வீரம் விளைந்தது நாவல்.

‘வீரம் விளைந்தது’ நாவல்
நாவலாசிரியர்
நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய்
தமிழில்


எஸ்.இராமகிருஷ்ணன்
வெளியீடு பாரதிபுத்தகாலயம்
முதல் வெளியீடு 2016
விலை 300.

நூல் அறிமுகம்.

நாவலாசிரியர் சோவியத் மக்கள் புரட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு
(பாவெல் கர்ச்சாக்கின் என்கிற கதாப்பாத்திரத்தின் வழியாக நாவல் செல்லும்)
போர்முனையில் பட்ட காயத்திற்குப் பின் இறுதி 12ஆண்டுகளில் வெகுவாக நோய்வாய்ப்பட்டு, மத்திய நரம்பு மண்டல பாதிப்பாலும், இடையில் ஓர் விபத்தால் கால் நசுங்கிய பின்பும் படுத்த படுக்கையாக கிடந்த போது எழுதிய அற்புதமான நாவல் ‘வீரம் விளைந்தது’.

நாவல் எழுதும் காலத்தில் அவருடைய இரண்டாவது கண்ணும் பார்வை தெரியாமல் போன போது துணைக்கு நாவலை விரும்பி படிக்கும் கால்யா என்னும் 18 வயது நங்கை துணைக்கு வர இரட்டிப்பு வேகத்துடன் நாவல் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் பிரதேச கமிட்டிக்கு தன் தாயின் மூலம் நாவலின் கைப்பிரதியை அனுப்பி விட்டு காத்திருக்க பதில் வந்தது ‘நாவல் மனப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பதிப்பகத்தாருக்கு அனுப்பியுள்ளோம்.உங்களது வெற்றிக்கு பாராட்டுகள்’ என்று.

அவர் தம் வீரக்கதையை, இளமை, காதல், போராட்டம் பற்றியதும் முதலாவது சோவியத் நாட்டின் இளம் கம்யூனிஸ்ட் சங்க உறுப்பினர்களாகிய தம்மையும் தம் நண்பர்களையும் பற்றியதுமான இக்கதையை 1915 முதல் 1931ஆம் ஆண்டு வரையிலான வாழ்வை இப்புத்தகத்தில் விவரிக்கிறார். இளம் போராளியான நிக்கொலாய் 1904ல் பிறந்து 1936ல் 32 வயதிலேயே மறைந்த புரட்சியாளன்.

பள்ளியில் ஏன்,எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் மாணவனாக இருந்ததால் கதாநாயகன் பாவெல் கர்ச்சாக்கின் மூன்றாம் வகுப்பிலேயே வெளியேற்றப்படுகிறார்.
12வயதில் சிற்றுண்டிச் சாலையில் பாத்திரம் கழுவும் வேலை தொடங்கி வாழ்க்கைப் போராட்டத்தில் நுழைந்தார். சிறிய வயதிலேயே பிறரின் துன்பத்தைக் கண்டு மனம் துடித்தவன். அதனால்தான் என்னவோ சோவியத் புரட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவனுக்கு இயல்பாகவே இருந்தது.
தன்னுடைய தட்டிக்கேட்கும் மனப்பக்குவத்தால் சிற்றுண்டிச்சாலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர் அண்ணன் ஆர்த்தியோம் உடன் சென்று ரயில்வே ஒர்க்ஸாப்பில் பணியில் ஈடுபடுகிறார். அங்குதான் அவருடைய வாழ்வின் திருப்புமுனை ஏற்படுகிறது.

போல்ஷிவிக் புரட்சி வீரன் ஷூஹ்ராயை எதிர்புரட்சிப் படையை சேர்ந்தவன் கைது செய்து கொண்டு செல்லும் போது அவனுடன் துணிச்சலுடன் போராடி பாவெல் காப்பாற்றி விடுகிறான். இதுதான் திருப்புமுனை.

