங்களை வேண்டி முழங்கி முஷ்டி உயர்த்தி மோதிமிதித்துப் போராடுவர். ஏனெனில் குட்டி முதலாளிகளின் பொருளாதார நிலைமைகள் உயர்தரமான வாழ்க்கை வேண்டி போராட வைக்கும். அதே சமயம் குட்டி பூர்ஷ்வாக்களுடைய அரசியல் ஊசலாட்டமும் தொழிலாளிவர்க்கப் போராட்டத்தின்மீதான கரிசனையும் சேர்த்து பார்த்தோமானால் ஒரு தனி வர்க்கமாக வென்றெடுக்க முடியும். தொழிலாளி வர்க்கப் போராட்டத்தில் குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தையும் கூட்டணி வைக்கமுடியும். அப்படி இணைத்துப் போராடாததே சிலிதோல்விக்கும் காரணம் என்கிறார்.
பௌலன்ட்சாஸினுடைய அரசியல் பின்புலம்
பிறதுறைகளிலிருந்து உதிரி கருத்தாக்கங்களை அப்படியே மார்க்சியத்தோடு பொருத்தி பார்க்கமுடியாது, மார்க்சியம் முன்வைக்கும் அடிப்படை பிரச்சனைகளோடு அவை தொடர்பு இருந்தாலொழிய அப்படி பொருத்திப் பேசப்படும் மார்க்சியம் போலி அறிவுப் பிதற்றலும் வெறும் அலங்கார வார்த்தைகளுமாகிவிடும். அப்படி கடன்வாங்கப்படும் கருத்தாக்கங்களால் மொழிப்புலம்பலும், திருத்தல்வாத சக்தியுமாகிவிடுமேயொழிய மார்க்சியத்திற்குப் பிரயோஜனமில்லை. அடிப்படை வரலாற்றுப் பொருள்முதல்வாத கருத்தாக்கதில் வைத்து பிற கோட்பாட்டு அணுகு முறைகளை ஏற்றுக் கொள்ளும் வழிகளை பயன்படுத்தவும் செய்கிறது. பலவித வடிவங்களில் இப்பொருத்தப்பாட்டைக் காணமுடிகிறது.
- பிரெஞ்சு வரலாற்றுவரைவியல் பள்ளியான அனல் வரலாற்றாசிரியர்கள் மார்க்சிய வரலாற்றாய்விற்கு எதிராக மார்க்சிய பார்வையை மறுத்து வர்க்க ஆய்வு முறையை எதிர்த்து அரசியல் ஆய்வை விட்டுவிட்டு சமூகவியல் ஆய்வில் வரலாற்றுவரைவியலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இப்பள்ளி முன்வைத்த சில கருத்தாக்க வரையறைகளை வரலாற்று பொருள் முதல்வாதத்தோடு பொருத்திப் பார்த்தனர்.
- மார்க்சியத்தோடு நெருங்கிவரக்கூடிய சில தர்க்க முறைகளின் அடிப்படையில் ஆய்வு செய்திருக்கின்றனர்.
- மார்க்சியத்தில் ஸ்டாலினிய பொருளாதார வாதத்தை மட்டும் எதிர்க்கும், மறுக்கும் மார்க்சிய எதிரி ஆய்வாளர்கள் சிலரின் அறிவுப்பூர்வ தத்துவார்த்தங்கள் சில அங்கீகரிக்கப்பட்ட மார்க்சிய அணுகுமுறையோடு சரிசமமாக ஒத்துப்போகவும் செய்கின்றன.
- மார்க்சிய எதிர்ப்புச் சிந்தனையுள்ள சில ஆய்வாளர்களின் கோட்பாடுகளும் மார்க்சியத்தின் அடிப்படை கொள்கைகளோடு ஒத்துப்போகக்கூடிய அளவுக்கு தங்களது ஆய்வை முன்வைத்தன.
என்னுடைய அரசு, அதிகாரம், சோசலிசம், நூலின் கடைசி இரண்டுவகையைச் சேர்ந்தவர் பூக்கோ என்று நிறுவியிருக்கிறேன். மார்க்சியத்துக்கு எதிரான பிரச்சனைகளைப் பிரமாதமாக ஆய்வு செய்திருக்கும் அவரது பாலினத்தின் வரலாறு நூலில் மார்க்சியத்துக்கு எதிராக தனது வலுவான வாதங்களை முன்வைக்கும் பூக்கோவின் ஆய்வு நிச்சயமாக மார்க்சியத்துக்கும் வளம் சேர்க்கும். கடைசியாக பூக்கோவின் மார்க்சியத்தை எதிர்க்க முன்வைத்த ஆய்வு அவருடைய அறிவார்ந்த முடிவுகளுக்குச் சற்றும் தொடர்பில்லாமலேயே போயிற்று. இந்த வகையினங்கள் என்ற அர்த்தத்தில் மார்க்சியம் (வர்க்க போராட்டம்) தனக்குரிய பொருளை கோட்பாட்டு தளத்தில் செழுமை பெற வேண்டும். நாம் நினைக்கும் விடுதல்கள், உதிரிகள், முரண்பாடுகள் போன்ற மார்க்சிய உள்நெருக்கடியை சுயமாக களப்பணி ஆய்வு செய்து நிவர்த்தி செய்ய முடியும் என்று குறிப்பிடும் பௌலான்ட்சாஸ் முதலாளித்துவ அரசின் சார்பு சுயாட்சி என்ற கருத்தாக்கத்தை வைத்ததன் மூலம் மார்க்சியத்துக்குச் செழுமை சேர்க்கிறார் பௌலன்ட்சாஸ்.
#முதலாளித்துவம் #கம்யூனிசம்