மூடிய ரேஷன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – சிபிஎம்

3

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வந்த அரிசி மற்றும் இதர உணவு பொருட்கள் கிடைப்பதில்லை.

ரேஷன் பொருட்களை நம்பி இருக்கும் நிரந்தர வருமானம் இல்லாத ஏழை எளிய மக்களும்,நடுத்தரவர்க்கமக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்தை, கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆளுநராக இருந்த கிரண்பேடி, மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி, பணம் வழங்கும் திட்டமாக அறிவித்து, அமலாக்கினார். அரிசிக்குப் பதிலாக பணம் வழங்குவதை மக்கள் எதிர்த்தார்கள். மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிராக தொடர்ந்து பல இயக்கங்களை நடத்தியது. மாதர் அமைப்புகள் மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தியதில் 99% அரிசியே வேண்டும் என்றனர். இருந்தபோதிலும் வலுக்கட்டாயமாக பணம் வழங்கும் திட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நேர்தலில், பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, பணப்பட்டுவாடாவையும் நிறுத்திவிட்டது. விளைவாக, கடந்த 15 மாதங்களாக சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு (வறுமைக்கோட்டுக்குக் கீழே) 20 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 600, மஞ்சள் குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 300 வழங்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு 15 மாதங்களில் கிடைக்க வேண்டிய ரூபாய் 9000, மற்றும் ரூபாய் 4500 இதுவரை கிடைக்கவில்லை.

மத்தியிலும் புதுவை மாநிலத்திலும் அதிகாரத்தில் உள்ள பாஜக, முற்றாக உணவு மானியத்தை நிறுத்தும் தனது மக்கள் விரோதக்கொள்கையை அமலாக்கிட, புதுவை மாநிலத்தை முன்னோட்ட மாநிலமாக, பரிசோதனை எலியாக பயன்படுத்தி வருகிறது.

கடந்த தேர்தலின்போது, ‘ரேஷன்கடைகள் மீண்டும் திறக்கப்படும்’ என்ற அறிவிப்புடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை திரு. ரங்கசாமி வெளியிட்டார். நடைமுறையில் ரேஷன் திட்டத்தை நிறுத்திய பாஜக ‘நடமாடும் நியாயவிலைக் கடைகள் ஏற்படுத்தப்படும்’ என்ற பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். பாஜக ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கு வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடப்படும் என வாக்குறுதி அளித்து மோடி அரசு ஏமாற்றியது போலத்தான், புதுச்சேரியின் பாஜகவும், என்.ஆர்.காங்கிரசும் மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

தேர்தல் அறிக்கைகளிலும், நீதிமன்றத்திலும் ரேஷன் பொருட்கள் வழங்குவோம் என வாக்குறுதி வழங்கும் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் கூட்டனி அரசு. நடைமுறையில் மக்கள் படும் துயரங்களைக் கண்டுகொள்ளாது, அவர்களுடைய உணவு பெறும் உரிமையைக்கூட அலட்சியப்படுத்தி வருகிறது.

இந்தப்பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறது. 2022 ஆகஸ்ட் 02 ல் நடத்திய காத்திருப்பு போராட்டத்தின் விளைவாக 4 மாதத்திற்கான பணம் வங்கியில் போடப்பட்டது. நிலுவையில் உள்ள மாதத்திற்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

புதுவையில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து. கேரளா தமிழ்நாடு போன்று தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களின் தொகுப்பை வழங்க வேண்டும்.

முறைசாரா தொழிலாளர்கள், நிரந்தா வருமானம் அற்றவர்கள் உள்ளிட்ட தகுதி உள்ள அனைவருக்கும் சிகப்பு குடும்ப அட்டை வழங்கிட வேண்டும். சிவப்பு அட்டைக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் அட்டைக்கு மாதம் 10கிலோ இலவச அரிசியும் முன்பு போல வழங்கிட வேண்டும். நிறுத்தப்பட்ட ரேஷன்கடை ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

புதுச்சேரி அரசின் இலவச அரிசிக்கு பணம் வழங்கும் திட்டம் கடந்த 15 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 9000 ரூபாயும், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4500 ரூபாயும் வழங்கப்படாமல் உள்ளது. இந்தப் பணத்தை வழங்கிட வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக தரமான உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.

நவம்பர் 13. 2022ல் கம்பன் கலையரங்கில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். சீத்தாரம்யெச்யூரி பங்கேற்ற புதுச்சேரி மாநில உரிமை சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

Leave a Reply