சோவியத் படையில் புரட்சி வீரனாய், குதிரைப்படை வீரனாய் பரிணமித்து எதிரிகளை விரட்டியடித்து பின் சோவியத் கட்டமைப்பில் ரயில்வே இலாகாவில் பணிபுரிந்து, பனிக்காலத்தில் மக்கள் தங்களை கதகதப்பாக வைத்திருக்க வேண்டிய விறகுகளை வினியோகிக்க வேண்டிய சூழலில், எதிர்ப்புரட்சிக் கூட்டத்தினரின் சதியால் ரயில்வே அருகே வெட்ட வேண்டிய விறகை 7கிமீ.க்கு அப்பால் காட்டின் நடுவில் விறகை வெட்டி வைக்க அவ்விறகை எடுத்து வருவதற்கு தேவையான கால நேரமின்மையால் மக்கள் எங்கே குளிரால் மடிந்து விடுவார்களோ என்கிற அச்சத்தால் உடனடியாக ரயில் பாதை போட வேண்டுமென்று கடும் பனியில் தோழர்களை கடுமையாக சோதனைக்குட்படுத்திய பனியிலும், பாவெலும் மற்ற தோழர்களும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் ரயில் பாதை போட்டு மக்களை காத்தனர்.

சோவியத் புரட்சிக்குப் பின்பு கெட்டித்தட்டிப்போன சமூகத்தை பொதுவுடைமை பாதைக்குள் கொண்டு வருவதற்கு காரிய கமிட்டிகள், மத்திய கமிட்டி என எல்லா பக்கத்திலிருந்தும் மாதர் அமைப்புகள், இளங்கம்யூனிஸ்ட் அமைப்புகள் என எல்லா இடங்களிலும் கல்வி புகட்டப்பட்டது.
தொடர்ச்சியாக புரட்சியில் பங்கெடுத்த மக்கள் தங்களுக்கான கல்வியை பெறுவதற்காக வாசிப்பில் இறங்கினர். பாவெல் மற்றும் அவனது தோழர்கள் மூலதனம் மூன்றாம் பாகத்தை இரண்டரை ஆண்டுகளில் படித்து முடித்து விடுவார்கள்.

பாவெல் தன்னுடைய உடல் இயங்கா நிலைக்கு வந்த நிலையிலும் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். படுத்தப் படுக்கையாக இருந்த போதும் கட்சி வகுப்பு எடுக்கும் திறன் கொண்டவராக இருந்தார்.

தன் வாழ்வில் காதலியாக வந்த தோன்யா, தன்னுடைய புரட்சி சிந்தனைக்கு எதிரானவர் என்பதனால் தன்னை தோன்யாவிடமிருந்து துண்டித்து கொண்டவர்.
ஒரு நேரத்தில் ரயில்வே பாதை போடும்போது குளிரால் பாவெல் இறந்துவிட்டதாக அவரின் தாயிடம் ஒப்படைக்கப்படுவார். ஆனால் உயிர் பிழைத்துக் கொள்வார். இது போன்று நான்கு முறை சாவை வென்றவர் பாவெல்.

சோவியத் மத்திய கமிட்டியில் கலந்துகொண்டவர்களின் பெயர்களின் வருகையை எடுத்தபோது பாவெல் உயிரோடிருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும். உற்சாகம் பெருக்கெடுக்கும். பாவெல் இறந்துவிட்டார் என்று எண்ணி பாதுகாப்பாக அவனுடைய வீட்டுக்கு அனுப்பி வைத்த ரீத்தா இப்போது பாவெலை கட்டிப்பிடித்துக் கொள்வார்.

பாவெல் கட்சிக்குள் திரிபு வாதங்களை கொண்டுவந்தவர்களை விவாதத்தால் வெல்வார். கட்சி ஊழியன் பெண்களிடம் தவறாக நடந்தால் கண்டிப்பது, கட்சி ஊழியனின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்படும் பாதிப்புகளை களைதல், பாவெல் மாபெரும் வீரனாக இருந்தாலும் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்வதில் சிறந்தவனாக இருந்தார். மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதற்காக நடந்து செல்ல முடியாத நிலையில் கமிட்டி குதிரை வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருந்த நிலையில், ஒரு கொள்ளைக்கூட்டத்தை பிடிக்க வேண்டும் என்பதனால் தன்னுடைய வீரர்களுடன் பாவெல் குதிரையின் மீதேறி வருவார். பாவெலை அறியாத மேலதிகாரி, ‘நீ நடந்து வராமல் குதிரையின் மீது அமர்ந்து வருகிறாய். உனக்கு குதிரையில் வருவதற்கு அனுமதி இல்லை இறங்கி நட’ என்பார். பாவெல் கடும் சிரமத்தில் இருந்தபோதும் இறங்கி நடப்பார்.ஏனெனில் பிறருக்கு முன்மாதிரியாக ஒழுங்கு தன்மையை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதால்.
இறுதியாக தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் தன் தாயின் தோழியின் மகள் தாயாவுடன் உடன்படிக்கை கொண்டு கணவன் மனைவியாக மனைவிக்கு கட்சித் தோழனாக தன் மனைவி தாயாவை கட்சியில் இணைத்து தன்னுடைய இறுதி காலத்திலும் போல்ஷிவிக்கின் நிரந்தர குணத்தோடு கூடிய புரட்சிப் பயணத்தில் வெகுவாக பயணப்பட்டவர் தான் பாவெல். தன் கதாபாத்திரத்துடன் நிறைய நாயகர்களை உடன் கைகோர்த்து அழைத்து வருவார். எதிர் புரட்சி வீரனிடமும் சோவியத்களுக்கே உண்டான மனித நேயத்தை கொண்டிருப்பார். எல்லைப் பகுதியில் காவல் காத்து நிற்கும் போது எதிர் புரட்சி வீரன் தீப்பெட்டி இல்லாமல் புகைப்பிடிக்க முடியாமல் தத்தளித்து ‘தோழா நெருப்பு கிடைக்குமா’ என்று கேட்டபோது தீப்பெட்டியை தூக்கிப் போடுவார். ‘என்னிடம் மற்றொரு தீப்பெட்டி இருக்கிறது நீயே வைத்துக்கொள்’ என்று பாவெல் சொன்னபோது, ‘என்னிடம் உங்களின் தீப்பெட்டி இருப்பதை எங்கள் அதிகாரி கண்டுபிடித்தால் அதோகதிதான்’ என்று எதிர் புரட்சி வீரன் தீப்பெட்டியை திருப்பி தந்துவிடுவான்.
அதுமட்டுமல்ல சோவியத் வீரர்கள் கடுங்குளிரை சமாளிக்க மிக அற்புதமான தோல் ஆடைகளை அணிந்திருக்கும் போது எதிர்ப்பகுதி வீரர்களின் ஆடையோ பனியை உள்ளே புகும்படி மிகவும் மோசமான ஆடையை அணிந்திருந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
சோவியத்தில் மத வழிபாடுகளை பொருத்த வரை கோயில் இடம்போக மற்ற இடங்களில் அவற்றை பண்பாட்டு ரீதியாக, மக்களின் கல்விக்கூடாரமாக, மாதர்களின் பயிற்சிக் கூடமாக பயன்படுத்தும் விதம் சிறப்பாக சொல்லியிருப்பார்.
மொத்தத்தில் நாவல் இளம் கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பையும், இளைஞர்களின் தேவையையும் உணர்த்தும் விதமாக நாவல் மிக அற்புதமாக படைக்கப்பட்டிருக்கும். இன்னும் ஏராளமான தகவல் கொட்டிக்கிடக்கிறது நாவலில்!

பதிவு சன்முகசாமி

Leave a Reply